Saturday, July 13, 2013

தஞ்சாவூர் - பிரகதீஸ்வரர் கோவில்


பள்ளியில் படிக்கும் பொழுது பார்த்த தஞ்சாவூரை மீண்டும் பார்க்க வேண்டும் என்ற ஆவல் வர, தஞ்சாவூரும் பயணத்திட்டத்தில் சேர்ந்து கொண்டது. அதுவும் இல்லாமல் என் மகளுக்கு அந்த ஆயிரம் வருட பிரமாண்ட கோவிலையும் அதன் அழகையும், கலைஞர்களின் திறமையையும், கலைப் பொக்கிஷத்தையும் அவளும் பார்க்க வேண்டும், தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசையும் காரணமாக, தம்பியுடன் தஞ்சாவூருக்குப் பயணமானோம்.


தஞ்சாவூர் என்றதும் பச்சைப்பசேல் என்ற விளைநிலங்களும், காவிரி ஆறும், தஞ்சாவூரின் பெரிய கோபுரமும், பெரிய்ய்ய்ய்ய நந்தியும், ராஜராஜ சோழனும், தலையாட்டி பொம்மையும், தஞ்சாவூர்  ஓவியங்களும் என்று ஒரு பெரிய லிஸ்டே கண்ணில் நர்த்தனமாடும். இந்த முறை திருக்கருக்காவூர் கோவிலுக்குப் போய் விட்டு மண் ரோடு, தார் ரோடு என்று பல ரோடுகளையும், ரோட்டின் நடுவில் நின்று எனக்கென்ன என்று பேசிக்கொண்டிருந்த மக்கள் கூட்டத்தையும் தாண்டி காலை நேரத்தில் போனதும் சுகமாகத் தான் இருந்தது.

வழியில் ஒரு கல்லூரி அருகே நடந்திருந்த விபத்தை கடந்து போகும் பொழுது வருத்தமாக இருந்தது. யாரோ, எவரோ, கிராமத்து ஜனங்கள் சுற்றிலும் நின்று கொண்டிருக்க, ஆம்புலன்சும் வந்து சேர, ஒரு வயதான பெண்மணி நெஞ்சில் அடித்து அழுது கொண்டே வர, அவரை சுற்றிலும் ஒரு கூட்டம். ஏதோ பெரியதாக ஒன்று நடந்திருந்தது என்று மட்டும் புரிந்து கொள்ள முடிந்தது. அதற்குள் அங்கிருப்பவர்களே வண்டிகளை நெரிசலில் இருந்து மீட்டு அனுப்பிக் கொண்டிருந்தார்கள். போலீஸ் வெறுமனே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது :(

எப்படியோ அங்கிருந்து கிளம்பி, வழி கேட்டு தஞ்சாவூருக்குள் நுழைந்தோம். பஸ் நிலையம் அருகிலேயே கோவில் இருக்கிறது. காரை ஓரிடத்தில் நிறுத்தி விட்டு, நடக்க ஆரம்பித்து விட்டோம். பார்த்த உடனேயே மனதில் 'பச்'சென்று ஒட்டிக் கொள்ளும் கோபுரத்தின் அழகு! கோவிலை சுற்றி இருக்கும் சுவர் முழுவதும் சின்ன சின்ன ஒரே அளவிலான நந்திகள். சில சேதராமான நிலைகளில்:( நுழைவாயிலில் செம்மண் கலரில் சின்ன அகண்ட கோபுரம், அருகே கோவிலைப் பற்றிய விளக்கங்கள், கோவிலை சுற்றிக் காட்டும் பல மொழிகள் பேசும் கைடுகள்!, அவர்கள் பேசிய கொச்சையான ஹிந்தி, ஆங்கிலம்! கோவிலுக்கு வந்த மேலை நாட்டு மக்கள், உள்ளூர் மக்கள் என்று அந்த காலை வேளையிலும் கூட்டம். செருப்புக்கள் வைக்க ஓரிடம். வைத்து விட்டு கல்தரையில் நடக்க நன்றாக இருந்தது. வாசலில் வெள்ளையம்மாள்-அதாங்க கோவில் யானை, கரும்பு இலைகளை சாப்பிட்டுக் கொண்டே, ஆசீர்வாதமும் செய்து கொண்டிருந்தது.


உள்ளே நுழைந்தவுடன் தெரியும் பிரமாண்டம், மனதை கொள்ளை கொள்ளும். பரந்த இடத்தில் நேர்த்தியாக கட்டப்பட்ட மண்டபகங்கள் இடப்புறத்திலும், எதிர்த்தாற்போல் கொடிக்கம்பமும், பெரிய நந்தியும், நிமிர்ந்தால் சோழர்களின் கலை நேர்த்தியுடன் கம்பீரமாக காட்சியளிக்கும் கோபுரமும் மனதை மயக்குகிறது. மெதுவாக ஒவ்வொன்றையும் ரசித்துக் கொண்டே முதலில் கொடிக்கம்பத்தை வணங்கி விட்டு, பெரிய நந்தியை முன்புறம் சென்று பார்த்தோம்.

எவ்வளவு பெரிய நந்தி! வழுவழுவென்ற தீர்க்கமான உருவச்சிலை! அந்த பெரிய உருவமே 'ஆ' என்று வாயை பிளக்க வைத்து விடும்! நந்திக்காக நிறைய தூண்களுடன் கூடிய ஒரு மண்டபம். தூண்களை கூர்ந்து நோக்கினால் அழகிய கலை நயங்களுடன் கூடிய சிற்பங்கள்! ஒவ்வொரு தூணையும் ஆராய்ந்து பார்த்தால் அதனுள்ளே இருக்கும் கலைநயங்கள் வியக்க வைக்கும்! அங்கு அவரை வணங்கி விட்டு, கல் படிகளில் ஏறி கோவிலுக்குப் போனால், அவ்வளவு பெரிய சிவலிங்கத்தை காணக் கண் கோடி வேண்டும். அந்த பிரமிப்பு போக பல நிமிடங்கள் பிடித்தது. சிறு வயதில் பார்த்தது நினைவிருந்தாலும், இப்பொழுது பார்க்கும் போது இன்னும் பல மடங்கு ஆச்சரியமாக இருந்தது.


விபூதி பிரசாதம் வாங்கி கொண்டு, கோவிலை சுற்றி வருகையில் பெரிய கோபுரம் பல கேள்விகளை மனதில் எழுப்புகிறது. அதன் கலை அழகும், நேர்த்தியும், ஒரே கல்லில் செய்த விமான மகுடமும் அந்த காலத்தில் எவ்வளவு திறமையான கட்டிட, கலை வல்லுநர்களும், அவர்களை கௌரவித்த அரசர்களும், அவர்களுடைய வாழ்க்கையும் எப்படி இருந்திருக்கும் என்ற நினைப்பு வருவதை மறுப்பதற்கில்லை. எப்படி இவ்வளவு பிரமாண்டமான கோவிலை கட்டியிருப்பார்கள்? இந்த கால கட்டத்தில் இது ஒரு பெரிய சவாலான விஷயம் தான்!

இதே போல் தான் யாளியும்! நான் பார்த்த அநேக கோவில்களில் யாளியின் சிலைகள் தவறாமல் இருந்தது. அதன் பின்னணி தான் இன்னும் புலப்படவில்லை எனக்கு. யாளியும், சிங்க முகங்களுடன் கூடிய சிலைகளும் பார்க்க நன்றாக இருந்தது. ஓரிடத்தில் லிங்கங்கள் வரிசையாக! முருகன், விநாயகர் சன்னிதானங்கள் எல்லாம் கலைநயத்துடன்!

மண்டப நுழைவாயில்களில் யானை சிற்பங்கள். குழந்தைகள் அதன் மேல் உட்கார்ந்து கொண்டு விளையாடி கொண்டிருந்தார்கள். சில இடங்களில் குதிரை, யானை, துர்க்கை என்று பல சிற்பங்களின் கால்கள்/முகங்கள் உடைந்த நிலையில்:( பல சிற்பங்களையும், உடைந்த பாகங்களையும் மிகவும் கஷ்டப்பட்டு சேர்த்து ஓட்ட வைத்திருந்தார்கள். மண்டபகங்களின் மேல் வண்ண வண்ண சித்திரங்கள்! கோவில் சுவர்களில் பலவிதமான சிற்பங்கள், கடவுள்களின் உருவங்கள். செதுக்கி எடுத்த சிற்பங்கள். இப்படியே வலம் வந்தால் அம்மனுக்கு ஒரு மண்டபம். கம்பீரமான அழகிய அம்மன்.

மேல்நாட்டுக்காரர்கள் ஒரு குழுவாக வந்திருந்தார்கள். கோவிலை வளைத்து வளைத்து படம் பிடித்துக் கொண்டிருந்தார்கள். மெதுவாக பேச்சுக் கொடுத்துப் பார்த்ததில் இஸ்ரேல், ஜெர்மனியிலிருந்தும் வேறு பல நாடுகளில் இருந்தும் வந்திருக்கிறார்கள் என்று தெரிந்தது.

கோபுரங்களைப் பற்றியும், இந்த கோவிலைப் பற்றியும் படிக்க படிக்க மிகவும் சுவாரசியமான தகவல்கள் கிடைக்கிறது! இப்படியே கோவிலைச் சுற்றிசுற்றி வந்தாலும் அலுப்பதில்லை. புற்கள் போட்டு நன்றாக பராமரித்திருக்கிறார்கள். தொல்துறையினரின் கீழ் இந்த கோவில் பராமரிக்கப்பட்டு வருவதால் சுத்தமாக வைத்திருக்கிறார்கள். அங்கேயே சூப்பராக லெமன் சாதம், புளியோதரை, முறுக்கு, அதிரசம் பொட்டலம் போட்டு விற்கிறார்கள்.

வெளியில் வந்து என் மகள் யானை மேல் ஏற ஆசைப்பட அதையும் விடுவானேன்! அவளுக்கும் என்னைப் போன்றே மலைப்பு! தஞ்சாவூரில் இன்னும் பார்க்க பல இடங்கள் இருக்கிறது. மெதுவாக இன்னுமொருமுறை போக வேண்டும்.

ஆனால் வீட்டு நினைப்பு வந்து விட, மதுரைக்குப் போகலாம் என்று முடிவெடுத்து, அம்மாவிடம் சூப்பரான சமையல் செய்யுமாறு சொல்ல, அவரும் மகன், மகள்,பேத்தி வருகிறார்கள் என்றவுடன் எல்லோருக்கும் பிடித்த சமையலை செய்து விடுகிறேன், பார்த்து கவனமாக வந்து சேருங்கள் என்று சொல்ல, இன்னொரு தம்பிக்கும் நாங்கள் சீக்கிரமே வீடு திரும்பி விடுவோம், நீயும் வேலையை முடித்து ஊருக்கு வந்து விடு என்று சொல்லி விட்டு கார் நிறுத்தத்திற்கு திரும்பினோம்.

இதற்குள் உச்சி வெயில் மண்டையை பிளக்க! வெளியில் வந்தால் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையை அநியாய விலையில் விற்றுக் கொண்டிருந்தார்கள். மாங்காய், வெள்ளரியை விதவிதமாக நறுக்கி, மிளகாய்த்தூளைப் போட்டு விற்றுக் கொண்டிருந்தார்கள். என் தம்பி, வேணுமா என்று கேட்க, சாப்பிட ஆசையாக இருந்தாலும், மதுரை போகும் வரையிலாவது பத்திரமாக இருக்க வேண்டும், நீ மட்டும் போய் சாப்பிடு என்று சொல்லி விட்டு, அவன் நறுக்மொறுக் என்று சாப்பிடுவதை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டே நெடுஞ்சாலையில் சங்கமித்தோம்.


சோழர்களின் கலைநாட்டம், பெரிய கோவில், அழகான சிற்பங்கள்...ஒரு நல்ல கோவிலை பார்த்த திருப்தியில் மதுரைக்குப் பயணமானோம்.

நல்ல சுள்ளென்ற வெயில். என் மகள் தூங்கியும் விட்டாள். வந்து இறங்கியதிலிருந்து சென்னையில் இதுவரை காணாத மழை பற்றியும், மார்கழி மாத காலைப் பனியும், புயல் காரணமாக பெய்த மழையில் தெளித்து விடப்பட்டிருந்த சாலைகளும், களைப்பைத் தராத வெயிலும், கண்ணுக்கினிய கோவில்களும், தெய்வ தரிசனங்களும், நண்பர்களின் சந்திப்பும் என்று பேசிக் கொண்டே வந்தோம். என் தம்பிக்கும் இந்த ட்ரிப் ஆனந்தமாக இருந்தது என்று அவனும் சந்தோஷமாக இருந்தான்.

கல்லிலே கலை வண்ணம் கண்டான் - எவ்வளவு உண்மை!

தஞ்சாவூரைக் கடக்கும் பொழுது, மோகமுள், பொன்னியின் செல்வன் மீண்டும் படிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

வரும் வழியில் தனியார் கல்லூரிகள் பல கடந்து வந்தோம்!!!!திருச்சி அருகே வரும் பொழுது நகர சந்தடி, போக்குவரத்து நெரிசல், திடீரென்று வெயில் அதிகமான மாதிரி ஒரு எண்ணம். விரைவில் திருச்சியை கடந்து சிறிது நேரத்தில் விராலிமலையையும் கடந்தோம். அந்த முருகன் கோவில் இப்பொழுது வண்ணங்கள் அடித்து, படிகள் எல்லாம் சுத்தமாக பார்க்க நன்றாக இருந்தது. நான் நினைத்திருந்த கோவிலுக்கும் இப்போதைய கோவிலுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தது. ம்ம்ம். காலம் மாறி விட்டது என்று நினைத்துக் கொண்டே கன்னக்குழி விழ, ஆலுக்காசிற்கு வாங்கிய காசிற்காக மாதவன், விஜய், ஐஸ்வர்யாராய் நெடுஞ்சாலைகளில் சிரித்துக் கொண்டிருந்ததை கடந்து வர, சிறிது நேரத்தில் யானைமலை தெரிய ஆரம்பித்து விட்டது. ஹையா, மதுரை வந்து விட்டது என்ற உற்சாகமும் தொற்றிக் கொண்டு விட்டது!

இன்னும் சிறிது நேரத்தில் மதுரையில் இருப்போம் என்ற நினைப்பே மகிழ்ச்சியாக இருந்தது. ஒத்தக்கடை அருகில் வரும்பொழுது ஒரு விபத்து நடந்திருக்கும் போல, அதனால் வண்டியை திருப்பி தெருக்களின் வழியே சுற்றி வந்து, எப்படியோ, KK நகர் வழியே என்ன, இப்படி ஊரே மாறிடுச்சு, இவ்வளவு கடைகள், போக்குவரத்து நெரிசலும்! என்று புலம்பிக் கொண்டே வந்து சேர்ந்தோம். நல்ல பசி வேறு. அம்மா சமைத்த சாப்பாடு...இதோ வந்துவிட்டோம் என்று துள்ளிக் குதித்துக் கொண்டே வீடு போய் சேர்ந்தவுடன், வழியில் அனைவரும் குசலம் விசாரிக்க, அவர்களுடன் பேசி விட்டு, பாட்டியை பார்த்தவுடன் என் மகளும் குதூகலிக்க...

ஆரம்பமானது மதுரை வாசம் :)

11 comments:

  1. விறுவிறுப்பான பயணத் தொடர். :)

    தஞ்சை கோவில் தன்னகத்தே ஏகப் பட்ட மர்மங்களை சுமந்து நிற்கும் ஒரு இடம். என்னிடம் இது குறித்த ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது. அதை இங்கே எழுதினால் உங்கள் பதிவை விட பெரியதாகி விடுமென நினைக்கிறேன். :)

    ReplyDelete
    Replies
    1. ஆவலாக இருக்கிறது. எழுதினால் நாங்களும் தெரிந்து கொள்வோமே, சரவணன். அரசியல்வாதிகளுக்கு கிலி ஏற்படுத்தும் ஒரு கோவில் போல :)

      Delete
  2. தஞ்சை பெரியகோவிலைச் சூழ்ந்திருக்கும் மர்மங்கள் சிலதை மட்டும் இங்கே பட்டியலிட விரும்புகிறேன்.

    1. இராஜ இராஜனுக்கு பிறகு வந்த மன்னர்கள் தஞ்சையும், இந்த கோவிலையும் ஏன் கைவிட்டனர்.

    2.கங்கை கொண்ட சோழபுரத்தை தலை நகராக்கி அங்கே இதே போலொரு, ஏன் இதை விட பெரிதாக கோவில் அமைக்க என்ன காரணம்?

    3.இராஜ இராஜன் தன் கடைசி நாட்களில் சைவ மதத்தில் இருந்து விலகி வேறொரு மதத்தை தழுவியதாகவும், அதனால் கிளம்பிய எதிர்ப்பு காரணமாக மனம் உடைந்து இந்த கோவிலின் கோபுர உச்சியில் இருந்து அவன் குதித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் ஒரு தரப்பு வரலாற்று ஆசிரியர்கள் நம்புகின்றனர்.நான் மேலே சொன்னதைப் போல சில வலுவான ஆதாரங்களையும் அவர்கள் முன் வைக்கின்றனர்.

    ReplyDelete
  3. 4. இன்றும் கூட இந்த கோவிலை கட்டிய இராஜ இராஜனின் சிலையை கோவிலுக்குள் வைக்க அனுமதி மறுக்கின்றனர். பெரும் போராட்டத்திற்குப் பின்னர் சிலை கோவிலுக்கு வெளியேதான் வைக்கப் பட்டிருக்கிறது. ஏன் இப்படி ஒரு நிலைப்பாடு?

    5.இந்த கோவிலின் புகழ்பெற்ற கோபுரம் முழுவதும் தங்கத் தகடுகளினால் வேயப் பட்டிருந்ததாம். பின்னாளில் அவற்றை பெயர்த்தெடுத்தது யார்?

    6.இந்த கோவிலின் கோபுரத்தில் தொப்பி அணிந்த ஒரு ஐரோப்பியரின் முகம் காணப் படுகிறது. அது யார்?.

    7.கோவிலின் தரைக்கு கீழே 100 க்கும் மேற்பட்ட சுரங்க பாதைகளும் நிலவறைகளும் இருப்பதாக கண்டு பிடித்திருக்கின்றனர். அதில் என்ன இருந்தது?, அந்த பாதைகள் எங்கே சென்றன என்பது குறித்து பல்வேறு யூகங்கள் சொல்லப் படுகின்றன.

    ReplyDelete
  4. அப்ப்ப்ப்ப்ப்ப்பா! இவ்வளவு விஷயங்களா? கூகுள் ஆண்டவர் தான் காப்பாத்தணும் !

    ReplyDelete
  5. 8. பல நூற்றாண்டுகளாக இந்த கோவிலில் பூசைகள் எதுவும் நடத்தப் படாமல் இருந்திருக்கிறது. இங்கே வியாபாரம் செய்ய வந்த டச்சுக்காரர்களுக்கு ஆயுதசாலையாகவும், குதிரைகளை அடைத்து வைக்கும் லாயமாகவும் வாடகைக்கு விடப்பட்டிருந்த ஒரு இடம்தான் தஞ்சை பெரிய கோவில்.

    9. இங்கே இருக்கும் பெரிய நந்தி இராஜ இராஜனால் நிறுவப் பட்டதில்லை, பின்னாளில் வந்த நாயக்க மன்னர்கள் காலத்தில் செய்யப் பட்டதாய் சொல்கின்றனர்.

    ReplyDelete
  6. கூகிளாண்டவரிடம் இத்தனை விஷயங்கள் கிடைக்காது. அவரிடம் இந்த கோவிலின் புகழ்பாடும் தகவல்கள் மாத்திரமே கொட்டிக் கிடக்கிறது. நிழலான பக்கங்களை திட்டமிட்டு யாரும் இங்கே பகிர்வதில்லை. :)

    ReplyDelete
  7. Saravanakumar, All that you have said is news to me! Though none of it is going to obscure the grandeur of the great Temple for me or any others, I am still curious to know more about them. Why don't you yourself answer the questions you have listed with what you know?

    ReplyDelete
  8. Nice photos and narration.

    FYI, Yali is believed to be an incarnation of Shiva.

    ReplyDelete
    Replies
    1. Thanks, Guharajan. Yali, incarnation of Shiva?? but, we don't worship Yali.

      Delete

அமேசிங் பிரிட்டன் -6- ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ் பயணக்குறிப்புகள்

சொல்வனம் இதழ் 314ல் வெளிவந்துள்ள 'அமேசிங் பிரிட்டன்' பயணக்கட்டுரைத் தொடரின் நான்காவது பாகம்.  ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ் பயணக்குறிப்புகள்...