Thursday, October 31, 2013

லதா புராணம் 28-29

என்னுடைய முகநூல் பதிவுகள் சில :)

லதா புராணம் 28-

தீபாவளி வந்தால் குஷியாக இருப்பது குழந்தைகள் மட்டும் அல்ல, தலை தீபாவளி கொண்டாடும் புதுமணத் தம்பதிகளும், சம்பந்திகள் வீட்டில் இருந்து வரப்போகும் தீபாவளிப் பலகாரங்களை எதிர் நோக்கி காத்திருக்கும் உறவினர்களும் தான்.


அதற்கென்றே ஸ்பெஷலாக பெரிய பெரிய முறுக்குகளும், 

பாதாம் அல்வா, கிரீன் பர்பி, ஓரங்களில் இளம் மஞ்சளாகவும், நடுவில் நன்கு பொரிந்து இளம் பிரவுன் வண்ணத்தில் நீளமான மொறுமொறுவென்ற மைசூர் பாகு, வாயில் வைத்தால் கரையும் நெய் மைசூர் பாகு,சந்த்ரகலா என்று மைதாமாவின் நடுவில் பால்கோவா வைத்து ஓரங்களை சுருட்டி செய்யப்படும் ஒரு இனிப்பு, ஆரஞ்சு கலரில் வளையங்களாக எண்ணையில் பொரித்த ஜிலேபி என்று

பல இனிப்புகளில் ஏதாவது ஒன்றை பெரிய கூடைகளில் எடுத்துக் கொண்டு சம்பந்தி வீட்டுக்கு எடுத்துச் செல்லும் மக்கள் படையெடுக்கும் இடம் பெரும்பாலும்
பகவதி, பகவான், அமிர்தம் இனிப்புக் கடைகளை நாடித் தான்!

இதைத்தவிர, மசாலா கடலை, பட்டர் சேவு , பக்கோடா, காராபூந்தி, பூந்தி என்றும் அதை வாங்க வரும் கூட்டங்களும் இந்தக் கடைகளை அதகளப்படுத்தும் நேரமிது!

ஹாப்பி தீபாவளி !!!!

லதா புராணம் #28


--------------------------

தீபாவளி அமளி துமளி 
-------------------------------------

என்ன தான் கடைகளில் வாங்கிச் சாப்பிடும் பலகாரங்கள் பிடித்திருந்தாலும் வீட்டில் அம்மா செய்யும் முறுக்கு, ஓமப்பொடி, சேவு, மிக்ஸர் வகையறாக்களுக்குத் தனிச் சுவை தான்!

ஒரு வாரம் முன்பாகவே ரைஸ் மில்லில் பதார்த்தங்களுக்கு மாவு அரைத்து, சீனி/வெல்லம் , நெய் சேர்த்து, ஏலக்காய் பொடித்துப் போட்டு அதிரசமாவு பக்குவத்திற்கு வர இரண்டு நாள் காத்திருக்கும்நாட்களில் வெண்ணை திருடிய கண்ணனாக மாறி, மாவைத் திருடிச் சாப்பிடும் சுகமே அலாதி 

யார் மாவை எடுத்துச் சாப்பிட்டது என்று தெரியாதது போல் அம்மா கேட்கும் பொழுது அப்பாவியாய் மூஞ்சியை வைத்துக் கொண்டு அடி விழுமோ என்ற பயத்துடன் கழித்த காலமெல்லாம்...

அம்மா முறுக்குச் சுட ஆரம்பிக்க எண்ணெய் வாசம் வீடு முழுவதும் வர, தினசரி பேப்பரில் சிறுசிறு முறுக்குகளை நேர்த்தியாக பிழிந்தெடுக்க நானும் ட்ரை பண்ணுவேன் என்று அடம் பிடித்து வாங்கிப் பிழிய முடியாமல் சே, எவ்வளவு சுளுவாக அம்மாவால் முடிந்தது நமக்கு முடியவில்லையே என்ற ஏமாற்றம் ...

மொறுமொறு ஓமப்பொடி சடுதியில் பொரிய, மிக்ஸரும் ரெடி ஆக ,

குலாப்ஜாமூன் எண்ணையில் பொரிக்கும் போதே ம்ம்ம் அதை தூக்கி ஜீராவில் போட்டு எப்படா நன்கு ஊறி உப்பும் என்று காத்திருந்து...

பெரிய பெரிய தூக்குச் சட்டிகளில் அதை எடுத்து வைத்துப் பள்ளி விட்டு வந்தவுடன் மாலை நேரச் சிற்றுண்டி என சில நாட்கள் போகும்.

தீபாவளி அன்று உறவினர்களுடனும் நண்பர்களுடனும் சேர்ந்து உண்டு களித்த நாட்கள்
எல்லாம்

ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே ...

ஹாப்பி தீபாவளி!


லதா புராணம் #29

No comments:

Post a Comment