Monday, April 29, 2024

லாபதா லேடீஸ்


'Laapataa Ladies' என்றொரு இந்தி திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியுள்ளது. வெள்ளந்தி மனிதர்களை வைத்துப் பின்னப்பட்ட அழகான கதை. மேற்படிப்பு படிக்க ஆசைப்படும் பெண், கணவனுக்காக வாழ விரும்பும் படிக்காத பெண். இருவரும் ஓரிடத்தில் மாறி விட, தொலைந்த நாட்களில் தங்களது சுயத்தைக் கண்டடைவதை இத்தனை எளிமையாக, அழகாகச் சொல்லவும் முடியுமா? 

வடமாநிலங்களில் அதுவும் போதிய பின்தங்கிய கிராமங்களில் இல்லாத இளவயது திருமணம் என்பது நடைமுறையில் இருப்பதைச் சுட்டிக்காட்டியபடி துவங்குகிறது படம். புது மனைவி மீது தீராக்காதலுடன் 'ஐ லவ் யூ'  சொல்லி வெட்கப்படும் நாயகன் அனாயசமாக நடித்திருக்கிறார். அந்தச் சிறுபெண்ணும் வெள்ளந்தியாக பெண் என்பவள்திருமணமாகி கணவன் வீட்டிற்குச் சென்று வேலை செய்யவே படைக்கப்பட்டவள் போல அடுப்படி வேலைகள் அனைத்தையும் கற்று கணவன் பெயர் கூட சொல்ல வெட்கப்படுபவள். திருமணம் முடிந்து மூன்று நாட்களுக்குப் பிறகு கணவனுடன் ரயிலில் செல்கிறாள். அதே ரயிலில் அவர்களுடைய பெட்டியில் இன்னொரு மணமகனும் மணமகளும் இருக்கின்றனர்.

'கல்யாண மாப்பிள்ளை' என்றாலே கோட்டு சூட்டு போட்டுக் கொள்ள வேண்டும் என்பது கிராமங்கள் வரை பரவியிருக்கிறது. பொருந்தாத உடையை அணிந்து அதில் யார் துணி உசத்தி? வரதட்சணை எவ்வளவு? என்ன கொடுத்தார்கள் என்று கேட்பது இன்னும் பெண்களுக்கு விடியல் வரவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார் இயக்குனர் கிரண் ராவ். மாற்றார் முன்னிலையில் திருமணமான பெண்கள் தலையில் முக்காடிட்டுக் கொள்ள வேண்டும் என்பதும் புழக்கத்தில் உள்ள வழக்கம்.  அதில் வரும் குழப்பத்தால் இறங்குமிடம் வந்ததும் தன் மனைவி என்று அதே பெட்டியில் பயணம் செய்த மணப்பெண்ணை இழுக்க கொண்டு இறங்கி விடுகிறான் அந்த இளைஞன்.

ஊருக்குச் சென்று ஆரத்தி எடுக்கும் பொழுது தான் தெரிகிறது அழைத்து வந்தது தன்னுடைய மனைவி அல்ல என்று. தன் மனைவியைத் தேட ஆரம்பிக்கிறான். பணத்தாசை பிடித்த உள்ளூர் காவல்நிலைய அதிகாரி வாயில் பீடாவை குதப்பிக்கொண்டே பேசி... உவ்வே... எங்களுடைய பீகார் பயணம் தான் நினைவிற்கு வந்தது. வெத்தலை போடுவதும் துப்புவதுமே முழுநேர வேலையாகச் செய்து எரிச்சலூட்டுகிறார்கள். கான்ஸ்டபிளாக வருபவர் இதற்கு முன்பு படத்திலோ நாடகத்திலோ பார்த்தாக நினைவு. இவர்கள் இருவரும் வரும் காட்சிகளின் வசனங்கள் 👌 மனைவியைக் கண்டுபிடித்துத் தர வேண்டும் என்று பரிதாபமாக வந்து நிற்கும் இளைஞனைப் பார்த்து அவனிடமிருந்து பைசா தேறாது ஆனால் அவன் மனைவியாக வந்திருப்பவளிடமிருந்து கொள்ளை அடிக்கலாம் என்று திட்டம் போட்டு அவளைக் கண்காணிக்கும் காட்சிகளில் வரும் வசனங்கள் சிரிக்க வைக்கிறது. 

யார் என்று தெரியாமலே மகன் தவறாக அழைத்து வந்த பெண்ணை வீட்டில் வைத்துக் கொண்டு அவள் கணவனைத் தேடுகிறார்கள்.மேற்படிப்பு படிக்க விரும்பும் சாதூரியமான பெண். தான் தங்கியிருந்த வீட்டில் மூத்த மருமகளின் திறமையைக் கண்டறிந்து அவளுக்கு உதவுகிறாள். திருமணமானாலே பெண்கள் தங்களுடைய ஆசைகளை மறந்து விட வேண்டும் என்பதை மாமியார் கதாபாத்திரத்தில் வருபவர் கூறும் பொழுது பல பெண்களும் அதை உணர முடியும். குடும்பம் குடும்பம் என்று கணவன், குழந்தைகளுக்காக வாழ்ந்து தங்களது ஆர்வத்தை, ஆசைகளைத் துறந்த பெண்கள் பலர். அதையும் அழகாகச் சுட்டிக்காட்டியது சிறப்பு. 

ஆண் என்றாலே மனைவியை அடிக்கலாம். வரதட்சணையை வெட்கமின்றி கேட்டு வாங்கலாம். பெண்ணைப் பெற்றவர்களை அவமானப்படுத்தலாம். பெண் என்பவள் ஆணுக்கு கட்டுப்பட்டவள் என்ற அக்மார்க்தனமான அடாவடி  ஆணிற்கு மனைவியாக நடித்திருந்த பெண்ணும் நடிப்பில் அசத்தியிருந்தார். பெண்ணிற்குத் திருமணம் தான் முக்கியம் அதுவும் அவளுடைய கனவுகள், ஆசைகளைக் கேட்ட பிறகும் வீட்டில் திணிக்கப்படும் வன்முறை நாடகம் என்று பெண்களின் அவதியை ஒன்று விடாமல் காட்டியுள்ளார்கள்.

கணவனைத் தொலைத்தபிறகு நடைமேடையில் அழுது கொண்டு ஊர் பெயரும் தெரியாமல் பயந்த விழிகளுடன் நடித்திருந்த பெண்ணும் அமர்க்களம். அவருக்கு உதவுபவர்கள், அவர்களுடைய வாழ்க்கையிலிருந்து அந்தப் பெண் கற்றுக்கொள்வது என்று காட்சிகள் அழகாக நகர்கிறது.

நடைபாதையில் கடை வைத்திருக்கும் பெண், தன் சம்பாத்தியத்தில் கணவரும், மகனும் வாழ்ந்ததால் அவர்களை விரட்டி விட்டு நிம்மதியாக இருப்பதாகக் கூறுவார். அப்பொழுது அந்த வெள்ளந்திப் பெண், தனியாக இருக்க பயமில்லையா என்று கேட்பாள். பெண்களால் முடியாதது எதுவுமில்லை என்பதை ஆண்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால் நான் யாரையும் அண்ட விடுவதில்லை என்று போகிற போக்கில் முகத்திலறையும் உண்மைகளைச் சொல்லிக்கொண்டே போவது போல காட்சிகள் மிகச்சிறப்பு.

எப்போதாவது இப்படியொரு படத்தை இந்தியிலும் கூட எடுத்து விடுகிறார்கள். 

தமிழ்த் திரையுலகம் தான் கதையும் இல்லாமல் அதிக செலவுகள் செய்து யார்  யாரையோ திருப்திப்படுத்த அலங்கோலமாக படங்களை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். பாவம்! 


No comments:

Post a Comment

நந்தி மலை

பெங்களூரூலிருந்து ஒருநாள் பயணமாகச் சென்று வரும் இடங்களில் 'நந்தி ஹில்'சும் ஒன்று. மலையடிவாரத்தில் போகநந்தீஸ்வரர் கோவில் இருக்கிறது. ...