Monday, August 13, 2012

பயணக் குறிப்புகள் - Mt.Titlis, ஸ்விட்சர்லாந்து

அடுத்த நாள், காலையில் எழுந்திருந்து, என் கணவரையும் எழுப்பி விட்டு வந்து, ஜன்னல் வழியே பார்த்தால், ஒரே மேகமூட்டம். டீ எடுத்துக் கொண்டு வெளியே போனால் தான் தெரிந்தது, ஊசி முனைப்போல சன்னமான மழை. தூரத்திலிருந்து பார்த்தால் மழை பொழிவது தெரியவில்லை. போச்சுடா, என்று வேகமாக டிவி போட்டுப் பார்த்தால், அன்று முழுவதுமே மழை தான் என்று தெரிய, வெளியில் போகும் நினைப்பை விட்டு விட்டோம். மெதுவாக காலை உணவை உண்டு, குழந்தைகள் தங்கள் கார்டு கேம்ஸ் விளையாட, பாட்டுக் கேட்க, நாங்கள் பேசிக் கொண்டிருக்க என்று பொழுது போக்கினோம். சிறிது நேரம் குழந்தைகள் குடை எடுத்துக் கொண்டு மலையில் நடந்து வரச் சென்றார்கள். தடதடவென்று இடிமின்னலுடன் இல்லாத சுகமான மழை. மழை நிற்க இரவாயிற்று. மலை எல்லாம் ஏற்கெனவே பச்சை நிறம். இப்போதோ, தெளித்து விட்ட நிலையில் இன்னும் அழகாக இருந்தது. நன்றாக மதிய உணவும், இரவு உணவும் சாப்பிட்டு விட்டு, அன்று நடந்த கால்பந்துப் போட்டியை ஆர்வத்துடன் பார்த்து முடித்தோம். இப்படியாக ஒரு நாள், ரிலாக்ஸ்டாக கழிந்தது.
அடுத்த நாளும், மிதமான மழை என்றிருந்த போதும், Mt.Titlis போவது என்று தீர்மானித்துக் கொண்டு தூங்கப் போனோம்.

அடுத்த நாள் எழுந்து, தயிர் சாதமும், கொண்டைக்கடலை மசாலாவும் செய்து கொண்டு, Mt.Titlis புறப்பட்டோம். நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து போக கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரமானது. கார் பார்க்கிங் செய்ய நன்று தீட்டினார்கள்:( பணத்தைக் கட்டி விட்டு, காரில் உட்கார்ந்து கொண்டே சாப்பிட்டு முடிக்க, சுற்றிலும் மலைகள், மலை மேல் வீடுகள், உயரமான பைன் மரங்கள், சலசலவென்று ஓடும் ஒரு ஓடை, கண் எதிரே ஓங்கி உயர்ந்த Mt.Titlis. அங்கே போவதற்கு கேபிள் கார்களில் போக வேண்டும். நான்கு/ஐந்து பேர் அமர்ந்து செல்கிற மாதிரி கேபிள் கார்களில் முதலில் பயணம். மேலே போக, போக கீழே பார்க்கும் பொழுது அடிவயிற்றை கலக்குவது போல் இருந்தது.

என் பழனி மலை பயணத்திற்கு பிறகு கேபிள் கார் என்றாலே ஒரு உதறல். நான் குழந்தைகளுடன், அம்மா, அக்கா மற்றும் அவள் குழந்தைகளுடன் ஒரு முறை பழனிக்குச் சென்றிருந்தோம். ஏறும் போதே, ஒருவர், ஆடாமல் அசையாமல் உட்காருங்கள் என்று சொல்லும் போதே ஒரு பதற்றம். கொஞ்சம் திரும்பினாலே, அந்த கேபிள் கார் அவ்வளவு ஆட்டமாடியது. ஒரு வழியாக பழனிக்குப் போய் பத்திரமாக திரும்பி வந்து விட்டோம். அடுத்த நாள், மாலை செய்திகளில் ஒரு குடும்பம் கேபிள் கார் அறுந்து விழுந்ததால், கீழே சிதறுண்டு போன படத்தைப் பார்த்தவுடன் ஒரு நாள் முன்பு தான் அங்கிருந்தோம் என்ற நினைப்பு பகீரென்றிருந்தது. அழகான சிறிய குடும்பம் யாருடையோ கவனக் குறைவால் அன்று சிதறியது. இந்த நினைவு வந்ததாலோ என்னவோ மலை ஏறும் வரை, அமைதியாகவே இருந்தேன்.

எங்களுக்கு முன்பும், பின்பும், பல கேபிள் கார்கள் எங்களை கடந்து செல்வதை பார்க்க நன்றாக இருந்தது. கீழே உயரமான பைன் மரங்களும் சிறிது சிறிதாக மாறிக்கொண்டே வர, ஒரு வழியாக மலையின் மேல்பாகத்திற்கு வந்து சேர்ந்தோம். அங்கு நின்று கொண்டு மலையை பார்க்கும் பொழுது அவ்வளவு பயமாக இல்லை. அங்கு சிறிது நேரம் உலாவி விட்டு, படங்களை எடுத்துக் கொண்டு, மீண்டும் ஒரு கேபிள் கார் பயணம் மலை உச்சிக்குப் போவதற்கு.


இந்த கேபிள் கார் வட்ட வடிவமாக சுழன்று கொண்டே மேலே போகும். கேட்பதற்கே வித்தியாசமாக இருக்கல்லவா? அதில் போவதற்கும் நன்றாக இருந்தது. அனால், மெக்கானிசம் தான் புரிவதற்கு கஷ்டமாக இருந்தது. கூட்டத்தோடு போனதால் பயம் அவ்வளவாக இல்லை. அந்த கேபிள் கார் முழுவதும் நாங்களும், மற்றும் சில இந்தியர்களும், சீன மக்களும் தான். நல்ல பெரிய கேபிள் கார். பல கேபிள் கார்கள் மேலே போவதுமாய், கீழே இறங்குவதுமாய் பார்க்க அழகாக இருந்தது. இந்த இடமும், சுழலும் கேபிள் காரும் பல திரைப்படங்களில் பாடல் காட்சிகளில் வந்துள்ளது.

உச்சிக்குப் போனால், பனிமலைப் போர்த்திய ஆல்ப்ஸ் சிகரங்கள். இங்கும் ஒரு பனிக்குகை. விதவிதமான பனி உருவங்கள். மேலே போனால், முதலில் நம்மை வரவேற்பது ஷாருக்கான் மற்றும் கஜோலின் உருவ அட்டைகள்!! அவ்வளவு இந்தியர்கள் வருகிறார்கள் போலிருக்கிறது அல்லது அவர்களுக்கு பாலிவுட் மிகவும் பரிச்சயம் போல. அங்கும் தத்தி தத்தி நடந்து சென்று, சிறிது நேரம் அந்த குளிரில் நடுங்கிக் கொண்டே மலையை பார்த்து, கண்களில் நீர் வழிய, காது மடல் சிவக்க இறங்கி வந்தோம். வாசலில் சூடாக மசாலா சாய், சமோசா விற்றுக் கொண்டு ஒரு இந்தியர். டீ குடித்துக் கொண்டே, பக்கத்தில் இருந்த கடைக்குப் போய் சில நினைவுப் பரிசுகள் வாங்கிக்கொண்டு மெதுவாக கீழிறங்கி வந்தோம்.

அங்கிருந்து புறப்பட்டு வீடு வந்து சேர மாலையாகி விட்டது. வரும் வழியில், ஒரு கடையில் இரவு உணவுக்கு தேவையான பால், சீஸ், பிரட், பழங்கள் என்று வாங்கிக் கொண்டு, மலையோரம் வீசும் காற்று, மனதோடு பாடும் பாட்டு கேட்குதா, கேட்குதா என்று மனதிலே பாடிக் கொண்டே வீட்டுக்கு வந்து சேர்ந்தோம். வந்தவுடன் செல்வி, பாஸ்தா,  சீஸ், கிரீம், முட்டைகள் சேர்த்து அருமையான, சுவையான உணவு செய்து கொடுக்க, நாங்களும் வயிறு முட்டச் சாப்பிட்டு விட்டு சிறிது நேரம் எடுத்த படங்களை பார்த்து விட்டு, டிவி பார்க்க, விளையாட என்று பொழுது போக்கி விட்டுத் தூங்கப் போனோம். இன்றைய நாள் இனிதே கழிந்தது :)

No comments:

Post a Comment

அமேசிங் பிரிட்டன் -8- சௌத்போர்ட்- பிரிஸ்டல்- பாத் பயணக்குறிப்புகள்

சொல்வனம் இதழ் 316ல் வெளிவந்துள்ள பயணக்கட்டுரைத் தொடரின் எட்டாம் பாகம்.  சௌத்போர்ட்- பிரிஸ்டல்- பாத் பயணக்குறிப்புகள்   பயணங்களில் நம்மை அறிய...