Monday, May 20, 2013

பாண்டிச்சேரி - கும்பகோணம்

பாண்டிச்சேரியில் நண்பர் வீட்டில் நல்ல சுவையான மதிய உணவிற்குப் பிறகு சிறிது நேரம் பேசி விட்டு நாங்கள் கிளம்புகிறோம் என்றவுடன் அவர்களும் வருத்தத்துடன், இருந்து புது வருட நாளை அவர்களுடன் கொண்டாடி விட்டு போயிருந்திருக்கலாம் என்று சொல்லும் போது கஷ்டமாகத்தான் இருந்தது. எப்பொழுதும் காலில் சுடுதண்ணீரை ஊற்றிக் கொண்ட மாதிரி தான் எங்கள் விஜயம். இது வரை வந்து எங்களையெல்லாம் பார்க்க முடிந்ததே, மேலும் கும்பகோணம் ரோடுகளும் அவ்வளவு நன்றாக இல்லை என்று அவர்களே சமாதானப்படுத்திக் கொண்டு எங்களை வழியனுப்பி வைத்தனர்.

எனக்கோ புது வருட இரவுக்குள் கும்பகோணம் போய் சேர்ந்து விடவேண்டும் என்ற ஒரே கவலை தான். பாண்டிச்சேரி முழுவதும் புது வருடத்திற்கு தயாராகிக் கொண்டிருக்க, ஹோட்டல்கள் எல்லாம் தொங்கும் விளக்குகள், கலைநிகழ்ச்சிகள், ஜோடிகள் வந்து ஆடிப்பாடி ஆட்டம் போட்டுத் தங்கிச் செல்ல இன்ன விலை என்று பெரிய பெரிய போஸ்டர்களில் விளம்பரங்கள் என்று கலகலத்துக் கொண்டிருந்தன! போக்குவரத்து நெரிசலும் அதிகமாகிக் கொண்டிருந்தது. புது ஆண்டை வரவேற்க மக்களும் 'உற்சாக' மூடில் இருந்தார்கள்!!!

ஒரு வழியாக பாண்டிச்சேரியை தாண்டி கடலூர் போகும் சாலையை தொட்ட பிறகு நெரிசல் குறைந்த மாதிரி இருந்தது. மதிய நேரம், உண்ட மயக்கம், அமெரிக்க நேரப்படி தூக்கம் கண்ணைச் சொக்கினாலும், தூங்கினால் என் தம்பிக்கும் ஓட்டுவது சிரமம் என்று பேசிக் கொண்டே வந்தோம்.

என் தம்பியும் வரும் வழியில் வந்த தொழிற்சாலைகளைப் பற்றியும் முன்பு வேலைப் பார்த்த கம்பெனியின் தொழிற்சாலையும் அங்கு வந்த போது ஏற்பட்ட அனுபவங்களையும், எப்படி இன்று குடும்பத்தில் எல்லோருடைய வாழ்க்கையும் மாறி விட்டது என்று பேசிக்கொண்டே குண்டு குழி சாலைகளில் அந்தி சாயும் வேளையில் வந்தது நல்ல அனுபவம்.

வரும் வழியில், சிதம்பரம் கோவில் தெரிந்தது. ஆஹா, மிஸ் பண்ணிட்டோமே என்று வருத்தமாக இருந்தாலும், கோபுர தரிசனம் செய்து கொண்டே சீர்காழி கடந்து இருட்டுவதற்குள் வைத்தீஸ்வரன் கோவில் முன் வந்து நின்றோம்.

8 comments:

 1. கும்பகோணம் செல்வதற்குள் வயிற்றில் உள்ளது கரைந்து விடும்... தொடருங்கள்...

  ReplyDelete
  Replies
  1. அப்படித்தான் நாங்களும் நெனச்சுக்கிட்டு இருந்தோம், தனபாலன். ஆனா, பசிக்கவே இல்லை :)

   Delete
 2. சிதம்பரம் தாண்டி பத்தாவது கிலோமீட்டரில், புத்தூர் ஜெயராமன் கடை என்றொரு அசைவ உணவகம் இருக்கிறது.கிராமத்து சாப்பாட்டுக் கடைதான், ஆனால் டேஸ்ட் சொல்லி மாளாது. அடுத்த தடவை பாண்டிச் சேரியிலெல்லாம் கை நனைக்காமல் இந்த கடையில் முயற்சித்துப் பாருங்க....சுத்தமெல்லாம் பார்க்காம சுவையை மட்டும் பார்த்தா அவசியம் தவறவிடக்கூடாத சாப்பாட்டுக் கடை இது. :)

  ReplyDelete
  Replies
  1. சரவணன் - நானும் இந்த கடையை பத்தி கேள்விப்பட்டிருக்கேன்.

   என்ன, ஊர் சுத்தி பார்க்கும் போது உடம்புக்கு ஒன்னும் ஆயிடக் கூடாதுன்னு கொஞ்சம் கவனமா சாப்பிட வேண்டியிருக்கு :(

   Delete
 3. புத்தூர் ஜெயராமன் கடை புராணம் இங்கே.... http://en.vikatan.com/article.php?aid=23194&sid=639&mid=33

  ReplyDelete
  Replies
  1. பார்க்க நல்லாவே இருக்கு. ஆனா, மிளகாப்பொடி கலரை பார்த்தாலே ...

   அழகாய் இருக்கு பயமாவும் இருக்கு :( என் தம்பியும் என் மகளும் வெளுத்திருப்பார்கள் :)

   Delete
  2. இவர்களின் மசாலா எல்லாம் வீட்டுத் தயாரிப்புதான், அதனால் தைரியமாய் சாப்பிடலாம்.

   Delete