Friday, April 25, 2014

பொக்கிஷம்...

குழந்தைகள் பிறந்து நோய் நொடியில்லாமால் வளரும் வரை பெற்றோர்களுக்குத் தினம் தினம் சவாலான நாட்கள் தான்!

என் மகள் பிறந்து மூன்று வயது வரை மதுரை வாசம். பாட்டி வீட்டிலேயே சீராட்டி பாராட்டி வளர்ந்த செல்லக் குழந்தை அவள். எப்போதாவது வாந்தி, பேதி, காய்ச்சல் என்று வரும். அமெரிக்கா வந்து டே கேர் செல்ல ஆரம்பித்த பிறகு தான் காது, தொண்டை வலி, காய்ச்சல் அதிகமாகியது. ஆனாலும் அவள் ஆரோக்கியமாகத் தான் இருந்தாள்.

மகன் பிறந்த மூன்று மாதங்களில் உறவினர் ஒருவர் குழந்தையின் தலையில் ஏதோ சின்ன கட்டி மாதிரி இருக்கிறது என்று சொல்ல நாங்களும் தடவிப் பார்த்ததில் ஆமா, மெத்து மெத்துன்னு இருக்கே என்னவோ ஏதோ என்று அடுத்த நாளே மருத்தவரிடம் அழைத்துச் செல்ல அவரும் மூளை அறுவை சிகிச்சை நிபுணர்களை போய் பார்க்குமாறு சொல்லி வயிற்றில் புளியை கரைத்தார்.

முதலில் ஒரு மருத்துவரைப் பார்க்க அவரும் தலையை தடவிப் பார்த்து விட்டு இந்த மாதிரி இருக்கும் சில குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை பலனளிக்கலாம் பலனளிக்காமல் போகவும் செய்யலாம் 50-50 சான்ஸ் தான். உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்றவுடன் என்ன செய்வதென்றே தெரியவில்லை. என் குழந்தைக்கு எதுவும் ஆகிடக் கூடாதே என்ற பதைபதைப்பு இருந்தாலும் அவனுக்கு ஒன்றும் இருக்காது என்று எங்களை  நாங்களே சமாதனப்படுத்திக் கொண்டோம் !

குழந்தையை கையில் கொடுத்து பிடுங்கிக் கொள்ள வேண்டும் என்றால் அவன் ஏன் எனக்கு மகனாக பிறக்க வேண்டும் என்று பித்துப் பிடித்த நிலையில் வேறு மருத்துவரையும் கலந்தாலோசித்து பார்க்கலாம் என்று அந்த நாளும் வந்தது.

அவர் மிகப் பொறுமையாக குழந்தையை டெஸ்ட் செய்தார். ஸ்கேன் செய்து பார்க்கலாம் என்று ஒரு நாளும் குறித்தாயிற்று! அதற்குள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக தலையில் கட்டியும் வளரத் தொடங்கி டேபிள் டென்னிஸ் பந்து அளவிற்கு அவன் தலையாட்டும் பொழுதெல்லாம் அதுவும் சேர்ந்து ஆடி எங்கே அவனுக்கு வலிக்குமோ என்று தூக்கத்தில் தலையை இடித்துக் கொள்ளாமல் இருக்கணுமே என்று அவனுக்காக வாங்கிய தொட்டிலையும் மறந்து என்னருகிலேயே வைத்துக் கொண்டு தூக்கத்தையும் தொலைத்தேன்.

ஒன்றும் அறியாத குழந்தையும் முகம் பார்த்து சிரிக்க அதை பார்த்து நாங்கள் அழ, இந்தச்  சிரிப்பும் குழந்தையும் நிரந்தரமா இல்லையா என்று நொடி நொடியாக அனுபவித்த ரணங்கள் வாழ்க்கையில் நான் அதுவரை சந்தித்த ரணங்களை ஒன்றுமில்லாமல் செய்து விட்டது! இதையெல்லாம் பொறுமையாக பார்த்துக் கொண்டிருந்த மகளுக்கும் சொல்ல தெரியாத மன வேதனை.

ஸ்கேன் சென்டரில் இருந்து நாளும் நேரமும் சொல்லி குழந்தை அசையாமல் இருக்க மயக்க மருந்தையும் கொடுத்து அவன் மயக்கமான பிறகு மூன்று மாத குழந்தையை மெஷினில் படுக்க வைத்து இருபக்கமும் முட்டு கொடுத்து மெதுவாக உள்ளே செல்ல பல கோணங்களிலும் மூளையை படங்கள் எடுத்துக் கொண்டிருக்க, மனம் முழுவதும் அவனுக்கு ஒன்றும் ஆகி விடக்கூடாது. அசையாமல் படுத்திருந்த அந்த நிலையில் குழந்தையைப் பார்க்க பார்க்க சத்தம் போட்டு அழவும் முடியாமல் மனதிற்குள்ளே புழுங்கத் தான் முடிந்தது.

ஒரு வழியாக மயக்கம் தெளியும் வரை குழந்தையை வைத்திருந்து அவன் எழுந்து பசி அடங்கிய பிறகு வீட்டிற்கு அனுப்பினார்கள். சிரித்துக் கொண்டே அங்கிருந்தவர்களையும் கவர்ந்த அதே நேரத்தில் கவலைப்படாதீர்கள் எல்லாவற்றிற்கும் தீர்வு கிடைக்கும் என்று  அவர்கள் நம்பிக்கையாகச்  சொன்னது பலிக்க வேண்டுமே என்று வேண்டாத கணங்கள் இல்லை, கடவுள்கள் இல்லை.

டாக்டரிடம் இருந்து எப்படா நல்ல செய்தி வரும்  மனம் தத்தளிக்க ஆரம்பித்து விட்டது. மகளை கவனித்துக் கொள்ள அம்மா இருந்ததால் என் உலகம் இவனை மட்டுமே சுற்றிக் கொண்டு இருந்தது.

அனைவரின் கவனத்தையும் ஈர்த்து அழகு குழந்தை என்றவர்கள் தலையில் கட்டியை பார்த்து ஐயோ பாவம் என்று எங்களைப் பார்த்த பரிதாபப் பார்வையில் தினம் தினம் தொடர்ந்த மன உளைச்சல்கள் உடலையும் மனதையும் சோர்வடையச் செய்தன. குழந்தையை பார்க்கும் போதெல்லாம் என் மகன் என்னுடன் இருப்பானா என்ற கவலையில் அவனைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டு அழுது அரற்ற தான் முடிந்தது!

ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்த டாக்டரும் அறுவை சிகிச்சை செய்து எடுத்து விடலாம். மூளையுடன் சம்பந்தமில்லை போலத் தான் தெரிகிறது. சிகிச்சையின் போது இன்னும் தெளிவாகத் தெரியலாம் பயப்படாதீர்கள் என்று ஆறதலாக கூறினார்.

நாளும் குறிக்கப்பட்டது. அறுவை சிகிச்சையின் போது மயக்க மருந்து கொடுக்க வேண்டும். அதனால் முதல் நாள் மாலையில் இருந்து அவனுக்கு பால் கொடுக்க கூடாது. நடு இரவிற்குப் பிறகு தண்ணீரும் கொடுக்கக் கூடாது என்று சொல்லி விட்டார்கள். இவனுக்கோ பசி அதிகம். அதுவரை நன்றாக பால் கொடுத்து விட்டு திடீரென்று நிறுத்தி தண்ணீர் கொடுத்தால் பசிக்கு அழும் குழந்தையின் குரலை கேட்க முடியவில்லை. சமாதானப்படுத்தவும் தெரியாமல் இரவு முழுவதும் அவனை நானும் கணவரும் மாற்றி மாற்றி தோளில் போட்டு தூங்க வைக்க முயற்சி செய்தோம். அழுது அழுதே களைத்துப் போய் தூங்கியவன் மீண்டும் நடு இரவில் வீவீவீவீவீல் என்று ஆரம்பித்து எப்பொழுது விடியும் என்று காத்திருந்த ஒவ்வொரு நொடியும் உயிர் போன நொடிகள் தான்!

ஆறரை மணிக்குத் தயராகி குழந்தை உயிருடன் ஒரு குறையில்லாமால் திரும்பி வர வேண்டும் என்று கடவுளையும் வேண்டிக் கொண்டு மருத்துவர்களின் கையில் கொடுக்கும் பொழுது என் உயிர் என்னிடம் இல்லை. அவர்கள் மயக்க மருந்து கொடுத்து சிகிச்சைக்குத் தயாராக்க, காத்திருந்த நொடிகளில் என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்ற பிரக்ஞையே இல்லாமல் எப்பொழுது எல்லாம் முடிந்து சுபச் செய்தியுடன் டாக்டர் வருவார் என்ற நொடிப் பொழுது அவஸ்தைகள்...

ஒவ்வொரு நொடியும் யுகங்களாக கரைய, இரண்டு மணி நேரம் கழித்து வெளியில் வந்த மருத்துவரும் கவலை வேண்டாம், கட்டியை எடுத்து விட்டோம், நல்ல வேளை மூளை வரை செல்லாததால் பாதிப்பு இல்லை. சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து விடும். பதினைந்து தையல்கள் போட்டு வலி தெரியாமல் இருக்க மருந்தும் கொடுத்திருக்கிறோம். மூன்று நாட்கள் கழித்து அழைத்து வாருங்கள் என்று சொல்லி கை குலுக்கி விட்டுப் போய் விட்டார். அன்று என் மகனை மீட்டுக் கொடுத்த அவர் தான் எனக்கு கடவுளாகத் தெரிந்தார்.

மனம் கொஞ்சம் தெளிவாக அங்கிருப்பவர்களை அப்போது தான் பார்த்தேன். உள்ளே அவர்களின் சொந்தங்களுக்கும் சிகிச்சை நடக்கிறது போல. சில நொடிகள் முன்பு வரை நான் இருந்த மன நிலையில் தான் அவர்களும் இருந்ததாக எனக்குத் தோன்றியது. அவர்களுக்கும் நல்ல செய்திகள் கிடைக்கட்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கையில் ஸ்ட்ரெட்சரில் என் குழந்தை தலையில் பெரிய கட்டுடன் பெத்த மனம் பித்தாயிற்றே. அந்த நிலையில் அவனைக் கண்டதும் ....

ஒரு வழியாக அவன் முனகி மெதுவாக கண் விழித்து இரண்டு மணி நேரம் போல் அங்கிருந்தோம். எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லி அனுப்பி விட்டார்கள்.

பசி அடங்கி அவனுலகத்தில் ஆனந்தமாக இருந்தான் என் செல்லம். காலை, மாலை, இரவு என்று அவன் பக்கத்திலேயே தவம் கிடந்தோம். தன் தலையில் ஏதோ ஒன்று பாரமாக இருப்பதை குழந்தை அறிந்திருக்க வேண்டும். தலையை திருப்பி திருப்பி பார்த்தும் ஒன்று தெரியவில்லை அவனுக்கு. தையல் காய்ந்து அரிக்க செய்ததோ என்னவோ மெதுவாக தலையை தடவப் போனவனை அவசர அவசரமாக தடுத்து கண்ணாடியில் அவன் முகத்தை காட்டி ...ம்ம்ம்... மெல்ல மெல்ல மனம் அமைதியானது!

மூன்றாம் நாள் கட்டுக்களை களைந்து தையலையும் பிரித்து விட்டார்கள். சமர்த்தாக அழாமல் இருந்தான். பேஸ்பால் மாதிரி வடுக்களுடன் இருந்த தலையை அப்பொழுது தான் பார்த்தேன்!!! அங்கு மட்டும் முடி வளராது என்று டாக்டர் சொன்னார்.

முடி வளரும் வரை உறுத்திக் கொண்டே இருந்த அந்த வடு காலம் செல்ல செல்ல பார்வையில் இருந்து மறைந்தாலும் மனதில் ஆறாத ரணங்களாகவே இருந்தது பல வருடத்திற்கும். எப்பொழுதும் ஒரு சந்தேகப் பார்வையில் உடலில் வேறு எங்கும் கட்டிகள் இல்லையே என்று சஞ்சலமாகவே இருந்தது!

எப்படியெல்லாம் என்னை வதைத்தாயடா என்று இன்றும் அவனிடம் சொல்லி புலம்பி கொண்டிருப்பேன்.

பால் இருந்தும் குடிக்க முடியாமல் அழுத குழந்தையை நினைக்கும் போதெல்லாம் பாலுக்கு கூட வழியில்லாமல் அழும் குழந்தைகளின் பசிக் கொடுமையையும், அந்த அவலத்தைக் காண நேரிடும் தாயின் மனவலியையும் என்னால் நன்றாகவே புரிந்து கொள்ள முடிகிறது.

ஒவ்வொரு தாயும் தன் குழந்தையை வளர்க்க தூக்கம், பசி, அபிலாஷைகள் என்று பலவற்றையும் தியாகம் செய்து விட்டுத் தான் இருப்பாள், இருக்கிறாள். கல்லூரி படிப்பை முடித்து வேலைக்குப் போகவிருந்த இருபத்தியோரு வயது மகனை தொலைத்த எதிர் வீட்டு ரெனியின் அம்மா, தன் மகன் உயிருடன் இருக்கிறானா இல்லையா தெரியவில்லை என்று அழும் ஒவ்வொரு நொடியும் எத்தகைய கொடிய ரணகணங்கள் ஒரு தாய்க்கு என்று என்னால் முழுவதுமாக புரிந்து கொள்ள முடிகிறது.

காலம் தான் பதில் சொல்லும்!
Monday, April 14, 2014

மீனாக்ஷி எனும் அருள் மங்கையின் தூங்கா நகரம் ...

மதுரையில பிறந்துட்டு மீனாக்ஷிய பார்க்காம போனா மனசு ஒத்துக்குமா இல்ல நிம்மதியாத் தான் இருக்க முடியுமா???

ஊருக்குப் புறப்பட சில தினங்களே இன்னுமிருக்க ஐயப்ப, செவ்வாடை, முருக பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்குமே என்று காரணங்களைச் சொல்லி ஒரு வழியாக இரவு எட்டு மணிக்கு மேல் கோவிலுக்குப் போனால் நிம்மதியாக, அமைதியாக கண் குளிர அம்மனை தரிசித்து விட்டு வரலாம் என்று ஒரு நன்னாள் இரவில் புறப்பட்டோம்.

அம்மன் சன்னதி வாசலில் அவ்வளவு கூட்டம்! தப்பு கணக்கு போட்டு விட்டோமோ?

செருப்பு டோக்கனை வாங்கிக் கொண்டு கேமரா இருக்கா, செல்போன் இருக்கா என்று கேட்டு விட்டு செக்யூரிட்டி கதவு வழியாக உள்ளே விட்டார்கள். மதம் எனும் விஷம் நாளொருமேனி பொழுதொரு வண்ணமாக வளர்ந்து பொல்லாத சதிகளுக்கு பயந்து இப்படி ஒரு நிலைமை வந்திருப்பது மனதிற்கு மிகவும் வருத்தமாக இருந்தது.

'கம்'மென்று மல்லிகை, பிச்சிப் பூ, கொழுந்து, செவ்வந்தி மாலைகளின் வாசனையை முகர்ந்து கொண்டே பிள்ளையாரையும், முருகனையும் தரிசித்து விட்டு, ஜெகஜோதியாக இருந்த வளையல்கடைகளையும், குட்டி யானையையும் கடந்து விபூதி பிள்ளையார் தலையில் விபூதியை பூசி,

முகத்தில் அடிக்கிராற்போல் சிவப்பும், வெள்ளை வர்ணமும் அடித்த தெப்பக்குள படிகளில் சீடை, முறுக்கு தின்று கொண்டே வீட்டு விஷயங்களைப் பேசிக் கொண்டிருக்கும் நடுத்தர வயதினர்களையும், சமீபத்தில் திருமணமாகி புது தாலி மெருகு குறையாமல் ஒட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்த இளம் தம்பதியர்களையும், நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்தவர்களையும், செல்போனில் கோபுரத்தை படம் எடுப்பது போல் இளம்பெண்களை 'கண்காணித்து' கொண்டிருந்தவர்களையும் பார்த்துக் கொண்டே,

நீரில்லாமல் வறண்ட குளத்தில் பொற்றாமரை...ம்ம்ம் குளம் நிரம்பியிருந்தால் பார்க்க அழகாக இருந்திருக்கும் என்று நினைத்தவாறே கோபுரங்களின் அழகை ரசித்துக் கொண்டே ஸ்பெஷல் தரிசன டிக்கெட் வாங்கி உள்ளே சென்றோம்.

அன்று மலையத்வஜ பாண்டியனின் மகள் அலங்காரம் பற்றி கேட்கவே வேண்டாம். மதுரைக்கே படி அளப்பவள்! அழகு சுந்தரியாக பல வித மலர்களைச் சூடிக் கொண்டு தீப விளக்கொளியில் அருமையான தரிசனம்!

குங்குமத்தை வாங்கிக் கொண்டு, காசு தேறுமா தேறாதா என்று பார்த்துக் கொண்டிருந்தவரையும், கூட்டத்தை சமாளிக்க காவல் காத்துக் கொண்டிருந்தவர்களையும், பெரிய்ய்ய்ய்ய்ய உண்டியலையும் கடந்து முக்குறுணி விநாயகரை கும்பிட்டுக் கொண்டே இருக்கும் பொழுதே சன்னதி மூடப் போறாங்க என்றவுடன் மொத்த ஜனமும் சுந்தரேஸ்வரரை பார்க்க ஓட்டம்.

இத்தனை நேரத்திற்குப் பிறகும் திருவிழா போலக் கூட்டம் அங்கே! கோவில் மணிகள் 'ணங் ணங்' என்றடிக்க இதுவரை கண்டிராத இரவு பூஜை. அடிச்சு பிடிச்சு பார்த்த பரவசத்தில் வெளியே வரும் பொழுது ஒருவர் பால் தூக்குச் சட்டியை கொடுத்து அம்மன் சன்னதியில் பள்ளியறை பூஜை நடக்க போகிறது எடுத்துக் கொண்டு வாருங்கள் என்றார்.

ஆஹா, கரும்பு தின்ன கசக்குமா என்ன??? அதற்குள் ஒரு பட்டர் பூமாலைக் கூடைகள் ஏந்தி வர, இன்னுமொருவர் சடாரி, விளக்குகள் என்று சன்னதி வாசலில் நிற்க, தீவட்டி முன்னே செல்ல, யானை, நாதஸ்வரம், தவில், உற்சவமூர்த்தி சுந்தரேஸ்வரருடன் சன்னதியை வலம் வந்து அம்மன் சன்னதிக்குள் நுழைய ஏற்கெனவே ஒரு கூட்டம் இடம் போட்டு உட்கார்ந்திருந்தது. நீங்க முன்னாடி போங்கம்மா என்றவுடன் பாலை அய்யரிடம் கொடுத்து விட்டு ஆவலுடன் அடுத்து என்ன பூஜையோ என்று பார்த்தால், அம்மன் அணிந்திருந்த மாலைகளை எடுத்து விட்டு புது மல்லிகை, பிச்சிப்பூ, இன்னும் அதிவாசனை தரும் மலர்களுடன் அம்மன் உற்சவசிலைக்கு சில பூஜைகள்.

உற்சவ மூர்த்திகள் பள்ளியறை சன்னதியில் வைக்கப்பட்டு வேதங்கள் முழங்க, நைவேத்தியங்கள், பல வித தீபாரதனைகள் என்று என் வாழ்வில் கண்டிராத பூஜையை கண்டதில் எனக்கும் மகளுக்கும் பேரானந்தம்!!

பக்திப் பரவசமாய் கூட்டம்! பலரும் பாடல்களைப் பாடிக் கொண்டே!

இரவு பூஜைக்கு வந்திருந்த அனைவரையும் வேறு வாசல் வழியே அனுப்பி தொன்னையில் பிரசாதமும் கொடுத்து ஒரு வழியாக வெளியில் வரும் பொழுது இரவு பத்தரைக்கு மேல் இருக்கும்!

அம்மன் சன்னதி வந்து காலணிகளை போட்டுக் கொண்டு ஹோட்டல் மனோரமாவில் சூடாக பால் குடித்து விட்டு குப்தா ஸ்டோர்ஸில் சில சாமான்களையும் வாங்கிக் கொண்டு அந்த நேரத்திலும் புத்துணர்வோடு இருந்த மதுரை மக்களை பார்த்துக் கொண்டே வீடு வந்து சேரும் பொழுது இரவு 11:30க்கும் மேல்.

போலீஸ் பாதுகாப்பு மிக நன்றாக இருந்தது! கிட்டத்தட்ட நள்ளிரவைத் தொடும் நேரம். ஆனால், கோவிலைச் சுற்றி இருந்த கூட்டத்தைப் பார்த்தால் அப்படி தெரியவில்லை!

லேட்டா கோவிலுக்குப் போனாலும் லேட்டஸ்ட் பூஜையை பார்த்த திருப்தியுடன் ஊருக்கு வந்து சேர்ந்தோம்!


படங்கள்: விஷ்வேஷ் ஒப்லா