Thursday, March 7, 2013

அவள் ஒரு தொடர்கதை- 1

பெண்ணாய் பிறக்க மாதவம் செய்திருக்க வேண்டும் என்று சொன்னவர்கள் எதை வைத்து சொன்னார்களோ தெரியவில்லை நிச்சயம் இப்பொழுது இந்த காலத்தில் சொல்ல மாட்டார்கள். பெண்களுக்கு எதிராக நிகழும் வன்மங்களை பார்த்தால் நிச்சயம் why this கொலைவெறி என்று தான் கேட்பார்கள். அவ்வளவு துன்பங்கள் பல பெண்கள் வாழ்விலும்.

பெண்குழந்தை பிறந்து சீராட்டி பாராட்டி வளர்க்கப்பட்டால் அந்த பெண் 'மா தவம் செய்தவள்' தான். பெண் பிறந்து விட்ட காரணத்திற்காக அந்த குழந்தையையும், அவள் தாயையும் ஒதுக்கி வைக்கும் ஆணும் அவனை பெற்ற பெண்ணும் எத்தகைய கொடியவர்கள்? அதோடு முடிந்ததா? ஒரு சில வீடுகளில் பெண் குழந்தைகளை ஒரு விதமாகவும், ஆண் குழந்தைகளை ஒரு விதமாகவும் நடத்துகிறார்கள். இன்று அந்த அளவிற்கு மோசம் இல்லையென்றாலும் இன்னும் பல இடங்களிலும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. பெண்ணாக பிறந்த ஒரே காரணத்திற்காக எத்தனை குழந்தைகள் கள்ளிப்பாலை தாய்ப்பாலாக நினைத்து உயிரை விட்டு கொண்டிருக்கின்றன. பல வீடுகளில், நின்றால் குற்றம், நடந்தால் குற்றம், யாரோ ஒரு சில பெண்கள் செய்த தவறுக்கு பல பெண் குழந்தைகளும் அனுபவிக்கும் இத்தகைய கொடுமைகள் ஏராளம். பெண் பிள்ளைக்கு படிப்பு எதற்கு என்று இருந்த நிலை மாறி, பெண்களும் படிக்க வேண்டும் என்று மாறியிருப்பது சிறிது ஆசுவாசத்தை தருகிறது. அதிகம் படிக்க விரும்பினால், நாளை உன்னை எவன் கட்டிப்பான்? இதோடு நிறுத்திக் கொள் என்று அங்கும் முட்டுக்கட்டை பலருக்கு. அப்படி மீறி படித்து விட்டால், திருமணத்திற்குப் பின் ஈகோ பிரச்னை. உன்னை ஒருவனிடம் பிடித்து கொடுக்கும் வரை எனக்கு தூக்கம் வராது என்று புலம்பும் தாய்மார்கள் அதிகம். அவள் வளரும் பொழுது வெளியில் போய்விட்டு வருவதற்குள் அநேக கழுகுப்பார்வைகளில் இருந்து தப்பி வர வேண்டும். பஸ்களில், கூட்டங்களில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். வீட்டுக்கு வந்தால் ஒழுங்காக படிக்க வேண்டும், வீட்டு வேலைகள் செய்ய வேண்டும். விருந்தினர்களை கவனிக்க வேண்டும். என்று பல எழுதப்படாத நியதிகள், இந்த 'மா தவப் பெண்களுக்கு'. சில பெண்கள் தாங்கள் செய்யாத தவறுக்கு தண்டனையும் அனுபவிக்கிறார்கள். தெருவில் போகும் எவனோ ஒருத்தன் காதலித்தால் அதற்கு இவளா பொறுப்பு? அதற்கு பதில் இவள் முகத்தில் ஆசிட் கொடுமை என்று பல இடங்களில் இப்போது. என்ன பாவம் செய்தார்கள் இவர்கள்? கல்லூரிக்குப் போனாலும் இதே கொடுமை தான்.

அதோடு முடிந்ததா? கல்யாணத்திற்கு வரன் தேடுகிறேன் பேர்வழி என்று அந்த பெண்ணை பாடாய் படுத்தி விடுவார்கள். வருகிற வரன்களும் ஏதோ தேவலோகத்தில் இருந்து குதித்த மாதிரி புடை சூழ வந்து பஜ்ஜி, சொஜ்ஜி சாப்பிட்டு விட்டு பெண்ணையும் பார்த்து விட்டு பெற்றோர்கள் எதிபார்க்கும் நகை நட்டு கிடைக்காததால் வேறு வரன் பார்க்கிறோம், ஜாதகப் பொருத்தம் சரியில்லை என்று நொள்ளை காரணங்களை  சிறிது நாள் கழித்து சொல்லும் பொழுது பெண்ணும், அவளை பெற்றவர்களும் படும் பாடு இருக்கிறதே! இப்படியே எத்தனை முறை அந்த பெண் அலங்கரித்துக் கொண்டு உட்காருவாள்? வேறு வழி? பலர் பார்த்தும் நிச்சயம் ஆகவில்லை என்றால் பெண்ணை பெற்றவர்களுக்கே மனவருத்தம் எரிச்சலாக மாறி ஊரிலிருக்கும் பெண்களுக்கு திருமணம் நடக்கிறது என் பெண்ணிற்கு நடக்க வில்லையே என்று மன அழுத்தம் அதிகமாகி அதனால் எத்தனை பிரச்சினைகள்? பெற்றோர்கள் வேதனையை பார்க்க சகிக்காமல் ஏதோ கல்யாணம் என்று ஒன்று நடந்தால் சரியென்று சொல்லி, வந்த வாழ்க்கையை கொடுமையுடன் ஏற்று மனதிற்குள்ளே புழுங்கும் மாதவப் பெண்கள் எத்தனைப் பேர்? பெண் பார்க்க வருபவர்களும் பெண் குட்டை, நெட்டை, குண்டு, ஒல்லி, கருப்பு என்று சொல்வது அதையும் விட கொடுமை. ஆனால் அதே பெண் வீட்டில் இருந்து அதிக நகை, பணம் கொடுக்கிறோம் என்றவுடன் பல்லை இளித்துக் கொண்டு சம்மதிப்பதும், அதை பார்த்து புழுவாய் பெண்கள் துடிப்பதும் எத்தனை ஜென்மங்களுக்கு புரியும்? இதை சொல்பவர்கள் தங்களின் உண்மையான முகம் என்னவென்று தெரியாமல் ஐஸ்வர்யாராய் ரேஞ்சில் பெண்ணிருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் ( இந்த தகர டப்பா மூஞ்சிகளுக்கு இதுவும் ஒரு கேடு!) , அம்பானி ஸ்டைலில் கல்யாணம் சீரும் சிறப்புமாக நடைபெற வேண்டும் என்று நினைப்பதும் அதற்காக பலரும் தங்கள் சேமிப்பு அல்லது கடனை வாங்கி செய்யும் கொடுமை தான் உச்சம். ஜாதகத்தில் பெண்ணுக்கு மூல ராசி என்றால் நிர்மூலம் ஆகி விடுமாம். ஆண் மூலம் அரசாளுமாம், என்ன விதமான கண்டுபிடிப்பு!

அவள் ஒரு தொடர்கதை...

4 comments:

 1. உங்களின் தாக்குதல் செம...

  உண்மை நடப்புக்கள்...

  எல்லாம் மூட நம்பிக்கைகளா...? மக்களின் அறியாமையா...?

  ReplyDelete
  Replies
  1. தனபாலன் - மூட நம்பிக்கைகளும், பெண்ணுக்கு பெண்ணே எதிரி என்ற நிலைமையும். பல இடங்களிலும் நிலைமை மாறிவந்தாலும் இன்னும் கொடுமைகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.

   Delete
 2. ஐம்பது வருடத்துக்கு முந்தைய நிலமை இன்றில்லை என ஒரு பக்கம் சந்தோஷித்தாலும கூட, இது தொடர்பில் நாம் போக வேண்டிய தூரங்கள் அதிகம் என்பது மட்டும் நிதர்சனம்.....யோசிக்க வைக்கும் கருத்துக்கள், சரளமான நடையில் :)

  வாழ்த்துக்கள். :)

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான்,இன்னும் கடக்க வேண்டிய தூரம் நிறைய உள்ளது. வாழ்த்துக்களுக்கு நன்றி சரவணன்.

   Delete