Showing posts with label நெட்ஃப்ளிக்ஸ். Show all posts
Showing posts with label நெட்ஃப்ளிக்ஸ். Show all posts

Tuesday, November 25, 2025

சலிக்காத தொடர்கள்

ராமாயணம், மகாபாரதம் இதிகாச கதைகளை எத்தனை முறை வாசித்தாலும், பார்த்தாலும் சலிப்பதே இல்லை. முதன்முதலில் தொன்னூறுகளில் 'ராமாயணம்' தொடராக தூர்தர்ஷனில் வெளிவந்த பொழுது அதன் பிரம்மாண்ட காட்சிகளில் தொலைந்து போனது இன்றும் நினைவில் இருக்கிறது. ஒவ்வொரு ஞாயிறு அன்றும் தொடர் ஒளிபரப்பும் நேரத்தில் தெருவில் மக்கள் நடமாட்டமே இருக்காது அல்லது மிக குறைவாக இருக்கும். குடும்பங்களாக உட்கார்ந்து களித்த தொடர் அது. ஹிந்தியில் தான் ஒளிபரப்பினார்கள். ஆனாலும் ரசித்தோம். ஏனென்றால் பலவாறு கதைகளைக் கேட்டிருந்தோம். அதில் சீதையாக நடித்தவர் பாரளுமன்ற உறுப்பினர் ஆகும் அளவிற்கு மக்களின் அமோக ஆதரவு பெற்றிருந்தது. 

பிறகு 'மகாபாரத்' வெளிவந்தது. பீமன், கர்ணன், துரியோதனன், அதுவும், கண்ணனாக நடித்தவர்கள் பிரபலமானார்கள். பிறகு விஜய் டிவியில் தமிழிலும் வெளிவந்து அதுவும் பிரபலமானது. ஒவ்வொரு தொடரிலும் நடிக்கும் கதைமாந்தர்கள் அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றார்கள்.அதனாலேயே இன்று வரையிலும் இத்தொடர்கள் பிரபலமாகவே இருக்கிறது. இருக்கும்.


சமீபத்தில் நெட்ஃப்ளிக்ஸ்-ல்  'குருக்ஷேத்ரா' என்றொரு தொடர் வெளியாகியிருக்கிறது. 18 நாட்கள் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையில் நடக்கும் போரை மிக அழகாக தொகுத்து வழங்கியிருக்கிறார்கள். அனிமேஷன் என்பதால் கொஞ்சம் அப்படி இப்படி இருந்தாலும் கதையில் சற்றும் தொய்வு ஏற்படாமல் மிக அழகாக எடிட் செய்து கொண்டு சென்ற விதம் பாராட்டுக்குரியது. ஒவ்வொரு கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தையும் போரில் கண்ணனின் பங்கையும் மிகமிக அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். பின்னணி இசையும் கேட்க நன்றாக இருக்கிறது.


முதல் நாள் போரில் ஆரம்பித்து பாண்டவர்கள் ஹஸ்தினாபுரம் திரும்பி யுதிஷ்டிரர் அரியணை ஏறும் வரை செல்லும் இந்தத் தொடரை கண்டுகளியுங்கள். கதைகள் தெரிந்த குழந்தைகளும் ரசிப்பர். ஒரு தொடரில் அனைத்தையும் காண்பிப்பது சாத்தியமில்லை. அதுவும் தவிர, பல்வேறு திரிக்கப்பட்ட கதைகள் இருப்பதால் ஆர்வமுள்ளவர்கள் முறையான புத்தகங்களைத் தேடி வாசியுங்கள். தொடர்களில் காண கிடைக்காத காட்சிகள் ஏராளம் அதில் புதைந்து கிடக்கிறது. 






Saturday, July 5, 2025

ஸ்குயிட் கேம்

உலகம் கொரோனா அரக்கனின் பிடியிலிருந்து மெல்ல தப்பித்து வெளிவந்து கொண்டிருக்கும் வேளையில் 2021ல் நெட்ஃப்ளிக்ஸ்ல் வெளியான கொரியன் நாடகத்தொடர் 'ஸ்குயிட் கேம்'. பார்த்தவர்கள் அனைவரும் வியக்கும் வண்ணம் குழந்தைகள் விளையாட்டுகளை வைத்து "மரண பயத்த காமிச்சிட்டான் பரமா" என்று சொல்ல வைத்தது.


 பணப்பிரச்சினைகளில் தவிப்பவர்களைக் குறிவைத்து ஆசையைத் தூண்டுகிறது ஒரு கூட்டம். மாட்டிக் கொண்ட ஆட்களைப் பிடித்து ஒரு தீவினுள் அடைத்து உயிரைக் கொல்லும் விளையாட்டுப் போட்டிகளை நடத்துகிறார்கள். ஒவ்வொரு விளையாட்டின் முடிவில் இறந்தவர்களின் பணத்தைச் சேர்த்துக் கொண்டே செல்கிறார்கள். கண்முன்னே குவிந்து கொண்டே செல்கிறது பணம். இறுதியில் வென்றவருக்கு அனைத்துப் பணமும் கிடைக்கும் என்ற ஆசை வார்த்தையில் மயங்குகிறது கூட்டம். "பணம் என்றால் பிணம் கூட வாயைத் திறக்கும்". இதைத்தான் விதவிதமான விளையாட்டுகளின் மூலம் ஒருவரை ஒருவர் கொன்று குவித்து வெற்றிப்பணத்திற்காக மனித மனம் என்னவெல்லாம் செய்யும், எப்படியெல்லாம் மாறுவான் என்பதை விறுவிறுப்பான தொடராக எடுத்திருந்தார்கள். அதில் வரும் பொம்மை "ரெட் லைட் க்ரீன் லைட்" என்று கண்ணை உருட்டும் போதெல்லாம் நமக்குப் பதறுகிறது.

மனித நேயமுள்ள கதாநாயகன், நண்பனாக இருந்தவனும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள எதிரியாக மாறுவான் என்று சில கதாபாத்திரங்கள். ஒவ்வொருவரும் எடுக்கும் முடிவுகள், சில நேரங்களில் அடுத்தவரைக் கொல்கிறது. சில நேரங்களில் நம்பிக்கையைக் கேள்விக்குறியாக்குகிறது. வெற்றி பெற வேண்டும் என்ற பணத்தாசை அதிகரிக்க அங்கே மனிதம் தோற்றுப் போவதைத் தான் அழகான ஆனால் வன்முறை நிறைந்த காட்சிகளுடன் எடுத்திருந்தார்கள்.

இரண்டாவது பாகமாக வெளிவந்த தொடரில் வெற்றி பெற்ற கதாநாயகன் உயிர்களைக் கொல்லும் இந்த விளையாட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்க காரணமானவர்களைக் கொல்ல வெறிகொண்டு அலைவான். முன்பு வெற்றி பெற்ற ஒருவனே இந்தத் தொடரில் விளையாட்டை நடத்தும் மர்ம மனிதனாக வலம் வருவான். இதற்கிடையில் காவல்துறையும் இந்த அரக்கர்களைக் கண்டுபிடிக்க முயற்சி செய்து கொண்டிருக்கும். உள்ளிருக்கும் மனிதர்கள் உயிர் விளையாட்டை ஆடுபவர்களோடு சண்டையிட்டுப் போராடுவார்கள். முடிவில் தோற்றுப்போகிறார்கள்.

ஒரு செயல்முறையை மாற்ற அதனோடு வாழ்ந்து போரிட வேண்டும் என்பதை உணருகிறான் கதாநாயகன்.

இந்த வருட இறுதியில் வெளிவருவதாக இருந்த மூன்றாவது பாகம் திடீரென ஜூன் மாதமே வெளிவந்து விட்டதைப் பார்த்ததும் அதிர்ச்சியாக இருந்தது. சிரமேற்கொண்டு பார்த்து முடித்தேன்! ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்ப்ப்பா! வன்முறையோ வன்முறை. கடைசி பாகம் என்பதாலோ?

இதிலும் பணத்திற்காகவும் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள, ஒருவரை ஒருவர் மட்டுமன்றி அங்குப் பிறந்த குழந்தையையும் கொல்ல மனிதர்கள் செல்வார்கள் என்பதையும் பெற்ற மகனை விட ஒரு இளம் தாயைக் காப்பாற்ற ஒரு தாய் எந்த தியாகத்தையும் செய்வாள் என்று மனித நேயத்தையும் அன்பையும் வெளிப்படுத்தும் காட்சிகளுடன் விறுவிறுப்பாகவே செல்கிறது இந்தத் தொடரும்.

இறுதியில் தான் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுகிறான் கதாநாயகன். முகமூடி அணிந்திருந்தாலும் நெஞ்சில் ஈரம் கொண்டவனாக குழந்தையைக் காப்பாற்றும் முன்னாள் வெற்றியாளன் இந்நாள் வில்லன்.

இந்த குரூர விளையாட்டை ரசிக்கும் பணம்படைத்த செல்வந்தர்கள் ஏழ்மையோடு விளையாடுவதையும் அவர்கள் அல்லாடுவதையும் ரசிக்கும் மனப்பாங்கை விவரிக்கிறது தொடர். இறுதியில் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் தெருவில் ஏழைகளைக் குறிவைக்கும் கூட்டம் இன்னும் இந்த கொடிய விளையாட்டை கொரியா தாண்டி நடத்திக் கொண்டிருக்கிறது என்று முடித்திருக்கிறார்கள். அதாவது, உலகெங்கிலும் செல்வந்தர்களின் ஆதிக்கம் என்பது ஏழ்மையை எவ்வாறெல்லாம் தங்களுடைய விளையாட்டிற்காக/ஆதாயத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ளும்/கொல்லும் என்பதை சொல்லாமல் சுட்டிக்காட்டியிருப்பது சிறப்பு.

வலிமையுள்ளவர்கள் விளையாடும் விளையாட்டுகளில் வலிமையற்றவர்களின் நிலையைத்தான் பறைசாற்றுகிறது இந்தத் தொடர்கள். கொடிய உலகில் மனித நேயத்தைக் காப்பாற்றுபவர்கள் சிறந்த மனிதர்களாகிறார்கள் இந்தத் தொடரின் நாயகனைப் போல!

"ஸ்குயிட் கேம்" சமூகத்தைப் பறைசாற்றுகிறது.

ஒருவரின் செயலை வைத்து அவரை எடை போடுவதை விட அவரின் நிலையிலிருந்து உணர வேண்டும். நெருக்கடிக்கு உள்ளாகும் பொழுது மனித மனம் எந்த எல்லைக்கும் செல்லும் என்று ஒருவரை ஒருவர் வெறிகொண்டு தாக்கும் பொழுது புரிய வைக்கிறது. கொடிய உலகில் கருணையுடன் நடந்து கொள்வது பலவீனம் அல்ல. பலம் தான் என்ற உண்மையை உணர வைக்கிறது.

ஒவ்வொரு பாகமும் புதிய வீரர்கள், புதிய விளையாட்டுகளை அறிமுகப்படுத்தினாலும் கொடிய விளையாட்டுகளும் முடிவுகளும் மாறவில்லை. இந்த விளையாட்டுகள் உலகின் உண்மையான போராட்டங்களை பிரதிபலிக்கின்றன. அமைப்புகளை மாற்றாவிட்டால், தலைமுறை மாறினாலும் வலி மட்டும் தொடர்ந்திருக்கும் என்பதை உணர்த்துகிறார் இயக்குநர்.

இறுதியில் நல்ல தலைவன் என்பவன் பரிசைப் பற்றிக் கவலைப்படாமல் நீதிக்காகப் போராடுபவனாக, மற்றவர்களைக் காப்பாற்றுபவனாக இருப்பான். நம்மை அழிக்க வடிவு செய்யப்பட்ட உலகில், மனித நேயத்துடன் இருப்பதே சக்திவாய்ந்த எதிர்ப்பு என்ற போதனையைக் கற்றுக் கொடுக்கிறது இறுதித்தொடர்.




Sunday, May 12, 2024

ஆர்டிகிள் 370

சில அரசியல் நகர்வுகளைக் கேட்டுத் தெரிந்து கொள்வதை விட ஆவணப்படங்கள் மூலமாகவோ அல்லது திரைப்படங்கள் வாயிலாகவோ தெரிந்து கொள்வது மக்களுக்கு எளிதாகி விடுகிறது. அந்த வகையில் சேர்ந்தது தான் 'ஆர்டிகிள் 370' திரைப்படம். அரசியல் குழப்பங்கள் நிறைந்த ஒரு வரலாற்றைப் படமாக எடுப்பதற்கு முன் அதனைப் பற்றின முழு விவரங்களையும் அறிந்து கொள்ள வேண்டும். இயக்குநர் அந்த வகையில் தன் பங்களிப்பை மிகச்சிறப்பாகவே செய்திருக்கிறார். சர்ச்சையைத் தூண்டாத வகையில் இந்தப் படத்தைத் தயாரித்ததற்குப் படக்குழுவினருக்குப் பாராட்டுகள்.

ஒவ்வொரு காட்சியையும் வசனங்களையும் மிக கவனமாகக் கையாண்டு அரசியல் வரலாற்று நிகழ்வை கண்முன்னே தெளிவுற நிறுத்தியுள்ளது இப்படம். முக்கியமாக, ஏன் அரசியல் சாசனம் 370 பிரிவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதைத் தொடர் காட்சிகளாகக் கொண்டு சென்றிருப்பது மிகச்சிறப்பு. பார்ப்பவர்களைப் பதைபதைக்க வைக்கும் காட்சிகள், ராணுவ வீரர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள், உயிரிழப்புகள், அதைக் கண்டும் காணாமல் அரசியல் செய்யும் கட்சிகள், பிரிவினைவாதிகள் என்று அனைவரின் முகங்களையும் உரித்துக் காட்டுகிறது.

தற்போதைய அரசியல் சூழலில் மக்களுக்கு உண்மை தெரிந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறது சில கட்சிகள். அதுவும் காஷ்மீர் விவகாரம் என்பது யாருமே எளிதில் புரிந்து கொள்ள முடியாத வகையில் சிக்கல்கள் நிறைந்ததாக இருப்பதும் அதற்குக் காரணமானவர்கள் யார் யார் என்பதும் நாட்டை நேசிக்கும் இந்தியர்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால், உண்மை கசக்கத்தானே செய்யும்? பொய்ச்செய்திகளைப் பரப்பி மக்களைக் குழப்ப பார்க்கிறார்கள் எதிர்க்கட்சிகள். தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள், பாஜக அரசு கொண்டுவந்துள்ள ஆர்டிகிள் 370 மீதான ரத்தை நிராகரிப்பதை ஒரு தேர்தல் வாக்குறுதியாகவே வைத்துள்ளது. படத்தில் சில குறைகள் இருப்பினும் வரலாறு அறியாத தலைமுறைக்கு இப்படத்தின் வாயிலாக உண்மையை அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பு.

நடிகர்களின் தேர்வும் நடிப்பும் அருமை. நெட்ஃப்ளிக்ஸ்ல் வந்துள்ளது.






Monday, May 6, 2024

சிகரம் தொட்டவர்களின் கதை

2011ம் ஆண்டில் மலையேற்ற வீரர்கள் கான்ராட் ஆங்கர், ஜிம்மி சின், ரெனன் ஆஸ்டர்க் மூவரும் கர்வால் இமயமலைப் பகுதியில் 22,000 அடி உயரமுள்ள மவுண்ட் மேருவின் மத்திய சிகரத்தின் உச்சியை அடைந்த முதல் மனிதர்கள் என்ற வரலாற்றைப் படைத்துள்ளனர். அவர்களின் பெரும்சாதனையை, அனுபவங்களை விறுவிறுப்பாக விவரிக்கும் ஆவணப்படம் தான் 'மேரு' (Meru). நெட்ஃபிளிக்ஸ்ல் வெளிவந்துள்ளது. 30 வருடங்களாகப் பலரும் ஏற முயன்று தோல்வியில் முடிந்த கடினப்பயணத்தை அவர்களுடன் சேர்ந்து நாமும் பயணப்படும் விதத்தில் எடுக்கப்பட்ட மிக அழகான சாகசப்பயணம். நினைத்தாலே பனிக்காய்ச்சல் வந்து விடும் நமக்கு!

எவரெஸ்ட் மலையேறுவதே சாதனை என்று பலரும் அங்குச் சென்று கொண்டிருக்க, இந்த மூவர் மட்டும் உயரமான, செங்குத்தான, கடினமான மலையேற்றத்தை ஏன் தேர்ந்தெடுத்தார்கள்? அதற்கான பதிலை மலையேறும் பொழுது ஓய்வுநேரத்தில் எடுத்த காணொளியில் அவர்களே விளக்கிக் கொண்டு வருகிறார்கள். இதில் 'ஜிம்மி சின்' என்பவர் இந்த ஆவணப்படத்தின் இணை இயக்குநர். பல நேரங்களில் மலையேற்றப் பயணத்தை அவரே படமெடுத்திருக்கிறார். இரண்டு முறை எவரெஸ்ட் மலையேறிய அனுபவம் கொண்டவர்! ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்ப்ப்பா.... இப்பவே கண்ணைக் கட்டுதே மொமெண்ட்...

எவரெஸ்டில் இருப்பதைப் போல மேருவில் அதிக சுமைகளைச் சுமந்து வர 'ஷெர்பா'க்கள் இல்லை. சிகரத்தின் உச்சி வரை 200 பவுண்டுகள் எடை கொண்ட மலையேற்றத்திற்குத் தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டுச் செல்ல வேண்டும். செங்குத்தான பனிக்கட்டி மலை, கருங்கல் பாறைகளில் ஏறிய அனுபவம் மிகவும் அவசியம். இம்மூவரும் 2008ல் இந்தப் பயணத்தை மேற்கொண்டிருந்தாலும் மோசமான வானிலை, உணவுப்பற்றாக்குறை காரணங்களால் சிகரத்திலிருந்து 300 அடிதூரத்தில் திரும்பிவிட்டிருக்கிறார்கள். எத்தனை ஏமாற்றமாக இருந்திருக்கும்?

மலையேற்றத்தில் சாதனை புரிந்த பல வீரர்கள் ஏற முயன்ற மலைச்சிகரத்தை 2011ல் மீண்டும் ஏறி இவர்கள் மூவரும் சாதனை படைத்துவிட்டார்கள்! இதுவல்லவோ விடாமுயற்சி! அதுவும் 'கரணம் தப்பினால் மரணம்' என்பது போல் பல இடங்கள்! அதுவும் அவர்கள் இரவு தங்குமிடங்கள் எல்லாம் ஏதோ ஒரு புள்ளியில் தூளி கட்டியிருப்பது போல் மலையில் தொங்கிக்கொண்டிருக்கும் அவர்களது கூடாரம். மலைக்காற்றிலும் பனிப்புயலிலும் ஆடும் பொழுது பார்ப்பவர்களைப் பதைபதைக்க வைக்கிறது!

ஏற்கெனவே ஒரு முறை சென்று வந்த அனுபவம் இரண்டாவது முறை செல்லும் பொழுது (2011ல்) கைகொடுத்திருக்கிறது. ஒருவர் முன்னே செல்ல, அவரைத் தொடர்ந்து இன்னொருவர். மூன்றாமவர் மெதுவாகச் சிறிது ஓய்வு எடுத்துக் கொண்டு என்று மூவரும் ஒருவர் மாற்றி ஒருவர் மாறி மாறி பயணித்து 11 நாட்களில் உச்சியை அடைந்திருக்கிறார்கள்! அவர்களுடன் சேர்ந்து நாமும் கொண்டாடும் தருணம் அது! கீழே இறங்குவது மிகவும் கடினமாம். மூன்று நாட்கள் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

சின் மற்றும் ஆஸ்டர்க் இருவரும் திரைப்படத் தயாரிப்பாளர்கள். அவர்களுடைய 2008, 2011 மேரு வரையிலான அவர்களின் பயணங்களைப் படமாக்கியுள்ளனர். கடினமான மலையேறும் பொழுது தூக்கிச் செல்லும் எடையை அதிக கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. பல தியாகங்களைச் செய்து ஒவ்வொன்றையும் கணக்கிட்டுத் தான் கையில் காமெரா அதற்கு வேண்டிய பொருட்களைச் சுமந்து சென்றிருக்கிறார்கள்.

மூவரில் 'கான்ராட்' என்பவர் 30 வருட கடின மலையேற்ற அனுபவம் கொண்டவர். அவர் வகுத்த பாதையில் வெற்றிகரமாகப் பயணித்து சாதனை புரிந்த மூவரும் வாழ்க வளமுடன்! மலையேற்ற வீரர்களுக்கு உதவும் வகையில் சிறப்பான ஆவணப்படத்தை எடுத்திருக்கிறார்கள். இந்த மூவரின் தனிப்பட்ட வாழ்க்கைக் கதைகளும் பயணமும் என்று மிக அழகான, சுவாரசியமான ஆவணப்படம்.

நியூயார்க் மாநிலத்தில் பனிக்காலத்தில் அடிரண்டொக் மலையில் உறைந்திருக்கும் பனியில் ஆணி அடித்துக் கொண்டே இறுக்கமாக கயிற்றைக் கட்டிக்கொண்டு மலையேறுபவர்களைப் பார்த்து அரண்டு போயிருக்கிறேன். இவர்களின் 'சில்ல்லிட்ட' பயணமும் சாதனையும் பார்க்க அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது.

இவர்களின் சாகச சாதனைக்கு ஒரு ராயல் சல்யூட்!



Monday, April 29, 2024

லாபதா லேடீஸ்


'Laapataa Ladies' என்றொரு இந்தி திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியுள்ளது. வெள்ளந்தி மனிதர்களை வைத்துப் பின்னப்பட்ட அழகான கதை. மேற்படிப்பு படிக்க ஆசைப்படும் பெண், கணவனுக்காக வாழ விரும்பும் படிக்காத பெண். இருவரும் ஓரிடத்தில் மாறி விட, தொலைந்த நாட்களில் தங்களது சுயத்தைக் கண்டடைவதை இத்தனை எளிமையாக, அழகாகச் சொல்லவும் முடியுமா? 

வடமாநிலங்களில் அதுவும் போதிய பின்தங்கிய கிராமங்களில் இல்லாத இளவயது திருமணம் என்பது நடைமுறையில் இருப்பதைச் சுட்டிக்காட்டியபடி துவங்குகிறது படம். புது மனைவி மீது தீராக்காதலுடன் 'ஐ லவ் யூ'  சொல்லி வெட்கப்படும் நாயகன் அனாயசமாக நடித்திருக்கிறார். அந்தச் சிறுபெண்ணும் வெள்ளந்தியாக பெண் என்பவள்திருமணமாகி கணவன் வீட்டிற்குச் சென்று வேலை செய்யவே படைக்கப்பட்டவள் போல அடுப்படி வேலைகள் அனைத்தையும் கற்று கணவன் பெயர் கூட சொல்ல வெட்கப்படுபவள். திருமணம் முடிந்து மூன்று நாட்களுக்குப் பிறகு கணவனுடன் ரயிலில் செல்கிறாள். அதே ரயிலில் அவர்களுடைய பெட்டியில் இன்னொரு மணமகனும் மணமகளும் இருக்கின்றனர்.

'கல்யாண மாப்பிள்ளை' என்றாலே கோட்டு சூட்டு போட்டுக் கொள்ள வேண்டும் என்பது கிராமங்கள் வரை பரவியிருக்கிறது. பொருந்தாத உடையை அணிந்து அதில் யார் துணி உசத்தி? வரதட்சணை எவ்வளவு? என்ன கொடுத்தார்கள் என்று கேட்பது இன்னும் பெண்களுக்கு விடியல் வரவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார் இயக்குனர் கிரண் ராவ். மாற்றார் முன்னிலையில் திருமணமான பெண்கள் தலையில் முக்காடிட்டுக் கொள்ள வேண்டும் என்பதும் புழக்கத்தில் உள்ள வழக்கம்.  அதில் வரும் குழப்பத்தால் இறங்குமிடம் வந்ததும் தன் மனைவி என்று அதே பெட்டியில் பயணம் செய்த மணப்பெண்ணை இழுக்க கொண்டு இறங்கி விடுகிறான் அந்த இளைஞன்.

ஊருக்குச் சென்று ஆரத்தி எடுக்கும் பொழுது தான் தெரிகிறது அழைத்து வந்தது தன்னுடைய மனைவி அல்ல என்று. தன் மனைவியைத் தேட ஆரம்பிக்கிறான். பணத்தாசை பிடித்த உள்ளூர் காவல்நிலைய அதிகாரி வாயில் பீடாவை குதப்பிக்கொண்டே பேசி... உவ்வே... எங்களுடைய பீகார் பயணம் தான் நினைவிற்கு வந்தது. வெத்தலை போடுவதும் துப்புவதுமே முழுநேர வேலையாகச் செய்து எரிச்சலூட்டுகிறார்கள். கான்ஸ்டபிளாக வருபவர் இதற்கு முன்பு படத்திலோ நாடகத்திலோ பார்த்தாக நினைவு. இவர்கள் இருவரும் வரும் காட்சிகளின் வசனங்கள் 👌 மனைவியைக் கண்டுபிடித்துத் தர வேண்டும் என்று பரிதாபமாக வந்து நிற்கும் இளைஞனைப் பார்த்து அவனிடமிருந்து பைசா தேறாது ஆனால் அவன் மனைவியாக வந்திருப்பவளிடமிருந்து கொள்ளை அடிக்கலாம் என்று திட்டம் போட்டு அவளைக் கண்காணிக்கும் காட்சிகளில் வரும் வசனங்கள் சிரிக்க வைக்கிறது. 

யார் என்று தெரியாமலே மகன் தவறாக அழைத்து வந்த பெண்ணை வீட்டில் வைத்துக் கொண்டு அவள் கணவனைத் தேடுகிறார்கள்.மேற்படிப்பு படிக்க விரும்பும் சாதூரியமான பெண். தான் தங்கியிருந்த வீட்டில் மூத்த மருமகளின் திறமையைக் கண்டறிந்து அவளுக்கு உதவுகிறாள். திருமணமானாலே பெண்கள் தங்களுடைய ஆசைகளை மறந்து விட வேண்டும் என்பதை மாமியார் கதாபாத்திரத்தில் வருபவர் கூறும் பொழுது பல பெண்களும் அதை உணர முடியும். குடும்பம் குடும்பம் என்று கணவன், குழந்தைகளுக்காக வாழ்ந்து தங்களது ஆர்வத்தை, ஆசைகளைத் துறந்த பெண்கள் பலர். அதையும் அழகாகச் சுட்டிக்காட்டியது சிறப்பு. 

ஆண் என்றாலே மனைவியை அடிக்கலாம். வரதட்சணையை வெட்கமின்றி கேட்டு வாங்கலாம். பெண்ணைப் பெற்றவர்களை அவமானப்படுத்தலாம். பெண் என்பவள் ஆணுக்கு கட்டுப்பட்டவள் என்ற அக்மார்க்தனமான அடாவடி  ஆணிற்கு மனைவியாக நடித்திருந்த பெண்ணும் நடிப்பில் அசத்தியிருந்தார். பெண்ணிற்குத் திருமணம் தான் முக்கியம் அதுவும் அவளுடைய கனவுகள், ஆசைகளைக் கேட்ட பிறகும் வீட்டில் திணிக்கப்படும் வன்முறை நாடகம் என்று பெண்களின் அவதியை ஒன்று விடாமல் காட்டியுள்ளார்கள்.

கணவனைத் தொலைத்தபிறகு நடைமேடையில் அழுது கொண்டு ஊர் பெயரும் தெரியாமல் பயந்த விழிகளுடன் நடித்திருந்த பெண்ணும் அமர்க்களம். அவருக்கு உதவுபவர்கள், அவர்களுடைய வாழ்க்கையிலிருந்து அந்தப் பெண் கற்றுக்கொள்வது என்று காட்சிகள் அழகாக நகர்கிறது.

நடைபாதையில் கடை வைத்திருக்கும் பெண், தன் சம்பாத்தியத்தில் கணவரும், மகனும் வாழ்ந்ததால் அவர்களை விரட்டி விட்டு நிம்மதியாக இருப்பதாகக் கூறுவார். அப்பொழுது அந்த வெள்ளந்திப் பெண், தனியாக இருக்க பயமில்லையா என்று கேட்பாள். பெண்களால் முடியாதது எதுவுமில்லை என்பதை ஆண்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால் நான் யாரையும் அண்ட விடுவதில்லை என்று போகிற போக்கில் முகத்திலறையும் உண்மைகளைச் சொல்லிக்கொண்டே போவது போல காட்சிகள் மிகச்சிறப்பு.

எப்போதாவது இப்படியொரு படத்தை இந்தியிலும் கூட எடுத்து விடுகிறார்கள். 

தமிழ்த் திரையுலகம் தான் கதையும் இல்லாமல் அதிக செலவுகள் செய்து யார்  யாரையோ திருப்திப்படுத்த அலங்கோலமாக படங்களை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். பாவம்! 


Monday, December 18, 2023

தூதா

தெலுங்கில் இருந்தாலும் கதை புதுமையாக இருக்கவே நெட்ஃப்ளிக்ஸ்ல் வந்துள்ள 'தூதா' தொடரைப் பார்க்க ஆரம்பித்தேன். முதல் சில பாகங்களில் வன்முறை கொஞ்சம் தூக்கலாக இருந்தாலும் ஏதோ மர்மத்தொடர் போல இருக்கிறதே என்று பார்க்காமலும் இருக்க முடியவில்லை. ஒன்றுக்கொன்று தொடர்புடைய மரணங்களின் முடிச்சு அவிழும் நேரத்தில் முழுக்கதையும் புரிகிறது. கடைசி வரை அந்த ஆவலைத் தக்க வைத்துக்கொண்டதில் கதாசிரியர் வெற்றி பெற்றுள்ளார்.

நாக சைதன்யா தனக்கான கதாபாத்திரத்தில் அருமையாக நடித்திருக்கிறார். நடிகை பார்வதியும் அவருடைய துப்பறியும் கதாபாத்திரத்திற்குப் பொருத்தமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். நாக சைதன்யாவின் மனைவியாக பிரியா பவானியும் ஓகே.

சில இடங்களில் கதை இப்படித்தான் போகப் போகிறது என்று கணிக்க முடிந்தாலும் கதை மாந்தர்களை ஓரிடத்தில் கொண்டு வந்து முடித்த விதம் அருமை. மழையும் ஒரு கதாபாத்திரமாய் தொடர் முழுவதும் வருவது அழகு.

வெட்டி செண்டிமெண்ட் சீன்கள் இன்றி பெண்கள் புகைபிடிப்பது, மது அருந்துவது, படுக்கை அறைக்காட்சிகள், சரளமாக கெட்ட வார்த்தைகள் என்று ஹிந்தி, தமிழ் தொடர்களைப் போல் இல்லாததும் இத்தொடரின் சிறப்பம்சம்.

நம்மூர் பசுபதி தான் அந்த ஆவியோ?

ஜனநாயகத்தின் நான்காவது தூண் இன்று ஊழலுக்கும் ஊழல் கறைபடிந்த அரசு அதிகாரிகளுக்கும் சாமரம் வீசினால் உண்மையிலேயே இப்படி மர்மச்சாவுகள் நிகழ்ந்தாலும் ஏற்றுக்கொண்டு விடும் மனப்பக்குவத்திற்கு நம்மை கொண்டு வந்திருக்கிறார்கள்.

இன்று அரசு அதிகாரத்திற்குப் பயந்து தங்களுடைய தார்மீக பொறுப்பை மறந்து மக்களை மடைமாற்றும் திறனற்ற, பண்பற்ற ஊடகங்கள், ஊடகவாசிகளுக்கு இந்தத் தொடரை அர்ப்பணம் செய்யலாம்.

திருந்துங்கடே!

Friday, December 8, 2023

தி சீக்ரெட்: டேர் டு ட்ரீம்

ரோண்டா பைரனின் 'தி சீக்ரெட்' என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு வெளியான திரைப்படம் 'தி சீக்ரெட்: டேர் டு ட்ரீம்'. தற்பொழுது நெட்ஃப்ளிக்ஸ்ல் வெளிவந்துள்ளது. எளிமையான கதை தான். அதைச் சொல்லிய விதமும் அழகான படக்காட்சிகளும் இந்தப்படத்தை அழகிய பொழுதுபோக்குப் படமாக்கியுள்ளது. நடிப்பவர்கள் மெனக்கெட்டு இயற்கையாக நடிக்கிறேன் பேர்வழி என்று செயற்கையாக நடிக்காமல் அவரவர் கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு நடித்திருப்பது சிறப்பு.

மூன்று குழந்தைகளுடன் தனியாளாகப் போராடும் கதாநாயகி. யதார்த்த அமெரிக்க வாழ்க்கை. இங்கு நான் பழகிய நண்பர்கள் பலரும் வீடு, வண்டிகளுடன் வசதியாக வாழ்வது போல இருந்தாலும் அந்தந்த வார/மாதச் சம்பளத்தை எதிர்பார்த்துதான் வாழ்க்கையை ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள். திட்டமிட்டே செலவு செய்வார்கள். அப்படித்தான் கதாநாயகியின் வாழ்க்கையும். குழந்தைகள் கேட்கும் பீட்ஸா கூட வாங்கிக்கொடுக்க முடியாத சூழலில் இருப்பாள். அவள் வாழ்வில் வரமாக வருகிறான் கதாநாயகன். அதனால் வரும் மாற்றங்கள் தான் கதை.

கன்னக்குழி அழகன் ஜாஷ் லூகாஸ் கதாநாயகன்😍. மென்மையான கதாபாத்திரங்களில் கனகச்சிதமாக பொருந்தும் முகமும், குரலும், நடிப்பும். 98களில் பிரபலமான 'டாசன்ஸ் க்ரீக்' தொடரின் நாயகி கேட்டி ஹோம்ஸ். டாம் குரூயிஸின் முன்னாள் மனைவி. அநியாயத்திற்கு இளைத்து வயதானவர் போல இருந்தாலும் கதாபாத்திரத்திற்குப் பொருந்துகிறார்.

நீண்ட பாலம், கதாநாயகியின் வீடு, மாலை நேரம், மழை என்று அழகுக்காட்சிகள்! பொதுவாகவே சிறுநகரங்களில் நடக்கும் கதைக்களங்களில் ஒரு ஜீவன் இருக்கும். இந்தப்படத்திலும் இருந்தது.

காதல் என்பது உணர்வுப்பூர்வமானது. அவரவர் வசதிக்காகவோ நிர்பந்தத்தினாலோ வருவது அல்ல. என்பதை அழகாகச் சொல்கிறது படம். ஏதோ ஒரு சொல்லவியலாத ஈர்ப்பு இருவருக்கும் இடையே. அவனிடமிருந்து அவளுக்கும் அவளிடமிருந்து அவனுக்கும் குறுஞ்செய்திகள் வந்துவிடாதா என்ற பரிதவிப்பு. இருவரும் ஒருவரை ஒருவர் காணச் சென்று சந்திக்க முடியாமல் சாலைகளில் பயணிக்கும் பொழுது அசடு வழிந்து செல்போனில் உரையாடி 'சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்ம்ம்ம்ம்...' என்று தொடரும் காட்சிகள் 💖💖💖

படம் முழுவதும் கதாநாயகன் மிகவும் நேர்மறையாகப் பேசி மற்றவர்களைக் கவருவான். பார்க்கும் நம்மையும் தான். நிஜ வாழ்க்கையில் இப்படியான அரிதான மனிதர்கள் கிடைப்பது வரம்! ஹ்ம்ம்! நம் எண்ணங்களே நம் வாழ்க்கையாகிறது. நேர்மறை எண்ணங்களும் நேர்மறை வார்த்தைகளும் நம் வாழ்க்கையை எப்படி மாற்றும் என்பதாக கதை. 

இனி  'தி சீக்ரெட்' புத்தகத்தைப் படிக்க வேண்டும்😎

“The more you think about something, the more you draw it to you.”

Saturday, November 25, 2023

The Railway Men

கடந்த 1984ல் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள போபால் நகரில் பூச்சிக்கொல்லி மருந்துகள் தயாரிக்கும் தொழிற்சாலையிலிருந்து வெளியான விஷவாயு தாக்கி பலரும் மரணமடைந்த செய்தி வெளியான பொழுது நாடே அதிர்ந்தது. வரலாற்றில் நடந்த கொடும் விபத்து அது. அதனைப் பற்றின செய்திகளைக் கேட்கவும் பார்க்கவும் அச்சப்படும் வகையில் இருந்ததை அன்று பார்த்தவர்களும் கேட்டவர்களும் மறக்க முடியாது.

போபால் நகரில் ஏழை மக்கள் வாழும் குடியிருப்புப் பகுதியில் 'யூனியன் கார்பைடு' எனும் பெயரில் பூச்சிக்கொல்லி ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. இது 'யூனியன் கார்பைடு கார்ப்பரேஷன்' என்ற அமெரிக்க நிறுவனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிய நிறுவனம். 1984ஆம் ஆண்டு டிசம்பர் இரண்டாம் நாள் நள்ளிரவு 'யூனியன் கார்பைடு' நிறுவனத்தில் இருந்து சுமார் 45 டன் அபாயகரமான "மெதில் ஐசோசயனேட்" வாயு வெளியேறியது. அது காற்றில் பரவியதில் ஆலையைச் சுற்றியுள்ள மக்கள் சுவாசித்ததில் உடனே ஆயிரக்கணக்கானோர் இறந்துவிட்டனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் போபாலை விட்டு வெளியேற முயற்சித்ததால் பீதியை உருவாக்கியது. இறுதி இறப்பு எண்ணிக்கை 15,000 முதல் 20,000 வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. உயிர் பிழைத்தவர்களின் எண்ணிக்கை சுமார் 500,000 பேர்கள் என்று கணக்கிடப்பட்டது. அவர்களும் சுவாச பிரச்சனைகள், கண் எரிச்சல், குருட்டுத்தன்மை, பிற உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டனர்.

விபத்து நடந்து முடிந்த பல வருடங்களுக்குப் பிறகும் 21ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் 400 டன்களுக்கும் அதிகமான தொழிற்சாலை கழிவுகள் அந்த தளத்தில் இருந்தன. தொடர்ந்து எதிர்ப்புகளும் வழக்கு முயற்சிகளும் நடந்த போதிலும், 2001ல் யூனியன் கார்பைடு கார்ப்பரேஷனை வாங்கிய டவ் கெமிக்கல் நிறுவனமோ அல்லது இந்திய அரசாங்கமோ அந்த இடத்தை சரியாகச் சுத்தம் செய்யவில்லை. அதனால் நிலம், நீர் மாசுபட்டதால் அங்கு வசித்தவர்களுக்கு நாள்பட்ட உடல்நலப் பிரச்சனைகள். உடல் குறைபாடுகளுடன் குழந்தைகள் பிறந்தன. நிலத்தடி நீர் மாசுபடுவதால் போபாலில் வசிப்பவர்களுக்குச் சுத்தமான குடிநீரை வழங்குமாறு 2004ஆம் ஆண்டு இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

2010 ஆம் ஆண்டில், ஆலையின் முன்னாள் மேலாளர்கள் ஏழு பேருக்கு இந்திய நீதிமன்றம் மிகக்குறைந்த அபராதம் மற்றும் சிறைத்தண்டனைகளை வழங்கியது. யூனியன் கார்பைடு நிறுவனம் 470 மில்லியன் டாலர்களை இந்திய அரசுக்கு இழப்பீடாக வழங்கியது. பாதிக்கப்பட்ட பலருக்கும் சில நூறு டாலர்கள் மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டது.

தகவல் தொழிநுட்பங்கள் இன்றைய அளவிற்கு வளர்ச்சியடைந்திராத காலம் அது. மக்களிடமிருந்து பல உண்மைகளைச் சாமர்த்தியமாக மறைத்து இந்தியர்களை ஏமாற்றி விட்டது அன்றைய ஆளும் கட்சியான காங்கிரஸ் அரசு. யூனியன் கார்பைடுக்கு எதிராக இன்னும் முறையான நீதி வழங்கப்படவில்லை என்று பாதிக்கப்பட்டவர்களும் போராளிகளும் கருதுகின்றனர். இதுவரை பேரழிவிற்குக் காரணமான யூனியன் கார்பைடு நிறுவனத்தின் நிர்வாகியான வாரன் ஆண்டர்சனை நாடு கடத்துவதற்கான இந்தியாவின் அனைத்து கோரிக்கைகளும் அமெரிக்க அரசால் நிராகரிக்கப்பட்டது. அவரும் 2014ல் இறந்து விட்டார்.

அன்றைய ஆளும் கட்சியான காங்கிரஸ் அரசின் அலட்சியத்தால் மூன்று தலைமுறைகளுக்குப் பிறகும் தொடர்ந்து கொண்டிருக்கும் பாதிப்பிற்கு முறையான நடவடிக்கைகளும் இழப்பீடுகளும் வழங்கப்படவில்லை.

இந்த உண்மைச்சம்பவங்களை வைத்து எடுக்கப்பட்ட தொடர் தான் நெட்ஃப்ளிக்ஸ்ல் வெளிவந்துள்ள "The Railway Men". போபால் பேரழிவின் பொழுது ரயில்வே நிர்வாகிகள் செய்த உதவிகளையும் எடுத்த நடவடிக்கைகளையும் விவரிக்கிறது. தன்னலம் கருதாத மக்கள் என்றுமே இருக்கிறார்கள். அவர்களால் தான் இவ்வுலகம் இன்றும் இயங்கிக் கொண்டிருக்கிறது. அக்டோபர் 1984ல் அன்றைய பாரதப் பிரதமர் இந்திராகாந்தி இறந்திருந்த நேரம். சீக்கியர்களை விரட்டி விரட்டி காங்கிரசார் கொன்று குவித்துக் கொண்டிருந்த காலம். அதையும் இத்தொடரில் காட்சிப்படுத்தியிருந்தார்கள். கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய தொடர். பேரழிவினைப் பற்றின அறிமுகத்தை, அரசின் மெத்தனத்தை அறிந்து கொள்ள முடியும்.

இந்தியர்கள் என்றாலே மிகையுணர்ச்சி, கெட்டவன் நல்லவனாக மாறும் கதைகள், மாதவன், ஜுஹி சாவ்லா தனிப்பட்ட வாழ்க்கை வசனங்கள், ஜுஹி சாவ்லா புகைபிடிப்பது போன்ற தேவையற்ற காட்சிகள் வைக்க வேண்டும் போல. அவற்றைக் குறைத்து நீதி விசாரணைக்காட்சிகளை வைத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

Monday, June 26, 2023

கதல் (Kathal)


நெட்ஃப்ளிக்ஸ்ல் 'கதல்' என்றொரு அருமையான பொழுதுபோக்குப் படம் பார்த்தேன். சிறு கிராமத்தில் நடக்கும் கதை. ஒரு காவல்துறை, அங்கே பணிபுரியும் அதிகாரிகள், அவர்களுக்குள் நடக்கும் சின்னச்சின்ன சண்டைகள், காதல், அதிகார வர்க்கத்தின் ஆணவப் போக்கு என்று போகிற போக்கில் அள்ளித் தெளித்துக் கொண்டே செல்கிறது கதை. இப்படத்தின் கதாநாயகி, சான்யா மல்ஹோத்ரா 'ஃபோட்டோகிராப்' படத்திலிருந்தே கவர்ந்து விட்டாள். அவருடைய சிரிப்பும் கண்களும் சுருட்டை முடியும் அழகு!

அதிகார வர்க்கத்தின் வீட்டுப் பிரச்சினையை விடவா நாட்டு மக்களின் பிரச்சினை பெரிது? கண்கூடாகத் தமிழகத்தில் தான் பார்த்துக் கொண்டிருக்கிறோமே? ஒரு ஊழல் பேர்வழியைக் காப்பாற்ற எப்படியெல்லாம் தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்கிறார்கள் என்று. இப்படமும் அந்தக் கருத்தை மிக அழகாக இரண்டு பலாப்பழங்கள் மூலம் சொல்லி இருக்கிறது. ஒரு சட்டசபை உறுப்பினர் வீட்டிலிருந்து திருடு போயிருக்கும் பழங்களைக் கண்டுபிடிக்க காவல்துறையை ஏவி பதவி அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்வதாகட்டும். பணியில் தனக்குக் கீழே இருப்பவரிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டுத் தப்பிக்க நினைக்கும் காவல்துறை மேலதிகாரிகள் என்று அருமையாகக் காட்சிகளை அமைத்து இருக்கிறார்கள்.

இந்த காலத்திலும் திருமண உறவில் பெண்ணை விட ஆண் உயர்பதவியில் இருப்பது தான் நல்லது என்று நினைக்கும் சமூகம். அதற்கும் பெண்கள் தான் பலிகடாவா? என்ன தான் வேலை பார்த்தாலும் வீட்டின் சமையலறை என்றுமே பெண்ணிற்குத்தான் என்பதையும் சொல்லியிருக்கிறார்கள். காலம் மாறிக் கொண்டு இருந்தாலும் இன்னும் கடக்க வேண்டிய தூரம் நெடுந்தூரமே!

இன்றைய ஊடகங்கள் தங்கள் ரேட்டிங்ஐ ஏற்ற எப்படியெல்லாம் உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பரப்புகிறது என்பதிலிருந்து அதே ஊடகங்களைக் கொண்டு சீர்திருத்தங்களையும் கொண்டு வர முடியும் என்றும் காட்டியிருந்தது சிறப்பு.

சமீபத்தில் வடமாநிலங்களுக்குச் சென்று வந்திருந்ததால் அங்கிருந்த சூழலை இப்படத்தில் பொருத்திப் பார்க்க முடிந்தது. போதிய கல்வியறிவு இல்லாதது, வறுமை என்றிருந்தாலும் மக்கள் எளிமையாக அப்பாவித்தனமாக இருக்கிறார்கள். அவர்களை ஆளும் வர்க்கம் விட்டு வைக்குமா? அதையும் நாசூக்காகப் படத்தில் காட்டியிருக்கிறார்கள்.

குட்கா, பான்பராக்கிற்கு அடிமையான சமூகம். பெண்களைக் கடத்தும் கும்பல் என்று பல விஷயங்களையும் தொட்டுக்கொண்டுச் செல்வதால் இந்தப்படம் நல்லதொரு பொழுதுபோக்குப் படம் மட்டுமல்ல சிறிது விழிப்புணர்வையும் சமூகத்தில் நிலவி வரும் அபாயங்களையும் அச்சுறுத்தல்களையும் அரசியல்வாதிகளும் அரசு எந்திரங்களும் தங்கள் கடமையை மறந்து செயல்பட்டுக் கொண்டிருப்பதையும் சொல்லாமல் சொல்கிறது. இப்படியெல்லாம் படம் எடுக்க முடியும் என்று நிரூபித்த படக்குழுவினருக்கு வாழ்த்துகள்😇தமிழில் கீறல் விழுந்த ரெக்கார்ட் மாதிரி எடுக்கும் படங்களை விடப் பல மடங்கு நன்றாக இருக்கிறது.



Tuesday, June 6, 2023

அயல்வாஷி

சமீபத்தில் பார்த்த திரைப்படங்களில் எனக்கு மிகவும் பிடித்த மலையாளப் படம் 'அயல்வாஷி'. எதார்த்தமான படம் என்றால் இது தான். இப்படித்தான் இருக்க வேண்டும். கதையும் சரி, கதாபாத்திரங்களும் சரி அத்தனை எளிமையாக இயல்பாக படத்தைப் பார்ப்பவர்களுக்கும் நிறைவைத் தந்து வெற்றிபெற்றிருக்கிறது. 

அருகருகே வாழும் இரு நண்பர்களுக்கிடையில் வரும் தவறான புரிதலைக் களைய ஒரு நண்பன் மேற்கொள்ளும் பிடிவாதமான முயற்சி. இறுதியில் பலப்படுகிறது நட்பு. இருவரையும் சமாதானப்படுத்தும் நட்பு கதாபாத்திரம் அருமை. குடும்பங்களில் இருக்கும் பணப்பிரச்னைகள், கணவன்-மனைவி உறவில் மாமியாரின் ஆதிக்கம், வில்லன்கள் என்று கலவையாக ஆனால் அருமையாக வடிவமைத்து விறுவிறுப்புடன் செல்கிறது. கதாபாத்திரங்களின் எளிமையும் ஊரின் அழகும் கதை சொல்லிய விதமும்  நம்மை இங்கும் அங்கும் நகர்த்தவிடாமல் படத்தைப் பார்க்க வைக்கிறது.

வீட்டில் நடக்கும் விசேஷங்களுக்கு நண்பர்கள் கலந்து கொண்டு உதவி செய்வது, உறவுகளுக்குள் கைகலப்பு, ஒன்று என்றால் உதவிக்கு ஓடிவரும் அக்கம்பக்கத்து மனிதர்கள் என்று முதல் காட்சியில் ஆரம்பித்த பரபரப்பு கடைசிக் காட்சி வரை தொடருகிறது. ஒரு நல்ல கதைக்கு நடிக்கத் தெரிந்த நடிகர்கள் இருந்தால் போதும். 'தாம்தூம்' என்று அதிக பொருட்செலவில் பாடல் காட்சிகள், அதிக சம்பளம் வாங்கும் நடிகர், நடிகைகள் கன்னாபின்னாவென்று சண்டைகள், தேவையற்ற காட்சிகள் என்று இல்லாமல் அமைதியாக ஆனால் அடுத்த வீட்டில் நடப்பது போல ஒரு கதை. கதை மாந்தர்களும் மிக எளிமையாக அதிக ஒப்பனைகள் இன்றி நடித்திருப்பது சிறப்பு. 

ஃபீல்குட் படம் என்றால் இது தான். நெட்ஃப்ளிக்ஸ்ல் கண்டு களிக்கலாம். 

Monday, May 22, 2023

A Man Called Otto


வயதானவர்கள் அதுவும் துணையின்றி தனித்து வாழ்பவர்களில் பெரும்பாலோனரிடம் ஒருவித எரிச்சல் எப்பொழுதுமே இருக்கும். முகத்தையும் 'உர்ர்ர்ர்'ரென்று வைத்துக் கொண்டு கோபத்துடனே அலைவார்கள். இது இயற்கையானது தான் என்றாலும் ஒரு சிலர் இதற்கு நேர்மாறாக இருப்பார்கள். 'A Man Called Otto' திரைப்படத்தின் கதாநாயகன் மனைவியை இழந்து வயதான காலத்தில் பழைய ஞாபகங்கள் துரத்த, பல முறை தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்து அதுவும் தோல்வியில் முடிய விரக்தியுடன் வாழ்க்கையை ஓட்டுபவர்.

அவருடைய வீட்டிற்கு எதிரே குடிவரும் 'மேரிசோல்' என்ற ஸ்பானிஷ் பேசும் பெண்மணியின் குடும்பம் மெல்ல இவரை மாற்றுகிறது. வாழ்க்கையை இனிமையாகக் கழித்திட முடியும் என்று உணர வைத்து வாழ்வின் பொருளை உணர்த்துகிறது.

டாம் ஹாங்க்ஸ் படம் என்றாலே கதை, நடிப்பு எல்லாம் இருக்கும் என்பதால் தைரியமாகப் பார்க்கலாம். தனிமை எவ்வளவு கொடுமை? கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்று சும்மாவா சொன்னார்கள்? அக்கம்பக்கத்து மனிதர்களுடன் முகம் தெரிந்த, தெரியாத நபர்களுடன் பேசி நட்பை வளர்த்திட முடியும். அது தனிமையில் வாடுபவர்களுக்கு உற்ற துணையாக இருக்கும் என்று படம் கூறுகிறது.

காதலித்துத் திருமணம் புரிந்த மனைவி, அவர்களுக்கு நடந்த பேராபத்து, மனைவியை இழக்கும் கொடுமை என்று பல நிகழ்ச்சிகளை மனம் அசைபோட்டு எதிர்மறை எண்ணங்களை உருவாக்கி அதிலிருந்து மீளவும் முடியும் என்று தன்னம்பிக்கையையும் கதாநாயகனுக்குத் தருகிறது. நம் வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கும் துக்கத்திற்கும் காரணம் நம்முடைய தேர்வுகளே. சரியான தேர்வுகள் நம்மை உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் வைத்திருக்கும். தவறான தேர்வுகள் நம் துக்கத்திற்கு காரணமாக இருக்கும். அதிலிருந்தும் மீள முடியும் என்பதே கதை.

தன் மனைவியின் மாணவன் ஒருவனுக்கு உதவ, அவனும் அவருக்கு உதவ அதில் நிறைகிறது மனதும் வயிறும். அதே போல, எதிர் வீட்டில் உள்ள குழந்தைகள், பக்கத்து வீட்டில் உள்ள நண்பர்கள் என்று எல்லோரிடமும் மீண்டும் பழையபடி பழக, கதாநாயகனின் தற்கொலை எண்ணம் மறைந்து  வாழவேண்டும் என்ற ஆசையைத் தூண்டுகிறது. அதுவும் தன்னைச் சுற்றி இருப்பவர்களின் வாழ்க்கையையும் வளமாக்க உதவுகிறது. பூனையும் ஒரு கதாபாத்திரமாக😍

இதைத்தான் 'இகிகை' எனும் ஜப்பானிய வாழ்வியல் முறை அறிவுறுத்துகிறது. நம்முடைய நீண்ட கால வாழ்விற்கும் மனமகிழ்ச்சிக்கும் சமூகமாகச் சேர்ந்து வாழ்தல் முக்கியமான ஒன்று என்று. ஒருவருக்கொருவர் ஆறுதலாக, உதவியாக வாழ்வதால் மனமகிழ்ச்சியும் திருப்தியும் ஏற்படும். இதைத்தான் இந்தப் படமும் உணர்த்துகிறது.

டாம் ஹாங்க்ஸ் நடிப்பைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. மேரிசோலாக நடித்திருக்கும் மரியானா ட்ரெவினோவின் நடிப்பு அருமை. நெட்ஃப்ளிக்ஸ்ல் காண கிடைக்கிறது.




Thursday, May 18, 2023

மிஸஸ் சாட்டர்ஜி வெர்சஸ் நார்வே


2011ஆம் ஆண்டில் நார்வே அதிகாரிகள் இந்திய தம்பதிகளின் குழந்தைகளை அவர்களிடமிருந்து பிரித்து எடுத்துச் சென்ற வாழ்க்கைக்கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் 'Mrs Chatterjee vs Norway'. நார்வேயில் தனது கணவர், இரண்டு சிறு குழந்தைகளுடன் வசிக்கும் திருமதி சாட்டர்ஜி (ராணி முகர்ஜி) என்ற இந்தியப் பெண்ணின் கதையை இப்படம் சொல்கிறது.

குழந்தைகளை அந்நாட்டு முறைப்படி வளர்க்கத் தெரியவில்லை. தாய்க்கு மனநிலை சரியில்லை. வீட்டில் கணவன் மனைவியை வன்முறை செய்கிறார் என்று நார்வே சமூக சேவகர்களால் குற்றம் சுமத்தப்பட்டு குழந்தைகள் பெற்றோர்களிடம் இருந்து பிரிக்கப்படுகிறார்கள். தன் குழந்தைகளை மீட்கப் போராடுகிறார் கதாநாயகி. நீதிமன்றத்தில் இவர்களுடைய வழக்கில் பலமுறை தோற்கடிக்கப்படுகிறார்கள். முடிவு என்ன என்பது தான் கதை.

இப்படத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் தன் குழந்தைகளைக் காப்பகத்திலிருந்து ஸ்வீடனுக்கு அழைத்துச் செல்வதைக் கடத்தல் என்று குற்றஞ்சுமத்துகிறது நார்வே அரசு. உண்மை தான். அது கடத்தல் தான். தான் பெற்ற குழந்தைகளை எடுத்துச் செல்வது எப்படி கடத்தலாகும் என்று கத்தி கூப்பாடு போட்டால் மனநிலை சரியில்லை என்று மீண்டும் வழக்கு.  திருமதி சாட்டர்ஜி நம்பிக்கையைக் கைவிடாமல் தன் குழந்தைகளுக்காகத் தொடர்ந்து போராடுகிறார். குழந்தைகள் நல அமைப்புகளில் கலாச்சார சார்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு பிரச்சாரத்தைத் தொடங்குகிறார். இறுதியில் நம்பிக்கை மற்றும் நெகிழ்ச்சியான செய்தியுடன் படம் முடிகிறது.  

கையால் ஊட்டிவிட்டால் தவறு என்பதை எந்த இந்தியரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஆனால் வெளிநாட்டினருக்கு அதுவும் நார்வே அதிகாரிகளுக்கு அது தவறாகத் தெரிகிறது. சிறு குழந்தைகள் பெற்றோருடன் தூங்குவதில் என்ன தவறு? அவர்களுக்குத் தவறாகத் தெரிகிறது. குழந்தைகளைக் கண்டிக்கப் பெற்றோர்கள் அடிப்பார்கள். அடி வாங்கி வளர்ந்தவர்கள் தானே நாமெல்லாம். பள்ளிகளில் கூட பிரம்படி வாங்கிப் படித்தவர்கள் நாம். இன்று ஏனோ அதை இந்தியாவிலும் பெற்றோர்கள் எதிர்க்கிறார்கள். அதன் பலனை அனுபவித்துக் கொண்டிருப்பது கண்கூடாகத் தெரிகிறது. குழந்தைகளை அடிப்பது தவறு என்று அமெரிக்காவிலும் சொல்வார்கள். பேசத் தெரிந்த குழந்தைகள் 911ஐ அழைத்து என்னை அடிக்கிறார்கள் என்று சொல்லிவிட்டால் போதும் பெற்றோர்களைச் சிறையில் தள்ளுவார்கள் இல்லையென்றால் குழந்தைகளைப் பெற்றோர்களிடமிருந்து பிரித்து காப்பகத்தில் விட்டு விடுவார்கள். ஏனென்றால் அடிப்பதைக் குழந்தைகள் மீதான வன்முறை என்று இந்த மேலைநாடுகளில் கூறுகிறார்கள். அடிப்பதற்கும் கண்டிப்பதற்கும் வேறுபாடு தெரியாதவர்கள். இவர்களுடைய கலாச்சாரத்தில் குழந்தைக்கு வளர்ப்புத்தந்தை, தாய் என்று ஏகப்பட்ட குழப்பங்கள். மனநலம் குன்றியவர்களும் அதிகம். ஒரு சில இடங்களில் தவறுகள் நடக்கிறது தான். அதற்காக இப்படியா?

இந்தியாவில் பக்கத்து வீடு, நண்பர்களின் வீடுகளுக்குச் செல்லும் பொழுது அவர்கள் சமைப்பதை நமக்கும் கொடுப்பார்கள். நாமும் வாங்கி உண்போம். ஆனால் மேலை நாடுகளில் அப்படி எளிதில் செய்துவிட முடியாது. குழந்தைகளின் பெற்றோர்களிடம் முன்அனுமதி கேட்க வேண்டும். இது நல்லதுக்குத் தான். பல குழந்தைகளுக்கும் இங்கு உணவு ஒவ்வாமை இருக்கிறது. அதனால் பாதிப்பு ஏற்பட்டால் அவ்வளவு தான். நான் பழகிய வரையில் குழந்தைகளும் எதுவும் சாப்பிட மாட்டார்கள். அப்படியே சாப்பிட்டாலும் இந்த ஊர் ஜூஸ், ரொட்டி, இனிப்புகளைத் தான் விரும்புவார்கள். ஒரு சில குழந்தைகளே நாம் சாப்பிடும் உணவை விரும்பிச் சாப்பிடுவார்கள். அது அவர்களின் குடும்பத்துடன் இருக்கும் நம் பழக்கத்தைப் பொறுத்தது. அதனால் நன்கு பரிச்சயமில்லாத மேலைநாட்டுக் குழந்தைகளுக்கு உணவு கொடுப்பதை நாம் செய்யக் கூடாது.

அதே போல, குழந்தைகளைத் தொட்டும் பேசக்கூடாது. அதுவும் இங்கு தவறாகவே பார்க்கப்படும். குழந்தைகள் மீதான வன்முறை இங்கு அதிகம் இருப்பதால் இத்தகைய வழக்கங்கள் என்று தெரிந்து கொண்டேன். சில விஷயங்களை நாமும் கற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஆனால் இந்தப் படத்தில் தன்னுடைய வீட்டில் தன் சொந்தக் குழந்தைகளை இந்திய முறைப்படி வளர்க்கும் பெண்ணிற்க்கு அராஜகம் நடக்கிறது. அது தான் கொடுமையாக இருக்கிறது.

நார்வேயில் குழந்தைகளைத் தத்து கொடுக்க புலம்பெயன்றவர்களின் குழந்தைகளைக் கையகப்படுத்தி பெரும் வியாபாரமாகச் செய்வதாக குற்றச்சாட்டு உள்ளது. மிஸஸ் சாட்டர்ஜி வெர்சஸ் நார்வே திரைப்படம், உணர்வுப்பூர்வமாகவும், சிந்தனையைத் தூண்டும் வகையிலும் உருவாக்கப்பட்டிருக்கிறது. நடிகர்களின் நடிப்பு சிறப்பாக உள்ளது. கலாச்சார சார்பு, குழந்தைகள் நலன் போன்ற சிக்கல்களை ஆராய்வதில் படம் வெற்றி பெற்றுள்ளது. கலாச்சார வேறுபாடுகள் எவ்வாறு தவறான புரிதலுக்கு வழிவகுக்கும், குடும்பங்களைச் சிதைக்கும், சிறுபான்மை குழுக்களுக்கு எதிராக குழந்தைகள் நல அமைப்புகள் எவ்வாறு சார்புடையதாக இருக்கும் என்பதையும் படம் காட்டுகிறது.

Thursday, April 13, 2023

Extraordinary Attorney Woo


சில நேரங்களில் புது வேலைகளை ஆரம்பிப்பதற்கு முன் நல்ல கே-டிராமா பார்க்க வேண்டும் போல் இருக்கும். அப்படி ஆரம்பித்தது தான் 'Extraordinary Attorney Woo'. கொரியன் தொடர்களில் முதல் இரண்டு பாகங்களைக் கொஞ்சம் பொறுமையோடு பார்க்க வேண்டும். அன்று ஏனோ பொறுமை இல்லை. வேறு ஏதோ மலையாளம் படம் பார்த்தேன். ராகேஷ், "நன்றாக இருக்கிறது. பாருங்கள்" என்று சொன்னவுடன் மீண்டும் பார்க்க ஆரம்பித்தேன். எப்படி இத்தனை நல்ல தொடரைப் பார்க்காமல் இருந்தேன் என்று என் மேலேயே எனக்கு கோபம் வந்தது.

நான் வழக்கமாக கொரியன் தொடர்களைப் பற்றிக் கூறுவது தான். எப்படித்தான் இப்படி ஒரு கதை இவர்களுக்கு மட்டும் கிடைக்கிறதோ? கதை, கதாபாத்திரங்கள், படமாக்கப்பட்ட விதம், இடங்கள், மெல்லிசை என்று வசீகரிக்கிறது.

கதாநாயகியாக 'Woo Young-woo' கதாபாத்திரத்தில் வரும் பெண் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டவராக அருமையாக நடித்திருக்கிறார். அவருடைய கண்களும், விரல்களும், உடல்மொழியும் அற்புதம். பொதுவாகவே ஆட்டிசம் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேறு திறமைகள் இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இந்தப்பெண் அசாத்திய திறமை கொண்டவராக காண்பிக்கப்பட்டுள்ளார். உண்மையில் குறைந்த சதவிகிதத்தில் தான் இந்த திறமை ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இருக்கிறது என்கிறார்கள். ஆனால் பொது இடங்களில் இந்த குறைபாடு உள்ளவர்கள் படும் வேதனைகளை அறிந்து கொள்ள ஒரு சிறிய வாய்ப்பாகவும் குறைபாட்டினைப் பற்றின விழிப்புணர்வாகவும் நிச்சயமாக இந்த தொடர் வெற்றிகரமாகச் செய்துள்ளது.

16 பாகங்களில் குடும்பம், பணியிடம், நண்பர்கள், காதல், விதவிதமான வழக்குகள் என்று அனைத்தையும் ஒரு சேர அழகான மாலையாக தொடுத்திருக்கிறார்கள். ஐந்து வயது வரை பேசாத குழந்தை பேசுவதில் ஆரம்பிக்கிறது தொடரின் சுவாரசியம். குறைபாடு உள்ளவர்களின் நெருங்கிய உறவுகள் படும்பாட்டையும் அழகாகச் சொல்கிறது இந்த தொடர். அந்தப் பெண்ணிற்கு கிடைத்தது போல நல்ல புரிதல் கொண்ட தந்தையும் காதலனும் நண்பர்களும் கிடைத்தால் குறைபாடுள்ளவர்களின் வாழ்க்கை இனிமையான ஒன்றாகவே இருக்கும். அவளின் திமிங்கில ஒப்புமைகளும் அருமை.

2024ல் தொடரின் இரண்டாவது சீசன் வரவிருக்கிறது. ஆவலுடன் காத்திருக்கிறேன்.





Thursday, March 2, 2023

The Interest of Love



காதல் என்பது பரிசுப்பொருட்களைக் கொண்டு கவர்வதோ, உணவகங்களுக்குச் சென்று சாப்பிடுவதோ, பூங்கொத்துக்களைக் கொடுத்து வாங்குவது அல்ல. திடீரென முளைக்கும் காதல் அதே வேகத்தில் கலைந்தும் போகும். உண்மையான முதிர்ந்த காதல் என்பது அனுபவப்பூர்வமான உணர்வு. அது மெதுவாக தன்னையறியாமல் இரு உள்ளங்களில் வளர்ந்து வியாபித்து நிற்கும். 'தி இன்டெரெஸ்ட் ஆஃப் லவ்' தொடர் இதனை மிக அருமையாக கையாண்டிருக்கிறது. இத்தொடரில் வேலையிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் நெருக்கடிகள், ஆண்-பெண் பேதங்கள், பணம் படைத்தவர்களின் உலகம், காதல் என பல விஷயங்களைப் பேசியிருக்கிறது. அழகான வசனங்கள் இத்தொடரை மேலும் சுவாரஸ்யமாக்கியுள்ளது.

“My definition of happiness is not having any regrets.” – Ha Sang Su

காதல் என்றால் எது என்று தெரியாமலே புரியாமலே நான்கு பேருக்கிடையே நடக்கும் காதல் ஆட்டம். அழகாக மலரும் காதல் சிறு சந்தேகத்தால் இணையாமலே தொடருகிறது. ஒரு தலையாக காதலித்தும் கிடைக்காமல் போகும் காதலன். அவன் மனம் முழுவதும் வேறொரு பெண் நிறைந்து இருக்கிறாள். அவளோ அவன் காதலை உணர்ந்தாலும் தள்ளியே நிற்கிறாள். தான் காதலித்ததாக நினைத்தவனையும் விட்டு விலகுகிறாள். இவர்களின் மனப்போராட்டங்களை மிக அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

இப்படியொரு காதலன் கிடைக்கவேண்டுமே என்று ஏங்க வைக்கிறார் ஹா சாங் சு. ஒரு தலைக்காதலியாக வரும் மிஸ்.பார்க் ஆடம்பரமான உடையில் பணக்காரத்தனத்துடன் ஆனால் காதலனுக்காக தவிக்கும் 'சிக்' வேடத்தில் அருமையாக நடித்திருக்கிறார். எங்கே தன் காதல் தெரிந்து விடுமோ என்று முகத்தில் எந்தவித உணர்ச்சியையும் எளிதில் வெளிப்படுத்திடாத கதாபாத்திரமாக யாரிடமும் அதிகம் பழகாத ஆன் ஸூ எங் நம் பொறுமையை அதிகமாகவே சோதிக்கிறார். 

“We were once a part of each other’s lives. We fell for each other. Our hearts skipped for each other. We were foolish. All the moments that we regretted made us long for each other even more.” – Ha Sang Su

“During those times, were we actually in love or were we blinded by the interest?” – Ha Sang Su

“I kept pushing you away, but you kept coming. I’d run away but you always found me like this.” – Ahn Su Yeong

தொடரின் இறுதி அத்தியாயத்தில் மீண்டும் சந்திக்கும் பிரிந்த காதலர்கள் ஏன் பிரிய நேர்ந்தது எங்கே தவறு நடந்தது. அப்படி நடக்காமல் இணைந்திருந்தால் அழகிய குடும்பமாக வாழ்ந்திருக்கலாம் என்று நேர்மறையாக நாயகனும் குழந்தை வளர்ப்பில் சண்டை வந்து பிரிந்திருப்போம் என்று எதிர்மறையாகவே பேசும் நாயகியும் பேசிக் கொண்டே செல்வார்கள். அவர்கள் சேர்ந்து விடுவார்கள். சுபம் சீக்கிரம் என்று நினைக்க வைத்து தொடரின் முடிவை பார்வையாளர்களின் முடிவிற்கே விட்டு விட்டார்கள்.

மெதுவாகச் சென்றாலும் காட்சியமைப்பும் ஒளிப்பதிவும் மிக அருமை. கதாபாத்திரங்களின் தேர்வும் வசனங்களும் இத்தொடரைப் பார்க்கத் தூண்டுகிறது. கொரியாவில் சாதி இல்லை என்றாலும் பணக்காரர்கள், ஏழைகள், படித்தவர்கள், படிக்காதவர்கள் பேதம் இருக்கிறது. காதல் முரண்பட்டு நிற்பதும் அத்தகைய களத்தில் தான்.

“Isn’t that what love is? Two people going through everyday life together.” – Ha Sang Su








Wednesday, February 8, 2023

When my Love blooms

'காதல்' என்னும் ஒற்றை கதைக்களத்தில் மட்டுமே பல கொரியன் தொடர்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்! எப்படி இவர்களால் மட்டுமே இப்படித் தொடர்களை வெவ்வேறு தளத்தில் இயக்க முடிகிறதோ? பேசாமல் நம் தமிழ் இயக்குனர்கள் தென்கொரியா சென்று இவர்களிடம் வகுப்புகள் எடுத்துக் கொள்ளலாம். காதல் தொடர்கள் ஒவ்வொன்றையும் வைத்து அழகான தமிழ் படத்தை இயக்கலாம். அட்ட காப்பி அடிக்கும் இயக்குனர்கள் கொரியன் தொடர்களைப் பார்ப்பது நல்லது.

'வென் மை லவ் ப்ளூம்ஸ்' தொடரில் கல்லூரியில் தொடங்கி நடுவில் தொலைந்த காதல் பின்பு ஒரு நாள் எதேச்சையாக சந்திக்கும் பொழுது மீண்டும் துளிர்க்கிறது. காதலர்கள் இருவரும் மணம் முடித்து அவரவர் பாதையில் சென்று கொண்டிருந்தாலும் ஆழ்மனதில் இருக்கும் காதல் சந்தர்ப்ப சூழ்நிலையால் எப்படி வளர்கிறது என்பது தான் கதை.

பள்ளி/கல்லூரிகளில் பலருக்கும் ஏற்படும் காதல் உணர்வைப் புரிந்து பரஸ்பரம் பரிமாறிக் கொள்வதற்குள் அடுத்த கட்டத்தை நோக்கி வாழ்க்கை நகர்ந்து "நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா?" என்று சோக ராகம் ஆறாத ரணமாய் ஓடிக் கொண்டிருக்கும். அவள்/அவன் சாயலில் வேறு ஒருவரைக் கண்டவுன் சுகமான நினைவுகளாக வந்து செல்லும் தருணங்கள் பலருக்கும் உண்டு. இப்படி வாழ்க்கையை ஒட்டிக் கொண்டிருப்பவர்கள் தான் இத்தொடரின் நாயகனும் நாயகியும்.

நாயகியைப் பற்றி அறிந்தவுடன் நாயகன் அவளைத் தொடர்ந்து கண்காணித்து ஆறுதலாக அவளுடைய சுக துக்கங்களில் பங்கு கொள்ளும் நண்பனாக இருக்க ஆசைப்படுகிறான். சமூகத்திற்குப் பயந்து அவனைப் புறம் தள்ளுகிறாள் நாயகி. அவளின் கணவனும் அவனின் மனைவியும் சேர்ந்து முன்னாள் காதலன் காதலி இருவருக்கும் தொல்லைகள் கொடுக்கிறார்கள். எப்படி மீள்கிறார்கள்? சேர்கிறார்களா? இல்லை அவரவர் வழியே பயணிக்கிறார்களா என்பது தான் கதை.

மெதுவாகச் சென்றாலும் காதலனின் காதலைச் சொல்லாமல் சொல்லும் இடங்கள் அழகு. காதலன் மேல் உயிரையே வைத்திருந்தாலும் அப்பாவின் கெடுபிடிக்குள் மாட்டிக் கொண்ட பெண்ணின் நிலைமையை எடுத்துச் சொல்வது என்று முன்னும் பின்னும் கதை சென்று வருவதை சொல்லிய விதம் சிறப்பு.

தொடர் முழுவதும் வரும் வசனங்கள் (ஆங்கில சப்டைட்டில்) அருமையாக மொழிபெயர்க்கப்பட்டு கவருகிறது. 

"Being alive itself is a sin and debt, so I cannot ever be happy nor complain. I have kept myself so busy, but I still cannot pay for the sin nor the debt. I really want a break now. I want to let it all go."

"You cannot have everything in life. If you choose one, you must give something up.

"The reason I still long for the past, even though so many years have passed, I think it is because we never properly broke up. A real breakup."

மெதுவாகச் சென்றாலும் கொரியாவின் நான்கு பருவங்கள், ஏழை பணக்கார வாழ்க்கை, கம்யூனிச போராட்டங்கள் என கலவையாகச் செல்லும் காதல் தொடர். பார்க்கலாம்.

Monday, December 19, 2022

The Elephant Whisperers

சமீபத்தில் நெட்ஃப்ளிக்ஸ்ல் வெளியாகியுள்ளது "The Elephant Whisperers" என்றொரு குறும்படம். தலைப்பிலிருந்தே தெரிந்து கொள்ளலாம் இது யானைகளைப் பற்றின படம் என்று. இதற்கு முன் வெளியான படம் ஒன்றைப் பற்றி ஏற்கெனவே பகிர்ந்திருக்கிறேன். Holiday in the Wild யானைகளைப் பிடிக்காத மக்கள் குறைவாகத் தான் இருப்பார்கள் என்று நினைக்கிறேன். பெரிய உருவம் பார்க்க பயமாக இருந்தாலும் ஒரு குழந்தையைப் போல பழகுவதைக் கோவில்களில் பார்த்திருப்போம். மக்களும் கோவில் யானைகளுடன் மனதோடுப் பழகி தங்களில் ஒருவராக நெருங்கி விடுவார்கள். கொஞ்சம் அச்சத்துடன் தான். பாண்டிச்சேரி மணக்குள விநாயகர் யானை இறந்த போது பொதுமக்கள் அளித்த சிறப்பான இறுதி ஊர்வலமாகட்டும் அழுது கொண்டே அந்த யானையைக் கொன்றுவிட்டதாக அவர்களின் கொந்தளிப்பாகட்டும் மனிதனுக்கும் யானைகளுக்கும் இடையேயான ஆத்மார்த்தமான அன்பை அது வெளிப்படுத்தியது.

இந்த குறும்படமும் அப்படித்தான். காட்டில் தனித்து விடப்பட்ட, நலிந்த யானைகளை வளர்க்கும் இரு மனிதர்களைப் பற்றின படம். இயற்கையோடு இணைந்த வாழ்வில் இருக்கும் வெள்ளந்தித்தனம் அந்த மனிதர்களிடம் இருக்கும்.தங்களைக் கவனித்துக் கொள்பவர்களைத் தன் இனமாக கொண்டாடும் மிருகங்கள் மனிதர்களை விட மேல். மனிதர்களின் பாதிப்பு இல்லாத காடுகள் அரிதாகிக் கொண்டு வரும் வேளையில் இப்படியொரு இடத்தில் வாழும் பொம்மன், அவர் மனைவி பெல்லி என்று இருவரும் அனாதையாக வந்த ரகு என்ற யானையை வளர்க்கும் பொறுப்பில் இருக்கிறார்கள். தங்கள் குழந்தையாக பாவித்து அவர்கள் ரகுவுடன் பேசுவதும் கொஞ்சுவதும் ரகுவும் அவர்களுடன் குலாவுவதும் அந்தக் கண்கள் பார்ப்போரை வசீகரிக்கும்.

தெப்பக்காடு யானைகள் முகாம் ஆசியாவிலேயே மிகவும் பழமையான யானைகளின் முகாம். அங்கு வாழும் பெல்லி என்பவர் அனாதையாக விடப்பட்ட யானைகளை வளர்க்கும் பொறுப்பிலிருக்கும் ஒரே பெண்மணி. அவருடைய கணவர் ஒரு யானையால் இறந்தவர். பொம்மனை மறுமணம் செய்து கொண்டு யானைகளைப் பராமரித்து வாழ்ந்து வருகிறார். ரகு சாப்பிட மறுத்து கீழே போடும் ராகி உருண்டைகளைக் குரங்குகள் விரும்பி சாப்பிடுவது இயற்கையில் எதுவும் வீணாகப் போவதில்லை என்று புரிய வைக்கிறது. குரங்குகள், கழுகு, புலி என்று காட்டு விலங்குகள் ஒவ்வொன்றும் அத்தனை அழகு. மனிதர்களுக்குத் தான் அதனைப் பாதுகாக்கத் தெரியவில்லை.

நான் முன்பு பணிபுரிந்த இடத்தில் நியூயார்க் மாநிலத்தில் கடைகளிலும், வீடுகளிலும் சட்டத்திற்குப் புறம்பாக வைத்திருந்த தந்தத்தாலானப் பொருட்களைக் காட்சிக்கு வைத்திருந்தார்கள். மனம் பதறி விட்டது. எத்தனை யானைகள் கொல்லப்பட்டதோ ? ரகு போன்று எத்தனை இளம் யானைகள் கஷ்டப்பட்டதோ என்று இன்று நினைத்தாலும் தந்தத்திற்காக யானைகளை வேட்டையாடும் மனிதர்கள்,அவர்களை வேட்டையாடத் தூண்டுபவர்கள் எல்லாம் ஏன் வாழ்கிறார்கள் என்றே நினைக்கத் தோன்றும்.

பசுமையான காடு, சலசலத்து ஓடும் ஆற்றில் ரகு குளிக்கும் காட்சிகள், பிடித்த உணவைக் கேட்டு அடம்பிடிக்கும் குழந்தைத்தனம், மனிதர்களின் உணர்வுகளை புரிந்து ஆறுதலாக அரவணைக்கும் ரகு என்று எல்லாமுமே அழகு! இரண்டாவது குழந்தை வரும் பொழுது முதல் குழந்தைக்கு ஏற்படும் அதே பொறாமை ரகுவிற்கும் வருகிறது.விலங்குகளுடன் வாழும் உலகில் மனிதன் தன் சுயத்தை இழந்து புனிதனாகிறான். இயற்கையோடு இணைந்தால் எல்லாமே அழகு! அது தான் இந்த குறும்படம் நமக்குச் சொல்வது. கண்டு களியுங்கள்!






Tuesday, June 28, 2022

Our Blues

வாரம் இரு நாட்களுக்கு ஒளிபரப்பான "அவர் ப்ளூஸ்" கொரியன் தொடர் கடந்த வாரத்தோடு நிறைவடைந்தது. ஆரம்பத்தில் என்னடா இத்தனை மெதுவாக போகிறதே என்று தோன்றினாலும் அழகான அந்த "ஜெஜூ" தீவுக்காகவே பார்க்க ஆரம்பித்து வழக்கம் போல் கொரியன் தொடர் அடிமையாகி முழுவதும் பார்த்து முடித்தேன்.  'ஹோம் டவுன் ச்சா ச்சா'வில் வரும் கதாநாயகி, 'ஒன் ஸ்ப்ரிங் நைட்' தொடர் கதாநாயகி , 'மிஸ்டர் சன்ஷைன்' கதாநாயகன், அம்மா அக்கா கதாபாத்திரங்களில் என பல தொடர்களில் நடித்த இத்தொடரின் கதாநாயகி, பல தொடர்களில் வயது முதிர்ந்த கதாபாத்திரத்தில் நடித்த பாட்டிகள் என  அறிமுகமான முகங்கள் இத்தொடரைத் தொடர்ந்து பார்க்கத் தூண்டியது.

பறந்து விரிந்த நீல வானத்தைப் பிரதிபலிக்கும் கடல். அழகான கடற்கரையோர கிராமம். அந்தக்கால திண்ணை வீடுகளை நினைவூட்டும் எனக்கு மிகவும் பிடித்த கொரிய வீடுகள் என்று காட்சிகளோடு ஒன்றிச் செல்லும் இயற்கையும் மனதை கொள்ளை கொள்ளும். அந்தச் சிறுமி கூட அத்தனை அழகாக நடித்திருந்தார்.

பள்ளி வயதில் வரும் இனக்கவர்ச்சி என்றுமே பசுமையாக மனதில் இருந்தாலும் ஒரு வயதிற்குப் பின் அது நல்லதொரு நட்பாக அமையும் சாத்தியக்கூறுகள் அதிகம். காதல் வயப்பட்டாலும் மனவளர்ச்சி குன்றிய தன் சகோதரியையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வாய்ந்த காதலனும் அவன் குடும்பமும் என்று செல்லும் கதை அழகு.

சிறுவயதில் மன பாதிப்புக்குள்ளான இருவர் எவ்வாறு மீண்டு தங்களைக் கண்டடைகிறார்கள் என்று சொல்லிய விதமும் குடும்பங்கள் அதுவும் குழந்தைகள் இருக்கும் பட்சத்தில் பெற்றோர்களும் குழந்தைகளும் பாதிக்கப்படுவதைப் போகிற போக்கில் சொன்ன விதமும் அழகு.

கொரியர்களுக்குஅமெரிக்கா மேல் இருக்கும் கவர்ச்சி. அதற்காக எந்த எல்லைக்கும் சென்று தங்கள் குழந்தைகளின் நல்வாழ்வுக்காக தங்கள் வாழ்க்கையைக் கூட துறக்கும் மனிதர்கள் என்று கதாபாத்திரங்களின் வழியே அவர்களின் வலியைக் கூறுகிறது இந்தத் தொடர்.

ஒரு சிறிய ஊரில் பள்ளி வயதிலிருந்து பழகிய நண்பர்கள் வயதானாலும் ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருந்து பருவங்களைக் கடந்து வருவது தான் கதை. தாயின் மேல் வெறுப்பாக இருந்தவன் அவளைப் புரிந்து கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்ததும் மனம் வருந்தி அவளைக் கரையேற்றுவதுடன் கதை நிறைவடைகிறது. 

நம் அனைவருக்கும் வாழ்க்கையில் ஏதாவது "blues" இருக்கத்தான் செய்கிறது. அதை ஒவ்வொருவரும் எப்படி கையாளுகிறோம் என்பதில் தான் மனநிம்மதியும் மகிழ்ச்சியும் நிறைவான வாழ்க்கையும் இருக்கிறது. நல்ல குடும்பம், நண்பர்கள் அமைந்து விட்டால் எந்தவொருப் பிரச்னையையும் எதிர்கொள்ள முடியும் என்பதைத்தான் இந்த தொடர் உணர்த்துகிறது. காதல், நடுத்தர வயது வாழ்க்கை, பள்ளி வயதில் கர்ப்பம், மன அழுத்தப் பிரச்னைகள், விவாகரத்து, வளர்ந்த குழந்தைகளைப் பற்றின முதியோர்களின் கவலை, நோயாளிகள், குழந்தைகளின் நம்பிக்கை என்று அனைத்துப் பருவ காலங்களையும் அதனைக் கடந்து வந்தவர்கள் ஒரு சமுதாயமாக எதிர்வரும் பிரச்சினைகளைச் சமாளிப்பதும் "இஃகிகை" வாழ்க்கை முறை என்பது இப்படியாகத் தான் இருக்கும் என்று தோன்றியது.








Sunday, April 3, 2022

Thirty Nine



ஒவ்வொரு கொரிய தொலைக்காட்சித் தொடரின் முடிவில் தோன்றுவதெல்லாம் எப்படித்தான் இப்படியொரு கதைக்களம் இவர்களுக்கு மட்டும் கிடைக்கிறதோ என்ற ஆச்சரியம் தான்! எளிமையான நாம் கடந்து வரும் பாதை தான். அதைச் சொல்லிய விதமும் கண்களை நனைக்கும் சில காட்சிகளும் என மற்றுமொரு அழகான தொடர், "Thirty Nine".

39 வயதான மூன்று தோழிகளைச் சுற்றி நடக்கும் வாழ்க்கைப் பயணம் தான் கதை. பள்ளி வயதில் எதேச்சையாகச் சந்தித்து நட்பாகி அது வருடங்கள் பல கடந்தும் தொடர்ந்து பயணிக்கிறது. மூவருக்கும் விருப்பமான உணவுகளைத் தேடி உண்பது முதல் அவரவர் பணிகளில் மும்முரமாக இருக்க, தோழிகளில் ஒருத்தி எதிர்கொள்ளும் பிரச்சினையை மற்ற இருவரும் ஆதரவாக இருந்து எப்படி கரை சேர்க்கிறார்கள் என்று இதமாகச் செல்கிறது தொடர்.

இந்தியர்களைப் போலவே கொரியர்களும் பெண்களுக்குத் திருமணம் என்பது தான் எல்லாமே என்று நினைக்கிறார்கள். எல்லா தொடர்களிலும் அதனை வலியுறுத்தும் வசனங்கள் இல்லாமல் கடக்க முடியாது. ஆனால் மேற்கத்திய உலகைப் போல் "டேட்டிங்" சமாச்சாரங்களும் இங்கு உள்ளது. படித்து முடித்து வேலைக்குச் சென்று விட்டால் பெண்கள் தனியே அவரவர் வாழ்க்கையைப் பார்க்கத் துவங்கி விடுவது வழக்கம் போல. பெற்றோர்களும் அவர்கள் வாழ்க்கையைப் பார்த்து கொண்டு வாழ்கிறார்கள். இத்தகைய உலகில் இளவயதில் நண்பர்கள் தான் எல்லாமுமாக இருக்கிறார்கள் .

"Letting each other do whatever they want is respecting each other."
இத்தொடரில் அப்படித்தான் இந்த மூன்று நெருக்கமான தோழிகளும் ஒருவருக்கொருவர் ஆதரவாக அதே நேரத்தில் தங்கள் வாழ்க்கையையும் கவனித்துக் கொண்டு வாழ்வதைப் போல் காட்டியிருக்கிறார்கள்.

அனாதை இல்லத்தில் வளரும் பெண் ஒருத்தி தன் சொந்த தாயைத் தேடி அலைய, கிடைத்த நட்பில், அன்பான புது உறவில் இருந்தாலும் தான் அனாதையாக்கப்பட்டதில் ஒரு சோகம் அவளுக்கு. தோழிகளின் மேல் காட்டும் பரிவும் பாசமும், தத்தெடுத்த பெற்றோர்கள், தமைக்கையிடம் காட்டும் நெருக்கமும் அன்பும், பெற்று குழந்தைகள் காப்பகத்தில் விட்டுச் சென்றவளை விட வளர்த்தவர்கள் மேல் என்று உணரும் தருணம் வரை அவளின் போராட்டம் ஒரு பக்கம் என 'ஜெயன் மீ டூ' மனதைக் கவருகிறார். காதலனைக் கைப்பிடிக்க முடியாமல் காதலையும் வெறுத்து ஒதுக்க முடியாமல் நோயுடன் போராடும் பெண் தன்னம்பிக்கையுடன் மரணத்தை எதிர்கொள்ளும் பக்குவம் தான் இத்தொடரின் சிறப்பு. அமைதியாக வெள்ளந்தியாக 'கிம் ஜி ஹியுன்' மற்றுமொரு பாத்திரப் படைப்பு. இவர்கள் மூவருக்கும் இடையே இருக்கும் நெருக்கம், அவரவர் ஆசைகளை, கனவுகளை நிறைவேற்ற ஒருவருக்கொருவர் துணை நிற்பது என அழகான கதை.'படபட'வென மனதில் எதையும் ஒளித்து வைத்துக் கொண்டு பேசாத நேர்மையான பெண் பாத்திரத்தில் நடித்திருக்கும் 'சோன் ஏ ஜின்' பொம்மை மாதிரி அழகு. அழுகையை கட்டுப்படுத்த அவர் சிரமப்படும் காட்சிகளில் நம்மை அழ வைத்துவிடுகிறார். 

நடுநடுவே காதல், குடும்பம், உணவு, சோஜு என்று போட்டுக்கொள்ள வேண்டும்.

"When we encounter an inconvenient truth, the truth itself isn’t what makes us flustered. We become flustered because we finally encounter something ominous that we’ve strived so hard to bottle up. That’s why we feel uneasy about the truth."

இறப்பு எல்லோருக்கும் வருவது தான். ஆனால் நோயினால் இறக்கப் போகிறோம் என்று முன்கூட்டியே தெரிந்த பெண் ஒருத்தி அதைச் சிறப்பாக கையாளுவதும் தன்னைச் சுற்றி உள்ளவர்கள் மகிழ்ச்சியாக தன்னை வழியனுப்ப அவள் மேற்கொள்ளும் முயற்சிகளும் என நேர்மறை எண்ணங்களுடன் வெளிப்படுத்திய விதத்தில் இந்தத் தொடர் என்னை மிகவும் கவர்ந்தது. தனக்குப் பின்னால் தன் பெற்றோருக்காக, தன் காதலனுக்காக, தோழிகளுக்காக என்று ஒவ்வொவொன்றையும் செய்திருப்பதாக காட்டும் காட்சிகள் அத்தனையும் அருமை.

கொரிய தொடர்களின் தரம் மென்மேலும் கூடி வருகிறது. என்ன அழகான பாந்தமான கண்களை உறுத்தாத உடைகளை உடுத்துகிறார்கள் இந்தப் பெண்கள். பொறாமையாக இருக்கிறது😛 மழை ,பனிமழை, வெயில், மலர்கள் என்று மாறும் காலங்களில் வரும் காட்சிகள் எல்லாம் கொள்ளை அழகு.

கொரியன் ஆண்கள் உண்மையிலேயே மென்மையானவர்களாக அல்லது நாடகத்தில் இப்படி பாத்திரங்களைப் படைக்கிறார்களா என்று தெரியவில்லை. மென் காதல், மென் சிரிப்பு, மென் முத்தம் என்று மென்மையாகச் செல்கிறது💕

வாழ்க்கையில் வரும் ஏற்றத்தாழ்வுகளை நாம் கையாளும் விதத்தில், அணுகும் முறையில் நமக்குச் சாதகமாக மாற்றிக் கொள்ள முடியும். அழகான நட்பும் அன்பான உறவுகளும் அமைந்து விட்டால் சாவைக் கண்டு அஞ்ச வேண்டியதில்லை. இத்தொடர் சொல்லும் கருத்து இதுதான்.

"Some of us had a new beginning and some faced an end when we’re… Thirty Nine."

வாரத்தில் இரு நாட்களுக்காக காத்திருந்து கண்ட அருமையான தொடர். நெட்ஃபிளிக்ஸ்ல் காண கிடைக்கிறது.




Thursday, March 17, 2022

The Power of the Dog


தாமஸ் சாவேஜின் புதினத்தைத் தழுவி எடுக்கப்பட்ட படத்தின் பெயரும் 'தி பவர் ஆஃப் தி டாக்'. பண்ணை வைத்திருக்கும் இரு சகோதரர்களைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளைக் கொண்டு அழகாக படமாக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் மொண்டானா மாநிலத்தில் நடப்பதாக கதைக்களம் அமைக்கப்பட்டிருந்தாலும் திரைப்படத்தை நியூஜிலாந்தில்எடுத்துள்ளார்கள். பிரம்மாண்ட மலைக்காட்சிகள், சமவெளிப்பரப்புகள் என்று திரை முழுவதும் பரவி நிற்கும் அழகுக்கே இந்தப் படத்தைப் பார்க்கலாம்.

கதாநாயகன், 'தி கொரியர்' பட நாயகன். பார்வையிலேயே கோபம், தாபம், அதிகாரம் என மிரட்டலாக நடித்திருக்கிறார். 1920களில் மொண்டானாவில், சகோதரர்கள் ஃபில் மற்றும் ஜார்ஜ் பர்பேங்க் (பெனடிக்ட் கம்பெர்பாட்ச் மற்றும் ஜெஸ்ஸி பிளெமன்ஸ்) பணக்கார பண்ணை உரிமையாளர்களின் கதையில் ரோஸ் என்ற கணவனை இழந்த பெண்மணியும் அவளுடைய மகனும் வருகிறார்கள். ஒருவிதமான மூடுமந்திரமாகவே படம் செல்கிறது. ரோஸை திருமணம் செய்து ஜார்ஜ் வீட்டிற்கு அழைத்து வந்ததை விரும்பாத ஃபில் பார்வையாலேயே அவளையும் அவள் மகனையும் அச்சமூட்டுகிறார்.

"தந்தையின் இறப்பிற்குப் பிறகு தாயின் மகிழ்ச்சியே தனக்கு முக்கியம். அதற்காக அவளுக்கு உதவிகள் செய்வேன்" என்று மகன் துவக்க காட்சியில் கூறுவது தான் ஒன்லைனர் என்று நினைக்கிறேன். ஃபில்லின் கடந்த கால வாழ்க்கையை ரோஸின் மகனுடன் பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு இருவரும் நெருக்கமாக பழகுவதைப் பார்த்து தவிக்கும் ரோஸிற்கு குடிப்பழக்கமும் தொடர்கிறது. வெளியில் முரட்டுத்தனமாக இருந்தாலும் ரோஸின் மகனைத் தைரியசாலியாக தனக்குத் தெரிந்த வித்தைகளைக் கற்றுத் தருகிறான் ஃபில். முடிவை பார்வையாளர்களுக்கே விட்டு விட்டார்கள்😎

ஒவ்வொரு காட்சியமைப்பும் வசனங்களும் செதுக்கியதைப் போல அருமை.

மெதுவாக சென்றாலும் ஆழமான படம். நெட்ஃப்ளிக்ஸ்ல் காணலாம்.

Monday, March 14, 2022

The Bombardment


போர்க்காலங்களில் பாதிக்கப்படுவது என்னவோ அப்பாவி பொதுமக்கள் தான். அதிலும் பெண்களும் குழந்தைகளும் அதிகளவில் என்பதை உலகப்போர்கள் தொடங்கி நேற்றைய ஸ்ரீலங்கா முதல் இன்றைய உக்ரைன் போர் வரை அது தொடர்ந்து கொண்டிருக்கிறது. நாமும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். "The Bombardment" திரைப்படம் உலகப்போரின் போது நடந்த ஒரு அசம்பாவிதத்தால் பள்ளியில் குண்டு போடப்பட்டு குழந்தைகளும் கன்னியாஸ்திரிகளும் இறந்த நிகழ்வைப் பற்றின உண்மைச்சம்பவம்.

ஒரு தவறுதலான குண்டு வீச்சில் மூன்று இளம்பெண்களும் வண்டியோட்டியும் பலியாகிறதில் ஆரம்பமாகிறது படம். அதனைப் பார்த்து அதிர்ச்சியாகும் சிறுவன் ஒருவன் பட இறுதியில் அதன் பாதிப்பிலிருந்து வெளிவருவது போல அமைத்திருந்தார்கள். குதூகலமாக பள்ளிச் செல்லும் குழந்தைகள், அந்த வயதில் இருக்கும் கற்பனைக்கதைகள், பேச்சும் ஆட்டமும் என்று கோபென்ஹெகென் நகரில் நடக்கிறது விரிகிறது படக்காட்சிகள். 

ஹிட்லரின் ஆட்சியில் இருக்கும் சுவீடனை மீட்க பிரிட்டிஷ் அரசாங்கம் குண்டுகள் வீசி ஹிட்லரின் அதிகாரிகளைக் கொல்ல  திட்டம் தீட்டுகிறார்கள். பள்ளியில் பணிபுரியும் கன்னியாஸ்திரி ஒருவர் யூதர்களும் மனிதர்கள் தானே? அவர்கள் ஏன் இத்தனை துன்பப்பட வேண்டும் என்று யேசுவிடம் கேட்க தன்னைத்தானே வருத்திக் கொள்கிறாள். ஒரு ஹிட்லர் ஆதரவாளனை மனம் திருத்துகிறாள். இப்படித்தான் போகிறது கதை.

முதலில் இந்தப்படத்தை அதன் கதை தொடர்பான காலத்தோடு அழகாக எடுத்திருந்தார்கள். போர் என்று வரும் பொழுது மனிதம் தொலைந்து போகும் என்பதை சில காட்சிகள் தெளிவாகச் சொல்கிறது. இன்றைய போர் சூழ் உலகில் ஒருவரை ஒருவர் ஆள வேண்டும் என்ற வெறியில் மனிதன் மிருகத்தை விட கேவலமானவன் என்பதையே மீண்டும் மீண்டும் நிரூபணம் செய்கிறது இத்தகைய படங்கள்.

யூதர்களைப் பற்றின தவறான அபிப்பிராயத்தை மக்களிடையே நன்கு பரப்பி இருந்திருக்கிறது கொடுங்கோலன் ஹிட்லர் அரசாங்கம். மக்களும் அதை நம்பியிருந்திருக்கிறர்கள்.  சமூக வலைதள காலத்திலேயே எத்தனை தில்லாலங்கடி வேலைகள் தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது! கண்ணெதிரே நடக்கும் அநியாயத்தையும் எப்படியெல்லாம் மடை திருப்புகிறார்கள் கேவலமான அரசியல்வாதிகள்? சமீபத்தில் வெளிவந்திருக்கும் "தி காஷ்மீர் ஃபைல்ஸ்" திரைப்படத்தின் விமரிசனங்களும் அதைத்தான் சொல்கின்றது.

மனிதத்துடன் வாழ்வது அத்தனை கடினமா?

அழிக்கப்பட்ட புத்தகங்கள்… உருவான செயற்கை நுண்ணறிவு: அறிவின் புதிய போராட்டம்

என்ன தான் நடக்கிறது செயற்கை நுண்ணறிவு உலகில்? மனிதனின் மூளையாக செயல்பட, கணினிக்கு அறிவூட்ட எந்த எல்லை வரை நிறுவனங்கள் செல்கிறது? அறிவார்ந்த ...