Thursday, February 28, 2013

மகாத்மா முதியோர் இல்லம்

இந்த முறை ஊருக்கு சென்றிருந்த பொழுது மகாத்மா முதியோர் இல்லம் சென்று வந்தோம். பரபரப்பான வில்லாபுரத்தில்,மீனாக்ஷிநகரில், சஞ்சீவி தெருவில் இந்த இல்லம் இருக்கிறது. நாங்கள் வருவதை முன் கூட்டியே சொல்லி அங்கு இருப்பவர்களுக்கு மதிய உணவு என்ன வேண்டும் என்று கேட்டு தக்காளி சாதம், ரவா கேசரி, பஜ்ஜி, தயிர் சாதம், குருமா மற்றும் தயிர் வெங்காயம் ரெடிமேட் சொல்லிவிட, அவர்களும் சரியான நேரத்திற்கு அனுப்பி விட்டார்கள்.
வெளியில் மகாத்மா முதியோர் இல்லம் என்று ஒரு போர்டு வைத்திருக்கிறார்கள். அது மாடியுடன் கூடிய வீடு. தரைத்தளம் மட்டும் இல்லத்திற்கு வாடகை விட்டிருக்கிறார்கள். உள்ளே நுழைந்தவுடன் ஒரு சின்ன வரவேற்பறை/அலுவலக அறை என்று ஒரு மேஜை, நாற்காலியுடன். இன்னொரு மூலையில் தொலைக்காட்சி பெட்டி ஒன்று வைத்திருந்தார்கள். உள்ளே கொஞ்சம் இருட்டாக இருந்தது. அதை அடுத்து ஒரு பெரிய ஹால், ஹால் முடியும் இடத்தில் சுவரை ஒட்டி நான்கு சிறிய அறைகள். ஹால் முழுவதும் சிறு இடைவெளி விட்டு இருபத்தி நான்கு கட்டில்கள் இருந்தது.அலுவலக அறையை தாண்டி இடப்பக்கம் திரும்பியவுடன் ஒரு பெரிய கிரைண்டர், பழைய பிரிட்ஜ், சில வேண்டாத, வேண்டிய சாமான்கள் என்று வரிசையாக. அதை தாண்டி உள்ளே போனால் ஒரு சமையல் அறை. ஒரு காஸ் சிலிண்டர், பெரிய பாத்திரங்கள், இத்யாதிகள். ஹால் நல்ல சூரிய வெளிச்சத்துடன் இருந்தது. அங்கு பொறுப்பிலிருக்கும் செக்ரட்டரி வெளியில் சென்றிருந்ததால் அவர் வரும் வரை, அங்கிருந்து இல்லத்தை கவனித்து வருபவருடன் பேசிக்கொண்டிருந்தோம். அவரும் எங்களுடன் பேசிக் கொண்டே மதிய உணவை சின்ன பாத்திரங்களில் மாற்றினார்.


நான் முதலில் அந்த இல்லம் யாரோ ஒருவருடைய சொந்த வீட்டில் இருக்கிறது என்று நினைத்திருந்தேன். பிறகு தான் தெரிந்தது, அவர்கள் வாடகை கொடுப்பது. மொத்தம் 24 முதியோர்கள் இருந்தார்கள். அவர்களில் பத்து பேர் வயதான ஆண்கள். மீதம் பெண்கள். அதில் இரு பெண்கள் மட்டும் மற்ற மொழி பேசுபவர்கள். அவர்களைத் தவிர அனைவருமே சௌராஷ்டிரா பேசுபவர்கள். ஒவ்வொருவரும் மாதம் ரூபாய் 2500 கொடுக்கிறார்கள். அங்கிருக்கும் சிறிய அறையில் தங்குபவர்களுக்கு மாதம் 3000 என்று சொன்னதாக ஞாபகம். இரண்டு அறைகளில் ஒரு வயதான பெண்மணியும், ஒரு வயதானவரும் இருந்தார்கள். நிறைய காத்தாடிகளும், விளக்குகளும் இருந்தது. ஆனால், கரண்ட் தான் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்தது. ஹாலின் ஒரு மூலையில் பாத்ரூம், டாய்லெட் இருந்தது.

நாங்கள் போன மதிய நேரம் பலரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். வயதான ஆண்கள் முகச் சவரம் செய்யாத முகங்களுடனும் ஒரு விட்டேத்தியான பார்வைகளுடனும்- பலரும் ஒல்லியாகவே இருந்தார்கள். பெண்களில் நடுத்தர வயது, கொஞ்சம் வயதானவர்கள், நன்கு வயதானவர்கள் என்று இருந்தார்கள். ஒரு சிலருக்கு முதுமையின் காரணமாக கண்பார்வை, காது கேளாமை குறைபாடு என்றிருந்ததை பார்க்க முடிந்தது. ஒரு சிலர் கூட்டமாக நாங்கள் வந்ததை பார்த்து, எழுந்து உட்கார்ந்து பேசினார்கள்.
அங்கிருந்த அநேகமானவர்கள் முகத்தில்/கண்களில் ஒரு வெறுமை இருந்தது. சிலர் சாந்த முகத்துடன், சிலர் சிரித்த முகத்துடன், சிலர் எரிச்சல் முகத்துடன்.. வயதான ஆண்கள், வாழ்க்கையில் பற்றே இல்லாமல் ஏதோ உயிருடன் இருக்கிறேன் என்பது போல் இருந்தார்கள். அவரவர் கட்டில்களுக்கடியில் அவர்களுக்கு வேண்டிய தின்பண்டங்கள், மருந்து மாத்திரைகள், துணிமணிகள் வைத்திருக்கிறார்கள். ஆளுக்கொரு ஓலை விசிறி வைத்திருக்கிறார்கள்.


இல்லத்தை கவனிப்பவருடன் பேசும் பொழுது அவர், சில பாட்டிகள் அநியாயத்திற்கு சண்டை போடுவார்கள். அதனால் தான் அவர்களை இங்கே கொண்டு வந்து விட்டிருக்கிறார்கள். இவர்களை எல்லாம் வீட்டில் வைத்து சமாளிக்க முடியாது. நானும் அடிக்கொருதரம் சத்தம் போட வேண்டியிருக்கிறது என்று சொல்லும் போது ஏனோ கொஞ்சம் நெருடலாக இருந்தது. சில பெண்கள் சமையலுக்கு உதவுவார்கள் என்று சொன்னார்.

சிலருடன் பேசும் பொழுது அவர்கள் கண்களில் சொல்ல முடியாத ஏக்கம்/துக்கம்/வருத்தம். சிலர் அமைதியாக இது தான் விதி என்று ஏற்றுக் கொண்டிருந்தார்கள். அந்த இடத்தை ஒருவர் சத்தமாக பேசிக்கொண்டு கலகலப்பாக்கி கொண்டிருந்தார்! ஒரு பாட்டி, தன் மகன் போன பிறகு மருமகள் வைத்துக் கொள்ள முடியாது என்று சொல்லி மருமகன் தன்னை அங்கு சேர்த்து விட்டதாகவும், அடிக்கடி பேத்திகளும், மருமகனும் வந்து பார்த்து விட்டு போவார்கள் என்று வருத்தத்துடன் சொன்னார். அவர் என் மாமியார் வழியில் தூரத்து சொந்தம் கூட. அவரை அங்கு பார்க்கும் பொழுது அதிர்ச்சியாக கூட இருந்தது! நிறைய பழைய விஷயங்களை பேசினார். என் கணவர், அவர் வீட்டு ஆட்களை பற்றி அக்கறையோடு கேட்டுக் கொண்டார். கணவனை இழந்த படித்த பெண்மணி ஒருவர் ஒரு அறையில் தங்கியிருந்தார். சிரித்த முகத்துடன் அன்பாக பேசினார். என் மகளிடம் அவள் படிப்பு பற்றிய விவரங்களை கேட்டுக் கொண்டிருந்தார். அவருடைய கணவருடன், மகளுடன் சேர்ந்து எடுத்திருந்த படங்களை காட்டினார். நல்ல வசதியாக வாழ்ந்திருக்கிறார்! இன்னொரு அறையில் நன்கு படித்த, ஜாதகம் பார்க்கிறவர் இருந்தார். இப்போது பார்க்கிறாரா என்று தெரியவில்லை. தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பார் போல.

இதற்குள் சாப்பிடும் நேரமாகி விட்டதால் அனைவருக்கும் வாழை இலை போட்டு பரிமாறினோம். நன்றாக விரும்பி  சாப்பிடுகிறார்கள். சாப்பிட்டு முடித்த இலைகளை எடுத்து விட்டு நாங்களும் அங்கு வேலை பார்ப்பவர்களுடன் சாப்பிட்டு முடித்தோம். அங்கிருப்பவர் டீ போட்டுத் தருகிறேன், இன்னும் கொஞ்ச நேரம் இவர்களுடன் பேசிக் கொண்டிருங்கள் என்று சொல்ல, நாங்கள் விட்ட இடத்திலிருந்து பேச ஆரம்பித்தோம். உடம்புக்கு ஏதாவது என்றால் என்ன செய்வீர்கள் என்று கேட்ட பொழுது, அவர்கள் குடும்பத்திற்கு சொல்லி விடுவோம். அவர்கள் வந்து அழைத்துப் போவார்கள் என்று சொன்னார்கள். நல்லது கெட்டதிற்கும் போய் வருகிறார்கள். சிலர் காலை சாப்பாடு முடித்த பிறகு வெளியில் காலாற நடக்க போவார்களாம். மதியம் சிறிது நேரம் சீரியல்கள் பார்க்கிறார்கள். மாலை வேளையில் அருகிலிருக்கும் கோவிலுக்கு சிலர் போகிறார்கள். அவர்களுக்கு பொழுது போவது தான் கொடுமையான விஷயமாக இருக்கும் என்று நினைக்கிறேன். விட்டத்தை வெறித்து பார்த்துக் கொண்டே இருந்தால் என்ன வாழ்க்கை!

நாங்கள் அங்கு இருக்கும் பொழுதே ஒரு சௌராஷ்டிரா மற்றும் தமிழ் பேசுபவர் வந்து அவர்கள் குழந்தைகள் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு உணவு கொண்டு வரலாமா என்று கேட்டு கொண்டிருந்தார்கள்.

அங்கு இருப்பவர்களுடன் என் அம்மா, பெரியம்மா, தம்பி, பெரியம்மா மகள், அத்தை, என் மகள், தம்பி மனைவி எல்லோரும் பேசிக்கொண்டிருந்தோம். இப்படியே பேசிக் கொண்டிருக்கும் பொழுது சுடச்சுட டீயும் வர குடித்து முடித்து விட்டு எல்லோருக்கும் செலவுக்கு சிறிது பணமும் கொடுத்து விட்டு வரும் பொழுது 'கொடிது கொடிது முதுமை கொடிது, அதை விட முதியோர் இல்லத்தில் இருக்கும் நிலைமை இன்னும் கொடிது' என்று தோன்றியது.

ஒவ்வொருவரும் பல சூழ்நிலைகளின் காரணமாக அங்கே வந்திருக்கலாம். சிலருக்கு அருகில் இருந்து பார்த்துக் கொள்ள ஆட்கள் இல்லாததால், சிலர் அவர்களுடைய காலத்தில் செய்த தவறுக்கு இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கலாம். கொடுமை என்னவென்றால், பலரின் குழந்தைகள் அந்த இல்லத்தின் அருகிலேயே இருந்து கொண்டு அம்மா/அப்பாவை இங்கு விட்டு வைத்திருப்பது தான். ஒருவேளை தன்னுடன் இருந்து கஷ்டப்படுவதை பார்க்க சகிக்காமல் தான் இங்கே கொண்டு வந்து விட்டுப் போனார்களோ என்னவோ!

இன்று நினைத்தாலும் அந்த கண்களில் இருந்த வெறுமை, முகத்தில் தெரிந்த ஏக்கம்/விரக்தி ...மனம் கனக்கிறது! மனிதம் மெதுவாக செத்துக் கொண்டிருக்கிறது.


மனிதன் மாறி விட்டான்....



6 comments:

  1. அர்த்தமுள்ள பதிவு .... thank you @Swarnalatha Kuppa ji...

    ஒரு வீடு ....நூறு கதை ! அதில் எந்த கதை நல்லது , எது சரியில்லாத கதை , சுமாரான கதை .....நாம் யாரையும் நாம் பிரித்து பார்க்க முடியாத ஒரு சோக கதை தான் ! இது போன்ற இல்லங்கள் !

    ஒரு வேலை ....பசங்க இல்லை மருமகளோடு இருப்பதை விட ....இந்த இல்லம் கொஞ்சம் ஆறுதலாக இருக்கலாம் !

    எது எப்படியோ....நம்மை ஆளாகியவர்களை ....நாம் மறப்பது?! என்பது ...நாம் எதை நோக்கி பயணிக்கிறோம் என்பதை நினைத்தால் வெட்கமாக தான் உள்ளது !

    நம்ம வாழ்க்கையல (life style) ரொம்ப முன்னேரிடோம் என்று அநியாத்துக்கு பீதி கொள்கிறோம் !

    நாளைக்கு நமக்கும் முதுமை வரும் .....எந்த இல்லம் கதவு திறந்து இருக்க போகிறதோ ......!

    -------------------
    நான் கேள்வி பட்ட சமாசாரம் ....இந்த மகாத்மா இல்லம் குறைந்த வாடைகைக்கு விடப்பட்டு உள்ளது என்பதை அறிந்து உள்ளேன் !

    இது போன்ற முக்கிய இடங்களில் வடைகை அதிகம் , நல்ல மனம் படைத்தவர் ! இந்த உதவி செய்கிறார் !

    ReplyDelete
    Replies
    1. பியாரிலால் - மனித உறவுகள் சிக்கலாகி கொண்டே வருகிறது. அது பெற்றவர்கள் ஆனாலும். காலத்தின் கொடுமை.

      Delete
  2. கொடுமை... இல்லங்கள் அதிகரிப்பதும் கொடுமை... சமுதாய சீரழிவுக்கு உதாரண இல்லங்கள்...

    அனுப்பியவர்கள் விரைவில் இங்கு வருவார்கள்... வர வேண்டும் விரைவில்...

    ReplyDelete
    Replies
    1. திண்டுக்கல் தனபாலன் - அப்படி ஒரேயடியாக சொல்லி விட முடியாது. தொலை தூரத்தில் பெற்றோரை தன்னுடன் வைத்துக் கொள்ள முடியாதவர்களுக்கு இது நல்ல இடமே. ஒரு முதியவர் மனைவி இறந்த பிறகு தனிமையில் இருந்த நிலையில் கீழே விழுந்து யாரும் கவனிக்காததால் இறக்க நேர்ந்திருக்கிறது. அவர் இங்கு இருந்திருந்தால் ஒரு துணை, ஒரு அவசர உதவி எல்லாம் கிடைத்திருக்கும். மற்றபடி, பிள்ளைகள் அருகில் இருந்தும் இங்கு வரவேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானாவர்கள் துர்பாக்கியசாலிகளே! அவர்களை இங்கு அனுப்பியவர்கள் மாபாவிகளே!

      Delete
  3. பத்து மாதம் சுமந்து பெற்றாள்
    பார்த்து பார்த்து வளர்த்தாள்
    கொட்டும் மழை வந்தாலும்
    குடை போல் காத்தாள்....
    கட்டிய மனைவி வந்ததும் தொட்டிலில்
    ஆட்டிய தாயை மறந்தது ஏனோ...
    பட்டினி கிடந்தும்
    நோய்பிணி இன்றி உன்னை காத்தாள்...

    பசித்தும் கூட உண்ண மறுத்தாள்
    உந்தன் நினைவில்...
    வாரம் ஒரு முறை சென்று பார்..
    வயதில் உதிந்தவர் பாவம்..
    மாதம் ஒரு முறையாவது சென்று பார்..
    மனித நேயத்தில்..
    வருடமாவது ஒரு முறையாவது சென்று பார்....
    வருத்தத்தில் இருகின்றார்
    வாழ வைத்த தெய்வம் அங்கே.....

    ReplyDelete
  4. அற்புதமாக சொல்லி விட்டீர்கள்!

    ReplyDelete

அமேசிங் பிரிட்டன் -5- இன்வெர்னஸ் & ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ் பயணக்குறிப்புகள்

சொல்வனம் இதழ் 313ல் வெளிவந்துள்ள 'அமேசிங் பிரிட்டன்' பயணக்கட்டுரைத் தொடரின் ஐந்தாவது பாகம்.   இன்வெர்னஸ் & ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ்...