Monday, May 19, 2014

80s சித்திரைப் பொருட்காட்சி...

மதுரையில் சித்திரைத்திருவிழா நடக்கும் அதே நேரத்தில் தமுக்கம் மைதானத்தில் சித்திரைப் பொருட்காட்சிக்கான வேலைகளும் மும்முரமாக நடக்க ஆரம்பிக்கும். கோடை விடுமுறையில் பொழுதை கழித்துக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்குஇது ஒர் இனிய வரப்பிரசாதம். பாவம் பெரியவர்களுக்குத் தான் செலவை நினைத்துக் கவலையாக இருக்கும்.

வைகையில் அழகரை தரிசித்து விட்டு அவரை ஊருக்கு அனுப்பிய பின் அடுத்த இலக்கு இந்த மைதானம் தான். எப்ப போறோம், எப்ப போறோம் என்ற நச்சரிப்பு தாங்காமல் நாங்கள் வாங்கி கொடுத்ததை தான் வாங்கிக் கொள்ள வேண்டும் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணக் கூடாது என்ற விதிகளுக்கெல்லாம் கட்டுப்பட்டு ஒரு நாள் மாலை குடும்பத்துடன் கிளம்பிவிடுவோம். அப்போது பார்க்க வேண்டுமே எங்களை! நாங்கள் பொருட்காட்சிக்குப் போகிறோம் என்று மைக் வைத்துச் சொல்லாத குறையாக தெருவெல்லாம் சொல்லிவிட்டு பெருமையுடன் கிளம்புவோம்.

அப்பா, அம்மா கைப்பிடித்துக் கொண்டு போகும் சுகமே அலாதி தான். அதற்கும் எங்களுக்குள் போட்டி இருக்கும்.

பொருட்காட்சிக்குப் போகும் குழந்தைகளின் கண்களில் தெரியும் குதூகலம் கும்பல் கும்பலாக மக்கள் கூட்டம் என்று அந்த இடமே 'கலகல'வென்றிருக்கும்.

தமுக்கம் மைதானத்தின் முன் இருக்கும் தமிழ் அன்னை ஆரம்பித்து மைதானம் முழுவதும் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு அந்த பகுதி முழுவதும் 'மினுக்மினுக்' என்று ஜொலிக்க, கவுண்டரில் டிக்கெட் வாங்கிக் கொண்டு போனவுடன் முதலில் போய் நிற்கும் இடம் போக்குவரத்துத்துறை சார்பில் வைக்கப்பட்டிருக்கும் கண்காட்சி. சிறிய வடிவில் அமைக்கப்பட்ட அழகான ஊர். அதைச் சுற்றி சுற்றி வரும் மினியேச்சர் கார்கள், பஸ்கள், ரயில் பாதைகள், ரயில்கள். வீடுகள், மரங்கள், விளையாட்டு மைதானம், மக்கள், குழந்தைகள் என்று பார்க்க பிரமிக்கும் வகையில் செய்திகளுடன் படங்களும் என்று அந்த கண்காட்சி நன்றாகவே இருக்கும். அவ்வளவாக கூட்டம் இருக்காது


அன்றைய துறை அமைச்சர் வணக்கம் சொல்வது போன்ற போஸ்டர், முதலமைச்சர் போஸ்டர்களை தாண்டி வெளியே வந்தால், மைதானத்திற்குள் குழந்தைகளுக்கான ரயிலில் குழந்தைகளுடன் பெற்றோர்களும் குழந்தைகளாய் கையசைத்துக் கொண்டே போவதைப் பார்த்து விட்டு,

எதிர்த்தாற் போல் நீண்ட கிருதா, பெல்பாட்டம் என்று அமிதாப், தர்மேந்திரா , ராஜேஷ் கண்ணா, சிகரெட்டை வாயில் வைத்துக் கொண்டு ஸ்டைலாக ரஜினி, ஸ்டெப் கட்டிங் சொக்கும் பார்வையுடன் கமல், தாஜ்மஹால், கோவில் என்று பல வண்ண உருவ அட்டைகளுடன் போட்டோ எடுத்துக் கொள்ள முடியும் என்று கடைக்காரர் கூவிக் கொண்டிருக்க, யாருடன் எடுத்துக் கொள்ளலாம் என்று யோசித்துக் கொண்டே தாஜ்மஹால் முன்பு நாங்கள் அமர்ந்து கொண்டு படம் எடுத்துக் கொள்ள எடுத்தவரும் ஒரு மணி நேரம் கழித்து வாருங்கள் என்று சொல்லும் பொழுது ஏதோ நிஜ தாஜ்மஹாலுக்கே போய் எடுத்து விட்ட சந்தோஷத்தில் படம் எப்படி வந்திருக்குமோ என்று எண்ணிக் கொண்டே அடுத்த கடைக்கு விஜயம்.

பெரும்பாலும் வட இந்திய மாநிலங்களிலிருந்து விதவிதமான சேலைகள், கைவினைப் பொருட்கள் என்று எதையாவது ஒன்றை வாங்கத் தூண்டும் விதத்தில் பரப்பி வைத்திருப்பார்கள். திரும்பி அம்மாவை பார்க்கும் போதே எல்லாம் வீட்டுக்கு போகும் போது பார்த்துக்கலாம் என்று நாங்கள் ஏதாவது கேட்கும் முன்னே அப்பாவோ அம்மாவோ சொல்ல அடுத்து என்னாவாக இருக்கும் என்ற ஆவலுடன் ஓடிப் போய்க் கொண்டிருப்போம்.

சும்மா சும்மா ஓடிப்போய்க்கிட்டிருந்தே யாராவது தூக்கிட்டுப் போயிருவாங்க. எல்லாரும் சேர்ந்தே வாங்க என்று அப்ப அப்ப கட்டளைகள் வந்து கொண்டே இருக்க, காதுல கையில போடுறதுன்னு அன்றைய நதியா, குஷ்பூ மாடல்கள் கண்களில் மின்னலடிக்கும்.கேட்க நினைக்கும் மனதை அடக்கிக் கொண்டே, இல்லேன்னா திட்டு கிடைக்கும். வீட்டுக்குப் போனா அடியும் கிடைக்கும்!

அனைத்துக் கடைகளிலும் பெண்கள் கூட்டம் அலை மோதும். பேரம் பேசி சாமான்களை வாங்கி கொண்டிருப்பார்கள். சிறு குழந்தைகளுக்கான பொம்மைகள் பலூன்கள், விளையாட்டு சாமான்கள் என்றிருக்கும் கடைகள் முன் தொண்டை கிழிய கத்தி ஆர்ப்பரிக்கும் குழந்தைகளை பார்க்கவே பாவமாக இருக்கும்.

ஒரு கடையில் ஒருவர் சரசரவென்று பஜ்ஜிக்கு வாழைக்காய், கிழங்கு என்று சீவி பொரித்தெடுப்பதை பார்த்து நாமும் வாங்கினால் அப்படியே செய்யலாம் என்று நினைத்து வாங்குபவர்கள் பலர். அதே போல் முறுக்கு பிழிவதைக் கூட அனாயசமாக பண்ணுவதைப் பார்த்து வாங்கி ஏமாந்தவரும் பலர். இதற்குள் கொஞ்சம் களைத்திருப்போம். அங்கு நடக்கும் நாடகத்தையோ, நாட்டிய நிகழ்ச்சியையோ சிறிது நேரம் பார்த்து விட்டு(சொற்ப கூட்டமே அந்த இடத்தில் இருக்கும்)

பெல்பாட்டம் ஸ்டெப் கட்டிங் மன்மத குஞ்சுகள் சிங்கிளாக வராமல் கூட்டமாக வந்து கூட்டத்தில் இளம்பெண்களை நோட்டம் விடுவதும், சில்லறை கமெண்ட்களை இளித்துக் கொண்டே சொல்வதும், பெண்களை பின்தொடருவதும் போன்ற கூத்துக்களும் நடந்து கொண்டிருக்கும்.

பெண் குழந்தைகளை பெற்றவர்களுக்குத் தான் எத்தனை கவலைகள்?

ஏதாவது குடிக்க வேண்டும் என்றவுடன் அப்பாவும் என்ன வேணும் என்று கேட்க,  குடித்தவுடன் 'சுர்'ரென்று உச்சி மண்டையில் ஏதோ பண்ணுமே, லிம்கா குடிக்கலாமா ? இனிப்பும் புளிப்புமா டொரினோ, ஃபேன்ட்டாவா? வழுக்கையுடன் இனிப்பான இளநீரா, இல்லை இனிக்க இனிக்க தொண்டையில் கரையும் ஐஸ்கிரீம் , திகர்தண்டாவா என்று இங்கி பிங்கி பாங்கி போட்டு கேட்டதை வாங்கிக் கொடுப்பார்.

சிரிப்பும் கும்மாளமுமாக இருக்கும் குடும்பங்களும், ஐஸ்கிரீமை கைகளில் வழிய விட்டு அதையும் நக்கிக் கொண்டே அவசர அவசரமாக சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்களையும் பார்க்க வேடிக்கையாக இருக்கும். அதற்குள் தெரிந்தவர்களைப் பார்த்து விட்டால் அவர்கள் என்ன சாமான்கள் வாங்கினார்கள் என்றதிலிருந்து என்ன என்ன கண்காட்சிகளைப் பார்த்தார்கள் என்று கேட்டுத் தெரிந்து விட்டு...


ஏரோப்ளேன் , கப் அண்ட் சாசர் என்று பலவிதமான ராட்டினங்களில் ஏறி கடைசியில் ராட்சத ராட்டினம் ஏற வரிசையில் காத்திருப்போம். ஒன்றும் பயமில்லையே என்று அப்பா,அம்மா கேட்க, பயமிருந்தாலும் ஏற வேண்டும் என்ற ஆசையில் இல்லை என்று தலையாட்டி விட்டு ரெண்டு ரெண்டு பேரா ஏறிக்குங்க என்றவுடன் ஆடும் இருக்கையில் அமரும் போதே முகத்தில் கலவரம் தொற்றிக் கொள்ளும்.

மெதுவாக ராட்டினம் மேலே போக அடி வயிற்றில் கலக்கமும், மேலே போக போக தலை சுற்றுவது போலவும் கீழே பார்த்தால் அந்தரங்கத்தில் தொங்குவது போலவும் இருக்கும். இருக்கையின் முன் கம்பியை இறுக்கப் பிடித்துக் கொண்டுஉச்சியிலிருந்து பார்த்தால் தமுக்கம் மைதானம் முழுவதும் சிறு சிறு உருவ மனிதர்களுடன் விளக்கொளியில் பார்க்க அருமையாக இருந்தாலும் பயத்தில் அதை அனுபவிக்க முடியாமல் போவது தான் கொடுமை!

ஒரு சில விடலைகள் அங்கிருக்கும் பெண்களை கவருவதற்கு இரண்டு கைகளையும் தூக்கிக் கொண்டு தனக்கு பயமே இல்லை இதெல்லாம் ஜுஜுபி என்று ஆர்ப்பரிக்க, சிலர் வாந்தி எடுக்க என்று எப்படா இது முடியும் என்ற மனநிலைக்கு வரும் பொழுது இறங்குங்கள் என்றவுடன் தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஓடி வருவோம். ஆனால் ஒவ்வொரு முறையும் தவறாமல் ஏறி விடுவோம். அப்பத்தானே, நான் ஜயன்ட் வீலில் ஏறினேனே என்று சொல்லிப் பீத்திக்கலாம் :)

அடுத்து எங்கே போகலாம் என்று அப்பா கேட்டவுடன் மரணக்கிணறு என்று கோரசாக சொல்ல டிக்கெட்டை கொடுத்து விட்டு அந்த மரப்பலகையின் வழியாக உள்ளே போக கீழே உள்ள நுழைவாயிலின் வழியே 'டபடப'வென்ற சத்தத்துடன் ஒரு பைக்கில் இளைஞன் மெதுவாக உள்ளே வர, அந்த இடம் முழுவதுமே அதிரும். மெதுவாக மேலே வர,வர சத்தமும், அதிர்வும் அதிகமாக கூட்டம் ஆர்ப்பரிக்க அவர் அந்த பலகை கிணற்றில் 'விர்விர்'ரென்று சுற்றி வர, பார்ப்பவர்களுக்குத் தான் எப்படி இவரால் முடிகிறது என்று ஆச்சரியமாக இருக்கும்.

வெளியே வந்தால் வைக்கோல் வாசனை, சாணி  என்ற கலவையான இடத்தில் தேமே என்று ஆடு, கோழி, மயில் பன்றி, கரடி சிங்கம், புலி என்று பார்க்க பாவமாய் இருக்கும். ஆனால் பயமாகவும் இருக்கும். அந்த கூடாரத்தையும் தவறாமல் பார்த்து விட்டு வந்து விடுவோம்.

ஒரு வழியாக எல்லாம் பார்த்த திருப்தியில் சாப்பிட போககையில் லாவகமாக திருப்பி திருப்பி போடும் சோளா பட்டுரா என்று உப்பிய பூரியும், காரமான சன்னா மசாலாவும் வாங்கி சாப்பிட்டு விட்டு, வரும் வழியில் மறக்காமல் கறுப்பு/வெள்ளை தாஜ்மஹால் போட்டோவையும் வாங்கிக் கொண்டு வீடும் வந்து சேரும் பொழுது நடந்த களைப்பும் போய் விட்டு வந்த திருப்தியும் சேர தூக்கமும் சொக்க...

கோடை விடுமுறையின் மகத்தானஅந்நாள் இனிமையான நன்னாள்

No comments:

Post a Comment