Tuesday, January 3, 2017

2017...ஆரம்பம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

2017 பிறந்த நேரம் ஆருடம் என்ன சொல்கிறது என்று பலரும் தங்கள் ராசி பலன்களை ஆராய்ந்து கொண்டிருக்க , என்னுடைய வருடாந்திர பலன்கள் எப்படி இருக்குமென வழக்கம் போல் நானே கணித்து விட்டேன்.

நியூயார்க் நகர புதுவருட சிறப்பு நிகழ்ச்சிகளைப் பார்த்து விட்டு அதிகாலையில் மகளை ஊருக்கு அனுப்ப விமானநிலையம் சென்று சிறிது நேர கனத்த மௌனத்திற்குப் பிறகு சிரித்துக் கொண்டே அவளை வழியனுப்பி விட்டு வர, ஆல்பனியும் விடிய ஆரம்பிக்க, வானில் தகதகவென பொன்னிறத்தில் சூரிய பகவானின் வருகை மனதை உற்சாகப்படுத்த, எனைத் தொடர்ந்த சூர்யாவுடனான பயணம் மிகவும் இனிமையாக இருந்தது. தென்றலாய் குளிரும் தழுவ, நிமிடங்களில் வானும் தன் நிறங்களை மாற்றிக் கொள்ள, ஆதித்யனின் திவ்ய தரிசனத்தை ஒரு சில நிமிடங்கள் மட்டுமே வெளியில் நின்று ரசிக்க முடிந்தது. 

அம்மா, என் ஃபிளைட் அரைமணி நேரம் தாமதமாகப் புறப்படுமாம். அநேகமாக அடுத்த விமானத்தைத் தவற விட்டுவிடுவேன் போல என மகளிடமிருந்து குறுஞ்செய்தி. குழந்தை நேரத்திற்கு ஊர் போய்ச் சேர வேண்டுமே என்ற கவலையுடன் யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே கவுண்டரில் பேசி உடனடியாக புறப்படும் வேறு விமானத்தில் கிளம்புகிறேன் என்ற செய்தி சிறிது ஆசுவாசப்படுத்த... விட்ட இடத்திலிருந்து தூங்கலாம் என்று கண்ணை மூடப் போகும் நேரத்தில், ஸ்டுப்பிட் பிளேன். டீ ஐசிங் செய்கிறார்கள். இப்போதைக்கு கிளம்பாது போலிருக்கு!

குறைந்த தூக்கம் தந்த அயர்ச்சி, விமானத்தைத் தவற விட்டால் என்று ஊர் போய்ச் சேருவது என்ற கவலையும் சேர்ந்த அவளுடைய புலம்பலை பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தேன். எனக்குச் செய்தி அனுப்பிக் கொண்டே நியூஜெர்சியிலிருந்து புறப்படும் விமான நேரத்தை மாற்றி விட்டேன் என்று அடுத்த குறுஞ்செய்தியில்!  விடுமுறை மற்றும் பனிக்காலங்களில் பயணிப்பதில் இப்படியான சிரமங்கள் தவிர்க்க முடியாதவை தான். நல்ல வேளை மாற்று விமான இருக்கையும் எந்த விவகாரமுமில்லாமல் கிடைத்து விட்டது. நல்லபடியாகத் தான் உனக்கு புது வருடம் ஆரம்பித்திருக்கிறதென சமாதானப்படுத்தினேன்.

வருடத்தின் முதல் நாளாக இருந்தால் எனக்கென்ன மனக்கவலை என்று வழக்கம் போல மதிய நேரத்தில் அதுவும் அப்பா எழுப்பியதால் எழுந்து வந்தான் சுப்பிரமணி. லேக் ஜார்ஜ் போயிட்டு வரலாம். சீக்கிரம் ரெடியாகுங்க.

வருடத் துவக்கத்தில் நடக்கும் மிகப் பிரபலமான polar plunge என்று உறைந்து போயிருக்கும் ஏரியின் கரையோரத்தில் ஒரு முங்கு முங்க காத்திருக்கும் ஒரு கூட்டம்! நானும் குதிப்பேன் என்று அடம் பிடித்தவனை வேண்டாம் என்று சொல்லியதாலோ என்னவோ வேண்டாவெறுப்பாக மூஞ்சியை தூக்கி வைத்துக் கொண்டு வந்தவனுக்கு இந்த வருட அறிவுரைப்படலமும் ஆரம்பமாயிற்று!

ஐ-போனில் சூரியோதயம் 

கிளம்பும் நேரத்தில் தான் வண்டியில் பெட்ரோல் இல்லையென தெரிந்தது. சரியென்று முதலில் வந்த கேஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்து கிரெடிட் கார்ட் போட்டால் திரையிலோ ஊமை நாடகம்! என்னடா இது? வேறு பல கார்டுகளுக்கும் இதே நிலைமை. வாய் அர்ச்சனை பாட ஆரம்பிக்க, வேறு சில பம்ப்களிலும் இதே மங்குண்ணி ஆட்டம். சை!

இப்ப கோவப்பட்டு என்ன ஆகப்போகுது? கடையில போய் சொல்லிட்டு வா.

'விடுவிடு'வென உள்ளே நுழைந்தால் நம்மூர்க்காரர் ஒருவர் கவுண்டரில்!
என்ன ஆச்சு? ஒரு பம்ப்பிலும் கிரெடிட் கார்ட் வேலை செய்யவில்லை என கேட்டவுடன், ஒரு சாரி கூடச் சொல்லாமல், ஆமா, சிஸ்டம் கோளாறு என்று கூலாகச் சொல்ல, மொதல்ல அத எழுதி வெளிய மாட்டுங்க. நான் ஏதோ என் கார்ட் தான் வேலை செய்யலையோன்னு வரிசையா எல்லா பம்ப்லேயும் நின்னு நேரத்தை விரையம் பண்ணினேன் என்று கடுகடுத்துவிட்டு வெளியே வந்தேன். நல்லா ஆரம்பிக்குது புது வருஷம் எனக்கு!

திருவிழா கூட்டமாக இருந்த லேக் ஜார்ஜ் வந்தவுடன் எங்களை இறக்கி விட்டு கார் நிறுத்த இடத்தை தேடி கணவரும் கிளம்ப, ஏன்டா இப்பிடி மூஞ்சிய தூக்கி வச்சிக்கிட்டு வர்ற? வா சீக்கிரம். நான் ஓடிக் கொண்டிருந்தேன். அங்கு இரண்டாயிரம் பேர் வரை வந்திருந்தார்களென  அறிவித்தார்கள். குளிரும் வழக்கத்தை விட குறைவே. ஏரியும் உறைந்திருக்கவில்லை. ஆனால் ஐஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஜில் நீரில் ஓடிச்சென்று நீந்தி விட்டு வெறுங்காலுடன் பனி மீது நடந்து கொண்டிருந்தார்கள். எப்படித்தான் முடிகிறதோ! ஆச்சரியத்துடன் அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கூட்டத்திலிருந்து விலகி ஏரியைச் சுற்றி நடக்க ஆரம்பித்தோம். ஏரிக்குள் செல்லும் படகுப்பயணத்திற்கு நீண்ட வரிசையில் ஒரு கூட்டம் காத்திருந்தது.

வெளிறிய வானம், இலைகளைத் துறந்த மரங்களுடன் பொலிவிழந்த மலைகள், குளிர் காற்று  என பனிக்காலத்தை பறைச்சாற்றிக் கொண்டிருந்தது லேக் ஜார்ஜ்.

பிப்ரவரியில் இங்கு நடக்கும் வின்டர் கார்னிவல் மிகவும் பிரபலம். ஏரியின் மேல் கார், பைக் ரேஸ்கள் நடக்க, காரில் சென்ற திகிலான அனுபவமும், உறைந்த பனி ஏரியின் ஒரு கரையில் இருந்து மறுகரை வரை நடந்த ஜில்ல்ல்லான அனுபவமும் உண்டு!

நாங்கள்  வீடு வந்து சேர்ந்ததும் ஊர் சென்று சேர்ந்து விட்டதாக மகளிடமிருந்து தகவலும் வர, 

இனி எல்லாம் சுகமே!



படங்கள்


















































2 comments:

  1. இது எல்லாம் கலந்தது தானே வாழ்க்கை!!. அதை சொல்லாமல் சொல்லிக்குடுக்கிறது புதியதாய் பிறக்கும் ஒவ்வொரு நாட்களுமே 😊

    ReplyDelete
    Replies
    1. வாழ்க்கைப்பாடத்தில் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது என்பதென்னவோ உண்மை தான் மைதிலி.

      Delete

அமேசிங் பிரிட்டன் -7- கிளாஸ்கோ- கிரெட்னா கிரீன்-லேக் டிஸ்ட்ரிக்ட் பயணக்குறிப்புகள்

சொல்வனம் இதழ் 315ல் வெளிவந்துள்ள பயணக்கட்டுரைத் தொடரின் ஏழாம் பாகம்  அமேசிங் பிரிட்டன் -7- கிளாஸ்கோ- கிரெட்னா கிரீன்-லேக் டிஸ்ட்ரிக்ட் பயணக...