Tuesday, June 26, 2012

ஒளியும்,ஒலியும்- 2

80 களின் ஆரம்பத்தில் கருப்பு,வெள்ளை தொலைகாட்சிப் பெட்டி அங்கொன்று இங்கொன்றுமாய் வர ஆரம்பித்தது. டிவி இருந்தால் படிப்பு கெட்டு விடும் என்று எங்கள் வீட்டில் அதை ஆரம்பத்தில் வாங்கவில்லை. நாங்கள் இருக்கும் தெருவில் பக்கத்து வீட்டிலும் முக்கு வீட்டிலும் கருப்பு வெள்ளை டிவி வாங்கினார்கள். தெருவே அதை ஆச்சரியத்துடன் பார்த்தது. கீழவாசல் அருகில் பல டிவி கடைகள் திறக்கப்பட்டன. டிவியை விட ஆன்டெனாக்கள் பார்ப்பதற்கு மிகவும் வேடிக்கையாக இருக்கும். ஒரு வழியாக பக்கத்து வீட்டில் டிவி செட் செய்தவுடன், மழலைப் பட்டாளங்களும் பெரியவர்களும் அந்த வீட்டில் கூடி விட்டனர். சிறிலங்காவிலிருந்து வரும் ரூபவாகினி என்று நினைக்கிறேன் அந்த சேனலும், டெல்லி தூர்தர்ஷனும் மட்டும் தெரியும். 'ஆயுபுவான்' என்று வணக்கத்துடன் நிகழ்ச்சிகள் ஆரம்பிப்பார்கள். நிறைய தமிழ் படங்கள் போடுவார்கள். காற்றுக்கு ஆன்டெனா ஆடி திசை மாறி விட்டால் பெரும் பிரச்சினை தான். ஒருவர் டிவி பக்கத்திலும், ஒருவர் ஆன்டெனா திசை திருப்புவதிலும் ஒருவர் இவர்களுக்கு நடுவில் நின்று கொண்டு உரத்த குரலில், அந்தப் பக்கம் திருப்பு, இந்தப் பக்கம் திருப்பு என்று எந்த பக்கம் என்று கடைசி வரை சொல்லாமல் டிவியில் படம் தெரியும் வரை படாதபாடு படுத்தி விட்டு ஒரு வழியாக படம் பார்த்து முடிப்போம்.








கலர் டிவி வந்த பிறகு கருப்பு வெள்ளை டிவிக்களின் மவுசு குறைந்து விலையும் குறைந்தது. பலர் கருப்பு வெள்ளை டிவி வாங்கினார்கள். கலர் டிவியில் படங்கள், செய்திகள் பார்ப்பது மிகவும் நன்றாக இருந்தது. அழகழகான டிவி விளம்பரங்கள் வர ஆரம்பித்தது. ஒனிடா டிவி ஐஸ்வர்யா ராய் உலக அழகியாவதற்கு முன் வந்த டிவி விளம்பரங்கள் எல்லாம் மிகவும் பிரபலம்.

டிவி வந்த சில வருடங்களில் வீடியோ டெக் என்று வீடியோ காசெட்ஸ் போட்டு படம் பார்க்கும் வசதியும் வந்தது. கீழ வாசலில் பல கடைகளில் டிவி, வீடியோ டெக் , காசெட்ஸ் வாடகைக்கு கிடைக்கும். டவுன் ஹால் ரோடிலும் புற்றீசல் போல நிறைய கடைகள் வந்தது. கலர் டிவியும் பிரபலமாகிவிட்டது. ஆசை யாரை விட்டது. நாங்களும் அப்பாவை நச்சரித்து கலர் டிவி, வீடியோ டெக் இரண்டு நாட்களுக்கு வாடகைக்கு எடுத்தோம். ஆட்டோவில் அது வந்து சேர்ந்தவுடன் வீட்டில் உள் ரூமில் அதை வைத்து விட்டு பாட்டி, மாமாக்கள், மாமிக்கள், பெரியப்பா, பெரியம்மா மற்றும் அவர்களுடைய குழந்தைகள் என்று குடும்பமே ஒன்றாக உட்கார்ந்து கொண்டு கடமையாக பல படங்களை பார்த்து முடித்தோம். நடுநடுவில் அம்மா மட்டும் எழுந்து எல்லோருக்கும் காபி, டீ, நொறுக்கு தீனிகள் கொடுத்துக் கொண்டிருந்தார். பெரியவர்கள் எல்லோரும் ஒரு இரவு முழுவதும் பார்த்து விட்டு,காலை உணவு முடித்து அவரவர் வீட்டுக்குச் சென்று விட்டனர். குழந்தைகள் எல்லோரும் மீண்டும் டிவி முன் கடமையாக உட்கார்ந்து கொண்டு அடுத்த ரவுண்டு படங்களை பார்க்க ஆரம்பித்து விட்டோம். இதைத் தவிர, ஜன்னல், கதவு பக்கத்திலிருந்து தெருவில் இருப்பவர்களும் பார்த்து கொண்டிருந்தனர். திருடர் பயம் அவ்வளவாக இல்லாத காலம்.



1987 இல் ஒரு வழியாக அப்பா, அம்மாவை சமாதானம் செய்து நன்றாக படிப்போம் என்ற வாக்குறுதிக்குப் பின்னர் கலர் டிவி வாங்கி விட்டோம். சென்னை, டெல்லி தூர்தர்ஷன்கள் பல நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்பிக் கொண்டிருந்தது. ஹிந்தி புரியா விட்டாலும் 'புனியாத்'  சீரியலை விடாமல் பார்த்தது, ஒளியும் ஒலியும், தமிழ் நாடகங்கள் , ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 7.30 மணி முதல் ஒளிபரப்பாகும் ஹிந்தி பாடல்களில்(ரங்கோலி) இருந்து, Spiderman, Alice in Wonderland, மகாபாரதம், ராமாயணம் , மதியம் ஒரு மணிக்கு ஒளிபரப்பாகும் மாநில மொழி திரைப்படங்களையும் ஒன்று விடாமல் பார்த்தது வரை நன்றாக நினைவில் இருக்கிறது. இளமையான துடிப்பான ஷாருக்கான் வந்த சீரியலும் பத்து மணிக்கு மேல் ஒளிப்பரப்பாகும் கங்கையில் rafting , காசி, இமயமலை ட்ரெக்கிங், நேபாள், என்று நாம் போக முடியாத இடங்களில்(அந்த காலத்தில்) எடுத்த நிகழ்ச்சிகளை குடும்பத்தோடு கண்டு கழித்திருக்கிறோம்.

பிரணாய் ராயின் உலகச் செய்திகளும் நன்கு வரவேற்கப்பட்டது. அவருடைய தேர்தல் அலசல் அந்த காலத்தில் அவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. கிரிக்கெட் வீட்டுக்குளே வந்து அனைவரையும் பைத்தியமாக்கியது. உலக கிரிக்கெட் தொடரில் கபில்தேவ் கோப்பையை பிடித்துக் கொண்டு முத்தமிட்டதை வீட்டிலிருந்தும், தெருக்களிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கண்டுகளித்தார்கள். ரவி சாஸ்திரி, கவாஸ்கர், திலிப் வெங்க்சர்கார், ஸ்ரீகாந்த், வாசிம் அக்ரம், இம்ரான் கான், விவியன் ரிச்சர்ட், லாரா என்று எல்லோரையும் டிவி வழியே பார்த்து மகிழ்ந்தார்கள். இதைத் தவிர, டென்னிஸ், ஆஸ்கார் என்று பல உலக நிகழ்ச்சிகளையும் பார்க்க முடிந்தது. நிறைய க்ரைம் தொடர்களும் வந்தது. சித்தார்த்த பாஸுவின் வினாடி வினா நிகழ்ச்சி மிகவும் அருமையாக இருக்கும். அதற்கு பிறகு, அதைப் போல் பல நிகழ்ச்சிகள் வந்து போயின. அடிக்கடி சேனலை மாற்றும் அவசியம் அப்போதெல்லாம் இருக்கவில்லை! இது வரை தரமான விதத்தில் தான் எல்லா டிவி நிகழ்ச்சிகளும் இருந்தன. ஆனால், இப்போது கையில் ரிமோட்டை வைத்துக்கொண்டு நிமிடத்திற்கு ஒரு முறை மாற்றும் வகையில் விளம்பரங்களும், நிகழ்ச்சிகளும், சேனல்களும் வந்து விட்டன.

பல செய்தி வாசிப்பாளர்கள் தங்கள் உச்சரிப்பாலும், கவர்ச்சியினாலும் மக்களிடையே நல்ல ஆதரவை பெற்றார்கள். சென்னை தொலைக்காட்சியில் ஷோபனா ரவி தன்னுடைய ஏற்ற இறக்க குரலினாலும், இடுங்கிய கண்களினால் பார்க்கும் மயக்க பார்வையாலும் மிகவும் பிரபலமானார். இவரைத் தவிர ,சந்தியா ராஜகோபால், பாத்திமா பாபு இன்னும் பலர்.



ஞாயிற்றுக்கிழமைகளில் அம்மா சுவையாக சமைத்த கறி உணவு சாப்பிட்டுக் கொண்டே , மகாபாரதம்/ ராமாயணம் பார்த்தது அநேகமாக எல்லோர் வீட்டிலும் நடந்த ஒரு நிகழ்ச்சி தான். தெருவில் அந்த சமயத்தில் ஒரு ஈ காக்கா கூட இருக்காது. ஜன நடமாட்டம் குறைந்த இந்த சமயத்தில் அடிக்கடி திருட்டும், வழிப்பறி கொள்ளையும் நடக்க ஆரம்பித்தது.

முதன் முதலில் வந்த டிவிக்கள் எல்லாம் கனம் அதிகமாகவும், இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டவையாகவும் இருந்தன. இப்போதெல்லாம் LCD TV , HDTV , 3D TV எனப் பல பரிமாணங்களாகி விட்டிருக்கிறது. சுவரிலே மாட்டி விட்டு இடத்தை சேமிக்கும் வசதியும் வந்து விட்டது.



வீடியோவும் காசெட்டிலிருந்து DVD ஆகி விட்டது. காரில் போகும் போது படங்களை பார்த்துக் கொண்டே செல்ல முடிகிறது. குழந்தைகள் கையில் வைத்துக் கொண்டுப் பார்த்துக் கொண்டே போக முடிகிறது. செல்போனிலும் பார்க்க முடிகிறது!

மதுரை போன்ற இடங்களில் பொழுதுபோக்குவதற்கு வேறு வழியில்லாததால் இன்றும் டிவிக்களின் ஆதிக்கம் குறையவில்லை.

No comments:

Post a Comment

ரங்கஸ்தலம்

தென்னிந்தியாவில் இருக்கும் கோவில்களுக்குச் சென்று வர இந்த ஜென்மம் பத்தாது போலிருக்கு! அத்தனை பழமையான கோவில்கள் இருக்கிறது! பார்க்காத கோவில்க...