Saturday, February 20, 2016

எல்லோரும் கொண்டாடுவோம்...


தாய்பாஷை பேசும் மக்கள் சூழ்ந்திருந்த தெருக்களில் வளர்ந்ததால் தமிழ் மொழி பேசுவது பள்ளியில், கடைகளுக்குச் செல்கையில் மட்டுமே. தமிழ் அவ்வளவு பரிச்சயமும் கிடையாது. ஏன், யாராவது ஏதாவது சொன்னால் எதிர்த்துப் பேசவோ தமிழில் திட்டவோ கூட தெரியாது அப்போது. ஒரு முறை கல்லூரியிலிருந்து வர தாமதமாகும் என்று அம்மாவிடம் தமிழில் சொல்லி விட்டேன். வீட்டிற்கு வந்தவுடன் சௌராஷ்ட்ராவில் பேசாமல் தமிழில் ஏன் என்னுடன் பேசினாய் என்று அவருக்கு ஒரே கோபம். எதற்காக இவ்வளவு கோபப்படுகிறார் என்று அப்போது எனக்குப் புரியவில்லை. எங்கிருந்தாலும் யார் கூட இருந்தாலும் வீட்டில் இருப்பவர்களிடம் பேசும் பொழுது சௌராஷ்ட்ராவில் மட்டுமே பேச வேண்டும் கறாராக அன்று அம்மா சொன்னது இன்றும் நினைவில் வைத்து அப்படித்தான் இருக்கிறேன். குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுத்திருக்கிறேன்.

தாய்மொழியின் மகத்துவம் தாய்நாட்டில் இருக்கும் வரை தெரிவதில்லை. கனடாவில் கால் வைத்தவுடன் கணவரின் நண்பர் தினேஷை ( மதுரைக்காரரும் கூட ) பார்த்துப் பேசியவுடன் இருபத்திநான்கு மணி நேரத்திற்குள் தாய் வீட்டை விட்டுப் பிரிந்த வலி குறைந்தது மட்டுமில்லாமல் அந்நிய தேசத்தில் என் பாஷையில் உரையாட முடியும் என்ற நினைவு தந்த இன்பம் அனுப்பவித்தவர்களுக்குத் தான் தெரியும். வீட்டிற்கு வந்தவுடன் எங்களுக்காக உணவை கொண்டு வந்து கொடுத்த ராம், மதுரையிலிருந்து வந்திருந்த மதி என்று நண்பர்கள் கிடைக்க, வெளிநாட்டில் இருந்தாலும் தமிழில் பேச ஆட்கள் இருக்கிறார்கள் என்ற நிம்மதியில் கனடாவில் வாழ்க்கை தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமைகளில் தொலைக்காட்சியில் வரும் சில மணிநேர தமிழ் நிகழ்ச்சிகளுக்காக காத்திருந்த காலங்களும் உண்டு.

பஸ்ஸில், கடைகளில் என்று எங்கு பார்த்தாலும் பல தேசத்திலிருந்து வந்த மனிதர்கள். தமிழ் முகம் போல தெரிந்தாலே அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். நிறைய இலங்கைத் தமிழ் மக்கள். அவர்களுடைய பேச்சுத்தமிழ் கேட்க அவ்வளவு இனிமையாக! நாம் தான் தமிழ் மொழியை கலப்படமாக்கி விட்டோம்!

முதன் முதலில் பஸ்ஸில் பயணிக்கையில் தமிழில் உரக்க பேசிக்கொண்டே இருவர். அரசியல், சினிமா, சர்ட்டிபிகேஷன் , கணினி மொழிகள் என்று அவர்கள் பேசியதை கேட்டுக் கொண்டே வருவேன். கணவரிடம் அவ்விருவரைப் பற்றி சொன்னவுடன் உன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டியது தானே என்றார். நானாக போய் பேச மாட்டேன். பார்க்கலாம் என்று சொல்லி விட்டேன். ஆனால், சில தமிழ் குடும்பங்கள் இருக்கிறது என்று ஒரு சின்ன திருப்தி.

ஒரு நாள் கடை வாசலில் அவ்விருவரில் ஒருவர் நின்று கொண்டிருக்க, கணவரிடம் இவர் தான் பஸ்ஸில் வருவார் என்றவுடன் அவரிடம் போய் அறிமுகப்படுத்திக் கொள்ள, பார்த்தால் அருப்புக்கோட்டைக்காரர். அடுத்த நாள் பஸ் நிறுத்தத்தில் அவருடைய நண்பர் சையதை அறிமுகப்படுத்தினார். அவர் திருச்சிக்காரர். நீங்க தமிழ் பேசுவீங்கன்னு தெரியாது. பார்த்தா நார்த் இந்தியன் மாதிரி இருக்கீங்க என்று அன்று ஆரம்பித்த நட்பு இன்றும் தொடருகிறது. தாய்மொழி , தமிழ்மொழி பேசும் நண்பர்கள் பலர் கனடாவில் அறிமுகமாகி இன்றும் நட்பு பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

அமெரிக்கா வந்த பிறகு மகளையும், கணவரையும் பிரிந்து நான் மட்டும் தனியே ஹோட்டலில் தங்கி வேலைக்குச் செல்ல .வேண்டிய நிலை. ஊரில் இருந்தவரை தனியாக இருந்ததில்லை. தனிமை தந்த பயமும், தூக்கமிழந்த இரவுகளும், புது இடமும், பழகாத பனியும், குளிரும் மிகுந்த மன அழுத்தத்தை தந்தன. வேலையிடத்தில் மனிதர்கள் எப்படி பழகுவார்களோ என்ற தயக்கம் வேறு.

முதல் நாள் வேலைக்குச் சென்ற அன்று பல இந்தியர்களை பார்த்த்தில் ஒரு திருப்தி. சேலத்தில் இருந்து வந்திருந்த ஸ்ரீதேவியின் அறிமுகம் கிடைத்த உடன் தமிழில் பேசிய அந்த பொழுதில் மனம் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவருடைய கணவர் கண்ணன் மதுரை திருநகரைச் சேர்ந்தவர். இது போதாதா? கண்ணனும் மதுரை என்றவுடன் விவரங்களை கேட்டறிந்து பாசத்துடன் நன்றாக கவனித்துக் கொண்டார்கள். பெரும்பாலும் இரவு உணவு அவர்கள் வீட்டில் தான். நல்ல நண்பர்கள் ஆனோம்.

பிறகு வேறு மாநிலத்தில் வேலை. Utah என்றால் பலருக்கும் அப்போது தெரியவில்லை. சால்ட் லேக் சிட்டி-யில் இறங்கிய பொழுது என்ன மாதிரியான ஊர், எப்படி இருக்கப் போகிறது வாழ்க்கை என்று எதுவுமே தெரியாமல் கலக்கமாகவே சென்றோம். நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்குச் செல்லும் வழியில் பாம்பே ரெஸ்டாரன்ட் என்ற போர்டை பார்த்தவுடன் அப்பாடா, ஒரு இந்தியன் ரெஸ்டாரன்ட் இருக்கிறது. நிச்சயம் இந்தியர்கள் இருப்பார்கள் என்று அன்றிரவு உணவைச் சாப்பிட உடனே கிளம்பி விட்டோம்.

நல்ல கூட்டம். மெலிதாக ஒலித்துக் கொண்டிருந்த ஹிந்திப்பாடல், கதம்பமான மசாலா நறுமணம். மனம் சாந்தி சாந்தி சாந்தி சாந்தி என்று அமைதி கொண்டதடி என்று பாடுகையில் புது முகங்களாக இருக்கிறதே என்று அந்த ஹோட்டலின் உரிமையாளர் வந்து யார் எங்கிருந்து வருகிறோம் என்ற விவரங்கள் கேட்டு, தமிழில் பேசி கொடுத்தாரே ஒரு ஷாக்! அவர் கோயம்புத்தூர்க்காரர். சூப்பராக ஸ்பெஷலாக உணவுகளை சமைக்கச் சொல்லி கொடுத்தார். ஐந்தாறு பேர் புதிதாக வந்திருக்கிறார்கள் என்று அவர் சொன்ன பிறகு Utah பிடிக்க ஆரம்பித்து விட்டது. அந்த நண்பர்களையும் அதே வாரத்தில் சந்தித்து பிறகு வந்த நாட்களில் ஒரு குடும்பமாக சுற்றிக் கொண்டு திரிந்தோம். அமெரிக்காவில் மிகவும் ஊர் சுற்றியது அந்த நண்பர்களுடன் தான். இன்றும் பலருடன் தொடர்பில் இருக்கிறோம்.

இன்று நினைத்துப் பார்க்கையில் தாய் பாஷையும், தமிழ் மொழியும் தான் பல நண்பர்களை அயல்மண்ணில் இணைத்தது. மிக நல்ல மனிதர்களையும் நண்பர்களையும் அறிமுகப்படுத்தியது. மனதிற்கு மொழி தரும் அமைதி, நெருக்கத்தைப் போல் வேறு எதுவுமில்லை. என்ன தான் அமெரிக்க நண்பர்கள் இருந்தாலும் தமிழ் மொழியில் பேசி சிரித்து நண்பர்களுடன் அளவளாவது தனியொரு இன்பம். அதனினும் பேரின்பம் தாய் பாஷையில் பேசும் பொழுது மதுரையில் குடும்பத்தினருடன் இருப்பது போல் தரும் உணர்வு... வார்த்தைகளால் விவரிக்க இயலாது. 

U.S. வந்த பிறகு சென்னைக்கு சென்ற முதல் விசிட்டில் பக்கத்து பக்கத்து வீடுகளில் இருக்கும் தமிழர்கள் ஆங்கிலத்தில் கதைத்ததை கண்டு ஒரே அதிர்ச்சி! கேட்டால், ஆங்கிலத்தில் பேசவில்லை என்றால் ஆங்கிலம் தெரியாது என்று முத்திரை குத்தி விடுவார்களாம். இப்படியும் சிலர்! நல்ல வேளை ! மதுரை இன்னும் அந்த அளவிற்கு மோசமாகவில்லை. 

அவரவர் தாய்மொழியை கொண்டாடுவோம், அதன் அருமையை அடுத்த சந்ததியினருக்கும் எடுத்துச் சொல்லுவோம்.


maathru bhaaShaa divas!

தாய்மொழிக்கு வந்தனம். 

பின் குறிப்பு: என் பெயரை சௌராஷ்டிராவில் எழுதி கொடுத்த கொண்டா.செந்தில்குமாருக்கு நன்றி.
2 comments: