Friday, November 16, 2012

ஐயப்பன் பூஜை


கார்த்திகை மாதம் மாலை அணிந்து நேர்த்தியாகவே விரதமிருந்து, விரதமிருந்து
பார்த்தசாரதியின் மைந்தனே உனை பார்க்க வேண்டியே தவமிருந்து...

என்று காலை வேளைகளில் காபி கடைகளிலும், வீடுகளிலும் வீரமணி/ஜேசுதாசின் குரல்களில் ஐயப்ப பக்திபாடல்கள் ஒலிக்கும் நாட்கள் இது. பலரும் மாலையணிந்து, விரதம் ஆரம்பிப்பார்கள். வீடுகளிலும் பூஜை, புனஸ்காரம் என்று ஐயப்ப மந்திரம் ஒலிக்கும். பக்தர்களும் துளசி மாலை,காவி, கருப்பு வேட்டி அணிந்து, செருப்பு போடாமல் செல்வதைப் பார்க்கலாம். பலரும் முறையாக 48 நாட்கள்( ஒரு மண்டலம்) விரதமிருந்து குருசாமியின் அருளுடன் இருமுடி எடுத்துக் கொண்டு ஐயப்ப கோவிலுக்கு குழுக்களாக பஸ்ஸில் செல்வார்கள். பல இடங்களிலும் எப்படி சாமி இருக்கிறீங்க, சாமி சரணம் என்று ஒருவருக்கொருவர் பார்த்து வணங்குவதையும் இந்த மாதத்தில் பார்க்கலாம்.

என் பெரியப்பா இருபது வருடங்களுக்கும் மேலாக தவறாமல் ஐயப்பன் கோவிலுக்குச் சென்று வந்தார். அவருடைய குருசாமியின் காலம் முடிந்தவுடன் இவர் பொறுப்பேற்றார். இருமுடி கட்டும் நிகழ்ச்சி நடக்கும் அன்று பந்தடி ஏழாவது தெருவில் இருந்த அவர் வீட்டில் பஜனை, பூஜை, பக்தர்களுக்கு சாப்பாடு என்று களை கட்டும். நாங்களும் தவறாமல் போய் விடுவோம். மாலையில் இருட்டிய பிறகு தான் பூஜை ஆரம்பிக்கும். பெரிய ஐயப்பன் சுவாமி படத்தை மலர்மாலைகளால் அலங்கரித்து, பதினெட்டுப் படிகள் வைத்து, திருவிளக்குகள் இரு புறமும் ஏற்றி பூஜைகள் ஆரம்பிப்பார்கள்.

ஒரு பக்கம் இருமுடிக்கான தேங்காய்கள் குடுமிகள் இல்லாமல், ஒரு கண் மட்டும் துளையிட்டு நெய்க்காக காத்திருக்கும். மிகப் பெரிய பாத்திரங்களில் நெய், தட்டுகளில் பழங்கள், ஜவ்வாது, சந்தனம், குங்குமம், சாம்பிராணி வாசனையுடன் அந்த இடமே பரவசமாக இருக்கும். ஐயப்பன் கோவிலுக்குப் போகும் பக்தர்கள் தங்கள் மூட்டை முடிச்சுகளுடனும், குடும்பங்களுடனும் வர ஆரம்பிக்க,

உள்ளே ஒரு பெரிய பாயில் சாதம் ஆற வைத்து, புளிக் கரைசல் கொட்டி, புளியோதரை மணக்க மணக்க தயார் ஆகி கொண்டிருக்கும். வருகிறவர்களை போய் சாப்பிட்டு வாருங்கள் என்று பெரியம்மாவும், அவர் குடும்பமும் சொல்ல, அனைவரும் எழுந்து சென்று புளியோதரை, சுண்டல், தேங்காய் சட்னி, சேமியா கேசரி சாப்பிட்டு விட்டு பூஜை செய்யும் இடத்திற்குப் போய் உட்கார்ந்து கொள்வார்கள். மெதுவாக கூட்டம் சேர ஆரம்பிக்கும்.

எல்லா பக்தர்களும் வந்தவுடன், ஸுவாமியேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏய் சரணம் ஐயப்பாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ என்ற நீண்ட முழக்கத்துடன் இருமுடி பூஜை ஆரம்பிக்கும். மார்கழி மாதம் இளங்குளிருடன் இருக்கும் அந்த மாலைவேளையில், கோவிலுக்குச் செல்பவர்கள் நாற்பத்தியெட்டு நாட்கள் விரதமிருந்து தாடி வளர்த்துக் கொண்டு திருநீறு, சந்தனம், குங்குமம் பூசிக் கொண்டு பக்திப் பழமாக இருப்பார்கள். முதலில் குழந்தைசாமிகளும், பிறகு கன்னிசாமிகளும் (திருமணமாகதவர்கள், முதல் முறை போகிறவர்கள்), என்று வரிசைக் கிரமமாக நெய் நிரப்ப வருவார்கள்.

மறுபக்கம் மைக், தபேலா, ஆர்மோனியம் பெட்டியுடன் பாடுபவர்கள் கூட்டம். அவரும், ஸுவாமியேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏய் என்று சொல்ல, பக்தர்களும், கூட்டமும்,சரணம் ஐயப்பாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ என்று சொல்லி முடிக்க, பள்ளிக்கட்டுச் சபரிமலைக்கு, கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை, சுவாமியே ஐயப்போ என்று ஆரம்பமாகும் கச்சேரி, அனைவரையும் கட்டுப் போட்டு வைத்திருக்கும். பொதுவாகவே, இந்த பாடல்கள் எல்லாம் எளிய நடையில், பாமரரும் பாடும் வண்ணம் இருப்பதால் பலரும் இந்த பாடலை பாடிக் கொண்டே இருப்பார்கள்.

அந்த பக்கம், குருசாமியிடம் ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டு, மனையில் அமர்ந்து, ஐயப்ப கோஷத்துடன் நெய்யை எடுத்துத் தேங்காய்களில் ஒவ்வொருவராக நிரப்பிக் கொண்டே வர, ஒருவர் துளைகளை மூடி, இருமுடி பையுனுள் வைக்க, அதனுடன் மற்ற பூஜை சாமான்களையும் வைத்துக் கட்டி, நிரப்பியவர் தலையில் வைக்க, அவரும் மூன்று முறை சுவாமியே சரணம் அய்யப்பா சொல்லி குருசாமியிடம் கொடுக்க, என்று தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும்.

அதற்குள், பகவான் சரணம், பகவதி சரணம், தேவன் பாதம், தேவி பாதம், பகவானே, பகவதியே... என்று வீரமணி, மற்றும் ஜேசுதாஸ் பாடிய பிரபலமான பாடல்கள் பாடிக் கொண்டிருப்பார்கள். பாடகர்களும் மாற, மாற கூட்டத்தை உற்சாகப்படுத்தும் வண்ணம் வில்லாளி வீரனே, வீரமணி கண்டனே, யாரைக் காண, சுவாமியைக் காண  என்று எல்லோரும் பாடும் வண்ணம் பாட, நேரம் போவது தெரியாமல், பூஜையின் கடைசி கட்டத்தை நெருங்கி கொண்டிருக்கும் போது மணி இரவு பன்னிரெண்டை நெருங்கி கொண்டிருக்கும்.

நடுநடுவில் ஆண்கள் கூட்டம் மெதுவாக தவிட்டுச் சந்தை காபி கடைக்குப் போய் சூடாக காபியும் குடித்து விட்டு வர, குருநாதரும் இருமுடி கட்டி விட்டு, கடைசி நிமிட ஆரத்தி பூஜைக்குத் தயாராகிக் கொண்டிருப்பார்.

பாட்டு கச்சேரியும் முடிந்து விட்ட நிலையில், பதினெட்டு படிகளிலும் தீபங்கள் ஏற்றி, மற்ற அனைத்து விளக்குகளையும் அணைத்து விட்டு, எண்ணை விளக்கொளியில் எரியும் தீபங்கள் மட்டும் ஒளிர, ஒன்றாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா, சுவாமி பொன் ஐயப்பா, என் ஐயனே பொன் ஐயப்பா என்று மொத்த கூட்டமும் பாடிக் கொண்டே வர, பெரியப்பாவும் ஒவ்வொரு படிகளின் தீபங்களையும் ஏற்றிக் கொண்டே வர, பதினெட்டாம் படி வந்தவுடன் பாடலின் வேகமும் அதிகரித்து, அந்த இடமே கற்பூர வாசனையுடன் பக்தி மணம் கொண்டு கமழும்.

அதற்குள் பஸ்சும் வாசலில் வந்து விட, ஆரத்தி எடுத்து முடித்தவுடன், பெரியப்பா அவரவர் இருமுடி எடுத்து பக்தர்கள் தலையில் வைக்க, அவர்களும் அவரிடம் ஆசி வாங்கி குடும்பத்தினரிடமிருந்து விடைப்பெற்றுக் கொண்டு,உறவினர்கள் போட்ட மாலைகளுடன் பஸ்ஸில் ஏற, தேங்காய் உடைத்த பிறகு, அனைவரையும் ஏற்றிக் கொண்டு பஸ்சும் புறப்பட, நாங்களும் பெரியம்மவிடமும், அக்காக்களிடமும் விடை பெற்றுக் கொண்டு நல்ல பூஜையை பார்த்த திருப்தியில் வீடு போய் சேர்வோம். ஐந்து அல்லது ஆறு நாட்களுக்குப் பிறகு, நெய் பிரசாதம் வீடு வந்து சேரும். கமகமக்கும் பிரசாத நெய் கையில் வைத்து சப்புக் கொண்டு சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும்.

நான்கு வருடங்களுக்கு  முன்பு, என் கணவர் மாலையிட்டு, கனடாவில் இருக்கும் scarborogh நகரத்திலிருக்கும் ஐயப்பன் கோவிலிலிருந்து இருமுடி எடுத்துக் கொண்டு, டிசம்பர் மாத குளிரில் செருப்பு போடாமல், மேல் சட்டை அணியாமல், ஐநூறு பக்தர்களுடன், பெரும்பாலும் ஸ்ரீலங்கா தமிழ் மக்கள், போன பொழுது, அந்த பஜனை, பூஜைகள், கற்பூர வாசனை என்று மதுரையை நினைவுப்படுத்தியது. அதற்கு அடுத்த வருடங்களில், பனிப் பொழிவின் காரணமாக, லோக்கலில் இருக்கும் கோவிலிலேயே பூஜையை செய்து விடுகிறோம். இங்கும் மலையாளிகள் ஞாயிற்றுக் கிழமைகளில் பூஜை செய்கிறார்கள். கனடாவிலிருந்தும் அமெரிக்காவிலிருந்தும் ஐயப்பன் கோவிலுக்குப் போக இந்தியா வருகிறவர்களும் இருக்கிறார்கள். அமெரிக்காவில் பெரும்பாலும் வாஷிங்டன் DC யில் உள்ள ஐயப்ப கோவிலுக்கு போகிறார்கள்.


பொய்யின்றி மெய்யோடு நெய் கொண்டு போனால், ஐயனை நீ காணலாம், சபரி ஐயனை நீ காணலாம்  ... ,

ஹரிஹராசனம் விஷ்வமோகனம், ஹரிததீஸ்வரம் ஆராத்யபாதுகம்....

என்று ஜேசுதாஸ் உருகி உருகிப் பாடும் பாடல்கள் இன்னும் காதிலேயே ஒலித்துக் கொண்டிருக்கிறது.

Thursday, November 8, 2012

மதுரையில் தீபாவளி - 2

தீபாவளிக்கு ஒரு வாரம் முன்பே முறுக்கு, சீடை, அதிரசத்திற்கென்று மாவு அரைக்க ரைஸ்மில்லுக்கு அம்மாக்கள் கூட்டம் போக ஆரம்பித்து விடும். அதிரசத்திற்கு மாவு, சக்கரையுடன் பிசைந்து எறும்பு வராமல் இருக்க உயரமான இடத்தில் கயிறு கட்டியோ, இரும்பு வளையங்களில் மாட்டியோ இருக்கும் பாத்திரத்திலிருந்து திருடி எடுத்துச் சாப்பிட அவ்வளவு சுவையாக இருக்கும் :) பெரிய பெரிய எவர்சில்வர் தூக்குகளில் முறுக்கு, சீடை, சீவல், மிக்சர் என்று இருக்கும். முறுக்கு சுடும் போதும், அதை பிழியும் போதும் வேடிக்கை பார்க்க நன்றாக இருக்கும். அடுப்பிலிருந்து எடுத்தவுடன் முறுக்கு மெதுவாக இருக்கும். நன்கு ஆறியவுடன் தான் சாப்பிட சுவையாக இருக்கும். சீடை மட்டும் போடும் போது எங்களை அம்மா விரட்டி விடுவார். சீடை எண்ணையில் போட்டவுடன் அநியாயத்திற்கு தெறிக்கும். வீட்டில் வேலை செய்பவர்களுக்கென்று ஆரியபவனில் ஸ்வீட் பாக்கெட், அவர்களுக்கு புது துணிமணிகள், போனஸ் பணம் எல்லாம் பட்டுவாடா செய்ய அவர்களுக்கும் சந்தோஷம்.

தீபாவளி முதல் நாள் இரவு பல இடங்களிலும் வெங்காய வெடி, லக்ஷ்மி வெடி, சீனி வெடி வெடிக்க ஆரம்பித்திருக்கும்.எப்படா, தீபாவளி காலை நேரம் வரும் என்று காத்திருப்போம். காலை எழுந்தவுடன் எல்லோரும் தலைக்கு குளித்து விட்டு, பூஜை செய்து முடித்து இனிப்புடன் காலைப் பலகாரங்கள் முடிக்க, அப்பாவும் எல்லோருக்கும் அவரவர் துணியை எடுத்துக் கொடுக்க, போட்டுக் கொண்டு பாட்டி, அப்பா, அம்மாவிடம் ஆசிகளும், காசுகளும் வாங்க, மனம் பூரித்துக் கொள்ளும். உச்சாணிக்கொம்பில் இருக்கும் மல்லிகை/முல்லை பூவும் வைத்துக் கொண்டு, பட்டாசு எடுத்துக் கொண்டு வெடிக்க கிளம்புவோம்.

முதலில் ஆயிரம்வாலா சரங்களை கொளுத்தி ( காசை கரியாக்கி விட்டு !) போட, தெருவே காதைப் பொத்திக் கொண்டு வேடிக்கைப் பார்க்கும். அதிலும் சில தில்லான பொடிசுகள், வெடி வெடிக்கும் போதே நடுவில் புகுந்து ஓடுவார்கள்! வெடிக்க ஊதுவத்தியை பக்கத்தில் எடுத்துக் கொண்டு போய் ஒரு கால் முன்னேயும், ஒரு கால் ஓடுவதற்கு தயாராக பின்னேயும் வைத்துக் கொண்டு வெடி பக்கத்தில் போக, திரியை அட்ஜஸ்ட் செய்ய, நடுக்கத்துடன் வெடிக்க பக்கத்தில் போவதும் பின் பதற்றத்துடன் வருவதுமாய் ஒரு வழியாக பத்த வைத்து விட்டு ஓடிப் போய் வாசலில் ஒதுங்கி காதைப் பொத்திக் கொள்ள, பார்த்துக் கொண்டிருக்கும் வாண்டுகளும் ஆவலுடன் வெடிப்பதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும். அந்த 'சட சட' வெடிச் சத்தமும், வெடிப்புகையும் தான் தீபாவளியின் சிறப்பு. அதற்குப் பிறகு, சின்ன சின்ன வெடிகள் வெடித்து விட்டு, பக்கத்து வீடு, பெரியப்பா வீடு, அப்பாவின் உறவுக்காரர்களுக்கெல்லாம் இனிப்புகள் கொடுத்து விட்டு, ஆசீர்வாதமும், தீபாவளி பணமும் வாங்கிக் கொண்டு, அவர்கள் வீட்டிலிருந்து வரும் இனிப்புகளையும் ருசித்து விட்டு, விடு ஜூட், பாட்டி வீட்டுக்கு. எல்லோரும் எவ்வளவு தீபாவளி பணம் கொடுப்பார்கள் என்பதிலேயே மனம் அலைபாயும்.

பாட்டி வீட்டிற்கு போனவுடன் நாங்கள் உடுத்தியிருக்கும் புது டிரெஸ்ஸை காண்பித்து விட்டு, பாட்டி, மாமாக்கள், அத்தைகள், பெரியம்மாக்கள், பெரியப்பாக்களிடம் ஆசீர்வாதம் வாங்கி கொண்டு அவர்கள் புது டிரஸ்சையும் பார்த்து விட்டு, அவர்கள் கொடுக்கும் பணம், பட்டாசு வாங்கி கொள்வோம். மாமா குழந்தைகள் அவர்கள் பாட்டி வீட்டிற்கு கிளம்ப, நாங்கள் பாட்டி வீட்டில் டேரா போட்டு விடுவோம். அன்று காலையிலிருந்து சாப்பிட்ட இனிப்பும், பட்டாசின் புகையும், லெமன் சாதம், வெண் பொங்கலும் சேர்ந்து தலை சுத்துற மாதிரி தோன்றும். சிறிது இளைப்பாறி விட்டு, மாலையில் பாட்டி வீட்டு சார்பில் வாங்கின புதுத் துணி போட்டுக் கொண்டு புளியோதரை, சேமியா கேசரி சாப்பிட்டு முடித்து, பட்டாசு வெடித்து விட்டு வீட்டுக்குத் திரும்புவோம். எல்லோரிடமும் தீபாவளி வசூல், பட்டாசு என்று கனத்துடன், சிரிப்புடன் வீடு வந்து சேருவோம்.


மீண்டும் சிறிது நேரம் பொட்டு பட்டாசு, பாம்பு பட்டாசு, கம்பி பட்டாசு, சங்கு சக்கரம், புஸ்வானம் வெடித்து விட்டு தூங்க போய் விடுவோம். நம்மூர் நடிகர்கள் வைத்திருக்கும் பொம்மை துப்பாக்கி பல வீடுகளிலும் அன்று டப் டப் என்று பொட்டு பட்டாசு வெடித்துக் கொண்டிருக்கும். அதில் ஒரு கேப் ரோலை மாட்டி விட்டு அடுத்தவரை பார்த்து சுடுவது போல் வேடிக்கை செய்து சுடுவதில் தான் என்ன ஆனந்தம்! சிறு குழந்தைகள் சின்ன சுத்தியலை வைத்து 'டப்டப்' என்று பிங்க் வண்ணத்தில் இருக்கும் ஒவ்வொரு பொட்டு பட்டாசாக வெடிப்பார்கள்.வாசல் முழுவதும் பாம்பு பட்டாசு கொளுத்தி கருப்பாக இருக்கும். கம்பி பட்டாசு கொளுத்தி சுற்றி சுற்றி விளையாட, அதிலிருந்து தெறிக்கும் நட்ச்சத்திரங்களை பார்க்கும் போதே தலை சுற்றுவது போல் இருக்கும்.

சிலருடைய சங்கு சக்கரம் சுத்தாமல் சண்டித்தனம் பண்ண, மேலே போ, மேலே போ என்று சொன்னால் தான் புஸ்வானம் மேலே போகும் என்கிற மாதிரி எல்லா வாண்டுகளும் சேர்ந்து கோரசாக கத்த, அது மேலே போகும், சில வெடிக்கும், எப்படியும் அன்று ஒரு சிறு விபத்தில்லாமல் போகாது. ட்ரெஸ்ஸில் பட்டாசு பட்டு ஓட்டை விழுந்து விட்டால் அழுகையுடன் தான் முடியும் அந்த நாள்:( இளவட்டங்கள் பாட்டிலில் ராக்கெட் பட்டாசை வைத்து வெடிக்க சில 'விர்'ரென்று வானில் பறக்க, சில 'தொஸ்' என்று விட்ட இடத்திற்கே திரும்பி வரும் வேடிக்கையும் நடக்கும். ரேய், தொரே தொஸ்சு பட்டாஸ் ரீ (உன்னுடையது தொஸ்சு பட்டாஸ்) என்று சக வாண்டுகள் கேலி பண்ணும் கூத்தும் நடக்கும். சிலர், அதிமேதாவித்தனமாக கையில் வெடியை பத்த வைத்து வெடிக்க போகும் நேரத்தில் தூக்கி போட்டு விளையாடுவதும் நடக்கும்.


கார்த்திகை மாதம், பெரிய கார்த்திகை அன்று கொளுத்த சில பட்டாசுகளை எடுத்து வைத்துக் கொண்டு, தீபாவளியை முடித்து விடுவோம். அடுத்த தீபாவளிக்காக இப்பொழுதிருந்தே பலரும் இனிப்பு, பண்டம், பாத்திரங்கள், நகை வாங்க என்று சீட்டு போடவேண்டும் என்ற எண்ணத்துடன் அன்றைய நாள் வேகமாக போய் விடும். எப்படா பள்ளி திறக்கும் புது டிரஸ் போட்டுக் கொண்டு போகலாம் என்று காத்துக் கிடப்போம்.

நாங்கள் பசுமலை பக்கம் இருந்த பொழுது, நடு இரவே ஆட்டுக்கறிக்குழம்பு, இட்லி, இனிப்புகள் சாப்பிட்டு விட்டு தீபாவளி கொண்டாடினோம். இப்பொழுது தீபாவளி அன்று வீட்டில் பூஜை, புதுத்துணி, சாப்பாடு, வார இறுதியில் கோவிலில் பூஜை, கல்சுரல் ப்ரோக்ராம்ஸ், வான வேடிக்கை, நண்பர்களுடன் ஒரு நாள் தீபாவளி கொண்டாட்டம் என்று போகிறது.
அனைவருக்கும் தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்!Tuesday, November 6, 2012

மதுரையில் தீபாவளி - 1


தீபாவளி என்றதும், மத்தாப்பு சுத்தி சுத்தி போடட்டுமா என்று குழந்தைகளுக்கெல்லாம் ஜாலி ஜாலி தான். புதுத்துணிமணிகள், பட்டாசு, முறுக்கு, சீடை, அதிரசம் என்று அவர்களுக்குப் பிடித்ததெல்லாம் கிடைக்கும். பெற்றோர்களுக்குத் தான் இதையெல்லாம் எப்படி சமாளிக்கிறது என்ற கவலை இருக்கும். போனஸ் கைக்கு வந்தவுடன் பலர் வீட்டிலும் சிரிப்பும், மத்தாப்பும் வெடிக்க ஆரம்பித்து விடும். கொலு முடியும் போதே கடைகளுக்குப் போய் துணிமணிகள் வாங்குவது, பட்டு சேலை வீட்டில் வைத்து விற்பவர்களிடம் குடும்பமாக போய் பார்த்து விட்டு எடுத்து வருவது, சட்டை, பேன்ட், சேலை தைக்க கொடுத்து விட்டு எப்படா வரும் என்று காத்திருந்தது என்று ஒரு சுகமான காலம். டெய்லர் கடைகளில் துணிகளை கொடுத்து தைக்க வருபவர்களின் அளவுகளை ஒரு சிறு நோட்டில் சிறிய பென்சிலால் அளவுகளை எழுத, காசா எடுக்கும் பையன் கழுத்தை வளைத்துக் கொண்டு அவன் வேளையில் மும்முரமாய் இருக்க, அந்த சிறிய கடையில் துணிகள் சிதறி தீபாவளியின் அருகாமையை பறைசாற்றிக் கொண்டிருக்கும். இன்று எல்லாமே ரெடிமேட் ஆக கிடைத்து விடுவதால் அந்த காத்திருத்தலில் இருந்த சுகம் என்ன என்று பலருக்கும் தெரியாமலே போய் விட்டது. வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை புதுத்துணி வாங்கும் பழக்கம் போய், கடைக்குப் போகும்போதெல்லாம் வாங்கும் பழக்கம் வந்து, புதுத்துணிக்களுக்காக காத்திருந்த அந்த இனிமையான நாட்களின் அருமை இன்றைய தலைமுறையினருக்குத் தெரியாமலே போய் விட்டது:(


எங்கள் வீட்டில் அப்பா புதுத்துணிகள் வாங்கி வந்தவுடன் அவர் தெரு முக்கில் வரும் போதே எத்தனை கடைப் பை இருக்கிறது என்று பார்த்து ஓடிப் போய் வாங்கி வந்து, வீட்டிற்குள் போய் பிரித்து இது எனக்கு, இது உனக்கு என்று சண்டை போட ஆரம்பித்து விடுவோம். கலர், சைஸ் சரியில்லை என்றால் மீண்டும் கடைக்குப் போய் மாற்ற வேண்டியிருக்கும். அடிக்கடி புதுத்துணி போட்டு, அந்த புதுத்துணி வாசனை பார்த்து, அதன் மடிப்பு கலையாமல் திருப்பி மஞ்சள் பையிலே வைக்க, பிறகு அதற்கு மேட்சாக நதியா தோடு, ஹேர்பின், பொட்டு.. என்று கோவில் கடை, புதுமண்டபம் என்று போக, நடுவில் மழையும் எங்களுடன் சேர்ந்து கொள்ளும். தீபாவளிக்கு ஒரு வாரம் முன்பாகவே அங்கொன்றும் இங்கொன்றுமாக பட்டாசு வெடிச் சத்தம் கேட்க ஆரம்பித்து விடும். பலசரக்கு கடைகளில் எண்ணை, டால்டா, அரிசி மாவு, கடலை மாவு ஸ்டாக் செய்ய ஆரம்பித்து விடுவார்கள். ரேஷன் கடைகளிலும், மண்ணெண்ணெய், பலகாரங்கள் செய்ய எண்ணை, அரிசி மாவு, சீனி எல்லாம் கொடுக்க ஆரம்பிப்பார்கள். அதை வாங்க பெண்களும், குழந்தைகளும், ஆண்களும், வயதானவர்களும் நீண்ட வரிசையில் நின்று கால்கடுக்க தவம் கிடப்பார்கள். பலரும், இனிப்பு, பாத்திரங்கள், துணிமணிகள், நகைகள் வாங்க என்று வருடம் முழுவதும் சீட்டு கட்டியிருப்பார்கள். அது கையில் கிடைத்தவுடன் அவர்களும் கடைக்கு கிளம்பி விடுவார்கள்.


தீபாவளிக்கெல்லாம் ஹைலைட் - தீபாவளி முன்தினம் தான். கீழவாசலில் இருந்து(இப்பொழுதெல்லாம் அரசமரத்திலிருந்து) மஞ்சனக்காரத்தெரு வரை தெற்குமாசி வீதியின் இருபுறங்களிலும் தள்ளு வண்டியிலும், பிளாட்பார்மிலும் துணிகள், தோடு,ஹேர்பின், பொட்டு, செருப்பு, பாய், பிளாஸ்டிக் குடங்கள், பாக்ஸ்கள், எவர்சில்வர் பாத்திரங்கள், அண்டா குண்டாக்கள் என்று எல்லாவிதமான சாமான்களும் கொட்டிக் கிடக்கும். நேரம் நேரம் ஆக ஆக விலை குறைத்து கூவி கூவி விற்பார்கள். பார்த்து வாங்கினால் நல்ல லாபம். இடிமன்னர்களிடமும், பிக்பாக்கெட்காரர்களிடமும் இருந்து தப்பித்து கூட்டத்திற்குள் போகும் சாமர்த்தியம் இருக்க வேண்டும். இல்லையென்றால் ஓரிடத்தில் இருந்து வேடிக்கைப் பார்த்து விட்டு வர வேண்டியது தான். பாட்டி வீடு விளக்குத்தூண் பக்கம் இருந்ததால் கூட்டத்தை நன்றாக வேடிக்கை பார்க்க முடிந்தது. நடுநடுவே திகர்தண்டா சாப்பிட, பீமா புஷ்டி அல்வா, மாங்காய், தென்னங்குருத்து, மிட்டாய், வேக வைத்த கடலை, கிழங்கு என்று வாங்க, பட்டாசுக்கடைக்கு போக, அசைவம், சைவம் என்ற வித்தியாசம் இல்லாமல் எல்லா உணவகங்களிலும் என்று எங்கும் கூட்டம் மொய்த்துக் கொண்டிருக்கும். இப்படி நடுநிசி வரை போய்க் கொண்டிருக்கும். மழை பெய்தாலும் குடையுடன் போகும் கூட்டம். இதைத்தவிர, ஆங்காங்கே, திடீர் பட்டாசுக் கடைகளில் கூட்டம், ஆரியபவன், திண்டுக்கல் ரோடு, மேல மாசி வீதிகளில் இனிப்புகள் வாங்கும் கூட்டம், நகைகள் வாங்க என்று மதுரை முழுவதும் விழித்துக் கொண்டு இருக்கும் தூங்கா நகர நேரமது. சேலைக்கடைகள், அம்மன் சந்நிதி, ஜடாமுனி சந்து என்று எந்த பக்கம் திரும்பினாலும் மக்கள் கூட்டம் ஜே ஜே அலைமோதிக் கொண்டிருக்கும். தீபாவளி ரிலீஸ் படங்களின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு அதை வேடிக்கை பார்க்கிற கூட்டமும், தங்களின் விருப்பமான நடிகர்கள் படம் என்றால் பால் அபிஷேகமும், மாலையும், தலைவனைப் போலவே மொட்டையடித்தும், மீசைஎடுத்தும், தாடி வளர்த்தும், பிடித்த நடிகைகள் என்றால் கோவில் கட்டி கும்பிட தயங்காத விடலைகளின் கூட்டமுமாய் என்று முழு நகரமும் விழாக்கோலத்தில் இருக்கும் நாளது!

ஊரிலிருந்து வரும் விருந்தினர்கள் கூட்டம், தலை தீபாவளி கொண்டாடும் புதுமணத் தம்பதிகள் கூட்டம், மகன்/மகள் வருகையை எதிர்நோக்கி காத்திருக்கும் பெற்றோர்கள் கூட்டம், அப்பா, அம்மாவைப் பார்க்க போகிற மகன்/மகள்கள் கூட்டம், தாத்தா , பாட்டிகளைப் பார்க்க போகின்ற பேரன், பேத்திகள் கூட்டம் என்று ரயில், பஸ், விமான நிலையங்களில் கூட்டம் அலைமோதும் நேரமிது.

தீபாவளிப் பயணம் தொடரும் ..

Friday, November 2, 2012

போவோமா ஊர்கோலம் - அசைவ உணவுகள்- மீன், கருவாடு


பொதுவாக, மீன் சாப்பிடும் குடும்பங்கள் எனக்குத் தெரிந்து மிகவும் குறைவு. சிலருக்கு மீன் வாசனை பிடிக்காது. சிலருக்கு முள்ளைப் பார்த்தால் பிடிக்காது. ஆனால், மீன் சாப்பிட்டுப் பழகியவர்களுக்கு அந்த வாசனையும், முள்ளும் ஒரு பொருட்டே அல்ல.

நித்தம் நித்தம் நெல்லிச் சோறு நெய்மணக்கும் கத்திரிக்கா, நேத்து வச்ச மீன் குழம்பு ...முள்ளும் மலரும் என்ற படத்தில் வரும் இந்த பாடலில், கதாநாயகி நேத்து வெச்ச மீன்குழம்பு பற்றி பாடியது போல், மீன் குழம்பின் சுவை சமைத்த தினத்தை விட, மறுநாள் தான் சுவை கூடி இருக்கும். புளி,  தக்காளி போட்டு சமைக்கும் உணவுகள் எல்லாம் அடுத்த நாள் சாபிட்டால் புளிப்பு சுவை இன்னும் கூடி அருமையாக இருக்கும். அதே போல், முதல் மரியாதையில் ராதா மண்சட்டியில் செய்த மீன் குழம்பை, தட்டு நிறைய சாதத்தில் ஊற்றி, சாப்பிடுய்ய்ய்யா என்று சிவாஜிக்கு கொடுக்கும் பொழுது, ஜிவ்வென்று பலருக்கும் நாக்கில் நீர் ஊறியிருக்கும். அதை விட, ராதா மீன் சாப்பிடும் காட்சியில், சின்ன முழுமீனை வாயில் போட்டு, மீன் எலும்பு மட்டும் வெளியில் எடுக்கும் காட்சி கண்ணிலிருந்து மறைய ரொம்ப நாளானது. தியேட்டரை விட்டு வெளியில் வரும் பொழுதே அம்மாவிடம் அதே மாதிரி மீன் குழம்பு பண்ணிக் கொடுக்க வேண்டும், நாங்களும் அதே மாதிரி சாப்பிட்டு பார்க்க வேண்டும் என்று பண்ணிய அடத்தில், விரைவிலேயே மணக்கும் மீன் குழம்பு தயாரானது. நாங்களும் ஆசையுடன் மீன்குழம்பு சாதத்தை பிசைந்து கொண்டு, மீனை எடுத்து, வாயில் வைக்க, கடுக்கு முடுக்கு என்று எலும்புடன் தான் சாப்பிட முடிந்தது. அதில் மிகுந்த வருத்தம். பிறகு வழக்கம் போல் முள்ளை  எடுத்து சாப்பிட  வேண்டியதாகி விட்டது. ஆனாலும் என்ன, சுவையான் மீன் குழம்பு சாதம் சாப்பிட்ட திருப்தி !

நாங்கள் இருந்த பகுதியில் காலையில் மீனு,மீனு என்று கூவிக் கொண்டு கூடையில் மீன் விற்பவர்களிடம் வாங்கி அவர்களையே சுத்தம் செய்ய சொல்லி விட்டு எப்படா மீன் குழம்பு ரெடி ஆகும், மீன் வறுவல் கிடைக்கும் என்று ஆவலுடன் காத்துக் கொண்டிருப்போம். வறுவலுக்கு மசாலா எல்லாம் தடவி  மீனை சிறிது நேரம் வெய்யிலில் வைத்து பிறகு பொரித்தால் சும்மா 'ஜிவ்'வென்றிருக்கும்!
நல்லெண்ணையில் கடுகு, வெந்தயம் தாளித்து, வெங்காயம், பூண்டு, தக்காளி வதக்கி, கரைத்த புளிக்கரைசலை ஊற்றி, சிறிது கொதித்தவுடன், தேங்காய், பெருஞ்சீரகம் சேர்த்து அரைத்த கலவையை சேர்த்து, நன்கு கொதித்தவுடன், மீனை போட்டு, மீன் வெந்ததும் சாப்பிட்டால், ம்ம்ம்மம்ம்மம்ம்ம்ம்ம, அவ்வளவு நன்றாக இருக்கும். அதை விட, மறுநாள் சாப்பிட்டால், அதை விட சூப்பராக இருக்கும்.

மதுரையில் எனக்குத் தெரிந்து ஆட்டுக்கறி, கோழிக்கறி அளவிற்கு மீன் சாபிடுவதில்லை.

அதே போல் தான், கருவாட்டுக் குழம்பும். அதுவும், என் அம்மா வைக்கும் கருவாட்டுக் குழம்பு ஒரு ஸ்பூன், ஒரு தட்டு நிறைய சாதத்திற்கு வரும். எண்ணை மிதக்க, பூண்டு, கருவாடு குழம்புடன் ஒட்டிக் கொண்டிருக்க, சாப்பிட்டால், அன்றைய நாள் முழுவதும் கை மணக்கும். நாங்கள் இருந்த வீட்டுக்கு அருகாமையில், பல கிறித்துவ வீடுகளில் கருவாடு விற்றார்கள். அவர்கள் வீட்டுக்குள் நுழையும் பொழுதே, கருவாட்டு வாசனை மூக்கைத் துளைக்கும். அதை, வெறும் எண்ணையில் வறுத்து ரசம் சாதத்துடன் சாப்பிட்டாலும் அவ்வளவு நன்றாக இருக்கும். உடம்பு சுகமில்லாமல் இருந்து, வாய்க்கு ருசியாக எதையாவது சாப்பிட வேண்டும் என்று நினைத்தால், சிறிய வறுத்த கருவாடை சாப்பிட்டாலே போதும். ருசி நாளங்கள் எல்லாம் ஆட ஆரம்பித்துவிடும். கருவாட்டுப் பிரியர்களுக்கு நான் சொல்வது புரியும். உடம்புக்கும் மிகவும் நல்லது என்று அடிக்கடி எங்கள் வீட்டில்நெய் மீன் கருவாட்டுக் குழம்பு பண்ணுவோம். இப்பொழுது அதை தூக்கிக் கொண்டு, விமான நிலையத்தில் இருக்கும் K9 நாய்களின் பிடியில் மாட்டாமல் வர வேண்டுமே என்ற பயத்திலும், என் மகனுக்கு அந்த 'தீவிர' வாசனை பிடிக்காததாலும், எடுத்து வருவதில்லை.