Thursday, February 18, 2016

ஆத்தா நான் பாஸாயிட்டேன் ...

மதுரையில் இருந்த வரை பஸ், பைக், கை தட்டினால்  ரிக்க்ஷா, ஆட்டோ என்று பழகி விட்டு கனடாவிற்கு வந்ததும் வெளியில் சென்று வர பஸ் மற்றும் ரயிலை சார்ந்திருக்க வேண்டியதாயிற்று.  சொன்ன நேரத்திற்கு 'டான்' என்று வரும் கூட்டமில்லாத பஸ்களும், ஓரளவு கூட்டத்துடன் வரும் ரயில்களும் போக்குவரத்தை எளிதாக்கி அதற்கும் பழகியாகி விட்டது. ஆனால் அமெரிக்கா வந்தவுடன் தான் காரில்லாமல் வாழ்வது அவ்வளவு சுலபமல்ல என்று புரிந்தது.

பனி கொட்டும் குளிர் வாட்டும் மிக்சிகனில் குடியிருந்த இடத்திலிருந்து கடைகளுக்கு, நண்பர்களைப் பார்க்க, வேலையிடத்திற்குச் செல்ல வண்டி  இல்லாமல் வாழ முடியாது என்ற கட்டாயத்தால் கார் வாங்க வேண்டிய சூழ்நிலை. கணவரின் சித்தப்பா பையனின் நண்பர், கல்லூரியில் படிக்கும் காலத்தில் வாங்கிய Mazda MX 6 என்ற ஸ்போர்ட்ஸ் கார்(!) மட்டுமே எங்கள் பட்ஜெட்டுக்கு ஒத்து வர...ஒரு சுபமுகூர்த்த நாளில் கணவர் சென்று வாங்கி ஒட்டிக் கொண்டு வந்து விட்டார்!

அடுத்த தலைவலி அவ்வளவு சீக்கிரம் ஆரம்பிக்கும் என்று நான் அறிந்திருக்கவில்லை. ஆம், வண்டி ஓட்ட பழக வேண்டுமாம். நானா! ஐயோ! எப்படி? இதென்ன கொடுமை? கற்றுத் தான் ஆக வேண்டும். நான் கற்றுக் கொடுக்கிறேன். கவலைப்படாதே. தைரியமாக ஓட்டு.  எவ்வளவு சீக்கிரம் கற்றுக் கொண்டு தனியாக இருக்க முடிகிறதோ அப்பொழுது தான் நானும் நிம்மதியாக வேலைக்குச் சென்று வர முடியும் என்று எளிதாக சொல்லி விட்டார்ஆம்படையான்.

வேறு வழியில்லை. முதலில் ரிட்டன்(written) டெஸ்ட் என்று சாலை விதிகளைப்  படித்து அந்த தேர்வில் பாஸாக வேண்டுமாம். படிக்கத் தானே வேண்டும். இதெல்லாம் ஜுஜுபி. அது முடிந்தவுடன், வண்டி ஓட்டிப் பழக ஒரு தற்காலிக லைசென்ஸ் கொடுத்தார்கள். இனி கணவரின் மேற்பார்வையில்  வண்டியை ஓட்டலாம்.

வார இறுதியில் நாங்கள் குடியிருந்த அபார்ட்மெண்ட் அருகில் இருந்த கல்லூரி வளாகத்தில் ஆரம்பமாயிற்று என் கார் டிரைவிங் பயிற்சி. நடுங்கிக் கொண்டே சாவியை வாங்கிக் கொண்டு டிரைவர் சீட்டில் உட்காரும் பொழுது எனக்குத் தெரிந்த எல்லா தெய்வங்களையும் வேண்டிக் கொண்டேன். பின் சீட்டில் நான் ஓட்டப்போவதை வேடிக்கை பார்க்க அமர்ந்திருந்த மகளை நினைத்து தான் கவலையாக இருந்தது. கடவுளே, நான் பத்திரமா வண்டி ஓட்டணும், அட்லீஸ்ட் என் குழந்தைக்காக. முருகனின் மேல் பாரத்தை விட்டு, கணவரை பார்த்தால்...

இது தான் பிரேக். வண்டி மெதுவா போக, நிறுத்த. இது தான் ஆக்சிலரேட்டர். வேகமா போகணும்னா இது மேல மெதுவா காலை வச்சு அமுக்கணும்.  D,P,N கியர்களை பற்றிச் சொன்னார். கடவுளே, மெக்கானிக்கல் லேப்-ஐ விடக்  கொடுமையா இருக்கே.

ம்ம்ம். இப்ப ஸ்டார்ட் பண்ணு.

எப்படி?

பிரேக் மேல கால வச்சு ஸ்டார்ட் பண்ணு.

சரி.

ஏன் இப்படி போட்டு அழுத்தற?

மெதுவா மெதுவா...நீ ஒண்ணும் பண்ண வேணாம். அப்படியே நேரா ஓட்ட மட்டும் செய்.

எதுக்கு ஸ்டியரிங்க இப்படி அழுத்தி பிடிச்சிக்கிட்டு இருக்க? ரிலாக்ஸ்டா இரு. ஏன் இவ்வளவு முன்னாடி உட்காந்திருக்க?

ஸ்ஸ்ஸ்ஸ்...எங்கேயாவது முட்டிடுவேனோன்னு பயமா இருக்கு.

அஞ்சு மைல் ஸ்பீட்ல ஒன்னும் ஆகாதுன்னு சொல்றப்ப கணவர் முகத்தில் ஒரு நக்கலான சிரிப்பு. இதே வேற சமயமா இருந்தா ஒரு காச்சு காச்சு எடுத்திருக்கலாம். நான் இருந்த பதட்டத்தில் உடலெங்கும் ஒரே படபடப்பு.  சே! என்ன ஒரு சோதனை!

நேர போ. கார் எங்கேயோ போகுது. உனக்குத் தெரியலையா?

என்னத்த தெரியுது?

எதுக்கு 'சடக்சடக்'ன்னு திருப்புற? ஸ்டியரிங்க மெதுவா திருப்பு.

இப்படியே ஒரு அரைமணி நேரம் ஓட்டி... சரி, நாளைக்கு வரலாம்.

அப்பாடா! தப்பிச்சோம்டா சாமின்னு இன்ஜினியரிங் டிராயிங் வகுப்பிலிருந்து தப்பிச்சு வந்த மாதிரி இருந்தது.

அடுத்த நாள் மீண்டும் அதே இடத்தில். இன்றும் வண்டியை நேராக ஓட்ட பயிற்சி. ஏதோ flintstone படத்தில் வருகிற வண்டி மாதிரி கார் நடந்து கொண்டிருந்தது.

ம்ம்ம்...இன்னைக்குப் பரவாயில்ல. மெதுவா ஆக்சிலரேட் பண்ணு.

ஜூம்!

ஐயோ, என்ன பண்றே?

நீங்க தான...

அதுக்கு? மெதுவா போ. நீ வண்டி ஓட்ட கத்துக்கறதுக்குள்ள எனக்கு BP வந்துடும் போலிருக்கு!

வரும் நாட்களில் காரை திருப்புவது, பார்க்கிங் பண்ணுவது, ரிவர்ஸில் எடுப்பது என்று போக...

எங்க போற? கார் எங்கியோ போகுது. எந்தச் சக்கரம் எப்படி திரும்புதுன்னு கூட உனக்குத் தெரியல.

எனக்கு எப்படித் தெரியும்?

கத்துக்கணும்னு ஆசை இருக்கா இல்லியா?

சே! எனக்கு இந்த டிரைவிங் பிடிக்கல.

வேற வழியில்ல. இங்க இருக்கணும்னா கத்துத் தான் ஆகணும். ஸ்டியரிங் திரும்பறப்ப எந்த சக்கரம் எப்படி திரும்புதுன்னு பாரு. அப்ப தான் காரை திருப்ப, ரிவர்ஸில எடுக்கறப்ப வசதியா இருக்கும்.

இப்ப வண்டிய ரிவர்ஸில எடு.

கடவுளே!! என்னைய காப்பாத்து.

பாரு. வண்டி அதுபாட்டுக்கு எங்கியோ போகுது. நல்ல வேளை. இன்னிக்கு காலேஜ் லீவு. இல்லன்னா பத்து பதினெஞ்சு பேரு அவுட்டு.

அழுகை தயாராக கண்களில். ஏன் எனக்கு மட்டும் கார் ஓட்டுவது இவ்வளவு சிரமமாக இருக்கிறது?

இறங்கிப் போய் கார் எப்படி நிக்குதுன்னு பாரு. இப்ப புரியுதா நீ எப்படி ஓட்டினேன்னு?

சரி,  இப்ப பார்க் பண்ணு.

நேரா இருந்தாலே பார்க் பண்றது வராது. இது வேற முறைச்சுக்கிட்டு நிக்கிற மருமகள் மாதிரி நின்னுக்கிட்டு இருக்கு. முருகா!

ஸ்டியரிங்கை வளைத்து வளைத்து இரு கோடுகளுக்கிடையில் வளைந்து நின்ற வண்டியை பார்த்து மகளும், அம்மா , எப்படி  நிக்குது. பாரு என்று அவள் பங்குக்கு வேறு எடுத்துக் கொடுக்க...போதும் போதும் இன்னைக்கு.

கார் ஓட்டப் பழக என்றாலே வேப்பங்காயாக கசக்க, எப்படியும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற வெறியும் கூடவே.

அடுத்த வாரத்திலிருந்து ரோட்ல ஓட்ட கத்துக்கலாம்.

என்னது? ரோட்லையா?? எனக்குப் பயமா இருக்கு.

அதெல்லாம் ஒண்ணும் ஆகாது. நான் தான் இருக்கேன்ல.

இப்ப லெஃப்ட்ல திரும்பு. அந்த நேரத்தில் எது லெஃப்ட், எது ரைட் என்று ஒரு சின்ன குழப்பம்.

என்ன நடு ரோட்ல நின்னு யோசிச்சுக்கிட்டு? போலீஸ் பார்த்தா டிக்கெட் கொடுத்துடுவான்.

ஆமாமா, லைசென்ஸ் இல்லாதப்ப நல்லா குடுத்துருவான். ம்ம்ம்...

யாருக்குத் தெரியும்? லைசென்ஸ் இல்லாம டிக்கெட் வாங்குனாலும் வாங்கிடுவ நீ!

எத்தனை நாள் கோபமோ? மனுஷன் இப்படி போட்டு பார்க்குறாரே? முதல்ல லைசென்ஸ் வாங்கணும். அப்புறம் இருக்கு. இந்த நக்கலுக்கெல்லாம் பதிலடி.

என்ன? நீ பாட்டுக்கு ஒட்டிக்கிட்டே போற? அங்க எல்லோ விழுந்து ரெட் சிக்னல் வரப்போகுது. எல்லோ பார்த்தவொடன மெதுவா போகாம வேகமா போற?

சரி சரி!

ரைட்ல திரும்பு. பார்த்து பார்த்து. எதுக்கு இப்ப பிளாட்பார்ம்ல வண்டிய ஏத்துன? கொஞ்சம் விட்டிருந்தா அந்தக் கல்-ல முட்டியிருக்கும் காரு. எங்க போகுது, எப்படி திரும்புதுன்னு ஒரு ஐடியாவும் இல்ல.

ரோட்ல போறப்ப வர்ற தகவல் பலகைகளையும் படிக்கணும். இந்த ரோட்ல எவ்வளவு ஸ்பீட்னு தெரியுமா?

ஙே!

இப்படி முழிச்சா?? அடுத்த சிக்னல்ல லெஃப்ட்ல திரும்பணும்.

தலையில் அடித்துக் கொண்டே, எதுக்கு இவ்வளவு க்ளோஸ் டர்ன்?  கொஞ்சம் விட்டிருந்தா அந்த கார் மேல இடிச்சிருப்ப.

என்னை கடந்து செல்லும் பெரிய பெரிய ட்ரக்குகள் வேறு ஒரு வித பயத்தை ஊட்டின. ஒண்ணு அந்த வண்டிக்கு முன்னாடி போகணும். இல்லைன்னா பின்னாடி வரணும். blind spot பற்றி விலாவாரியாக சொன்ன போது கலவரமாக இருந்தது.

எப்பவுமே அலர்ட்டா இருக்கணும். கண்ணாடிகளை அடிக்கடி பார்த்து பின் வரும் வண்டிகள் எவ்வளவு அருகில் வருகிறது, மெதுவாக தலையை திருப்பி பின்னால், பக்கவாட்டில் வரும் வண்டிகளை பார்த்து, வண்டியில் சிக்னல் போட்டு ஓரிரு நிமிடங்களுக்குப் பிறகு தான் லேன் மாற வேண்டும். கிளிப்பிள்ளைக்குச் சொல்வது போல் சொன்னாலும் பதட்டத்தில் மறந்து அதற்கும்  திட்டு வாங்கி...

குழந்தை இருக்கிறாள்  பத்திரமாக ஓட்ட வேண்டும் என்ற நினைவு மேலும் பதட்டத்தை ஏற்படுத்த...

ஹைவேஸ்ல ஓட்டுறது ஈஸி. என்ன, வேகமாக சென்று கொண்டிருக்கும் போக்குவரத்துடன் வண்டியின் வேகத்தை கூட்டிக் கொண்டே merge ஆவது தான் ஆரம்பத்தில் கஷ்டம். போகப்போக சரியாகி விடும். விபத்து ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஹைவேஸ் ஓட்டிப் பழக மட்டும் தனியாக ஓட்டுனர் பள்ளியில் வகுப்புகள் எடுத்துக் கொண்டேன்.

ஒரு வழியாக,  காரை பார்க் பண்ண (ஒய்யார கொண்டை மாதிரி வளைந்து தான் நின்றது!) ஸ்டாப் சிக்னலில் நிறுத்த, வலது, இடது திருப்பங்கள் என்று கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி அடுத்த பூதத்திற்கு தயாராக வேண்டும்.

வரிசையாக நிற்கும் இரு கார்களுக்கு இடையில் நிறுத்தும் parallel பார்க்கிங் ! ரொம்ப அவசியமடா உங்களுக்கு? சில நாட்கள் பயிற்சி எடுத்தும் வருவேனா என்றது.

அதற்குள் வேறு வேலை காரணமாக DMV அலுவலகத்திற்குச் சென்ற வேளையில், கூட்டமே இல்லை, நீ வேணா டிரைவிங் டெஸ்ட் எடுத்துப் பாரேன். நானும் கொஞ்சமும் யோசிக்காமல், எடுத்தால் தான் என்ன என்று பெயரை கொடுத்தவுடன் தான் பயம் கவ்விக் கொண்டது. அய்யோயோ, எனக்கு parallel பார்க்கிங் பண்ண தெரியாது?

அதெல்லாம் ஒகே.

என்ன சொல்றீங்க?

சும்மா போயிட்டு வா. எல்லாம் நல்லா பண்ணா parallel பார்க்கிங் கண்டுக்காம கூட இருக்கலாம்.

அப்படியா? ஒரு நப்பாசையுடன் நானும் கிளம்ப,

அந்த DMV ஆஃபீசர் பேனா, நோட்டு சகிதம் வந்து என் பெயரை சொல்லி அழைக்க, பார்த்தால் நல்லவராக இருக்கிறார். பார்க்கலாம்.

ஆல் தி பெஸ்ட்,  சிரிப்புடன் என்னை வாழ்த்தி  கணவரும், மகளும்...

அலுவலக வளாகத்திற்குள் மாடல் சாலைகளை போட்டு வைத்திருக்கிறார்கள். ஸ்டாப், லெஃப்ட், ரைட், ட்ரைன் கிராஸிங் எல்லாம் ஒகே.

இங்க parallel பார்க்கிங் பண்ணலாம்.

ஆ! ஐயோ!  என் அதிர்ச்சியான முகமே அவருடைய வேலையை சுலபமாக்கி இருக்கும்.

சுத்தம். நல்லா கத்துக்கிட்டு வாங்க. அடுத்த முறை பார்க்கலாம்.

வாழ்க்கையில் முதல் முறை தோல்வியை எதிர் கொண்ட நாள். எதிர்பார்த்த ஒன்று தான் என்றாலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.

இப்ப யாரையாவது சாட வேண்டுமே! நீங்க தான் அவசரப்பட்டு என்னைய போகச் சொன்னீங்க. நல்லா ப்ராக்டிஸ் பண்ணி இருந்திருக்கலாம். நான் இதுவரைக்கும் ஃபெயில் ஆனதே இல்லை. எல்லாம் உங்களால தான். இனிமே உங்க பேச்ச கேட்க போறதில்ல.

வந்த சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு யூ டிட்ன்ட் லூஸ் எனிதிங். அடுத்த முறை டெஸ்ட் ஈசியா இருக்கும். parallel பார்க்கிங் மட்டும் தான் இப்ப பழகணும். கமான். சியர் அப்!

ஆனாலும், இவ்வளவு மோசமா நீ parallel பார்க்கிங் பண்ணி இருக்க கூடாது.  பாவம், அவர் உயிர் தப்பிச்சா போதும்னு ஓடிட்டார். அப்பொழுதும் சிரிப்பு :(

ம்ம்ம்... இனிமேல் யார் சொல்வதும் கேட்க கூடாது. நான் போயிருந்திருக்கவே கூடாது. சே! முதல்முறை வாழ்க்கையில் ஃபெயில் ஆகிவிட்டேனே! மனசு ஆறவில்லை.

இந்த சனியனை எப்படியாவது பழகியே ஆக வேண்டும். எப்படி parallel பார்க்கிங் செய்வது என்று அடுத்தடுத்த நாட்களில் பழகி அடுத்த மாதத்திலே மீண்டும் ஆஜர்.

இந்த முறை எனக்குள்ளே சொல்லிக் கொண்டேன். பதட்டப்படாம நல்லா ஓட்டுறோம். லைசென்ஸ் வாங்குறோம்.

வழக்கமான நிறுத்தங்கள், ஸ்பீட் டெஸ்ட் எல்லாம் முடிந்த பிறகு, parallel பார்க்கிங். ஏற்கெனவே போட்ட மனக்கணக்கின் படி முதல் காரின் பாதி தூரம் வரை என் காரை நிறுத்தி சக்கரத்தை இப்படி திருப்ப வேண்டும்  ஸ்டியரிங்கை இப்படி அப்படி திருப்பி ஒகே, மெதுவாக மெதுவாக இப்பொழுது எதிர்த்திசையில்  ஸ்டியரிங்கை திருப்பி ஒரு வழியாக நிறுத்தி விட்டேன்.

நான் சொன்ன பதில் சரியா என்று ஆசிரியரிடம் பயந்து கொண்டே கேட்கும் மாணவனைப் போல் பயத்துடன் அதிகாரியை பார்த்தால்

நாட் பேட், என்றார் அந்த அதிகாரி.

அப்பாடா! குட் ஆர் பேட் லைசென்ஸ் குடுத்துருப்பா. நீ நல்லா இருப்ப.

ஒகே, ஹியர் இஸ் யுவர் ரிப்போர்ட். சீக்கிரமே ஒரிஜினல் லைசென்ஸ் வீடு வந்து சேரும். கன்கிராஜூலேஷன்ஸ்!

அந்த நிமிடம் என் மனதில் இருந்த உற்சாகம்... வாழ்க்கையில் ஏதோ சாதித்து விட்ட ஒரு மகிழ்ச்சி! இனி நினைத்த நேரத்திற்கு நினைத்த இடத்திற்குச் சென்று வரலாம். என்ன ஒரு சுதந்திரமான உணர்வு!

என் கணவர் முகத்திலும் சுதந்திரமான அதே உணர்வு!  சிரித்துக் கொண்டே மகளும், அப்பா இனி நீங்க ஃப்ரீ.

அம்மாவிடம் நான் தோற்று ஜெயித்த விஷயத்தை சொல்ல, வழக்கம் போல் அம்மாவும், நீ என் மகளாச்சே! அடிக்கடி இதை கேட்டிருந்தாலும் அன்று கேட்க மேலும் சுகமாக இருந்தது.

கணவருக்கு அடுத்த கவலை ஆரம்பமாயிற்று. பார்த்து பத்திரமா  போ. வேகமாக போகாத.

அடுத்த நாள் காலையில் விரைவில் எழுந்திருந்து, கடவுளை வேண்டிக்கொண்டு...

 ஸ்டார்ட் தி மியூசிக் ...எழுபத்தைந்து மைல் வேகத்தில் ...

ஜூஜூஜூஜூஜூஜூஜூஜூஜூஜூஜூஜூஜூம் !



No comments:

Post a Comment

அடடா மழைடா ஐஸ் மழைடா!

எப்படியோ இந்த வருட பனிமழையிலிருந்து தப்பித்து விட்டோம் என்று நினைத்திருந்தேன். இந்தியாவிலிருந்து மார்ச் இரண்டாம் வாரம் தான் ஊருக்குத் திரும்...