Saturday, February 9, 2013

சென்னை- திருவண்ணாமலை - 2

ரோடுகளின் இருபுறமும் பெரிய பெரிய புளிய மரங்கள். எதிர்த்தாற் போல் பெரிய மலை. அது தான் திருவண்ணாமலை போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டே ஒரு காபி கடையை தேடி போனோம். முன்பெல்லாம் தடுக்கி விழுந்தால் ரோட்டோரங்களில் காபி கடைகள் இருக்கும். இங்கு தேடினோம் தேடினோம் ஒரு கடையும் இல்லை. காபி கடை மாதிரி இருக்கும்,கேட்டால் குளிர் பானங்கள் மட்டுமே கிடைக்கும்!என்ன ஆயிற்று மக்களுக்கு! ஏன் இப்படி விளம்பரங்களை பார்த்து நம் நாட்டு காபி/டீயை மறக்கிறார்கள் என்று வருத்தப்பட வைத்தது. எப்படியோ ஒரு கடையில் போனால் போகிறதென்று காபி கிடைத்தது:(

ஊருக்குள் நுழையும் பொழுதே தெருக்கள் குறுகி, குரங்குகள் வீட்டிற்கு வீடு போவதை பார்த்துக் கொண்டே, கூட்டத்தின் நடுவே மெயின் ரோட்டிற்கு வந்தால் மலையின் பின்னணியில் வெள்ளை கோபுரங்கள்! சாலைகள் முழுவதும் அய்யப்ப பக்தர்கள், செவ்வாடை பக்தர்கள், வேட்டி,சட்டை அணிந்து கூட்டத்தோடு கூட்டமாக மேலை நாட்டு மக்கள், என்னைப் போல் கோவிலுக்கு வந்தவர்கள் என்று ஒரே கூட்டம். கசமுசா என்று பலவித ஒலிகள் எழுப்பிய படி வாகனங்கள், கடைகளில், உணவகங்களில் கூட்டங்கள், பொறுமையில்லாத மனிதர்கள், எச்சில் துப்பியபடி, குப்பையை தூக்கி போட்டபடி போகிறவர்கள் என்று எல்லா பக்கங்களிலும் பார்க்க வேதனையாக இருந்தது.மார்கழி மாதம் கோவில்களுக்குப் போவது சிரமம் என்று உணர்ந்தேன். அன்று Dr.அப்துல்கலாம் ஒரு மாநாட்டிற்காக வந்திருந்ததால் வழியெங்கிலும் போலீஸ் பட்டாளம் வேறு. நாங்கள் முன் பதிவு செய்த ஹோட்டல் வழி கேட்டு செக்-இன் செய்த பிறகு அங்கே இருந்த உணவகத்தில் சாப்பிடப் போனோம். வெளியில் நடக்கும் களேபரம் எதுவுமில்லாமல் அழகான சூழலில் ஒருவர் சிதார் வாசித்துக் கொண்டே இருக்க, அருமையான செட்டி நாட்டு சமையல் சாப்பாடும் அங்கேயே சாப்பிட்டு முடித்தோம். சிறிது நேரம் இளைப்பாறி விட்டு, மாலை கோவில் திறக்கும் சிறிது நேரம் முன்பு கோவிலுக்குச் சென்றோம்.

கோவில் அருகே வண்டியை நிறுத்த அதிக பணம் கேட்கிறார்கள். இவ்வளவு பெரிய கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வாகனங்களை  நிறுத்தும் வசதி இல்லை. ஆட்டோ, டாக்ஸி என்று அவர்கள் வேறு நிறுத்தி வைத்திருக்கிறார்கள்.முறையான தகவல்கள் தரும் போர்டுகளும்/ வழிகாட்டிகளும் இல்லை. அதனால் பல சிரமங்கள். ஒருவர் கக்கத்தில் ஒரு பையை வைத்துக் கொண்டு பார்க்கிங் செய்ய இவ்வளவு பணம் என்று வசூலிப்பதிலேயே இருந்தார். அங்கு இடமே இல்லை. எங்கு நிறுத்துவது என்று கேட்டால், முதலில் பணம் கட்டுங்கள் , இப்படியே உள்ளே போனால் எங்காவது நிறுத்தலாம் என்று இல்லாத இடத்திற்கு வசூல் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். வண்டியை நிறுத்த இடம் இல்லாத நிலையிலும் காசு கொடுத்து விட்டுத் தான் உள்ளே போக வேண்டும் என்றவருடன் என் தம்பி வாக்குவாதம் செய்ய அங்கு இருந்தவர்கள் படம் பார்ப்பது போல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அங்கிருந்த ஆட்டோக்காரர் நீங்க பாட்டுக்கு போயிட்டே இருங்க தம்பி என்று சொல்ல, எங்களை கோவில் முன் நிறுத்தி எங்கேயோ போய் வண்டியை நிறுத்தி விட்டு வந்த பிறகு 'சிவ'சிவ' என்று சொல்லிக் கொண்டே கூட்டத்தில் ஐக்கியமானோம்.

கோவில் கோபுரம் விபூதி கலரில், சித்திரங்கள் நிறைய இல்லாமல் பார்க்க வித்தியாசமாக இருந்தது. எல்லா கோவில்வாசல்கள் போலவே, பூக்கடைகளும், கோலம் போட டிசைன்கள் விற்பவர்களும், கையேந்தி மக்களும், தேங்காய் பழம் விற்பவர்களும், மாடுகளும், கன்றுகளும், நாய்களும் என்று கோவிலின் முன் ஒரு பெரிய கூட்டமே வளைய வந்து கொண்டிருந்தது. காலணிகள் பாதுகாக்கும் இடம் இலவசம் என்று இருந்தது. ஆனால், சில இடங்களில் காசு கேட்கிறார்கள்:(

ஒரு வழியாக கோவிலுக்குள் காலடி எடுத்து வைத்தோம். உள்ளே நுழைந்ததும் பெரிய பிரகாரம். கோவிலின் சிறப்பே பிரமாண்டமான பிரகாரங்கள், பெரிய பெரிய மண்டபங்கள், நேர்த்தியான கலை சிற்பங்கள், விபூதி வாசம், வானுயர்ந்த கோபுரங்கள், மலையின் தோற்றம், இன்னும் மொசைக் போடப்படாத தரைகள்...கருப்பு வேட்டியணிந்த அய்யப்ப பக்தர்களும், செவ்வாடை பக்தர்களும் ஓடிக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு பிரகாரங்களை கடந்து சிவனை தரிசிக்க பாம்பு வால் போல் நீண்டிருந்த வரிசையில் நாங்களும் சேர்ந்து கொண்டோம். அதுவும் ஸ்பெஷல் தரிசன வரிசை. கூட்டம் 'கசகச' வென்றிருந்தது. அக்னி ஸ்தலம் வேறு. வேர்த்துக் கொட்டியது. இப்போதே இவ்வளவு கூட்டமாக இருக்கிறதே எப்படி தான் மஹாசிவராத்திரி, ஆருத்ரா தரிசனம், பௌர்ணமி, கார்த்திகை தீபம் அன்று இருக்குமோ என்று நினைக்கவே மலைப்பாக இருந்தது! ஒரு வழியாக குறுகிய படிகளின் வழியாக மேலேறிப் போனால் அழகிய அண்ணாமலையார் தரிசனம். ஆஹா, அற்புதமாக திவ்யமாக காட்சி தந்து கொண்டிருந்தார். மனதில் நன்கு பதிந்த அந்த சிவலிங்கம் விபூதி மற்றும் மலர்களால் அலங்கரித்து பார்க்கவே பரவசமாக! ஹர ஹர மஹா தேவா சிவ சம்போ, ஒம் நமச்சிவாயா  என்று பக்தர்கள் முழங்க, கொடுத்த பணத்திற்கு ஏற்ப விபூதியோ, விபூதி பொட்டலமோ கிடைக்கிறது:( அப்படியே வேர்த்து விறுவிறுக்க வெளியில் வந்தால், சுவாமியும், அம்மனும் சேர்ந்து அமர்ந்திருக்க அங்கு தான் அர்ச்சனை, ஆராதனை எல்லாம் நடக்கிறது. இதுவும் ஒரு நல்ல ஏற்பாடு தான். இந்த முறையில் கூட்டத்தை கொஞ்சம் கட்டுப்படுத்தலாம்.

அந்த பழைய கோவிலை சுற்றி வந்தால், உண்ணாமுலை அம்மன் பிரகாரம். குட்டி அம்மன் அழகாக அலங்கரிக்கப் பட்டு! அங்கும் நன்கு கண்குளிர பார்த்து விட்டு வெளியே வந்தோம். தெப்பக்குளம் நிறைய தண்ணீர். சிறிது நேரம் மலை சூழ்ந்த அந்த கோவிலை மனமார தரிசித்துக் கொண்டிருந்தோம். ஏதோ ஒரு ஈர்ப்பு சக்தி இருக்கிறது! பல்லாயிரக்கணக்கான மக்கள் எதையோ தேடி வந்து கொண்டிருக்கிறார்கள். கோவிலில் பாதாள லிங்கம் என்று ஸ்ரீரமணர் தியானம் செய்த இடம் என்று சிறிது கீழே சென்று பார்க்க அங்கே ரமணரை பற்றியும், அந்த இடத்தை பற்றியும் விரிவாக எழுதி வைத்திருக்கிறார்கள். சிலர் அங்கு உட்கார்ந்து தியானமும் செய்து கொண்டிருந்தார்கள். இதைத் தவிர, பைரவர், முருகன், விநாயகர், சண்டிகேஸ்வரர், துர்க்கை, பெருமாள், நந்தி என்று சிறு சிறு மூலஸ்தானங்கள் இருந்தது. ஆங்காங்கே நாய்களும் கவலை இல்லாமல் தூங்கி கொண்டிருந்தது! ஒரு பிரகாரத்தில் தலையில் 'விக்' இல்லாமல் தன் ட்ரேட்மார்க் 'புன்னகையுடன்' பவர்ஸ்டார் அவர் மனைவியுடன் உட்கார்ந்து கொண்டிருந்தார். ஜனங்களும் அவரை கண்டு கொண்ட மாதிரி தெரியவில்லை.

நன்கு கோவிலை சுற்றி விட்டு மீண்டும் கோபுரங்களை பார்த்து ஒரு கும்பிடு போட்டு விட்டு வெளியே வந்தோம். மதுரை கோபுரங்களை பார்த்து பழகிய கண்களுக்கு இந்த கோவில் கோபுரங்கள் முற்றிலும் வித்தியாசமாக தெரிந்தது. வண்ண வண்ண சிலைகள் இல்லை, ஆனாலும் ஒரு அமைதியான அழகு குடி கொண்டிருக்கிறது! மறக்காமல் கோவில் பிரசாதம் வாங்கி ருசித்து விட்டு வந்தோம். கைகழுவ நிறைய குழாய்களைப் போட்டிருக்கிறார்கள். கோவிலும் சுத்தமாக இருந்தது. பல வருடங்களாக பார்க்க நினைத்த பெருங்கோவிலைப் பார்த்த திருப்தியுடன் உண்டியலில் காணிக்கையையும் செலுத்தி விட்டு வெளியில் வந்தோம்.கிரிவலம் தொடரும்...

5 comments:

 1. 100 வருடத்துக்கு முன்னர் திருவண்ணாமலை கோவில் இப்படித்தான் இருந்திருக்கிறது. http://3.bp.blogspot.com/-PgdMdQu82aw/UBbKvtm5VUI/AAAAAAAABA8/6z6IJsvSXIQ/s1600/Annamalaiyar+Temple+(Arunachaleswarar)+in+Thiruvannamalai+in+Tamil+Nadu+-+1890's.jpg

  ReplyDelete
  Replies
  1. ஹ்ம்ம். பெருமூச்சு தான் வருகிறது இந்த படத்தை பார்த்தால்! இந்த மாதிரி படங்கள் தான் இந்த கோவிலை பார்க்க தூண்டியது என்னை. பிரமாண்டம்!

   நன்றி, சரவணன்!

   Delete
 2. கொல்லிமலை, சதுரகிரிமலை, ஜவ்வாதுமலை,விராலிமலை வரிசையில் திருவண்ணாமலையையும் சொல்லலாம். ஒரு காலத்தில் இவையெல்லாம் மெய்ஞானம் தேடிய சித்தர்களின் பூமி. ரமணரின் வருகைக்குப் பின்னர் நிறைய கதைகள், சாமியார்கள், சிஷ்யர்கள்,ஆசிரமங்கள், காணிக்கை, பணம், வியாபாரம் என இன்றைய திருவண்ணாமலையின் ஆன்மிகம் செழித்தோங்கியிருக்கிறது.

  தஞ்சை பெரிய கோவிலைப் போலவே இந்தக் கோவிலையும் தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள தொல்பொருள் ஆய்வுத்துறை முடிவெடுத்து அதற்கு மத்திய அரசும் அனுமதி கொடுத்தாகி விட்டது. கோவிலை நம்பி பிழைக்கும் உள்ளூர் வியாபார கூட்டமும், அவர்களிடம் காசு வாங்கும் அரசியல் வாதிகளும், இது எதுவும் புரியாத அப்பாவி பக்த சிகாமணிகளுமாக போராடி அந்த முடிவை தள்ளிப் போட்டிருக்கிறார்கள்.

  ReplyDelete
  Replies
  1. தொல்பொருள் ஆய்வுத்துறை கட்டுப்பாட்டின் கீழிருக்கும் தஞ்சை பெரிய கோவில், தாராசுரம் கோவில்கள் எல்லாம் நன்கு பராமரிக்கப்பட்டு மிகவும் நன்றாக இருக்கிறது. இந்த கோவிலுக்கு என்னிக்கு விமோசனமோ !

   Delete
 3. தஞ்சை மற்றும் தாராசுரம் போன்ற கோவில்களின் பராமரிப்பு தொல்லியல் துறையிடம் இருப்பதனால்தான் ஓரளவு பாதுகாப்போடு இருக்கிறது என்பது உண்மைதான். வியாபார நோக்கமே திருவண்ணாமலையில் மேலோங்கியிருக்கிறது.இப்போதைக்கு அங்கே பக்தியும், பகவானும் இரண்டாம் பட்சம்தான்.

  ReplyDelete