Sunday, October 14, 2012

போவோமோ ஊர்கோலம் - மதுரையில் கொலு ஊர்வலம்

கொலு என்றாலே குழந்தைகளுக்கு கொண்டாட்டம் தான். யாருக்குத் தான் இருக்காது? சிறுவர் முதல் பெரியவர் வரை   அனைவரும் விரும்பும் ஒன்று. இந்தியா முழுவதுமே உள்ள கோவில்களில் வண்ண விளக்குகள் ஜொலித்துக் கொண்டிருக்கும் நேரமிது. நம்மூரில் கோவில், வீடுகளில் கொலு, மைசூரில் தசரா, கல்கத்தாவில் துர்கா பூஜா என்று வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது. கொலு பொம்மைகள் கடைகளில், வீதிகளில், கூடைகளில் என்று எங்கும் வியாபித்திருக்கும் நேரமிது. அவ்வப்போது மழை வந்து மிரட்டும் நேரம் கூட!

சிறு வயதில், தினமும் தெருக்களில் வைத்திருக்கும் கொலுக்களைப் பார்த்து விட்டு, எந்த வீட்டு கொலு நன்றாக இருக்கிறது, யார் வீட்டில் புது வித பொம்மைகள் இருக்கிறது என்று சிறிய கொலு முதல் பெரிய கொலு வரை பார்த்து பேசுவது மிகவும் பிடித்தமான ஒன்று. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒன்பது நாட்களும் ஆர்வமுடன் தெருவில் வைத்திருக்கும் கொலுக்களைப் போய் பார்த்து விட்டு உண்டியலில் காசும் போட்டு விட்டு வருவார்கள். சமயங்களில் ஒரே தெருவில் பலரும் கொலு வைத்திருப்பார்கள். அப்படித்தான், எங்களுக்கும் ஆசை வந்தது. ஏன், நாம் கொலு வைத்தால் என்ன என்று. அம்மாவோ, அது விளையாட்டல்ல, பூஜை எல்லாம் செய்ய வேண்டும், ஒன்பது நாளும் அலங்காரம் செய்ய வேண்டும் என்று ஏதேதோ சொல்லிப் பார்த்தார். ஆனாலும் விடவில்லை. ஒரு வருடம் கொலு வைப்பது என்று முடிவெடுத்தோம்.

நான், அக்கா, தங்கை, தம்பிகள் வீடு கட்டும் இடங்களில் இருந்து மணலை வாளிகளில் சுட்டுக்கொண்டு(!) வந்தோம். வீட்டின் முன் கொட்டி, முதலில் பார்டர் ஒன்று கட்டினோம் . கரைகளில் அழகாக நிஜ பூக்கள் வைக்க வேண்டும். அதை பறிப்பதற்கு சிமெண்ட் ரோடு, நடனா தியேட்டர் வரை கூட நாங்கள் போயிருக்கிறோம். அப்போதெல்லாம், அந்த பக்கம் பெரிய பெரிய வீடுகளும் ஒரு பூங்காவும் இருந்தது. வாசனையில்லா பல பூக்களை பறித்து வருவோம். ஒரு குறிப்பிட்ட இடைவெளி விட்டு, கரைகளில் பூக்களை வைத்தவுடன் அந்த இடத்திற்கு கொஞ்சம் அழகு வந்து விடும். ஒரு ஓரத்தில் கண்டிப்பாக ஒரு சிறிய மலை மாதிரி செய்து ஒரு கொடி ஒன்று நட்டு விடுவோம்.கையாலே சுரங்கம் ஒன்று செய்து குட்டி ரயில் போவது போல் ரயில் பொம்மையையும் வைக்க, பார்க்க நன்றாக இருக்கும். அப்புறம் பூங்கா ஒன்று- மரங்கள், குழந்தைகள் விளையாடுவது போன்ற பொம்மைகள் வைத்து. ஒரு சின்ன சட்டியில் தண்ணீர் விட்டு, டப, டப வென்று மோட்டார் சத்தத்துடன் ஒரு கப்பல். சில பிளாஸ்டிக் மீன் பொம்மைகள் மிதக்கும். மறக்காமல் செட்டியார் பொம்மை. அவர் முன், அம்மாவிடம் கேட்டு வாங்கிய அரிசி, பருப்பு இத்யாதிகள். கல்யாண கும்பல் பொம்மைகள், கொஞ்சம் மணல் மேடு செய்து பிள்ளையாரை உட்கார வைத்து கோவில் என்று வீட்டில் இருக்கும் பொம்மைகள் எல்லோரும் தெருவில் கொலுவிற்காக வீற்றிருப்பார்கள். தெரு கொலுக்களில் மிகவும் பிடித்தது உண்டியல் வசூல் தான். கொலு பார்க்க வருகிறவர்களிடம் போய் காசு கேட்க அவர்களும் போடுவார்கள். வீட்டுக்குள் தெரிந்தவர்கள் வந்து விட்டால், அவர்கள் கதி அதோ கதி தான். நிறைய போட வேண்டும் என்ற கண்டிஷன் வேறு. அவர்களும், வேறு வழியில்லாமல் போடுவார்கள். வெள்ளிக்கிழமை அன்று பயபக்தியோடு பூஜை செய்து அனைவருக்கும் பிரசாதம் கொடுத்தோம். உண்டியல் எடையும் சிறிது சிறிதாக ஏறிக் கொண்டிருந்தது. கடைசி நாளன்று பூஜை செய்து, உண்டியலை உடைத்து, எண்ணி, பாகம் பிரிக்க, வாழ்க்கையில் எதையோ சாதித்தது போன்ற வரும் உணர்வு இருக்கே!


அந்த ஒன்பது நாட்களும் கொலுக்களைப் பார்க்க போகின்ற கூட்டமும், கோவில்களுக்குப் போகின்ற கூட்டமும், அப்படியே தீபாவளிக்கும் துணிமணிகள் எடுக்கப்போகின்ற மக்களும் என்று, சந்தோஷமாக போகிறவர்களை பார்ப்பதும் ஒருவித  சந்தோஷம் தான்.
அதுவும், மதுரை என்றால் கேட்கவே வேண்டாம். :) அரசமரத்தில் இருந்து ஜவுளிக்கடைகள் கூட்டம், பாத்திரக்கடைகள் கூட்டம், சாலையோரோக்கடைகளில் பேரம் பேசும் கூட்டம் என்று கடைவீதிகள் கலகலத்துக் கொண்டிருக்கும். நாங்களும் ஒரு மாலை வேளையில், கொலு பார்க்க கிளம்பி விடுவோம். பாட்டி வீட்டிற்குப் போய் அங்கிருந்து எல்லோரும் சேர்ந்து கிளம்புவோம். ஒரு நாள், மீனாக்ஷி அம்மன் கொலு, ஒரு நாள் திரௌபதி அம்மன் கோவில், காமாட்சி அம்மன் கோவில் இன்னும் பல சிறு கோவில்களில் கொலு தரிசனம் என்று.

மீனாக்ஷி அம்மன் கோவிலில் ஒன்பது நாட்களிலும் ஜேஜே என்றிருக்கும். மஞ்சள் பூசி, மணக்க,மணக்க பூக்கள் வைத்துக் கொண்டு பெண்களும், பளிச்சென்று உடை உடுத்திக் கொண்டு கன்னிப்பெண்களும், அவர்களை டாவடிக்கும் கூட்டமுமாய் கோவிலில். வாசலில் கோவில் யானை எல்லோரையும் வரவேற்றுக் கொண்டிருக்கும். வசூலும் செய்து கொண்டிருக்கும். கோவில் கடைகளில், சாமி பார்த்து வந்து விட்ட கூட்டம் பாசி, மணி, வளையல்கள் என்று வாங்கி கொண்டிருப்பார்கள். கடைகள் ஒளி வெள்ளத்தில் ஜொலித்துக் கொண்டிருக்கும். கோவில் முழுவதும் சிவன், நந்தி, அம்மன் ஒளி விளக்குகள் தெப்பக்குளத்தைச் சுற்றி மினுக் மினுக் என்று மின்ன, அதையெல்லாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டே போவோம். மீனாக்ஷி அம்மன் கோவிலில், ஒரு மண்டபத்தில் சிவனின் திருவிளையாடல், அம்மன் திருக்கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகளை விளக்கும் வகையில் கொலு வைத்திருப்பார்கள். பாட்டி/அம்மா/ பெரியம்மா என்று யாரவது ஒருவர் கதைகள் சொல்லிக் கொண்டே வர, பார்க்க சுவாரசியமாக இருக்கும். கூட்டத்தை கட்டுப்படுத்த பள்ளிகளிலிருந்து சாரணர்களும், அங்கிருக்கும் பெண் போலீசுகளும் சீக்கிரம் நகரும்மா என்று கூட்டத்தை நகர்த்திக் கொண்டிருப்பார்கள். அந்த மண்டபமே கூட்டத்தாலும், விளக்குகளாலும் ஜொலித்துக் கொண்டிருக்கும். வெளியில் வந்து, தெப்பக்குளத்தில் சிறிது நேரம் அமர்ந்து கைச்சுத்தல் முறுக்கு சாப்பிட்டு விட்டு, ஆடி வீதி சுற்றப் போய் விடுவோம். . வீதி முழுவதும் கற்களால் போடப்பட்டது. ஒவ்வொரு கல்லிலும் கால் வைத்து ஓட, குதூகலமாக இருக்கும். நிறைய சொற்பொழிவு கூட்டங்கள், ஸ்பெஷல் கச்சேரிகள் நடந்து கொண்டிருக்கும். மக்களும் ஆனந்தமாக கேட்டுக் கொண்டிருப்பார்கள். வாழ்க்கை எவ்வளவு அமைதியாக, ஆனந்தமாக , பரப்பரப்பின்றி இருந்தது! அப்படியே கோவிலைச் சுற்றி விட்டு, மனோரமா  துர்கா பவன்/மாடர்ன் ரெஸ்டாரண்டில் காத்திருந்து சாப்பிட்டு விட்டு வருவோம். கண்டிப்பாக தெரிந்தவர்களையும், நண்பர்களையும் பார்த்து பேசி விட்டு வீட்டுக்கு வரும் பொழுது அடுத்து வரும் நாளில் எந்த கோவிலுக்குப் போவது என்று முடிவும் செய்து விடுவோம்.

தெற்கு மாசி வீதியில், காமாட்சி அம்மன் கோவிலில் அம்மனுக்கு கொலு அலங்காரம் ஒவ்வொரு நாளும் மிகவும் விமரிசையாக நடக்கும். நல்ல கூட்டமும் இருக்கும் அந்த கோவிலில். வரிசையில் நின்று பார்க்க வேண்டும். பார்த்து முடித்த பிறகு, திரௌபதி அம்மன் கோவிலுக்கு போவோம். அங்கும், சூப்பரான அலங்காரம். சமயங்களில், பிரசாதம் கூட சூப்பராக:) எங்கும் மக்கள் கூட்டம் கூட்டமாக. காமராஜர் சாலை முழுவதும் நடந்து போகின்ற மக்கள் கூட்டம். வண்ண வண்ண விளக்குகள், பந்தல்கள் என்று மதுரை ஜேஜே வென்றிருக்கும் திருவிழா நேரம். சரஸ்வதி பூஜையன்று கடினமாக இருக்கும் பாடப் புத்தகங்களை பூஜை ரூமில் வைத்து கும்பிடுவதும், ஆயுத பூஜையன்று ஆயதங்களை வைத்து பூஜை செய்து கும்பிடுவதுமாய் ஆனந்தமாய் போகும் கொலு நேரங்கள்!


கோவில்களில் கொலுக்கள் இன்றும் கோலாகலமாக நடக்கிறது. இன்னும் குழந்தைகள் வைக்கும் தெருவோரோக் கொலுக்கள் இருக்கிறதா? இருந்தால் ஆச்சரியமே!

அமெரிக்காவிலும், சில நண்பர்களின் வீடுகளில் தவறாமல் கொலு வைத்து, நண்பர்களை அழைத்து, பாக்கு வெத்திலை, கிப்ட் கொடுத்து அமர்க்களப்படுத்துகிறார்கள். மிக அழகாக பொம்மைகளை படிகளில் வைத்து, குழந்தைகளை பாட வைத்து, வருகிறவர்களுக்கு சுண்டல், பொங்கல் கொடுத்து மனம் நிறைவடையச் செய்கிறார்கள். சிலர், இன்னும் ஒரு படி மேலே போய், அவர்களே பொம்மைகள் செய்து அதகளப்படுத்துகிறார்கள்.

இந்த படங்கள் எல்லாம் என் தோழிகள் வீட்டில் எடுத்தது.


எல்லோர் வீட்டிலும் அம்மன் குடிகொள்ளும் கலகல கொலு மாதம்! பார்த்து ரசிப்போம் கொலுக்களை!


No comments:

Post a Comment

அமேசிங் பிரிட்டன் -8- சௌத்போர்ட்- பிரிஸ்டல்- பாத் பயணக்குறிப்புகள்

சொல்வனம் இதழ் 316ல் வெளிவந்துள்ள பயணக்கட்டுரைத் தொடரின் எட்டாம் பாகம்.  சௌத்போர்ட்- பிரிஸ்டல்- பாத் பயணக்குறிப்புகள்   பயணங்களில் நம்மை அறிய...