Saturday, March 26, 2016

குளுகுளு பெங்களூரு

சென்னை காற்றை சுவாசித்துக் கொண்டே பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து உள்நாட்டு நிலையத்திற்கு கடந்து செல்கையில் எங்கிருந்து கண்ணாடி உடையுமோ? என் தலை தப்புமோ? பயந்து கொண்டே சுற்று முற்றும் பார்த்துக் கொண்டே நடக்க ஆரம்பித்தேன். (சமீபத்தில் தான் கண்ணாடி உடையும் சம்பவம் தன் சஷ்டியப்தபூர்த்தியை வெற்றிகரமாக கொண்டாடியிருக்கிறது.) இடைப்பட்ட தூரத்தில் இன்னும் சில மின் விளக்குகளைப் போடலாம். நாய்கள் வேறு உலாத்திக் கொண்டிருந்தது. இருட்டில் தனியே நடந்து வர கொஞ்சம் பயமாக இருந்தாலும் கூட்டமில்லாத லிஃப்டில் தெரியாத மனிதர்களுடன் வருவது அதை விட பயமாக இருந்தது. உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிப்பவர்கள் கூட்டம் குறைவாக அமைதியாக இருக்க, நேரம் செல்ல செல்ல கூட்டம் வருமோ என்னவோ?

காவலுக்கு இருந்தவர்கள் இரவு ஒரு மணிக்கு மேல் தான் உள்நாட்டு விமான நிலையத்தின் உள்ளே செல்ல அனுமதி. அதுவரை வெளியில் தான் இருக்க வேண்டும் என்று சொல்லி விட்டார்கள். வேறு வழி ? அருகிலிருந்த கடையில் நுரை ததும்பும் காஃபியை வாங்கி சுவைத்திட...ம்ம்ம். ஊருக்கு வரும் போது மட்டுமே கிடைக்கும் ஆனந்தம்.

ஒவ்வொரு முறை வரும் பொழுதும் இந்த விமான நிலையத்தில் தான் எத்தனை எத்தனை மாறுதல்கள்! பளபளவென பார்ப்பதற்கு அழகாய் இருந்தாலும் கூரை எப்பொழுது யார் தலையில் விழுமோ, கண்ணாடி ஜன்னல்கள் எந்த திசையில் பறக்குமோ என்ற பயமும் கூடவே வருவதை மறுப்பதற்க்கில்லை. ஆனாலும் கவலையேபடாமல் அதன் கீழ் பெட்டி மேல் தலையை கவிழ்த்துக் கொண்டும், கழுத்தை தொங்கப் போட்டுக் கொண்டும், மனைவி தோள் மேல் சாய்ந்தபடியும் பலரும் தூங்கி வழிந்து கொண்டிருந்தார்கள். ஓரிரு வெள்ளைக்காரர்களும் காலை நீட்டிக் கொண்டும், படித்துக் கொண்டும், பாட்டு கேட்டுக் கொண்டும்... எப்படா கதவு திறக்கும் என காத்துக் கொண்டிருந்தவர்களுடன் நானும் சேர்ந்து கொண்டேன்.

'ஜிலுஜிலு'வென இதமான காற்று. குளிராத அமைதியான இரவு. இரைச்சல் இல்லாத சாலையில் ஓடும் வண்டிகள். தெருவிளக்குகளுடன் அந்த இடமே ஜொலித்துக் கொண்டிருந்தது. அழகான இரவில் நாம் தூங்கிக் கொண்டிருக்கிறோம். அரக்கபரக்க பகலில் ஓடிக் கொண்டிருக்கிறோம்! ஒரு வேளை நாம் தூங்குவதால் தான் இரவு அழகாகிறதோ?

அதிசயமாக கொசுத்தொல்லை இல்லை. தூக்கம் வராமல் புத்தகத்தை எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன். வஞ்சகமே இல்லாமல் 'இனிப்பாக' இருக்கும் காஃபியை மீண்டுமொரு சாப்பிட ஆசை. கடையை மூடிவிட்டிருந்தார்கள். போரடிக்கவே சிறிது நேரம் நடந்து கொண்டிருந்தேன். நடுநிசிக்குப் பிறகு உள்ளே செல்லலாம் என்று சொன்னவுடன் அனைவரும் 'திபுதிபு'வென்று உள்ளே நுழைந்தோம். கண்கள் தூக்கத்திற்கு ஏங்கினாலும் உட்கார்ந்து கொண்டே தூங்குவதைப் போல கொடுமை வேறு ஏதுமில்லை. எனக்கென்ன என சிலர் தரையில் படுத்து விட்டார்கள். உள்ளே ஏசி குளிர் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. அதை குறைக்கலாம். நேரத்திற்கேற்ற மாதிரி குளிரை மாற்றி வைக்கும் ஆட்டோமேடிக் செட்டிங்க்ஸ் இன்னும் வரவில்லையோ ? எவ்வளவு மின்கட்டணம், மின்சார செலவு? ம்ம்ம்... மதுரையில் அநியாயத்துக்கு மின்வெட்டு இங்கோ ...

லோக்கல் போலீஸ் மாதிரி தொப்பையப்பன்களாக இல்லாமல் நன்றாக ட்ரிம்மாக சீருடை அணிந்த காவலர்கள், இருவர் இருவராக ரோந்து பணியில் ஒரு சோதா துப்பாக்கியை தோளில் சுமந்த படி நடந்து கொண்டிருந்தார்கள். ஆபத்திலிருந்து மக்களை காப்பாற்ற வேண்டியவர்களிடம் இருக்க வேண்டிய துப்பாக்கியா அது? அவர்கள் உயிரையும் காத்துக் கொண்டு மக்கள் உயிரையும் காப்பாற்ற வேண்டிய பெரும்பொறுப்பில் இருப்பவர்களுக்கு ஒரு AK47 ரக துப்பாக்கியாவது வேண்டாமா? அது தான் அவர்களுடைய வேலை என்றாலும் பொறுப்புணர்வுடன் இரவு முழுவதும் அவர்கள் கடமையாக விழித்திருந்து தங்களுக்குள் இடத்தையும் பொறுப்பையும் மாற்றிக் கொண்டு கடமையாக காவலுக்கு இருந்தது பெருமையாக இருந்தது.

இன்னும் மூன்று மணி நேரங்கள் கடத்தியாக வேண்டுமே! சரி கொஞ்ச நேரம் சுற்றிப் பார்க்கலாம் என்று நடக்க ஆரம்பித்தேன். புது விமான நிலையத்தினுள்ளே மிகவும் மோசமான ஒரு பரத நாட்டிய படத்தை ரசனையே இல்லாமல் ஒரு மூலையில் வைத்திருந்தார்கள். அதற்கு அதை வைக்காமலே இருந்திருக்கலாம். இண்டோர் டெக்கரஷன் என்ற போர்வையில் சில பல அலங்கோலங்கள். சம்பந்தமே இல்லாமல் குரோட்டன் செடிகள் சிறிதும் பெரிதுமாக கலைப்படைப்புகளினிடையே வைக்கப்பட்டிருந்தது. உள்ளே நான்கைந்து காஃபி, ஐஸ்க்ரீம் கடைகள்! பெயர்கள் எல்லாம் வித்தியாசமாக! தமிழ் தமிழ் என முழங்கும் தமிழ்நாட்டில் எங்கும் ஆங்கில மயம்! கடைகளில் மேலை நாட்டு உணவுகளின் ஆதிக்கம்!

அங்கிருந்த இருவரின் கடின உழைப்பில் தரை சுத்தமாக இருந்தது. துடைத்துக் கொண்டே இருந்தார்கள்.

சிறிது நேரத்தில் ஒரே சலசலப்பு. தூங்குபவர்கள் தூங்கிக்கொண்டே இருக்க, புதிதாக வெளியிலிருந்து வருபவர்கள் கூட்டம். அவர்களின் பேச்சிலும் சிரிப்பிலும் விமான நிலையமும் விழித்துக் கொண்டது. அனேகமாக சென்னை-பெங்களூரு செல்லும் அதிகாலை விமானமே அங்கிருந்து கிளம்பும் முதல் விமானமாக இருக்கக் கூடும். கவுண்டரில் வேலை செய்பவர்கள் அனைவருமே இளம்வயதினர். வயதானவர்களுக்கு அங்கு வேலையில்லை போலும்! பெட்டிகளை பரிசோதிக்க இங்கு கொண்டு வரவும் என்றவுடன் தூங்கிக் கொண்டிருந்த கூட்டம் மெல்ல விழித்துக் கொள்ள... தள்ளு வண்டியில் காபிஃயும் வர, அங்கும் கூட்டம்.  டிக்கெட் வாங்கிக் கொண்டு விமானத்திற்காக காத்திருந்த பொழுது காலை மணி ஐந்து.

பெங்களூரு செல்பவர்களுக்கான கேட் திறந்தவுடன் ஒரு ஓட்டை பஸ் பயணிகளை ஏற்றிக் கொள்ள, அந்த பஸ்சை ஓட்ட தனித்திறமை தான் வேண்டும்! இஷ்டத்துக்கு வளைத்து வளைத்து ஓட்டி ஒரு குட்டி விமானத்தின் முன் நிறுத்தினார்கள். மொத்தமே ஏழெட்டு படிகள் இருந்தும் கைப்பெட்டிகளுடன் ஏறுவது கொஞ்சம் சிரமமாகத் தான் இருந்தது. கூட்டமே இல்லை. அமர்ந்தவுடன் தூங்கியும் விட்டார்கள் சிலர்! இரு அழகான இளங்காளை ஃப்ளைட் அட்டெண்டர்கள் கனிவான சிரித்த முகத்துடன். தண்ணீர் வேண்டுமா, காம்ப்ளிமென்டரி பிரேக்பாஸ்ட் வெஜ்/நான்-வெஜ் எது வேண்டும்? எதுவுமே வேண்டாம் என்றவுடன் அதிசயமாக பார்த்துக் கொண்டே சாக்லேட் மேம், நோ தேங்க்ஸ். சிரித்துக் கொண்டே நகர்ந்து தூங்கிக் கொண்டிருந்தவரிடம் அதே டயலாக்கை ஒப்பிக்க, அவர் வேகமாக வேண்டாம் என சொல்ல, திஸ் இஸ் ஃப்ரீ சார் என்றவுடன், ஒரு நிமிடம் யோசித்து விட்டு நான்-வெஜ் கேட்டு வாங்கி பரபரவென பிரித்து காலை ஆறு மணிக்கு சிக்கன் சேண்ட்விட்ச்சை மடமடவென சாப்பிட்டு தண்ணீரும் குடித்து விட்டு மீண்டும் தூங்கியும் போனார். ஓசியில் கிடைத்தால் எதையும் சாப்பிடுவோர் சங்கத்து ஆள் போல ! அந்த விமானத்தில் பயணித்த எட்டு பத்து பயணிகளுள் ஒரே பெண்மணி நான் தான்!

இளஞ்சூரியன் நீல வானில் வலம் வரும் அதிகாலை நேரம் மனதிற்கு இதமான நேரம். சென்னை கடற்கரை மெல்ல மெல்ல மறைந்து வறண்ட பாறைக்குன்றுகள் செம்மண் பரப்பின் மேல் பறந்து கொண்டிருந்தோம். சிறிது நேரத்தில் பச்சைப்பசேலென மரங்கள் தெரிய, விமானமும் கீழிறங்க, விமானியும் காலை நேர மிதமான குளிர் விவரங்களைச் சொல்ல வந்தே விட்டது பெங்களூரு.

கல்லூரிச் சுற்றுலாவில் நண்பர்களுடன் பிரபலமான இடங்களைப் பார்த்த ஞாபகம். பிறகு கல்லூரி ஆசிரியர்களுக்கான referesher courseக்காக சுற்றி வந்தது, வேலைக்கான நேர்முகத்தேர்வுக்காக கணவருடன் வந்தது என நான் பார்த்த பெங்களூரு! ஒரு காலத்தில் அங்கேயே வேலை பார்த்து தங்கி விடவேண்டும் என்ற ஆசையும் இருந்தது. ம்ம்ம்...

'தட் தட்' என தரை தட்டி விமானம் நடக்க ஆரம்பிக்க, இறங்கும் வேளையில் ஃப்ளைட் அட்டெண்டர்கள் அழகாக சிரித்துக் கொண்டே நன்றியை தெரிவித்துக் கொண்டிருந்தார்கள்.

பெரிய விமான நிலையம் தான். சென்னையை போல அலங்கோல கலையுணர்வு அலங்காரங்கள் இல்லாமல் நேர்த்தியாக, மக்கள் கூட்டம் இல்லாத காலை நேர அமைதியுடன் அழகாக இருந்தது. பெட்டிகளும் விரைவில் வர, வெளியில் வரும் பொழுது மணி ஏழு. தம்பியை வேறு மெதுவாக வா என்று சொல்லி அவனை இன்னும் காணவில்லை. ஃபோன் செய்யலாம் என்றால் சில்லறை காசு இல்லை. கடைகளில் கேட்டால் முறைத்துக் கொண்டே பதிலும் இல்லை. மொழி தெரியாத ஊரில் முழித்துக் கொண்டே நிற்பதைப் போல கொடுமை வேறு எதுவுமில்லை. பார்த்த அனைவர் கையிலும் செல்போன் இருந்தாலும் கேட்டு வாங்கிப் பேசவும் தயக்கமாக இருந்தது. உட்காரும் இடத்தை ஆக்கிரமித்திருந்த கன்னடர்கள் கொஞ்சம் சிடுமூஞ்சிகள் போல. 'உர்ர்ர்'ரென்று முறைத்துப் பார்த்துக் கொண்டே இருப்பது போல ஒரு முகபாவம். சரி, தம்பி வரும் வரை காத்துக் கொண்டிருக்க வேண்டியது தான் என்று நின்று கொண்டிருந்தேன்.

மிடில் ஈஸ்ட்டிலிருந்து விமானம் ஏதோ ஒன்று வந்திறங்கியதோ என்னவோ, பர்தா போட்டுக் கொண்டு பெண்களும், தாடி வைத்துக் கொண்ட ஆண்களுமாய் பெருங்கூட்டம்! அவர்களை அழைத்துச் செல்ல வந்திருந்தவர்கள் சிரிப்புடன் கட்டி அணைத்துக் கொண்டு சென்று கொண்டிருந்தார்கள்.

சிறிது நேரத்தில் தம்பியும் வந்து விட்டான். அவனைப் பார்த்தவுடன் தான் ஊருக்கு வந்த திருப்தி! நீ வந்து ரொம்ப நேரமாச்சோ?...

வந்து ஒரு அரைமணி நேரமாச்சு!

அடடா! ஃப்ளைட் சீக்கிரம் வந்துருச்சு போல. சாரி.

அது இருக்கட்டும். குழந்தை எப்படி இருக்கான்னு பேசிக் கொண்டே காரை நோக்கி நடந்தோம்.

அவனுக்கென்ன. நல்லா சேட்டைய பண்ணிக்கிட்டு இருக்கான். இங்க இப்பத்தான் ரெண்டு நாளா மழை இல்ல. குளிரும் பரவாயில்லை என்றான்.

ஞாயிற்றுக்கிழமை காலை அமைதி கூட்டமில்லா சாலைகளில் பயணிக்கும் போது தெரிந்தது. தம்பியின் வீடும் அரை மணி நேரத்தில் வந்து விட, இதே சென்னை என்றால் ரோட்டோரத்தில் மனிதர்களுடன் படுத்துறங்கும் நாய்களும், ஆடிமாதத்து ஸ்பெஷல் எல்.ஆர்.ஈஸ்வரியின் பாடல்களும், மின்விளக்குகளுடன் ஜொலிக்கும் அம்மன் படங்களும் என்று கோலாகலமாக இருந்திருக்கும்.

பெங்களூரின் 'ஜில்'லென்ற இதமான வருடும் குளிரின் வரவேற்பு சுகமாக இருந்தது!2 comments:

  1. கட்டுரை நல்ல கோப்பாக ரசனையாக உள்ளது அம்மா ஆனால் அருமையான ஏசி சிலிலீப்பர் பஸ்ஸில் சென்று இருந்தால் இரவு தூக்கம் கெடாடாரு

    ReplyDelete
    Replies
    1. நன்றி, திரு.குப்புசாமி. விமான நிலையத்திலிருந்து பஸ் நிலையத்திற்கு இரவில் தனியாக செல்வதில் இருக்கும் பிரச்னைகள் தான். :(

      Delete