Wednesday, June 13, 2012

மதுரை சித்திரை திருவிழா

மதுரையில் எல்லா மாதங்களுமே விசேஷ மாதங்கள் தான். ஒவ்வொன்றையும் என் சிறு வயதில் குடும்பத்துடன் அனுபவித்த நாட்களை அசை போட்டு கொண்டிருக்கிறேன். 

சித்திரை - மதுரையே திருவிழா கோலம் கண்டிருக்கும் நேரமிது. மதுரை மீனாக்ஷி அம்மன் ஒவ்வொரு இரவும் ( திருவிழா முடியும் வரை ) ஒரு அலங்காரத்தில் பவனி வருவது என்ன, அதை குடும்பத்தோடு மக்கள் கூட்டம் கூட்டமாக பார்க்க போவதென்ன , கலர் மிட்டாய்(வாயெல்லாம் சிவக்கும் ஜவ்வு மிட்டாய்) , வித விதமான பலூன்கள் (ஆப்பிள் பலூன், ஆரஞ்சு பலூன்), வாட்ச் மிட்டாய்( அந்த பொம்மை கையை மடித்து எழுப்பும் ஜல் ஜல் ஒலி என்ன) , மாங்கா, வெள்ளரிக்காய், இளநீர் (மீது காரபொடி தடவி விற்பார்கள், ம்ம்ம்ம், தேங்காய் கொப்பரையில் எண்ணெயில் வறுத்த கடுகை போட்டு கரண்டியால் பொடி செய்து நறுக்கிய மாங்கையை போட்டு தருவார்கள். என் அக்காவிற்கு மிகவும் பிடித்தது :) ) இன்னும் என்னென்னவோ தின்பண்டங்கள் விற்பவர்கள் என்ன.. சொல்லி கொண்டே போகலாம்...
மீனாக்ஷி அம்மன் திருக்கல்யாணமும் அன்று இரவு பூப்பல்லக்கும், அடுத்த நாள் தேரோட்டமும் இன்றும் பசுமையாய் என் நினைவில் உள்ளது. சித்திரை திருவிழாவிற்கு முதல் நாளிலிருந்தே ஹனுமான், கருடன் இன்னும் பல வேஷம் போட்டு தண்ணீரை பீய்ச்சி கொண்டே குழந்தைகள் புடை சூழ கோமாளிகள் வருவதென்ன, அழகர் ஆற்றில் இறங்கும் நாளன்று அதிகாலையிலேயே எல்லோரும் எழுந்து குளித்து விட்டு புதுத்துணி உடுத்தி, சீவி சிங்கரித்து கொண்டு, வீட்டில் பித்தளை சொம்பை நன்கு பளப்பளவென விளக்கி, நாமம் போட்டு, துளசி அல்லது பூ மாலை கட்டி, சொம்பு நிறைய நாட்டுசக்கரை மற்றும் பொடித்த ஏலக்காய் போட்டு வாழை இலையால் மூடி, சூடம் தீப்பெட்டி எடுத்து கொண்டு , வைகைக்கு ஓடுவதென்ன ??


பெருமாளை பார்த்தவுடன் அவசர அவசரமாக சூடம் கொளுத்தி காற்றில் அணையாமல் கோவிந்தா, கோவிந்தா கோஷத்தோடு சேவிப்பதென்ன, சர்க்கரையை அங்கு உள்ளவர்களுக்கு கொஞ்சம் கொடுத்து விட்டு அவர்கள் சர்க்கரையும் கொஞ்சம் வாங்கிக் கொண்டு சிநேக புன்னகையுடனும், பெருமாளை பார்த்த திருப்தியுடனும் , ஓசியாக கிடைக்கும் விசிறி , தொன்னை வெண் பொங்கல் , சக்கரை பொங்கல் வாங்கி அங்கேயே ஒரு பந்தலில் உட்கார்ந்து சாபிடுவது என்ன, சிறிது இளைப்பாறி விட்டு, ஸ்டேட் ஐஸ் கிரீம் சாப்பிட்டு விட்டு ஆட்டோ/ரிக்க்ஷா பிடித்து வீட்டுக்கு திரும்பி சுற்றம் அனைவருக்கும் சர்க்கரை கொடுத்து விட்டு அன்று இரவு நடக்கும் தசவதார அலங்காரத்தை எங்கு போய் பார்க்கலாம் என்று யோசித்து அதற்கும் நடையை கட்டுவதென்ன .. இதெல்லாம் கனவாகி விட்டது இப்போது எனக்கு.

அழகர் திரும்பி மலை ஏறும்போது பொதுவாக எங்கள் இனத்தவர்கள் (சௌரஷ்ட்ராஸ்)அழகர் கோவில் போகும் பஸ் பிடித்து , புளியோதரை, தயிர் சாதம், ஸ்வீட் சேமியா/பன் ஹல்வா, சுண்டல், கடலை, காரசேவு, முறுக்கு, அதிரசம் , இன்ன பிற நொறுக்கு தீனிகளை எடுத்து கொண்டு, புதூர்/மூன்று மாவடியில் இறங்கி , கலெக்டர் பங்களா பக்கம் நிழல் இருக்கும் இடத்தில பெட்ஷீட் விரித்து மற்ற நண்பர்கள்/ உறவினர்களுக்காக காத்திருந்து அவர்கள் வந்தவுடன் சாப்பிடுவதென்ன ..
அன்று முழுவதுமே அங்கேயே உண்டு இளைப்பாறி வாடிய முகத்துடன் திரும்பவதென்ன ...

மீண்டும் அந்த காலத்துக்கு போக துடிக்கும் மனது.. மிஸ்ஸிங் மதுரை வெரி மச் :(

No comments:

Post a Comment