Friday, August 2, 2013

Hancock Shaker Village

மே மாதம் மூன்று நாள் வார விடுமுறையில் மழையில் இரண்டு நாட்கள் ஓடிவிட, மூன்றாவது நாள் வெயிலும் வந்துவிட, வீட்டிலிருந்து ஒரு மணி நேரத் தொலைவில் இருக்கும் இந்த Hancock Shaker Village என்ற அருங்காட்சியகத்திற்கு போவது என்று முடிவு செய்தோம். Albany, NY -ன் அழகே அதன் மலை சூழ்ந்த நீண்ட, மேடுபள்ளச்சாலைகளும், சாலைகளின் இருபுறங்களிலும் கொத்துகொத்தாக பச்சைமரங்களும் தான். அதுவும் மழை வேறு பெய்து மரங்கள் இன்னும் பச்சையாக, தெளித்து விட்ட சாலைகளும், சிலுசிலுவென்ற காற்றும், குளுகுளுவென்று வெயிலும் என்று ரம்மியமாக இருந்தது. வெயிலைப் பார்த்தவுடன் வெளியில் கிளம்பும்  மனிதர்கள், பைக்கில் வலம் வருபவர்கள், நீண்ட பிரயாணம் போகிறவர்கள் என்று லீவு நாட்களிலும் சாலைகள் பிஸியாக இருந்தது.

நாங்களும் வீட்டிலிருந்து அந்தா இந்தா என்று 12.30 மணிக்கு கிளம்பி, இயற்கை எழில் சூழ்ந்த மலைகளைப் பார்த்தவாறு நியூயார்க் மாநிலம் தாண்டி மாசசூசெட்ஸ் மாநிலத்தில் இருக்கும் இந்த அருங்காட்சியகத்திற்கு வந்து சேரும் பொழுது மதியம் 1.30ஆகி விட்டது. வீட்டிலிருந்து எடுத்து வந்திருந்த மதிய உணவை முடித்து விட்டு, உள்ளே போக அனுமதி சீட்டு வாங்கும் பொழுது சரியாக 2 மணி. அங்கிருந்த வயதான அலுவலரும் சரியான நேரத்திற்குத் தான் வந்திருக்கிறீர்கள் என்று சொல்லி விட்டு உள்ளே போகும் வழிகளையும், வரைபடத்தையும் கொடுத்தார்.

உள்ளே நுழைந்ததும் எதிரே தெரியும் வட்ட வடிவ தானிய களஞ்சியம்/மாடுகளுக்குப் புல் போடும் இடம்- பார்க்கவே அழகாக இருந்தது. அங்கிருந்த சுற்றுலா வழிகாட்டி 1800களில் Shakers என்ற இந்த அமைப்பினரின் அறிவார்ந்த கட்டிடக்கலை எப்படி ஆச்சரியமளிக்கும் விதத்தில் இருந்தது என்று கூறும் பொழுது ஆச்சரியமாகத் தான் இருந்தது. புற்களை வெளியில் இருந்து உள்ளே கொண்டு வர என ஒரு தனிப்பாதை, புல்லை நடுவில் அடுக்கி வைத்து அதை சுழலும் வகையில் கட்டி இருந்தார்கள்.மாடுகள் எளிதாக நுழையும் வகையில்- அவை உள்ளே வந்தவுடன் வசதியாக நிற்க மரப்பலகை, புல் மேய கழுத்தை மட்டுமே உள்ளே நுழையும் வகையில் செய்யப்பட்ட மரத்தடுப்புகள்,  சாணி போடுவதை கீழே இருக்கும் தளத்தில் இருக்கும் அண்டாக்களில் பிடிக்க வசதியாக, புல்லிலிருந்து வரும் வெப்பத்தை குறைக்க என்று பார்த்து பார்த்து அந்த வட்டவடிவ கட்டிடத்தை வடிவமைத்திருந்தார்கள்.

Shakers மரத்தினாலான பொருட்கள், இரும்பிலான பொருட்கள் செய்வதில் வல்லவர்களாக இருந்திருக்கிறார்கள். மூன்று மணியளவில் வழிகாட்டி ஒருவர் Shakers பற்றி விரிவாக விளக்கம் அளித்தார். இவர்கள் இங்கிலாந்தில் Quakers என்று சொல்லப்பட்ட இனத்ததைச் சார்ந்தவர்கள். 

அமெரிக்காவிற்கு முதலில் நியூயார்க் வந்திறங்கி பிறகு ஆல்பனியில் தங்கி இருக்கிறார்கள். முதலில் ஒன்பது பேர் மட்டுமே இக்குழுவில் இருந்திருக்கிறார்கள். ஒரு பெண்ணே இதற்குத் தலைவியாகவும் இருந்திருக்கிறார்!!!!

அந்த காலத்திலேயே ஆண், பெண் இருபாலாரையும் சரிசமமாக நடத்தியிருக்கிறார்கள்!!! என்ன ஒன்று, திருமணம், குழந்தை பெற்றுக் கொள்வது மறுக்கப்பட்டிருக்கிறது. குழந்தைகள் விவரம் தெரிந்து பெரியவர்கள் ஆன பிறகு உறுதிமொழி எடுத்துக் கொண்ட பிறகு தான் இந்த அமைப்பில் சேர முடியும். ஆண்கள் தச்சு வேலை, இரும்புப் பட்டறை, உழவு என்று பார்க்க, பெண்கள் சமையல், குழந்தைகள் படிப்பு, தையல், உழவு என்று வேலைகளை பகிர்ந்து வாழ்ந்திருக்கிறார்கள் என்று இன்னும் பல அரிய தகவல்களையும் சொன்னார்.

அந்த வீட்டில் மட்டும் 200 பேர் வரை தங்கி இருந்திருக்கிறார்கள். எல்லோருக்கும் உண்ண , சமையல் செய்ய, உறங்க என்று பல வசதிகளுடன் அந்த காலத்திலேயே இருந்ததைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. செங்கற்களால் கட்டிய வீடுகள், பலருக்கும் சமைக்கும் வண்ணம் பெரிய பெரிய அடுப்புகள், வீடு முழுவது சூரிய வெளிச்சம் கிட்டும் வகையில் ஜன்னல்கள், ஆடு, மாடு, பன்றி, குதிரை,கோழிப் பண்ணைகள், பாலிலிருந்து அவர்களே வெண்ணெய், பாலாடைக்கட்டி தயாரிப்பது, தேன் தயாரிப்பது, தறி நெய்வது என்று அவர்களுக்குள்ளே ஒரு உலகம். வெளியிடத்தில் இவர்களுடைய தயாரிப்புகளை விற்று பணமும் சம்பாதித்திருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட தனிமையான உலகம் இவர்களுடையது. யார் வேண்டுமென்றாலும் இந்த குழுவில் சேரலாம். இருக்கும் வரை இவர்களுடைய சட்டத்திட்டங்களுக்குப் படிந்து இருக்க வேண்டும். ஒரு காலத்தில் 4000 பேர் வரை இந்த அமைப்பில் இருந்ததாகவும், ஆப்பிரிக்க அமெரிக்க இனத்தவரும் இருந்ததாகவும், உள்நாட்டுப் போர் முடியும் பொழுது இந்த இனமும் சிறிது சிறிதாக மறைந்து விட்டது எனவும் கூறினார்.

அவர்களுக்கென்று ஒரு பள்ளிக்கூடம், மருத்துவர், மருந்து மாத்திரைகள், பிரிட்ஜ் வசதி இல்லாத அந்த காலத்தில் பனிக்கட்டியை சேர்த்து வைத்து தங்கள் பொருட்களை நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்க ஒரு இடம், மரத்தினாலான பொருட்கள் செய்ய ஒரு இடம், பிரார்த்தனை செய்ய ஒரு கூடம் என்று நேர்த்தியாக கட்டப்பட்ட பல கட்டிடங்கள்!

மொத்தத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன் அறிவியல் வளர்ச்சி இல்லாத காலத்தில் இருந்த வாழ்க்கையை அறிந்த பொழுது கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருந்தது. இதை மக்கள் அறியும் வண்ணம் இன்றும் போற்றி வருவது வியப்பு தான்.

நம் நாட்டில் கூட இப்படி எத்தனையோ விந்தைகள் இருக்கும். அதை நாம் இப்படி போற்றி பாதுகாத்து அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லவில்லை என்ற வருத்ததுடன் வீடு திரும்பினோம்.No comments:

Post a Comment