Wednesday, June 19, 2013

பன்னீர் புஷ்பங்கள்

இன்று என் மகனின் பள்ளியில் நடக்கும் பட்டமளிப்பு விழாவிற்கு காலையில் இருந்தே சட்டை, பேன்ட் அயர்ன் பண்ணியாச்சா, டை எங்கே என்று நான் பரபரத்தாலும் அவன் எனகென்ன என்றே இருந்தான்:( ஒரு பக்கம் ஆறாவது முடித்து போவதற்கு இத்தனை ஆர்ப்பாட்டமா என்று தோணினாலும் மனதளவில் இந்த குழந்தைகளை நடுநிலைப்பள்ளிக்கு தயார் செய்வது போலத் தான் தோன்றியது. ஹ்ம்ம். அந்த காலத்துலே இப்படியெல்லாம் இருந்துச்சா என்ன என்று நினைத்தால் ரொம்ப வயசான மாதிரி தோணும். அதனால் அந்த நினைப்பை கை விட்டு விட்டு, மகனுடன் பள்ளிக்குச் சென்றேன். என்னை விட அவன் தான், டிக்கெட் வைத்திருக்கிறீயா, ஒன்பது மணிக்குத் தான் பெற்றோர்களுக்கு அனுமதி என்று சொல்ல நானும் நீ பாட்டுக்கு ஒன் கிளாசுக்குப் போ என்று அவனை அனுப்பி விட்டு, என்னை மாதிரியே வந்த பெற்றோர்களுடன் சேர்ந்து கொண்டு விழா நடக்கும் மைதானத்திற்குப் போய் மூன்றாம் வரிசையில் கணவருக்கும் மகளுக்கும் இடம் பிடித்து வைத்துக் கொண்டேன்.

நேற்று வரை பெய்த மழையின் சுவடே தெரியாமல் நீல நிற வானம் பளிச்சென்று குழந்தைகளை வழியனுப்ப வந்த மாதிரி இருந்தது. சில்லென்ற குளிர் காற்றுடன் காலை நேரம் நன்றாகவே இருந்தது.

அங்கிருந்த பெற்றோர்களுடன் எப்படி குழந்தைகள் வளர்ந்து இன்று நடுநிலைப் பள்ளிக்கும் போக தயாராகி விட்டார்கள் என்று காலம் தான் எப்படி ஓடி போச்சு, நல்ல வேலை மழை வந்து விழாவை கெடுக்கவில்லை என்று பேசிக் கொண்டிருந்தோம். என் மகனின் பல நண்பர்களின் அக்காவோ, அண்ணனோ என் மகளுடன் படித்ததால் அவர்களைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தோம். ஒன்பது மணி நெருங்கும் சமயத்தில் என் கணவரும் மகளும் வந்து சேர்ந்தனர். அவளும் அவளுடைய நண்பர்களின் பெற்றோர்களுடன் சிறிது நேரம் பேசி விட்டு எங்களுடன் வந்து அமர்ந்து கொண்டாள்.

'டான்' என்று ஒன்பது மணி ஆனவுடன் ஐந்தாம் வகுப்பு இசைக்குழு மாணவ மாணவிகள் இன்னிசை இசைக்க, பள்ளியிலிருந்து தலைமையாசிரியர், ஆறாம் வகுப்பு ஆசிரியர்கள் வரிசையாக வர அவர்களைத் தொடர்ந்து மாணவ மாணவிகள். மாணவிகள் கைகளில் பூங்கொத்து. மாணவர்களின் சட்டைகளில் பூக்கள் பின் செய்யப்பட்டு. ஒவ்வொரு குழந்தைகளும் முத்துக்கள் தான்.

மாணவிகள் எல்லாம் அழகான உடைகளில், பின்னல்கள் எல்லாம் டிசைனாக போட்டுக் கொண்டு கூட்டத்தைப் பார்த்து வெட்கத்துடன் கூடிய புன்முறுவலுடன் நடக்க, மாணவர்கள் ஒரு சிலர் நீட்டாக டிரஸ் செய்து கொண்டு, ஒரு சிலர் ஜாக்கெட் போட்டுக் கொண்டு, ஒரு சிலர் வாராத தலை மாதிரி ஸ்டைலுடன், (வணங்காமுடி!) சிலர் முடியை ஓட்ட நறுக்கிய தலையுடன் என்று வந்து அவர்களுக்கு உரிய சேர் அருகே நிற்க, அதற்குள் பெற்றோர் ஐ பேட், ஐ-போன், கேமரா மூலம் கிளிக் செய்து கொள்ள, தேசிய கீதத்துடன் விழா ஆரம்பமாகியது.

முதலில் பேசிய தலைமையாசிரியர் எப்போதும் போல், இந்த குழந்தைகள் சூப்பர், டூப்பர் என்று பேசி விட்டு போக, ஒரு மாணவி கே.ஜி. முதல் ஆறாம் வகுப்பு வரை நடந்த நிகழ்வுகளை நகைச்சுவையுடன் சொல்ல, ஐந்து மாணவிகளுக்கு ஸ்பெஷல் அவார்ட் கொடுத்தார்கள். ஒரு ஆசிரியர் தன் வகுப்பில் இருந்த மாணவி இன்று நம்முடன் இல்லை என்று அந்த மாணவியை பற்றி மனம் வருந்தி கொண்டே சொன்னது கேட்க மனம் கனத்து போனது.

அதற்குப் பிறகு இன்னிசைக் கச்சேரியும் எல்லோருக்கும் பட்டமும் கொடுத்து முடிக்க, பெற்றோர்களும், தாத்தா,பாட்டி,உறவினர்களும் ஆரவாரத்துடன் கைத்தட்ட மாணவர்கள் மீண்டும் பள்ளிக்குத் திரும்ப நாங்களும் மற்ற பெற்றோர்களுடன் பேசிக்கொண்டே பள்ளிக்குத் திரும்பினோம். பல பெற்றோர்களும், பாட்டிகளும் தங்கள் குழந்தைகளுக்கு பரிசுகள் கொண்டு வந்திருந்தார்கள்! நண்பர்களுடன் படங்கள் எடுத்துக் கொண்டு எல்லோருக்கும் பை பை சொல்லிவிட்டுத் திரும்பியாச்சு. மதியம் பிக்னிக். அங்கு போய் ஜாலியாக விளையாடி விட்டு வருவான்.

முதன் முதலில் ஐந்து வயதில் விரல் பிடித்து உள்ளே நுழைந்தது முதல் இன்று வரை நடந்த நிகழ்வுகள் எல்லாம்...

கின்டர்கார்டன் ஆசிரியை 32 வருடங்களாக பணிபுரிந்தவர். நொடியில் குழந்தைகளை அவர் வழிக்கு கொண்டு வந்து விட்டார். ஏற்கெனவே பழகிய நண்பர்களுடன் என் மகனுக்கும் நாட்கள் சந்தோஷமாக கழிந்தன. அம்மாவிற்கு எல்லாம் தெரியும் என்று நம்பிய காலம்:)

முதலாண்டு வகுப்பில் அவனுக்கு அழகான இளவயது ஆசிரியை. ஆரம்பத்தில் அவரை பார்த்து வெட்கப்பட்டு பேச மாட்டேங்கிறான் என்ற போது புது மனிதர்களிடம் சிறிது காலம் ஆகும், நீங்கள் அவன் பேசுவதை நிறுத்த மாட்டேங்கிறான் என்று சீக்கிரம் சொல்லி விடுவீர்கள் என்று சொல்லி விட்டு வந்தேன். அவர் வகுப்பில் Fact Vs Opinion எழுதச் சொல்ல, All schools have big doors is a fact. Ms.Albaneese is beautiful is an opinion என்று என் மகன் எழுதியதை பள்ளி முழுவதும் ஆசிரியர்களிடம் காட்டி அவர் சிரித்துக் கொண்டிருக்கும் பொழுது நான் போக, என்னிடமும் காட்டி சிரிக்க, நிதினும் நான் இன்று பிரபலமாகி விட்டேன் என்று பெருமையுடன் வீட்டுக்கு வந்தான். Ms.Albaneese வகுப்பாசிரியரின் பெயர்!

அதற்குப் பிறகு இரண்டு வருடங்கள் கூத்தும் கும்மாளமுமாக ஓடி விட்டது. நான்காம் வகுப்பு ஆசிரியை உன்னால் இன்னும் நன்றாக செய்ய முடியும் என்று ஊக்கமளித்து ஆங்கிலத்தில் அவனுடைய comprehension skillsஐ வளர்த்தார். flute வாசிப்பிலும் அவனுடைய மியூசிக் டீச்சரின் கவனத்தை ஈர்த்தான். ஐந்தாம் வகுப்பில் கொஞ்சம் படிக்க ஆரம்பித்து, நடுவில் போர் அடிக்கிறது பள்ளிக்குப் போக பிடிக்கவில்லை என்று ஆரம்பித்து பஸ்ஸில் nerd என்று சொல்லி தொந்தரவு செய்த மாணவனை ஒரு வழி பண்ணி என்று முடிந்தது. ஆறாம் வகுப்பில் ஆசிரியர்களே வியக்கும் வகையில் பொறுப்புடன் படித்து மீண்டும் நல்ல பிள்ளை பேர் எடுத்து...ஹ்ம்ம்..

மதிய சாப்பாடுஎடுத்துப் போக மறந்தது, வீட்டுப்பாடம் மறந்தது, சட்டையை inside out போட்டுப் போனது, எப்படா பனி மழை கொட்டும் லீவு கிடைக்கும் என்று ஏங்கியது, மார்க் குறைந்தால் கேள்வித்தாளில் தான் பிரச்சினை என்று ஏதாவது சாக்கு போக்கு சொன்னது, உடம்புக்கு முடியலை என்று பல முறை பள்ளிக்கு மட்டம் போட்டது,  என் அம்மாவும், பெரியம்மாவும் வரும் பொழுது முடிந்த வரை பள்ளிக்கு மட்டம் போட்டது, பள்ளி விட்டு after school care போகாமல் மறந்து போய் வீட்டுக்கு வந்தது என்று ஒன்றா, இரண்டா எடுத்துச் சொல்ல...

சுப்பிரமணியின் முகத்தில் அப்பாடா முடிந்தது இந்த ஆரம்பப்பள்ளி வாசம் என்ற நிம்மதி இருந்தது!  எனக்கும் தான் :)

இதற்குப் பிறகு நடுநிலைப்பள்ளி ..ம்ம்ம். எனக்கென்ன மனக்கவலை என்ற ரேஞ்சில் தான் என் மகன் இப்போது...இதுவும் கடந்து போகும்.

Tuesday, June 18, 2013

கும்பகோணம்

 சுவாமிமலை முருகனின் அழகான தரிசனம் முடிந்து வெளியே வந்து சூரியனார் கோவிலுக்குப் போகலாம் என்று முடிவெடுத்து வழி கேட்டுக் கொண்டு போனோம். வழியில் பச்சை பசேலென்று வயல்வெளிகள் கண்ணுக்கு குளிர்ச்சியாக! தெருக்களும் ஓரளவு சுத்தமாக இருந்தது. குடிசையோ, கட்டிடமோ தொலைகாட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்க 'டிஷ்' வைத்திருக்கிறார்கள். கிராம வாசனை இன்னும் கொஞ்சம் இருக்கிறது இந்த பக்கங்களில். வழி கேட்டால் நின்று நிதானமாக சொல்கிறார்கள்.

கும்பகோணத்தில் கோவில் கோபுரங்கள் எல்லாம் பெரியதாக இல்லாமல் பார்ப்பதற்கு வித்தியாசமாக இருந்தது. சமீபத்தில் தான் குடமுழுக்கு முடிந்திருக்கும் போல. கண்ணைப் பறிக்கும் வண்ணங்களில் கோபுரங்கள்.

சூரியனார் கோவில் கோபுரம் ஐந்து நிலைகளே கொண்ட சிறிய கோபுரம். மிகவும் பழமையான கோவில்.சிவன், அம்மன் சன்னிதானங்கள் தவிர்த்து மற்ற சந்நிதிகளின் அருகில் சென்று பார்த்தால் சிலைகளின் நிலை தெரிகிறது. நல்ல கூட்டம். நவக்கிரகங்கள், சண்டிகேஸ்வரர், துர்க்கை - எல்லோருக்கும் சிறு சிறு சன்னிதானங்கள். மேடும் பள்ளமுமாக கோவில் பிரகாரங்கள். சில இடங்களில் வழுவழு வென்று மொஸைக் போட்ட தளங்கள். பரிகாரம் செய்ய வந்தவர்கள் கூட்டம் அர்ச்சகர்களை நோக்கி படையெடுத்துக் கொண்டிருந்தார்கள். சுவாமியை கும்பிட்டு விட்டு சிறிது நேரம் கோவிலை வலம் வந்து விட்டு வெளியில் வரும் பொழுது எரிச்சல் இல்லாத ஆனால் 'பளிச்'சென்ற வெயில்.

கோவில் தெருவில் சூடான பஜ்ஜி, வடை வண்டிகள் முதல் பூக்காரர்கள், கடைகள், கோவிலுக்கு வந்த ஐயப்ப பக்தர்களின் கூட்டம் என்று அந்த காலை வேளையிலும் கலகலப்பாக இருந்தது.

அடுத்து சுக்கிரனின் ஸ்தலமான கஞ்சனூர் அருகில் இருப்பதால் அங்கு போகலாம் என்று தீர்மானித்தோம். வரும் வழியில் மைதானத்தில் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்கள். இளநீர் வண்டியும், இலந்தைப்பழமும் கோவில் தெருவில் வரவேற்க, கோவிலுக்குப் போய் விட்டு வந்து பார்த்துக் கொள்வோம் என்று கோவிலுக்குள் நுழைந்தோம்.

கஞ்சனூர்
இந்த கோவிலும் கிட்டத்தட்ட சூரியனார் கோவில் மாதிரியே இருந்தது. சின்ன கோபுரம். மூலவர், அம்மன், விநாயகர், நவகிரகங்கள், சண்டிகேஸ்வரர் என்று வரிசையாக. என் மகளுக்கு ஒரு வழியாக அடுத்து எந்த சந்நிதானம் வரும் என்ற அளவில் தெரிய ஆரம்பித்து விட்டது! சுவாமி தரிசனம் முடித்து சிறிது நேரம் கோவிலில் அமர்ந்து விட்டு வெளியில் வந்தோம். இளநீர் சாப்பிட்டு விட்டு, நடுநடுவில் பாசி படர்ந்த குளங்களை கடந்து அடுத்து திருநாகேஸ்வரம் சென்றோம்.
 
திருநாகேஸ்வரம்
திருநாகேஸ்வரம் ராகுபகவான் ஸ்தலம் என்பதால் இங்கு கொஞ்சம் கூட்டம் அதிகமாகவே இருந்தது. கோவில் வாசல் அலங்காரமும் நன்றாகவே இருந்தது. நுழை வாயிலிலே கொடிமரமும், கோவில் பிரகாரமும், கோவில் குளமும், நீண்ட மண்டபங்களும் என்று கொஞ்சம் பெரிய கோவில், சைவப் பெரியார்களால் பாடப் பெற்ற ஸ்தலம் என்று அறிவிப்பு பலகையில் எழுதியிருந்தார்கள். ராகு பகவான் நாகவல்லி மற்றும் நாககன்னி என்று அன்னைகளுடன் மங்களகரமாக காட்சி தந்து கொண்டிருக்கிறார். அங்கு பூஜை செய்து முடித்து விட்டு சிறிது நேரம் அமர்ந்து ஆசுவாசப் படுத்திக் கொண்டோம்.

மெதுவாக பசிக்க ஆரம்பித்து விட்டது. சாப்பிடலாம் என்று தீர்மானித்து நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலின் அருகில் கும்பேஸ்வரர் கோவில் போகும் வழியில் இருந்த ஸ்ரீ மங்களாம்பிகா விலாஸ் உணவகத்திற்கு போகலாம், வீட்டு சாப்பாடு மாதிரியே நன்றாக இருக்கும் என்று என் தம்பியும் சொல்ல, சரியென்று அங்கு போனோம். காரை ஹோட்டலில் நிறுத்தி விட்டு, கடை வீதி வழியாக போனோம். சின்ன சின்ன கடைகள் ஏராளம். பொங்கலை முன்னிட்டு பளபள பித்தளை, செம்பு பொங்கல் பானைகள் பாத்திரக் கடைகளின் முன் அழகாக அடுக்கி வைத்திருந்ததைப் பார்க்க நன்றாக இருந்தது. செருப்புக் கடைகள், வாட்ச், சேலை, நகைக்கடைகளைத் தாண்டி கோவில் சந்தில் நுழைய பாசிமணி கடைகளைத் தாண்டிப் போனால் ஸ்ரீ மங்களாம்பிகா விலாஸ் வருகிறது.

கல்லாவில் அமர்ந்திருந்தவர் பார்க்க சௌராஷ்டிரா போல இருந்தார். உள்ளே போனோம். ஒரு வயதானவர் வந்து இலையைப் போட்டு விட்டு என்ன வேண்டும் என்று கேட்க, நாங்களும் என்ன இருக்கு என்று கேட்டு விட்டு காத்திருந்தோம். அங்கு வேலைப் பார்ப்பவர்கள் இருவர் சௌராஷ்ட்ராவில் உரையாடுவதை கேட்க சந்தோஷமாக இருந்தது. நாங்களும் சௌராஷ்ட்ராவில்  பேசுவதை பார்த்து எந்த ஊர் என்று விவரம் கேட்டு சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள்.

ஒரு கூட்டு,ஒரு பொரியல், ஊறுகாய், அப்பளம், சுடச்சுட வெள்ளரிசி சாதம் வர, சாம்பார், ரசம், தயிர், கட்டித்தயிர் கேட்டு வாங்கிச் சாப்பிட்டோம். பாயசம் வரும் என்று ஏமாந்தேன் :( மிகவும் சிம்பிள் ஆனால் சுவையாக இருந்தது. இலையில் சப்புக் கொட்டி சாப்பிடுவதும் ஒரு சுகம் தான் :)  ரொம்பவே சாப்பிட்ட மாதிரியும் இருந்தது :)


வெளியில் கோவில் வாசலில் யானையை பார்த்தவுடன் என் மகளுக்கு அருகில் சென்று பார்க்க வேண்டும் என்று ஆசை வர, அருகில் போய் பார்த்தோம். அங்கேயே ஒரு பெண்மணி ஒரு தட்டில் பீன்ஸ், முட்டைகோசு இன்னும் பிற காய்கறிகளை வைத்து யானைக்கு என்று விற்றுக் கொண்டிருந்தார். பாகனும் யானைக்கு காய்கறிகள் தான் கொடுக்க வேண்டும் என்று சொல்ல நாங்களும் வாங்கிக் கொடுத்தோம். வாழைப்பழம் இப்போதெல்லாம் கொடுப்பதில்லை யானைக்கு சர்க்கரை நோய் வந்து விடுகிறது என்று சொன்னார்!!! பரவாயில்லை, யானையும் டயட்டில் இருக்கிறது என்று பேசிக்கொண்டே வர, அமெரிக்க நேரப்படி இரவு நேரம் - மெதுவாக தூக்கமும் வருவது மாதிரியும் இருந்தது :) உண்ட மயக்கம் வேறு. கொஞ்ச நேரம் ஒய்வு எடுத்து விட்டு மீண்டும் கோவில்களுக்குப் போகலாம் என்று நினைத்துக் கொண்டு ஹோட்டலுக்குத் திரும்பினோம்.

Wednesday, June 5, 2013

கும்பகோணம் - சுவாமிமலை

 மகாமக குளம் பார்த்த திருப்தியில் புது வருட நாளில் முருகனின் அறுபடை வீடுகளில் இதுவரை பார்த்திராத சுவாமிமலைக்குப் பயணமானோம். அதிகாலைப் பயணம் என்றுமே சுகம் தான். சாலையில் நெரிசல் இல்லை. வாசல் தெளித்து 'பளிச்' என்றிருக்கும் கோலம் போட்ட தெருக்கள். மெல்லிய மார்கழி மாத வருடும் காற்று. இளம் வெயில்...

கும்பகோணம் பஸ் நிலையம் அருகில் ஒரு சந்தில் இருந்த ஹோட்டலில் சுடச்சுட இட்லி, வடை, பூரி, தோசை, வெண்பொங்கல், கமகமக்கும் சூடான கும்பகோணம் பில்டர் காபியையும் சுவைத்து விட்டு சுவாமிமலைக்கு வழி கேட்டுக் கொண்டோம். பெரும்பாலான உணவகங்களில் வண்டிகள் நிறுத்தும் இடத்தில் ஒருவர் இருப்பதால் அந்த சிறிய தெருக்களில் இருந்து வண்டியை எடுக்கவும் வைக்கவும் அவர் உதவியுடன் கொஞ்சம் எளிதாக இருக்கிறது. மீண்டும் குறுகிய தெருக்களின் வழியே வெளியே வந்து பயணத்தை தொடர்ந்தோம்.

பெரும்பாலான வீடுகளில் முருங்கை மரம் நன்கு காய்த்துப் பச்சைப் பசலேன இருந்தது. பல வீடுகள் பச்சை வண்ணம் அடித்து முன்னிருக்கும் தாழ்வாரங்களை மாற்றி கட்டி இருந்தார்கள். உள்ளே முஸ்லிம் பெண்கள் அமர்ந்திருக்க, பழைய இந்துக்கள் குடியிறுப்பு மாறியிருந்ததை காட்டிற்று. பல வீடுகளும் இப்படி உருமாறிப் போயிருக்கிறது! நிறைய பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் கும்பகோணத்தை சுற்றி !!!

வெகு சீக்கிரத்தில் கோவிலை அடைந்து விட்டோம். கோவில் இருந்த தெருவில் டூரிஸ்ட் பஸ்கள், வேன்கள், கார்கள் வரிசையாக நின்று கொண்டிருக்க, நாங்களும் காரை ஓரிடத்தில் நிறுத்தி விட்டு கோவிலை நோக்கி போனோம். வாசலில் பூ மற்றும் அர்ச்சனைப் பொருட்களையும் வாங்கிக் கொண்டு, குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்று கேள்விப்பட்டோமே இந்தக் கோவில் அப்படி தெரியவில்லையே என்று நினைத்தது என் தவறு என்று உள்ளே நுழைந்தவுடன் தெரிந்து கொண்டேன்.

அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பையா இந்த சுவாமிமலை குமரன்(தகப்பன் சுவாமி) என்று ஐதீகம். குமரனைப் பார்க்க அறுபது படிகளை ஏறிப் போக வேண்டும். இந்தப் படிகள் அறுபது தமிழ் வருடங்களை குறிப்பதாக சொன்னார்கள். ஸ்பெஷல் தரிசன டிக்கெட் வாங்கிக் கொண்டு மிக அருகில் சென்று முருகனை தரிசித்தது மிகவும் நன்றாக இருந்தது. திருப்பரங்குன்றத்தில் உட்கார்ந்த நிலையில், பழமுதிர்ச்சோலை, பழனி, திருச்செந்தூரில் நின்ற வடிவில் சிறிய உருவில் இருக்கும் முருகன் இங்கு அழகாக, தீர்க்கமாக  நின்ற நிலையில் சற்று பெரியதாக இருப்பதாக தோன்றியது எனக்கு.

அங்கிருந்த மற்ற சன்னதிகளில் சிவன், பார்வதி, துர்க்கை, சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள், தட்சிணாமூர்த்தி, விநாயகர் என்று எல்லோரையும் வணங்கி விட்டு சிறிது நேரம் கோவிலை சுற்றி வந்தோம். மேலே கோபுரம் அருகில் வரை போக முடிகிறது. அதற்குள் கூட்டமும் வர ஆரம்பித்து விட்டது.

ஆங்கில புத்தாண்டின் துவக்கத்தில் நல்ல அருமையான தரிசனம் பார்த்த திருப்தியில் வெளியே வந்தோம் . கூட்டமும் வர ஆரம்பித்து விட்டது.

வெளியில் வந்து சிவ சூரியனார் கோவிலுக்குப் போகும் வழியில் பொங்கல் அறுவடைக்குத் தயாராக நெற்பயிர்கள் என்று வயல் வெளியை தாண்டி வந்தோம். பார்க்கவே மிகவும் நன்றாக மகிழ்ச்சியாக இருந்தது. அந்த இடங்கள் எல்லாம் இன்னும் அந்த கிராம வாசனையுடன்!!!!

சிறு குடிசைகளாக இருந்தாலும் வாசல்கள் தெளித்து வண்ணக்கோலங்களுடன். விடுமுறை நாளில்  சோம்பேறித்தனத்துடன் தூங்கி வழியும் முகத்துடன்  தெருவில் விளையாடும் குழந்தைகள், நட்ட நடு சாலையில் நின்று உரக்கப் பேசிக் கொண்டு வரும் வாகனங்களுக்கு வழிவிட்டு விட்டு மீண்டும் பேசுவதை தொடரும் தலையில் முண்டாசு கட்டிக் கொண்ட  மனிதர்கள், மார்கழி மாத குளிருக்கு(!!!), பனிக்கு முக்காடு போட்டுக் கொண்டு பெண்கள், குரங்கு குல்லா போட்டுக் கொண்டு குழந்தைகள் ,   சாலையின் ஓரத்தில் எனக்கென்ன என்று அசை போட்டுக் கொண்டே உட்கார்ந்திருக்கும் கால்நடைகள், கோவிலுக்குப் போகும் பேருந்துகள், கார்கள், பைக்குகள் என்று அந்த சிறு சாலையே பரபரப்புடன்!

நாங்களும் வழியில் நிறுத்தி பசும்வயல்வெளிகளை கண்கொள்ளா பரவசத்துடன் பார்த்தும் படமெடுத்துக் கொண்டும் ஒரு வழியாக சிவசூரியனார் கோவிலுக்கு வந்து சேர்ந்தோம். எங்களுக்கு முன்னே அய்யப்ப பக்தர்கள் கூட்டம் படையெடுத்துக் கொண்டிருந்தது.



Saturday, June 1, 2013

கும்பகோணம் - மகாமக குளம்

ஆங்கில வருடப்பிறப்பு அன்று அதிகாலையில் நானும் என் மகளும் தயாராக இருப்பதைப் பார்த்து இப்பிடியா, ஆறு மணின்னா ஆறு மணிக்கு டான்-னு ரெடியாவிங்க என்று வியந்து கொண்டே என் தம்பியும் தயாரானான்*:) happy  அதற்குள் காபியும் வந்து விட, குடித்து முடித்து விட்டு, முதலில் மகாமககுளத்திற்குப் போக வேண்டும் என்று நேரே அங்கு போனோம். அப்பொழுது தான் விடிந்து கொண்டிருந்தது.

முதல் நாள் இரவு புதுவருட கொண்டாட்டத்தை தெருவில் சேர்ந்திருந்த குப்பைகள் உணர்த்தின. பட்டாசுக் குப்பைகள், குடித்து விட்டுப் போட்ட பாட்டில்கள், கோகோ கோலா பிளாஸ்டிக் பாட்டில்கள், பேப்பர் குப்பைகள் என்று தெருவே குப்பை மயம்! குளத்தைச் சுற்றி குப்பையை எடுத்துச் சுத்தம் செய்பவர்கள் கையில் விளக்குமாறுடன்!

குளத்தைச் சுற்றி ஹோட்டல்களின் பெயர்கள் எல்லாம் அந்த இன்(Inn), இந்த இன், பிளாசா என்று ஒரே மாடர்ன் மயம்! பார்க்க டீசண்டாக இருக்கிறது.

கோவிலிலிருந்து ருத்ரம் கேட்கவே சுகமாக இருந்தது. காசிவிஸ்வநாதர் கோவில் குடமுழுக்குப் பணிக்காக கோபுரத்தை மூடியிருந்தார்கள். மெதுவாக குளப்படிக்கட்டுகளில் இறங்கி உள்ளே போனோம்.

மகாமகம் அன்று அந்த குளத்தில் தீர்த்தம் கூட தெரியாத அளவில் மக்கள் கூட்டம் இருந்ததை தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன். சில இடங்களைப் பார்த்தவுடன் மனதில் தோன்றும் ஒரு இனம் புரியாத பரவசம் அந்த இடத்தில் எனக்கும். பல புண்ணிய நதிகள் சங்கமிக்கும் இடம் என்பதாலா?

பெரிய குளம். நீண்ட படிக்கட்டுக்கள். அதிகாலையில் தண்ணீருடன் குளத்தைப் பார்க்க ரம்மியமாக இருந்தது. புண்ணியத் தீர்த்தம்!

ஒன்பது மண்டபங்கள் குளத்தைச் சுற்றி. ஓடுகள் வேய்ந்த  திண்ணைகளுடன் அக்ரஹாரத்து வீடுகள்,  காலையில் குளத்தில்  நீராடிக் கொண்டே சந்தியாவந்தனம் செய்யும் மக்கள், தலையில் நீரை தெளித்துக் கொள்பவர்கள், கோவிலுக்குச் செல்பவர்கள், வாசலைப் பெருக்கி நீர் தெளித்துக் கோலம் போடுபவர்கள், கடையை திறப்பவர்கள், இவர்களைப் பார்த்துக் கொண்டே சூரிய பகவானும் வெளிவர என்று மெதுவாக பொழுது புலர ஆரம்பித்து விட்டது.

அமேசிங் பிரிட்டன் -5- இன்வெர்னஸ் & ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ் பயணக்குறிப்புகள்

சொல்வனம் இதழ் 313ல் வெளிவந்துள்ள 'அமேசிங் பிரிட்டன்' பயணக்கட்டுரைத் தொடரின் ஐந்தாவது பாகம்.   இன்வெர்னஸ் & ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ்...