Wednesday, July 18, 2012

நெதர்லாண்ட்ஸ்-ஜெர்மனி - பயணக் குறிப்புகள்நெதர்லாண்ட்ஸ் நாடு அதன் மலர்க்கண்காட்சிகளுக்கு மிகவும் பிரபலம். பல வண்ணங்களில் பலவிதமான மலர்கள் மற்றும் டூலிப் மலர்களின் அணிவரிசையை காண பல நாடுகளிலிருந்து பார்வையாளர்கள் ஏப்ரல்,மே மாதங்களில் இங்கு வருகிறார்கள்.  தமிழ், ஹிந்தி படங்களில் நாயகனும், நாயகியும் அதனுள் ஓடி விளையாடி பாடுவதைப் போல் காட்சிகள் பார்த்திருப்போம். சங்கரின் அந்நியன் படத்திலும் கூட அந்த மாதிரி ஒரு பாடல்காட்சி வரும். நாங்கள் போனது ஜூலை மாதம் ஆகையால் மலர்க்கண்காட்சியை பார்க்க முடியவில்லைL நடுவில் ஒரு இடத்தில் காருக்கு பெட்ரோல் போட்டு விட்டு  சிறிது நேரம் காலார நடந்து, வயிற்றையும் கொஞ்சம் நிரப்பிக் கொண்டு மீண்டும் பயணம். பல இடங்களில் எங்கள் கிரெடிட் கார்டு மக்கர் பண்ணியதால், பணத்தை செலவு பண்ணும் போது 'ஜிவ்வென்றிருந்ததுL
ஜெர்மனி எல்லை தொட்டவுடன், நல்ல வேற்றுமை தெரிந்தது. முதலில் சாலைகளின் தரம். கனடாவில் Montreal போய் விட்டு, US எல்லை தொட்டவுடன் அந்த வேற்றுமை தெரியும். அதேபோல் தான், நெதர்லாண்ட்ஸ் முடிந்து ஜெர்மனி ஆரம்பித்தவுடன் உணர்ந்தோம். ஜெர்மனியின் விசாலமான நன்கு பராமரிக்கப்பட்ட  நல்ல சாலைகள் மற்றும் அதன் நிலப்பரப்பு.  நெதர்லாண்ட்ஸில் மலைகள் அதிகம் இல்லாமல் தட்டையான நிலப்பரப்பு. ஜெர்மனியிலோ ஒரே மேடும் பள்ளமுமாக மலைகள் சூழ்ந்த ஊர்கள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை ராட்சத காற்றாலைகள் கண்கொள்ளாத காட்சியாக இருந்தது. 


ரோட்டில் சில கார்களைத் தவிர ஒரு ஜனமும் இல்லை. சில இடங்களில் எந்த வேகத்தில் செல்லலாம் என்றிருந்தது. பல இடங்களில் அதுவும் இல்லை. பின்பு தான், நண்பர் முருகன் சொல்லி, வேகம் எவ்வளவு என்று எதுவும் போடாமால் இருந்தால் எந்த வேகத்திலும் செல்லலாம் என்று! எங்களுக்கு அப்போது எதுவும் தெரியாததால், முதலில் பார்த்த அதே வேகத்தில் சென்று கொண்டிருந்தோம். எங்கள் பின் வந்த கார்கள் எல்லாம் ஏதோ ரேசில் போவது போல் விர்,விர்ரென்று எங்களை கடந்து  முந்திப் போனபோது கொஞ்சம் அதிர்வாகத்தான் இருந்தது. அநியாயத்திற்கு வேகமாக ஓட்டுகிறார்கள். பிறகு, நாங்களும் வேகமாக போக ஆரம்பித்தோம். ஆனால், கார் தான் எவ்வளவு அழுத்தினாலும் நான் போவேனா என்று அழுத்தமாக அது போகிற வேகத்தில் மட்டுமே போனதுL வாடகைக்காரின் மகிமையே மகிமை. அதுவும் போக, இது தானியங்கி காரும் கிடையாது. அதனால், ஒன்றும் சொல்ல முடியாது.
வழிமுழுவதும் பசுமை போர்த்திய மலைகள் கண்ணுக்கு குளிர்ச்சியாக அந்த நாட்டின் வளமையை பறைசாற்றும் விதத்தில். மலைகளில் முடிந்த வரை பலவிதமான தானியங்களைப் பயிரிட்டிருந்தார்கள். அதனால் தூரத்திலிருந்துப் பார்ப்பதற்கு பழுப்பு, இளம் பழுப்பு, இளம் பச்சை வண்ணத்தில் மலைகள் போர்த்தப்பட்டிருப்பதைப் போல் ஒரு தோற்றம். ஆங்காங்கே மலைகளில் பச்சைப்பசேலென காடுகளும் இருக்கிறது. சுற்றுப்புறச்  சூழ்நிலையில் அதிக கவனம் எடுத்துக் கொள்கிறார்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.  ஐரோப்பா முழுவதும் இப்படித்தானோ என்னவோ. இந்த மாதிரி இடங்களிலும் நம்மூர் டைரக்டர்கள் பல பாடல்களை எடுத்திருக்கிறார்கள்.

முதலில் வந்த ஊர் ஒரு மலையில் இருந்தது. எல்லா ஊர்களும் பார்ப்பதற்கு மிகவும் அழகாக, சுத்தமாக இருந்தது. ஒவ்வொரு ஊரிலும் ஒரு அழகிய தேவாலயம், அதைச் சுற்றி வீடுகள், சில ஊர்களில் சில தொழிற்சாலைகள். அங்கங்கே ஊர்ந்து செல்லும் சிறு கார்கள். அழகிய திட்டமிட்ட தெருக்கள். எங்களை கடந்து சென்ற கார்கள் எல்லாமே பெரும்பாலும் BMW , AUDI , சில honda , சில toyota , சில போர்ட், சில பியட் மற்றும் சில ஐரோப்பிய கார்கள். மிகச்சில Vanகளே எங்களை கடந்து சென்றது. அதிலும் குடும்பமாக சென்று கொண்டிருந்தார்கள். இதே US என்றால், நூற்றுக்கணக்கான SUV, Van, பெரிய,பெரிய கார்கள் ஒற்றை ஆளுடன் சென்று இருக்கும் என்று நினைத்துக் கொண்டோம். பெட்ரோலும் அநியாய விலைக்கு விற்கிறார்கள்! ஒரு நான்கு மணிநேரப் பயணத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு முறை சற்றே இளைப்பாறிவிட்டு, பயணத்தை தொடர்ந்தோம். மீண்டும் சிறு சிறு ஊர்கள், ஊர் முழுவதும் ஒரே மாதிரி வண்ணத்தில் அழகிய வீடுகள். ஏதோ வாழ்த்து அட்டைகளிலும், காலண்டேர்களிலும் பார்த்த மாதிரி அவ்வளவு அழகுடன். பார்த்துக் கொண்டே இருக்கலாம் அவ்வளவு அழகு. பின் இருக்கையில், குழந்தைகள் இருவரும் எனக்கென்ன மனக்கவலை என்று தன்னை மறந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். நானும், பல முறை தூங்காமால் வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தால் என்ன என்று எழுப்பி பார்த்தேன். ஹ்ம்ம், அசதியில் சாப்பிட்டு தூங்கியவர்கள் தான். சரி, நாமாவது நன்றாக வேடிக்கை பார்ப்போம் என்று முடிந்தவரை கிளிக் செய்து கொண்டே வந்தோம். 


என் கணவருக்கு வண்டி ஒட்டாமல் இதையெல்லாம் பார்த்துக் கொண்டே வரமுடியவில்லையே என்ற வருத்தம். அவருக்கும் சேர்த்து நான் பார்த்து, ரன்னிங் கமெண்டரி கொடுத்துக் கொண்டே வந்தேன். ஆங்காங்கே, கொழுத்த ஆடுகளும், மாடுகளும் புல் மேய்ந்துக் கொண்டிருந்தன. வழியில் பார்த்த பாலங்கள் எல்லாம் நல்ல கட்டமைப்புடன் பார்ப்பதற்கு அழகிய தோற்றத்துடன் ஒரு கலைநயத்துடன் இருந்தது. முதலில் பார்த்த ஒரு போர்டில் Ausfahrt என்று எழுதியிருந்தது. அது ஒரு ஊர் போல என்று நினைத்துக் கொண்டோம். மறக்காமல், இதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கையில் மீண்டும் ஒரு போர்டில் Ausfahrt என்னடா, மதுரைக்கு வந்த சோதனை, ஒரு வேளை ஒரே ஊருக்கு பல வழிகளிலும் போக முடியும் போல என்று நினைத்துக் கொண்டோம். பிறகு, அது exit என்பதைத்தான் அப்படி சொல்லிருக்கிறார்கள் என்று முருகன் மூலமாக தெரிந்து கொண்டோம். 


ஒரு வழியாக இரவு 10 மணி வாக்கில், முருகனுடைய ஊருக்கு (Dresden) வந்து சேர்ந்தோம். கூகிள்மேப்ஸ் சொன்னபடி எல்லாம் சரியாகத்தான் இருந்தது. கடைசியாகத்தான் ஒரு சின்ன சொதப்பல் எப்போதும் போல். அவர் வீடு தேடி சுற்றினோம், சுற்றினோம், அந்த ஊருக்குள்ளே அவ்வளவு நேரமும். அந்தத் தெரு தான் கண்ணில் படவே இல்லை. இரவு நேரமாதலால் ஜன நடமாட்டம் மிகவும் குறைவு. ஒரு கல்லூரி பக்கத்தில் சில மாணவர்களிடம் ஏதோ கேட்க அவர்கள் 'நோ இங்கிலீஷ்' என்று சொன்னதும் அடச்சே என்றாகி விட்டது. காரில் வந்து கொண்டிருந்த ஒருவர் தனக்குத் தெரியும் என்று எங்களை வழிநடத்தி ஏதோ ஒரு தெருவில் விட்டு இப்படி போங்கள் என்று சொல்லி விட்டுப் போய்விட்டார். நண்பரின் வீடு அவர் சொன்ன திசைக்கு மறு திசையில் இருந்தது. மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கு வந்து தூங்கி கொண்டிருந்த என் மகளை எழுப்பி நீ படித்த ஜெர்மன் யூஸ் பண்ணி எப்படியாவது வழி கேட்டுக் கொண்டு வா என்று அவளுடன் என் கணவரும் இறங்கிக் கொள்ள அந்த வழியாக போய்க் கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் அவள் செல்போனை வாங்கி நண்பருக்கு போன் போட்டு அவரும் வரும் வழியை அந்த பெண்ணிடம் ஜெர்மனில் விவரமாக சொல்ல, அவளும் எங்களுக்கு சரியான பாதையை சொல்ல, ஒரு வழியாக நண்பர் வீட்டுக்கு வந்து சேர்ந்தோம். அவரை கண்ட ஆனந்தத்தில் என் கணவர் ஹலோ முருகன், ஒரு வழியா உங்க ஊருக்கு வந்து சேர்ந்துட்டோம் GPS இல்லாமலே என்று சொல்லிக் கொண்டே இறங்க, அந்த இரவில் எங்களைத் தவிர எந்த மனித நடமாட்டமும் இல்லாத நேரத்தில், நாங்கள் எழுப்பிய சத்தத்தில் தூக்கத்தை தொலைத்த எதிர் வீட்டு மாடியில் குடியிருக்கும் சீதாப்பாட்டிJ ஜன்னல் வழியே எங்களை பார்த்துக் கத்த, (ஜெர்மனில் தான்) நாங்களும் அமைதியாக எங்கள் பெட்டிகளை எடுத்துக் கொண்டு நண்பரின் வீட்டுக்குச் சென்றோம். அந்த நேரத்திலும் எங்களுக்காக காத்திருந்து, சூடாக செல்வி சமைத்து வைத்திருந்ததை சாப்பிட்டு விட்டு சிறிது நேரம் பேசி விட்டு களைப்பில் தூங்கி விட்டோம். என் மகளுக்கு அவளுடைய கனவுநாடான ஜெர்மனிக்கு வந்து சேர்ந்ததில் மிகவும் மகிழ்ச்சிJ என் மகனோ, மெதுவாக தூக்கம் கலைந்து கொண்டிருந்தான்.

No comments:

Post a Comment