Monday, July 2, 2012

குளிச்சா குத்தாலம், கும்பிட்டா பரமசிவம்

நேற்று சில்லென்ற காற்றுடன் மாலை நேரத்தில் இளம் வெயிலில் சாரலைப் பார்த்தவுடன் குற்றாலம் பற்றிய என் நினைவலைகள் மீண்டும் உயிருடன் திரும்பி வந்தது.

குளிச்சா குத்தாலம்கும்பிட்டா பரமசிவம்..
குத்தால அருவியுல குளிச்சது போல் இருக்குதா ....
என்று பல திரைப்படபாடல்களிலும், மலையும், மலை சார்ந்த இடம் என்றவுடன் நினைவுக்கு வருமிடமும், திருக்குற்றாலக் குறவஞ்சி, சிங்கன் சிங்கி, மந்தி  சிந்தும் கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும் என்றவுடனும், பொதிகை மலை என்றவுடனும்  நினைவுக்கு வரும் குற்றாலத்தை பற்றிய என் நினைவுகள்...

அதுவரை, தமிழ் பாடங்களிலும், திரைப்படங்களிலும் பார்த்து, கேட்டுக் கொண்டிருந்த குற்றாலத்திற்கு போகும் வாய்ப்பு நான் சிறுமியாக இருந்தபொழுது கிடைத்தது. மக்கள் ஒரு வருடமாக குருவி சேர்ப்பது போல் சேர்த்து வைத்து ஒரு டூரிஸ்ட் பஸ் மூலம்  குற்றாலத்திற்கு குடும்பத்தோடு போவது வாடிக்கைஅதுவும் ஆடி மாதம் என்றால் கேட்கவே வேண்டாம். யாரை கேட்டாலும் குத்தால சீசன் சுப்பரா இருக்காம், நாங்க எல்லோரும் போறோம் என்று விடுமுறைகளில் கிளம்புபவர்கள்ஒரு வாரத்திற்கு குழந்தை குட்டிகளுடன் போகிறவர்கள்
வெறும் தண்ணி அடிக்க நண்பர்களுடன் போகிறவர்கள்பஸ்சில் போகிறவர்கள்
பைக்கில்/காரில்/வேனில்  செல்பவர்கள் என்று கூட்டம் கூட்டமாய் மதுரையிலிருந்து போகும் சௌராஷ்டிரா கூட்டம் நிறையவே இருக்கும்குற்றாலாத்தில் வசதி படைத்த சௌராஷ்டிரா குடும்பங்கள் நல்ல பெரிய பெரிய தங்கும் இடங்களை கட்டி வைத்திருக்கிறார்கள்சௌராஷ்டிரா மக்கள் நன்கு இயற்கையை ரசிப்பவர்களாகவும்வாழ்க்கையை அனுபவிக்கத் தெரிந்தவர்களாகவும்  இருந்திருக்க வேண்டும்
அதனால் தான்இங்கெல்லாம் வீடு, பங்களா கட்டி வைத்திருக்கிறார்கள். இப்போது எல்லாமே வியாபாரமாகி விட்டது. சில இடங்களில் இலவசமாக தங்கவும், ரூம்கள் வாடகைக்கு கிடைக்கும் வகையிலும் வைத்திருக்கிறார்கள். சீசனில் ரூம்கள் கிடைப்பது அரிதுவாடகையும் பெரிது!

 ராதா டூரிஸ்ட் என்று கிருஷ்ணாபுரத்தில் சமையல் பாத்திரங்களை வாடகைக்கு விடுபவரும், வாடகை சைக்கிள் கடை உரிமையாளரும், இன்னும் மற்றொருவரும் சேர்ந்து குற்றாலத்திற்கு பஸ் விட்டனர். என் பாட்டியுடன் நான், அக்கா, தங்கை மற்றும் பெரியம்மா மகள் சகிதம் புறப்பட்டோம். பஸ் லக்ஷ்மிபுரத்தில் ஒரு வீட்டின் முன்னால் நிற்க, சாப்பாட்டுச் சாமான்கள், எங்களைப் போல பயணிகளின் மூட்டை முடிச்சுகளுடன், அரை டிக்கெட், முழு டிக்கெட் சண்டைகள், சச்சரவுகள் எல்லாம் முடிந்து, ஒரு வழியாக நள்ளிரவுக்கு மேல் பஸ் புறப்பட்டது. ஏறியவுடன், நாங்கள் எல்லோரும் தூங்கிவிட்டோம். கண்முழித்து பார்க்கும் பொழுது, குற்றாலத்தில் இருந்தோம்.
அங்கு, சாந்தி இல்லம் என்ற பெரிய சத்திரத்திற்கு முன் பஸ் நிறுத்தப்பட்டு, நாங்கள் அனைவரும் கீழே இறங்கினோம். முதன் முதலில், மிகப் பெரிய நெல்லிக்காய் மரத்தை வாயை பிளந்தபடி, பார்த்துக் கொண்டே, இடம் பிடிக்க உள்ளே ஓடினோம். பெண்கள் எல்லோரும் அவரவர் குடும்பத்திற்காக சாந்தி இல்லத்தில் இடம் பிடிக்க, ஆண்கள் அனைவரும் சாமான்களை இறக்க உதவி செய்து கொண்டிருந்தார்கள். பாட்டியும் நாங்களும் எங்களுடைய சாமான்களை சரிப்பார்த்து விட்டுபல் விளக்கி விட்டு நிமிர்ந்தால், எல்லோருக்கும் காப்பி ரெடி என்று சமையல்காரர்    ஒருவர் வந்து சொல்ல, எல்லோரும் ஓடிப் போய் வாங்கிக் கொண்டோம். மெதுவாக அந்த இடத்தை நோட்டம் விட்டுக் கொண்டே வெளியே  வந்து பெரிய வரண்டாவில் உட்க்காந்து கொண்டே நெல்லிக்காய் மரத்தில் நெல்லிக்காய் இருக்கிறதா என்று ஆராய்ந்துக் கொண்டே காப்பி சாப்பிட்டு முடித்தோம்அந்த இடம் ஒரு சௌராஷ்டிரா குடும்பத்திற்கு சொந்தமானது. மிகப் பெரிய ஹால்கள், சமையல் கூடம், சிறு ரூம்கள்பெரிய வராண்டா, பக்கத்திலேயே கழிவறைகள்முதன் முதலில், அழகர்கோவிலுக்கு பிறகு, பச்சைப் பசேலென்ற மரங்களைப் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. காப்பி  சுவை மறைவதற்குள், காலை உணவு பரிமாற ஆரம்பித்தார்கள். கூட்டம் குடுகுடுவென உள்ளே ஓடி இடம் பிடிக்க, நாங்களும் ஓடிப் போய், இடம் பிடித்துக் கொண்டு உட்கார ஒருவர் வேகமாக இலை போட்டுக் கொண்டே வர, பின்னாடியே வெண் பொங்கல், சாம்பார் வர நல்ல பசியுடன் இருந்தாலும், சுவையுடன் இருந்தாலும், எப்போதும் போலவே சாப்பிட்டு முடித்து எழ ஆரம்பிக்க பாட்டியோ, நன்றாக சாப்பிடுங்கள், மதிய சாப்பாடு நேரமாகும் என்று சொன்னாலும் எழுந்து விட்டோம். ஆனால், அங்கே ஒவ்வொருவரும் சாப்பிடுவதைப் பார்த்தால் கொடுத்த காசுக்கு வசூல் பண்ணுவதாகவே தோன்றியது.

கொஞ்ச நேரம் இளைப்பாறி விட்டு, துண்டு, உடைகள் சகிதம் குளிக்க அருவிக்குப்(மெயின் பால்ஸ்)  புறப்பட்டோம். சாந்தி இல்லத்திலிருந்து பொடி நடையாகப் போனால், சிறிது நேரத்தில் 'ஜோவென்ற அருவியின் ஓசையை கேட்டவுடனேயே ஒரு சிலிர்ப்பு, கொஞ்சம் குளிர்வது போல் உணர முடியும். அருவி பக்கத்தில் வரவர சாரலும், குளித்து முடித்த பெண்கள் ஈரப் புடவையுடனும், குழந்தைகளுடனும்ஈரத்தலையுடனும் திரும்புவதை பார்த்துக் கொண்டே, முதன் முறையாக அருவியையும், சலசலவென்று பாலாறு போல நுரை பொங்கி பாறை வழியே வழிகின்ற அருவியை பார்த்தவுடன் மனம் குதூகலித்தது. பக்கத்தில் செல்ல செல்ல நடுங்கிக் கொண்டே, கூட்டத்தோடு கூட்டமாக, முட்டி மோதி, தலையை நுழைத்த அதே வேகத்தில் மூச்சு முட்ட வெளியே ஓடி வந்தால், அதற்குள் இன்னொரு கூட்டம் உள்ளே ஓட, 'தட் தட்' என்று தலையிலும், முதுகிலும், ஓங்கி அடிக்கின்ற மாதிரி விழுகின்ற தண்ணீரில் பழக சிறிது நேரம் ஆனது. மேலே நிமிர்ந்துப் பார்த்தால் நீல மேகம், கரும் பாறைகளுக்கு நடுவில் நுரையுடன் துள்ளிக் குதித்து விழும் அருவி. கண்கள் சிவக்க குளித்து முடித்து வெளியே வந்தால், சிறு குழந்தைகள் அங்கே குளம் போல சேர்ந்திருக்கும் தண்ணீரில் உருண்டு பெரண்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். உடம்பெல்லாம் எண்ணெய் தடவிக்கொண்டும், கைகால்களை நீவி, உருவிக் கொண்டும், ஒருவர் தலையில் எண்ணெய் வைத்து, பரோட்டோ கொத்துவது போல், கையை வைத்து தவில் வாசித்துக் கொண்டும் இருப்பதைப் பார்த்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தோம். அதற்குள், போனவர்கள் எல்லாம் குளித்து முடித்து விட்டு வர, ஈர உடையுடன், நடுங்கிக் கொண்டே, சாந்தி இல்லம் வந்து சேர்ந்தோம். பின்பு தலையை துவட்டி விட்டு, உடை மாற்றிக் கொண்டு, சிறிது பசிஎடுக்கவே, கொண்டு போயிருந்த நொறுக்குத் தீனிகளை சாப்பிட்டோம். அதற்குள், எங்கள் வயதை ஒத்த குழந்தைகளும், கம்பும் கட்டையுமாக நெல்லிக்காய் மரத்தை நோக்கிப் போக நாங்களும் அவர்களுடன் போய், கிடைத்த நெல்லிக்காய்களை எடுத்துக் கொண்டு வந்து சாப்பிட்டோம். நல்ல சுவை, அதிலும் ஓசி நெல்லிக்காய், கேட்க வேண்டுமா? மதிய நேரம் நெருங்க, நெருங்க பஸ்சில் வந்த அனைவரும், குளித்து முடித்து விட்டு திரும்பி இருந்தனர்
எல்லோரும் மதியம் கறிக்குழம்பு(சைனா அவுண்டிம் பாத்)  சாப்பிட வயிற்றைக் காய போட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தனர். குளித்ததால் அதிக பசி வேறுவாசனையும் தூக்கலாக இருக்கவே, பசி வயிற்றைக் கிள்ளியது. சாப்பிடவரலாம் என்றவுடன் ஓடியக் கூட்டத்தில் நாங்களும் ஓடிப் போய் இடம் பிடித்து உட்கார்ந்தோம். முதலில் இலை, பிறகு ஒருவர் தண்ணீர் தெளித்துக் கொண்டே வர, ஒருவர் அவித்த முட்டைகளை பெரியவர்களுக்கு 5 , சிறுவர்களுக்கு 2  என்ற கணக்கில் இலையில் போட்டுக் கொண்டே போக, பொலப்போலவென வெள்ளை சாதம், கறிக்குழம்பு, பெரியவர்களுக்கு, பெரிய கரண்டி நிறைய கறி, சிறுவர்களுக்கு சின்ன கரண்டி நிறைய கறி என்று போக, சிறிது நேரம் ஆயிற்று அதை எல்லாம் பார்த்து மூச்சு விட. 5  அவித்த முட்டைகளையும், அவ்வளவு கறிகளையும் உண்ட சாப்பாட்டு ராமன்களையும் பார்த்து அதிசயுத்துப் போனோம். நாங்கள் சாப்பிட முடியாமல் வைத்த முட்டைகளை பாட்டி பத்திரமாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொண்டார். பிறகு பசிக்கும் போது சாப்பிடலாம் என்று.
எல்லோரும் சாப்பிட்டு முடித்த பிறகு, உண்ட மயக்கம் தொண்டனுக்குச் சொந்தம் என்கிற மாதிரி ஒரு பக்கம் குறட்டை விட்டுத் தூங்கியவர்களும், ஒரு பக்கம் விளையாடிய சிறுவர்களும், ஒரு பக்கம் சீட்டுக் கச்சேரியும், தாயம் விளையாடுபவர்களும், மீண்டும் குளிக்கச் சென்றவர்களுமாய் கூட்டம் கலைந்தது. இந்த நேரத்தில், பலர், வண்டி வைத்து, ஐந்தருவி, சிற்றருவி, பழைய குற்றாலம்தேனருவிசெண்பகாதேவி அருவி என்றும் போனார்கள். மாலை காபிக்காக மீண்டும் கூட்டம் சேர ஆரம்பித்தது. காபி குடித்து முடித்தவுடன், தலை சீவி, கமகமவென்று மணக்கும் கொடிபிச்சிப்பூ தலையில் வைத்துக் கொண்டு, கலைவாணர் அரங்கம் என்ற தியேட்டர் இருக்கும் பக்கம் போனோம்.

சிலு சிலுவென்று தூறல், இளம் வெயில், பூ வாசம், சில இடங்களில் மனோரஞ்சிதக் கொடி, அதிலிருந்து பூவை பறித்தும் பொடி நடையாக தியேட்டருக்கு கீழே இருக்கும் பூங்காவில் உட்கார்ந்து கொண்டு பொழுது போக்கினோம். சில மாலை வேளைகளில், சௌராஷ்டிரா நாடக கச்சேரி காசெட்டை, டேப் ரெகார்டரில் போட எல்லோரும் அமைதியாக உட்கார்ந்து சிரித்துக் கொண்டே கேட்டோம். திருக்குற்றாலநாதரை தரிசிக்கவும் செய்தோம் சில வேளைகளில். மிகவும் பழமையான கோவில். நன்றாக இருந்தது. அங்கிருக்கும் திருசித்திரச்சபை மிகவும் பிரபலமானது. கடை வீதிகளுக்குச் சென்றும், பழங்கள், மூலிகைகள் வாங்கி கொண்டும் 5  நாட்கள் தங்கியிருந்து ஊர் திரும்பிய அந்த நாட்கள் மிகவும் இனிமையானவை.

மதுரைதிருமங்கலம்ஸ்ரீவில்லிபுத்தூர் தாண்டிராஜபாளையம் தொட்டவுடன் ஒரு வித்தியாசம் தெரியும். வெயிலும் குறைந்த மாதிரி, மலைகளும், மரங்களுமாய் குற்றாலம் நெருங்க நெருங்க மலைகளுடன் கூடிய காடுகள், தூரத்திலிருந்து தெரியும் அருவியும்  பார்க்க கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.
இப்போதெல்லாம் பெண்கள் பக்கம் பெண் போலீசும், ஆண்கள் பக்கம் ஆண் போலீசும் நின்று கொண்டு மக்களை வரிசைப்படுத்தி அனுப்புவதாக கேள்விப்பட்டேன். பாலச்சந்தர் ஒரு படத்தில், மிக அழகாக குற்றாலத்தை படம் பிடித்து காண்பித்திருந்தார்.
.
பிறகு, மேல்நிலைப்பள்ளி படிக்கும் சமயத்தில் போன பொழுது, கூட்டத்தையும், குளிக்கும் இடத்தில் பார்த்த அசுத்தத்தையும்குடித்து விட்டு ஆண்கள், பெண்கள் குளிக்கும் பக்கம் வந்து பண்ணிய கலாட்டவைப் பார்த்து போகவே பிடிக்காமல், திருமணமான பிறகு, என் கணவர் குடும்பத்துடன் ரிசார்ட் ஒன்றில் தங்கி, சிற்றருவியில் குளித்ததோடு சரி. அதற்குப்பிறகுஅந்தப் பக்கம் போக வாய்ப்பே வரவில்லை.
இன்றும் குற்றாலம் என்றவுடன் குடும்பம் குடும்பமாய் குதூகலாத்துடன் செல்லும் செல்வந்தர்களிருந்து கடைநிலை மக்களும்,  இலை நிறைய முட்டைகளும், கறியும், சாதமும் அதை மக்கள் உண்ட விதமும்எப்படி  ஜீரணமாகிருக்கும் என்ற மலைப்பும்பூக்களின் வாசமும்அருவிகளின் ஜோவென்ற இரைச்சலும்பலவிதமான பழங்களும்
பழைய கோவிலும்வரும் வழியில் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவும் என்று மனம் அலைபாய்கிறது.


  2 comments:

 1. அருமையான பதிவு !
  டூர் ஆரம்பம் முதல் முடியும் வரை ரத்தின சுறுக்கமாய் சொன்ன விதம்...
  நிகழ்வுகளை கண் முன்னே கொண்டு வருகின்றது. எல்லோராலும் இப்படி ஒரு பதிவை தர முடியாது. கண்களை கேமிராவாக்கி எண்ண ஓட்டங்களால் அதற்கு உயிர் கொடுத்து செய்த இந்த பதிவின் மூலம், நாங்களும் குடும்பத்துடன் (இலவசமாக) இன்ப சுற்றுலா சென்று வந்த திருப்தி!
  பதிவிற்கு மிக்க நன்றி!

  ReplyDelete
  Replies
  1. குற்றாலம் பலருக்கும் மனதிற்கு மிகவும் நெருக்கமான இடம். எல்லா வயதினரையும் மன வயப்படுத்தி விடும். உங்களின் பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி, விஜய் குமார்.

   Delete