Friday, July 27, 2012

பயணக் குறிப்புகள் – ஸ்விட்சர்லாந்து


Mountain View
 நடுவில் ஒருநாள் ஓய்வு எடுத்துக் கொண்டு, துணிகளை துவைத்து முடித்து, ஸ்விட்சர்லாந்து போவதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டோம். ஸ்வெட்டர்ஸ், ஜாக்கெட்ஸ், பனிக்குல்லாய், கையுறை, காலுறை, பூட்ஸ், குழந்தைகளுக்கான தீனிகள், அங்கு நாங்களே சமைத்து சாப்பிட வேண்டிய சாமான்கள் என்று எல்லாவற்றையும், செல்வியும், முருகனும் பேக் பண்ண, இரண்டு கார்களில், எல்லா லக்கேஜ்களையும் ஏற்றி விட்டு, வழியில் சாப்பிடுவதற்கு எங்களுக்கு பிடித்த brochen களையும், பழங்களையும் எடுத்துக் கொண்டு ஒரு வழியாக எங்கள் குடும்பமும், முருகனின் குடும்பமும் கிளம்பினோம். அவர்களுடைய செல்போன் ஒன்றையும் எங்களுக்கு கொடுத்து விட்டு, GPS துணையுடன் முருகன் கார் முன்னே செல்ல, நாங்கள் அவர்களை தொடர்ந்து சென்றோம். வழியில் காருக்கும் பெட்ரோல் போட்டுக் கொண்டு, 10 மணிநேரப் பயணத்திற்கு தயார் ஆனோம். முருகன் ஜெர்மனியர்கள் ஸ்டைலில் வேகமாக வண்டி ஓட்ட, அவரை தொடர்ந்து செல்வது கொஞ்சம் கடினமாகத் தான் இருந்தது. எங்கள் காரை முடிந்த வரை அழுத்திக் கொண்டு, கியர் மாற்றி மாற்றி என் கணவரும் கஷ்டப்பட்டு ஒட்டிக் கொண்டே வந்தார்.

நாங்களும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டே பழங்கதைகளைப் பேசிக்  கொண்டே போனோம். ஸ்விட்சர்லாந்தை பல திரைப்பாடல்களில் பார்த்திருந்தாலும் நேரில் பார்க்கப் போகிற அனுபவம் மிகுந்த ஆர்வத்தை ஏற்ப்படுத்தி இருந்தது. நல்ல போக்குவரத்து நெரிசல் கூட. மழையும் தூர ஆரம்பித்தது. குழந்தைகளும் தூங்க ஆரம்பித்தார்கள். புரியாத பாஷையில் எழுதியிருந்த வழிகாட்டிகளை ஆங்கிலத்தில் தப்பும் தவறுமாக சொல்லிப் பார்த்துக் கொண்டேயும், அடிக்கடி, எங்கள் முன்னே, முருகனின் சிவப்பு நிறக் கார் போய்க் கொண்டிருக்கிறதா என்று ஒரு கண் அங்கே வைத்துக் கொண்டும் சென்று கொண்டிருந்தோம். ஓட்டினோம், ஓட்டினோம், ஜெர்மனியின் பார்டர் வரைக்கும். நடுவில் எங்கள் காரைப் பார்த்து ஒரு 'பிளாஷ்' வேறு. என்னவென்று, முருகன் & செல்வியிடம் கேட்டதற்கு, நீங்கள் வண்டியை வேகமாக ஒட்டி இருப்பீர்கள். அது உங்களையும் காரையும் படம் பிடித்திருக்கும் என்று கலக்கமூட்ட, இனிமேல், வெளிநாட்டுச் செலவுடன், ஸ்பீடிங் கட்டணமும் சேர்த்துக் கொள்ள வேண்டியது தான் என்று சாந்திப்படுத்திக் கொண்டு பயணத்தை தொடர்ந்தோம்.

முதலில் ஆஸ்திரியா பார்டர் அருகே வண்டியை நிறுத்தி, toll charge கட்டிய பிறகு அதன் வழியே, ஸ்விட்சர்லாந்து சென்றோம், சென்றோம், சென்று கொண்டே இருந்தோம். நடுவில் ரெஸ்ட் ஏரியாவில், வண்டிகளை நிறுத்தி, ரிலாக்ஸ் செய்து கொண்டு, மீண்டும் பயணத்தை தொடர்ந்தோம். ஒரு வழியாக, ஆல்ப்ஸ் மலைத்தொடர் கண்ணில் பட ஆரம்பித்தவுடன், அப்பாடா என்றிருந்தது. ஆல்ப்ஸ் மலையின் பிரமாண்டம் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவாறு இருந்தது. நாட்டைச் சுற்றிப் பார்க்க வந்த கூட்டம் அதிகமாக இருந்தது. ஸ்விட்சர்லாந்து பார்டரில் அங்கு தங்கியிருக்கும் நாளில் கார் pass போன்று ஒன்றை வாங்க வேண்டியிருந்தது. வாங்கிக் கொண்டு மீண்டும் கார் ஓட்டம். இப்போது ஸ்விட்சர்லாந்து நாட்டின் உள்ளே. அங்கே கட்டிடங்கள் எல்லாம் வித்தியாசமாக இருந்தன. மரத்தினாலான பெரிய,பெரிய வீடுகள். அப்பார்ட்மெண்ட் போல பல குடியிருப்பு வசதிகள் கொண்ட பல மாடி வீடுகள். பெரிய பெரிய நகரங்களுக்கு செல்லும் வழிகாட்டிகள். நாங்கள் நண்பர் முருகனின் GPS சொன்னபடி, போகவேண்டிய இடத்திற்கான வழியை எடுத்து நகரினுள் சென்றோம். மெல்ல பொழுது சாய ஆரம்பிக்கும் நேரம். பச்சைபசேல் என எங்கு பார்த்தாலும் புல்வெளிகள். பரந்து விரிந்த மலைகள். நடுநடுவே சலசலவென்ற சத்தத்துடன் நீரோடைகள். மெதுவாக, மலையேற ஆரம்பித்தோம். என் கணவர் இயற்கைச் சூழலில், countryside பக்கம் தங்கி இருக்க ஆசைப்பட்டதால், ஒரு அருமையான விடுமுறை விடுதியை முருகன் தேடிப் பிடித்திருந்தார்.

Road to our resort

Our lovely resort
  மெதுவாக, சிறு நகரங்களிலிருந்து விடுப்பட்டு, வளைந்து நெளிந்து செல்லும் குறுகிய மலைப்பாதையில் ஏற ஆரம்பித்தோம். பொதுவாக, அங்கே ஏழு மணிக்குள் கடைகள் அடைக்கப்பட்டு விடுவதால் மனித நடமாட்டம் மிகவும் குறைவு. சின்ன சின்ன சந்துகள். எங்கும் மிகத் தெளிவான வழிகாட்டிகள் ஆங்கிலத்தில். எங்கே செல்கிறோம் என்ற திக்கு திசை தெரியாமல் GPS ஒன்றையே நம்பி எங்கள் பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது. மலைமேல் ஏற,ஏற என் கணவருக்கு பதட்டம் ஆரம்பித்தது. முன்னே போகும் முருகனின் காரோ ஆட்டோமாடிக் கார். அதனால் எனகென்ன என்று லட்டு மாதிரி அவர் சொன்ன மாதிரி எல்லாம் போய்க் கொண்டிருந்தது. இவரோ, கியரை மாற்றி மாற்றி கை வலிக்க ஓட்டுவதை பார்த்தால் பாவமாகத்தான் இருந்தது. என்ன செய்ய முடியும் இப்போது. நாங்கள் எங்கள் விடுமுறை விடுதியின் ஓனரை முதலில் பார்த்து சாவி வாங்கிக் கொண்டு போக வேண்டும். இதற்குள் நன்கு இருட்டி விட்டது. மலைபாதையோ ஒரு கார் செல்லும் அளவில் தான் இருந்தது. மறுபக்கம் எட்டிப் பார்த்தால் குலை நடுங்கும் அளவுக்கு பள்ளம். மனம் எதைஎதையோ நினைக்க, பயம் தொற்றிக் கொண்டது. ஏதோ தப்பு செய்து விட்டோமோ, பேசாமல் நகரத்திலேயே தங்கி இருக்கலாமோ என்று. முருகன் வேகமாக ஒரு இடத்தில் திரும்ப, சிறிதும் யோசிக்காமல், நாங்களும் திரும்ப, அங்கே ஒன்றும் இல்லை. அதற்கு மேல் போனால், பள்ளம் தான். பிரச்சினையே இப்போது தான். எங்கள் காரைப் பின்னாடி எடுப்பதற்குள் காவு தீர்ந்து விட்டது. ஒவ்வொரு முறையும், கார் நின்று புறப்படுவதற்குள் என் கணவருக்கு வேர்த்து விறுவிறுக்க ஆரம்பித்து விட்டது,அந்த மலையிலும்! அந்த கும்மிருட்டில், அங்கே ஒன்றும், இங்கே ஒன்றுமாக, மலையில் வீட்டு வெளிச்சங்கள், மலை முழுவதும் கிண்கிணி என்று மாட்டின் கழுத்தில் கட்டியிருக்கும் மணியின் ஓசைகள், அதன் எதிரொலிகள், எங்கள் வண்டி சத்தத்தைக் கேட்டு குரைத்த நாய்கள் என்று இருட்டில் எதுவும் தெரியவில்லை. ஆனால், இவற்றை எல்லாம் கேட்டுக்கொண்டே, GPS ஐ நம்பாமால், அந்த இரவு நேரத்தில் (மணி பத்தரை இருக்கும் என்று நினைக்கிறேன்) ஒரு கும்பலாக எங்கள் காரை அதிசயமாக பார்த்துக் கொண்டிருந்த இளைஞர்களிடம் நண்பர் முருகன் ஜெர்மனில் விலாசத்தை கேட்க, அவர்களும், இன்னும் கொஞ்சம் தூரம் போனால் வந்து விடும் என்று சொன்ன பின்னால் தான் நிம்மதியாக மூச்சு விட முடிந்தது. ஆனால், இதைப் பற்றிய கவலை இல்லமால், எனக்கென்ன மனக்கவலை, என் அப்பா, அம்மா தான் இருக்கிறார்களே என்று நிம்மதியாக தூங்கி கொண்டிருந்தார்கள் குழந்தைகள்!!! அதற்குள் நான், நாளை முதல் வேலையாக நகரத்தில் ஒரு நல்ல ஹோட்டல் பார்த்து தங்கி விட வேண்டியது தான். இப்படி பயந்து பயந்து என்னால் தினமும் வர முடியாது என்று புலம்ப ஆரம்பித்து விட்டேன். ஒரு வழியாக, அந்த ஓனர் வீட்டைக் கண்டுபிடித்து விட்டோம், அதற்கு முன்பே அவர் வீட்டு நாய், நாங்கள் வந்து விட்டதை கத்தி அவரும் வெளியே வந்து, சாவி கொடுத்து விட்டு, அவர் வண்டியை எடுத்துக் கொண்டு, நாங்கள் இருக்கப் போகும் இடத்தை காட்ட வந்தார்.


My husband with the resort owner & her sons
 
அவர் தன்னுடைய பெரிய ட்ரக்கில் முன்னே செல்ல, நல்ல தூரம் விட்டு எங்கள் காரும் பின்தொடர, ஒரு வழியாக ஒரு இருண்ட வீட்டின் முன்னால் வந்து நிறுத்தினார். அதெல்லாம் தனியார் சொத்துக்கள் என்பதினால் அவர்கள் போட்டுக் கொண்ட ரோடு. நடுவில் மலையிலிருந்து தண்ணீரின் ஓட்டம் வேறு. மேடும் பள்ளமுமாக காரின் டயர் போகும் பாதைகள். அதை விட்டு நடுவில் ஓட்டினால், வண்டி பள்ளத்தில் மாட்டிக் கொள்ளும். அப்படி மாட்டிக் கொண்டால், என்னை கூப்பிடுங்கள் நான் வந்து மேலே இழுத்து விடுகிறேன் என்று ஜஸ்ட் லைக் தட் சொன்ன பொழுது இன்னும் பயமாகி விட்டது. இருட்டில் தட்டுத் தடுமாறி, வீட்டின் முன் காரை நிறுத்தி, குழந்தைகளையும் எழுப்பி விட்டு, வெளியே வரும் பொழுது எங்கள் முகம் பேயறைந்தது போல் இருந்தது. ஒரே கும்மிருட்டு. ஆனால், மலைக்காற்றும், மாடுகளின் மணியோசையும், பச்சைப்புல் வாசனையும், கோமிய மணமும் கலந்து எங்கோ ஒரு உலகத்துக்கு கொண்டு சென்றது. இந்த மலைக்கு மேல் ஒரு மலையில் ஒரு பெரிய விடுதி இருந்தது.

வீடு திறந்து இருந்தது. உள்ளே நுழைந்தால், சமையல் அறை, உட்கார்ந்து சாப்பிட வசதியாக நீளமான மேஜை, நாற்காலிகள், அதையடுத்து டிவி ஒன்று வைத்து பார்க்க வசதியாக சாய்வு நாற்காலிகளையும், படிப்பதற்கு வசதியாக சின்ன மேஜை, நாற்காலிகளும் இருந்தன. வீடு சில்லென்றி ருந்தது. சமையல் அறையில், சமைக்க அடுப்பும், வீட்டை உஷ்ணப்படுத்த ஒரு அடுப்பும், பாத்திரங்களும், அழகாக அடுக்கி வைக்கப்படிருந்தன. கீழேயே குளிக்க பாத்ரூமும் இருந்தது. முதல் மாடியில் ஒரு பெரிய படுக்கை அறையும், அதற்கு மேல் மாடியில் ஏழு பேர் படுக்க வசதியாக படுக்கைகளும் போடப்பட்டு மிகவும் வசதியாக இருந்தது. வீட்டின் முன் அறையில் விறகு வெட்ட வசதியாக கோடாலியும், விறகுகளும் இருந்தது. அவரும் வெட்டி வைத்திருந்த விறகுகளை அடுப்பில் போட, சிறிது நேரத்திலேயே வீடு கண,கணவென்றாகியது.

Nitin experimenting wood cutting
  நீண்ட நேரம் தலையை அசைத்து அசைத்து முருகன், செல்வியுடன் ஜெர்மனில் ஆய், ஆய் என்று ஒவ்வொரு வாக்கியத்தையும் நீட்டி முழக்கி முடித்து பேசியதை சிறு வயதில் புரியாத ஆங்கிலப் படத்தை பார்த்த மாதிரி நின்று பார்த்துக் கொண்டிருந்தோம். இந்தியர்களா நீங்கள் என்று கேட்டு தெரிந்து கொண்டார். அவர் தன்னுடைய வீட்டை இருபகுதிகளாக பிரித்துக் கட்டி, எங்களைப் போன்ற விடுமுறையில் வருபவர்களுக்கு வாடகைக்கு விட்டுக் கொண்டிருந்தார். ஒரு பகுதி நன்கு பெரியதாகவும், இன்னொரு பகுதி ஒரு குடும்பம் தங்கும் வகையிலும் அழகாக கட்டியிருந்தார். அவர், அப்பாவின் உதவியுடன் தானே இந்த வீட்டை கட்டியதாக சொன்ன போது ஆச்சரியமாக இருந்தது. இந்த மலையில் ஒரு பெரிய வீட்டை தனி ஆளாக கட்ட வேண்டுமென்றால் மிகுந்த
சிரமமாக இருந்திருக்கும். கில்லாடி லேடி தான் என்று நினைத்துக் கொண்டோம். இதற்குப் பக்கத்தில் அவருடைய மாடுகளை கட்டிப் போட்டிருந்தார். தான் நன்றாக மசாஜ் செய்பவர் என்றும் மணிக்கு 100 euros என்றும் மேலும் மேலும் எங்களை பிரமிக்க வைத்துக் கொண்டே இருந்தார்! அவரிடம் ஆட்டுக்கறி, பால், பாலாடைக்கட்டி எல்லாம் விலைக்கு கிடைக்கும் என்று சொல்லி விட்டு போகும் பொழுது மணி 11.30 நெருங்கிக் கொண்டிருந்தது. அவரை அனுப்பி விட்டு, எங்கள் பெட்டிகளை காரிலிருந்து இறக்கி வீட்டுக்குள் கொண்டு வந்து வைத்து விட்டு, அடுத்த நாள் காலையில் சீக்கிரம் எழுந்து வெளியே கிளம்ப வேண்டும் என்று ஓடிப் போய், கட்டிலில் தஞ்சம் புகுந்தோம்.

Morning View


Tuesday, July 24, 2012

பெர்லின், ஜெர்மனி - பயணக் குறிப்புகள்

அடுத்த நாள் காலையில் எழுந்து காலை உணவை முடித்து விட்டு, விபூவுடன் பெர்லின் நகருக்குப் புறப்பட்டுச் சென்றோம். அது நண்பரின் வீட்டிலிருந்து இரண்டரை மணிநேரத் தொலைவில் இருந்தது. நெடுஞ்சாலையில் எங்கள் காரை மற்ற கார்கள் முந்திச் செல்ல நாங்கள் பதட்டப்படாமல் போய்க் கொண்டிருந்தோம்J ஜெர்மனியில் எல்லோரும் அசுர வேகத்தில் ஓட்டுகிறார்கள்! எங்கள் காரோ இந்தா நகர்வேனா என்று ஊர்ந்து கொண்டிருப்பது போல் இருந்தது. தமிழ் பாடல்களைக் கேட்டுக் கொண்டே ஜெர்மனியின் ரோடுகளில் செல்லுவதும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. பெர்லின் நகரத்தில் காரை ஒரு இடத்தில் நிறுத்தி விட்டு அதற்கான கட்டணத்தையும் கட்டிவிட்டு, பாராளுமன்றம்(Reichstag) பார்க்க கிளம்பினோம். அங்கு வருவதாக ஏற்கெனவே நண்பர் முருகன் மூலம் முன்பதிவு செய்து விட்டதால் பிரச்சினை ஏதும் இல்லாமல் போக முடிந்தது. அந்த கட்டிடமும் பார்க்க வித்தியாசமாக இருந்தது. உள்ளே பாஸ்போர்ட் சகிதம் செல்ல, எல்லாவற்றையும் சரிபார்த்தவுடன் உள்ளே அனுமதிக்கப்பட்டோம். ஒவ்வொரு குழுவாக வேகமாக செல்லும் லிப்ட் மூலம் மேலே அழைத்துச் சென்றார்கள். மேலே கண்ணாடியால் ஒரு அழகிய dome கட்டி இருக்கிறார்கள்.
நாங்கள் சென்ற போது ஏதோ வேலை நடந்து கொண்டிருந்தது. அதனால் உள்ளே சென்று பார்க்க முடியவில்லை. அதைச் சுற்றிப் பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்திருந்தார்கள். அங்கே நின்று கொண்டு பெர்லின் நகரின் உயர்ந்த கட்டிடங்களையும், உயர்ந்த தேவாலயங்களையும், நகரத்தைச் சுற்றிப் பார்க்க வந்த எங்களைப் போன்ற டூரிஸ்டுக்களையும் சுற்றி வரப் பார்த்து விட்டு, மீண்டும் நடக்க ஆரம்பித்தோம். வழி நடுவே பலூன், ஐஸ்கிரீம் என்று தெருவில் விற்றுக் கொண்டிருப்பவர்கள் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். கோடைகாலத்தில், நிறைய வெளிநாட்டினரும் வருவதால் அவர்களுக்கும் நல்ல விற்பனை. நடுவில் வயிற்றுக்கும் சிறிது ஈந்து விட்டு, காசு கொடுத்து ரெஸ்ட்ரூம் போய்விட்டு, Brandenburger Tor என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடத்திற்கு சென்றோம். இந்த Brandenburg Gate தான் கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனியை உலகப்போரில் பிரித்துக் காட்டிய இடமாகவும், உயர் அதிகாரிகள் ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கம் செல்லும் வழியாகவும் இருந்திருக்கிறது. பின்பு, பெர்லின் சுவர் இடிக்கப்பட்டு கிழக்கும், மேற்கு ஜெர்மனியும் இணைந்த பிறகு, இது வரலாற்றில் இன்னும் முக்கிய இடமாகி விட்டது. நாங்கள் சென்ற அன்று அங்கு நல்ல கூட்டம். ஒரு புறம், சுடச்சுட ஆட்டுக்கறியை சுட்டு ரொட்டியில் வைத்து விற்றுக் கொண்டிருந்தார்கள். பல கலைநிகழ்ச்சிகளும் நடப்பதற்கான அரங்குகள் போடப்பட்டிருந்தன. உருளைக்கிழங்கு fries , ஐஸ்கிரீம், கபாப் வாங்கிக் கொண்டு ஓரிடத்தில் உட்கார்ந்து சாப்பிட்டு முடித்தோம். நல்ல வெயில். உலகப்போரை நினைவுறுத்தும் வகையில் வேடமிட்டு நின்று கொண்டிருப்போருடன் நாங்களும் படம் எடுத்துக் கொண்டோம்.

அந்த இடமே திருவிழா கூட்டம் போல் இருந்தது. பல விதமான மொழிகளில் பேசிக்கொண்டு பல நாட்டு மக்கள்! நகர் முழுவதும் உலகப்போரைப் பற்றிய அருங்காட்சியகங்கள், மற்ற நாடுகளின் இம்மிக்ரேஷன் அலுவலகங்கள், பூங்காக்கள் என்று அழகான கட்டிடடங்கள். அங்கு இடித்த பெர்லின் சுவரிலிருந்து எடுத்த சில்லுகளை விற்றுக் கொண்டிருந்தார்கள்!நண்பரின் மகள் விபூ, எங்களுக்கு அந்த நாட்டின் வரலாற்றையும், ஒவ்வொரு இடங்களைப் பற்றியும் அருமையாக சொல்லிக் கொண்டே வந்தார்.கடைக்குப் போய் சில நினைவுப் பொருட்களையும் வாங்கினோம்.

அங்கிருந்து மீண்டும் கார் நிறுத்தியிருந்த இடத்திற்கு நடந்து சென்று holocaust memorial பார்க்க கிளம்பினோம். இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியர்களால் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான யூதர்களின் நினைவிடமாக அதைக் கட்டியிருக்கிறார்கள். அந்த இடம் முழுவதும் சிமெண்ட்டால் சிறு,சிறு பாளங்களாக எந்தவித அலங்காரமும் இல்லாமல் கட்டப்பட்டிருக்கிறது. அங்கே யாரும் அதன் மேல் நடக்கக் கூடாது. தெரியாமல் நடந்தாலும் அங்கிருக்கும் பாதுகாவலர்கள் அவர்களை இறங்கச் சொல்லிவிடுகிறார்கள். ஒரு மயான அமைதி அங்கே. சிலர் அந்த சிமெண்ட் பாளங்களை தடவிக் கொண்டே முகம் இறுகிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். யூதர்களோ, கொலையில் தங்கள் குடும்பத்தில் யாரையாவது பறிகொடுத்தவரோ என்னவோ! அங்கு பார்வையாளர்களுக்கு அன்று நடந்த கொடுமையை விவரிக்கும் வகையில் படங்களுடனும், வீடியோ காட்சிகளுடனும், போரில் பெண்கள், குழந்தைகளுக்கு இழைக்கப்பட்ட அநீதியை விரிவாக விளக்கி இருக்கிறார்கள். இவ்வளவு அட்டாகசம் செய்த ஜெர்மனியரசே இந்த நினைவிடைத்தை அமைத்தது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது!

அங்கிருந்த படங்களும், அதற்கு கீழ் எழுதி இருந்த வாசகங்களும் நெஞ்சை பிழிய வைக்கும் எவரையும். அதிலிருந்த முக்கால்வாசி காட்சிகளை அருமையாக The Pianist என்ற படத்தில் எடுத்திருந்தார்கள். அந்த படத்தின் டைரக்டர் தன் குடும்பம் எப்படி இந்த கொலையில் சிதறுண்டு போனது என்றும், அவர் கண்முன்னே நடந்த நிகழ்ச்சிகளை படத்தில் கொண்டுவர எப்படி மெனக்கெட்டார் என்பதையும் ஒரு நிகழ்ச்சியில் பார்த்த போது நாமெல்லாம் அதிர்ஷ்டம் செய்தவர்கள் என்று நினைத்துக் கொண்டேன். அங்கிருந்து வெளியே வரும் பொழுது அனைவர் முகமும் இருண்டு, சிலர் அழுத முகத்துடன் வந்ததையும் பார்க்க முடிந்தது. இன்றும் சிறிலங்காவில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் நடக்கும் கொடுமை இப்படிப்பட்டது தான் என்று நினைக்கையில் மனம் கனக்கத் தான் செய்கிறது. அதற்குள் என் மகன் கீழே விழுந்து கையில் அடிப்பட்டு, அவசர அவசரமாக ஐஸ் ஒத்தடம் கொடுத்து, எலும்பு முறிவு ஏற்பட்டிருக்குமோ என்று பயந்து ஒரு பெரிய களேபரம் நடந்தது. அழுதழுது நடந்த களைப்பால் மீண்டும் என் மகனுக்கு பசியெடுக்க அருகிலிருக்கும் ஐஸ்கிரீம் கடையில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டே சிறிது இளைப்பாறினோம். ஐஸ்கிரீம் மிகவும் சுவையாக இருந்ததுJ

மீண்டும் காரில் ஏறி, பெர்லின் சுவர் பார்க்க கிளம்பினோம். கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனியை பிரிக்கும் விதமாக கட்டப்பட்ட சுவர், ஜெர்மனியை இருநாடுகளாக துண்டாடியது. அதனால் பிரிந்த குடும்பங்களும், அவர்கள் பட்ட துன்பங்களும் பல. அவற்றை எல்லாம் நன்கு டாகுமென்ட் செய்து வைத்திருக்கிறார்கள். சுவருக்கு எதிர்த்தாற்போல் உயரத்திலிருந்து பார்த்தால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை, சுவர் இருந்தது தெரிகிறது. இதனால் குழந்தைகளைப் பிரிந்தவர்கள், கணவன்/பெற்றோர்/மனைவியைப் பிரிந்தவர்கள் என்ன அவதிப்பட்டிருப்பார்கள்? வரலாறு மிகவும் கொடியது என்று உணர்த்திய தருணம்.

இப்போது மனதாலும், நடந்து நடந்து சென்றதாலும் களைப்பாக இருந்ததால் வீட்டுக்குச் செல்லலாம் என்று முடிவெடுத்தோம். முருகன் பார்த்து விட்டு வரச் சொன்ன Alexanderplatz என்ற இடத்தை மட்டும் பார்க்க முடியவில்லை. மீண்டும் இரண்டு மணிநேரப் பயணம். நடுவில் ஓரிடத்தில் நிறுத்தி, சாப்பிட்டு விட்டு, Dresden வந்து சேர்ந்தோம். ஜெர்மானியர்கள் நிறைய sausage சாப்பிடுகிறார்கள். என் மகளும் சில புது வகை உணவுகளை சாப்பிட்டாள்.
வீட்டுக்கு வந்து முருகன், செல்வியுடன் பேசி விட்டு, விரைவிலேயே தூங்கியும் போனோம். அடுத்தநாள், கனவுப் பிரதேசமான Swtizerland போவதற்கான ஆயத்தங்கள் செய்ய, கடைகளுக்குப் போய் பழங்கள், காய்கறிகள், பால், முட்டை, பிரட், வெண்ணை, சாப்பாட்டு சாமான்கள் வாங்கி வந்தோம். அமெரிக்க கடைகளைப் போல் இல்லாமல், இந்த ஊர் கடைகளும் வித்தியாசமாக இருந்தது. விதவிதமான மதுபானங்களை ஒரு பகுதி முழுவதும் அடுக்கி வைத்திருந்தார்கள். என் கணவரும் ஜெர்மனியின் பீர் எப்படித் தான் இருக்கிறது என்று பார்க்கலாம் என்று ஒன்றை வாங்கிக் கொண்டார். நொறுக்குத் தீனிகள் அமெரிக்காவில் கிடைப்பது போல் இல்லை. மக்களும் அனாவசியமாக பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தாமல், வீட்டிலிருந்து பைகளை கொண்டு செல்கிறார்கள்.

துணிமணிகள், சாப்பாட்டுச் சாமான்கள் என்று எல்லாவற்றையும் காரில் ஏற்றி விட்டு வர, முருகனும் தங்குவதற்காக ஏற்பாடு செய்திருந்த வீட்டின் உரிமையாளரை தொடர்பு கொண்டு, நாங்கள் வரும் நேரத்தையும், அவருடைய விலாசத்தையும் வாங்கிக் கொண்டார்.

போன வருடம் இதே நாளில், சுவிட்சர்லாந்தில் இருந்தோம்J

Monday, July 23, 2012

Saxon Switzerland, GermanySaxon Switzerland 
நாங்கள் Zwinger ஐ சுற்றிப் பார்த்து விட்டு வர, முருகனும் தன் வேலையை முடித்துக் கொண்டு செல்வி, சத்யாவுடன் வர, இரு குடும்பங்களும், Saxon Switzerland என்ற காடுகளும், மலைகளும் நிறைந்த இடத்திற்குப் பயணமானோம். இங்கே rock climbing, hiking, mountain biking என்று பல activities நடக்கிறது. அருகிலே எல்ப் (elbe) ஆறு. கொஞ்சம் மலை ஏறிப் பார்த்தால் ஆறும், அதை ஒட்டிய நிலங்களும், மலைகளும் நன்றாக இருக்கிறது. ஒரு பெண்ணும், ஆணும் மலை உச்சிக்குப் போய்க் கொண்டிருந்தார்கள். நாங்களும் தஸ்ஸு, புஸ்சுவென்று மூச்சிரைக்க ஓரளவு மலை ஏறிவிட்டு, கையில் எடுத்துச் சென்றிருந்த முறுக்கு, cookies எல்லாவற்றையும் நொறுக்கி விட்டு, அங்கு வந்திருந்தவர்களுக்கும் கொஞ்சம் கொடுத்து விட்டு, நன்றாக படங்கள் எடுத்துக் கொண்டோம். நேரமாகிவிட்டதால் பாதைகளை மூடிவிட்டனர். இல்லையென்றால் இன்னும் சிறிது தூரம் நடந்து சுற்றிப் பார்த்திருக்கலாம். சில அருமையான இடங்களை பார்க்காமல் வந்து விட்டோமே என்று நினைத்துக் கொண்டே இருக்கின்ற இடங்களைச் சுற்றிப் பார்த்தோம். செல்வியும் அங்கிருந்து ஒரு மலையில் இருந்த ஒரு அரண்மனையை காட்டி மிகவும் அருமையான ஒன்று, நேரம் இருந்தால் போய் பார்க்கலாம் என்று சொன்னார். அந்த ஊரைச் சுற்றி பல அரண்மனைகள். ஜெர்மனியில் பெரிய பெரிய அரண்மனைகள் கொட்டிக் கிடக்கிறது. அத்தனையும் நன்றாக பராமரிக்கப்பட்டு மக்களுக்கு அவர்களுடைய வரலாற்றைத் தெரிந்து கொள்ளும் வகையில்.


மக்களும் விடுமுறையில் இந்த மாதிரி இடங்களுக்கு வந்து போகிறார்கள். பொழுது சாயும் நேரமாகி விட்டது. மனமில்லாமல் அங்கிருந்து கீழிறங்கி ஆற்றுப் பக்கத்தில் சிறிது நேரம் செலவழித்துவிட்டு மீண்டும் வந்த வழியே வீட்டுக்கு வந்து சேர்ந்தோம். வரும் வழியில் கோடைகால வீடுகளையும், குறுகிய தெருக்களையும் பார்த்துக் கொண்டே வந்தோம். பரப்பரப்பே இல்லாத ஒரு இடமாக இருந்தது. ஆறு மணிக்கு மேல் மலைப்பாதைகளை மூடி விடுகிறார்கள். படங்களிலும் , காலண்டர்களிலும் பார்த்த மாதிரி சின்ன சின்ன அழகான கோடைகால வீடுகள். இந்த நகரின் வழியாக எல்ப் (elbe) என்ற ஒரு பெரிய ஆறு ஓடிக் கொண்டிருக்கிறது. அதை ஒட்டி நல்ல பசுமையான நிலங்கள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது. 2002ல் வந்த வெள்ளத்தில் இந்த ஆற்றுப் பாதையில் இருந்த ஊர்கள் மிகுந்த பாதிப்படைந்ததாக முருகன் சொன்னார். 
Albe view from Sandstone Mountain வரும் வழியில், சூரியகாந்திப் பூந் தோட்டத்தை பார்த்து பிரமித்துப் போனோம். கண்ணுக்கெட்டிய தூரம் வரை சூரியகாந்திப் பூக்கள்! ஒவ்வொரு பூவும் நீ முந்தி, நான் முந்தி என்று போட்டா போட்டி போட்டுக் கொண்டு  சூரியனைப் பார்ப்பதற்கு ஓங்கி உயர்ந்து வளர்ந்திருப்பதைப் போல் ஒரு தோற்றம்.

ஒரு ஈ, காக்கா கூட இல்லை. அமைதியான அந்த இடத்தில் சிறிது நேரம் காரை நிறுத்தி பல படங்களை எடுத்து விட்டு, சிறிது தூரம் நடந்தோம். அந்த இடம் முழுவதும் சூரியகாந்திப் பூக்களால் முழுமையாக நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.

வீடு வந்து இரவு உணவை முடித்து விட்டு நாங்கள் பேசிக் கொண்டிருக்க, குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அடுத்த நாள் பெர்லின் நகருக்குச் சென்று பார்க்க வேண்டிய இடங்களைப் பற்றி முருகனும், செல்வியும் சொல்லி முடிக்க, ஆவலுடன்அதை நினைத்துக் கொண்டே தூங்கியும் போனோம்.


Saturday, July 21, 2012

வார விடுமுறை தினங்கள்

இன்று காலையிலிருந்தே ஒரு சோம்பேறித்தனமான நாளாகப் போய்க் கொண்டிருக்கிறது. டிவியில் P .சுசீலாவின் பாடல்களைக் கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது என்னுடைய சிறு வயது வார விடுமுறை நாட்களைப் பற்றிய ஞாபகங்கள் வர , இந்த பதிவு. எப்படி ஆரம்பித்தாலும் அது சாப்பாட்டில் கொண்டு தான் முடிகிறது. அப்படி ஒரு சாப்பாட்டுப்ரியை  நான். 
அந்த நினைவிலே, வாழைக்காய் பஜ்ஜி போட்டேன். கருப்பட்டியும் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் சிறிது நேரத்தில், கருப்பட்டி ஆப்பம் ரெடி. சாப்பிட்டுக் கொண்டே இந்த பதிவு.


 நான் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் காலங்களில் சனிக்கிழமைகளில் பொதுவாக அரை நேரப் பள்ளிக்கூடம் இருக்கும். சாயங்கால வேளைகளில், இரண்டு மூன்று தெருக்கள் தள்ளி வள்ளுவர் ஸ்டால் என்று முறுக்கு, பக்கோடா,காராச்சேவு, காராபூந்தி , நெய்க்கடலை , மசாலாக்கடலை , என்று பலதினுசு நொறுக்குத் தீனிகளையும் சிறுசிறு கண்ணாடி ஜாடிகளுக்குள் போட்டு வைத்திருப்பார். எங்கள் எல்லோருக்கும் என்ன என்ன வேண்டும் என்று கேட்டுக் கொண்டு யாராவது ஒருவர் போய் வாங்கி வருவோம். அவர் அழகாக பேப்பரில் கோன் மாதிரி பண்ணி கை நிறைய கேட்ட ஐட்டங்களைப் போட்டு தருவார். அவர் கடைக்கு எதிரிலே வாய் பேச முடியாத ஒருவர் இதே மாதிரி ஒரு கடை வைத்திருந்தார்.அவரிடம் எப்போதாவது வாங்குவது உண்டு. அவர் கடை பலகாரங்களின் சுவை வேறு மாதிரி இருக்கும். சில நேரங்களில், வீட்டு முக்கில் இருக்கும் பொரிகடலை கடையிலிருந்து ஆளுக்கு ஒரு வறுத்த கடலை,  பொட்டுக் கடலை பொரி, பொட்டுக் கடலை கலந்த ஒரு பொட்டலம் என்று வாங்கி வந்து சாப்பிடுவதும் உண்டு.

ஞாயிற்றுக்கிழமை காலை நேரங்களில், ஒரு வயதான பெண்மணி காலையில் அப்பம், அப்பம் என்று கருப்பட்டி ஊற்றி  செய்த இட்லி , சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய தேங்காய் சில்லுபோட்ட இனிப்பு பலகாரம்  விற்றுக் கொண்டு வருவார்.  அவ்வளவு சாப்டாக வாயில் வைத்தால் கரையும் அந்த பலகாரம். இப்பொழுதெல்லாம்இவர்கள்  வருகிறார்களா, மக்களும் இவற்றை எல்லாம் சாப்பிடுகிறார்களா என்ன?  மதிய நேரம் வருவதற்குள் இன்னொருவர், ஆட்டு ரத்தப் பொரியல் சுடச் சுட விற்றுக் கொண்டு வருவார். கருவேப்பிலை வாசனையுடன் கொஞ்சமே சாப்பிட்டாலும் மிகவும் ருசியாக இருக்கும் :)  


பெரும்பாலான சௌராஷ்டிரா வீடுகளில்ஞாயிற்றுக்கிழமை மணக்க மணக்க கறிக்குழம்பு சாப்பாடு தான். நன்றாக சாப்பிட்டு விட்டு, உண்ட மயக்கம் தொண்டனுக்குச் சொந்தம் என்கிற மாதிரி ஒரு குட்டித் தூக்கம் போட்டு விட்டு, மாலையானதும் MLA ரேடியோ கடையின் உபயத்தால் பல TMS , PBS  P .Suseela பாடிய பல பாடல்களைக் கேட்டிருக்கிறோம். எங்கள் தெருவில் நடிகர் திலகம் ரசிகர் மன்றமும், TMS ரசிகர் மன்றமும், புன்னகை அரசி கே .ஆர் .விஜயா ரசிகர் மன்றங்களும் இருந்ததால் இவர்கள்  நடித்த பாடல்கள் போட்டு தெருவில் அனைவரும் வாசலில் உட்க்கார்ந்து அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த காலம். இந்த தொல்லைக்காட்சிப் பெட்டி வந்தவுடன் அந்த ஆனந்த வாழ்க்கை போய்த் தான் விட்டது.   வந்த நாள் முதல் இந்த நாள் வரை, ஓராயிரம் பார்வையிலே, அத்தான்... என்னத்தான்,அத்தைமடி மெத்தையடி , உள்ளத்தில் நல்ல உள்ளம் என்று பல நெஞ்சில் நின்ற பாடல்களைப் போடுவார்கள். சில சமயங்களில், சுமதி, நீ எப்படிம்மா இருக்கே என்று சிவாஜி கணேசன் உள்ளம் உருகி பேசிய திரிசூலம், என் மூக்கு, என் நாக்கு, என் ராசாத்தி என்று சிவாஜி டப்பாங்குத்து ஆடிய பட்டிக்காடா பட்டணமா, கேள்விகளை நான் கேட்கவா அல்லது என்று திருவிளையாடல், நாரதா  சக்தி பெரிதா, செல்வம் பெரிதா என்று  சரஸ்வதி சபதம் என்று பல படங்களின் வசனங்களையும் கேட்டு பொழுதை போக்கிருக்கிறோம். சில வேளைகளில், அந்த காலங்களில் வந்த படங்களிலிருந்து புதிய பாடல்களையும் போடுவார்கள். மைக் மோகன் நடித்த பாடல்கள் அப்போது மிகவும் பிரபலம். அதெல்லாம் ஒரு காலம்!  இதெல்லாம் கேட்டுக் கொண்டே அந்த நேரத்தில் கிடைக்கும் நொறுக்குத் தீனிகளை சாப்பிட , ஆனந்தம், ஆனந்தம் பாடும், மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும். 

மதிய நேரத்தில், பஞ்சு மிட்டாய், பஞ்சு மிட்டாய் என்று ஒரு பெரிய வண்டியில், பெடலை மிதிக்க சுற்றுகிற அந்த பெரிய கொப்பரை மாதிரி பாத்திரத்தில் சக்கரையை கொட்ட , ரோஸ் கலர் பஞ்சு வர ஆரம்பிக்க, ஒரு குச்சியில் சுற்ற , சுற்ற, பப் என்று அழகாக உருமாறும் அந்த மிட்டாய். அதை அமுக்கினால் சிறு உருண்டை ஆகி விடும்.இனிப்போ இனிப்பு, அவ்வளவு இனிப்பு. :(சில மாலைகளில், தெருவில் வரும் உடித் என்கிற வேகவைத்த கருப்பு உளுந்து விற்றுக் கொண்டு , அதன் மேல் தூவிய பொரிக்கடலை, மிளகாய் சேர்த்து பொடித்த பவுடர் , பொடியாக நறுக்கிய  பச்சை மிளகாய் துண்டுகள் அவர் வைத்துக் கொடுக்கும் பேப்பரில் சாப்பிட..ம்ம்ம்.என் பாட்டிக்காக அடிக்கடி வாங்குவதால் நாங்கள் அவருடைய ரெகுலர் கஸ்டமர்கள்.  உளுந்து ஓரத்தில் வைக்கும்  மிளகாயை கடித்தவுடன் ஏற்படும் சுர்ர்ர் என்ற காரம் உச்சி மண்டையைத் தொட, தண்ணீரைத் தேடி ஓடியதும்....


சில தெருக்கள் தள்ளி, கருப்பட்டியை கோதுமை மாவில் கலந்து, அச்சில் ஊத்தி , ரொட்டியாக விற்பவரிடமிருந்துவாங்கி வந்து  அதையும் சாப்பிட்டிருக்கிறோம்.

சில மாலைகளில்,  ஒருவர் இரண்டு அலுமினியத் தூக்குகளில்,முறுக்கு அதிரசம், ரவா உருண்டை,  கமர்கட் வைத்துக் கொண்டு எங்கள் வீட்டுக்கு எதிரில் வந்து நின்று கொண்டு, வெகு அழகாக குழந்தைகளை கவரும் வகையில் , கூவி கூவி விற்ப்பார். எப்பாடா வருவார் என்று காத்துக் கொண்டிருக்கும் எங்களைப் போன்ற குழந்தைகளுக்கு அவரைப் பார்த்தாலே ஜாலி ஜாலி தான்.


சைக்கிளில் பலகை ரொட்டி, மைதா மாவினால் செய்த பல வகை  ரொட்டித் துண்டுகள் என்று விதவிதமான இனிப்புகளை ஒருவர் விற்றுக் கொண்டு வருவார். 


இவர் போக, மெதுவாக ஒரு தள்ளு வண்டியில் அடுப்பில் எண்ணைக் கொதிக்க, இன்னொரு அடுப்பில், தோசைக் கல்லுடன் பங்கராபான் பைரி , நளறு பைரி, போளியல், சுஜ்ஜியாப்பப்ம்  என்று கீரை வடை, தேங்காய் அரிசி மாவினால் செய்த பதார்த்தங்களைச் சுடச்சுட விற்றுக் கொண்டே ஒரு குடும்பம் வரும். அவ்வளவு ருசியாக இருக்கும்.

இரவு நேரத்தில் வேகவைத்த கடலை வண்டி ஒன்று வரும். எங்கள் அனைவருக்கும் பிடித்த ஒன்று . வேகிற கடலை வாசனையும், பெட்ரோமாக்ஸ் விளக்கின் வாசனையும் ......சுடச்சுட வறுத்த கடலை வண்டியும் வரும். அவர் சுடு மண்ணில் சரக் சரக் என்று கடலையை வறுப்பது வேடிக்கை பார்க்கவே அவ்வளவு நன்றாக இருக்கும். அவரிடம் இருக்கும் அந்த சின்ன படியில் நிறைய எடுத்து ஒரு விரலால் மேலே இருக்கும் கடலைகளைத் தள்ளி விட, கோன் மாதிரி மடித்த காகிதத்தில் போட்டு பெரிய பொட்டலமாக கொடுப்பார். உள்ளே கொஞ்சம் கடலை தான் இருக்கும்:(

இவருக்குப் பிறகு, மூடிய வண்டியில் வரும் அந்த இனிப்பான பட்டர்பன், தேங்காய் துருவல் நடுவில் வைத்த பன் என்று விதவிதமான கேக் வகைகளைக் கொண்டு மணியடித்துக் கொண்டே வருபவரிடமும் நொறுக்கு வாங்கிச் சாப்பிட்டிருக்கிறோம்.   

குல்பி ஐஸ் கூட லேட்டாகத்தான் வரும். எவ்வளவு சாப்பிட்டாலும்  உடம்பு வெயிட் போடாத காலம். கடைசியில் டின், டின் மிட்டாய் வண்டி வரும். இனிப்புடன் கழிந்த தினங்கள்!

நினைத்தாலே இனிக்கும். இவ்வளவு தின்பண்டங்கள் கிடைத்த காலம்! இப்பொழுதும் கிடைக்கலாம். மற்ற ஊர்களில் எப்போடியோ மதுரையில் இது
இன்னும் தொடருகிறது. இவ்வளவும் சாப்பிட்டாலும் ஸ்லிம்மாக இருந்த நான் , இதையெல்லாம் நினைத்தாலே இப்பொழுதெல்லாம் வெயிட் போட்டு விடுகிறது.

Dresden , ஜெர்மனி - பயணக் குறிப்புகள்

Semperoper with the Theater Square
Dresden வந்து சேர்ந்த அடுத்த நாள் நன்கு தூங்கி எழுந்து விட்டு, பதினோரு மணிவாக்கில் காலை உணவை முடித்துக் கொண்டோம். அங்கு ப்ரோட்சன் என்ற ( Brötchen (bread rolls) ) கோதுமை/மைதா மாவில் செய்த பிரட்டில் நன்கு வெண்ணை தடவி, cheese ஸ்லைஸ் ஒன்று வைத்து செல்வி கொடுக்க, அவ்வளவு ருசியாக இருந்தது. ஊர் திரும்பும் வரை அதை நானும் என் கணவரும் நன்றாகச் சாப்பிட்டோம். அதற்கேற்றார் மாதிரி உடல் எடையும் நன்கு கூடி விட்டது, எனக்கு! ஜெர்மனியில் நிறைய தானியவகை ரொட்டிகளும், cheese வகைகளும்  கிடைக்கிறது. வீட்டுக்குப் பக்கத்திலேயே ரொட்டி, காய்கறிகளை வண்டியில் வைத்து வியாபாரம் செய்கிறார்கள். செல்வியும் ஒரு கூடை எடுத்துக் கொண்டு போக, நானும் அவருடன் போய் பார்த்தேன்.குழந்தைகள் எல்லோரும் குளித்து முடித்து விட்டுவர, செல்வி எங்களுக்காக சுவையாக சமைத்து வைத்திருந்த மதிய உணவை சாப்பிட்டோம். இரண்டு நாட்களுக்குப் பிறகு சாதம் சாப்பிட்டதால் நன்கு ரசித்து,ருசித்து சாப்பிட்டோம்.
நண்பரின் குடும்பத்தில் எல்லோரும் ஜெர்மன் மொழி பேசுவார்கள். நமக்குத் தெரிந்தவர்கள் வேற்று நாட்டு மொழி பேசும் பொழுது ஆச்சர்யமாக இருக்கிறதுஎன் மகளும் அவர்கள் பேசுவது எல்லாம் எனக்குப் புரிகிறது ஆனால் திருப்பி வேகமாக பதில் சொல்ல தெரியவில்லை என்றாள். அவளும் பள்ளியில் ஜெர்மன் மொழியை ஐந்து வருடங்களுக்கும் மேலாக படித்துக்கொண்டிருந்தாள். நன்கு எழுதுவாள். தட்டுத் தடுமாறி பேசுவாள். அங்கு ஓரிரு வருடங்கள் தங்கி இருந்தால் வேகமாக பேச முடியும் என்ற தன்னம்பிக்கை அவளுக்கு வந்தது. தான் படத்தில் மட்டுமே பார்த்த/கேட்ட ஜெர்மன் மொழியை நேரில் பேசுபவர்களிடமிருந்து கேட்ட பொழுது மிகுந்த ஆனந்தமடைந்தாள். நண்பரின் மகனும்(சத்யா), மகளும்(விபூ) பேசுவதை ஆவலுடன் கேட்டுக் கொண்டிருந்தாள். அவர்களும் அவளிடம் ஏதாவது ஜெர்மனில் கேட்டால் பதில் சொல்ல முயற்சி செய்தாள். படிக்கும் மொழியும், நடைமுறையில் புழங்கும் மொழியிலும் அநேக வித்தியாசங்கள் இருக்கும். அவளுக்கும் அந்த பிரச்சினை இருந்தது.விபூவிற்கு சராளமாக தமிழ் வருகிறதுசத்யாவிற்கு நன்றாக புரிகிறதுஅவன் தமிழில் பேசினால் accent இருக்கிறதுஅதுவும் கேட்க நன்றாகவே இருந்தது.நண்பருடைய குடும்பத்திற்காக வாங்கி வந்திருந்த பரிசுப் பொருட்களை கொடுக்க, அவர்களும் குழந்தைக்களுக்காக அழகிய கைப்பை, அவர்கள் ஊர் பற்றிய தகவல்கள் அடங்கிய புத்தகம் என்று கொடுத்ததை வாங்கிக்கொண்டோம். என் மகனுக்கு சதா விளையாடிக் கொண்டே இருக்க வேண்டும். அதற்க்கேற்றார்போல் நண்பரின் குழந்தைகளும் இருந்ததால் சதாசர்வகாலமும் கார்டு கேம்ஸ் விளையாடிக் கொண்டே இருந்தார்கள்


ஒரு வழியாக, Dresden நகரைச் சுற்றிப் பார்க்க விபூவோடு கிளம்பினோம். Dresden என்பது Saxony என்ற மாநிலத்தின் தலைநகரம். இரண்டாம் உலகப் போரில் மிகவும் பாதிக்கப்பட்ட ஒரு ஊர். அந்த பாதிப்பை அங்கே பல இடங்களில் காண முடிந்தது. கட்டிடங்களில் புகைபடிந்த கருமையான நெருப்பின் தீவிரமும், உடைந்த சிலைகளும் அதற்கு சாட்சியாக நின்றுக் கொண்டிருக்கிறது. சில கட்டிடங்களை கவனமாக சீரமைப்பு செய்து கொண்டிருந்தார்கள். நகரின் மையத்தில் ஒரு படப்பிடிப்பு நடந்துக் கொண்டிருந்தது. அங்கும் பல உணவகங்கள். மது அருந்தியபடி, பேசிக் கொண்டே உணவு அருந்திக் கொண்டிருந்தார்கள். சுத்தமான cobblestone தெருக்கள். தெருக்களில் வேடமிட்டபடி பலர் அமர்ந்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுடன் நாங்கள் போட்டோ எடுத்துக் கொண்டோம். அதற்கு கூலியாக சில ஈரோஸ் (euros ) கொடுக்க வேண்டியிருந்தது. அமெரிக்காவிலும், ஹாலிவுட் பக்கம் போனால் பல நடிகர்களைப் போல வேடமிட்டவர்களுடன் போட்டோ எடுத்தால் பணம் கொடுக்க வேண்டும்! சிலர் அழகிய குரலில் ஒபேரா ஸ்டைலில் பாடிக்கொண்டிருந்தார்கள். அதையும் சிறிது நேரம் கேட்டு விட்டு மெதுவாக நடந்து கொண்டே சென்றோம். சில மாணவ, மாணவியர்கள் இசைக் கருவிகளை வாசித்துக் கொண்டிருந்தார்கள். கழுத்து வலிக்க அண்ணாந்து பார்க்கும்படி உயரமான, திடமான கல்கட்டிடங்கள். நண்பரின் மகள் விபு, அந்த நகரின் வரலாற்றைப் பற்றி நன்கு தெரிந்து வைத்திருந்தாள். ஒவ்வொரு இடத்தைப் பற்றியும் புள்ளி விவரங்களுடன் எங்களுக்குச் சொல்லிக் கொண்டே வந்தாள். சாலையின் நடுவே ட்ராம் போய்க்கொண்டிருந்தது. நீண்ட சுவர் முழுவதும் அழகிய வண்ணங்களால் அந்த பகுதியை ஆண்டவர்களுடைய உருவங்களை வரைந்து வைத்திருக்கிறார்கள். பெரிய பெரிய சிலைகளுடன் கூடிய பிரமாண்டமான கட்டிடங்கள் பரந்து கிடக்கிறது. வாவ்! வாவ்! மை காட்! என்று ஆச்சரியமாக வாயைப் பிளந்து கொண்டே எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டே வந்தோம்
Procession of Princes - paintings on the wall
ஓங்கி உயர்ந்த கதீட்ரல்கள் நகரின் மையத்திலே இருக்கிறது. நாங்கள் பார்த்த எல்லா தேவாலயங்களிலும் pipe organ என்று சொல்லப்படுகிற இசை வாத்தியக் கருவிகள் இருந்தன. மேடையில் இருக்கும் பியானோவில் வாசித்தால் தேவாலயம் முழுவதும் கேட்கும் வண்ணம் அதனிலிருந்து இனிமையான இசை கேட்க முடிகிறது. ஓங்கி உயர்ந்த அழகிய வேலைப்பாடுகளுடன் சாளரங்கள். வண்ணம் தீட்டிய கண்ணாடி ஜன்னல்கள். நடுவில் ஏசுவின் சிலை. சில கிருத்துவர்கள் அங்கு உட்கார்ந்து கொண்டு அமைதியாக வழிபாடு செய்கிறார்கள். பலரும், அந்த இடத்தைச் சுற்றிப் பார்த்து விட்டு, போட்டோ எடுப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள். மேலை நாடுகள் என்றாலே கிறித்துவ நாடு என்று எண்ணிக் கொண்டிருந்தேன். அதற்கேற்றாற்போல் பல தேவாலயங்கள் ஊர் முழுவதும் பரவிக் கிடக்கிறது.ஆனால், பலரும் இறைநம்பிக்கை இல்லாதவர்களாக இருக்கிறார்கள். என்னுடைய அனுபவத்தில், கறுப்பின அமெரிக்கர்கள் வாரம் தவறாமல் அவர்களுடைய சர்ச்சுக்குப் போகிறார்கள். வெள்ளையின அமெரிக்கர்கள் பலரும் சிறு வயதில் போனதோடு சரி. தவறாமல் சர்ச்சுக்குப் போகும் அமெரிக்கர்களும் இருக்கிறார்கள். அமெரிக்காவில், ஒரே தெருவிலே பலவகையான சர்ச்சுகள். அது ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கிறித்துவ சமூகத்தைச் சார்ந்தவை. எங்கள் வீட்டுக்கு பின்னேயும் ஒரு சர்ச் உள்ளது. மிகவும் வயதானவர்கள் மட்டுமே ஞாயிற்றுக் கிழமைகளில் வருவார்கள். கூட்டமும் அவ்வளவாக இருக்காது. மதுரையில், சாரை, சாரையாக சர்ச்சுக்குப் போகும் கூட்டத்தைப் பற்றி நினைக்கையில் ஐரோப்பாவை விட இந்தியாவில் தான் அதிக கிறித்துவர்கள் இருப்பார்கள் என்று பேசிக் கொண்டோம். இங்கும் ஒரே நடை தான். நடந்தால் தான் ஊரைப் பார்க்க முடியும். ஆஹா, என்ன அழகு என்று ஒவ்வொன்றையும் ரசித்துக் கொண்டே போகும் பொழுது நடப்பது சிரமமாகவே இல்லை
Inside view of a Cathedral
அங்கிருக்கும் ஒபேரா ஹவுஸ்(opera house ), ஜ்விங்கேர்(zwinger ) கட்டிடங்கள் அந்த நகரின் வளமைக்கும், ரசிப்புத்தன்மைக்கும், வரலாற்றுக்கும் நல்ல எடுத்துக்காட்டு. இவற்றை எல்லாம் நிதானமாக பார்க்க வேண்டுமானால், நிச்சயம் அதிக நாட்கள் வேண்டும். எழுத ஆரம்பித்தால் எழுதிக் கொண்டே போகலாம் அவ்வளவு விஷயங்கள் அங்கே! பரந்து விரிந்த அந்தகூடத்தில் நீருற்றுகளும், அருங்காட்சியகமும் மிக அருமையாக இருந்ததுஎன் மகன் வயதுள்ள குழந்தைகளுடன் கண்டிப்பாக போகவே கூடாது. சிறிது தூரம் நடந்தாலே பசிக்கிறது என்பான். அவனுக்காக எப்பொழுதும் தண்ணீரும், நொறுக்குத் தீனிகளும் மறக்காமல் எடுத்துக் கொண்டு போக வேண்டும். ஜெர்மனியில் ரஷ்ய ஆதிக்கம் இருந்ததை நினைவுறுத்தும் வகையில் அந்தநாட்டு பாணியில் கட்டிடங்களின் கோபுரங்கள். எல்லா கட்டிடங்களுக்கு முன் அதைப் பற்றிய சிறு குறிப்புகளும் சுவரில் எழுதபட்டிருக்கிறது.
Inside the Zwinger
Inside the Zwinger

Hopping on a cobblestone street