Monday, April 15, 2013

சித்திரை மாதம் - அன்னை மீனாக்ஷி விழாக்கோலம்


இன்னும் சில நாட்களில் மதுரை திருவிழா கோலம் பூண்டு விடும். இப்பொழுதே ஆரம்பித்திருக்கும் கூட! மதுரை மக்கள் தங்கள் மீனாக்ஷி அம்மனை பட்டத்து அரசியாக்கி, சிவபெருமானுடன் திருமணக்கோலம் காணத் தயாராகி விடுவார்கள். விடுமுறை நேரமாதலால் குழந்தைகளும் குதூகலமாக அம்மன் கோவில் அலங்காரங்களையும், தினம் வெவ்வேறு வாகனங்களில், அலங்காரங்களில் பவனி வரும் சுவாமியையும், அம்மனையும் காணவும்,  வரும் வழியில் வாய் இனிக்க, உதடு சிவக்க முட்டாய் வாங்கித் தின்னவும் தயாராகி விடுவார்கள் :)

மீனாக்ஷி அம்மன் கோவிலில் கொடியேற்றம் ஆரம்பித்தவுடனே ஆரம்பிக்கும் விசேஷங்கள் ஆற்றில் அழகர் இறங்கி ஊர் போய் சேரும் வரை மதுரையையே அலைக்கழிக்கும்! வெயிலுக்கும் பஞ்சம் இருக்காது. ஆனால், அதற்கெல்லாம் அசந்து விடுவார்களா மதுரை மைந்தர்கள்? வெயில் கொளுத்தினாலும், தண்ணீர் பஞ்சம் இருந்தாலும், நகரமே இருட்டில் மூழ்கினாலும் கூட்டம்,கூட்டமாக கோவிலுக்கு போவதில் தான் என்னே ஆனந்தம்!


சித்திரை முதல் நாள், தமிழ் வருடப்பிறப்பன்று பெரும்பாலோனோர் வீடுகளில் செம்மண் கரைத்து அதன் மேல் கோலம் போட்டு மங்களகரமாக ஆரம்பிக்கும்இந்த மாதம் வரும் மாதங்களுக்கும், விசேஷங்களுக்கும் ஒரு பிள்ளையார் சுழி.

சுவாமி வருவதற்கு முன்பு ஒரு வெடி போடுவார்கள். கூட்டமும் சலசலக்க ஆரம்பிக்கும். முதலில் வரும் குதிரை ஒட்டகம், எருது என்று வரிசையாக வருபவைகளைப் பார்த்து குழந்தைகள் ஆர்ப்பரிக்க, விநயாகர் , முருகன் அவரவர் வாகனங்களில் வர, மக்களும் பயபக்தியுடன் எழுந்து நின்று கும்பிட்டு கொண்டிருக்கும் பொழுதே ஒளிவெள்ளத்தில் அம்மனும், சுவாமியும், தனியாக அம்மனும் என்று வெள்ளி வாகனங்களில் ஜொலிக்க வரும் காட்சியே அலாதியானது. ஆங்காங்கு நின்று கொண்டே பரவசத்துடன் பார்த்துக் கொண்டிருக்கும் பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்து விட்டு சுவாமி புறப்பட , கூட்டமும் களைய ஆரம்பிக்கும்.

குழந்தைகளும் பொம்மை மிட்டாய்க்காரனிடம் போய் கையில் வாட்ச்சோ அல்லது ஏதாவது ஒரு டிசைனோ போட்டுக் கொண்டு ஒரு முறை சப்பி பார்த்து விட்டு அந்த இனிப்புடனும் கையை பார்த்துக் கொண்டும் போவார்கள்.

இன்னும் சிலர் மண்ணெண்ணெய் வாசம் மணக்க பெரிய திரியுடன் எரிந்து கொண்டிருக்கும் விளக்கில், வெள்ளை, மஞ்சள் மற்றும் சிவப்பு நிற மிட்டாய் விற்பவர்களை நோக்கிப் போவார்கள். சிவப்பு நிற மிட்டாய் விரைவில் தீர்ந்து விடும், அதை வாயில் போட்டு கடக் முடக் என்று கடிப்பதை விட, வாயிலேயே வைத்திருந்து கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட, ராமராஜன் லிப்ஸ்டிக் போட்ட மாதிரி ஆகி விடும் சிறிது நேரத்தில். குழந்தைகளும் யாருக்கு அதிக சிவப்பு நிறம் வாயில் இருக்கிறது என்று ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டே போவதும், இன்னும் சிலரோ குருத்து, மாங்காய், திகர்தெண்டா என்று ஆளுக்கொரு திசையாக போய்க் கொண்டிருப்பார்கள்! ஆப்பிள் பலூன், ஆரஞ்சு பலூன், ஊதுகுழல், தண்ணீரை பீய்ச்சியடிக்கும் மூங்கில் குச்சிகள் என்று எதையாவது கேட்டு அழுது கொண்டே போகும் குழந்தைகளையும் பார்க்கலாம்.

ஒரே தெருவிலிருந்து வந்தவர்கள் கூட்டமாக பேசிக் கொண்டே மறுநாள் எத்தனை மணிக்கு வருவது என்று பேசிக் கொண்டே போவதும், சுற்றங்களுடன் வந்தவர்கள் மீண்டும் நாளை பார்க்கலாம் என்று சொல்லிக் கொண்டே பிரிவதுமாய் கூட்டம் களையும். தூரத்தில் மீனாக்ஷி அம்மன் போவதை பார்த்துக் கொண்டே விரைவில் அம்மனின் பட்டாபிஷேகம், திருக்கல்யாண கோலத்தைப் பார்க்கும் ஆவலுடன் வீட்டுக்குத் திரும்பும் கூட்டம்.
















6 comments:

  1. Replies
    1. நன்றி, திண்டுக்கல் தனபாலன்.

      Delete
  2. திருவிழாவுக்குப் போகனும், போக முடியுமான்னு தெரியலை..... :(

    லிஸ்ட்ல பஞ்சுமிட்டாய், பால் ஐஸ் மிஸ்ஸ்ஸ்ஸ்ஸிங்ங்ங்ங்.... :)

    ReplyDelete
    Replies
    1. பஞ்சுமிட்டாய், பால் ஐஸ் எல்லாம் திருவிழால :)

      Delete
  3. மறவர் சாவடியில், தாமோதரன் பாட்டி வீட்டின் மாடியில் உட்கார்ந்து கொண்டு சாமி உலாவையும், தேரோட்டத்தையும் பார்த்த நாட்கள் பசுமையானவை...:)

    இந்த வருடம் திருவிழாவுக்கு போக முடியுமா தெரியலை....குறைந்த பட்சம் வீட்டருகே நடக்கும் கள்ளழகர் எதிர்சேவைக்காவது போய்ட்டு வரணும். :(

    ReplyDelete
    Replies
    1. மறவர் சாவடி, தெற்குமாசி வீதி, விளக்குத்தூண் கலகலக்கும் இப்போது!

      Delete

அடடா மழைடா ஐஸ் மழைடா!

எப்படியோ இந்த வருட பனிமழையிலிருந்து தப்பித்து விட்டோம் என்று நினைத்திருந்தேன். இந்தியாவிலிருந்து மார்ச் இரண்டாம் வாரம் தான் ஊருக்குத் திரும்...