Saturday, June 11, 2016

மீண்டும் பிறந்து வந்தான் ...

இருந்திருந்து அன்று தான் பனிக்காலத்தின் மிக மோசமான குளிரும், பனிமழையும். பக்கத்து மாநிலம் மாசசூசெட்ஸ் நிலைமையோ அதை விட மோசம். பல அலுவலகங்களையும் சீக்கிரமே மூடி விட்டிருந்தார்கள். பயணிப்பவர்கள் மிகவும் கவனமாக இருங்கள். அவசியமிருந்தால் ஒழிய வெளியில் யாரும் செல்லாதீர்கள் என்று இந்த ஊர் ரமணன் வேறு சொல்லிக் கொண்டிருந்தார்.

இரவு உணவை முடித்து விட்டு மகனின் அலைபேசியின் அழைப்புக்காக காத்திருந்தேன். பனிக்காலத்தில் வாரத்தில் ஒரு நாள் பள்ளியிலிருந்து Ski Club குழு ஒரு மணிநேரத் தொலைவில் இருக்கும் பனி மலைக்குச் சென்று skiing செய்து விட்டு வருவார்கள். அலைபேசியும் அழைக்க, இப்பத் தான் நெனைச்சேன். சரியா கூப்பிட்டானே என்று பார்த்தால், வேறு எண்ணிலிருந்து அழைப்பு. யாராக இருக்கும்? குழப்பத்துடன் எடுக்க, ஹலோ , என் பெயர் சூஸன் நான் உங்கள் மகன் படிக்கும் பள்ளியில் வேலை பார்க்கிறேன். ski mountain ரிசார்ட்டில் இருந்து பேசுகிறேன். இன்று ஒர் அசம்பாவிதம் நடந்து விட்டது. மெதுவாக அவர் பேச பேச, எனக்குள் பதட்டம் அதிகரிக்க, என்னாச்சு என் பையனுக்கு ? சீக்கிரம் சொல்லுங்க.

அவன் மலை உச்சியிலிருந்து பனிச்சறுக்கிக் கொண்டே வரும் பொழுது நிலை தடுமாறி உருண்டு கீழே விழுந்து மரத்தில் மோதி...என் உடம்பு சில்லிடுவதை என்னால் உணர முடிந்தது. கடவுளே!

இப்ப எப்படி இருக்கான்? தலையில் அடி இல்லையே?

முதல் உதவி செய்து கொண்டே ஆம்புலன்ஸ்-ல் அருகிலிருக்கும் மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருக்கிறோம். அங்கு சென்றால் தான் தெரியும்.

கடவுளே! என்ன இது சோதனை?

நான் என் மகனிடம் பேசலாமா? பேசும் நிலையில் இருக்கிறானா?

இருங்கள். நான் அவனிடம் கொடுக்கிறேன்...

அம்ம்ம்மா...அழுகையுடன் மகனின் குரல் கேட்கவே...என்னாச்சுடா? நெஞ்சு வலிக்குதும்மா. கால் அசைக்க முடியல. சுக்கு நூறாக என்னுள் நொறுங்க... சரி, சரி, அழாதே. நானும் அப்பாவும் ஹாஸ்பிடல் வந்துடறோம். உனக்கு ஒன்னும் ஆகாது. பயப்படாதே.

சொல்லி விட்டேன். ஆனால்...பயம் என்னைத் தொற்றிக் கொண்டது. நெஞ்சு வலி என்கிறானே...கடவுளே...ஏன் இப்படி?

மீண்டும் சூஸன் பேச, மருத்துவமனை விவரங்களைக் கேட்டறிவதையும் பதட்டமாகப் பேசுவதையும் கேட்டவுடன் கணவரும் அருகில் வந்து நிற்க...நான் பேசுவதிலிருந்து ஏதோ விபரீதம் நடந்திருக்கிறது என்று புரிந்து கொண்டு அவரும் பதட்டத்துடன்...என்னாச்சு?

நெஞ்சு வலிக்குதுன்னான் என்று சொன்னால் இவர் பதட்டப்படுவாரே!

சொல்லு.

நாம உடனே இந்த ஆஸ்பத்திரிக்குப் போகணும். நம்ம பையன் கீழே விழுந்துட்டானாம். நான் அவன் கூட பேசினேன்.

என்னது??? எப்படி விழுந்தான்?

கார்ல போகும் போது விவரமா சொல்றேன். இப்ப கிளம்புங்க.

சிறிது நேரம் பூஜையறையில் என்னை அமைதியாக்கிக் கொண்டு என் மகனை பத்திரமாக ஒரு சேதாரமுமில்லாமல் உயிருடன் அழைத்து வர வேண்டும் என்று வேண்டுகையில்... என்னையுமறியாமல் உடைந்து போனேன்.

கணவரும் தயாராகி வர, நீயே காரை ஒட்டு. மகனுக்கு ஏதோ சீரியஸ் என்று புரிந்து அவரால் அதற்கு மேல் பேச முடியவில்லை.

நானும் வண்டியை கிளப்ப, இப்ப சொல்லு. என்ன நடந்தது? எந்த ஹாஸ்பிட்டல்?

என் ஃபோனில் கடைசியாக அழைத்த நம்பரில் பேசுங்கள். பதட்டப்பட வேண்டாம். அவனுக்கு ஒன்றும் ஆகாது. என்று தைரியம் சொல்லி விட்டு...அவரும் பேச, சூஸன் என்னிடம் சொன்னதையே அவரிடம் சொல்ல...அமைதியாக கேட்டுக் கொண்டிருந்து, நீங்கள் அங்கு நடப்பதை அப்டேட் செய்து கொண்டே இருங்கள் என்று கவலையுடன் சொல்லி ஃபோனை வைத்து விட்டு... எனக்கு ஒன்னுமே புரியல? பயமா இருக்கு. நல்ல வேளை, முதல்ல நீ போன் எடுத்துப் பேசின. ஏன் இப்படியெல்லாம்...

இங்கே இருந்து அங்க போக இன்னும் ஒன்றரை மணிநேரம் ஆகலாம். ஒன்னு பண்ணுங்க, அந்த ஊரிலிருக்கும் நண்பர்கள் ஜெயஸ்ரீ, கணேஷ கூப்பிட்டு அவங்களால ஆஸ்பத்திரிக்குப் போக முடியுமான்னு கேளுங்க.

குட் ஐடியா. அவங்க நம்பர்?

உடனடியா ஃ பேஸ்புக்ல மெசேஜ் அனுப்புங்க. இன்னொரு நண்பரிடமிருந்து எண்ணையும் வாங்கிக்கலாம் என்று சொல்ல, அவர் படபடவென செய்தி அனுப்பி விட்டு, நண்பரிடமிருந்து நம்பரையும் வாங்கிக் கொண்டு ...

ஜெயஸ்ரீ, கணேஷிடம் பேச, அவர்களும் ஒன்றும் கவலைப்படாதீர்கள். நீங்கள் கவனமாக வாருங்கள். நாங்கள் அவனருகில் இருக்கிறோம் என்று சொல்லவும் கொஞ்சம் நிம்மதி. இவர்கள் அருகில் இருந்தால் குழந்தை தனியாக இருப்பதாக நினைக்க மாட்டான் என்ற நினைவே மிகப்பெரிய ஆறுதலாக இருந்தது.

மீண்டும் சூஸனை தொடர்பு கொண்டால், இப்பொழுது தான் ஹாஸ்பிட்டல் வந்து சேர்ந்தோம். ஒரு பத்து நிமிடம் கழித்துத் தொடர்பு கொள்கிறோம் என்று வைத்து விட்டார்.

எவ்வளவு மெதுவாகப் போக முடியுமோ அவ்வளவு மெதுவாக ஒட்டிக் கொண்டு சென்றாலும் எதிரில் வரும் வண்டிகள் வழுக்கிக் கொண்டு காரை இடிப்பது போல் வந்து செல்ல... யாரையும் குறை சொல்ல முடியாது. கரணம் தப்பினால் மரணம் நிலை தான் அன்று.

திடீர்திடீரென வரும் வளைவுகள், வழுக்கும் சாலைகள், 'சொளசொள'வெனக் கொட்டும் பனிமழை, உறைபனிக்கும் கீழான குளிர், வளைந்து வளைந்து செல்லும் மலைப்பாதை, ஏற்ற இறக்கங்கள். முதன்முறையாக அச்சாலையில் பயணம்... பத்திரமாக மருத்துவமனை போய்ச் சேருவதே அந்த நேரத்தில் மிகப்பெரிய சவாலாக இருக்க...

மெதுவா போ, லேட்டானாலும் பரவாயில்லை.

இப்பவே 20 மைல் வேகத்துல தான் போறேன். பின்னாடி ஒரு கிரகம் வேற வண்டிய இடிக்கிற மாதிரி எவ்வளவு பக்கத்துல வர்றான்.

அவன் போகட்டும். வழிய விடு. இவ்வளவு மோசமா இருக்கிற ரோட்ல கூட இப்படியெல்லாம் ஓட்டிட்டு வர்றாங்க!

அவனுக்கு வழிவிட ஒதுங்கினால் கார் வழுக்க... நாங்கள் பத்திரமா போய்ச் சேரணுமே என்ற கவலையும் சேர்ந்து கொண்டது.

மருத்துவமனையைத் தொடர்பு கொண்டால், உங்களுக்காகக் காத்திருக்கிறோம். நீங்கள் வந்து கையெழுத்திட்டால் தான் நாங்கள் அட்மிட் பண்ணி டெஸ்ட் பண்ண முடியும் என்றவுடன்...நாங்கள் வர இன்னும் ஒரு மணி நேரம் கூட ஆகலாம். நீங்கள் டெஸ்ட்களை உடனே ஆரம்பியுங்கள் என்று சொல்ல அவர்களும் சரியென்று சொல்லி விட்டார்கள்.

அதற்குள் ஜெயஸ்ரீ அழைக்க, நாங்க ஆஸ்பத்திரிக்கு வந்துட்டோம். இப்ப தான் CT ஸ்கேன் எடுக்கக் கூட்டிட்டுப் போனாங்க. உங்க பையன் பக்கத்துல தான் இருக்கோம். அவன் தைரியமா இருக்கான். நீங்க கவலைப்படாதீங்க எனச் சொல்லவும்...மிகப்பெரிய பாரம் இறங்கியது போல் இருந்தது.

இவ்வளவு மெதுவாகப் போனால் போய்ச் சேர்ந்த மாதிரி தான்! ஆனால் வேறு வழியில்லை.

இரவு, பனி மழை ,அவ்வளவாக மக்கள் நடமாட்டமில்லாத வெறுமையான சாலை...மனம் முழுவதும் என் குழந்தையின் முகமே. வழி முழுவதும் வேண்டுதல்களுடன்.

ஒரு வழியாக மருத்துவமனை வந்திறங்கியதும் காரை நிறுத்தி விட்டு, எங்கு அட்மிட் செய்திருக்கிறார்கள் என்று கேட்டு ஓடிப் போய் பார்த்தால்...ஜெயஸ்ரீ, கணேஷ் இருவரும் டாக்டரிடம் பேசிக் கொண்டிருக்க, எங்களைப் பார்த்ததும் சிரிக்க முயன்று அம்மா என்று அழ ஆரம்பித்து... கண்களுக்கு அடியில் நல்ல அடி , நெற்றியில் கீறல்கள், முகமெல்லாம் கருநீலமாக, கீழே விழுந்த வேகத்தில் தெர்மல் பேன்ட் கிழிந்து தொங்கிக் கொண்டிருந்தது. ட்ரிப்ஸ் ஏறிக் கொண்டிருக்க...நர்ஸ் ஏதோ மருந்தை உள்ளே ஏற்ற...

நாங்க வந்துட்டோம்ல. கவலைப்படாத. உனக்கு ஒன்னும் இல்லை. இரு, டாக்டர்ட்ட பேசிட்டு வந்துடறோம்.

டாக்டர்ரும், நல்லவேளை தலையில் அடிபடவில்லை. அவனுடைய ஹெல்மெட்டும், கண்ணாடியும் தான் அவன் தலையையும், கண்களையும் காப்பாற்றியிருக்கிறது. உங்களுடைய அதிர்ஷ்டமோ, அவனுடைய நல்ல வேளையோ சிறு காயங்களுடன் உயிர் பிழைத்திருக்கிறான். இவன் விழுந்த வேகத்திற்கு மரத்தில் மோதியதால் அதிர்ச்சியில் இருக்கிறான். மருந்துகள் கொடுத்திருக்கிறோம். தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம், குழப்பம் எல்லாம் இருக்கும். இன்னும் சில டெஸ்டுகள் செய்ய வேண்டும். சில ஸ்பெஷலிஸ்ட்களும் வந்து பார்க்க வேண்டியிருக்கிறது. நீங்கள் இன்சூரன்ஸ் விவரங்களை கொடுத்து விட்டு வாருங்கள் என்றவுடன் கணவர் சென்று விட, நண்பர்களுக்கு என் நன்றியைச் சொல்ல, அவர்களும் நாங்கள் உங்களுடனே இருக்கிறோம். தைரியமாக இருங்கள் என்று ஆறுதலாகப் பேச, அந்த நேரத்தில் அதுதான் அவசியமாக இருந்தது. ஏழேழு ஜென்மத்திற்கும் கடன்பட்டு விட்டோம்.

அம்மா, என் பக்கத்துல வந்து உட்காரு என்று கையைப் பிடித்துக் கொண்டு மீண்டும் அழ, என்னால, அழக் கூட முடியல. மூச்சு விடவே கஷ்டமா இருக்கும்மா. தண்ணி கூட கொடுக்க மாட்டேங்குறாங்க.

உடனே, டாக்டரிடமும், நர்சிடமும் சொல்ல, அவர்களும் வந்து பார்த்து விட்டு ஒரு பிளாஸ்டிக் ட்யூப் மாதிரி ஒன்றை கொடுத்து மெதுவாக ஊதி அதற்குள் இருக்கும் சிறு பந்தை மேலே கொண்டு வர முயற்சி செய். இப்படிச் செய்தால் நுரையீரலில் fluids தேங்காது. இல்லையென்றால் நிமோனியா வந்து விடும் என்று பயமுறுத்த... இப்போதைக்குத் தண்ணீர் கொடுக்க வேண்டாம். வாந்தி வரும் என்று ஐஸ்கட்டிகள் கொடுத்து விட்டுச் சென்றார்கள்.

ஆரம்பத்தில் மூச்சை இழுத்து சிறு பந்தை மேலே கொண்டு வர சிரமப்பட்டான். சிரமம் பார்க்காமல் பண்ணி விடு. இல்லையென்றால் வேறு பிரச்னைகள் வந்து விடும் என்ற பிறகு செய்தான். இறுகியிருந்த தசைகள் இளகியது போல. வலிக்காகப் போட்ட மருந்துகளும் வேலை செய்ய சிறிது நேரத்தில் தூங்கி விட்டான்.

நள்ளிரவை நெருங்கி விட ,அதற்குப் பிறகு தான் அங்கிருந்த சூஸனின் நினைவே வந்து யாராவது இவரை கொண்டு போய் வீட்டில் விட வேண்டுமே! அவரும் பள்ளி வளாகத்தில் தான் தன் வண்டி இருக்கிறது என்று சொல்ல, நீங்கள் இவரைப் போய் விட்டு விட்டு நாளைக் காலை வந்து விடலாம் என்று கணவரிடம் சொல்ல, அவரும் விருப்பமில்லாமல் செல்ல வேண்டியதாயிற்று.

நரம்பியல் மருத்துவர் ஒருவர் வந்து தூங்கிக் கொண்டிருந்தவனை எழுப்பிப் பல கேள்விகளை கேட்டு , ஹீ இஸ் ஆல்ரைட். குழப்பம் இருக்கிறது. மயக்கத்தில் இருக்கிறான். மேலும் சில டெஸ்டுகளைப் பரிந்துரை செய்து விட்டுச் சென்றார். செஸ்ட் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்து உள்காயம் தான் இருக்கிறது. வலிநிவாரணிகளை எடுத்துக் கொள்ள அது தானாக ஆறிவிடும். கவலைப்பட வேண்டாம் என்று சொல்லி விட்டார். அப்பாடா! இன்னுமொரு பாரம் இறங்கியது போல் இருந்தது எனக்கு.

எங்களைப் பொருத்தவரை எல்லா மருத்துவ உதவிகளும் செய்தாயிற்று. ஹீ இஸ் ஆல்ரைட். நீங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம் என்றவுடன், என்ன சொல்கிறீர்கள்? அவன் இன்னும் மூச்சு விட சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறான். காலில் அடிபட்டிருக்கிறதா என்று எக்ஸ்-ரே இன்னும் எடுத்துப் பார்க்கவில்லை. அவனால் நடக்க முடியவில்லை. அவ்வளவு தூரம் வண்டியில் உட்கார்ந்து வருவானா? முதலில் என்னிடம் வண்டி கிடையாது. அர்த்த ராத்திரியில் பனி வேறு கொட்டிக் கொண்டிருக்கிறது. நண்பர்கள் வீட்டிற்குச் சென்றாலும் நடுவில் ஏதாவது பிரச்னை என்றால் உடனே வர முடியாது. இங்கேயே இருக்கிறோம். நாளை காலை வரை நிலைமை எப்படி இருக்கிறது என்று பார்த்து விட்டு பிறகு டிஸ்சார்ஜ் பண்ணலாம் என்றவுடன் அவர்கள் தீவிரமாக யோசிக்க...

இந்த ஊரில் இன்சூரன்ஸ் பிரச்னைகள் பலவும் இருப்பதால் டாக்டர்களால் உடனே முடிவும் எடுப்பதும் கடினம். வேறு வழியில்லாததால் அவர்களும் எமெர்ஜென்சி வார்டிலிருந்து குழந்தைகள் வார்டிற்கு மாற்ற... மணி கிட்டத்தட்ட இரவு ஒன்று. இனி இங்கு ஒன்றும் பிரச்னைகள் இல்லை. நானே சமாளித்து விடுவேன். உங்கள் குழந்தைகளும் வீட்டில் தனியாக இருக்கிறார்கள், நீங்களும் வேலைக்குச் செல்ல வேண்டுமே என்று ஜெயஸ்ரீ & கணேஷை வற்புறுத்தி அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைத்தேன். அவர்களும் ஏதாவது உதவி என்றால் சிரமம் பார்க்காது கூப்பிடுங்கள், நாளை காலை வருகிறோம் என்று விடைபெற...

களைத்து தூங்கிக் கொண்டிருந்தவனின் அருகிலேயே உட்கார்ந்திருந்தேன். இன்று snowstorm. skiing நன்றாக இருக்கும் என்று காலையில் எவ்வளவு குதூகலமாக பள்ளிக்குச் சென்றான்? பார்த்து கவனமாக போ, வேகமாக போகாதே என்று சொல்லியும்... கைக்குழந்தையாய் இருந்த போதும் மன வலியைத் தந்தான் இன்றும் அது தொடர்கிறது. ஏதேதோ எண்ணங்கள்! பள்ளி திறந்த சில நாட்களில் விளையாடும் பொழுது கைவிரலை ஒடித்துக் கொண்டு ஒரு நாள்... வெளியில் சைக்கிள் ஒட்டுகிறேன் என்று உடம்பு முழுவதும் சிராய்ப்புடன்ஒரு நாள்... வெளியில் சென்றால் வீடு திரும்பும் வரை இவன் பத்திரமாக வந்து சேர வேண்டுமே என்ற கவலை தான் பெரும்பாலும் எனக்கு. இன்று தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனதே என என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன். உடல் வலியுடன் அவனும், மன வலியுடன் நானும்...குழந்தையாய் இருந்து விட்டால் தொல்லையேதும் இல்லையடான்னு சும்மாவா சொன்னாங்க.
வயிற்றில் சுமந்ததை விட நெஞ்சில் சுமக்கையில் வலியின் பாரம் அதிகமாகி விடுகிறது. ஒரு வலியிலிருந்து மீண்டு வருவதற்குள் அடுத்த வலி. அவன் வலியிலிருந்து விரைவில் குணமடைய வேண்டும் என்று வேண்டிக் கொண்டேயிருந்தது மனம். குழந்தை வலியால் துடிப்பதை பெற்றவர்களுக்குப் பார்க்க சகிக்குமா?

அந்த வார இறுதியில் நண்பர்களுடன் பிறந்தநாளைக் கொண்டாட திட்டமிட்டிருந்தான். அவன் உயிர் பிழைத்து மறுஜென்மம் எடுத்து வந்ததே திருநாளாகி மீண்டும் புதிதாய் பிறந்து விட்டது போல் ஆனது இந்த வருடப் பிறந்த நாள்!

வெளியில் இன்னும் பனிமழை கொட்டிக் கொண்டிருந்தது.

டெஸ்ட்டுக்கு ரத்தத்தையும் எடுத்துக் கொண்டு ஒரு மணிநேரத்துக்கொரு முறை நர்ஸ் வந்து காய்ச்சல் இருக்கா என்று பார்த்து விட்டுப் போக ... மணி காலை மூன்றாகி விட்டது, தூங்கலாம் என்று நினைக்கும் போது...கதவு தட்டப்பட... எக்ஸ்-ரே எடுக்கணும். கூட்டிட்டுப் போக வந்திருக்கிறேன் என்று சக்கர நாற்காலியுடன் ஒருவர். தூங்கிக் கொண்டிருந்தவனை மெதுவாக தட்டி எழுப்பி வா, போய் எக்ஸ்-ரே எடுத்துட்டு வந்துடலாம். எழுந்திரு. அந்த தூக்கக் கலக்கத்திலும் நீ போய் தூங்கும்மா. நான் போய்க்கிறேன் என்றான்.

இருக்கட்டும். நானும் வருகிறேன் என்று இருவரும் சென்று எக்ஸ்-ரே எடுத்து முடித்துத் திரும்ப, நர்ஸ் வந்து மாத்திரைகள் கொடுத்து விட்டு, இருவரும் தூங்குங்கள். நாளை காலை வந்து பார்க்கிறேன் என்று சொல்லி விட்டுச் சென்று விட்டார்.

அப்பொழுது தான் தூங்கிய மாதிரி இருந்தது. ஆறு மணிக்கு வேறு ஒரு நர்ஸ் வந்து கதவை தட்ட...அதற்குள் விடிந்து விட்டதா? நான் கிளம்பி விட்டேன் என்று கணவரிடமிருந்து ஃபோன். நர்சிடமிருந்து டூத் பேஸ்ட், ப்ரஷ், சோப் வாங்கிக் கொண்டு வந்து நானும் தயாராக...மகனோ ஆழ்ந்த நித்திரையில்!

பள்ளியிலிருந்து பிரின்சிபால் அழைத்து நலம் விசாரித்து விட்டு, என்ன உதவி வேண்டுமென்றாலும் கேளுங்கள். பள்ளியும், ஆசிரியர்களும் முடிந்த அளவு செய்கிறோம் என்றார். இப்போதைக்கு ஒரு வாரத்திற்குப் பள்ளிக்கு வர மாட்டான். அவனுடைய ஹோம்வொர்க் மட்டும் அனுப்பி விட முடியுமா என்று கேட்க அவரும் ஆசிரியர்களிடம் சொல்லி விடுகிறேன் என்று பேசி முடிக்க...

ஜெயஸ்ரீயும் காஃபி, சுவையான காலை உணவுடன் வந்து விசாரித்து விட்டுச் சென்றார். கணவரும் வந்து விட, தூங்கிக் கொண்டிருந்தவனை எழுப்பித் தயாராகச் சொல்ல...

குழந்தைநல மருத்துவர் வந்து டெஸ்டுகள் செய்து விட்டு சிறிது நாளைக்கு மூளையில் அதிக அதிர்வுகள் ஏற்படா வண்ணம் பார்த்துக் கொள்ளுங்கள். நோ டென்னிஸ், நோ மியூசிக், நோ படிப்பு என்ற போது சிரித்தவன், நோ டிவி, நோ கேம்ஸ், நோ கம்ப்யூட்டர், நோ செல்போன் என்றவுடன் கலவரமானான். பிஸியோதெரபிஸ்ட்டும் வந்து என்னென்ன செய்ய வேண்டும் என்று சொல்லி விட்டுச் செல்ல...

அப்பா, என்னோட போன், ஜாக்கெட், பேக் எல்லாம் அந்த ski சென்ட்டர்ல இருக்கு என்று ஞாபகப்படுத்தியவுடன் தான் அப்ப உன் ஸ்கீஸ், ஷூ எல்லாம்? பள்ளியை தொடர்பு கொண்டு பாதி பள்ளியிலும் மீதி ski சென்ட்டரிலும் இருப்பதை தெரிந்து கொண்டோம்.

அன்று சில விலை அதிகமான பொருட்களை ski சென்ட்டரில் தொலைத்திருந்தான். அவன் குணமாக இன்னும் சில நாட்கள் ஆகலாம். பாதிப்புகள் எப்படி இருக்கும் என்றும் தெரியவில்லை. மனதிற்குள் பெரிய கண்டத்திலிருந்து தப்பித்து விட்டான் என்கின்ற பெரு நிம்மதி . என்ன தான் கண்ணுக்குள் பொத்தி பொத்தி வளர்த்தாலும் சில பல சம்பவங்கள் நம்மையும் மீறி நடக்கத் தான் செய்கிறது. வெளிநாட்டில் இருப்பதால் ஆறுதலுக்கு கூட குடும்பத்தினர் அருகில் இல்லாதது கொடுமை. தனிமைப்போராட்டத்துடனே வாழ்க்கையை கடந்து கொண்டிருக்கிறோம் பலரும்!

ஆனால், மிகவும் அருமையாக பார்த்துக் கொண்ட மருத்துவர்கள், செவிலியர்கள், ஆறுதலாக நண்பர்கள் என்று நல்ல மனம் கொண்டவர்களால் அந்த வலிமிகுந்த இரவை ஒருவாறு கடந்து விட்டோம்.

 இன்று தினம் ஒன்றுக்கும் இன்சூரன்ஸ்காரர்கள் அனுப்பும் பில்கள் எங்களுக்கு ரத்தக்கொதிப்பை கொடுத்து விடும் போல!

இதுவும் கடந்து போகும்!






















































No comments:

Post a Comment

அமேசிங் பிரிட்டன் -7- கிளாஸ்கோ- கிரெட்னா கிரீன்-லேக் டிஸ்ட்ரிக்ட் பயணக்குறிப்புகள்

சொல்வனம் இதழ் 315ல் வெளிவந்துள்ள பயணக்கட்டுரைத் தொடரின் ஏழாம் பாகம்  அமேசிங் பிரிட்டன் -7- கிளாஸ்கோ- கிரெட்னா கிரீன்-லேக் டிஸ்ட்ரிக்ட் பயணக...