Wednesday, August 1, 2012

பயணக் குறிப்புகள் – Lake Lucerne , ஸ்விட்சர்லாந்து

அடுத்த நாள் காலையில் முதலில் எழுந்து அந்தக் குளிரில் முதல் ஆளாக குளித்து முடித்து விட்டு, என் கணவரையும் எழுப்பி விட்டு, சூடாக என் கிரீன்டீயை எடுத்துக் கொண்டு வெளியே வந்து பார்த்தால், அம்மாடி, அப்படி ஒரு கொள்ளை அழகு. அப்பொழுது தான் மேக மூட்டத்திலிருந்து வெளியே வரவா, வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருக்கும் சூரியன், மூடுபனி, காலைப்பனி விழுந்த பச்சைப்புற்கள், மண்ணோடு பச்சைப்புற்களின் வாசனை, மேய்ச்சலுக்கு மலை மேல் ஆடி அசைந்து செல்லும் கொளுத்த மாடுகள், கன்னுக்குட்டிகள் அதன் கழுத்திலிருந்து வரும் மணியோசை, மலை முழுவதும் அதன் எதிரொலி, மே,மே என்று கத்திக் கொண்டே செல்லும் செம்மறியாடுகள், கண்ணுக்கெட்டிய தூரம் வரை மனித நடமாட்டம் எதுவுமே இல்லாதது என்று ஒரு புதிய உலகம். புத்துயிர் தரும் அந்த வாடைக் காற்று!
புல்வெளி, புல்வெளி தன்னில் பனித்துளி பனித்துளி ஒன்று பாடுது பாடுது பாரம்மா என்று பாடிக் கொண்டே ஓட வேண்டும் போல் தோன்றியது. வேகமாக ஓடி இறங்கிறலாம், அப்புறம் மேலே ஏறுவது தான் கடினம். சிறிதுநேரம், அந்த ஏகாந்தத்தில் உலகமே மறக்க, அப்படியே இயற்கையுடன் ஐக்கியமாகிவிட வேண்டும் என்றே எண்ணத் தோன்றியது. சில நிமிடங்கள் தனியாக என் டீயை குடித்துக் கொண்டே அந்த ஏகாந்தத்தை அனுபவித்துக் கொண்டே இருந்தேன்.

அதற்குள் செல்வியும் கீழே இறங்கி வந்து எல்லோருக்கும் மசாலா டீ போட, முருகனும் இறங்கி வர, மெதுவாக டீ குடித்துக் கொண்டே முன்னிரவு பயந்துக் கொண்டே வந்த நிகழ்ச்சிகளை சுத்தமாக மறந்து, எல்லோரும் அந்த மலைராணியை ரசித்துக் கொண்டிருந்தோம். ஒவ்வொருவராக குளிக்க கிளம்ப, என் மகளும், முருகன், செல்வியின் குழந்தைகளும் கீழே இறங்கி வர, செல்வி எல்லோருக்கும், சூப்பராக ஆம்லெட் போட்டு, toast செய்து தர, நன்றாக வெண்ணை தடவி, மீண்டும் ஒரு கப் டீயுடன் காலை உணவை முடித்தோம். இங்கு பதப்படுத்த பால், பாட்டில்களில் கிடைக்கிறது. அதை திறந்து பயன்படுத்தியவுடன் மீதமுள்ளதை குளிர் பெட்டியில் வைத்து இரண்டு நாட்களுக்குள் முடித்து விட வேண்டும். புது அனுபவமாக இருந்தது. என் மகனை எழுப்பி அவன் தயாராகி வருவதற்குள், நாங்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வந்து, குடுகுடுவென கீழே இறங்கிப் போய் ஓடும் சிறு ஒடையைப் பார்த்து விட்டு மீண்டும் மலையேறி வருவதற்குள் மூச்சு முட்ட ஆரம்பித்து விட்டதுL அவ்வளவு செங்குத்தான மலை. மாட்டுத் தொழுவத்தில் தன் இரண்டு குட்டிகளுடன் மாடு எனக்கென்ன என்று அசை போட்டு நின்று கொண்டிருந்தது. பெரிய்ய்ய மாடு!

எல்லோரும் விறகு வெட்ட ஆசைப்பட்டு வெட்டி முடித்தோம். பிறகு, கேமரா, தண்ணீர் பாட்டில், நொறுக்குத் தீனிகள் சகிதம் நகர்வலம் போகத் தயாரானோம். நாங்கள் எங்கள் காரிலும், முருகன் குடும்பம் அவர் காரிலும் புறப்பட, என் கணவர் வெகு ஜாக்கிரதையாக முருகன் நீண்ட தூரம் போனபிறகு, காரை எடுத்துக் கிளம்பினோம். முதலில் ஏற்றம். மிகவும் கவனமாக ஓட்ட வேண்டியப் பகுதி. நடுவில் ஆடு, மாடுகள் தப்பிப் போகாதவாறு, இரும்புக் குழாய்களை இடைவெளிப் போட்டு வைத்திருந்தார்கள். அவைகள் போனால், அதன் நடுவில் கால் மாட்டிக்கொள்ளும். நல்ல ஐடியா தான். அதன் மேல் கார் குலுங்கிக் கொண்டே போக, கரெக்டாக, டயர்கள் பள்ளத்தில் போகாமல், ரோடில் போகுமாறு கவனத்துடன் ஒட்டிக் கொண்டே, எப்படி இரவில் ஒட்டிக் கொண்டே வந்தோம் இந்தப் பாதையில் என்று அசந்து கொண்டே, கடந்து வரும் மலைகளையும், அங்கொன்றும், இங்கொன்றுமாய் இருந்த வீடுகளையும் பார்த்துக் கொண்டே மெதுவாக கீழிறங்கினோம். நாங்கள், தங்கியிருந்த வீட்டிலிருந்து ஒரு இருபது நிமிடத்திற்குள், ஒரு அழகிய தேவாலயம் வரும். வரும் போதே பல இடங்களில் நிறுத்தி படம் எடுத்துக் கொண்டோம். சுவிட்சர்லாந்தில் எங்கு எப்படி படம் எடுத்தாலும் கண்களில் ஒத்திக் கொள்ளலாம் போல் இருக்கிறது.

சொர்க்கமே என்றாலும், சுவிட்சர்லாந்து போல வருமா, அது எந்நாடு என்றாலும், இந்நாட்டுக் கீடாகுமா என்று பாட்டை மாற்றிப் பாடலாம். அந்த அளவுக்கு, இயற்கை எழில் கொஞ்சும் பச்சை வண்ண,சுத்தமான மலைகள் எங்கு பார்த்தாலும்.

மீண்டும் GPS உதவியுடன் Lake Lucerne பயணம். அங்கு போவதற்குள் வளைந்து நெளிந்து போகும் மலைப்பாதையில் வரும் வீடுகளின் அழகையும், காலெண்டரில் பார்த்த மாதிரி இருந்த இடங்களையும் கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டே வந்தோம். பல வீடுகளில் பெரிய சிலுவைகள், நெஞ்சைத் தொட்டுக் கொண்டிருக்கும் ஏசுவின் சிலைகளை வைத்திருந்தார்கள். அழகான பூந்தோட்டம் அநேகமாக எல்லா வீடுகளிலும். ஒரு கார் எதிரே வந்தால், ஒருவர் நின்று மற்றவருக்கு வழி விட வேண்டும். அந்த அளவுக்குத் தான் ரோடு. வரும் வழியெல்லாம் ஒ மை காட்,ஒ மை காட் என்று மலை அழகை பருகிக் கொண்டே ஒரு வழியாக
Lake Lucerne வந்து சேர்ந்தோம். அங்கு ஒரு இடத்தில் காரை நிறுத்தி விட்டு, கடைக்குப் போய் சாப்பிட்டு விட்டு அங்கிருந்து நடைப் பயணம்.

ரோடுகள் எல்லாம் அவ்வளவு சுத்தம். ஆங்காங்கே வண்ண வண்ண மலர்தொட்டிகள். அங்கு இலங்கைத் தமிழ் மக்கள் வாழ்வதால் நிறைய இந்தியக் கடைகள் மற்றும் உணவகங்கள். அதைப் பார்த்தாலே ஆஹா நம்ம ஊரு கடை என்று ஒரு பரவசம். சாலையைத் தாண்டினால் ஏரி. பல படங்களில் நம் ஹீரோக்கள் ஹீரோயினுடன் ஆடிப்பாடிய அதே இடம்.

ஒருபுறம் மக்கள் சாப்பிட வசதியாக பல வகையான உணவகங்கள். மறுபுறம் நடைப்பாதை கடைகள், நடுவில் ஏரி என்று சுள்ளென்ற வெயிலில் வேடிக்கை பார்த்துக் கொண்டே நடக்க ஆரம்பித்தோம். ஏரியின் பிரபலமான ஒரிடத்தில், நின்று கொண்டு பல படங்களை எடுத்துக் கொண்டோம்-பின்புறத்தில் வண்ண,வண்ண மலர்களுடன். அங்கு கிட்டத்தட்ட ஒரு இரண்டு மணிநேரமாவது நின்று கொண்டே ஏரியின் அழகையும், எங்களை கடந்து போகிறவர்களையும் பார்த்துக் கொண்டிருந்தோம். நிறைய சீன மக்கள்.
அந்த நேரத்தில், முருகனும், என் கணவரும் அடுத்த நாள் போக வேண்டிய இடத்திற்கான டிக்கெட்டுகளை வாங்கப் போனார்கள். அப்படியே, மீண்டும் நடை. நிறைய நம் நாட்டு மக்கள், சப்பாத்திக்குள் சுருட்டிய காய்கறிகளுடன் சாப்பிடுவதைப் பார்த்த எங்களுக்கும் பசி. பல turkish உணவகங்கள். ஓரிடத்தில் போய் வயிறு முட்ட சாப்பிட்டோம். நன்றாக இருந்தது. வெளியே வந்து ஐஸ்கிரீம்/டீ சாப்பிட்டுக் கொண்டே, ஏரியின் அருகில் உட்க்கார்ந்து கொண்டு படகுகளையும், மக்களையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தோம். பரந்து விரிந்த ஏரியின் தண்ணீரின் தளும்பும் ஓசையும், பின்புலத்தில் கரைந்து கொண்டிருக்கும் பனியுடன் மலைகளும், நீலநிற வானமும் இது கனவா இல்லை நினைவா என்று அடிக்கடி கிள்ளிப் பார்க்கத் தோன்றியது.

பிறகு, மெதுவாக சிறு சிறு தெருக்களின் வழியே சுற்ற ஆரம்பித்தோம். குறுகலான கல் தெருக்கள். வீடுகள் எல்லாம் படிகளின் மேல் ஏறிப்போனால் தான் உண்டு. ஸ்கூட்டர்கள். சைக்கிள்கள். ஒரு கடைக்குப் போய், சுவிட்சர்லாந்து நினைவாக சில சாமான்கள் வாங்கினோம். அங்கு விற்கும் குக்கூ கடிகாரங்கள் மிகவும் பிரபலம். அதை எப்படி பத்திரமாக இந்தியா போய் US எடுத்துச் செல்வது என்று யோசித்து வாங்காமல் விட்டுவிட்டோம்L பல வாட்ச் கடைகள். போய்த் தான் பார்ப்போமே என்று உள்ளே போனால், அங்கேயும் ஐஸ்வரியாராயும், சாருக்கானும் சிரித்துக் கொண்டே வாட்ச்களை அணிந்து கொண்டு படத்தில். வாட்ச் வாங்க முடியாத விலையில்:( இருப்பதிலே விலை உயர்ந்த வாட்சை பார்த்து விட்டு வெளியே வந்தோம். நம் அரசியல்வாதிகளின் கள்ளப்பணம் இருக்கும் ச்விஸ் பேங்க் என்று எல்லாவற்றையும் கடந்து, உணவகங்களையும் கடந்து வந்தால், ஓரிடத்தில் இந்திய உணவகம்.
மறக்காமல், ஒரு கிளிக். கீழே bata செருப்புக் கடையும். அட இது கூட இங்கே இருக்கே என்று நினைத்துக்கொண்டே, சாலையை கடந்து, கார் நிறுத்தியிருந்த இடத்திற்கு வந்து சேரும் பொழுது பல மைல்கள் நடந்த களைப்பு. மீண்டும் வீட்டிற்குப் பயணம்.

கூட்டமில்லாத தெருக்கள், சாலைகளை கடந்து மலையேற, பெரிய, பெரிய சிலுவைகள் உள்ள வீடுகளை கடக்கும் பொழுது, என் கணவர் அவருக்குப் பிடித்த D.H.Lawrence புத்தகத்தில் அதனைப் பற்றிய குறிப்புகளை எவ்வாறு விவரித்திருப்பார் என்று சொல்லி கொண்டே வந்தார். இதை மாதிரியே ஷேக்ஸ்பியர், கீட்ஸ் என்று இடத்திற்கு தகுந்தவாறு மேற்கோள் காட்டிப் பேசிக் கொண்டே வருவதும், போவதுமாய், ஊர் உறங்கிய பிறகு மலை ஏறுவதுமாய், கிணிங், கிணிங் என்ற மணியோசையை கேட்டுக் கொண்டே எங்கள் பயணம் தொடர்ந்தது. வீட்டிற்கு வந்து சேரும் பொழுது இரவுநேரம்.சிறிது நேரம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு, குழந்தைகள் விளையாட ஆரம்பிக்க, என் கணவர் தனிமையிலே ஜெர்மனியில் வாங்கிய பியரை ருசிக்க ஆரம்பிக்க, செல்வி சமைக்க ஆரம்பிக்க, அவருடன் நான் பேசிக் கொண்டே உதவ, சுடச்சுட சாப்பிட்டு முடித்தோம். மீண்டும் குழந்தைகள் விளையாட ஆரம்பிக்க, நாங்கள் அடுத்த நாள் போக வேண்டிய இடத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். காலையில் ஒன்பது மணிக்கு வீட்டை விட்டு கிளம்புவதாக பேசிக் கொண்டு படுக்கப் போய்விட்டோம்.

No comments:

Post a Comment