Friday, February 15, 2013

மாமதுரை போற்றுவோம்!

சமீபத்தில் மதுரை சென்றிருந்த பொழுது பழங்காநத்தம் பைபாஸ் நாற்புறச் சந்திப்பில் நான்கு யானைகளின் முகங்கள் நீண்ட தந்தங்களுடன் வைத்து ஏதோ வேலை நடந்து கொண்டிருந்தது. பரவாயில்லையே மதுரைக்கும் விடிவுகாலம் வந்து விட்டது என்று நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது தான் மாமதுரை போற்றுவோம் சார்பில் இப்படிஎல்லாம் நடக்கிறது என்று தெரிந்து கொண்டேன். அதே போல், மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகிலும், கோட்டை சுவர்களை சுற்றி வண்ண வண்ண விளக்குகள், ஓவியங்கள் என்று தடபுடலாக இருந்தது.

என் சிறுவயதில், திரு.MGR முதல்வராக இருந்த பொழுது உலகத் தமிழ் மாநாடு என்று ஒன்று நடந்தது. அப்போது தான் மதுரையின் முக்கியமான இடங்களான - விளக்குத்தூண், மாரியம்மன் தெப்பக்குளம், காந்தி மியூசியம், சித்திரை பொருட்காட்சி நடைபெறும் தமுக்கம் மைதானம், மீனாக்ஷி அம்மன் கோவில், திருமலை நாயக்கர் மஹால், பெரியார் பேருந்து நிலையம் என்று பல இடங்களிலும் பல வடிவங்களில் குழந்தைகளை கவரும் வண்ணம் வண்ண வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்து மக்களும் கூட்டம் கூட்டமாக போய் பார்த்து விட்டு வந்தார்கள். சிலர் தினமும் ஒரு இடம் போய் பார்த்து விட்டு வர, நாங்களும் ஒரு காரை வாடகைக்கு எடுத்து குடும்ப சகிதமாக போய் பார்த்து விட்டு வந்தோம். திருவிழா, சினிமா, கல்யாணம் காட்சி என்றிருந்த மதுரை மக்களுக்கு இது ஒரு வித்தியாசமான அனுபவம் தான்.

உலகத் தமிழ் மாநாடு அன்று உண்மையில் என்ன நடந்தது என்று நினைவில்லை. ஆனால் அன்று நடந்த ஊர்வலம் மட்டும் நன்கு நினைவில் இருக்கிறது. தெற்குமாசி வீதியில் உறவினர் ஒருவர் வீட்டின் வாசலில் இருந்து வரிசையாக வரும் வண்டிகளில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நாட்டுப்புற நடனங்கள், பரத நாட்டியம், சிலம்பு, கத்திச்சண்டை, பல்வேறு வாத்தியங்களுடன் பல குழுக்கள், ஒவ்வொரு வண்டிக்கும் முன்னால் நடனமாடியபடியே பள்ளி/கல்லூரி மாணவர்கள், திருவிழாக்கள், தலைவர்கள் வேடமிட்டவர்கள் என்று கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சாரை சாரையாக வண்டிகள் வந்து கொண்டே இருக்க, குழந்தைகளும் பெரியவர்களும் கண்டுகளிக்கும் வண்ணம் அந்த நிகழ்ச்சி இருந்தது. அந்த ஊர்வலத்தைக் காண அப்படி ஒரு கூட்டம். பின்னே, முதல்வரும் கையசைத்துக் கொண்டே அந்த ஊர்வலத்தில் வந்தாரல்லவா?


இந்த மாமதுரை போற்றுவோம் நிகழ்ச்சியும் அப்படி இருந்திருக்குமோ?

4 comments:

 1. நல்ல பதிவு! மதுரை ஞாபகங்ககளைக் கிளறிவிட்டீர்கள்!!

  ReplyDelete
  Replies
  1. நன்றி, மதுரை அழகு.

   Delete
 2. இந்த முறை இரவில் மதுரைக்குப் போய், காலையில் கிளம்பிவிட்டதால் இந்த களேபரஙக்ளை நான் கவனிக்கவே இல்லை.....மாமதுரையை போற்றுவது என்பது சம்பிரதாயமாய் முடிந்து விடாமல் அழிந்து கொண்டிருக்கும் பழமையை பாதுகாத்து போற்றுவதும், புதுமைகளை சரியான வகையில் ஏற்று செய்ல்படுவதை உறுதி செய்வதாக இருந்தால் மகிழ்ச்சியே!

  ReplyDelete
  Replies
  1. கொஞ்சம் விழிப்புணர்வு வந்த மாதிரி தான் தெரிகிறது. பல குழுக்களும் தீவிரமாக மக்களிடம் பழமையை பாதுகாக்க வேண்டி அவர்களுக்கு புரியும் வகையில் வேலைகள் செய்து கொண்டிருக்கிறார்கள். காலில் சக்கரத்தை கட்டிக் கொண்டு ஓடி கொண்டிருக்கும் இன்றைய சூழலில் ஒரு நல்லதலைமை கிடைத்தால் மட்டுமே மதுரைக்கு விடிவு!

   Delete