Thursday, September 24, 2015

ரயில் பயணங்களில் ...

ரயில் பயணங்கள் என்றுமே சுவாரசியமானவை என்றாலும், குழந்தைகள், கணவர், அப்பா, அம்மா, தம்பியுடன் பலமுறை சென்னை-மதுரை பயணம் செய்திருந்தாலும் பெங்களூரிலிருந்து மதுரைக்கு முதன்முறையாக இரவில் தனிமைப் பயணம்... சிறிது அச்சத்துடனே பயணித்தேன்!

சில நிமிடங்களே நிற்கும் ரயில்வே ஸ்டேஷன் என்றதால் தம்பி குடும்பத்துடன் பல நிமிடங்களுக்கு முன்பே ஆஜராகி விட்டோம். எல்லோரும் சேர்ந்து போக வேண்டியது ஏனோ தம்பியின் கடைசி நிமிட வேலை செய்த குழப்பத்தில் டிக்கெட்டை கான்சல் செய்ய வேண்டியதாயிற்று!

சுத்தமாக இருந்த ரயில்வே நிலையத்தில் அந்த ஒரு பிளாட்பாரத்தில் மட்டுமே வரிசையாக ரயில்கள் வந்து பயணிகளை ஏற்றி இறக்கிக் கொண்டுச் செல்ல, இரவுப்பயணம் தான் என்றாலும் 'பளிச்'சென்று இருந்தார்கள் பலரும்! சிலர் சோகமாகவும், சிலர் சிரித்த முகத்துடனும் ரயிலில் பயணிகளை ஏற்றி விட்டு ஜன்னல் அருகே நின்று பேசிக்கொண்டும் வண்டி புறப்பட கையசைத்துக் கொண்டே விடைபெறுவதுமாய் என ரயில் நிலையத்துக்கே உரிய காட்சிகள்!

ரயில் வந்து நின்றவுடன் அதனுடனே வந்த மூச்சை அடைக்கும் மூத்திர நாற்றம்... என்று மாறுமோ இந்த நிலை என்று ஏங்க வைத்தது. வண்டி கிளம்பியவுடன் அந்த நாற்றமும் மறைந்தது தான் ஆச்சரியம்! இரண்டு மூன்று ரயில்கள் வருவதும், மக்கள் இறங்குவதும், ஏறுவதும்,  கன்னட, ஹிந்தி மொழிகளில் கனத்த குரலில் அறிவிப்பாளர்களின் பேச்சு புரியாவிட்டாலும் கேட்பதற்கு நன்றாக இருந்தது. நல்ல வேளை, ஆங்கிலத்திலும் சொன்னதால் வேறு மாநிலத்திலிருந்து வந்தவர்கள் தப்பித்தார்கள்!

நான் செல்ல வேண்டிய ரயிலும் வந்து விட, பார்த்து பத்திரமா போ! செல்போன் எடுத்துக்கிட்டியா?? எப்ப வேணுமினாலும் கூப்பிடு, பரபரத்தான் தம்பி. தனியாகச் செல்லும் என்னைப் பற்றி அவனுக்குத் தான் அதிக கவலை! ஒண்ணும் பயமில்லை. நான் பார்த்துக்கறேன்- சொல்லி விட்டேனே தவிர எனக்குள்ளும் உள்ளூர உதறல் தான் :( இன்னும் ரெண்டு மூணு நாள் தங்கி இருந்திருக்கலாம். நீ வந்ததில் நாட்கள் போனதே தெரியவில்லை. அடுத்த தடவை பாவா, குழந்தைகளுடன் வரும் போது ஒரு வாரமாவது தங்கி இருக்கிற மாதிரி ப்ளான் பண்ணிட்டு வா. முடிஞ்சா அடுத்த வாரம் நானும் மதுரை வரப்பார்க்கிறேன்.

சரி, நீயும் பத்திரமா இரு. போயிட்டு வர்றேன் என்று தம்பி குழந்தை, மனைவியிடமும் சொல்லி விட்டு வண்டியில் ஏறியாச்சு! தம்பியும் வேகமாக என் பெட்டிகளை உள்ளே வைத்து விட்டு சீட்டுக்கு அடியில் தள்ள முயற்சிக்க அதுவோ மக்கர் பண்ண, பக்கத்து சீட்டில் உட்கார்ந்திருப்பவர் வந்து உதவி செய்ய அவருக்கு ஒரு நன்றி சொல்லி விட்டு, சரி சரி, நீ இறங்கு வண்டி கிளம்ப போகுது!! 

இனி அடுத்த வருடமோ, இரண்டு வருடம் கழித்தோ தான் பார்ப்போமோ என்னவோ?? வருத்தமாக இருந்தது.

எனக்கு எதிரே இருந்தவர் அடிக்கடி ரயில் பயணம் செய்பவர் போல. நிமிடங்களில் விரிக்கையைப் போட்டு தன் படுக்கையை தயார் செய்து கொண்டு TTRக்காக காத்திருந்தார். ஏனோ ஹோட்டலில் ஆற அமர சாப்பிடாமல் 'லபக் லபக்' என்று வாயில் உருட்டித் தள்ளுபவர்கள் ஞாபகம் வந்தது. நானும் என் பாஸ்போர்ட்டை எடுத்து வைத்துக் கொண்டு ஜன்னல் வழியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சிறிது நேரத்திலேயே 'கோட்டு' போட்டுக் கொண்டு வந்த TTR பாஸ்போர்ட் வாங்கி சரிபார்த்து விட்டு அவர் பேப்பரில் 'டிக்' அடித்து விட்டு நகர, என் போர்வை, தலையணை எல்லாவற்றையும் ஒழுங்குப்படுத்திவிட்டு சிறிது நேரம் மூடியிருந்த ஜன்னல் வழியே நகரை வேகமாக முந்திக்கொண்டுச் செல்லும் ரயில்பாதையை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

நண்பர் ரத்தினக்குமார் வேறு ரயிலில் எலி இருக்கும் என்று பயமுறுத்தியிருந்தார். ஞாபகம் வந்தவுடன் 'சடக்'கென்று காலை மேலே தூக்கி வைத்துக் கொண்டேன். அடுத்த மூன்று இருக்கைகளில் கணவன், மனைவி ஒரு பெண்குழந்தை. அப்பா, அம்மா இருவரும் அவர்கள் தாய்மொழியில் குழந்தையிடம் பேசினால் அவள் ஆங்கிலத்திலேயே பதில் சொல்லிக் கொண்டிருந்தாள். NRI போல!! :) அவர்களுக்கும் அடுத்த இருக்கையில் அப்போது தான் கால் முளைத்து நடை பயிலும் ஒரு சிறு குழந்தை. கள்ளம்கபடமற்ற சிரிப்புடன் புதுமுகங்களை பார்த்துக் கொண்டே ரயிலின் ஆட்டத்துடன் அவனும் சேர்ந்து ஆடியபடியே கம்பார்ட்மெண்ட் முழுவதும் வளைய வந்து கொண்டிருந்தான். ஏண்டா , இப்படி படுத்தறே??? என்ற அவன் தாயின் கேள்வியில் களைப்பும் வருத்தத்தையும் விட அன்பும் பெருமையும் தான் இருந்ததாக தோன்றியது எனக்கு! அத்தனை ஆட்டம் போட்ட குழந்தை விளக்குகள் அணைந்த மறுநொடியே தாயிடம் அடைக்கலமாயிருந்தான் !! என்னைத்தவிர பலரும் தூங்கியே விட்டிருந்தார்கள். கடவுளே, யாரும் குறட்டை விடக்கூடாது என்று வேண்டிக்கொண்டே படிக்கவேண்டிய புக்கை எடுத்து வைத்துக் கொண்டு விட்ட இடத்திலிருந்து மீண்டும் தொடர ஆரம்பித்தேன்.

புத்தகத்தின் சுவாரசியத்தில் நேரம் போனதே தெரியவில்லை.

ரயிலின் ஆட்டமும் ஊருக்கு வந்த நாளிலிருந்து தூக்கம் சரிவர இல்லாத களைப்பும் சேர்ந்து கண்ணை அழுத்த எப்பொழுதுஉறங்கினேன் என்றே தெரியவில்லை. 'க்ரீச்' என சக்கரம் தண்டவாளத்தை உரசி நிற்கையில் தூக்கம் களைந்து பார்த்தால் சேலத்தில் வண்டி நின்று கொண்டிருந்தது. நேரம் இரண்டரையோ என்னவோ! அந்த இரவிலும் சிலர் இறங்குவதும் ஏறுவதும் என ஒரு சிறு பரபரபப்பு.

'தடக் தடக்' என மீண்டும் வண்டி புறப்பட, தூக்கமும் கண்களைத் தழுவ, அடுத்து ஈரோட்டில் நிற்க, சேலையை இழுத்துப் போர்த்திக் கொண்டு கணவர் மடியில் உறங்கிக்கொண்டிருந்த பெண்ணைத் தவிர வேறு மக்கள் கூட்டம் அதிகமில்லை. அவர்களுக்கான ரயில் இனிமேல் தான் வருகிறது போல! சில நிமிடங்கள் மட்டுமே ரயில் நின்றது. 

தூக்கம் விடை பெற, விடிந்தும் விடியாத காலைப்பொழுதை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். கம்பார்ட்மெண்டில் என்னைத்தவிர அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில்!!! அமைதியான அழகான மனதை வருடும் காலை நேரப்   பயணங்கள் எனக்குப் பிடித்தமான ஒன்று. கரூரை நெருங்கும் வேளையில் விடிய ஆரம்பித்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிறிது விளைநிலங்கள், ஓங்கி வளர்ந்த பனை, தென்னை மரங்கள், நெருஞ்சி முள்ளாய் கருவேல மரங்கள் வழியெங்கும் வறண்டு கிடந்த நிலங்களை கண்டு ஏனோ மனம் நெருடியது. வாழ்வாதாரமாய் இருந்த விவசாயம் கண்முன்னே கருகிக் கொண்டிருக்கிறது! ம்ம்ம்...

நன்றாகவே விடிந்து விட்டது இப்பொழுது. வண்டியும் கொஞ்சம் வேகமாக செல்வதைப் போல இருந்தது. செம்மண் நிலங்கள், பின்புலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையோ??? பறவைகள் பறந்து செல்வதும், ஆடு, கோழி, மாடுகள் மேய்ந்து கொண்டிருப்பதும், காலைக் கடனை கழித்துக் கொண்டிருந்தவர்கள் எழுந்து நின்று ரயிலுக்கு மரியாதை செலுத்துவதும், ரயில் பாதையை ஒட்டி இருக்கும் வீடுகளில் பெண்கள் வாசல் தெளித்து கோலமிடுவதும் என காலைநேரக் காட்சிகளுக்கு குறைவில்லை!

திண்டுக்கல் நெருங்கும் போதே தண்ணீர் பாய்ச்சிய விளைநிலங்கள் மனதை கொள்ளை கொண்டது. பூந்தோட்டங்கள், கீரை, காய்கறிச் செடிகள், நெல், வாழை, தென்னந்தோப்புகளுடன் சோழவந்தான் பசுமையில் திளைத்துக் கொண்டிருக்க...இயற்கை அன்னையின் அரவணைப்பில் கண்ணுக்கு குளிர்ச்சியான இந்த ஊர் அப்படியே இருக்க வேண்டும். மாறி விடக்கூடாது ... அத்தனைக்கும் ஆசைப்படு மனமே!

அடுத்து வந்த காட்சிகள் மதுரையை நெருங்கி விட்டதை பறைசாற்றியது!!! எங்கும் ஈ மொய்க்கும் குப்பை மேடுகள், அதைச் சுற்றி குட்டிகளுடன் பன்றிக்கூட்டங்கள்,  ரயில் சந்திப்புகளில் பொறுமையில்லா மனிதர்கள், பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள், பேருந்துகள், லாரிகள், சைக்கிள், பைக்குகளின் அணிவகுப்புகள்...சுற்றிலும் கட்டிடக்குவியல்களுடன் வறண்ட குப்பை மேடாய் வைகை! தேங்கியிருக்கும் குட்டை நீரில் வண்ணான்கள் துணி துவைத்துக் கொண்டிருக்க...பொதி மூட்டையை சுமந்து வந்த கழுதைகள் 'தேமே' என்று நின்று கொண்டிருக்க, அவிழ்த்து விட்ட மாடுகளும், எருமைகளும்தேங்கி இருக்கும் நீரில் குளியல் போட்டுக் கொண்டிருக்க...காட்சிகளுக்கு என்றுமே குறைவில்லை!

மதுரை சந்திப்பு என்று மஞ்சள் வண்ணம் அடித்த போர்டை பார்த்தவுடன் வந்த குதூகலத்தை வார்த்தையில் சொல்லத் தெரியவில்லை! அதோ அம்மா, அக்காவின் மகன்கள்...அவர்கள் என்னைத் தேடிக் கொண்டிருந்தார்கள்! வண்டியில் இருந்த பலரும் மதுரையில் இறங்கினார்கள். வண்டியும் அதிக நேரம் நின்றது! ரயில்வே ஸ்டேஷனுக்கே உரிய பல மொழித்தகவல் அறிக்கையும் மணிச்சத்தமும் கூடுதலாக தமிழ் பேச்சும்,...ஹையா!!! ஊருக்கு வந்துவிட்டேன்! 

அம்மா தான் வயதாகி துவண்டு விட்டிருந்தாள். என்னைப் பார்த்ததும் அவருக்கும் ஆனந்தம்! அக்கா மகன்களும் நன்கு வளர்ந்திருந்தார்கள்! அவர்களைப் பார்த்து நான்கு வருடமாயிற்றே! அவசரஅவசரமாக பெட்டிகளை இறக்கி பேசிக்கொண்டே தானியங்கி மாடிப்படிகளில் இறங்கி வெளியில் வந்தால் வாங்கம்மா, சார் எப்படி இருக்கிறாரு?? குழந்தைங்க எப்படி இருக்காங்க? ஏன் அவங்கள்லாம் வரலே என்று பழகிய பாசத்துடன் டிரைவர் அண்ணன்.

மதுரை வெக்கை வரவேற்க, அம்மாவைப் பார்த்ததில், ஊருக்கு வந்ததில் சில நாட்களுக்கு அமெரிக்காவா?? அப்படின்னா... :)

4 comments:

  1. Bei, chokkat se. Same feeling when ever seeing Madurai yellow board, 1000 watts lights with happiness... Namma Madurai Madurai than...

    ReplyDelete
  2. Well narrated
    - Lansing Sudarsan

    ReplyDelete