Thursday, February 28, 2013

மகாத்மா முதியோர் இல்லம்

இந்த முறை ஊருக்கு சென்றிருந்த பொழுது மகாத்மா முதியோர் இல்லம் சென்று வந்தோம். பரபரப்பான வில்லாபுரத்தில்,மீனாக்ஷிநகரில், சஞ்சீவி தெருவில் இந்த இல்லம் இருக்கிறது. நாங்கள் வருவதை முன் கூட்டியே சொல்லி அங்கு இருப்பவர்களுக்கு மதிய உணவு என்ன வேண்டும் என்று கேட்டு தக்காளி சாதம், ரவா கேசரி, பஜ்ஜி, தயிர் சாதம், குருமா மற்றும் தயிர் வெங்காயம் ரெடிமேட் சொல்லிவிட, அவர்களும் சரியான நேரத்திற்கு அனுப்பி விட்டார்கள்.
வெளியில் மகாத்மா முதியோர் இல்லம் என்று ஒரு போர்டு வைத்திருக்கிறார்கள். அது மாடியுடன் கூடிய வீடு. தரைத்தளம் மட்டும் இல்லத்திற்கு வாடகை விட்டிருக்கிறார்கள். உள்ளே நுழைந்தவுடன் ஒரு சின்ன வரவேற்பறை/அலுவலக அறை என்று ஒரு மேஜை, நாற்காலியுடன். இன்னொரு மூலையில் தொலைக்காட்சி பெட்டி ஒன்று வைத்திருந்தார்கள். உள்ளே கொஞ்சம் இருட்டாக இருந்தது. அதை அடுத்து ஒரு பெரிய ஹால், ஹால் முடியும் இடத்தில் சுவரை ஒட்டி நான்கு சிறிய அறைகள். ஹால் முழுவதும் சிறு இடைவெளி விட்டு இருபத்தி நான்கு கட்டில்கள் இருந்தது.அலுவலக அறையை தாண்டி இடப்பக்கம் திரும்பியவுடன் ஒரு பெரிய கிரைண்டர், பழைய பிரிட்ஜ், சில வேண்டாத, வேண்டிய சாமான்கள் என்று வரிசையாக. அதை தாண்டி உள்ளே போனால் ஒரு சமையல் அறை. ஒரு காஸ் சிலிண்டர், பெரிய பாத்திரங்கள், இத்யாதிகள். ஹால் நல்ல சூரிய வெளிச்சத்துடன் இருந்தது. அங்கு பொறுப்பிலிருக்கும் செக்ரட்டரி வெளியில் சென்றிருந்ததால் அவர் வரும் வரை, அங்கிருந்து இல்லத்தை கவனித்து வருபவருடன் பேசிக்கொண்டிருந்தோம். அவரும் எங்களுடன் பேசிக் கொண்டே மதிய உணவை சின்ன பாத்திரங்களில் மாற்றினார்.


நான் முதலில் அந்த இல்லம் யாரோ ஒருவருடைய சொந்த வீட்டில் இருக்கிறது என்று நினைத்திருந்தேன். பிறகு தான் தெரிந்தது, அவர்கள் வாடகை கொடுப்பது. மொத்தம் 24 முதியோர்கள் இருந்தார்கள். அவர்களில் பத்து பேர் வயதான ஆண்கள். மீதம் பெண்கள். அதில் இரு பெண்கள் மட்டும் மற்ற மொழி பேசுபவர்கள். அவர்களைத் தவிர அனைவருமே சௌராஷ்டிரா பேசுபவர்கள். ஒவ்வொருவரும் மாதம் ரூபாய் 2500 கொடுக்கிறார்கள். அங்கிருக்கும் சிறிய அறையில் தங்குபவர்களுக்கு மாதம் 3000 என்று சொன்னதாக ஞாபகம். இரண்டு அறைகளில் ஒரு வயதான பெண்மணியும், ஒரு வயதானவரும் இருந்தார்கள். நிறைய காத்தாடிகளும், விளக்குகளும் இருந்தது. ஆனால், கரண்ட் தான் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்தது. ஹாலின் ஒரு மூலையில் பாத்ரூம், டாய்லெட் இருந்தது.

நாங்கள் போன மதிய நேரம் பலரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். வயதான ஆண்கள் முகச் சவரம் செய்யாத முகங்களுடனும் ஒரு விட்டேத்தியான பார்வைகளுடனும்- பலரும் ஒல்லியாகவே இருந்தார்கள். பெண்களில் நடுத்தர வயது, கொஞ்சம் வயதானவர்கள், நன்கு வயதானவர்கள் என்று இருந்தார்கள். ஒரு சிலருக்கு முதுமையின் காரணமாக கண்பார்வை, காது கேளாமை குறைபாடு என்றிருந்ததை பார்க்க முடிந்தது. ஒரு சிலர் கூட்டமாக நாங்கள் வந்ததை பார்த்து, எழுந்து உட்கார்ந்து பேசினார்கள்.
அங்கிருந்த அநேகமானவர்கள் முகத்தில்/கண்களில் ஒரு வெறுமை இருந்தது. சிலர் சாந்த முகத்துடன், சிலர் சிரித்த முகத்துடன், சிலர் எரிச்சல் முகத்துடன்.. வயதான ஆண்கள், வாழ்க்கையில் பற்றே இல்லாமல் ஏதோ உயிருடன் இருக்கிறேன் என்பது போல் இருந்தார்கள். அவரவர் கட்டில்களுக்கடியில் அவர்களுக்கு வேண்டிய தின்பண்டங்கள், மருந்து மாத்திரைகள், துணிமணிகள் வைத்திருக்கிறார்கள். ஆளுக்கொரு ஓலை விசிறி வைத்திருக்கிறார்கள்.


இல்லத்தை கவனிப்பவருடன் பேசும் பொழுது அவர், சில பாட்டிகள் அநியாயத்திற்கு சண்டை போடுவார்கள். அதனால் தான் அவர்களை இங்கே கொண்டு வந்து விட்டிருக்கிறார்கள். இவர்களை எல்லாம் வீட்டில் வைத்து சமாளிக்க முடியாது. நானும் அடிக்கொருதரம் சத்தம் போட வேண்டியிருக்கிறது என்று சொல்லும் போது ஏனோ கொஞ்சம் நெருடலாக இருந்தது. சில பெண்கள் சமையலுக்கு உதவுவார்கள் என்று சொன்னார்.

சிலருடன் பேசும் பொழுது அவர்கள் கண்களில் சொல்ல முடியாத ஏக்கம்/துக்கம்/வருத்தம். சிலர் அமைதியாக இது தான் விதி என்று ஏற்றுக் கொண்டிருந்தார்கள். அந்த இடத்தை ஒருவர் சத்தமாக பேசிக்கொண்டு கலகலப்பாக்கி கொண்டிருந்தார்! ஒரு பாட்டி, தன் மகன் போன பிறகு மருமகள் வைத்துக் கொள்ள முடியாது என்று சொல்லி மருமகன் தன்னை அங்கு சேர்த்து விட்டதாகவும், அடிக்கடி பேத்திகளும், மருமகனும் வந்து பார்த்து விட்டு போவார்கள் என்று வருத்தத்துடன் சொன்னார். அவர் என் மாமியார் வழியில் தூரத்து சொந்தம் கூட. அவரை அங்கு பார்க்கும் பொழுது அதிர்ச்சியாக கூட இருந்தது! நிறைய பழைய விஷயங்களை பேசினார். என் கணவர், அவர் வீட்டு ஆட்களை பற்றி அக்கறையோடு கேட்டுக் கொண்டார். கணவனை இழந்த படித்த பெண்மணி ஒருவர் ஒரு அறையில் தங்கியிருந்தார். சிரித்த முகத்துடன் அன்பாக பேசினார். என் மகளிடம் அவள் படிப்பு பற்றிய விவரங்களை கேட்டுக் கொண்டிருந்தார். அவருடைய கணவருடன், மகளுடன் சேர்ந்து எடுத்திருந்த படங்களை காட்டினார். நல்ல வசதியாக வாழ்ந்திருக்கிறார்! இன்னொரு அறையில் நன்கு படித்த, ஜாதகம் பார்க்கிறவர் இருந்தார். இப்போது பார்க்கிறாரா என்று தெரியவில்லை. தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பார் போல.

இதற்குள் சாப்பிடும் நேரமாகி விட்டதால் அனைவருக்கும் வாழை இலை போட்டு பரிமாறினோம். நன்றாக விரும்பி  சாப்பிடுகிறார்கள். சாப்பிட்டு முடித்த இலைகளை எடுத்து விட்டு நாங்களும் அங்கு வேலை பார்ப்பவர்களுடன் சாப்பிட்டு முடித்தோம். அங்கிருப்பவர் டீ போட்டுத் தருகிறேன், இன்னும் கொஞ்ச நேரம் இவர்களுடன் பேசிக் கொண்டிருங்கள் என்று சொல்ல, நாங்கள் விட்ட இடத்திலிருந்து பேச ஆரம்பித்தோம். உடம்புக்கு ஏதாவது என்றால் என்ன செய்வீர்கள் என்று கேட்ட பொழுது, அவர்கள் குடும்பத்திற்கு சொல்லி விடுவோம். அவர்கள் வந்து அழைத்துப் போவார்கள் என்று சொன்னார்கள். நல்லது கெட்டதிற்கும் போய் வருகிறார்கள். சிலர் காலை சாப்பாடு முடித்த பிறகு வெளியில் காலாற நடக்க போவார்களாம். மதியம் சிறிது நேரம் சீரியல்கள் பார்க்கிறார்கள். மாலை வேளையில் அருகிலிருக்கும் கோவிலுக்கு சிலர் போகிறார்கள். அவர்களுக்கு பொழுது போவது தான் கொடுமையான விஷயமாக இருக்கும் என்று நினைக்கிறேன். விட்டத்தை வெறித்து பார்த்துக் கொண்டே இருந்தால் என்ன வாழ்க்கை!

நாங்கள் அங்கு இருக்கும் பொழுதே ஒரு சௌராஷ்டிரா மற்றும் தமிழ் பேசுபவர் வந்து அவர்கள் குழந்தைகள் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு உணவு கொண்டு வரலாமா என்று கேட்டு கொண்டிருந்தார்கள்.

அங்கு இருப்பவர்களுடன் என் அம்மா, பெரியம்மா, தம்பி, பெரியம்மா மகள், அத்தை, என் மகள், தம்பி மனைவி எல்லோரும் பேசிக்கொண்டிருந்தோம். இப்படியே பேசிக் கொண்டிருக்கும் பொழுது சுடச்சுட டீயும் வர குடித்து முடித்து விட்டு எல்லோருக்கும் செலவுக்கு சிறிது பணமும் கொடுத்து விட்டு வரும் பொழுது 'கொடிது கொடிது முதுமை கொடிது, அதை விட முதியோர் இல்லத்தில் இருக்கும் நிலைமை இன்னும் கொடிது' என்று தோன்றியது.

ஒவ்வொருவரும் பல சூழ்நிலைகளின் காரணமாக அங்கே வந்திருக்கலாம். சிலருக்கு அருகில் இருந்து பார்த்துக் கொள்ள ஆட்கள் இல்லாததால், சிலர் அவர்களுடைய காலத்தில் செய்த தவறுக்கு இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கலாம். கொடுமை என்னவென்றால், பலரின் குழந்தைகள் அந்த இல்லத்தின் அருகிலேயே இருந்து கொண்டு அம்மா/அப்பாவை இங்கு விட்டு வைத்திருப்பது தான். ஒருவேளை தன்னுடன் இருந்து கஷ்டப்படுவதை பார்க்க சகிக்காமல் தான் இங்கே கொண்டு வந்து விட்டுப் போனார்களோ என்னவோ!

இன்று நினைத்தாலும் அந்த கண்களில் இருந்த வெறுமை, முகத்தில் தெரிந்த ஏக்கம்/விரக்தி ...மனம் கனக்கிறது! மனிதம் மெதுவாக செத்துக் கொண்டிருக்கிறது.


மனிதன் மாறி விட்டான்....



Saturday, February 23, 2013

மல்லிகையே மல்லிகையே...

மதுரை மல்லி என்றாலே ஒரு மயக்கம் தான். அதன் மணமும், பூக்கள் கட்டிய நேர்த்தியும் மதுரையில் மட்டுமே பார்க்கலாம். அதுவும் திருமணம், சடங்கு, விசேஷங்கள் என்றால் கேட்கவே வேண்டாம். அடர்த்தியாக நெருக்கி கட்டி, நடுவில் மனோரஞ்சிதமும் வைத்து மணக்க மணக்க மணப்பெண் வளைய வரும் பொழுது அதன் மணமும் கூடவே வரும். மல்லியுடன் கனகாம்பரமும் கட்டி, பார்க்க கலர்புல்லாக இருக்கும். சில வேளைகளில், கொழுந்தும் சேர்த்துக் கட்டி நம் நாட்டு கொடி வண்ணத்துடன் பார்க்கவே அழகாக இருக்கும். பூ விற்பவர்களும் பூவை நோகாமல் எண்ணிக் கொடுப்பார்கள். விலையும் குதிரைக் கொம்பாகாத்தான் இருக்கும்.


இப்படியெல்லாம் பார்த்த மல்லிகையில் மெட்ராஸ் மல்லி ஒரு பெரிய ஏமாற்றமே! மெட்ராஸ் மல்லி வாசனையே இல்லாமல் பார்க்க வெள்ளை நிறத்துடன் மல்லி போலவே இருக்கும். கொஞ்சம் விலை குறைச்சலாக வேண்டுமென்றால் அதை வாங்குவார்கள். மதுரை தவிர மற்ற ஊர்களில் மல்லிகைப் பூவை நெருக்கமாக கட்டுவதில்லை. மதுரையில் இன்னும் சில இடங்களில் பூக்களை நூறு இருநூறு என்று எண்ணிக் கொடுக்கிறார்கள். பல இடங்களிலும் ஒரு முழம் இரண்டு முழம் என்று கொடுக்கிறார்கள். பூ விற்பவர்களும் நீட்டி முழக்கி வியாபாரம் செய்வதும் . அவர்கள் தலையில் சுமந்து வரும் அந்த பூக்கூடையின் மணமும்...ஆஹா!


மதுரையிலிருந்து கொடைக்கானல் செல்லும் வழியில் மல்லிகைப் பூந்தோட்டங்களை பலவும் பார்க்கலாம். ஒவ்வொரு செடியிலிருந்தும் எடுக்கப்படும் பூக்கள் தமிழ்நாட்டின் பல இடங்களுக்கும், ஏன், இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் செல்வதாக சொன்னார்கள். மதுரை விமான நிலையம் வந்த பிறகு விரைவில் பிற ஊர்களுக்கு அனுப்புவதும் வசதியாகி விட்டது.
வாசனை திரவியங்கள் செய்யவும் பயன்படுத்துகிறார்கள். முன்பு சென்ட்ரல் மார்க்கெட் என்று அம்மன் கோவில் பக்கம் அன்று கொய்த மலர்களை வியாபாரத்திற்கு எடுத்து வருவார்கள். மூட்டை மூட்டையாக மல்லிகைப் பூ மொட்டுக்களைப் பார்த்தாலே அவ்வளவு நன்றாக இருக்கும் சீசன் சமயங்களில் ஒவ்வொரு பூவும் பெரியதாக தொடுத்தால் திண்டி திண்டியாக, சூடினால் நல்ல மணத்துடன்..ம்ம்.


மல்லிகைப் பூவாய் மாறிவிட ஆசை..என்று சும்மாவா பாடினார்கள்?

மதுரை மல்லி மதுரை மல்லி தான்!

Friday, February 15, 2013

மாமதுரை போற்றுவோம்!

சமீபத்தில் மதுரை சென்றிருந்த பொழுது பழங்காநத்தம் பைபாஸ் நாற்புறச் சந்திப்பில் நான்கு யானைகளின் முகங்கள் நீண்ட தந்தங்களுடன் வைத்து ஏதோ வேலை நடந்து கொண்டிருந்தது. பரவாயில்லையே மதுரைக்கும் விடிவுகாலம் வந்து விட்டது என்று நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது தான் மாமதுரை போற்றுவோம் சார்பில் இப்படிஎல்லாம் நடக்கிறது என்று தெரிந்து கொண்டேன். அதே போல், மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகிலும், கோட்டை சுவர்களை சுற்றி வண்ண வண்ண விளக்குகள், ஓவியங்கள் என்று தடபுடலாக இருந்தது.

என் சிறுவயதில், திரு.MGR முதல்வராக இருந்த பொழுது உலகத் தமிழ் மாநாடு என்று ஒன்று நடந்தது. அப்போது தான் மதுரையின் முக்கியமான இடங்களான - விளக்குத்தூண், மாரியம்மன் தெப்பக்குளம், காந்தி மியூசியம், சித்திரை பொருட்காட்சி நடைபெறும் தமுக்கம் மைதானம், மீனாக்ஷி அம்மன் கோவில், திருமலை நாயக்கர் மஹால், பெரியார் பேருந்து நிலையம் என்று பல இடங்களிலும் பல வடிவங்களில் குழந்தைகளை கவரும் வண்ணம் வண்ண வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்து மக்களும் கூட்டம் கூட்டமாக போய் பார்த்து விட்டு வந்தார்கள். சிலர் தினமும் ஒரு இடம் போய் பார்த்து விட்டு வர, நாங்களும் ஒரு காரை வாடகைக்கு எடுத்து குடும்ப சகிதமாக போய் பார்த்து விட்டு வந்தோம். திருவிழா, சினிமா, கல்யாணம் காட்சி என்றிருந்த மதுரை மக்களுக்கு இது ஒரு வித்தியாசமான அனுபவம் தான்.

உலகத் தமிழ் மாநாடு அன்று உண்மையில் என்ன நடந்தது என்று நினைவில்லை. ஆனால் அன்று நடந்த ஊர்வலம் மட்டும் நன்கு நினைவில் இருக்கிறது. தெற்குமாசி வீதியில் உறவினர் ஒருவர் வீட்டின் வாசலில் இருந்து வரிசையாக வரும் வண்டிகளில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நாட்டுப்புற நடனங்கள், பரத நாட்டியம், சிலம்பு, கத்திச்சண்டை, பல்வேறு வாத்தியங்களுடன் பல குழுக்கள், ஒவ்வொரு வண்டிக்கும் முன்னால் நடனமாடியபடியே பள்ளி/கல்லூரி மாணவர்கள், திருவிழாக்கள், தலைவர்கள் வேடமிட்டவர்கள் என்று கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சாரை சாரையாக வண்டிகள் வந்து கொண்டே இருக்க, குழந்தைகளும் பெரியவர்களும் கண்டுகளிக்கும் வண்ணம் அந்த நிகழ்ச்சி இருந்தது. அந்த ஊர்வலத்தைக் காண அப்படி ஒரு கூட்டம். பின்னே, முதல்வரும் கையசைத்துக் கொண்டே அந்த ஊர்வலத்தில் வந்தாரல்லவா?


இந்த மாமதுரை போற்றுவோம் நிகழ்ச்சியும் அப்படி இருந்திருக்குமோ?

Wednesday, February 13, 2013

சென்னை- திருவண்ணாமலை - 3


கோவிலிலிருந்து வெளியே வந்தவுடன் மாடுகளுக்கு கொடுக்க என்று வாழை இலையில் சுற்றி விற்றுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் நச்சரிப்பைத் தாங்காமலும், என் மகளுக்கு இருந்த ஆர்வத்தாலும் ஒன்றை வாங்கி கொடுக்க நினைக்கும் பொழுதே மாடு வந்து பிடுங்காத குறையாக வாங்கித் தின்றது!

கோவில் இருக்கும் சாலையிலேயே பல ஆஷ்ரமங்கள் இருக்கிறது. முதலில் சேஷாத்ரி சுவாமிகள் மடம் , ஸ்ரீரமணர் மடம் அப்படியே கிரிவலம் போனால் யோகி ராம்சுரத்குமார், நித்யானந்தா  என்று வரிசையாக பல மடங்களை காண முடிகிறது. குழந்தைகளுடன் மேலை நாட்டினர் பலரும் இந்த ஆஷ்ரமங்களுக்கு வந்திருந்ததைப் பார்க்க மிக ஆச்சரியமாக இருந்தது.பிறகு ரமணாஷ்ரமம் போனோம். வெளியில் இருந்த பரபரப்பு, கரச்சல் எதுவும் இல்லாமல் பெரிய மரங்கள், அமைதியான தியான பீடம் என்று அந்த இடமே ஏதோ மந்திரத்திற்கு கட்டுப்பட்ட மாதிரி இருந்தது. நடக்கிற மனிதர்கள், நாய்கள் தவிர கண்களை மூடி உட்கார்ந்து மணிக்கணக்கில் தியானம் செய்கிறவர்கள் நிறைய, அதுவும் மேலைநாட்டினர! அவர்கள் தேடி வந்தது அவர்களுக்கு கிடைத்திருக்கிறது! இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகிறோம் நாம்! சிறிது நேரம் நாங்களும் அமர்ந்து தியானம் செய்தோம். அங்கும் அய்யப்ப, செவ்வாடை பக்தர்கள் கூட்டம். பதறியடித்து ஓடிக் கொண்டிருந்தார்கள்!! ஒரு ஹாலில் ஸ்ரீரமணரின் புகைப்படங்கள் பெரிய பெரிய சைசுகளில். அவருடைய திருஉருவச்சிலையை மலர்களால் அலங்கரித்து நடுவில் வைத்திருந்தார்கள். பல அறைகளிலும் ரமணரின் சிறுவயது கருப்பு வெள்ளை புகைப்படங்கள், பலவிதமான அரிய பழைய திருவண்ணாமலை புகைப்படங்கள். ஒரு அறையில் அவர் பயன்படுத்திய பொருட்கள் கண்காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தது. அந்த இடமே மௌன ராகம் பாடிக் கொண்டிருந்தது. ஸ்ரீரமணர் பற்றி பல புத்தகங்களிலும் தொகுப்புகளிலும் படித்திருந்தாலும் அந்த மடத்தில் இருந்த புகைப்படங்கள், தியான மண்டபம், மடத்தின் சுற்றுப்புறச்சூழல், தியானம் செய்யும் பொழுது இருக்கும் அந்த சாந்தமான முகங்கள் - ஒரு நல்ல அனுபவம்.

இருட்டுவதற்கு முன் கிரிவலம் போக தீர்மானித்தோம். பௌர்ணமியன்று கூட்டம் கூட்டமாக மக்கள் போவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். காரில் உட்கார்ந்து கொண்டே வழியில் வரும் ஒவ்வொரு கோவில்களையும் பார்த்துக் கொண்டே வந்தோம். அப்போதும் ஒரு சிலர் நடந்து கிரிவலம் போய்க் கொண்டிருந்தார்கள்! மலையும் கூடவே வருவது போல் ஒரு பிரமை. அதை சுற்றித் தானே போய்க் கொண்டிருந்தோம்!பரபரப்பான சாலைகள், ஒழுங்குப்படுத்த போலீஸ் என்று இவர்களை கடந்து போனால், கிரிவலம் போகிறவர்களுக்காக நடை வசதி செய்திருக்கிறார்கள். வழியெங்கும் சின்ன சின்ன கோவில்கள். பல இடங்களில் நன்கு வெளிச்சமாக லைட் வசதிகள் இருந்தன. சில இடங்களில் மிகவும் இருட்டாக இருந்தது. சாலையோர பழக்கடைகளும், இளநீர், சர்பத் கடைகளும், ஆட்டோ, ரிக்க்ஷா, டாக்ஸி வண்டிகளும், இட்லி கடைகளும் வஞ்சனை இல்லாமல் இருந்தது. மலையின் பின்புறம் அமைதியாக இருந்தது. முடியும் இடத்தில் அதே பரபரப்பு! நடந்து போனால் நன்றாக இருந்திருக்கலாம். ஆனால் நேரமில்லை. ஒரு வழியாக மீண்டும் கோவில் வாசலுக்கு வந்து சேர்ந்தோம். சிறிது நேரம் அங்கு நிறுத்தப்பட்டிருந்த தேர்களை பார்த்து விட்டு, ஹோட்டலுக்கு திரும்பினோம்.
அந்த நாள் போனதே தெரியவில்லை. jet lag- இல் இருந்ததால் விரைவிலேயே தூங்கியும் போனோம். அருமையான ஹோட்டல். நல்ல வசதியுடன் இருந்தது. அதிகாலையிலேயே எழுந்திருந்து மலையைப் பார்த்தால் மேக மூட்டமாக இருந்தது. சிலர் மலை ஏறுவார்கள் போலிருக்கிறது. சிறிது நேரம் மலையையும் அந்த அமைதியான சூழலையும் ரசித்துக் கொண்டிருந்தோம். காலை நேரத்தில் எங்கோ 'ஓம் நமோ பகவதே ருத்ராய' என்று ருத்ரம் ஒலித்துக்  கொண்டிருந்ததை கேட்க ஆனந்தமாக இருந்தது. மெதுவாக சூரியன் வர, மேகம் விலக, மலையும் தெரிய, கோபுர தரிசனம், கோடி தரிசனம் என்று கோபுரத்தை பார்த்து கும்பிட்டு விட்டு காலை சாப்பாடு சாப்பிட கிளம்பினோம். மொறு  மொறு வடை, சுடச்சுட பூரி, இட்லி, முறுகல் தோசை, நெய் வழியும் வெண்பொங்கல், cereals , பழச்சாறுகள், காபி, டீ என்று அனைத்தும் மிகச் சுவையுடன்! வயிறும் மனமும் நிறைய அண்ணாமலையாரை தரிசித்த பரவசத்துடன் ஊர் பார்த்து கிளம்பினோம். கோவிலின் பிரமாண்டம் இன்னும் மனதில்!


தத்-ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் ...என்று லிங்காஷ்டகத்தை மனதில் பாடிக் கொண்டே திருவண்ணாமலையை விட்டு புறப்பட்டோம்.

Saturday, February 9, 2013

சென்னை- திருவண்ணாமலை - 2

ரோடுகளின் இருபுறமும் பெரிய பெரிய புளிய மரங்கள். எதிர்த்தாற் போல் பெரிய மலை. அது தான் திருவண்ணாமலை போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டே ஒரு காபி கடையை தேடி போனோம். முன்பெல்லாம் தடுக்கி விழுந்தால் ரோட்டோரங்களில் காபி கடைகள் இருக்கும். இங்கு தேடினோம் தேடினோம் ஒரு கடையும் இல்லை. காபி கடை மாதிரி இருக்கும்,கேட்டால் குளிர் பானங்கள் மட்டுமே கிடைக்கும்!என்ன ஆயிற்று மக்களுக்கு! ஏன் இப்படி விளம்பரங்களை பார்த்து நம் நாட்டு காபி/டீயை மறக்கிறார்கள் என்று வருத்தப்பட வைத்தது. எப்படியோ ஒரு கடையில் போனால் போகிறதென்று காபி கிடைத்தது:(

ஊருக்குள் நுழையும் பொழுதே தெருக்கள் குறுகி, குரங்குகள் வீட்டிற்கு வீடு போவதை பார்த்துக் கொண்டே, கூட்டத்தின் நடுவே மெயின் ரோட்டிற்கு வந்தால் மலையின் பின்னணியில் வெள்ளை கோபுரங்கள்! சாலைகள் முழுவதும் அய்யப்ப பக்தர்கள், செவ்வாடை பக்தர்கள், வேட்டி,சட்டை அணிந்து கூட்டத்தோடு கூட்டமாக மேலை நாட்டு மக்கள், என்னைப் போல் கோவிலுக்கு வந்தவர்கள் என்று ஒரே கூட்டம். கசமுசா என்று பலவித ஒலிகள் எழுப்பிய படி வாகனங்கள், கடைகளில், உணவகங்களில் கூட்டங்கள், பொறுமையில்லாத மனிதர்கள், எச்சில் துப்பியபடி, குப்பையை தூக்கி போட்டபடி போகிறவர்கள் என்று எல்லா பக்கங்களிலும் பார்க்க வேதனையாக இருந்தது.மார்கழி மாதம் கோவில்களுக்குப் போவது சிரமம் என்று உணர்ந்தேன். அன்று Dr.அப்துல்கலாம் ஒரு மாநாட்டிற்காக வந்திருந்ததால் வழியெங்கிலும் போலீஸ் பட்டாளம் வேறு. நாங்கள் முன் பதிவு செய்த ஹோட்டல் வழி கேட்டு செக்-இன் செய்த பிறகு அங்கே இருந்த உணவகத்தில் சாப்பிடப் போனோம். வெளியில் நடக்கும் களேபரம் எதுவுமில்லாமல் அழகான சூழலில் ஒருவர் சிதார் வாசித்துக் கொண்டே இருக்க, அருமையான செட்டி நாட்டு சமையல் சாப்பாடும் அங்கேயே சாப்பிட்டு முடித்தோம். சிறிது நேரம் இளைப்பாறி விட்டு, மாலை கோவில் திறக்கும் சிறிது நேரம் முன்பு கோவிலுக்குச் சென்றோம்.

கோவில் அருகே வண்டியை நிறுத்த அதிக பணம் கேட்கிறார்கள். இவ்வளவு பெரிய கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வாகனங்களை  நிறுத்தும் வசதி இல்லை. ஆட்டோ, டாக்ஸி என்று அவர்கள் வேறு நிறுத்தி வைத்திருக்கிறார்கள்.முறையான தகவல்கள் தரும் போர்டுகளும்/ வழிகாட்டிகளும் இல்லை. அதனால் பல சிரமங்கள். ஒருவர் கக்கத்தில் ஒரு பையை வைத்துக் கொண்டு பார்க்கிங் செய்ய இவ்வளவு பணம் என்று வசூலிப்பதிலேயே இருந்தார். அங்கு இடமே இல்லை. எங்கு நிறுத்துவது என்று கேட்டால், முதலில் பணம் கட்டுங்கள் , இப்படியே உள்ளே போனால் எங்காவது நிறுத்தலாம் என்று இல்லாத இடத்திற்கு வசூல் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். வண்டியை நிறுத்த இடம் இல்லாத நிலையிலும் காசு கொடுத்து விட்டுத் தான் உள்ளே போக வேண்டும் என்றவருடன் என் தம்பி வாக்குவாதம் செய்ய அங்கு இருந்தவர்கள் படம் பார்ப்பது போல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அங்கிருந்த ஆட்டோக்காரர் நீங்க பாட்டுக்கு போயிட்டே இருங்க தம்பி என்று சொல்ல, எங்களை கோவில் முன் நிறுத்தி எங்கேயோ போய் வண்டியை நிறுத்தி விட்டு வந்த பிறகு 'சிவ'சிவ' என்று சொல்லிக் கொண்டே கூட்டத்தில் ஐக்கியமானோம்.

கோவில் கோபுரம் விபூதி கலரில், சித்திரங்கள் நிறைய இல்லாமல் பார்க்க வித்தியாசமாக இருந்தது. எல்லா கோவில்வாசல்கள் போலவே, பூக்கடைகளும், கோலம் போட டிசைன்கள் விற்பவர்களும், கையேந்தி மக்களும், தேங்காய் பழம் விற்பவர்களும், மாடுகளும், கன்றுகளும், நாய்களும் என்று கோவிலின் முன் ஒரு பெரிய கூட்டமே வளைய வந்து கொண்டிருந்தது. காலணிகள் பாதுகாக்கும் இடம் இலவசம் என்று இருந்தது. ஆனால், சில இடங்களில் காசு கேட்கிறார்கள்:(

ஒரு வழியாக கோவிலுக்குள் காலடி எடுத்து வைத்தோம். உள்ளே நுழைந்ததும் பெரிய பிரகாரம். கோவிலின் சிறப்பே பிரமாண்டமான பிரகாரங்கள், பெரிய பெரிய மண்டபங்கள், நேர்த்தியான கலை சிற்பங்கள், விபூதி வாசம், வானுயர்ந்த கோபுரங்கள், மலையின் தோற்றம், இன்னும் மொசைக் போடப்படாத தரைகள்...கருப்பு வேட்டியணிந்த அய்யப்ப பக்தர்களும், செவ்வாடை பக்தர்களும் ஓடிக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு பிரகாரங்களை கடந்து சிவனை தரிசிக்க பாம்பு வால் போல் நீண்டிருந்த வரிசையில் நாங்களும் சேர்ந்து கொண்டோம். அதுவும் ஸ்பெஷல் தரிசன வரிசை. கூட்டம் 'கசகச' வென்றிருந்தது. அக்னி ஸ்தலம் வேறு. வேர்த்துக் கொட்டியது. இப்போதே இவ்வளவு கூட்டமாக இருக்கிறதே எப்படி தான் மஹாசிவராத்திரி, ஆருத்ரா தரிசனம், பௌர்ணமி, கார்த்திகை தீபம் அன்று இருக்குமோ என்று நினைக்கவே மலைப்பாக இருந்தது! ஒரு வழியாக குறுகிய படிகளின் வழியாக மேலேறிப் போனால் அழகிய அண்ணாமலையார் தரிசனம். ஆஹா, அற்புதமாக திவ்யமாக காட்சி தந்து கொண்டிருந்தார். மனதில் நன்கு பதிந்த அந்த சிவலிங்கம் விபூதி மற்றும் மலர்களால் அலங்கரித்து பார்க்கவே பரவசமாக! ஹர ஹர மஹா தேவா சிவ சம்போ, ஒம் நமச்சிவாயா  என்று பக்தர்கள் முழங்க, கொடுத்த பணத்திற்கு ஏற்ப விபூதியோ, விபூதி பொட்டலமோ கிடைக்கிறது:( அப்படியே வேர்த்து விறுவிறுக்க வெளியில் வந்தால், சுவாமியும், அம்மனும் சேர்ந்து அமர்ந்திருக்க அங்கு தான் அர்ச்சனை, ஆராதனை எல்லாம் நடக்கிறது. இதுவும் ஒரு நல்ல ஏற்பாடு தான். இந்த முறையில் கூட்டத்தை கொஞ்சம் கட்டுப்படுத்தலாம்.

அந்த பழைய கோவிலை சுற்றி வந்தால், உண்ணாமுலை அம்மன் பிரகாரம். குட்டி அம்மன் அழகாக அலங்கரிக்கப் பட்டு! அங்கும் நன்கு கண்குளிர பார்த்து விட்டு வெளியே வந்தோம். தெப்பக்குளம் நிறைய தண்ணீர். சிறிது நேரம் மலை சூழ்ந்த அந்த கோவிலை மனமார தரிசித்துக் கொண்டிருந்தோம். ஏதோ ஒரு ஈர்ப்பு சக்தி இருக்கிறது! பல்லாயிரக்கணக்கான மக்கள் எதையோ தேடி வந்து கொண்டிருக்கிறார்கள். கோவிலில் பாதாள லிங்கம் என்று ஸ்ரீரமணர் தியானம் செய்த இடம் என்று சிறிது கீழே சென்று பார்க்க அங்கே ரமணரை பற்றியும், அந்த இடத்தை பற்றியும் விரிவாக எழுதி வைத்திருக்கிறார்கள். சிலர் அங்கு உட்கார்ந்து தியானமும் செய்து கொண்டிருந்தார்கள். இதைத் தவிர, பைரவர், முருகன், விநாயகர், சண்டிகேஸ்வரர், துர்க்கை, பெருமாள், நந்தி என்று சிறு சிறு மூலஸ்தானங்கள் இருந்தது. ஆங்காங்கே நாய்களும் கவலை இல்லாமல் தூங்கி கொண்டிருந்தது! ஒரு பிரகாரத்தில் தலையில் 'விக்' இல்லாமல் தன் ட்ரேட்மார்க் 'புன்னகையுடன்' பவர்ஸ்டார் அவர் மனைவியுடன் உட்கார்ந்து கொண்டிருந்தார். ஜனங்களும் அவரை கண்டு கொண்ட மாதிரி தெரியவில்லை.

நன்கு கோவிலை சுற்றி விட்டு மீண்டும் கோபுரங்களை பார்த்து ஒரு கும்பிடு போட்டு விட்டு வெளியே வந்தோம். மதுரை கோபுரங்களை பார்த்து பழகிய கண்களுக்கு இந்த கோவில் கோபுரங்கள் முற்றிலும் வித்தியாசமாக தெரிந்தது. வண்ண வண்ண சிலைகள் இல்லை, ஆனாலும் ஒரு அமைதியான அழகு குடி கொண்டிருக்கிறது! மறக்காமல் கோவில் பிரசாதம் வாங்கி ருசித்து விட்டு வந்தோம். கைகழுவ நிறைய குழாய்களைப் போட்டிருக்கிறார்கள். கோவிலும் சுத்தமாக இருந்தது. பல வருடங்களாக பார்க்க நினைத்த பெருங்கோவிலைப் பார்த்த திருப்தியுடன் உண்டியலில் காணிக்கையையும் செலுத்தி விட்டு வெளியில் வந்தோம்.



கிரிவலம் தொடரும்...

Sunday, February 3, 2013

சென்னை- திருவண்ணாமலை - 1


 இந்த முறை ஊருக்கு போகும் பொழுது எப்படியாவது திருவண்ணாமலை போய் தீருவது என்று தீர்மானித்து என் தம்பியிடமும் சொல்லி அவனும் அதற்கேற்றார்போல் டூர் பிளான் போட, ஆரம்பித்தது எங்கள் பயணம் சென்னையிலிருந்து. வந்து இறங்கியதிலிருந்து மழை- 'கொட்டோ கொட்'டென்று கொட்டிக் கொண்டிருந்தது. தி நகரில் பெருமாளை வணங்கி, சரவணபவனில் காலை உணவை முடித்து விட்டு விழுப்புரம் போகும் பாதையில் பயணமானோம். அதிகாலை, அதுவும் மழை வேறு, அவ்வளவாக கூட்டம் இல்லை. வழியெங்கிலும் செவ்வாடை அணிந்த பக்தர்கள் கூட்டம், ஆதிபராசக்தி அம்மன் கோவிலுக்கு போக பஸ்சுக்காக காத்திருந்தார்கள்.

வழிநெடுக  பெரிய பெரிய கல்லூரி வளாகங்கள்!,  IT நிறுவனங்கள். ஊரை தாண்டியதும் விளை நிலங்கள் குறைந்து பல நிறங்களில் கற்களுக்கு வண்ணம் அடித்து நிலங்களை துண்டு போட்டு வியாபாரம் செய்யும் விளம்பரங்கள். செங்கல்பட்டு ஏரி வறண்டு கிடக்கிறது :( நடுநடுவே சம்பந்தமில்லாமல் பெரிய பெரிய வீடுகள்! கல்லூரிக்கு சென்று கொண்டிருக்கும் மாணவர்கள். ஹைவேஸ் என்றாலும் கவலைப்படாமல் சைக்கிளில் செல்பவர்கள். 'தீடீர்' என்று எதிர்த்தாற்போல் வரும் விரைவு வாகனங்கள் என்று எதிர்பாராமல் நடக்கும் பல விஷயங்களையும் லாவகமாக கையாளுகிறார்கள் நம் மக்கள்!!! பார்க்கிற எனக்குத் தான் 'பக்பக்' என்றிருந்தது :(


மேல்மருவத்தூர் அருகில் நூற்றுகணக்கான பஸ்கள். அதிலிருந்து பக்தர்கள் கூட்டம் என்று பல மைல்கள் நீளத்திற்கு! ஹைவேஸ் நிறுத்தங்களில் கும்பகோணம் டிகிரி காபி என்ற பெயரில் காபி கடைகள். சுக்கு மல்லி காபியும் கிடைக்கிறது. உணவகங்கள் பெயர்கள் எல்லாம் படு ஷோக்காக இருக்கிறது. சுவை எப்படியோ? இப்படியே திண்டிவனம் வந்து சேர்ந்தோம். அங்கிருந்து செஞ்சி வழியாக போகும் பாதை முழுவதும் படு மோசமாக இருந்தது. சாலைகள் போடுவதற்காக மரங்களை வெட்டி போட்டிருந்தார்கள்.

குழிகள் வெட்டி மணல் மேடுகள் என்று ஒரு வரையறை இல்லாமல் இருந்தது. ரோடுகள் எல்லாம் குண்டும் குழியுமாக பயணம் செய்யவே கஷ்டமாக இருந்தது. ரோட்டோரங்களில் பொங்கலை முன்னிட்டு கலர் பொடிகளை குவித்து வைத்து விற்றுக் கொண்டிருந்தார்கள். காலை நேரமாதலால் கூட்டம் பிதுங்கிக் கொண்டு போகும் பஸ்கள், சைக்கிள்களில் சாமான்களை வைத்துக் கொண்டு வியாபாரத்திற்கு செல்பவர்கள், மாடுகளை ஒட்டிக் கொண்டு விளைச்சலுக்கு போகிறவர்கள், இளநீர் விற்பவர்கள், பால் கொண்டு செல்பவர்கள் என்று பலரும் போவதை பார்க்க முடிந்தது.  எங்கு பார்த்தாலும் கருவேல மரங்களும் கூடவே பயணிப்பது போல் இருந்தது:( ஒரு லாரிகளில் கொத்தாக எருமைகள் என்று பல காலை நிகழ்வுகளை காண முடிந்தது. காலைக் காற்றுடன் மலை மேகங்களும் என்று சில்லென்ற காலை நேரப் பயணம் அருமையாக இருந்தது!

இந்த குண்டு,குழி சாலைகளில் பலவிதமான கார்கள் சீறிக் கொண்டு சென்றன. நிறைய BMW , Toyota கார்கள் அதிமுக, திமுக,பாமக என்று பல கட்சி கொடியுடன்,கருப்பு கண்ணாடிகளுடன் வளைய வருவதை பார்க்க முடிந்தது! செஞ்சி அருகே வரும் பொழுதே வித்தியாசமான மலைகளை பார்க்க நேர்ந்தது. சிறு சிறு பாறைகள் கூட்டம், மலைகளாக பார்க்க வித்தியாசமாக,அழகாக இருந்தது. ஊருக்குள் வரும் பொழுது இருபுறமும் உயர்ந்த மலைகளில் கோட்டைகளும் அங்கு போகும் பாதைகளும் பார்க்கவே ரம்மியமாக இருந்தது. இப்படி இருக்கும் என்று முன்பே தெரிந்திருந்தால் ஒரு நாள் அங்கு தங்கி பார்த்து போயிருக்கலாமோ என்று நினைத்து சிறிது நேரம் மட்டும் செலவழித்து விட்டு வந்தோம். செஞ்சியை தாண்டியவுடன் திருவண்ணாமலையின் தோற்றம் அன்புடன் வரவேற்கிறது. நடுநடுவில் வாழைத்தோப்புகளும், வயல்பரப்புகளும், தென்னந்தோப்புகளும் என்று பச்சைப் பசேல் என கண்ணுக்கு குளிர்ச்சியாகவும் இருந்தது :) டெம்போ வண்டியில் காலை வெளியில்  தொங்கப் போட்டுக் கொண்டு போவோர்களும், காலைக்கடன்களை கழிக்க சாலையின் ஒதுக்குபுறமாக ஒதுங்குபவர்களும், ஆடு, மாடுகளும் என்று பலவிதமான காட்சிகளுடன் சாலைகள் பரப்பரப்பாக இருந்தது.


செஞ்சியை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டே பயணத்தை தொடர்ந்தோம்..

அமேசிங் பிரிட்டன் -5- இன்வெர்னஸ் & ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ் பயணக்குறிப்புகள்

சொல்வனம் இதழ் 313ல் வெளிவந்துள்ள 'அமேசிங் பிரிட்டன்' பயணக்கட்டுரைத் தொடரின் ஐந்தாவது பாகம்.   இன்வெர்னஸ் & ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ்...