Tuesday, December 18, 2012

ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே - 4

ஐந்தாவது செமஸ்டர் ஒரு புதிய கட்டிடத்தில் Mech Engg வகுப்புகளுக்கு பக்கத்தில் போட்டுவிட்டனர். மாணவிகள் மிகவும் குறைவு அந்த வகுப்புகளில். மாணவர்களின் கொட்டம் தெரிந்த கதை தான்:( அதனால், வகுப்புகளுக்கு போய் வர கொஞ்சம் சிரமப்பட்டோம். வகுப்பில், பேராசிரியர் வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது, வெளியில் உட்கார்ந்து கொண்டு, ஏதாவது சொல்லி கமெண்ட் அடித்துக் கொண்டு சீனியர் மாணவர்கள் கொட்டம் தொடர்ந்து கொண்டிருந்தது. அவர்கள் வகுப்புகள் மட்டும் முன்னதாகவே முடிந்து விடும்! அவர்கள் சொல்வதை கேட்டு சிரித்து விட்டால் ஆள் அம்பேல். ஆனால், ரசிக்கிற மாதிரியான கூத்துக்கள் தான்! சார், கடைசி பெஞ்சில இருக்குறவங்க பாடத்தை கவனிக்கல, நோட்ஸ் எடுக்கல என்பதிலிருந்து....மதிய உணவு இடைவேளையில் வந்து பேசிக் கொண்டிருப்பது போன்ற கலாட்டாக்களும் நடந்தது.

புதிதாக சேர்ந்த ஆசிரியர்கள் சிவா மற்றும் ஸ்ரீதரன் அவர்களுடைய வகுப்புகள் ஓகே ஓகே. மூன்றாம் வருட வகுப்புகள் கணினியை சார்ந்து இருந்ததால் interesting ஆக இருந்தது. microprocessor லேபில் assembly language எழுதி பதில் பளிச்சென்று தெரியும் பொழுது நன்றாக இருந்தது. இவ்வளவு சின்ன processorஇல் இவ்வளவு விஷயமா என்று வியக்க வைத்தது. டெஸ்டில் ஒரே மாதிரி கேள்விகளை கேட்டார்கள். அதற்கும் பயந்து கொண்டு கைகள் சில்லிட கேள்வித்தாளை எடுத்து ஒரு பதட்டத்துடனே தேர்வுகள் எழுதியதெல்லாம்... அங்கு இரண்டு அட்டெண்டர்கள் இருந்தார்கள். பெயர் ஞாபகமில்லை. ஒருவர் நல்ல சிரித்த முகத்துடன் உதவிகள் செய்வார். இன்னொருவர் ஏனோ, எப்போதுமே 'உர்ர்'ரென்று இருப்பார். அவரிடம் எந்த உதவிகளும் எதிர்பார்க்க முடியாது.


ஆறாவது செமஸ்டரிலிருந்து என்று நினைக்கிறேன், வகுப்புகள் கணினியியல் துறை இருந்த MCA வகுப்புகள் நடக்கும் இடத்தில்  மாற, அங்கிருக்கும் ஆலமரமே போதி மரமானது பலருக்கும். MCA படிக்க கேரளா, ஆந்திராவிலிருந்து மாணவ, மாணவியர்கள் வந்திருந்தார்கள். சிலர் பார்ப்பதற்கு நன்றாகவே இருந்தனர் :) மம்மூட்டி, மோகன்லால் என்று அவர்களுக்கு பெயர் வைத்து நக்கல் பண்ணிக் கொண்டிருந்தோம். லேபில் கம்ப்யூட்டர்-க்காக அவர்களிடம் சின்ன,சின்ன செல்ல சண்டைகள் போட, அதனால் சிலர் நண்பர்கள் ஆக என்று - ம்ம்ம் அது ஒரு கனாக் காலம்!
2011 visit to college

அந்த வகுப்பும் ஆடிடோரியம் ஸ்டைலில் கட்டப்பட்டிருந்தது. பச்சை வண்ண போர்டும், கொஞ்சம் இருட்டிய அறையுமாய் இருந்தது. அருகில் MCA வகுப்புகளும், மாடியில் கம்ப்யூட்டர்/மைக்ரோ ப்ராசசர்/ துறை ஆசிரியர்களுக்கான அறையும் இருந்தது. மாடியிலிருந்து பார்த்தால் பச்சை  நிறமே, பச்சை  நிறமே... என்று வயல்வெளிகளும் தூரத்தில் ஊர்ந்து செல்லும் வாகனங்களும் என்று நல்ல view. துறைத்தலைவர் அய்யாதுரை நல்ல மனிதர். ஸ்கூட்டரில் கல்லூரிக்கு வருவார். அவருடைய வண்டியில் மாணவர்கள் காற்றை பிடுங்கி விட்டதாக கேள்வி. உண்மையா- தெரியாது?

அந்த வருடத்தில், துறை சார்பாக நடை பெற்ற symposium கோலாகலமாக நடைபெற்றது. அதற்காக மாணவ,மாணவிகள் ரங்கோலி மற்றும்  விழாவிற்கான பல வேலைகளையும் முடித்து விட்டு இரவு வீடு திரும்ப வெகு நேரம் ஆகி வீட்டில் நன்றாக வாங்கி கட்டிக் கொண்டேன்:( பல கல்லூரிகளில் இருந்தும் மாணவர்கள் கலந்து கொண்டு விவாதங்கள் நடந்தது. 'ஆ'வென்று வாயை  பிளந்து கொண்டு கேட்டோம். பல நக்கீரர்களும் கேள்விக்கணைகளை தொடுத்தார்கள்!

ஒரு மதிய நேரத்தில் அப்போது ரிலீஸ் ஆகியிருந்த 'இதயத்தை திருடாதே' படத்தை வகுப்பு முழுவதுமாக சேர்ந்து பார்த்து விட்டு வந்தோம். அதில் வந்த கதாநாயகியை என் வகுப்பில் படித்த மாணவர்கள் பலருக்கும் பிடித்திருந்தது. கதாநாயகன்- of course, அப்போதைய -இளம் நாயகன் - நாகர்ஜுனா தான் :) மூன்றாம் வருடம் கேரளா டூர் போனார்கள். போய் விட்டு வந்து பல கதைகள்!
லேப் வகுப்புகள் ஜாலியாக இருக்கும். உட்கார நாற்காலிகள் எல்லாம் இருக்காது. இரண்டு மணி நேரம் நின்று கொண்டே கால் கடுக்க சிவகுமார் சந்திரசேகர், அருணாகுமாரி, அனிதா, டெல்லா, சரவணன், நான் என்று.. சரவணன் மிகவும் சீரியஸாக டிஸ்கஸ் செய்து கொண்டு பொழுதுகள் போனதெல்லாம்.. ஒருமுறை லேபில் சரியாக சாப்பிடாததால் நான் மயக்கம் வந்து விழ ஒரு சின்ன களேபரம்!

வகுப்பு எடுத்த பேராசிரியர் ஒருவர் அட்டெண்டன்ஸ் குறைவாக இருந்தால் அவர் லேபில் அவ்வளவு மணி நேரங்களை அங்கு உட்கார்ந்து ஏதாவது செய்ய சொல்லி அட்டெண்டன்ஸ் போடுவார். அங்கு போனால், சீனியர், ஜூனியர் என்ற வித்தியாசம் இல்லாமல் பலரும் அட்டெண்டன்ஸ்க்காக 'தேமே' என்று உட்கார்ந்து பொழுது போக்கி விட்டு போவார்கள்! ஒருமுறை இவர் வகுப்பில் ஒரு கேள்வி கேட்டு பதிலை பலரும் அடுத்தவரிடம் கேட்டுக் கொண்டு வெறும் கால்குலேட்டரில் அந்த பதிலை அடித்து காண்பித்து விட்டு வெளியில் தப்பி வந்தது என்று...
இன்னொரு பேராசிரியர் ஒருவர் வகுப்பில் டெஸ்ட் கொடுக்கும் பொழுது அருகிலிருந்து யாரும் காப்பி அடிக்க முடியாவண்ணம் கேள்வித்தாள்களை கொடுப்பார்! இப்படி கில்லாடி பேராசிரியர்களும் இருந்தார்கள்.

நானும் துர்காவும் சேர்ந்து ஆவினில் ஒரு ப்ராஜெக்ட் செய்யப் போனோம். பழைய கம்ப்யூட்டர் ஒன்று-ஒவ்வொரு வரியாக கோபாலில் ப்ரோக்ராம் எழுதி என்று..

Linear Integrated Circuits, Boolean Algebra & Switching Theory, Algorithm Anlaysis & Design, Numerical Methods, Digital Integrated Circuits, Microprocessor என்று பிடித்த மற்றும் பிடிக்காத சில பாடங்களும், ஆசிரியர்களும் என்று மூன்றாம் வருடம் ஓடியே போய் விட்டது. வகுப்பில் என்னுடன் படித்தமாணவி ஆவணி அவிட்டத்தன்று அவள் வீட்டில் விருந்து வைத்து அவளுடைய வருங்கால கணவரை அறிமுகப்படுத்தினாள். அவளுடைய திருமணமும் அந்த வருடம் மிக விமரிசையாக நடந்தது. நிறைய MCA மாணவ, மாணவியர்களும், எங்களுடைய ஜுனியர்களும் என்று நண்பர்கள் பட்டாளம் விரிவடைந்ததும் இந்த காலத்தில் தான். எங்கள் சீனியர் மாணவர்கள் இருவர் தங்கள் ப்ராஜெக்ட் வேலைக்காக திருச்சி செல்லும் வழியில் காரில் செல்லும் பொழுது டிரைவர் தூங்கிய காரணத்தினால் விபத்து ஏற்பட்டு இறந்த செய்தி கேட்டு கதிகலங்கியதும் அந்த வருடம் தான்:(

நினைவலைகள் தொடரும்..

4 comments:

  1. இந்த மெக்கானிக்கல் பசங்களே இப்படித்தான்...தங்கமானவய்ங்க! # வெளம்பரம் :)

    ReplyDelete
  2. நம்பிட்டோம்ல! அது எப்படி மெக்கானிக்கல் பசங்க வகுப்புகள் மட்டும் பத்து நிமிடங்களுக்கு முன்னதாகவே முடிகிறது?

    ReplyDelete
  3. I usually don't spend much time in reading these
    kind of articles (due to work load etc.). But, I
    happened to read this one and I couldn't resist
    myself from responding.

    It is a great article written in a nice way.
    Hats off to you and keep writing ;-)

    -Eswaran (your classmate)

    ReplyDelete
  4. Thanks, Eswaran. I missed your name earlier but added now. Sorry about that.

    ReplyDelete

அமேசிங் பிரிட்டன் -6- ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ் பயணக்குறிப்புகள்

சொல்வனம் இதழ் 314ல் வெளிவந்துள்ள 'அமேசிங் பிரிட்டன்' பயணக்கட்டுரைத் தொடரின் நான்காவது பாகம்.  ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ் பயணக்குறிப்புகள்...