Saturday, March 29, 2014

அந்த சில நாட்கள் ...


இன்றைய யுகத்தில் வேலைக்குச் செல்லும் குடும்பங்கள் எதிர்கொள்ளும் பல சவால்களில் மிக முக்கியமானது குழந்தைகளை காப்பகத்திலோ அல்லது தனியாரிடமோ விட்டுவிட்டுச் செல்வது தான். குழந்தைகளுக்கேற்ற நல்ல ஆரோக்கியமான பாதுகாப்பான சூழலை தேர்ந்தெடுக்கும் போதே பல பெண்களுக்கும் மனச்சோர்வுகள் வந்து விடுவது உண்டு. அருகில் அம்மா, மாமியார் இருந்தால் ஒரளவு நிலைமையைச் சமாளித்து விடலாம்.

சொந்த ஊரை விட்டுப் புலம் பெயர்ந்து வேலைக்குச் செல்ல வேண்டிய அவசியத்தில் குழந்தைகளுடன் இருப்பவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் பல.

என் வாழ்விலும் மகன் பிறந்து இரண்டு வருடம் வரை அம்மா, பெரியம்மா என்று அவனைச் சீராட்டி பாராட்டி வளர்த்ததில் ஒரு துன்பமுமில்லாமல் நாட்கள் நகர்ந்தது. சில மாதங்கள் வீட்டில் வந்து கவனித்துக் கொள்ள ஒரு ஆயாவும் என இன்பமாகவே பொழுதுகள் கழிய, திடீரென ஒருநாள் அவரால் வர முடியாது என்றவுடன் தான் பிரச்னையும், மன உளைச்சலும் ஆரம்பமானது!

பேச்சு கூட சரியாக வராத நிலையில் வெளியிடத்தில் சேர்க்க விருப்பம் இல்லாததால் இந்தியரிடமே விடுவது என்று முடிவெடுத்து நண்பர்களிடம் தீர விசாரிக்க ஒரு பஞ்சாபியரும் விருப்பம் தெரிவித்ததார். சரி, அவரைப் போய் பார்த்து குழந்தையை பழக்கலாம் என்று வீட்டிற்குப் போனால் அரண்மனைப் போல வீடு! அப்பாடா நடக்க, விளையாட பெரிய இடமாக இருக்கிறது என்று எனக்குள்ளே முதல் சமாதானம்! என் மகனைத் தவிர அவருடைய பேத்தி மட்டும் தான் வருவாள் என்று சொன்னார். இரண்டு மூன்று நாட்களுக்குத் தினமும் சில மணிநேரங்கள் மகனை அழைத்துப் போய் அவர்கள் வீட்டில் பழக விட்டு ஒரு நாள் காலையில் அவன் விளையாட்டுப் பொருட்கள், சாப்பாடு இத்யாதிகளை எடுத்துக் கொண்டு அங்கு போனவுடன் என்னை இறுக்கிக் கொண்டு அழுதவனை சமாதானம் செய்யத் தெரியாமல் சீக்கிரம் வந்து விடுவேன், நல்ல பிள்ளையாக இரு என்று நானும் கண் கலங்கி ...அவன் அழுவதைப் பொறுக்க மனமில்லாமல் ...

மிகப்பெரிய குற்ற உணர்வுடனும், கையாலாகத்தனத்துடனும் அழுத நாட்களை மறக்கவே முடியாது. வேறு வழியில்லாமல் குழந்தையும் தலைவிதியை ஏற்றுக் கொள்ள, அமைதியாகப் போய்க் கொண்டிருந்த நாட்களில் ரோட்டி, தால் , ஊப்பர் , ஆவ், ஜா என தத்தாக்க பித்தாக்க பேச்சில் நாட்களும் கரைந்து போயிற்று.

ஒரு நாள் பேபி சிட்டர் மாமியார் இறந்து விட்டார் இந்தியா போய் வர சில மாதங்கள் ஆகும் என்று எம்டன் குண்டை தூக்கி போட, இது என்ன புதுக் குழப்பம். மீண்டும் பேபி சிட்டர் தேடுதலில் சில தூக்கமில்லா நாட்கள்! என் குழந்தையை யாரோ ஒருவரிடம் எல்லாம் தூக்கி கொடுக்க மாட்டேன். மனசுக்கு சரியென்று பட்டால் தான் என்றதால் தேடி அலைய வேண்டிய நிர்பந்தம்!

சிறிது தொலைவில் ஒரு குஜராத்திக்காரர் இருக்கிறார், அவரிடம் கேட்டுப் பாருங்கள் என்று தெரிய வர, என் மகனைத் தவிர வேறு யாரும் அங்கு வரக் கூடாது, டிவி அதிகம் பார்க்க விடக் கூடாது... என்று சொல்லி அங்கு சேர்த்து விட்டாயிற்று!

ஆரம்பத்தில் கொஞ்சம் முரண்டுப் பிடித்தவன் பிறகு அழாமல் சமர்த்துக்குட்டியாக போய் வந்ததால் மிகவும் நிம்மதியாக இருந்தேன். பேபிசிட்டரும் சுடச்சுட ரொட்டி, தால், சாதம் பண்ணிக் கொடுத்து மதியமும் தூங்க வைக்க, குழந்தைக்கும் நிம்மதி எனக்கும் நிம்மதி! அந்த தைரியத்தில் தம்பிகளின் திருமணத்திற்கு மூன்று வாரம் விட்டுவிட்டு இந்தியாவிற்கும் வந்து விட்டேன்! அருமையான அன்பான பெண்மணி! பார்த்து பார்த்து குழந்தையை மிக நன்றாக கவனித்துக் கொண்டார். என்னுடைய அதிர்ஷ்டம் தான்!

பள்ளி செல்வதற்கு முன் மற்ற குழந்தைகளுடன் பேசி விளையாடி பழக வேண்டும் என்று மூன்றாவது பிறந்த நாளுக்குப் பிறகு ப்ரீஸ்கூலில் சேர்ப்பது என முடிவெடுத்து ஒரு பள்ளியிலும் சேர்த்தாகி விட்டது. செப்டம்பரில் இருந்து அக்கா மாதிரியே நீயும் ஸ்கூலுக்குப் போகலாம், உனக்கும் புது backpack என்று ஆசை காட்டினாலும் ஒரு தாயாக அவன் அருகில் இல்லையோ என்று என் தலையெழுத்தை நினைத்து மீண்டும் மன வருத்தம்.

அந்த நாளும் வந்தது. அன்று பார்த்து லேட்டாக எழுந்தான். மெதுவாக சாப்பிட்டான். நானும் முடிந்த வரை நண்பர்கள், விளையாட சாமான்கள் இருக்கும் என்று ஆசை காட்டினாலும் அவன் முகத்திலிருந்த கலக்கம் எனக்கும் நிறையவே இருந்தது. பேப்பரில் தூத் -மில்க், பூக் - ஹங்க்ரி ...என்று ஒரு லிஸ்ட் தாய்மொழியிலும் ஆங்கிலத்திலும் எழுதிக் கொடுத்து அவனுக்கு இன்னும் சரியாக ஆங்கிலத்தில் பேச தெரியாது என்று அங்கிருப்பவரிடம் சொல்லி விட்டு பத்திரமா இருக்கணும் என்று மகனிடம் சொல்லும் போதே என் கண்களில் கண்ணீர்.

எங்கே அவனும் அழுது விடுவானோ என்று நினைக்கும் பொழுதே 'ஓ'வென்று அழ ஆரம்பித்து என்னை இறுக்கமாக பிடித்துக் கொண்டு மாமீமீமீமீமீமீ .....ரண கணங்கள்!

கொஞ்ச நேரம் அழுவான் பிறகு சரியாகி விடும் என்று அவர்கள் சொன்னாலும் அழுது கொண்டே ஹாலை கடக்கையில் பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தையை விட்டு விட்டுச் செல்லும் தாயும், முதன் முதலில் குழந்தையை விட்டுச் செல்லும் இன்னும் பலரும் என்று பல அம்மாக்கள் கண்ணீருடன் !!!

தாய்மைக்கு மொழி, இனம், நிறம் எல்லாம் கிடையாது என்றுணர்ந்த நாள்!

சிறிது நேரம் கழித்து மனம் சமாதானம் ஆகாமல் பள்ளியைத் தொடர்பு கொள்ள அவர்கள் இன்னும் உங்கள் மகன் அழுது கொண்டிருக்கிறான் என்றவுடன் அவனிடம் கொடுங்கள் என்று சொன்னதும்...

நான் கேட்டதெல்லாம் மாமீ .....மாமீ ......அழுகுரல் தான்.

வேறு எதுவும் தோணாமல் அம்மா இதோ வருகிறேன் என்று நானும் என்னை நொந்து கொண்டே பள்ளிக்கு ஓடி விட்டேன்.

ஓடி வந்து கட்டிக் கொண்டவனை தட்டிக் கொடுத்து வீட்டுக்குப் போகலாம் என்றவுடன் தான் அவன் அழுகை நின்றது. வீட்டிற்குச் சென்றவுடன் சாப்பாடு ஊட்டி விட்டு சிறிது நேரம் தூங்கு பிறகு லைப்ரரி போகலாம் என்று அவன் அமைதியானவுடன் தான் எனக்கும் நிம்மதியாயிற்று!

லைப்ரரி போய் அவனுக்குப் பிடித்த Arthur கார்ட்டூன் சீரியலில் D.W. goes to preschool dvd மற்றும் புத்தகத்தையும் எடுத்துக் கொண்டு கீறல் விழுந்த ரெக்கார்டு மாதிரி அம்மா வேலைக்குப் போகும் பொழுது D.W.எங்கே போவாள், அவள் அழுவாளா, அவள் அம்மா சொன்னதைக் கேட்ட மாதிரி நீயும் அங்கே அழாம இருப்பியாம் என்று இரவு படுக்கப் போகும் வரை மூளைச்சலவை செய்து அவனுக்கு ஏதோ புரிந்தும் புரியாமலும் கேட்டுக் கொண்டான்.

ஒரு பயத்துடனே காலையில் பள்ளிக்குச் செல்ல, நீ சமர்த்தா அழாமா இருந்தா கடைக்குப் போய் உனக்குப் பிடிச்ச Thomas the tank engine வாங்கி கொடுப்பேன் என்று ஆசை காட்டி விட்டு அவன் அழுவதற்கு முன்னே கிளம்பி விட்டேன். பிறகு போன் பண்ணிக் கேட்டதில் அவன் அமைதியாக இருக்கிறான் என்றார்கள்.

கொஞ்சம் நிம்மதி எனக்கு!

மாலையில் என்னைப் பார்த்தவுடன் நேராக கடைக்குப் போய் டிரெயின் வாங்கி விட்டுத் தான் வீட்டிற்கு என்று வாங்கிக் கொடுத்தவுடன் ஒரே குஷி! அதை பள்ளிக்கும் எடுத்துக் கொண்டு போகலாம் என்றவுடன் டபுள் குஷியாகி அடுத்த நாள் எந்த பிரச்னையும் இல்லாமல் போனான்.

இவன் கையில் இருக்கும் டிரெயினைப் பார்த்து குட்டிப் பையன்கள் விளையாட வர, பை மாமீ என்று சொல்ல இன்னும் கொஞ்சம் நிம்மதி.

அதற்கடுத்த நாட்களில் அவன் வயதையொத்த பையன்கள் எல்லாம் ஆளுக்கொரு டிரெயினை வைத்து விளையாட , அங்கிருந்தவரும் ஒரு பிரச்னையும் இல்லை இந்தக் குட்டிப் பையன்களால். எல்லோரும் சேர்ந்து நன்றாக விளையாடுகிறார்கள் என்று சொன்னார். நீங்கள் வாங்கிக் கொடுத்த டிரெயின் நன்றாகவே வேலை செய்கிறது என்றதும் மனம் லேசான மாதிரி ஒரு உணர்வு !

பெண் குழந்தைகள் ஆளுக்கொரு குட்டி பொம்மையை வைத்துக் கொண்டு தூங்க வைப்பதும், சாப்பாடு ஊட்டுவதும், சமைப்பதும் என்று அவர்கள் உலகத்தில்! பொதுவாக இரண்டிரண்டு பேர் சேர்ந்து விளையாடிக் கொண்டோ தனியாகவோ இருக்க, பையன்கள் அனைவரும் சேர்ந்து ரயிலை வைத்து விளையாடிக் கொண்டிருக்க...

இந்த வயதிலும் ஆண், பெண் குழந்தைகளின் விளையாட்டிலும், பொம்மைகளிலும்...எவ்வளவு வித்தியாசம்!!!

விளையாட நண்பர்கள் கிடைத்தவுடன் சனி,ஞாயிறுகளில் கூட பள்ளிக்குப் போக வேண்டும் என்று அடம் பிடிக்க, அவனுக்கான உலகத்தில் ஆனந்தமாக இருப்பதைப் பார்த்து ...

அது நாள் வரை இருந்த மனப்பாரம் எல்லாம் தொலைந்தே போய் விட்டது எனக்கு!










































2 comments:

  1. //எங்கே அவனும் அழுது விடுவானோ என்று நினைக்கும் பொழுதே 'ஓ'வென்று அழ ஆரம்பித்து என்னை இறுக்கமாக பிடித்துக் கொண்டு மாமீமீமீமீமீமீ .....ரண கணங்கள்! //

    கவிக்கோ அப்துல் ரகுமானின் இந்தக் கவிதைதான் என் நினைவுக்கு வருகிறது.

    கண்ணென்றும் பொன்னென்றும்
    அன்னை அழைத்தாள் - எனைக்
    கனியென்றும் கரும்பென்றும்
    கணவர் அழைத்தார்
    பெண்ணென்று நான் பிறந்து
    கேட்ட மொழிக்குள் - என்
    பிள்ளை சொன்ன அம்மா போல்
    வேறொன்றில்லை.

    - கவிக்கோ அப்துல் ரகுமான்.

    ReplyDelete
    Replies
    1. 'அம்மா'ங்கற ஒரு வார்த்தையில கட்டிப் போட்டு இன்னும் மீள முடியவில்லை :(

      Delete

அமேசிங் பிரிட்டன் -6- ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ் பயணக்குறிப்புகள்

சொல்வனம் இதழ் 314ல் வெளிவந்துள்ள 'அமேசிங் பிரிட்டன்' பயணக்கட்டுரைத் தொடரின் நான்காவது பாகம்.  ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ் பயணக்குறிப்புகள்...