Thursday, July 23, 2015

அது ஒரு கனா காலம்...

கல்லூரிப் படிப்பு முடிந்து இருபத்தைந்து வருடங்கள் எப்படித் தான் ஓடோடி விட்டது? படிக்க வேண்டுமே என்ற கவலையைத் தவிர வேறொன்றையும் அறியா பருவம் அது! வாழ்க்கையின் மேடு பள்ளங்களை, நல்லது கெட்டதுகளை இன்றும் கற்றுக் கொண்டிருக்கும் இதே வேளையில் அக்கால நினைவுகள் தரும் சுகம் என்றுமே இனிமையானைவ!

வியர்த்து விறுவிறுக்க பயத்துடன் வாழ்வின் முதல் இண்டர்வியூ, கல்லூரி முதல்வருடன்! அட்மிஷன் முடிந்து வெளியில் வரும் பொழுது அப்பா, அம்மா முகத்தில் அவர்கள் வாழ்வில் சாதித்து விட்ட சாதனை! இருக்காதா பின்னே?? பத்தாம் வகுப்பு முடிந்தவுடன் திருமணம், பன்னிரெண்டாம் வகுப்பு முடிந்தவுடன் திருமணம் என்று பெண்களைப் பெற்றவர்கள் தங்கள் கடமையை முடித்துக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் குப்பா வீட்டுப் பெண்கள் (அக்காவும், நானும் ) முதன்முதலில் கல்லூரியில் காலடி எடுத்து வைக்கப் போகிறார்கள் என்ற பெருமிதத்தில் என் பெற்றோர்கள்!

அதுவரை பெண்கள் பள்ளியில் படித்து விட்டு முதன்முதலில் ஆண்-பெண் இருபாலாரும் சேர்ந்து படிக்கப் போகும் கல்லூரியில் படிக்கப் போகிறோம் என்ற ஆவல் எனக்கு! அம்மாவுக்கோ பெருங்கவலை. கல்லூரியில் நன்கு படித்து எந்த வம்பு தும்பிலும் மாட்டிக் கொள்ளாமல் தன் பெண்கள் இருக்க வேண்டுமே என்று அந்த நொடியிலிருந்து அறிவுரைகள்! பயப்படாதேம்மா, நீ பயப்படற மாதிரி எதுவும் நடக்காது என்று சொன்ன போதும் அவர் ஒருவித தவிப்பில் தான் இருந்தார். தேவையில்லாம யார் கூடவும் பேசாதே என்று பொத்தாம் பொதுவாக சொன்னாலும் அது எனக்கான அறிவுரை என்று எனக்கு நன்றாகவே புரிந்தது :) எங்களுக்காக அதிகாலையில் எழுந்து காலை, மதிய உணவு என்று பார்த்து பார்த்து பண்ணியதும், படிக்கிற பிள்ளைகள் என்று வீட்டு வேலை அனைத்தையும் அம்மாவே 'மாங்குமாங்'கென்று செய்ததும் நினைத்தால் வருத்தமாக இருக்கிறது இப்போது L

வீட்டின் அருகில் இருக்கும் சீனியர்களிடமிருந்து கல்லூரிக்கு எந்த பஸ், நேரம் என்று தெரிந்து வைத்துக் கொண்டாயிற்று. அவர்களே கல்லூரி பஸ் டிக்கெட்டும் முதல் நாளுக்காக கொடுத்து விட்டார்கள்! பள்ளிக்கு எட்டரை மணிக்கு கிளம்புவதே பெரிய போராட்டம். இப்போது கல்லூரிக்கோ ஏழு மணிக்கு கிளம்ப வேண்டும். வீட்டிலிருந்து இருபது-இருபத்தைந்து நிமிட நடை. வேர்த்து ஒழுக விறுவிறுவென்று மாணவர்கள் பலருடன் நடந்து பஸ்நிறுத்தத்தில் காத்திருக்கும் வேறு சில மாணவிகளைப் பார்த்தவுடன் தான் அப்பாடா, கல்லூரி பஸ் இன்னும் போகவில்லை என்ற நிம்மதி கிடைக்கும். ஒவ்வொரு நிறுத்தத்தில் இருந்தும் ஆசிரியர்களையும் மாணவிகளையும் ஏற்றிக் கொண்டு ராகிங் கொடுமையில் இருந்து தப்பிக்க உதவிய ஆபத்பாந்தவன்! அந்த கட்டை வண்டியில் வரக்கூடாது டவுன்பஸ்சில் தான் வர வேண்டும் என்ற சீனியர்களின் கட்டளை எரிச்சலைத் தான் தந்தது L
கல்லூரியில் முதல் நாள்! படபடப்புடன் ஒரு அரங்கில் காத்திருந்தோம். கல்லூரி முதல்வர், ஆசிரியர்கள் பேசினார்கள். எதுவும் மண்டையில் ஏறவில்லை. ஏனோ, ஒருவித பயத்துடனே இருந்தேன். அவரவர் வகுப்பிற்குச் சென்ற பொழுது என்னுடன் பள்ளியில் படித்த தோழிகள், அக்கா என்று அனைவருமே ஒரே வகுப்பில் இருந்தது ஆறுதலான விஷயம். காலையில் ஆரம்பித்த வகுப்புகள் மாலை வரை நீண்டு எப்படா முடியும் என்றிருந்தது! முதல் வருடம் முழுவதும் கடைசி பெஞ்ச் இல்லையென்றால் அதற்கு முந்தின பெஞ்ச் :)

முதலாம் ஆண்டில் பல வகுப்புகளும் எனக்குப் பிடித்திருந்தது, இயற்பியலைத் தவிர :( புதிதாக சிவில் & மெக்கானிக்கல் அறிமுகம். இஞ்சினியரிங் டிராயிங் போல ஒரு அறுவையை நான் பார்த்ததில்லைL முதலாம் ஆண்டு முழுவதும் கூட படித்த மாணவிகளைத் தவிர லேபில் ஒரு சில மாணவர்கள் அறிமுகமானார்கள். அதிக பேச்சில்லை யாருடனும். ராகிங் காரணமாக வகுப்பை விட்டு வெளியில் செல்ல பயம். பிரேக் நேரத்திலும், மதிய உணவு நேரத்திலும் திகிலுடன் போய் வந்து கொண்டிருந்தோம். யார் சீனியர், யார் பிற வகுப்பு மாணவர்கள் என்று தெரியவே பல மாதங்கள் ஆனது! ஆனாலும், தெனாலி கமல் போல், எவனை பார்த்தாலும் பயம் தான் :(

எப்படியோ முதாலம் ஆண்டு முடிந்து எந்த பிராஞ்ச் என்று தெரிந்தவுடன் நிம்மதியாக இருந்தது. இனி இந்த மாணவர்களுடன் தான் மூன்று வருடங்கள். கணினியியல் துறை அப்போது தான் ஆரம்பித்திருந்த நேரம்! அதற்கென கட்டடம் உருவாகிக் கொண்டிருக்க, வேறு வழியில்லாமல் மெக்கானிக்கல் வகுப்புகள் நடக்கும் இடத்தில் எங்கள் வகுப்பும்! வேறு வினை :( மீண்டும் பயத்துடனே வகுப்புக்கு வருவதும் போவதுமாய் ...சீனியர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகமாகி அதனாலாயே நண்பர்கள் சிலர் என்றானாது. பாரி வள்ளல்கள்! அவர்களின் புத்தகங்கள், நூலக டோக்கன்கள் என்று கேட்காமலே கிடைத்தது :)

எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் லேபுகள் பிடித்திருந்தது. பல வகுப்புகள் பிடித்திருந்தாலும், சில வகுப்புகள் வெண்பொங்கல் சாப்பிட்ட எஃபெக்ட் தான் :(
தேர்வுக்கு முன் ஒரு முழு மாதம் விடுமுறை என்றாலும் தேர்வு நெருங்க நெருங்க புத்தகங்களை தேடி அலைவதும், டைம்டேபிள் போட்டு படிப்பது போல் பாவனை செய்ததும்...என்னை விட என் அம்மாவிற்குத் தான் டென்ஷன் அதிகமாகி விடும். அம்மா, காலையில் மூணு மணிக்கெல்லாம் எழுப்பி விட்று என்று சொல்லி விட்டு தூங்க, அப்போது மட்டும் காலில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு ஓடும் கடிகாரமோ தூங்கிய மறுநொடியே மூன்று மணியானதை சொல்லும் பொழுது எரிச்சலாக இருக்கும். அம்மாவும் எழுந்திரு எழுந்திரு எழுந்திரு என்று பொறுமையாக சொல்ல, இதோ அஞ்சே அஞ்சு நிமிஷம் என்று சொல்லியே ஒரு மணி நேரம் ஓடி விடும். அதற்குள் சூடா ஒரு கப் ஹார்லிக்ஸ் வேறு! அதை குடித்து விட்டு மீண்டும் விட்ட இடத்திலிருந்து தூக்கம். இப்பொழுது அக்காவும் சேர்ந்து கொண்டு நீ நேத்தும் ஒண்ணும் படிக்கல. இன்னும் தூங்கிட்டு இருக்கே. எழுந்திரு என்று ஆரம்பித்து விடுவாள். அவளிடமும் அதே ஐந்து நிமிட நாடகம் தொடர்ந்தாலும், திடீரென்று அய்யோயோ இன்னும் படிக்க வேண்டியது நிறைய இருக்கே என்று பயத்துடன் எழுந்தால் மணி ஐந்தாகி விட்டிருக்கும். அப்புறம் என்னத்த படிக்கிறது? ஒரு குயிக் ரீடிங் மட்டுமே!

ஹால் டிக்கெட் எடுத்துக்கிட்டாச்சா?? சாமி கும்பிட்டு போங்க. முருகா, உன்னைத் தான் நம்பி இருக்கேன்னுட்டு கிளம்பி...ஹாலுக்குள் நுழையும் பொழுது இன்னைக்கு என்ன எக்ஸாம் என்று ஒரு நொடி ஸ்தம்பித்து ...எதுவுமே மண்டையில் ஞாபகத்துல இல்லியே என்ற கலக்கத்துடன் உள்ளே நுழைந்தால்...அங்கே கதம்பமாக அனைத்துத்துறை மாணவ, மாணவிகள்...சிலர் குழப்பத்துடன், சிலர் ஒரு முடிவுடனே(!), சிலர் பயபக்தியுடன்...

ஆசிரியர்கள் வந்து பேப்பர் கொடுத்து, தேர்வு எண்ணை எழுதுங்கள், இப்பொழுது ஆரம்பிக்கலாம் என்று சொன்னவுடன்...கேள்வித்தாளை படித்து தேறுவோமோ இல்லையென்றால் எப்படி தேறுவது என்று யோசிக்க ஆரம்பித்து விடும் மனது. முதல் ஒரு மணி நேரத்தில் அழகான கையெழுத்துடன் ஆரம்பித்து நேரம் செல்ல செல்ல தலைஎழுத்தாக மாறி விடும்! அதுவும் அருகில் இருக்கும் மாணவிகள் பரபரவென்று எழுதிக் கொண்டிருப்பதை பார்த்தால், என்னங்கடா நான் மட்டும் தான் இப்படி இருக்கேனா என்று சுற்றுமுற்றும் பார்த்தால் நமக்கு கம்பெனி கொடுக்க நிறைய மாணவர்கள் இருப்பார்கள்!

சில மாணவர்கள் பரீட்சை ஹாலில் வாத்தியார்களை டென்ஷன் பண்ணியதும் உண்டு. இவன் பிட் அடிக்கப் போறானோ என்று அவனையே சுத்தி வருவார்கள். ஆனால் வேறொரு கூட்டம் அங்கே பிட்டு, பேப்பர் மாத்துறது என்று சகலத்தையும் பண்ணியதாக கேள்வி!

கல்லூரி ஸ்ட்ரைக், வகுப்பாக படத்திற்குப் போனது, நண்பர்களுடன் சேர்ந்து போனது, கொஞ்சம் படித்தது, நிறைய வெட்டி பேச்சு பேசினது, படிப்பாளிகளை கண்டு மிரண்டது ...அது ஒரு இனிமையான காலம் தான்! பல புதிய நண்பர்களின் அறிமுகம் என நட்பு வட்டாரம் விரிவடைந்ததும் இக்கால கட்டத்தில் தான்!

இன்றும், கல்லூரி என்றவுடன் பிரமாண்டமான அந்த ஆலமரங்கள், காற்றாட வெளிச்சமான வகுப்பறைகள், மரம் செடிகளுடன் நீண்ட சாலைகள், வரும் வழியில் ஒரு காபிக்கடை, பாய்ஸ் ஹாஸ்டல், அழகான மெயின் பில்டிங், பூச்செடிகள் சூழ்ந்த அமைதியான கம்ப்யூட்டர் சயின்ஸ் பில்டிங், கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் பச்சைப்பசேல் வயற்பரப்புகள் (இன்று இல்லை என்பது காலக்கொடுமை ) , திருப்பரங்குன்றம் மலை...

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே ஞாபகம் வருதே...

Sunday, July 19, 2015

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே..


நான்கைந்து வருடங்களுக்கு முன் snowshoeing என்று மூங்கிலில் செய்யப்பட்ட டென்னிஸ் ராக்கெட் போன்றிருக்கும் கட்டையின் மேல் ஷூவை மாட்டிக் கொண்டு பனி(snow)யில் நடந்து போவதைப் பற்றி தெரிந்து கொள்ள அருகில் இருக்கும் Environmental Education Centerக்கு நானும் கணவரும் சென்றிருந்தோம்.

அங்கு பறவைகள், விலங்குகள், பூக்கள் இன்னும் பல சுவையான சுற்றுப்புறத் தகவல்களை இலவசமாக பொது மக்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் வாரம் முழுவதும் சொல்லிக் கொடுக்கிறார்கள். நாங்கள் அன்று தான் அங்கு சென்றிருந்தோம். நகர்ப்புறத்திலிருந்து சிறிது தள்ளி பல ஏக்கர்களுக்கு மரம், செடி, கொடி, ஏரிகளுடன் அற்புதமாக இருந்தது. பனிக்காலமாதலால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை வெள்ளைப்பனி தான்.

அந்த டென்னிஸ் ராக்கெட் போன்றிருக்கும் கட்டையில் ஷூவை மாட்டிக் கொண்டு நடப்பதே ஒரு அனுபவம். விழுந்தால் எழுவதற்குள் போதும்போதுமென்றாகி விடுகிறது. அன்று குளிர் ஓகே தான். ஒரு மைல் வரை நடத்திச் சென்று பனிக்காலத்தில் உணவிற்காக வெளியில் வந்த மான், அணில், முயல், இன்னும் பல விலங்குகளின் கால் தடயங்களை வைத்து எங்களை அழைத்துச் சென்றவர் பல சுவையான தகவல்களை கூறிக் கொண்டே வர, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமுடன் கேட்டுக் கொண்டே சென்றோம்.

பனிக்காலத்தில் பறவைகளும், விலங்குகளும் உணவை எப்படி கண்டடைகிறது? கொடும்பனியில் இருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்கிறது என்று பல விஷயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது.

அந்த சென்ட்டரின் நுழைவாயில் பறவைகளுக்காக பல feederகள் வைத்து நிறைய தீவனங்கள் போட்டிருந்தார்கள். நான் இதுவரை கண்டிராத அழகழகு பறவைகள்! அவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள ஜன்னலின் அருகிலேயே அவற்றைப் பற்றின தகவல்களுடன் புத்தகங்கள். அங்கு வேலை செய்வோரும் ஆர்வத்துடன் சொல்லிக் கொடுக்கிறார்கள். குழந்தைகளும் ஆரவாரம் செய்தபடி பார்த்துக் கொண்டிருந்தார்கள். பல பறவைகளைப் பற்றி படித்து தெரிந்திருந்தாலும், நேரில் பார்க்கும் பொழுது ஒரு பரவசம் தான். இங்கு வெளிவரும் Conservationist என்ற பத்திரிகையில் பறவைகளின் படங்களை கண்டு அதிசயித்திருக்கிறேன்!

அப்பொழுதே ஒரு bird feeder வாங்கிவிட வேண்டுமென்று நினைத்தாலும் இரு வருடங்களுக்கு முன்பு தான் வாங்கி வீட்டின் முன் இருக்கும் மரத்தில் தொங்க விட முடிந்தது! பலவகையான விதைகளுடன் கூடிய 20பவுண்ட் பை ஒன்றும் வாங்கியாகி விட்டது.

முதலில் குருவிகள் வருகை தந்தன. வீட்டைச் சுற்றி கூடுகளும் கட்ட ஆரம்பித்தது. பனிக்காலம் முடிந்தவுடன் விடியல் அவர்களின் 'கீச்கீச்' குரலுடன் தான் ஆரம்பம். கோடையில் அதிகாலை நான்கு மணியிலிருந்து ஆரம்பமாகி விடும் இவர்களின் ரவுசு. கணவரும் விதவிதமாக படங்கள் எடுக்க ஆரம்பிக்க, குருவிகளில் இத்தனை வகையா?? இதுவரை எனக்குத் தெரிந்ததெல்லாம் ஒரே ஒரு குருவி இனம் தான். தலையில் ஒரு நிறம், தொண்டையில் ஒரு நிறம், இறகுகளில் பல நிறங்கள், பல பெயர்கள்...படங்களில் இருந்து அது என்ன பறவை என்று தேட ஆரம்பித்து அதனைப் பற்றிய தகவல்களைப் படிக்க ஆரம்பித்தவுடன் சுவாரசியம் கூடி, அவர்களை கண்காணிக்க...நேரமும், நாட்களும் போதவில்லை.

ஆண் குருவி, பெண் குருவி என இனம் கண்டுபிடிப்பதிலும் சிரமம் இல்லை. இணையை கண்டு இரண்டும் சேர்ந்து கூடு கட்டுவதிலிருந்து, இருட்டும் நேரத்தில் ஓடிப் போய் கூட்டுக்குள் தஞ்சம் புகும் வரை பறந்து திரியும் பொழுதில் அதன் 'கீச்கீச்' சங்கீதத்திலும், சேர்ந்து விதைகளை தேடித்தேடி உண்ணுவதிலும், விதையை உண்டு தோலை துப்புவதிலும், தண்ணீரைத் தேடி குடிப்பதிலும், மண்ணில் புரண்டு புழுதியில் உடலை புரட்டி எடுப்பதிலும், இணையுடன் சேர அது எழுப்பும் குரலும்(!), கூட்டிற்காக இலை, தழைகளை எங்கிருந்தோ சேர்த்து அதன் மேல் முட்டைகளை அடைகாத்து சின்னஞ்சிறு பறவைகளின் சிறகு முளைத்து பறக்கும் காலம் வரை தாய், தந்தையின் கண்காணிப்பில் அவர்கள் வளர்வது என்று படித்ததை நேரில் பார்த்த பொழுது...அவர்களின் உலகத்தில் இருக்கும் சுவாரசியம் பலவும் ஆச்சரியமாக இருந்தது.

முதன் முதலில் Cardinal ஆண் பறவையை பார்த்த பொழுது ஆச்சரியமாக இருந்தது. வித்தியாசமான ஹேர் ஸ்டைலுடன் உடல் முழுவதும் அடர் சிகப்பு நிறம், முகம் மட்டும் கருமையுடன். சிறிது வண்ணம் குறைந்த பெண் பறவையும் பெரிய கண்களுடன் கொள்ளை அழகு. ஆண் பறவை தன் இணைக்கு ஊட்டி விட்டுத் தன் அன்பை வெளிபடுத்துமாம். வீட்டிற்குப் பின் ஒரு ஜோடி இருக்கிறது. அடிக்கடி வந்து விதைகளை உண்டு செல்லும். நிமிடத்திற்குள் பறந்து விடும்.

K-PAX படத்தில் ஒரு நீலப்பறவை வரும். ஏதோ ஒரு பறவை என்று நினைத்திருந்த எனக்கு வீட்டின் முன் இருக்கும் மரத்தில் அது அமர்ந்திருந்த பொழுது அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது. தலைக்கொண்டையுடன் நீல வண்ணமும், வெள்ளை நிறத்துடனும் ஒரு அழகுப்பறவை !! அதுவும் தன் துணையுடன் அவ்வப்போது தரிசனம் கொடுக்க ...ஆனந்தம் ஆனந்தம்...

கைக்கு அடக்கமான அழகு குட்டிப் பறவைகள், கறுப்புத் தலையுடன் வெள்ளை நிறப்பறவை Chickadee. கைகளில் ஏந்த மனம் துள்ளும். அது சாப்பிடுவதும், அலகை தீட்டிக் கொள்வதும், குரலும் ...அழகோ அழகு. பனிக்காலத்தில் அதன் வருகை அதிகமாக இருந்தது. மழைக்காலத்தில் குறைந்து விட்டது.

வெள்ளை நிற முகமும், வயிறும் கொண்ட நீண்ட அலகுடன் 'டொக்டொக்' என்று மரப்பட்டைகளை கொத்திக் கொண்டிருக்கும் Nuthatch, மரங்களில் ஏறி இறங்கும் அழகே அழகு!

இருப்பதிலேயே மிகவும் வேகமானதும், மனம் மயக்குவதும் மரங்கொத்திப் பறவைகள் தான். மரத்தின் மேல் ஏறும் அழகில் மனதை பறிகொடுக்காமல் இருக்க முடியாது தான்! அதிலும் எத்தனை வகைகள்!

Junco என்றொரு குட்டிப்பறவை. பொந்துகளில் கூடு கட்டி வாழ்கிறது. வெள்ளையும், சாம்பல் நிறமும் கலந்த ஒரு அழகு தேவதை. வசீகரமான குரலுடன் இப்பறவைகளும் வலம் வருகிறது.

எனக்குத் தெரிந்த வரையில் காகம் என்றால் கருப்பு நிறத்துடன் இருக்கும். அடர் கருப்பில் அண்டங்காக்கையும் தான். இது வரை நான்கு கறுப்புப் பறவைகளை பார்த்து விட்டேன். ஒவ்வொன்றும் ஒவ்வொருத் தனித்தன்மையுடன்.

Brewer's Black Bird என்று ஒரு காகம். நீண்ட வால், மயில் கழுத்து வண்ணத்தில் இதன் கழுத்தும், பளிச்சென்றிருக்கும் வெள்ளைக் கண்கள், கூரிய அலகுகள். ஆண் பறவை தான் இவ்வளவு அழகுடன்!

Brown-headedCowbirds என்றொரு கருப்பு பறவை இனம். இதுவும் தன் துணையுடனே வலம் வரும் :)

சிறகில் மஞ்சளும், சிவப்பும் வண்ணங்களை கொண்ட Red-winged Blackbird குரல் அப்படி ஒரு கட்டையான குரல். அதே பறவையால் அப்படி ஒரு அழகானவிசிலும் அடிக்க முடியும் என்றால் நம்பித்தானே ஆக வேண்டும். அவர்களுக்குள் பேசும் சங்கேத மொழியோ என்னவோ!

அமைதியாக, பறவைகளுக்கே உரிய ஆர்ப்பாட்டமில்லாத 'Mourning Dove' அழகு தேவதைகள். ஏன் தான் இதற்கு இந்தப் பெயரோ? என்று எண்ண வைக்கிறது. தன் துணையுடனே என்றும் இருக்கும். சேர்ந்தே வருவார்கள், உண்பார்கள், பறப்பார்கள். அதனால் எனக்கு மிகவும் பிடித்த பறவையும் கூட. துணையுடன் இருக்கையில் யாரையும் நெருங்கவும் விடுவதில்லை.

Song Sparrow என்று உடல் முழுவதும் பழுப்பு, வெள்ளை நிறத்துடன் இருக்கும் இந்தப் பறவைகளின் குரல் நன்றாக இருக்குமாம்.

Rock Pigeon -நம்மூர் வெள்ளைப்புறாக்கள் வகையை சேர்ந்தவை. தலையை முன்னுக்கும் பின்னுக்கும் ஆட்டி ஆட்டி நடக்கும் அழகும், வண்ண வண்ண சிறகுகளுடன் மூக்குத்தி அணிந்ததைப் போன்ற அலகுகளுடன் வலம் வரும் பெரிய பறவைகள்- பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

GoldFinch என்று மஞ்சள் வண்ணத்திலும், Purple Finch, House Finch என்று தலையில் சிவப்பு வண்ணத்துடன் வலம் வரும் சிட்டுக் குருவிகளும் பார்ப்பதற்கு அழகோ அழகு.

பூனை போல் கத்தும் Cat Bird. முதலில் குரலை கேட்டவுடன் பூனைக்குட்டி தான் இங்கிருக்கிறதோ என்று எண்ண வைத்து பிறகு அப்படி ஒரு பறவை இருப்பது தெரிந்தது!

கழுத்தை தூக்கி எப்பொழுதும் அலெர்ட்டாக இருக்கும் Robin பறவைகள் பார்ப்பதற்கு மிகவும் வண்ணமயமாக இருக்கிறது.

Killdeer என்றொரு பறவை இனம். ஓரிடத்தில் ஒரு நொடிக்கு மேல் நிற்பதில்லை. நடந்து கொண்டே இருக்கும். 'சடக்'கென்று நின்று விடும். திடீரென்று இறக்கையை தூக்கி இரையை பயமுறுத்துமாம் !

கழுகுகளிலும் ஏராள இனங்கள். பெரிய பறவைகள் பெரிய கூடுகளை உயர்ந்த இடங்களில் கட்டிக் கொண்டு, ஷிப்ட் போட்டு அடைகாப்பதும், உணவை கொண்டு ஊட்டி விடுவதும், குட்டிகள் நன்கு வளரும் வரை பாதுகாப்பதும் ...

ஜோடி ஜோடியாக வாத்து நடை போட்டவர்களும், தன குஞ்சுகளுடன் குடும்பமாக நடந்து செல்வது காண கோடி இன்பம்! வாத்துக்களிலும் பல வகைகள்! ஒவ்வொன்றும் ஒவ்வொரு குணாதிசயத்துடன் !

அதிகாலையிலும், இருள் நெருங்கும் வேளையிலும் மனித நடமாட்டம் குறைந்தவுடன் தத்திதத்தி தாவிச் சென்றும், சிறு சத்ததிற்கும் ஓடிச் சென்று தன் பெரிய காதை கூராக்கி கேட்கும் முயல் இனங்கள் கைகளில் எடுத்து கொஞ்சத் தூண்டும் அழகு செல்லங்கள் என்றால்,

மரங்களில் ஓடிவிளையாடும் அணில்களோ இன்னும் அழகு. சிறு கைகளால் குழி தோண்டி உணவை புதைத்து, சுற்றிப் பார்த்து மண்ணை போட்டு மூடும் அழகும், பசிக்கும் வேளையில் எங்கு புதைத்தோம் என்று முகர்ந்து கொண்டே கைகளால் குழியை தோண்டுவதும் ...அதன் உலகமே தனி தான் போல!

பறவைகளில் ஆண் பறவைகளை எளிதில் கண்டு பிடித்து விடலாம். வண்ணத்திலும், அழகிலும் ஒரு படி மேல்!

துணையை கவருவதற்காக அவர்கள் செய்யும் தந்திரங்களும் ஏராளம்! பெண் பறவைகளும் லேசுப்பட்டவர்கள் இல்லை போலிருக்கு :) தன் எல்லையில் பிற பறவைகள் வந்து விட்டால் இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பிரச்னை தான் இவர்கள் வாழ்விலும். குஞ்சுகளை அடைகாக்கும் நேரங்களில் அருகில் யாராவது வர நேர்ந்தால் மிக அருகில் பறந்து அவர்களை விரட்டுவதாகட்டும், தேடித்தேடி உணவை கொண்டு வந்து குட்டிகளுக்கு ஊட்டுவதாகட்டும், குட்டிகளின் அருகிலேயே இருந்து அவர்களை கண்காணிப்பாகதாகட்டும் ...மனிதர்கள் தோற்று விடுகிறார்கள்! ஒவ்வொரு பறவையின் கூடும் கைதேர்ந்த வல்லுனரால் கட்டப்பட்டது போல் இருக்கிறது. சில பறவைகள், அடுத்தவர் கட்டிய கூட்டில் முட்டையிட்டு சென்று விடுமாம்!

பறவைக்குஞ்சுகள் பறக்கும் காலம் வந்தவுடன் தாய்ப்பறவை அதை கண்டுகொள்வதில்லை. தந்தைப்பறவை தான் குஞ்சுகளுக்கு ஊட்டி விடுகிறது!

சில பறவைகள் தரையில் ஊர்ந்து செல்லும் பூச்சிகளை உண்டால், சில பறவைகள் பறக்கும் பூச்சிகளை சாப்பிடுகிறது! உருவங்களில், வண்ணங்களில், குரல்களில் என்று பல இனங்கள்! பனிக்காலம் முடிந்தவுடன் கூட்டிற்குத் திரும்பும் பறவைகளும், கோடைமுடிந்தவுடன் புலம்பெயரும் பறவைகளும் ...

நம்மைச் சுற்றியிருக்கும் இவ்வுலகில் பறவைகள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒரு விதம் ...

பறவைகளின் படங்களை கண்டுகளிக்க ( To view more pictures)...

அமேசிங் பிரிட்டன் -5- இன்வெர்னஸ் & ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ் பயணக்குறிப்புகள்

சொல்வனம் இதழ் 313ல் வெளிவந்துள்ள 'அமேசிங் பிரிட்டன்' பயணக்கட்டுரைத் தொடரின் ஐந்தாவது பாகம்.   இன்வெர்னஸ் & ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ்...