Saturday, May 30, 2015

ரசம் - நேசம்- பாசம்

சமீபத்தில் நண்பர் ஒருவர் வீட்டில் சூப் மாதிரி இருக்கே என்ன இது என்று கேட்டதற்கு, எலுமிச்சம்பழ ரசம், டேஸ்ட் பண்ணி பாருங்க என்றதும், அட, ஆமா, டேஸ்ட்டா இருக்கு! இஞ்சி வாசம் வருதே? ஆமா, இஞ்சி துருவி போட்ருக்கோம்ல என்றார்கள். வித்தியாசமான சுவையுடன் இருந்தது. அதையொட்டி சில தினங்களில், முகநூல் சாப்பாட்டு குரூப்பில் அந்த ரசத்தை ஒருவர் குறிப்பிட்டிருந்தார். விடுவேனா??? ரெசிபி ப்ளீஸ்! என்றவுடன் விரிவாக எழுதியிருந்தார்.

இந்த வாரம் ட்ரை பண்ணிட வேண்டியது தான் என்று அந்த வாரமே செய்து பார்த்ததில் மிகவும் திருப்தியாக வந்திருந்தது. கணவரும், 'ஆஹோ ஓஹோ' வென்று (வேற வழி !) மெச்சி சாப்பிட்டார். மிகவும் எளிதான குறிப்பு. கொஞ்ச நாளைக்கு இந்த ரசம் பண்ணிட வேண்டியது தான்.

மகனிடம், பருப்புக்கீரை தீர்ந்து விட்டது. ரசஞ்சோறு சாப்பிட சொன்னால், எனக்கு அது வேண்டாம்மா என்றான். ரசஞ்சோறு வேண்டாமா?? நானெல்லாம் அடிச்சு பிடிச்சு ரசிச்சு சாப்பிட்டதை இப்படி வேண்டாம் என்கிறானே என்ன பசங்க?

என் அம்மா ரசம் வைப்பதை வேடிக்கை பார்க்கவே நன்றாக இருக்கும். வீட்டில் பருப்புடன் கூடிய ரசம், பருப்பு இல்லாத ரசம் என்று இரு வகை ரசம் வைப்பார்கள். பருப்பு இல்லாத ரசம் ஈஸி ரசம். புளியை கரைத்து ஒரு கொதி வந்தவுடன், பூண்டு தட்டிப் போட்டு, ரசப்பவுடர் , உப்பு சேர்த்து கொதி வந்தவுடன் இறக்கி விடுவார்கள். அதில் தாளிப்பு தான் சுவையை கூட்டும். நெய்யில் கடுகு வெடித்தவுடன், கருவேப்பிலை போட்டு, கரைத்து வைத்த பெருங்காயத் தண்ணீரை கொஞ்சம் சேர்த்தவுடன், 'சொய்ங்ங்ங்ங்' சத்தமும், பெருங்காய வாசமும், மேலே மிதக்கும் கொத்தமல்லி வாசமும் ...உறங்கிக் கொண்டிருக்கும் பசியை உறும வைத்து விடும்.

ரசம் சோற்றுக்கு சாதம் கொஞ்சம் குழைவா இருக்கணும். அதோடு  நல்லா ரசத்தை ஊத்தி ரசமும், சோறும் ஒண்ணு மண்ணா கலந்து அதோட எந்த காம்பினேஷன் நல்லா இருக்கும்னா ,
சுக்கா வறுவல் - ஐயோ! எவ்வளவு சோறு சாப்பிட்டோம்னே தெரியாது.
மீன் வறுவல் - ஆஹா!!
கருவாடு - வாரே வா!
உப்புக்கண்டம் - நோ சான்ஸ் !
தேங்காயும், மட்டனும், சின்ன வெங்காயமும் சேர்த்து வேக வைத்தது - அடடா!!
பருப்பு வடை - ம்ம்ம்ம்ம்
கொலுவிஞ்சிக்காய் ஊறுகாய் (இரவு நேர சாப்பாட்டிற்கு ஐடியல் )
பொரிச்ச அப்பளம் -ஓகே
உருளைக்கிழங்கு கார வறுவல் கூட நல்லா தான் இருக்கும்.
பட்டாணி மசால்
கருப்பு சுண்டல் மசால்
பட்டர்பீன்ஸ் மசால்
காராபூந்தி
எண்ணையில் வறுத்த கடலை
பக்கோடா
எல்லாமே அம்சமா தான் இருக்கும்.

இப்ப மைசூர் ரசம், மிளகு ரசம், மல்லி ரசம்,  பைன்-ஆப்பிள் ரசம்னு விதம்விதமா தசாவதாரம் எடுத்து வந்தாலும், இந்த காலத்துப் பசங்களுக்கு தெரியலையே இதோட அருமை.

எல்லாத்துக்கும் முத்தாய்ப்பா அம்மா கையால பிசைஞ்ச சாதம் உருட்டி உருட்டி கொடுத்தா, வயிறு ரொம்பி கழுத்து வரைக்கும் வந்து முட்ற அளவுக்குத் திருப்தியா சாப்பிடறது தான்!

அந்த புளிப்பு ரசம் ...ம்ம்ம்ம்...இப்ப அப்படியே குடிப்பேனே ரேஞ்சில வந்து நிக்குது.
Sunday, May 10, 2015

மதுரை-இராமேஸ்வரம் 2

பல வருடங்களுக்கு முன் பாட்டியுடன் ஒரு முறையும், பள்ளிச்சுற்றுலாவாகவும் இராமேஸ்வரம் கோவிலுக்குச் சென்றிருக்கிறேன் .  இந்த முறை நாங்கள் சென்ற நாளிலும் நல்ல கூட்டம்! பெயர் பெற்ற ஸ்தலம் அல்லவா?

ஊரிலிருந்து கிளம்பும் போதே தீர்த்தங்களில் மகளும், நானும் நீராடுவதில்லை. தலையில் மட்டும் தண்ணீர் தெளித்துக் கொள்வது என்று முடிவு செய்திருந்தோம். அன்று பார்த்து ஆடி அமாவாசையோ ஏதோ என்று சொல்லி எல்லா தீர்த்தக் கிணறுகளையும் மூடி விட்டதில் கணவருக்கு கொஞ்சம் வருத்தம்!


கடற்கரையோரம் மண்டபகங்களை  அழகாக கட்டி படிகள் சுத்தமாக இருந்தாலும், இல்லாத ஜலகண்டம் இருப்பதாக நினைத்துக் கொண்டு தண்ணீருக்குள் காலை விட பயமாகத் தான் இருந்தது. 'தளுக் தளுக்'  என்று கரையை தொட்டுச் செல்லும் அலைகள் பார்ப்பதற்கு இன்பம் தான். வெயிலில் கடல் நீர் மின்னியது வேறு மிகவும் நன்றாக இருந்தது. அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது என்று கடல் நீரில் காலை அலம்பி விட்டு வந்தோம்.

கோவிலுக்கெதிரில் இறந்தவர்களுக்கு திவசம் செய்வதை தடை செய்திருக்கிறார்கள். அதனால் துணி, மாலைகள் இன்ன பிற திவச பொருட்கள் நீரில் மிதக்காமல் இருந்தது.

கோவிலுக்குள் சென்றவுடன் அங்கிருந்த பட்டர் ஒருவர் சந்நிதி மூடப்பட்டுள்ளது என்றும், சுவாமியை பார்க்க வேண்டுமென்றால் ராமர் பாதம் கோவிலுக்குச் செல்ல வேண்டும் என்று சொன்னார். சரி,பிரகாரங்களைச் சுற்றிப் பார்க்கலாம் என்று கோவில் முழுவதும் சிற்பங்களுடன் கூடிய பிரமாண்ட மண்டபங்களை வலம் வந்தோம். என்ன ஒரு நேர்த்தியான வேலைப்பாடு! பெரிய பிரகாரங்களும் கூட!

நாங்கள் சென்றிருந்த பொழுது சுற்றுப் பிரகாரங்களுக்கு வண்ணம் அடித்துக் கொண்டிருந்தார்கள். கோவிலுக்குள்ளும் சிறிது கூட்டம் இருந்தது. வட மாநிலத்து மக்கள் நிறைய தெரிந்தார்கள். கோவிலைச் சுற்றி வெளியூர்களில் இருந்து மக்கள் தங்கிச் செல்லும் வகையில் வட நாட்டவர் சத்திரங்கள் பல இருந்தது. ஹோட்டல் ஒன்றில் காபி என்று ஒன்றை குடித்து விட்டு அருகில் இருந்த கடைகளுக்குச் சென்றோம்.

செல்வி ஸ்படிகமணிமாலை வாங்க அதை தேடிக் கொண்டிருந்தார். சங்கு, பாசிமணிகள், வீட்டு அலங்காரப்பொருட்கள் என்று பலவும் விற்றுக் கொண்டிக்க, சங்குகளில் பெயர் எழுதியும் விற்றுக் கொண்டிருந்தார்கள். நாங்கள் அனைவரும் எங்களுக்காகவும், நண்பர்களுக்காகவும் சிறிய சங்குகளில் பெயர்களை எழுதி வாங்கிக் கொண்டோம். அதில் சில மணி நேரங்கள் கழிந்தது. அனைத்து அமெரிக்க நண்பர்களுக்கும் மிகவும் பிடித்த பரிசாக அமைந்து விட்டதில் எனக்குத் திருப்தியும் கூட!

பிறகு ராமர் பாதம் சென்றோம். அங்கு சுவாமியை தரிசிக்க வந்த கூட்டம் நிறைய இருந்தது. அழகிய பல்லக்கில் வீற்றிருந்த சுவாமியையும், தாயாரையும் தரிசித்து விட்டு சிறிது நேரம் கோவிலைச் சுற்றிப் பார்த்தோம். படிகளில் ஏறி அங்கிருந்து கடலை பார்க்க கொள்ளை அழகு.

தனுஷ்கோடி செல்ல அங்கிருந்து கிளம்பினோம். ஏற்கெனவே அங்கு சென்று வந்த அனுபவத்தை கணவர் கூறி இருந்ததால் குழந்தைகளும் ஆவலுடன் இருந்தார்கள். உறங்கிக் கொண்டிருந்த ஊரையே சூறாவளி  முழுங்கிக் கொண்டது என்று படித்திருந்ததால் வருத்தமாகவும், ஊரை பார்க்க ஆர்வமாகவும் இருந்தது. அங்கு செல்வதற்கு முறையான சாலைகள் இல்லை. ஓரிடத்தில் பஸ்களும், வேன்களும், கார்களும் நிறுத்தியிருந்தார்கள்.

அங்கிருந்து தனுஷ்கோடி செல்ல அதற்கென சில மீன்பாடி வண்டிகள் வைத்திருக்கிறார்கள். ரிஸ்க் எடுத்துக் கொண்டு சொந்த வண்டியில் கூட போகலாம். நடுவில் கடல் மண் எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது என்று பீதியை கிளப்பி விட, அநியாய விலை கொடுத்து அந்த வண்டிக்குள் ஏறி விட்டோம். முருகனுக்கோ அதில் ஏற இஷ்டமே இல்லை. லாரி என்றால் கூட எங்களுக்கு ஓகே. எல்லாம் ஒரு அனுபவம் தான். நம்மை விட குழந்தைகள் நன்கு அனுபவிப்பார்கள். ஏறுங்கள் என்று சொல்லி ஒரு வழியாக அவரை சம்மதிக்க வைத்து ஏற்றினோம். பயந்து கொண்டே தான் ஏறினார். பெண்கள் அனைவருக்கும் சீட் கிடைத்து விட்டது. என் கணவருக்கோ வண்டியின் பின்னால் நின்று கொண்டு வருவதில் அப்படி ஒரு ஆனந்தம்!

பாவம், ஒரு நடுத்தர வயதுள்ள அம்மாவால் ஏறக் கூட முடியவில்லை. படி போன்ற வசதிகளும் கிடையாது. இரண்டு பேர் சேர்ந்து அவரை தூக்கி விட்டார்கள்.

இப்படி ஒரு வண்டியில், அதுவும் சகதியில் மேலும் கீழும் தூக்கிப் போட்டுக் கொண்டே சென்றது வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவம் தான். சிரிப்பும் கும்மாளமுமாக இருந்தது. நடுவில் ஓரிடத்தில் சேற்றில் சக்கரங்கள் மாட்டிக் கொண்டு விட்டது. இப்படியே புதைந்து விடுமோ என்ற பயம் கூட வந்து விட்டது. ஒரு வழியாக அதிலிருந்து மீண்டு மண்ணுக்குள் புதைந்து கிடந்த ஊருக்குள் கொண்டு வந்து நிறுத்தி விட்டு சீக்கிரம் சுற்றிப் பார்த்து வந்து விடுங்கள் என்று சொல்லி விட்டார் டிரைவர்.

சிதிலமடைந்த கோவில், வீடுகள், தேவாலயம்...எத்தனை உயிர்கள் இழந்தனவோ அந்த சுனாமியால்?? எத்தகைய கொடூரமான ஒரு நிகழ்வு! அங்கு நின்றிருந்த அந்த நொடிப் பொழுதில்  இருண்ட இரவின் கொடூரத் தாண்டவத்தை கற்பனை செய்ய, மனம் கனத்தது.

தொலைவில் ஒரு பூசாரி சிவனை வைத்து பூஜை செய்து கொண்டிருந்தார். அருகிலேயே ஒரு பெண், பாசி மணி மாலைகள் விற்றுக் கொண்டிருந்தார். சிலர், திவச பூஜைகளும் செய்து கொண்டிருந்தார்கள்.

வங்கக்கடலும், இந்தியப் பெருங்கடலும் சங்கமிக்கும் இடத்தில் இரு வேறு நிறத்தில் இருப்பது போல் எனக்குத் தோன்றியது. சிறிது நேரம் அலைகளுடன் குழந்தைகள் நடந்து விளையாடினார்கள். சிலர் அந்தப் பக்கம் தான் ஸ்ரீலங்கா இருக்கு என்று எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்!

எவ்வளவு அழகான கடல்! கண்ணுக்கெட்டிய தூரம் வரை கடல் கடல் மட்டுமே! ஆரவார அலைகளுக்குப் பின்னால் இருப்பது அமைதியா?? பேரழிவைச் சுமந்த உயிர்களா? எண்ணங்களா??அமைதியாக கிளம்பினோம்.

காரில் ஏறி ராமநாதபுரத்தில் இரவு உணவவைச் சாப்பிடுவது என்று தீர்மானித்து கிளம்பி விட்டோம். போகும் வழியில் டிரைவர் இங்க ஒரு அருமையான பெருமாள் கோவில் இருக்கு. இவ்வளவு தூரம் வந்துட்டீங்க, பார்த்துட்டு போயிடுங்க என்றார். அப்போதே நேரம் எட்டு மணிக்கு மேல் இருக்கும். எப்படியும் போய்ச் சேர இன்னும் ஒரு மணிநேரமாவது ஆகி விடும். குழந்தைகளோ பசிக்குது பாட்டை அப்போதே பாட ஆரம்பித்திருந்தார்கள் வானம் வேறு சிணுங்கிக் கொண்டிருந்தது. சரி, கோவிலுக்குப் போகலாம் என்று தீர்மானித்து முருகனுக்கும் தகவல் சொல்லியாகி விட்டது.

திருப்புல்லாணியில் இருக்கும் ஆதி ஜகன்னாத பெருமாள் கோவில் மூடப்போகும் நேரத்திற்கு உள்ளே நுழைந்தோம். 108 திவ்யதேசங்களில் ஒன்று என்று பட்டர் கூற, அழகான கரிய பெருமாள், தாயார் லக்ஷ்மியை சேவித்து விட்டு வந்தோம். இரவில் சென்றதாலும், நேரமின்மையாலும் கோவிலை முழுமையாக சுற்றிப் பார்க்க முடியவில்லை. சாவகாசமாக ஒருமுறை செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். பிரசாதமாக சுவையான காரமான புளியோதரையும் சிறிது கிடைத்தது. அது பசியை மேலும் கிளப்பி விட, ஹோட்டலுக்குச் சென்று திருப்தியாக சாப்பிட்டு வந்தோம். இவ்வளவு லேட்டாக வந்து இப்படி சாப்பிடுகிறார்களே என்று சர்வர் நினைத்திருப்பார்.

இரவு உணவு எதுவும் வேண்டாம் தூக்கம் வந்து விடும் என்று டிரைவர் வெறும் காபி மட்டுமே சாப்பிட்டார். வண்டியில் ஏறியவுடன் என்னைத் தவிர எல்லோரும் உறங்கி விட, தூக்க கலக்கத்துடன் இருந்த டிரைவர் தூங்காமல் ஓட்டுகிறாரா என்று நடுநடுவே அவரிடம் வெட்டிப் பேச்சு பேசிக் கொண்டே வீடு  வந்து சேர்ந்தோம்.படங்கள்: விஷ்வேஷ் ஒப்லா & முருகன்