Wednesday, March 19, 2014

'சில்'லென்று ஒரு ட்ரிப் !

பனிக்காலத்தில் வெளியில் எங்கு சென்றாலும் உடலை ஊடுருவும்  'சில்ல்ல்ல்ல்'லென்ற கடுங்குளிர் தான்!

ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் எங்காவது போகலாம் என்றால் கூட திடீரென்று பனிமழை அல்லது பனிப்புயல் வந்து விடுமுறையை கெடுத்து விடும். வடக்கே போக போக குளிரும் பனியும் அதிகமாக இருக்கும். தவிர,  குழந்தைகளின் பள்ளியில் தேர்வுகள் அனைத்தும் தீவிரமாக அந்த மாதங்களில் தான் இருக்கும். அதனால் திட்டங்கள் எதுவும் போடுவதும் இல்லை.

போன வருடம் தோதாக குழந்தைகளின் விடுமுறையும், சீதோஷணமும் நன்றாக இருக்க Montreal, கனடாவில் குளிர்காலத்தில் மட்டுமே காணக் கிடைக்கும் ஐஸ் ஹோட்டலை பார்க்கப் போவது என்று தீர்மானித்து இரு நண்பர்களின் குடும்பங்களுடன் சனிக்கிழமை அன்று காலையில் ஒன்பது மணிக்குப் புறப்பட்டோம்.

குளிர்காலத்தில் வெளியில் போகப் பிடிக்காத ஒரே காரணம்- சர்வ அலங்காரத்துடன் போக வேண்டிய நிலை. தலையில் குல்லா, கழுத்தில் ஸ்கார்ப், லேயர் லேயராக கம்பளி உடைகள், ஜாக்கெட் , கையுறைகள், காலுக்கு பூட்ஸ் என்று ஒன்றுக்கு இரண்டு சைஸாக குளிரில் போவது கொடுமை தான். எப்படியோ மூன்று குடும்பங்களும் இரண்டு வண்டிகளில் கிளம்பி விட்டோம்.

வழி நெடுக குளங்கள், ஆறுகள் எல்லாம் உறைந்து அதன் மேல் சறுக்கிக் கொண்டு குழந்தைகளும், சறுக்கு வண்டிகளும், மீன் பிடிப்பவர்களும் என்று அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறு சிறு கூட்டங்கள்.

Albany-யிலிருந்து Montreal, கனடா போகும் வரை அடர்ந்த காடுகளுடன் பனி போர்த்திய மலைகள். ஓரிடத்தில் பாறைகளில் பனி படர்ந்து, உறைந்து, பனிப்பாறையாக! கூர்ந்து கவனித்த நண்பர் அந்தப் பாறை மேல் ஒரு மனித உருவம் நகருவதை கவனித்துச் சொல்ல, ஆம், நிஜ மனிதனே தான்! ஏதோ, சிலந்தி மனிதன் போல் அனாயசமாக பனிப்பாறை மேல் ஏறுவதை பார்த்தவுடன் 'யூ டர்ன்' அடித்து வந்து பார்த்தால் 'சிலந்தி மனிதன்' உச்சிக்குப் போய்விட்டார்!


குழந்தைகளும் நாங்களும் 'ஆ' வென்று வாய் பிளந்து கண்ணிமைக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டே படங்கள் எடுக்க, சிறிது நேரத்தில் குளிர் பின்னி எடுக்க, காருக்குள் ஓடுவதற்குள் இன்னுமொரு உருவம் ஏறுவதைப்  பார்த்துக் கொண்டே சிறிது நேரம் நின்றிருந்தோம். அந்த இடத்தில் அவ்விருவரைத் தவிர தொலைவில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் போய்க் கொண்டிருந்த கார்களைத் தவிர்த்து  ஒரு ஜனமும் இல்லை!

சாகசம் என்றால் அது தான்! எப்படி இவர்களுக்கு மட்டும் இவ்வளவு தைரியம், உயிர் பற்றிய பயம் இல்லை என்று வியந்து ...

அதைப் பற்றி பேசிக் கொண்டே 'Ausable Chasm' என்ற US- Canada எல்லை அருகில் இருக்கும் அருவியைப் பார்க்க வந்து சேர்ந்தோம். அதற்குள் மகனுக்கும் பசிக்க ஆரம்பித்து விட்டது. எங்கு வெளியில்சென்றாலும் அவனுக்கு எலுமிச்சம்பழ சாதம், சாம்பார், சிப்ஸ் வேண்டும். அதுவும் நான் செய்ததாக இருக்க வேண்டும்
தோழியும் தயிர் சாதம் ஊறுகாய் கொண்டு வந்திருந்தார். பனிக்காலம் என்று உணவகங்கள் மூடப்பட்டிருந்ததால் காரில் உட்கார்ந்து சாப்பிட்டோம். வெளியில் பனி மழை அதன் கடமையைச் சரியாக செய்து கொண்டிருந்தது!

இந்த இடத்திற்குப் பல முறை வந்திருந்தாலும் பனிக்காலத்தில் வருவது இது தான் முதல் முறை. நன்றாகச் சாப்பிட்டு விட்டு குளிரில் நடுங்கியபடியே படங்களையும் எடுத்துக் கொண்டே அருவியைப் பார்க்கப் போனால் அது உறைந்து பார்க்கவே அதிபிரமாண்டாமாக இருந்தது! மரங்கள், நீர்நிலைகள் எல்லாம் உறைந்து அதன் மேல் அடுக்கடுக்காக உறைபனியுடன் அருவியைப் பார்க்க நன்றாக இருந்தது. அரை மணி நேரம் அதைச் சுற்றிப் பார்த்து விட்டு கனடா போக ஆயத்தமானோம். கொடுங்குளிர் எங்கள் பயணத்தை துரிதப்படுத்திக் கொண்டே இருந்தது!

அங்கிருந்து ஒரு முக்கால் மணிநேரத்தில் கனடா எல்லை வந்து விட்டது. பாஸ்போர்ட், க்ரீன்கார்டு எல்லாம் பார்த்து விட்டு எதற்குப் போகிறீர்கள், எப்போது திரும்புவீர்கள் என்ற சம்பிரதாயமான கேள்விகளை கேட்டு விட்டு கனடா உள்ளே போக அனுமதித்தார்கள். வழியில் ஓரிடத்தில் டோனட்ஸ், காபி சாப்பிட்டு விட்டு விரைவில் நாங்கள் போக வேண்டிய இடத்திற்கு வந்து சேர்ந்தோம். ஆனாலும் சரியான இடத்திற்குப் போக இரண்டு முறை சுற்ற வேண்டியதாயிற்று. எப்படியோ உள்ளே நுழையும் பொழுது மதியம் ஒரு மணிக்கு மேல் ஆகி விட்டது. நுழைவுச் சீட்டு, வண்டி நிற்குமிடத்தில் கட்டணம் என்று எல்லாம் முடிந்து உள்ளே போனால் igloos மாதிரி கட்டி வைத்திருந்தார்கள்.

குளிரோ குளிர்!
Add caption
இந்த வருடம் 'நியூயார்க் நகரம்' theme என்று அங்கு பிரபல்யமானவைகளை பனியில் செய்து வைத்திருந்தார்கள். பனிக்குகைக்குள் அறைகள் கட்டி ஒவ்வொன்றிலும் கலை நயத்துடன் செதுக்கிய பனி உருவங்கள்!  ஒவ்வொரு அறையையும் பார்த்துக் கொண்டும், படங்கள் எடுத்துக் கொண்டும் வர, சிறிது நேரத்தில் கால்விரல் நுனிகள், கைகள், காதுகள் 'விண்விண்' என்று வலிக்க ஆரம்பிக்க...ஓரிடத்தில் சூடேற்றும் சாதனம் வைத்து டீ, ஹாட் சாக்லேட் இத்யாதிகள் விற்றுக் கொண்டிருந்தார்கள். ம்ம்ம்...சூடான வடை, பஜ்ஜி, காபி, டீ இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்ற நினைப்போடு அங்கு போய் சிறிது ஆசுவாசப்படுத்திக் கொண்டு மீண்டும் வேறு கண்காட்சிகளைப் பார்க்க போக, குழந்தைகள் பனிச்சறுக்கு விளையாட என்று நேரம் போனதே தெரியவில்லை.

ஒவ்வொரு வருடமும் இந்தப் பனி கிராமத்தை உருவாக்க நார்வே-யிலிருந்து ஒரு குழு வருகிறது. பனியினால் செய்த கட்டில்கள், மேஜை, நாற்காலிகள் உணவு உண்ணவும், மதுபானங்கள் குடிக்கவும்  என்று வெவ்வேறு அறைகளை பார்க்க நன்றாக இருந்தது. அங்கேயே தங்கும் வசதிகளும் இருப்பதாகச் சொன்னார்கள். பனி வீட்டில் இரவில் தங்கியிருப்பதும் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்!!!!

நாங்கள் போன அன்று தான் கடைசி நாள். அதனால் அவ்வளவு கூட்டம் இல்லை. கண்காட்சியை முழுவதும் சுற்றி வருவதற்குள் குழந்தைகளும் களைத்துப் போக, மீண்டும் வண்டிக்குள் வந்து அடைக்கலம். அதற்குள் பசி வேறு. சப்பாத்தி மற்றும் குருமா என்று சாப்பிட்டு விட்டு அமெரிக்க எல்லைக்குள் வர, எல்லா லொட்டு லொசுக்குகளையும் சரி பார்த்து உள்ளே அனுமதிக்க, குளிர் காற்றுக்குப் பயந்து காரை விட்டு இறங்காமல் ஒரு வழியாக இரவு ஒன்பதரைக்குள் வீட்டுக்கு வந்து சேர்ந்தோம்.

அந்த ஒரு நாள் 360 மைல் குளிர் பயணம் எல்லோருக்கும் வாழ்வில் மறக்க முடியாத பயணமாக இருந்தது *:) happy


No comments:

Post a Comment

அமேசிங் பிரிட்டன் -7- கிளாஸ்கோ- கிரெட்னா கிரீன்-லேக் டிஸ்ட்ரிக்ட் பயணக்குறிப்புகள்

சொல்வனம் இதழ் 315ல் வெளிவந்துள்ள பயணக்கட்டுரைத் தொடரின் ஏழாம் பாகம்  அமேசிங் பிரிட்டன் -7- கிளாஸ்கோ- கிரெட்னா கிரீன்-லேக் டிஸ்ட்ரிக்ட் பயணக...