Sunday, September 1, 2013

திக்...திக்...திக்...1

என்னுடைய வாழ்க்கையில் என்னை மிகவும் பாதித்த சில நிமிடங்கள்...

1993ஆம் வருடம், ஜனவரி மாதம் என்று நினைக்கிறேன். தெரிந்த ஒரு பெண்ணின் திருமணத்திற்காக காலையில் ஏழரை மணியளவில் மஞ்சனக்காரத்தெரு வழியாக தெற்குமாசி வீதிப் பக்கம் நடந்து போய்க் கொண்டிருந்தேன். கல்யாண மஹாலும் அதே தெருவில் தான். இப்போது நல்லி சில்க்ஸ், முன்பு கார்டன் சாரீஸ் இருந்த கடைக்கருகில் உள்ள காபி கடையில் பேப்பரை படித்துக் கொண்டே காபி குடிக்கும் கூட்டம் , தெருவோரத்தில் இருக்கும் இட்லிக்கடைகளில் ஆவி பறக்கும் இட்லிகளும், அதை சாப்பிடும் கூட்டமும் என்று சோம்பேறித்தனமாக மதுரையில் காலை புலர்ந்து கொண்டிருந்தது. பல பெண்களும் வாசலை கூட்டிப் பெருக்கி கோலம் போட்டுக் கொண்டிருந்தார்கள். கடைகள் அதிகமிருக்கும் பகுதியால் காலை ஒன்பதரைக்கு மேல் தான் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.

திடீரென்று பத்துப் பதினைந்து பேர் கொண்ட பெரிய கும்பல் ஒன்று டேய், நில்லுடா, ஓடாதே என்று சாலையை அடைத்துக் கொண்டு ஒருவனை விரட்டிக் கொண்டு வந்து கொண்டிருந்தார்கள். கலைந்த தலைமுடி, தாடி மூஞ்சிகள், ராஜ்கிரண் ஸ்டைலில் கட்டிய வேட்டி/கைலி என்று ஒரு பெரிய கூட்டம். இதில் யார் யாரை துரத்துகிறார்கள் என்று தெரியவில்லை. சரி ஏதோ முன்விரோதம் போல என்று வேடிக்கைப் பார்த்த்துக் கொண்டிருந்த மக்கள், நில்லுடா, வெட்றா அவனை என்று அருகில் கேட்டவுடன்,

காபி குடித்துக் கொண்டிருந்தவர்கள் ஒரு நிமிடம் கையில் கண்ணாடி டம்ளருடன் உறைந்து போய் நிற்க, அப்போது தான் தெரிந்தது விரட்டி வந்தவர்களின் கைகளில் இருந்த நீண்ட அருவா!!!  அவர்களிடம் இருந்த 'கொலைவெறி' நடுவில் எவர் புகுந்தாலும் வெட்டித் தள்ள தயங்க மாட்டார்கள் என்று தெரிந்தது. அவர்கள் ஒரு நிலையில் இல்லாமல் வெட்டிப் போட்டு விட்டு ஓடிப் போவதிலே கவனமாக இருந்தார்கள். அமைதியான  அந்த காலை நேரத்தில் அனைவரையும் இது நிஜமாகவே நம் கண் முன் நடக்கிறதா என்ற பயத்தை உண்டு பண்ணியதென்னவோ உண்மை தான்! 

நானும் 'சடக்'கென்று அருகில் உள்ள வீட்டு வாசலில் 'திக் திக்' என்று படப்படப்புடன் தஞ்சம் புக, என்ன நடக்கிறது என்று தெரியாமல் நடந்து போய்க் கொண்டிருந்த மக்கள் முழிக்க, அந்த கூட்டமும் நான் இருந்த தெருவை தாண்டி சிடிசினிமா தியேட்டர், விளக்குத்‌தூண் பக்கம் ஓடிப் போக சில நேர கலவரங்களுக்குப் பின் அனைவரும் அவரவர் வேலையைப் பார்க்க, நானும் படப்படப்புடனே கல்யாண மஹாலுக்குச் சென்று விட்டேன்.


 அங்கே யாருக்கும் வெளியில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் காலைச் சாப்பாடு, மாப்பிள்ளை வரவேற்பு, மணப்பெண் அலங்காரம் என்று பிஸியாக இருந்தார்கள். நானும் சிறிது நேரம் இருந்து பரிசைக் கொடுத்து விட்டு வேலைக்குச் சென்று விட்டேன்.

அன்று மாலை வந்த மாலைமுரசில் தான் காலையில் ரவுடி ஓட ஓட விரட்டிக் கொலை.அவனை கண்டந்துண்டமாக வெட்டித் தள்ளி விட்டு அந்த கொலைகார கும்பல் ஆளுக்கு வெவ்வேறு திசைகளில் ஓடி விட்டார்கள் என்று படித்த போது தான்...

இந்த ஓட ஓட விரட்டி கொலை செய்வது அப்போது தான் மாமதுரையில் தலை தூக்கிய காலம்!!! அன்று தங்களுக்குள் ஒருவனை போட்டுத் தள்ள ஆரம்பித்து பிறகு மக்களுக்கு நல்லது செய்து கொண்டிருந்த ஒரு கவுன்சிலர் பெண்மணியை அவர் இருந்த குடியிருப்பிலே போட்டுத் தள்ளி என்று தொடர்ந்து, காலை நேர நடையை முடித்துக் கொண்டு வருபவரை போடுவது என்று இன்று வரை தொடருவது தான் கொடுமை.


6 comments:

  1. very horrible.I have seen such murders many at RJPM,in front of my hospital.,my street was[is] famous for such murders.,here ,all people ,watch,just like that.the murder,is for caste fight,politicalparty fight,election fight etc.,

    ReplyDelete
  2. ராஜபாளையத்திலும் இந்த மாதிரி ஒரு அனுபவம் எனக்கு ஏற்பட்டது, Dr !

    ReplyDelete
  3. Sorry to hear such things at Mdu Mdu thaan... :(

    ReplyDelete
  4. இத்தகையவர்களை காட்டு மிராண்டிகள் என ஒற்றை வார்த்தையில் தீர்ப்பெழுதி, காறித்துப்பி கடந்து போவது சுலபம்.......ஆனால், உணர்ச்சி மேலீட்டினால் நிகழும் இம் மாதிரி சம்பவங்களின் பின்னால் ஏதோவொரு அசாதாரண இழப்பும், அது தொடர்பில் மறுக்கப் பட்ட நியாயம் ஒன்று உறைந்திருப்பதை வெகுசன சமூகம் புரிந்து கொள்ள முயற்சிப்பதே இல்லை.

    அப்புறம்....மதுரைல பிறந்து வளர்ந்துட்டு இதுக்கெல்லாம் அசரலாமா!!. :)

    ReplyDelete
  5. //ஆனால், உணர்ச்சி மேலீட்டினால் நிகழும் இம் மாதிரி சம்பவங்களின் பின்னால் ஏதோவொரு அசாதாரண இழப்பும், அது தொடர்பில் மறுக்கப் பட்ட நியாயம் ஒன்று உறைந்திருப்பதை வெகுசன சமூகம் புரிந்து கொள்ள முயற்சிப்பதே இல்லை.//

    ?????

    //அப்புறம்....மதுரைல பிறந்து வளர்ந்துட்டு இதுக்கெல்லாம் அசரலாமா!!. // :) :)

    ReplyDelete

அமேசிங் பிரிட்டன் -6- ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ் பயணக்குறிப்புகள்

சொல்வனம் இதழ் 314ல் வெளிவந்துள்ள 'அமேசிங் பிரிட்டன்' பயணக்கட்டுரைத் தொடரின் நான்காவது பாகம்.  ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ் பயணக்குறிப்புகள்...