Tuesday, January 26, 2021

Scandal In Sorrento திரைப்படம்

1955 இத்தாலிய மொழிப்படம். கொரோனா காலத்தில் தான் இப்படிப்பட்ட படங்களைப் பார்க்க முடியும் போல😃😃😃 மொழி புரியாவிட்டாலும் சப்டைட்டில் இருக்க பயமேன்?

உலகப்போர் நடந்து கொண்டிருந்த சமயத்தில் கூட இப்படிப்பட்ட படங்களை எடுக்க முடிந்திருக்கிறது! ராணுவத்திலிருந்து ஒய்வு பெற்ற கதாநாயன். திருமணமாகாதவர். பெண்கள் என்றால் கனிந்து விடும் சுபாவம் அதுவும் அழகான பெண்கள் என்றால் கேட்கவே வேண்டாம். அவருடைய அண்ணன் தம்பிக்கு கடிவாளம் போட்டுக் கொண்டே இருந்தாலும் எல்லார் கண்ணிலும் மண்ணைத்தூவி தன் வீட்டில் குடியிருக்கும் மீன்களை விற்கும் விதவைப்பெண், பேரழகியிடம் மனதைப் பறிகொடுக்கிறார். அப்படியொரு வழிசல் ஆசாமி.

தான் குடியிருக்கும் வீட்டை காலி செய்யாமல் இருக்க கதாநாயகனை நன்றாகவே பயன்படுத்திக் கொள்ளும் கதாபாத்திரத்தில் சோஃபியா லாரென். அழகுப்பதுமையாக 'சிக்'கென பட முழுவதும் நீட்டி முழக்கிப் பேசிக் கொண்டேஏஏஏஏஏ இருக்கிறார். காதலனிடம் சேர்ந்தாரா இல்லை வீட்டு உரிமையாளரிடம் சமரசம் செய்து கொண்டாரா என்பதே படம்.

மனம் விட்டுச் சிரிக்க பல காட்சிகள். கதாநாயகனின் தற்காலிக குடியிருப்பின் உரிமையாளர் ஒரு விதவைப்பெண். சர்ச், பைபிள் என்று மதத்தின் வழியில் வாழ விழைபவர். கதாநாயகனின் மேல் ஒரு தலைக்காதல். இவர்களையெல்லா மிஞ்சும் விதத்தில் வேலைக்காரப்பெண்ணாக அவ்வப்போது கருத்துக்களை உதிர்க்கும் பெண் கதாபாத்திரம். இத்தாலியின் சொர்ரெண்டோ என்ற அழகான கடற்கரையோர சிறு நகரத்தில் படமாக்கியிருக்கிறார்கள். நகைச்சுவைக்காட்சிகளுடன் விரசமில்லாத அருமையான படம்.

இப்படியொரு படம் தமிழில் வர வாய்ப்பே இல்லை.

நெட்ஃப்ளிக்ஸ்ல் காண கிடைக்கிறது. என்ஜாய்!

Monday, January 25, 2021

பைடன்-ஹாரிஸ்: ஆட்சி அதிகாரமும் அமெரிக்க இந்தியர்களும்

அமெரிக்க அரசியலில் புலப்பெயர்ந்த இந்திய தலைமுறையினரின் பங்களிப்பைப் பற்றின சொல்வனம் இதழில் வெளிவந்துள்ள என் கட்டுரை. 


பைடன்-ஹாரிஸ்: ஆட்சி அதிகாரமும் அமெரிக்க இந்தியர்களும்



அமெரிக்காவில் ஆட்சி மாறிவிட்டது. இனி காட்சிகளும் மாறித்தான் ஆகவேண்டும்.

எதிர்வரும் நான்கு ஆண்டுகள் அமெரிக்க வரலாற்றில் முக்கியமான காலகட்டமாக இருக்கும். ட்ரம்ப் போன்ற ஒரு தடாலடி அரசியல்வாதி ஏற்படுத்தியுள்ள தாக்கத்தினைச் சீர்செய்து எல்லாவற்றையும் தங்கள் ஒழுங்கில் கொண்டுவருவதற்குள் பைடனின் பாதி ஆட்சிக்காலம் செலவாகிவிடும் என கருதுகிறேன். மிச்சமிருக்கும் நாள்களில்தான் அவர் தன் பங்கிற்கு ஏதாவது செய்துவிட வாய்ப்பிருக்கிறது. மிகுந்த சவால் நிறைந்த இந்த வேலைகளை செய்திட திறமையான அனுபவம் வாய்ந்த நிர்வாகிகள், அதிகாரிகள் தேவை என்பதை பைடன் நன்கு உணர்ந்திருக்கிறார்.

அமெரிக்கா போன்ற பல்வேறு இனக்குழுக்கள் கூடி வாழும் ஒரு நாட்டில், காலம்காலமாய் பெரும்பான்மை வெள்ளை இனத்தவர் மட்டுமே நிறைந்திருந்த ஆட்சிக் குழுவில், இம்முறை பரவலாக எல்லா இனக் குழுவினரும் பங்கேற்கும் வகையில் ஆட்களை பைடன் தெரிவு செய்திருப்பது பைடனின் பரந்துபட்ட சமத்துவ பார்வையை உறுதிசெய்கிறது. இந்த முயற்சிக்கு எல்லா தரப்பிலிருந்து ஆதரவும், பாராட்டுக்களும் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

முன் எப்போதும் இல்லாத வகையில் பைடன் அரசின் நிர்வாகத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் தகுதிகூடிய முக்கிய பொறுப்புகளில் கணிசமாக அமர்த்தப்பட்டிருக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் துடிப்பான இளைய வயதினர், தங்கள் துறைகளில் அனுபவம் வாய்ந்தவர்கள், உயர்கல்வி கற்றவர்கள்.

இந்தியர்கள் என்றால் மருத்துவம், கணிணி சார்ந்த துறைகளில் மட்டுமே கோலோச்சுகிறவர்கள் என்கிற பொதுக்கருத்து இந்த நியமனங்களின் மூலமாக உடைபட்டிருக்கிறது. பைடனின் ஆட்சி அதிகாரத்தில், துணை அதிபரில் துவங்கி நிர்வாகத்தின் அனைத்து மட்டங்களிலும் பரவலாக இந்திய முகங்கள் தென்பட ஆரம்பித்திருப்பது நம்பிக்கை தரும் நல்ல மாற்றம். இத்தனைக்கும் அமெரிக்க மக்கள் தொகையில் இந்திய வம்சாவளியினர் வெறும் ஒரு சதவிகிதத்தினர்தான் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

அந்த வகையில் இந்த கட்டுரையில் பைடனின் அரசில் இடம்பெற்றிருக்கும் இந்திய முகங்களைப் பற்றிய தகவல்களை தொகுத்திருக்கிறேன்.

கமலாதேவி ஹாரிஸ், அரசியல் மற்றும் பொதுவாழ்வில் ஆரம்பம் முதலே தன்னை ஒரு கறுப்பின பெண்ணாக அடையாளப்படுத்திக் கொண்டாலும் கூட, தமிழை தாய்மொழியாக கொண்ட ஒரு பெண் அமெரிக்க துணை அதிபராவது இந்திய வம்சாவளியினர் பலருக்கும் பெருமைதான். அடுத்து வரும் பத்தாண்டுகளில் அமெரிக்க அரசியல் நீரோட்டத்தினை நெறிப்படுத்தும் மையப் புள்ளியாக, மாபெரும் சக்தியாக கமலா இருப்பார்.

தற்போது அமெரிக்க செனட்டில் ஆளுக்கு ஐம்பது உறுப்பினர்களுடன் இரு கட்சியினரும் சம பலத்துடன் இருக்கின்ற்னர். பைடன் அரசின் எந்தவொரு மசோதாவும் நிறைவேற வேண்டுமென்றால் குறைந்தது அறுபது உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும். எனவே பைடன் அரசு இந்த அறுபது உறுப்பினர் ஒப்புதல் என்பதை முதலில் திருத்திட விரும்புகிறது. இதற்கு குடியரசுக் கட்சியின் மூத்த அரசியல்வாதியான மிட்ச் மெக்கநெல் பெரும் தடையாக இருக்கிறார். இந்த தடையை முறியடிக்க ஹாரிஸ் தனது அதிகாரத்தை பயன்படுத்தி ஐம்பத்தியோராவது வாக்காக தனது வாக்கினை செலுத்தி சட்டத் திருத்த மசோதாவை வெற்றிகரமாக நிறைவேற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் பின்னர் வரும் நாட்களில் பைடன் அரசு கொண்டு வரும் மற்ற அனைத்து மசோதாக்களிலும் ஹாரிஸ் இத்தகைய நிலைப்பாட்டையே கையாளுவார். கூடுதலாக தனது அரசியல் அனுபவ ஆற்றலால் குடியரசுக் கட்சியின் சில உறுப்பினர்களின் ஆதரவோடு அரசின் அனைத்து மசோதாக்களை எளிதாக செனட்டின் ஒப்புதலைப் பெற வைக்கும் முக்கிய பணியினை கமலா வெற்றிகரமாக செய்து முடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


நீரா டேண்டன், வெள்ளை மாளிகையின் மேலாண்மை மற்றும் நிதிநிலை திட்ட அலுவலக இயக்குனராக பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார். அரசின் பல்வேறு துறைகளின் தேவைகளை அறிந்து, அதன் அடிப்படையில் நடுவண் அரசின் வரவுசெலவுத் திட்டங்களை உருவாக்குவதோடு, அதன் செயல்பாடுகளை மேற்பார்வையிடும் முக்கியமான பொறுப்பு இது. பைடனோடு அன்றாடம் நேரடியான தொடர்பில் இயங்கும் இந்த மிக முக்கியமான பொறுப்பில் நியமிக்கப்பட்டிருக்கும் ஐம்பது வயதான நீரா, யேல் பல்கலைகழகத்தில் சட்டம் பயின்றவர். கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர்களின் பிரச்சாரக் குழுவில் தொடர்ந்து இடம் பெற்ற முக்கியஸ்தர். “ஒபாமாகேர்” மருத்துவக் காப்பீட்டு சட்டவடிவாக்கத்தில் முக்கிய பங்காற்றியவர். தொடர்ச்சியாக பொது சுகாதாரம், சுகாதார சீர்திருத்தம், புதிய எரிசக்திக் கொள்கைகள் போன்றவற்றில் தீவிரமாக இயங்கி வருபவர். முற்போக்காளர். தாராளவாத கொள்கைகளை ஆதரிப்பவர்.

வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் மக்களுக்காக அரசு வழங்கி வரும் உணவு கூப்பன் மற்றும் தங்குமிட வசதிகளைத் தன் சிறு வயதில் பெற்று வளர்ந்தவர் என்கிற வகையில், அத் திட்டங்களுக்கான தனது ஆதரவினை அவர் தொடர்ந்து வலியுறுத்தி வருவதை குடியரசுக் கட்சியினர் இன்றுவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதனால் இவருடைய நியமனத்திற்கு செனட் ஒப்புதல் பெறுவதில் குடியரசுக் கட்சியினரால் தடைகள் இருக்குமென எதிர்பார்க்கப் படுகிறது. ஒரு வேளை செனட் ஒப்புதல் கிடைத்துவிட்டால் இந்தப் பதவியில் நியமிக்கப்படும் முதல் தெற்காசியர், இந்திய-அமெரிக்கர் என்கிற பெருமையும் நீராவைச் சேரும்.

டாக்டர் விவேக் மூர்த்தி, அமெரிக்காவின் சர்ஜன் ஜெனரலாக பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார். இவர் கடந்த ஒபாமா ஆட்சியிலும் இதே பதவியை வகித்தவர் என்பது குறிப்பிடத் தக்கது. அமெரிக்காவின் மருத்துவர் என அறியப்படும் இந்த பதவியானது, ஒட்டுமொத்த அமெரிக்காவின் பொது சுகாதாரத்தையும் ஆரோக்கியத்தையும் நிர்வகித்து நெறிப்படுத்தும் தலைமைப் பதவியாகும். கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட விவேக் மூர்த்தி தன் இளமைக்காலம் துவங்கி மருத்துவ சுகாதாரத் துறையில் பல்வேறு மட்டங்களில் தீவிரமாக இயங்கி வருபவர். எய்ட்ஸ் விழிப்புணர்வு, போதைப்பழக்கத்தினை நாள்பட்ட நோயாக அங்கீகரிக்க வைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டது, ஓபியாய்ட் தொற்றுநோய் பரவலைத் தடுக்க இரண்டு மில்லியனுக்கும் அதிகமான சுகாதார பாதுகாப்பு நிபுணர்களை ஒரணியில் திரட்டியது, தடுப்பூசிகளின் அவசியத்தை வலியுறுத்தும் செயல்பாடுகள், மனநலம் மற்றும் உடல் நலம் பற்றிய விழிப்புணர்வு இயங்கங்களை முன்னெடுத்தது என பலவகையிலும் சுகாதாரத்துறையில் தீவிரமாக இயங்கி வருபவர்.

அமெரிக்காவில் வாகன விபத்தில் உயிரிழப்பவர்களை விட அதிகளவில் போதைப்பொருளை உட்கொண்டு இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகம். அனுமதி பெற்ற வலி நிவாரணிகளுக்கு அடிமையானவர்கள், சட்ட விரோதமான போதைப் பொருட்களை உட்கொள்பவர்களுக்காக டாக்டர் மூர்த்தி எடுத்துக் கொண்ட முன்னெடுப்பு பலரின் கவனத்திற்கும் உள்ளானது. மிகுந்த பாராட்டையும் பெற்றது. தற்போது பைடன் அரசின் முதல் முக்கியத் திட்டமான கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் குழுவின் தலைவராகவும் விவேக் மூர்த்தி நியமிக்கப்பட்டு தன் வேலைகளைத் துவங்கியிருக்கிறார்.

வனிதா குப்தா, அமெரிக்காவின் இணை அட்டர்னி ஜெனரல் பதவிக்கு நியமிக்கப்படும் முதல் பெண்மணி என்கிற பெருமை 46 வயதான வனிதாவை சேர்கிறது. அமெரிக்காவின் மரியாதைக்குரிய சிவில் வழக்கறிஞர்களில் வனிதா முக்கியமானவர். கடந்த ஒபாமா அரசில் குடியியல் உரிமைகள் பிரிவின் தலைமை வழக்கறிஞராக செயல்பட்டவர். அந்த காலகட்டத்தில் அரசியலமைப்பு கண்காணிப்பு , குற்றவியல் நீதித்துறை சீர்திருத்தங்கள், உடல் ஊனமுற்றோருக்கான இயலாமை உரிமைகளை மேம்படுத்துதல், தன் பாலின ஈர்ப்பாளர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல், அனைவருக்குமான வாக்களிக்கும் உரிமையை உறுதிசெய்தல், இனவெறி, மதவெறி தொடர்பான குற்றச்செயல்களை தடுத்தல் என பல்வேறு துறைகளில் வனிதாவின் செயல்பாடுகள் கவனம் பெற்றது. இணை அட்டர்னி ஜெனரல் பதவி என்பது சிவில், நீதி,கூட்டாட்சி மற்றும் உள்ளூர் சட்ட அமலாக்கம் மற்றும் பொது பாதுகாப்பு விஷயங்கள் தொடர்பான கொள்கைகளில் அட்டர்னி ஜெனரல் மற்றும் துணை அட்டர்னி ஜெனரலுக்கு ஆலோசனை வழங்கும் முக்கிய பொறுப்பாகும். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே இந்த பதவிக்கு வனிதா நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாலா அடிகா, கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர். அமெரிக்க அதிபரின் மனைவியும், முதல் பெண்மணியுமான டாக்டர். ஜில் பைடனின் கொள்கை இயக்குனராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் மூத்த ஆலோசகராகவும் செயல்படுவார். பைடன் – ஹாரிஸ் தேர்தல் பிரச்சாரத்தின் மூத்த கொள்கை ஆலோசகராகவும், உயர் கல்வி மற்றும் இராணுவ குடும்பத்தினருக்கான பைடன் அறக்கட்டளையின் இயக்குனராகவும் மாலா பணியாற்றியிருக்கிறார். ஒபாமா நிர்வாகத்தில் கல்வி மற்றும் கலாச்சார பணியகத்தில் கல்வித் திட்டங்களுக்கான துணை செயலாளராகவும், உலகளாவிய மகளிர் பிரச்சினைகள் தொடர்பான வெளியுறவுத் துறையில் பணியாளராகவும், தேசிய பாதுகாப்பு உழியர்களின் மனித உரிமைகளுக்கான இயக்குனர் என பல்வேறு நிர்வாக பணிகளில் பணியாற்றிய நீண்ட அனுபவம் உள்ளவர்.

அஸ்ரா ஜீயா, சிவில் பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான உதவி செயலராக பரிந்துரைக்கப்பட்டுள்ளார். வெளியுறவுத் துறையில் மிக நீண்டகால அனுபவம் பெற்றவர். ஃப்ரெஞ்ச், அரபு, ஸ்பானிஷ் மொழிகளைப் பேசும் திறமைகொண்ட ஜீயா, பிரான்சின் மிக உயர்ந்த குடிமகன், ஜனாதிபதி தர வரிசை விருது மற்றும் 15 உயர், செயல் திறன் விருதுகளை பெற்றுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கரீமா வர்மா, இந்தியாவில் பிறந்த இவர் ஜில் பைடனுக்கான டிஜிடல் இயக்குனராக நியமிக்கப்பட்டிருக்கிறார். பாரமவுண்ட் பிக்ச்சர்ஸ், வால்ட் டிஸ்னி, ஏபிசி நெட்வொர்க், ஹாரிசன் மீடியா போன்ற பெரு நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். பைடன் – ஹாரிஸ் தேர்தல் பிரச்சாரக்குழுவின் திட்டமிடல் மற்றும் உள்ளடக்கத் தயாரிப்புக் குழுவில் முக்கிய இடம் பெற்றிருந்தவர். சிறுபான்மையினர், தன் பாலின ஈர்ப்பாளர்கள் உரிமைகளுக்காக தொடர்ச்சியாக குரல் கொடுப்பவர்.

சப்ரினா சிங், தகவல் தொழில்நுட்பத்தில் நிபுணர்.வெள்ளை மாளிகையின் துணை பத்திரிக்கை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மிக முக்கியமான ஒரு அரசியல் குடும்ப பின்புலத்தை உடையவர். அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்களுக்கான குடியுரிமை மற்றும் அங்கீகாரங்களுக்காக போராடி அந்த உரிமைகளைப் பெற்றுத் தந்தவர் சப்ரினாவின் தாத்தாவான ஜே.ஜே.சிங் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது தாத்தா இந்தியா லீக் ஆஃப் அமெரிக்காவின் தலைவராக இருந்தார். 1940களில் இந்தியர்கள் குழுவுடன் இணைந்து அமெரிக்காவில் இனரீதியான பாகுபாடு கொள்கைகளுக்கு எதிரான பிரச்சாரத்தைத் தொடங்கினார். அமெரிக்க குடியுரிமைக்கான உரிமைக்காக போராடியது மட்டுமல்லாமல், 1946ஆம் ஆண்டில் ஜனாதிபதி ஹாரி ட்ரூமன் கையெழுத்திட்ட “லூஸ்-செல்லர்” வரலாற்றுச் சட்டத்தை வகுப்பதில் முக்கிய பங்கும் வகித்தார். அது இந்தியர்களுக்கான குடியுரிமை விதிகளை தளர்த்தியது.

ஆயிஷா ஷா, காஷ்மீரில் பிறந்து லூயிஸியானாவில் வளர்ந்த ஆயிஷா சமூக வலைத்தள தகவல் தொடர்புத் துறை வல்லுனர். “இனி வரும் நாட்களில் அரசு மக்களுடன் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் தொடர்பு கொள்வது மிக முக்கியமானது” என அதிபர் பைடன் சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். பைடனின் இந்த திட்டத்தை நிறைவேற்ற அமைக்கப்பட்டுள்ள குழுவினர் வெள்ளை மாளிகையில் இருந்து இயங்குவர். வெள்ளை மாளிகையை அமெரிக்க மக்களுடன் புதுமையான மேம்படுத்தப்பட்ட வழிகளில் இணைக்கும் தகவல் தொடர்பு பரிமாற்றத் திட்டங்களை இந்தக் குழு உருவாக்கும். “தொற்றுநோய்ப் பரவலைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்கள், ஊடகங்களின் பங்கு அதிகரித்துள்ளது. தற்போதைய வாழ்க்கையின் பெரும்பகுதி ஆன்லைனில் இருப்பதால் இந்த நிர்வாகத்தின் டிஜிட்டல் முயற்சிகள் அனைத்தையும் உள்ளடக்கியதாகவும் விரிவாகவும் இருப்பது மிகவும் முக்கியமானது” என துணை அதிபர் ஹாரிஸ் இக்குழுவின் நிபுணத்துவத்தையும் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார். இந்த குழுவின் சேர்ந்தகை நிர்வாகி (“Partnerships Manager”) ஆயிஷா.

சமீரா ஃபசிலி, தேசிய பொருளாதார கவுன்சிலின் துணை இயக்குனராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் உள்நாட்டு மற்றும் சர்வதேச பொருளாதார நடவடிக்கைகள், நிதி அணுகல், சமூக கட்டமைப்பு போன்ற துறைகளில் அனுபவம் வாய்ந்தவர். கடந்த ஒபாமா அரசில் தேசிய பொருளாதார கவுன்சிலின் மூத்த கொள்கை ஆலோசகராகவும், கருவூலத்துறையின் மூத்த ஆலோசகராகவும் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். காஷ்மீரை பூர்வீகமாக கொண்டவர். சட்டம் பயின்றவர். “ஸ்டாண்ட் வித் காஷ்மிர்” இயக்கத்தின் உறுப்பினராகவும் உள்ளார். சமீபத்தில் இந்திய அரசு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததை கடுமையாக எதிர்த்தவர்.

பரத் ராமமூர்த்தி, தேசிய பொருளாதார கவுன்சிலில் நிதி சீர்திருத்தம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பிற்கான துணை இயக்குனராக பரத் நியமிக்கப்பட்டிருக்கிறார். சமீபத்தில் இவர் இணை ஆசிரியராக இருந்து எழுதிய ”A True New Deal” எனும் கட்டுரை கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்டெடுப்பதைக் குறித்த பார்வை அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளது. அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார மீட்சியை இந்தக் கட்டுரை பேசுகிறது. இதை அடிப்படையாகக் கொண்டே பைடன் அரசின் அணுகுமுறையும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. “பைடன்-ஹாரிஸ் நிர்வாகத்தில் தேசிய பொருளாதார கவுன்சிலின் துணை இயக்குநராக இணைந்ததில் தான் பெருமைப்படுவதாகவும் தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கும், வலுவான சிறந்த பொருளாதாரத்தை உருவாக்குவதற்கும் நிறைய செய்யவேண்டியிருக்கிறது. இந்த அணியுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.” என ராமமூர்த்தி சமீபத்தில் ட்வீட் செய்திருந்தார்.

வினய் ரெட்டி, இனி இவர்தான் பைடனின் அனைத்து உரைகளையும் எழுதுகிறவராக இருப்பார். Director of speechwriting. பைடன் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் வினய் ரெட்டியின் மேற்பார்வையில் தயாரிக்கப்படும். இவர் ஏற்கனவே பைடனுடன் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். சட்டம் பயின்றவர். முந்தைய ஒபாமா அரசில் பல்வேறு துறைகளில் உரைகளை தயாரிக்கும் வேலைகளில் ஈடுபட்ட அனுபவம் உள்ளவர்.

கௌதம் ராகவன், கடந்த பத்து ஆண்டுகளில் வெள்ளை மாளிகை மற்றும் அமெரிக்க பாராளுமன்றமான “கேப்பிடல் ஹில்லில்” பல்வேறு முக்கிய பதவிகளில் பணியாற்றிய கௌதம், இனி ஜனாதிபதி பணியாளர் அலுவலகத்தின் துணை இயக்குநராக பணியாற்றுவார். இவர் சமீபத்தில் பைடனின் நியமனங்களின் குழுவின் துணைத் தலைவராகவும் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தை பின்புலமாகக் கொண்ட அமெரிக்க மக்கள் பிரதிநிதியான பிரமிளா ஜெயபாலிடம் தலைமை பணியாளராகவும் பணியாற்றியவர். நேரடியாகவும், இணைந்தும் கௌதம் ராகவன் எழுதிய பல்வேறு கட்டுரைகள், வெளியீடுகள் முக்கியத்துவம் பெற்றவை.

வேதந்த் படேல், குஜராத்தை பூர்வீகமாகக் கொண்டவர். வெள்ளை மாளிகையில் உதவி பத்திரிக்கை செயலராக நியமிக்கப் பட்டிருக்கிறார். பைடனின் பிரச்சாரத்தில் பத்திரிக்கை தொடர்பாளராக பணியாற்றியவர். தற்போது பைடன் அரசின் பதவியேற்பு நிகழ்ச்சியின் மூத்த செய்தி தொடர்பாளராகவும் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. பத்திரிக்கை தொடர்பு துறையில் நீண்ட அனுபவம் உள்ளவர்.

சோனியா அகர்வால், ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் சிவில் எஞ்சினியரிங் பட்டதாரியான சோனியா ஆற்றல் மற்றும் பருவநிலை மாறுபாடுகள் துறை வல்லுனர். தன்னுடைய நிறுவனம் வாயிலாக புதிய எரிசக்தி கொள்கைகளை உருவாக்கியவர். இவரை அதிபர் பைடன் தனது பருவநிலை மாற்றங்கள் மற்றும் அதை மேம்படுத்தும் திட்டங்களுக்கான ஆலோசகராக நியமித்திருக்கிறார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் அது தொடர்பான செயல்பாடுகளில் பைடன் அரசு முன்னுரிமையும், தனிக்கவனமும் செலுத்த இருப்பதால் சோனியா அகர்வாலின் பங்களிப்பு இந்தப் பணியில் மிக முக்கியமானதாக எதிர்பார்க்கப்படுகிறது.

விதுர் ஷர்மா, கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான அரசின் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கப் போகும் இரண்டாவது இந்திய முகம் ஷர்மா. கோவிட்19 பரிசோதனை மற்றும் அதன் எதிர்வினைகள் தொடர்பான கொள்கைகளை வகுக்கும் ஆலோசகராக நியமிக்கப் பட்டிருக்கிறார். இவர் ஏற்கனவே முந்தைய ஒபாமா அரசில் ஒபாமாகேர் திட்டத்தில் பங்களித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தருண் சாப்ரா, முதல் தலைமுறை அமெரிக்க இந்தியரான தருண், தொழில்நுட்பம் மற்றும் தேசிய பாதுகாப்புத்துறையின் மூத்த இயக்குனராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் ஏற்கனவே பைடனுடன் இதே துறையில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.

சுமோனா குஹா, தெற்காசிய விவகாரங்களுக்கான மூத்த இயக்குனராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இருபது வருடங்களுக்கும் மேலாக தெற்காசிய விவகாரங்களில் கொள்கைகளை வகுக்கும் பணிகளை மேற்கொண்டவர் என்கிற வகையில் இந்த பதவிக்கான பொருத்தமான தேர்வாக சுமோனா குஹா கருதப்படுகிறார். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானுக்கான சிறப்பு பிரதிநிதி அலுவலகத்தில் துணை இயக்குநராகவும், துணை அதிபர் பைடனின் அலுவலகத்தில் தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான சிறப்பு ஆலோசகராகவும், அமெரிக்கா இந்தியா வர்த்தக கவுன்சிலிலும் பணியாற்றிய அனுபவம் பெற்றவர்.

ஷாந்தி கலத்தில், ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப் பட்டிருக்கிறார். தொடர்ச்சியாக மக்களாட்சி தொடர்பான செயல்பாடுகளில் தீவிரமாக இயங்கி வரும் ஷாந்தி இணை ஆசிரியராக எழுதிய “Open Networks, Closed Regimes: The Impact of the Internet on Authoritarian Rule (Carnegie Endowment for International Peace, 2003)” மிகுந்த கவனம் பெற்ற நூல்.

ரீமா ஷா, அதிபர் மற்றும் வெள்ளை மாளிகை தொடர்பான சட்டச்சிக்கல்கள் குறித்த ஆலோசனைகள் வழங்கும் குழுவின் இணை ஆலோசகராக ரீமா நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்தத் துறையில் நியமிக்கப்பட்டிருக்கும் இரண்டாவது இந்திய அமெரிக்கர் ரீமா என்பது குறிப்பிடத்தக்கது.

ரோகித் சோப்ரா, நுகர்வோர் நிதிபாதுகாப்பு குழுமத்தின் இயக்குனராக நியமிக்கப்பட்டிருக்கிறார். கடந்த காலத்தில் மாணவர்களுக்கான கடன் வழங்கும் நிறுனவங்களின் முறைகேடான நிதி நடைமுறைகளை வெளிச்சம் போட்டுக் காட்டியவர் என்பதால் இம்முறை கோவிட் நிவாரணத் திட்ட வடிவமைப்பில், மாணவர்களின் கடன்களுக்கு உரிய நிவாரணம் வழங்கும் பணியில் ரோகித்தின் பங்களிப்பு இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

நேஹா குப்தா, வெள்ளை மாளிகை தொடர்பான சட்ட விவகாரங்களில் ஆலோசனைகள் வழங்கும் துறையின் இணை ஆலோசகராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் சமீபத்தில் பைடன்-ஹாரிஸ் நியமனங்களின் குழுவில் இடம்பெற்றிருந்தவர். சட்ட வல்லுனர். இத்துறையில் நியமிக்கப்பட்டிருக்கும் முதல் இந்திய அமெரிக்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி பைடன்-ஹாரிஸ் அரசில் உயர்பதவிகளில் தேர்தெடுக்கப்பட்டிருக்கும்/ நியமிக்கப்பட்டிருக்கும் இந்திய வம்சாவளியினரின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. பிழைப்பிற்காக அமெரிக்கா வந்தோம், வளர்ந்தோம், வாழ்ந்தோம் என்கிற நிலையில் இருந்து இந்திய சமூகம் மாறி அடுத்த கட்டமாக இந்த நாட்டின் அரசியல், பொருளாதார உள் கட்டமைப்புகளில் தங்கள் பங்களிப்பினை வழங்க ஆரம்பித்திருப்பது பெருமைப்படத்தக்க ஒன்று.

தற்போது பதவி பெற்றிருப்பவர்கள் அனைவருமே அவரவர் துறை சார்ந்த வல்லுனர்கள். தொடர்ச்சியாக தங்கள் திறமைகளை நிரூபித்து அந்த திறமைகளின் அடிப்படையில் மற்ற எவரையும் விட தாங்கள் சிறந்தவர்கள் என்பதால் மட்டுமே இந்த நியமனங்களைப் பெற்றிருப்பவர்கள் என்பது மனதுக்கு நிறைவானதாகவும், எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை உறுதி செய்வதாகவும் இருக்கிறது.

இன, மொழி, நிற பேதமில்லாமல் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய பைடன் – ஹாரிஸ் கூட்டணியின் இந்த முயற்சி அருமையான துவக்கம். புதிய அமெரிக்காவை நோக்கிய பயணத்தின் முதற்படியாக இது இருக்கும். வரலாறு அவர்களை வாழ்த்தட்டும்.

நாமும் வாழ்த்துவோம்.

Sunday, January 17, 2021

"Sir"




இப்படியும் பொழுதுபோக்குப் படங்கள் எடுக்க முடியும் என்பதற்கு இப்படமே சாட்சி.

வீட்டில் வேலை செய்யும் பெண்ணை மரியாதையாக நடத்தும் ஆண். பெண்கள் இல்லாத வீட்டில் அச்சமில்லாமல் பணிவிடைகள் செய்யும் இளம்பெண். மேற்கொண்டு படித்து கல்லூரிக்குச் செல்ல வேண்டும் ; :பேஷன் டிசைனராக வேண்டும் என்ற கனவுடன் வாழும் இளம்பெண்ணுக்கு சிறு வயதிலேயே திருமணம் முடிந்து சில மாதங்களில் கணவனை இழந்த கைம்பெண்ணும் ஆகி விடுகிறாள். கிராமத்திலிருந்து நகரத்திற்கு வீட்டு வேலைக்குச் சென்று தன் தங்கையை படிக்க உதவி தன் கனவுகளை அவள் நனவாக்குவாள் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறாள். சில மாதங்கள் மட்டுமே வாழ்ந்திருந்தாலும் கணவனின் குடும்பத்திற்கும் மாதாமாதம் பணம் அனுப்புவதால் மட்டுமே விதவைப் பெண்ணை ஊரிலிருந்து வெளியே அனுப்பும் மனிதர்கள் இன்றளவும் இருப்பதாக காட்டியிருப்பது இன்னும் மூட நம்பிக்கைகள் மனிதர்களிடம் ஒட்டிக்கொண்டிருக்கிறது என்பது உறைத்தாலும் தினசரி வாழ்க்கையில் நாமும் பார்த்துக் கொண்டு இருக்கும் உண்மை தான் இது.

ஏழ்மையில் இருந்தாலும் மானத்துடன் வாழ நினைக்கும் தன்னம்பிக்கைப் பெண் தன்னுடைய கனவை நனவாக்க தையல் வகுப்பில் சேர்கிறாள். நகரத்தில் ஏழைகளுக்குப் பெரிய துணிக்கடைகளில் பார்வையாளர்களாக கூட அனுமதி இல்லை என்பதே முகத்தில் அறையும் உண்மை. அத்தனையையும் சகித்துக் கொண்டு சாதிக்கிறாளா என்பதே கதை.

அந்தக் குடியிருப்பில் பணிபுரியும் மிகவும் தன்மையான மனிதர்கள் நடுநடுவே ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பதாக காட்டியிருப்பதும் வேலை செய்யும் வீட்டின் உரிமையாளர் வேலைக்காரியிடம் ஒவ்வொரு முறையும் 'நன்றி' சொல்வதும், அவளுடைய கனவுகளை அடைய அவள் எடுக்கும் முயற்சிகளுக்கு ஆதரவாக இருப்பதும் ஒருவருக்கொருவர் தங்களையறியாமல் மனதில் அன்புடன் வளைய வருவதுமாய் அழகான காதல் கதை. திரைப்படங்களில் மட்டுமே சாத்தியமோ?

வேலைக்காரி, விதவைப்பெண் காதல் வயப்படுவது அதுவும் தான் வேலைபார்க்கும் இடத்தின் உரிமையாளர், தொழிலதிபர், பணக்காரர் என்கிற பொழுது அங்கே குறுக்கே நிற்பது அந்தஸ்து, மற்றவர்கள் தன்னை கேலிசெய்வார்கள் என்கிற பதட்டம், கிராமத்தில் கைம்பெண் வளையல் அணிவதையே தடை செய்பவர்கள் எங்ஙனம் இதனை ஒப்புக்கொள்வார்கள் என்று பலதரப்பட்ட கேள்விகள்.

வேலையை விட்டு நின்றாலே வேலைக்காரிக்குத் திருட்டுப்பட்டம் கட்டும் ஊரில் இரு வேறு அந்தஸ்தில் இருக்கும் மனிதர்களின் காதல் சாத்தியமா? இது தான் இந்த திரைப்படம் சொல்ல வருவது.

ஆர்ப்பாட்டமில்லாத ஹிந்தி படம். நடிகை நடிகையர்களின் தேர்வும் அபாரம். நகரமும், கிராமும் மேல்தட்டு, கீழ்த்தட்டு மக்களின் வாழ்க்கையும் என்று இரண்டும் ஒன்றுக்கொன்று தொட்டுத்தொடர்ந்து செல்கிறது.

இப்படிப்பட்ட படங்களைத் தான் "ஃபீல் குட் மூவி" என சொல்ல வேண்டும். தமிழில் இரட்டை அர்த்த வசனங்கள், ஆபாசக்காட்சிகள் இன்றி கதை என்று ஒன்று அறவே இல்லாததையெல்லாம் நல்ல படம் என்று பார்க்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்! 

ஹ்ம்ம்ம்...




Thursday, January 14, 2021

பொங்கலோ பொங்கல்

அரிசி சோறு சாப்பிடுவது என்பது பெருங்கனவாக இருந்தது ஒரு காலம். பணம் படைத்தவர்கள், வசதியானவர்களுக்கு மட்டுமே அந்த பாக்கியம் கிடைத்திருந்தது. அப்பொழுதெல்லாம் மக்களின் பசியை போக்கியது கம்பு, சோளம், வரகரிசி, குதிரைவாலி, கேழ்வரகு, தினை, சாமை வகை சிறுதானியங்கள் தான் என்று அம்மா அடிக்கடி சொல்வார். இன்று அரிசியின் பயன்பாடு எளிய மனிதர்களுக்கும் கிடைக்கும் வண்ணம் விவசாயத்தில் புரட்சியே நடந்திருக்கிறது என்று சொல்லலாம். அரிசியின் வரவில் சத்துள்ள சிறுதானியங்களின் மதிப்பு வெகு விரைவாக குறைந்து விட்டது. சிறுவயதில் கம்பங்கூழ், கேப்பைக்கூழ் சாப்பிட்டது நினைவில் இருக்கிறது. பெரியவர்கள் விரும்பிச் சாப்பிட, குழந்தைகள் அன்று வேண்டா வெறுப்பாக உண்டதை மீண்டும் காலம் நினைவுறுத்துகிறது.

பெருகி வரும் சர்க்கரை நோயாளிகள் அரிசி, கோதுமைக்கு மாற்றாக மீண்டும் சிறுதானியங்களின் மேல் கவனத்தைச் செலுத்தியுள்ளதால் வரலாறு திரும்புகிறது. சிறுதானியங்களின் பயன்பாடு நவீன உலகில் அதற்கான இடத்தை ஆக்கிரமித்துக் கொள்ள ஆரம்பித்திருக்கிறது.

வீட்டுக்கு அருகில் இருக்கும் கடையில் நான் கேட்ட சிறுதானிய வகை கிடைக்கவில்லை. அங்கு வேலை செய்பவர் உங்களுக்குத் தெரிந்தவர்கள் இந்தியாவில் இருந்து அனுப்ப முடியுமென்றால் எங்கள் கடையைத் தொடர்பு கொள்ளலாம் என்று அவருடைய விசிட்டிங் கார்டையும் தந்தார். என்ன ஒன்று, அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் லைசென்ஸ் இத்தியாதிகள் இருக்க வேண்டும். சிலரிடம் கேட்டதற்கு அப்படிப்பட்ட முறையான அனுமதி தங்களிடம் இல்லை என்று கூறி விட்டார்கள்.

இந்திய மற்றும் அமெரிக்க கடைகளில் சிறுதானியங்களின் வரவு அதிகரித்திருக்கிறது. மக்களும் அரசிக்கு மாற்றாக பயன்படுத்துகிறார்கள். நானும் முதல் முறையாக வரகரிசி (Kodo Millet) வாங்கி வெண்பொங்கல் செய்து பார்த்தேன். முதன்முதலாக இந்த வருடம் வரகு அரிசியில் செய்த பொங்கல் பரீட்சார்த்த முயற்சி வெற்றி பெற்றது😋 சுவையாக இருந்தது. இனி மெல்ல மெல்ல குழந்தைகளுக்கும் சிறுதானியங்களை அறிமுகப்படுத்த வேண்டும். 

வரகரிசி பொங்கல் செய்முறை

இன்றைய நன்னாளில் சூரிய பகவானுக்கும், உலகிற்கெல்லாம் பசியைப் போக்கும் விவசாயிகளுக்கும், கால்நடைகளுக்கும் நம் நன்றியை செலுத்துவோம். விவசாயிகள் படும் துன்பங்களை நாம் அறிவதில்லை. மக்களின் பசியைப் போக்குபவர்கள் இன்றும் வறிய நிலையில் இருப்பது வேதனை. அவர்கள் வாழ்வும் சிறக்க வேண்டிக் கொள்வோம்.

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.




Wednesday, January 13, 2021

கற்றதும் பெற்றதும்

கையில் தூக்கிப் பார்த்து என்னவாக இருக்கும்? தான் கேட்டது தானோ? ஆயிரம் கேள்விகள் மனதில்! நிவியும் சுப்பிரமணியும் பரபரவென காகித உறையைப் பிரிக்கும் சத்தம். உனக்கு என்ன? உனக்கு என்ன? இருவருக்குள்ளும் ஏக எதிர்பார்ப்புகள். முகத்திலும் பெருமகிழ்ச்சி. ஹாஹாஹா! ஐ காட் இட்! மாடிப்படிகளில் ஓடி வருகிறான். மாம்! லுக் அட் திஸ். மை நிண்டெண்டோ டிஎஸ். பளபளவென மின்னிக் கொண்டிருந்தது அவன் கண்களைப் போலவே! நான் விளையாட போறேன். அக்காவிடமும் காட்டி குதூகலித்துக் கொண்டிருந்தான். சிறிது நேரம் கழித்து பக்கத்து வீட்டில் நண்பர்களிடம் (அண்ணன் & தம்பி) காமித்து விட்டு வருகிறேன் என்று குஷியாக கிளம்பி விட்டான். அரைமணிநேரத்தில் திரும்பி வந்தவன் முகம் வாடி இருந்தது.

என்னடா? என்னாச்சு?

அவங்களுக்கு சாண்டா மேக் புக் வாங்கி கொடுத்திருக்காரும்மா!

ஐயோ! இது என்ன பட்டணத்தில் பூதம்!

எனக்கு சாண்டவ பிடிக்கல😳

நோவாஸ் ஃபேமிலி இஸ் ஆப்பிள் ஃபேமிலி!

நாமளும் தான். ஃப்ரிட்ஜ் நிறைய ஆப்பிள் இருக்கே?

முறைத்துக்கொண்டே , மாம் ஐ ஆம் சீரியஸ் 😞

நீங்க ரெண்டு பேர் வேலைக்குப் போறீங்க. அவங்க வீட்ல ஒருத்தர் தான் வேலைக்குப் போறாரு. நீங்க ஏன் எனக்குச் செலவு பண்ணக்கூடாது? யாருக்காக சேர்த்து வைக்கிறீங்க? திஸ் ஐஸ் நாட் ஃபேர் 😞

உனக்கெதுக்கு மேக் புக்? உங்க அக்காகிட்ட இருக்கா? அவளே இன்னும் கேட்கல? உனக்கு வேணும்ங்கிறப்ப கண்டிப்பா வாங்கிக்கொடுப்போம்.

சமாதானமாகவில்லை.

பணத்தை வச்சுக்கிட்டு என்ன பண்ண போறோம்? எனக்குப் பிடிச்சத இப்ப வாங்கி கொடுக்காம?
விடுவதாக அவனும் இல்லை.

பக்கத்து வீட்ல இருக்கிற உன் வயசு ஈத்தன் அவனை விட நான்கு வயது மூத்த அவங்க அண்ணன், அவங்க பக்கத்து வீட்ல இருக்கிற உன்னை விட ரெண்டு வயசு மூத்த பசங்க இவங்க யாருகிட்டேயும் மேக் புக் இல்லை. தெரியுமா? அவங்க அப்பா, அம்மாவும் வேலைக்குப் போறவங்க தான். உன்னைய மாதிரி இப்படி யாரும் அழ மாட்டாங்க. ஏன்னா, அப்பா அம்மாவுக்குத் தெரியும் எப்ப பிள்ளைங்களுக்கு எதை வாங்கி கொடுக்கணும்னு. இந்த வயசுல உனக்கு விளையாடுறதுக்கு இதுவே ஜாஸ்தி தான். உன் இந்தியன் ஃப்ரெண்ட்ஸ் எத்தனை பேர்கிட்ட இந்த கேம் செட் இருக்கு? உனக்கே தெரியும்.

கொஞ்சம் அமைதியானான்.

அவனை இவனைப் பார்த்து நம்மகிட்ட இதெல்லாம் இல்லையேன்னு வருத்தப்படக் கூடாது. நம்மகிட்ட என்ன இருக்கோ அத வச்சு சந்தோஷமா இருக்க கத்துக்கிடனும். உன்கிட்ட இருக்கிறது கூட இல்லாம எத்தனையோ பேர் உன்னோட வகுப்பிலேயே இருக்காங்க. உனக்கும் நல்லா தெரியும். காலையில எவ்வளவு சந்தோஷமா இருந்த? அக்கா எப்பவாவது இப்படி கம்ப்ளைண்ட் பண்ணி பார்த்திருக்கியா? என்ன கிஃப்ட் வாங்கி கொடுத்தாலும் சந்தோஷமா வாங்கிப்பா. அவளுக்கும் தெரியும். அப்பா, அம்மா நல்லதுக்குத்தான் செய்வாங்க. எப்ப என்ன வாங்கிக் கொடுக்கணும்னு அவங்களுக்குத் தெரியும்னு அவ புரிஞ்சிக்கிட்ட மாதிரி நீயும் புரிஞ்சிச்சுக்கணும். என்ன ஓகேவா?

ம்ம்ம்ம்...

வா. உனக்குப் பிடிச்ச குக்கீஸ் பண்ணி இருக்கேன். சாப்பிடு.

சிறிது நேரத்தில் பக்கத்து வீட்டுச் சிறுவர்கள் தங்கள் டிஎஸ்சுடன் வர, விளையாட்டு சுவாரஸ்யத்தில் மறந்தே போனான்.

இந்தா நீ அப்ப கேட்ட மேக் புக் இப்ப வாங்கி கொடுத்தாச்சு. சந்தோஷமா? கல்லூரிக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்தவனிடம் கூறிய போது புரியாமல் முழித்தான்.

பழைய கதையைச் சொன்ன பிறகு, அப்படியா சொன்னேன்? அப்ப நான் சின்ன பையன். அந்த வயசுல எனக்கு என்ன தெரிஞ்சிருக்கும் ? வெட்கப்பட்டான்.

இப்ப என்னடா நினைக்கிற? இன்னும் அவங்களை போல நாங்க இல்லையேன்னு தோணுதா?

சேசே! நீங்க பண்ணினது தான் சரி. நான் படிக்க கடன் வாங்க வேண்டிய தேவை இல்லை. அவன் பாவம் கடன் வாங்குறான். தேங்க் யூ மாம்.

நிவிக்கும் தேங்க்ஸ் சொல்லுடா.

வாழ்க்கையில் சில ஏமாற்றங்கள் அவசியம் தான். பணமும் வசதியும் இருக்கிறது என்பதற்காக நம் குழந்தைகள் கேட்டதையைல்லாம் வாங்கிக் கொடுத்து அவர்களைக் கெடுக்காமல் பொறுப்பாக வளர்க்க வேண்டிய கடமையும் பெற்றோர்களுக்கு உண்டு. அப்படித்தானே என்னை வளர்த்தார்கள்😆


Sunday, January 10, 2021

நவ திருப்பதிகள்

பெருமாள் தலங்களில் மார்கழி மாதத்தில் பகல்பத்து ராப்பத்து உற்சவம் கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும். நவ திருப்பகளின்  சிறப்பே பெருமாள், தாயார்களின்  அழகிய திருநாமங்களும், அலங்காரங்களும், பூஜைகளும், சுத்தமான கோவில்களும் தான். இத்தலங்களுக்குச் சென்று வருவதால் புதிய கோவில்களின் அறிமுகம் மட்டுமன்றி நகர எல்லைக்கு அப்பாற்ப்பட்ட அழகிய கிராமங்களையும் காண்பதும் சுகம். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு பூஜைகளும் பெருமாள் அலங்காரங்களும் என்று திவ்யமாக இருக்கும் இப்பொழுது. ஒன்பது பெருமாள்களும் கொள்ளை அழகு!

சொல்வனம் இதழில் வெளிவந்த என்னுடைய "நவ திருப்பதிகள்" பற்றின கட்டுரை.

நவ திருப்பதிகள்


மனிதர்களின் வாழ்க்கையையும் சமூக வாழ்வையும் ஒழுங்குமுறைக்கு உட்படுத்துவதே ஆன்மீகம். ஆன்மீக வரலாற்றில் வைணவ சம்பிரதாயமும், பன்னிரு ஆழ்வார்களும், அவர்களது பாசுரங்களும் சிறப்பிடம் பெற்றுள்ளன. இந்து சமயத்தின் உட்பிரிவுகளுள் ஒன்றான வைணவம், சரணாகதி தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு பெருமாளை முழுமுதற் கடவுளாக வழிபடும் சமயமாகும். இறைவனை வணங்குவதே அவரை அடையும் எளிதான வழி ஆதலால் கோவில்களில் மக்கள் அவரை ஆராதனை செய்து அவர் பாதம் அடைய அருள் வேண்டிக் கூடுகிறார்கள். பாரதமெங்கும் பெருமாள் தலங்கள் பல இருந்தாலும் பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் இடம்பெற்றுள்ள திருத்தலங்கள் திவ்ய தேசம் என்றும் இத்திவ்ய தேசங்களைப் பற்றின பாடல்கள் மங்களாசாசனம் என்றும் அழைக்கப்படுகிறன. புகழ்பெற்ற 108 திவ்ய தேசங்களில் 105 தலங்கள் இந்தியாவிலும், ஒன்று நேபாளிலும் உள்ளன. இவற்றைத் தவிர மற்ற இரண்டு தலங்கள் வானுலகிலும் உள்ளன என்பது ஐதீகம். இத்திருத்தலங்களில் பகவான் நின்ற, அமர்ந்த, சயன திருக்கோலங்களில் அருள்பாலிக்கிறார்.

தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணிக் கரையோரம் அமைந்துள்ள ஒன்பது பெருமாள் திருத்தலங்கள் நவ திருப்பதி என்று அழைக்கப்படுகிறன. இத்தலங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நவக்கிரகத்துக்கு உரியவையாக, பெருமாளே நவக்கிரகங்களாக வழிபடப்படுகிறார். ஒவ்வொரு தலத்துக்கும் புராண கதைகளும், தல விருட்சமும், தல தீர்த்தமும், தல பெருமைகளும் இருக்கிறது. நவ திருப்பதி கோவில்கள் அனைத்தும் நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளன.

ஸ்ரீவைகுண்டம் – சூரிய ஸ்தலம்

வரகுணமங்கை (நத்தம்) – சந்திரன் ஸ்தலம்

திருக்கோளூர் – செவ்வாய் ஸ்தலம்

திருப்புளியங்குடி – புதன் ஸ்தலம்

ஆழ்வார்திருநகரி – குரு ஸ்தலம்

தென்திருப்பேரை – சுக்ரன் ஸ்தலம்

பெருங்குளம் – சனி ஸ்தலம்

இரட்டைத் திருப்பதி (தேவர்பிரான்) – ராகு ஸ்தலம்

இரட்டைத் திருப்பதி (அரவிந்த லோசனர்) – கேது ஸ்தலம்

விடுமுறையில் ஊருக்குச் சென்றிருந்த பொழுது குடும்பத்துடன் இத்தலங்களுக்கு சென்று வரும் நல்ல வாய்ப்பும் கிடைத்தது. அதிகாலையில் மதுரையிலிருந்து புறப்பட்டு காலை ஒன்பது மணிக்கு ஸ்ரீவைகுண்டம் வந்து சேர்ந்தோம். சேறும் சகதியுமாக, குப்பைகளுடன் தாமிரபரணி ஆற்றைக் காண வருத்தமாக இருந்தது. பாலத்தில் இருந்தே கோவில் கோபுரம் தெரிய, பெருமாளைச் சேவிக்க மனமும் உற்சாகம் கொண்டது.

ஸ்ரீவைகுண்டநாதன் பெருமாள் கோவில் (ஸ்ரீவைகுண்டம்)

திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் தாமிரபரணி ஆற்றின் வடகரையில் நவதிருப்பதிகளில் முதலாவதும், நவக்கிரக ஸ்தலங்களில் சூரிய ஸ்தலமாகவும், நம்மாழ்வாரும் மணவாள மாமுனிகளும் மங்களாசாசனம் செய்த கள்ளபிரான் திருக்கோவில் அமைந்துள்ளது. கையில் தண்டத்துடனும் ஆதிசேஷனைக் குடையாகவும் நின்ற கோலத்தில் வைகுண்டநாதன் இங்கு காட்சியளிக்கிறார். பிரகாரத்தில் வைகுண்டவல்லித் தாயாருக்கும் சோரநாத நாயகிக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன.

உற்சவர் : கள்ளபிரான்

தாயார்: ஸ்ரீசோரநாத நாயகி

ஒன்பது நிலைகள் கொண்ட ராஜ கோபுரம் வண்ணமயமாக அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் வரவேற்க, பிரகாரங்களில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட சிலைகள் கண்களைக் கவரும் வகையில் அமைந்துள்ளது. கருடர், மணவாள மாமுனிகள், யோக நரசிம்மர் சன்னதிகளும் உண்டு. நீண்ட பிரகாரங்களும், யாளி, யானை, சிங்கமுக சிற்ப வேலைப்பாடுகளைக் கொண்ட கற்தூண்களுடன் மண்டபங்களும், சுவற்றில் ஆதிசேஷனைக் குடையாகக் கொண்டு தேவியருடன் காட்சி தரும் பெருமாள், மூவுலகமும் தன்னுள் அடக்கம் என்பதை உணர்த்தும் ஓங்கி உலகளந்த பெருமாள் சுவர் சிற்பங்களும் இக்கோவிலை மேலும் மெருகூட்டுகிறன. திருவேங்கடமுடையான் மண்டபத்தில் சுக்ரீவனை அன்பாக அரவணைத்து நிற்கும் ராமர், அருகில் சீதா தேவி, அனுமன், அங்கதனுடன் லட்சுமணர், அகோர வீரபத்திரர் சிலைகள் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளன.


தாருடுத்துத் தூசு தலைக்கணியும் பேதையில
னேருடுத்த சிந்தை நிலையறி அயன் – போருடுத்த
பாவைகுந்தம் பண்டொசித்தான் பச்சைத்துழாய் நாடுஞ்
சீவைகுந்தம் பாடும் தெளிந்து
– ஸ்ரீவைகுண்டம் அந்தாதி

அதிகக் கூட்டம் இல்லாத காலை நேரம். அமைதியான, நன்றாகப் பராமரிக்கப்பட்டிருந்த கோவில். மதுரையில் பெரிய கோவில்களுடன் ஒப்பிடுகையில் ஸ்ரீவைகுண்டநாதன் பெருமாள் கோவில் சிறியதுதான். கோவிலினுள்ளே இருந்த அழகிய சிற்ப வேலைப்பாடுகள் மனதைக் கொள்ளை கொண்டன. விமான கோபுரங்கள் பளிச்சென்று வண்ணக் கலவையுடன் வித்தியாசமாகத் தெரிந்தன. கோவில் கிணற்றில் நீர் இருந்தது மிகப்பெரும் ஆறுதல். பக்தர்களுக்காக குடிநீர்க் குழாய்கள் ஆங்காங்கே அமைத்திருந்தார்கள். கோடையிலும், கூட்டமான நாள்களிலும் உபயோகமாக இருக்கும். கோவிலைச் சுற்றிக் காண்பித்து சிற்பங்களின் அருமை பெருமைகளை எடுத்துரைக்க யாரவது உதவி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். அறிந்திராத தகவல்களைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பைத் தவற விட்டேனோ என்று இன்று நினைக்கத் தோன்றுகிறது. ஸ்ரீவைகுண்டநாதனின் பெருமைகளை உரைத்துக் கொண்டே தீபாராதனை செய்தது மிகச் சிறப்பு. மனம் நிறைவாக அடுத்த தலத்திற்குப் பயணமானோம்.

திருவரகுணமங்கை திருக்கோவில் (வரகுணமங்கை)

ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள நத்தம் கிராமத்தில் நவ திருப்பதிகளில் இரண்டாவதும் சந்திர ஸ்தலமுமான விஜயாசன பெருமாள் திருக்கோயில் உள்ளது. ஐந்து நிலைகளைக் கொண்ட கோபுரம். பனை மரங்கள் சூழக், கிராமத்து இயற்கை எழிலுடன் அழகான, அமைதியான, பழமையான சிறிய கோவில். ஸ்ரீவைகுண்டம் திவ்யதேசத்தில் ஆதிசேஷன் நின்ற பெருமானுக்கு குடைபிடித்தார். இங்கே அமர்ந்த பெருமானுக்கு குடையாக இருக்கிறார். தாயார்களுக்குத் தனிச் சன்னிதி இல்லை.

உற்சவர்: எம் இடர் கடிவான்

தாயார் : வரகுணவல்லி, வரகுணமங்கை



புளிங்குடிக் கிடந்து வரகுண மங்கை
இருந்து வைகுந்தத்துள் நின்று
தெளிந்த என் சிந்தை அகங்கழியாதே
என்னை ஆள்வாய் எனக்கருளி
நளிர்ந்த சீருலகம் மூன்றுடன் வியப்ப
நாங்கள் கூத்தாடி நின்றார்ப்ப
பளிங்கு நீர் முகிலின் பவளம்போல்
கனிவாய் சிவப்ப நீ காணவாராயே
– நம்மாழ்வார் திருவாய்மொழி 9-2-4

குக்கிராமத்தில் நந்தவனம் சூழ கோசாலையுடன் அமைத்திருந்த கோவிலில் அந்தக் காலை வேளையில் பெருமாளைத் தரிசிக்க நாங்கள் மட்டுமே இருந்தோம். சிறிய பிரகாரங்கள் சுத்தமாக இருந்தன. ஓங்கி உயர்ந்த பனை மரங்களின் நடுவிலிருந்த குளம் வற்றியிருந்தது சொல்லாமல் சொல்லிற்று பொய்த்திருந்த மழைக்காலத்தை!. அங்கிருந்து புளியங்குடி நோக்கிப் பயணமானோம்.

திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோவில்

மற்றொரு நவ திருப்பதியான தென்திருப்பேரையில் இருந்து ஆழ்வார்த்திருநகரி செல்லும் சாலையில் மூன்று கிலோமீட்டர் தொலைவில் நவ திருப்பதிகளில் மூன்றாவதும் செவ்வாய் தலமாகவும் திருக்கோளூர் கோவில் அமைந்துள்ளது. மூலவர் வைத்தமாநிதி பெருமாள் புஜங்க சயன கோலத்தில் இங்கு காட்சியளிக்கிறார். தாயார் கோளூர்வல்லி நாச்சியார், குமுதவல்லி நாச்சியார். அழகிய சுற்றுப் பிரகாரங்களும், சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய கற்தூண்களும் நிறைந்த மண்டபங்களும் இக்கோவிலின் சிறப்பு. மிகவும் நன்றாக பராமரிக்கப்பட்ட மற்றுமொரு நவ திருப்பதி கோவில்.

உற்சவர்: நிஷோப வித்தன்

தாயார்: குமுதவல்லி நாயகி, கோளூர் வல்லி நாயகி

உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும்வெற் றிலையுமெல்லாம்
கண்ணன், எம்பெருமான் னென்றென் றேகண்கள் நீர்மல்கி
மண்ணினுள் அவன்சீர் வளம்மிக் கவனூர் வினவி
திண்ண மென்னிள மான்புகு மூர்திருக் கோளூரே.
– நம்மாழ்வார், திருவாய்மொழி 6-7-1




கோவிலினுள் நுழையும் பொழுதே நாதஸ்வர இன்னிசை ஒலிக்க, மண்ட பங்களைக் கடந்து புஜங்க சயன கோலத்தில் வைத்தமாநிதி பெருமாளின் தீபாராதனைக் காட்சி மனதிற்கு மிகவும் நிறைவாக இருந்தது. அழகிய சிற்பங்களுடன் சிறு மணடபங்கள். கோவிலைச் சுற்றி வருகையில் கணீர் குரலில் பக்தர் ஒருவர் திவ்ய பிரபந்தம் பாடுவதைக் கேட்க இனிமையாக இருந்தது. வறண்டிருந்த வாய்க்கால், முட்கள் சூழ கருவேல மரங்கள் உறுத்தலாக இருந்தாலும் கோவிலுக்குள் அமைதி குடி கொண்டிருக்கிறது.

காய்சினவேந்தப் பெருமாள் திருக்கோயில் (திருப்புளியங்குடி)

வரகுணமங்கையிலிருந்து ஒரு மைல் தொலைவில் நவ திருப்பதிகளில் நான்காவதும் புதன் தலமுமான இக்கோவில் அமைந்துள்ளது. மூலவர் பூமிபாலகர் திருமால் ஆதிசேஷன் மீது பள்ளிகொண்ட நிலையில் காட்சி தருகிறார். சயனப் பெருமாளின் திருப்பாத தரிசனத்தை மூலவர் சன்னதியைச் சுற்றி வரும்போது உள்ள சிறிய ஜன்னல் வழியாகத் தரிசிக்கலாம். லக்ஷ்மி தேவியும் பூமாதேவியும் பெரிய திருவுருவங்களாக பெருமாளின் திருப்பாதத்தின் அருகில் அமர்ந்த கோலத்தில் உள்ளனர். இத்தலத்தில் பெருமாள் திருவயிற்றில் இருந்து தாமரைக் கொடி தனியாகக் கிளம்பிச் சென்று சுவற்றில் உள்ள பிரம்மாவின் தாமரை மலருடன் சேர்ந்து கொள்கிறது. கோவிலினுள்ளே கோமாதாவிற்குப் பக்தர்கள் கீரை வழங்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

உற்சவர்: எம் இடர் களைவான்

தாயார் : மலர் மகள் நாச்சியார், நிலா மகள் நாச்சியார், புளிங்குடி நாச்சியார்


காய்சினப் பறவையூர்ந்து பொன்மலையின் மீமிசைக் கார்முகில்போல
மாசினமாலி மாலிமானென்று அங்கு அவர்படக் கனன்று முன்னின்ற
காய்சினவேந்தே! கதிர்முடியானே! கலிவயல் திருப்புளிங்குடியாய்
காய்சின ஆழி சங்கு வாள் வில் தண்டேந்தி எம்மிடர் கடிவானே
-நம்மாழ்வார் திருவாய்மொழி 9-2-6

மிகப்பெரும் ஆலமரத்தின் கீழ் அமைந்திருந்த குளம் நீரின்றி வறண்டு கிடந்ததைக் காண வருத்தமாக இருந்தது. கோவிலைச் சுற்றி பெருங்கட்டடங்கள் இல்லாதது சற்று ஆறுதலாக இருந்தாலும் வறட்சியாக இருந்த நிலமும் சுள்ளென்று அடித்த வெயிலுடன் சேர்ந்து மனதைச் சுட்டது. இக்கோவிலில் சயன கோலத்தில் மூலவரும் தாயாரும் பேருருவங்களாகக் காட்சி தருவது அழகு. அழகிய சிற்பங்களுடனும் சிலைகளுடனும் மண்டபங்கள். பக்தர்கள் கோமாதாக்களுக்கு கீரைக்கட்டு வாங்கிக் கொடுக்கும் வகையில் கோவிலினுள்ளே சுற்றுப் பிரகாரத்தில் மாடுகளையும் கட்டி வைத்திருந்தார்கள். நன்கு பராமரிக்கப்பட்ட மற்றுமொரு கோவில். மனிதர்கள் நடமாட்டம் குறைவாக இருப்பதாலோ என்னவோ அமைதியுடன் இருந்தது. திவ்ய தரிசனம் செய்த நிறைவுடன் இரட்டை திருப்பதி நோக்கிப் பயணித்தோம்.

ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோயில் (ஆழ்வார்த் திருநகரி )

குரு ஸ்தலமும், நவ திருப்பதிகளில் ஐந்தாவதும், நம்மாழ்வார் அவதரித்ததுமாகிய இத்திருத்தலம் தென்திருப்பேரையில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆழ்வார் திருநகரியில் அமைந்துள்ளது. மூலவர் ஆதிநாதன் நின்ற திருக்கோலத்தில் பிராட்டியார்களுடன் காட்சியளிக்கிறார். தாயார் ஆதிநாதவல்லி, குருகூர்வல்லிக்குத் தனித்தனி சன்னிதிகள் உண்டு. ஆதிசேஷனான லட்சுமணனே இங்கே புளியமரமாக எழுந்தருளி இருக்கின்ற காரணத்தினாலும் நம்மாழ்வார் பிறந்து வளர்ந்து குடிகொண்ட திருத்தலம் என்பதாலும் இந்தத் தலத்துக்கு சேஷ ஷேத்திரம் என்ற பெயர் ஏற்பட்டது. குருகூர் என்ற இந்த திவ்யதேசம் நம்மாழ்வாரின் அவதார மகிமையினால் ஆழ்வார் திருநகரி ஆகிவிட்டது. திருவரங்கத்தை பூலோக வைகுண்டம் என்பார்கள். இந்த ஆழ்வார் திருநகரியோ பரமபதத்தின் எல்லை நிலம் என்று சொல்லப்படுகிறது.

கோயிலின் உட்பிரகாரத்தில் ஸ்ரீ நம்மாழ்வாருக்குத் தனி கோயில் உள்ளது. அதனை அடுத்து நாதமுனி சன்னதி, பன்னிரெண்டு ஆழ்வார் சன்னதி, நரசிம்மர் சன்னதி, திருவேங்கடமுடையான் சன்னதிகள் அமைந்துள்ளன. ஆதிநாதர் சன்னதியின் வெளிப்பிரகாரத்தில் கண்ணாடி மண்டபம், கம்பர் அறை அமைந்துள்ளன. கோயில் மதிலுக்கு வெளியே ஸ்ரீபட்சிராஜர் சன்னதியும், ஸ்ரீ கிருஷ்ணர் சன்னதியும், அனுமன் சன்னதியும் உள்ளது.

இக்கோவிலில் உள்ள கல் நாதஸ்வரம் மற்றும் உறங்காப் புளியமரம் மிகவும் விசேஷமானவை. நீண்ட பிராகாரங்கள், அழகிய சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட பெரிய கோவில்.

உற்சவர்: பொலிந்து நின்ற பிரான்

தாயார்: ஆதிநாத நாயகி, திருக்குருகூர் நாயகி

வைகாசி மாதத்தில் நடைபெறும் கருடசேவைத் திருவிழாவிற்கு நவதிருப்பதிகளிலும் உள்ள ஒன்பது உற்சவப் பெருமாளும் கருட வாகனத்தில் இங்கு எழுந்தருள, நம்மாழ்வாரின் உற்சவர் திருவுருவச் சிலை அன்ன வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டு ஒவ்வொரு நவதிருப்பதி பெருமாளைக் குறித்து அவர் பாடிய பாடல்கள் பாடப்படும் பெருந்திருவிழாவாக இப்பகுதி மக்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இத்திருவிழாவினைக் காண நாடு முழுவதிலுமிருந்து பக்தர்கள் இங்கு வந்து பெருமாளின் திருவருளைப் பெறுகின்றனர்.

ஓடி யோடிப் பல்பிறப்பும் பிறந்துமற் றோர்தெய்வம்
பாடி யாடிப் பணிந்துபல்படிகால் வழியே றிக்கண்டீர்
கூடி வானவ ரேத்தனின்ற திருக்குரு கூரதனுள்
ஆடு புட்கொடி யாதி மூர்த்திக் கடிமை புகுவதுவே.
– நம்மாழ்வார், திருவாய்மொழி 4-10-7


கோவில் நுழைவாயிலில் திருத்தேர் செப்பணி நடந்து கொண்டிருந்தது. நவ திருப்பதிகளுள் சற்றே பெரிய கோவில். மக்கள் நடமாட்டமும் அதிகம். நம்மாழவார் அவதரித்த தலப் பெருமையும் வைகாசி மாத கருடசேவைத் திருவிழாவும் நடைபெறுவதால் பிரபலமான கோவிலாகவும் இருக்கிறது. உயரமான சுற்றுச் சுவர்களில் கிளிகளும் குடில் கொண்டுள்ளது அழகு.

தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர் திருக்கோயில்

நவ திருப்பதிகளில் ஆறாவதும் சுக்கிரன் தலமாகவும் விளங்கும் இத்திருத்தலம் மற்றொரு நவ திருப்பதியான திருக்கோளூரில் இருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. மணவாள மாமுனிகளும் இத்தலத்தைப் பாடியுள்ளார். மூலவர் மகரநெடுங்குழைக்காதர் அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார். தாயார் குழைக்காதுவல்லி, திருப்பேரை நாச்சியாருக்குத் தனித்தனி சன்னதிகள் உண்டு.

உற்சவர்: நிகரில் முகில் வண்ணன்

நகரமும் நாடும் பிறவும் தேர்வேன்
நாணெனக் கில்லையென் தோழி மீர்காள்!
சிகரம் அணிநெடு மாடம் நீடு
தென்திருப் பேரையில் வீற்றி ருந்த
மகர நெடுங்குழைக் காதன் மாயன்
நூற்றுவ ரையன்று மங்க நூற்ற
நிகரில் முகில்வண்ணன் நேமி யானென்
னெஞ்சம் கவர்ந்தெனை யூழி யானே?
– நம்மாழ்வார் திருவாய்மொழி 7-3-10


கோவில் தேர் கம்பீரமாக நிற்கும் தெரு வழியே கோவிலுக்குச் செல்லும் வீதியில் அக்ராஹாரத்து வீடுகள் பழமையைச் சுமந்தபடி நிற்பது மனதை வசீகரிக்க, சில பல படங்களை க்ளிக் செய்தபடி கோவிலுக்குள் சென்றோம். சிறு நகரம். வெளியூர்க்காரர்கள் என்று தெரிந்தவுடன் அங்கிருந்த பக்தர் ஒருவர் உள்மண்டப முகப்பில் தேர் வடிவில் அமைந்திருந்த புதிர் ஒன்றை வாசித்துக் காண்பித்து பொருளும் சொல்லிவிட்டுப் பாசுரங்கள் பாடியபடி சென்றார். புதிதாய் ஒன்றைக் கற்றுக் கொண்டு நாங்களும் பத்து நாள் திருவிழாவிற்கான வாகனங்களைப் பார்த்துக் கொண்டே அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கும் மகரநெடுங்குழைக்காதரை வணங்கி ஆழ்வார்த் திருநகரி சென்றடைந்தோம்.

பெருங்குளம் பெருமாள் கோவில் (திருக்குளந்தை)

நவ திருப்பதிகளில் ஏழாவதும் சனி பகவானுக்குரிய தலமாகவும் அறியப்படும் திருக்குளந்தை வேங்கடவானன் திருக்கோயில் திருப்புளியங்குடியில் இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் பெருங்குளம் ஏரிக்கரையில் அமைந்துள்ளது. இத்திருத்தலத்தில் மூலவர் ஸ்ரீநிவாசன் நின்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். சிற்பவேலைப்பாடுகளுடன் அழகிய கற்தூண்களைக் கொண்ட மண்டபங்கள் மனத்தைக் கவரும் வகையில் இருக்கிறது.

உற்சவர்: மாயக்கூத்தன்

தாயார்: அலமேலுமங்கைத் தாயார், குளந்தைவல்லித்தாயார்

கூடச்சென் றேனினி என்கொ டுக்கேன்? கோல்வளை நெஞ்சத் தொடக்க மெல்லாம் பாடற் றொழிய இழந்து வைகல் பல்வளை யார்முன் பரிச ழிந்தேன் மாடக் கொடிமதிள் தென்கு ளந்தை வண்குட பால்நின்ற மாயக் கூத்தன் ஆடல் பறவை உயர்த்த வெல்போர் ஆழி வலவி னை யாதரித்தே. -நம்மாழ்வார் திருவாய்மொழி 8-2-4


மண்டபங்கள், சுற்றுப் பிரகாரங்களுடன் அழகாகப் பராமரிக்கப்பட்ட கோவிலினுள்ளே அமைதியும் குடி கொண்டிருக்கிறது. வேப்ப மரங்களும், பனை மரங்களும் சூழ்ந்த தடாகம் வற்றியிருக்க நீரிருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று நினைத்துக் கொண்டேன். பூனைகள் பல நடமாடிக் கொண்டிருந்தன. மனிதர்களைக் கண்டு அஞ்சியதாகத் தெரியவில்லை. கோவிலினுள்ளே துளசி மாலைகள் விற்றுக் கொண்டிருந்தாள் ஒரு பெண்மணி. எண்ணெய் விளக்கொளியில் கருவறைப் பெருமாள் அழகாக ஜொலித்துக் கொண்டிருந்தார். வேங்கடவனின் திவ்ய தரிசனத்துடன் மகரநெடுங்குழைக்காதன் கோவிலுக்குச் செல்ல தென்திருப்பேரை நோக்கிப் பயணித்தோம்.

திருத்தொலைவில்லிமங்கலம் தேவர்பிரான் திருக்கோவில் (இரட்டைத் திருப்பதி )

நம்மாழ்வாரால் பாடல் பெற்ற ராகு அம்சம் கொண்ட இத்திருத்தலம் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ளது. இரட்டைத் திருப்பதியில் தெற்கு திருக்கோயில். மூலவர் ஸ்ரீநிவாஸன் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். தாயார்களுக்குச் தனிச் சன்னதி இல்லை. தென்னை மரங்களுடன் அமைதியான சூழல் அமையப் பெற்ற சிறிய கோவில்.

உற்சவர்: தேவர்பிரான்

தாயார்: அலமேலுமங்கை தாயார், பத்மாவதி தாயார்

கரைகொள் பைம்பொழில் தண்ப ணைத்தொலை
வில்லி மங்கலம் கொண்டுபுக்கு
உரைகொ ளின்மொழி யாளை நீருமக்
காசை யின்றி அகற்றினீர்
திரைகொள் பௌவத்து சேர்ந்த தும்திசை
ஞாலம் தாவி யளந்ததும்
நிரைகள் மேய்த்தது மேபி தற்றி
நெடுங்கண் ணீர்மல்க நிற்குமே.
– நம்மாழ்வார் திருவாய்மொழி 6-5-3


நவ திருப்பதிகளிலேயே மிகவும் சிறிய கோவிலாக எனக்குத் தோன்றியது இக்கோவில்தான். பெருமாளின் சங்கு சக்கரம் திருநாமம் தாங்கிய கோவில் முகப்பு. ஒரு மணிக்குள் நடையைச் சாத்திவிடுவதால் அவசர அவசரமாகக் கோவிலுக்குள் செல்லும் பக்தர்களைக் காண முடிந்தது. குப்பைகள் இல்லாத இடங்கள் மனதிற்குத் தரும் அமைதியையும் உணர்ந்து கொண்டே, பராமரிக்கப்படாத தார் சாலைகள், கருவேல மரங்கள் சூழ்ந்த வறண்ட வாய்க்கால் வழியே திருக்குளந்தை சென்றடைந்தோம்.

திருத்தொலைவில்லிமங்கலம் அரவிந்த லோசனர் திருக்கோவில் (இரட்டைத் திருப்பதி)

கேது ஸ்தலமான இத்திருத்தலம் கால்வாய்க் கரையோரம் பெருங்குளத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மூலவர் அரவிந்த லோசனன் வீற்றிருக்கும் திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். இக்கோவில்கள் மதுரை டிவிஎஸ் நிறுவத்தினரால் பராமரிக்கப்படுவதாக பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உற்சவர்: செந்தாமரைக் கண்ணன்

தாயார்: கருந்தடங்கண்ணி


கோவிலினுள்ளே புற்களை மேய்ந்து கொண்டிருந்த ஆடுகள், சுற்றுப் பிரகாரத்தில் தென்னை மரங்கள் பெருங்கோபுரங்கள் இல்லாத மிகச்சிறிய கோவில் இது. இங்கு ஓரளவு மக்கள் கூட்டம் இருந்தது. செல்லும் வழியில் வற்றிப்போயிருந்த கால்வாய் , வறண்ட மணல், சுடும் வெயில் இருந்தாலும் கோவிலுக்கு வந்திருந்தவர்கள் முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சி. அதற்கு அருகிலேயே தேவர்பிரான் கோவிலும்.

நவ திருப்பதி தலங்கள் அனைத்தும் அழகாகப் பராமரிக்கப்பட்டு சுத்தமாக தெய்வீகமாக இருக்கிறன. புறநகர்ப்பகுதிகளில் அமைந்துள்ளதால் நெரிசல் இல்லாத தெய்வ தரிசனமும் இயற்கைச் சூழலும் மனதிற்கு அமைதியையும் நிம்மதியையும் தருகின்றன. கோவில் பட்டர்கள் தீபாராதனையுடன் தலப் பெருமைகளையும் எடுத்துரைப்பது சிறப்பு. அக்ரஹார வீடுகள் இன்றும் பழமையைப் பறைச்சாற்றிக் கொண்டிருப்பது அழகு. ஒன்பது திருத்தலங்களில் எழுந்தருளியுள்ள பெருமாள், தாயாரின் நாமங்கள் கேட்பதற்கும் இனிமையாக, பூஜைகளும், அலங்காரங்களும் மனதைக் கொள்ளை கொள்ளும் என்பதில் ஐயமில்லை. ஒரே நாளில் நவ திருப்பதி கோவில்களைத் தரிசனம் செய்ய முடிகிறது. இக்கோவில்களில் பக்தர்களுக்கு நெருக்கடியோ, பணத்தைப் பறிப்பதோ இல்லாதது ஆசுவாசமாக இருந்தது. பழமையைச் சுமந்து கொண்டு இருப்பதாலோ என்னவோ மனதிற்கு மிகவும் நெருக்கமாக உணர முடிந்தது. கோபுரங்களின் பளீர் வண்ணங்கள்தான் ஏன் என்ற கேள்வியை எழுப்பியது. பக்தர்களுக்கு உதவும் வகையில் அனைத்துத் தலங்களிலும் நவ திருப்பதி கோவில்களுக்குச் செல்லும் வரைபடமும், கோவில் நடைத் திறப்பு நேரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. மதுரையிலிருந்து நாங்கள் வண்டியில் சென்றதால் கோவில்களுக்குச் செல்லும் பேருந்துகளைப் பற்றிய தகவல்கள் தெரியவில்லை. அதிகாலை முதல் மாலை நேரத்திற்குள் நவ தலங்களுக்கும் சென்று வர முடியும். நிதானமாகச் சென்று வர, இரண்டு நாள்கள் போதும். அருகில் திருச்செந்தூர் முருகனையும் தரிசித்து விட்டு வரலாம்.

இம்மாதத்தில் பாசுரங்கள் ஒலிக்க, இத்திருத்தலங்களில் விஷேச பூஜைகள் விமரிசையாக நடப்பதையும் திருமாலின் அழகையும் காணக் கண்கோடி வேண்டும். வைகாசி மாத திருவிழாவினைப் பற்றி உள்ளூர்க்காரர் ஒருவர் மிகப் பெருமையுடன் சொல்லும் பொழுது கொடுத்து வைத்தவர்கள் என்று நினைத்துக் கொண்டேன்.

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா உன்
சேவடி செவ்வித்திருக்காப்பு…

இவ்வுலகில் அன்பும் அறமும் தழைத்தோங்க அவனின் அழகிய திருநாமங்களை உரக்கச் சொல்லி அவன் பாதம் சரணடைவோம்.

படங்களுக்கு இங்கே சொடுக்கவும்: 

ஸ்ரீவைகுண்டநாதன் பெருமாள் கோவில்

திருவரகுணமங்கை திருக்கோவில்

காய்சினவேந்தப் பெருமாள் திருக்கோயில்

பெருங்குளம் பெருமாள் கோவில்

அரவிந்தலோசனர் திருக்கோவில்

தேவர்பிரான் திருக்கோவில்

ஸ்ரீவைத்தமாநிதி பெருமாள் கோவில்

மகரநெடுங்குழைக்காதன் கோவில் (தென்திருப்பேரை)

ஆழ்வார் திருநகரி பெருமாள் கோவில்




Saturday, January 9, 2021

"அம்பை" சொல்வனம் சிறப்பிதழ்



"அம்மா ஒரு கொலை செய்தாள்" என்ற சிறுகதை வாயிலாக தான் "அம்பை" என்ற எழுத்தாளரைப் பற்றி சில வருடங்களுக்கு முன்பு அறிந்து கொண்டேன். அம்மா என்றொரு பிம்பம் பலருக்கும் அந்த சிறுமியைப் போல வியப்பாக, அழகாக, நம்பிக்கையுள்ளதாக, ஆதரவாக, அன்பாக தனக்கே தனக்கானதாக இருக்கும். ஏதோ ஒரு நொடியில் அந்த பிம்பங்களை அம்மாக்களே நொறுக்கி விடும் சந்தர்ப்பங்களும் அமையும். ஆனாலும் நூலிழையில் அந்த பிம்பங்களைத் தக்க வைக்கத்தான் நினைக்கும் மனது. அந்த வகையில் இந்தக் கதை எனக்கு மிகவும் நெருக்கமாக உணர்ந்தேன். அவருடைய வேறு சில கதைகளையும் தேடிப் பார்த்து வாசிக்க ஆரம்பித்தேன்.

சமீபத்தில் பாஸ்டன் பாலா அவர்கள்  அம்பை பற்றின சொல்வனத்தின் சிறப்பிதழை அமேசானில் வெளியிட்டிருப்பதாகவும் இலவசமாக தரவிறக்கிக் கொள்ளலாம் என்று அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த இதலில் வெளியான சில கட்டுரைகளை இதற்கு முன்னரே வாசித்திருந்தாலும் முழுமையாக வாசித்திருக்கவில்லை.அவரைப் பற்றி தெரிந்து கொள்ளும் நல்ல சந்தர்ப்பம் என்று கிண்டிலில் தரவிறக்கிக் கொண்டேன். 

அம்பையின் நிறை குறைகளைப் பற்றி மற்ற எழுத்தாளர்கள் நேர்மையாக விமரிசித்திருந்த கருத்துக்கள் வாசிக்க சுவாரசியமாக இருந்தது. நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக எழுத்துலகில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்திருப்பவரை ஆண் எழுத்தாளாளர்கள் சிலர் மோசமாக சித்தரித்திருப்பது ஒன்றும் புதிதல்ல என்றாலும் இலக்கியம் படித்தவர்கள், படைப்பவர்கள் தாங்கள் என்று சொல்லிக் கொண்டுத் திரியும் ஆண் எழுத்தாளர்களின் மன விகாரமும் தெரிய வந்ததில் வருத்தமும் கோபமும் தான் மிஞ்சியது. இந்த அழகில் தான் தமிழ் இலக்கிய உலகம் இருக்கிறது. நமக்கு வாய்த்தவர்கள்... ஹ்ம்ம்ம்.

சில வருடங்களுக்கு முன்பு என் கணவர் விஷ்வேஷ் ஒப்லா சொல்வனத்திற்கு எழுதிய
"ஷார்லட் ப்ராண்டியும் ராபர்ட் சௌதியும் எழுதிக் கொண்ட கடிதங்கள்" என்ற கட்டுரையில் (https://solvanam.com/2014/11/10/correspondence-charlotte-bronte-robert-southey/ )

‘இலக்கியம் பெண்களுக்கான துறை அல்ல. அவ்வாறு இருக்கவும் இயலாது. ‘
என்று கூறியவருக்கும் அவரால் குற்றம் சாட்டப்பட்ட பெண் எழுத்தாளர் ஒருவருக்கும் நடந்த கடித பரிமாற்றம் குறித்து இரு எழுத்தாளர்களிடையே இருந்த பரஸ்பர மரியாதையையும் மதிப்பும் பற்றி குறிப்பிட்டிருந்தார். அத்தகைய முதிர்ச்சியடைந்த இலக்கிய ஆளுமைகள் இல்லாத சமூகம் தமிழ்ச்சூழலில் உள்ளது. அதுவும் ஒரு பெண் எழுத்தாளரை இகழ்வது ஆண் எழுத்தாளர்களுக்கும் ஆண் சமூகத்திற்கும் சமயங்களில் மிக எளிதாக உள்ளது. அம்பையும் அத்தகைய தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறார் என்பதை திரு.அரவிந்தன் நீலகண்டனின் பதிவில் தெரிந்தது😞 

அந்த இதழில் அம்பையும் தன்னுடைய எழுத்துக்களைப் பற்றியும் பத்திரிக்கைகளில் வெளிவந்திருந்த அவருடைய கதைகள், கருத்துக்களையும், அவர் சந்தித்த ஆளுமைகளுடனான தன்னுடைய அனுபவங்களையும் பகிர்ந்திருந்தார். அன்றைய, இன்றைய பெண் எழுத்தாளர்கள், கவிஞர்களைப் பற்றியும் சில கவிதை வரிகளையும் மேற்கோள் காட்டியிருந்ததை வாசிக்க சுவராசியமாக இருந்தது.

அம்பையின் "ஸ்பாரோ" அறக்கட்டளை மூலம் இந்தியாவில் இதுவரையில் ஆவணப்படுத்தாத பல பெண் இலக்கிய ஆளுமைகளைக் கண்டறிந்து அவர்களைப் பற்றின தகவல்களைத் திரட்டும் பணியில் தன் குழுவினருடன் அவர் மேற்கொண்ட பயணங்கள், தகவல்கள், ஆவணப்படங்கள் வரும் சந்ததியினருக்கு இலக்கியத்தில் பெண்களின் பங்களிப்பை உணர்த்தும். இதற்காகவே அம்பைக்கு தமிழ் இலக்கிய உலகம் கடமைப்பட்டிருக்கிறது.

அம்பை அவர்கள் "கவிதாயினி" என்று பெண் கவிஞர்களை குறிப்பிட்டிருந்தது தான் ஆச்சரியமாக இருந்தது! பெண் கவிஞர்கள் அதனை எப்படி எடுத்துக் கொள்வார்களோ ? நான் ஒரு "பெண் கவிஞரை" கவிதாயினி என அறிமுகப்படுத்த, அப்படி தான் அழைக்கப்படுவதை விரும்பவில்லை "கவிஞர்" என்றே சொல்ல வேண்டும் என்று ஆட்சேபித்தது வரலாறு 😒

இந்த சிறப்பிதழ் வாயிலாக பல பெண் எழுத்தாளர்களைப் பற்றி அறிந்து கொள்ள முடிந்தது. இதழை வெளியிட்ட சொல்வனம் குழுவினருக்கும் நன்றி. 

அம்பைக்கும் அவருடைய "ஸ்பாரோ" குழுவினருக்கும் வாழ்த்துகள்.

Thursday, January 7, 2021

கோவிட் கிறிஸ்துமஸ்

தீபாவளி நாள் நெருங்க நெருங்க மனதில் பொங்கும் உற்சாகத்தைப் போல இந்த கிறிஸ்துமஸ் நாள் நெருங்க அமெரிக்க நண்பர்கள் பலரும் முகத்தில் சிரிப்புடனும் உற்சாகத்துடனும் வளைய வருவார்கள். 'Thanksgiving Day' முடிந்தவுடன் வீடுகளில் கிறிஸ்துமஸ் அலங்கார விளக்குகள், மரங்கள் என்று தெரு முழுவதும் விழாக்கோலம் பூண்டு விடும். கடைகளில், அலுவலகங்களில் கிறிஸ்துமஸ் மின்விளக்குகள் ஒளிர, நகரமே ஒளிவெள்ளத்தில் மிதப்பது போல் தோன்றும். கூடவே குளிரும் பனியும் கிறிஸ்துமஸ் நெருங்குவதைப் பறைசாற்றும்.

 "ஜிங்கிள் பெல்ஸ் ஜிங்கிள் பெல்ஸ் ஜிங்கிள் ஆல் த வே" எங்கும் ஒலிக்க தொடங்கியிருக்கும். மால்களில் சாண்டாக்ளாஸ் வேடமணிந்த நீண்ட வெண்தாடி தாத்தக்கள் மடியில் அமர்ந்து கொண்டு அழகாக போஸ் கொடுக்கும் குழந்தைகள் தங்களுக்குப் பரிசாக இன்னது வேண்டும் என்று மழலையில் சொல்லிக் கொண்டிருப்பார்கள். சில குழந்தைகள் கண்ணாடியும் தாடியும் பார்த்து மிரண்டு அழுது கொண்டிருப்பார்கள். பெற்றோர்கள் நடப்பதை அனைத்தையும் ஆனந்தத்துடன் அருகில் நின்று வேடிக்கைப் பார்க்க, தக்க சமயத்தில் 'க்ளிக்' செய்து படமெடுக்கும் கூட்டம் ஒன்று தங்கள் வியாபாரத்தில் மும்முரமாக இருப்பார்கள். 

டிசம்பர் மாதம் முதல் பலரும் சிகப்பு, பச்சை நிற ஆடைகளை உடுத்தி திருவிழாவிற்குத் தயாராகுவார்கள். என்னுடைய முதல் கிறிஸ்துமஸ் மாதத்தில் அலங்காரங்களையும், ஆன்லைன் வசதியில்லாத காலத்தில் கடைகளில் நீண்டு கொண்டே செல்லும் வரிசைகளையும் தள்ளுவண்டி நிறைய பரிசுப்பொருட்களையும் மக்கள் வாங்கிச்செல்வதைப் பார்த்து அதிசயித்திருக்கிறேன். அந்த ஒரு மாதத்தில் மட்டுமே நிறுவனங்களின் வருமானம் பங்குச்சந்தையைக் கூட ஆச்சரியப்படுத்தும். தீபாவளிக்கு முன்பாக வரும் கண்கவர் விளம்பரங்கள் போல் கிறிஸ்துமஸ் பரிசு விளம்பரங்களும் கொடிகட்டிப் பறக்கும். இன்று அனைத்துமே மாறியிருக்கிறது. 

ஆன்லைன் வர்த்தகங்கள் வாழ்க்கையை எளிதாக்கியிருக்கிறது. அதுவும் கொரோனா காலத்தில் கேட்கவே வேண்டாம். தொலைக்காட்சியிலும், தினசரி, மாதாந்திர பத்திரிக்கைகளிலும் வந்து கொண்டிருந்த விளம்பரங்கள் இன்று கைபேசி, கணினியைத் திறந்தவுடன் வந்து கண்முன்னால் கொட்டுகிறது. மக்களின் ஆசையைத் தூண்டுகிறது. கையில் காசு இல்லாவிட்டாலும் கிரெடிட் கார்ட் வைத்திருந்தால் போதும் என்ற நிலையில் மக்களும் வாங்கித் தள்ளுகிறார்கள். கடன் கொடுக்கும் வரை நல்லவனாக இருப்பவன் கடன் தொகையை செலுத்தவில்லையென்றால் கடனாளி ஆக்கி மனநோயாளிகள் அதிகரிக்கும் காலமும் இதுவே!

பல அலுவலகங்களிலும் கிறிஸ்துமஸ் பார்ட்டிகள் கோலாகலமாக நடைபெறும். இதைத்தவிர, நண்பர்களுடன் வெளியில் சென்று உணவருந்துவதும், கடைகளுக்குச் செல்வதும் ஷாப்பிங் செய்வதும் நடைமுறை பழக்கம். மதுபான விடுதிகளில் கூட்டம் அலைமோதும். எங்கும் சிரித்த முகத்துடன் திருவிழா உற்சாகத்துடன் வளைய வரும் மக்களிடம் பனிக்கால குளிரையும் தாண்டிய மனிதநேயம் வெளிப்படும்.
ம்ம்ம்... இந்த வருடம் என் நண்பர்களை, கலகலப்பான பேச்சுக்களை, நாட்களை, விதவிதமான உணவுவகைளை எல்லாவற்றையும் 'மிஸ்' செய்கிறேன். வீட்டில் இருக்கும் பொழுது தான் வாழ்க்கையில் எதையெல்லாம் தவறவிடுகிறோம் எப்படியெல்லாம் இனிமையான நாட்களைக் கடந்து வந்திருக்கிறோம் என்று தெரிகிறது!

2021 சுகமாக அமையும் என்ற நம்பிக்கையுடன்...


Wednesday, January 6, 2021

திருவரமங்கை திருக்கோவில்



நம்மாழ்வாரால் மங்களாசாசனம்(பாடல்) பெற்ற மற்றுமொரு திவ்யதேசம் திருநெல்வேலியிலிருந்து நாகர்கோவில் செல்லும் சாலையில் தெற்கே அமைந்துள்ள திருவரமங்கை திருக்கோவில். நாங்குநேரி, வானமாமலை, தோத்தாத்திரி என வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இக்கோவிலில் வானமாமலை பெருமாள், ஸ்ரீவரமங்கை தாயாருடன் வீற்றிருக்கிறார். தினமும் பெருமாளுக்கு தைல அபிஷேகம் நடைபெறுகிறது. அந்த எண்ணெயை எடுத்து இங்குள்ள நாழிக்கிணற்றில் ஊற்றி வருகின்றனர். 

வைகுண்டத்தில் பெருமாள் எப்படி வீற்றிருப்பாரோ அத்தகைய கோலத்திலேயே சுவாமி இங்கு இருப்பதாக நம்பிக்கை உள்ளது. கோவில் கருவறையில் ஆதிசேஷன் குடையாய் இருக்க, வானமாமலைப் பெருமாள் வைகுண்டபதியாக அமர்ந்த திருக்கோலத்தில் இருக்கிறார். அவருக்கு இருபுறமும் ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி தாயார்கள் காட்சி தருகிறனர். இவர்களுக்கு ஊர்வசியும் திலோத்தமையும் சாமரம் வீசுகின்றனர். பிருகு முனிவர், மார்க்கண்டேய முனிவர், சூரியன், சந்திரன் ஆகியோர் பெருமாளை சேவித்தபடி, கருவறையில் வீற்றிருக்கின்றனர். அர்த்த மண்டபத்தில் கருடாழ்வார், விஷ்வக்சேனர் இருக்கிறார். இந்த 13 விக்கிரகங்களும் சுயம்புகள் என்றும் ஐதீகம்.

பழமையான இத்திருக்கோவிலில் நீண்ட பிரகாரங்களுடன் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட தூண்களுடன் மண்டபங்கள் இருக்கிறது. மார்கழி மாத வைகுண்ட ஏகாதசி விழாவினை ஒட்டி பகல் பத்து, ராப்பத்துநாட்களில் இம்மண்டபங்களில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.பகல் பத்து விழா நடைபெறும் 10 நாட்களும் அறையர்கள் நாலாயிரம் திவ்ய பிரபந்தத்தில் உள்ள திருமொழி பாசுரங்களையும், ராப்பத்து விழா நடைபெறும் 10 நாட்களும் திருவாய்மொழி பாசுரங்களையும் பாடி பெருமாளை பரவசப்படுத்துகிறார்கள். 

அழகான மற்றுமொரு திவ்யதேச தரிசனம்


Tuesday, January 5, 2021

ஜிங்கிள் பெல்ஸ் ஜிங்கிள் பெல்ஸ் ஜிங்கிள் ஆல் தி வே...

என்னுடைய முதல் அலுவலக கிறிஸ்துமஸ் பார்ட்டிக்கான தினத்தை அறிவித்ததிலிருந்து என்னுடன் பணிபுரிந்தவர்கள் அனைவரும் அதைப்பற்றியே ஆவலுடனும் மகிழ்ச்சியுடனும் பேசிக்கொண்டிருந்தனர். அமெரிக்கா வந்த புதிது வேறு. அப்படி என்ன பார்ட்டி என்று எனக்குப் புரியவில்லை. அவர்களின் கொண்டாட்டத்திற்கு காரணம் Salt Lake Cityல் பிரபலமான விடுதியில் டின்னர். அதற்குப் பிறகு திரையரங்கில் 'ஸ்டார் வார்ஸ்' படம். சாதாரணமாக நுழைய முடியாத அதிக செலவுகள் செய்ய வேண்டிய இடத்தில் பார்ட்டி என்றால் யாருக்குத் தான் கசக்கும்? ஆனால் எனக்கோ பல கவலைகள்! நீ ஸ்டார் வார்ஸ் படத்தைப் பார்த்ததில்லையா? நிஜமாவா? நம்பவே முடியவில்லை என்று ஆச்சரியமாகிப் போனார்கள் என் குழுவினர். ஆங்கிலப் படம் பார்த்தா வளர்ந்தேன் நான்?அவர்களுக்கு அமெரிக்கா தான் உலகம். உலகம் தான் அமெரிக்கா! ஈஷ்வரிடம் விஷயத்தைச் சொன்னவுடன் ஸ்டார் வார்ஸ்' படத்தைப் பற்றி அவர் விலாவாரியாக கதைகள் சொல்லும்போதே அய்யோ என்றிருந்தது. டிபிக்கல் அமெரிக்கப் படம்!

அந்த நாளும் வந்தே விட்டது. படபடக்க கிளம்பி விட்டோம். வீட்டிலிருந்து 45நிமிடங்கள் கார் பயணம். கிறிஸ்துமஸ் விளக்கொளியில் 'Salt Lake City' ஜொலித்துக் கொண்டிருந்தது. பிரம்மாண்ட ஹோட்டல். தத்தம் மனைவியருடன் ஜோடியாக கைகோர்த்துக் கொண்டு அலுவலக நண்பர்கள். மொத்தமே நான்கு பெண்கள் தான் அந்த அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தோம். 76 ஆண்கள்! ஒரு பெரிய மாநாட்டு அறையில் ஏற்பாடு செய்திருந்தார்கள். விடுதியின் உள்ளே தனியொரு உலகம்! இதுவரை படங்களில் மட்டுமே பார்த்திருந்த காட்சி அது. வட்டவட்ட மேஜைகள். உயர்ரக நாற்காலிகள்.ஒவ்வொரு மேஜையும் கிறிஸ்துமஸ் அலங்காரங்களுடன். ஜொலிக்கும் பெரிய சாண்ட்லியர் அலங்கார விளக்கு நடுஹாலில். சுற்றுச்சுவரில் மங்கலான விளக்குகள். எங்கள் குழுவினர் ஒரு மேசையில் அமருமாறு ஏற்பாடு செய்திருந்தார்கள். கணவரை குழுவினருக்கு அறிமுகப்படுத்தினேன். அவர்களும் தங்கள் மனைவியரை அறிமுகப்படுத்தினார்கள்.

ஏதோ ஆஸ்கார் விழாவிற்குச் செல்வது போல் உடைகளும், தலையலங்காரமும், நகப்பூச்சுகளும்! எப்படித்தான் மணக்க மணக்க ஓப்பனைகளுடன் ஹாலிவுட் ரேஞ்சில் அழகாக்கிக் கொள்கிறார்களோ! மலைப்பாக இருந்தது. ஆண்கள் அனைவரும் டை, டக்ஸ் (Tuxedo) அணிந்திருந்தார்கள். மனைவிகளுக்காக இருக்கையைப் பின்னிழுத்து அமர வைத்து பிறகு தான் ஆண்களும் அமர்கிறார்கள். பெண்களும் அதற்காகவே காத்திருக்கிறார்கள். ம்ம்ம்...நம் ஆட்களுக்கு இது தெரியாது. ஆணோ, பெண்ணோ இடம் கிடைத்தால் 'டபக்'கென்று உட்கார்ந்து விடுவது தானே நம் மரபு

அந்த உணவுமேஜையில் அழகான அத்தனை கண்ணாடி, பீங்கான் சாமான்கள்! மேஜைக்கு நடுவே அழகிய குடுவைப் பூச்சாடி. ஆளுக்கு இரண்டு கண்ணாடி கோப்பைகள். பீங்கான் கப் & சாஸர். எவர்சில்வரில் செய்த கனமான ஒரு கத்தி. மூன்று முள்கரண்டிகள். இரண்டு ஸ்பூன்கள். ஒரு முள்கரண்டியைப் பார்த்தாலே எனக்கெல்லாம் தலை கிறுகிறுக்கும். எதற்காக வெவ்வேறு அளவுகளில் கரண்டிகளும், முள்கரண்டிகளும்? தலை வெடித்துச் சிதறி விடும் போல இருந்தது. துணி ஒன்று அழகாக மடித்து வைக்கப்பட்டு இருந்தது. இத்தனை எதுக்கு வச்சிருக்காங்களோ? சாப்பிடவேண்டும் என்ற நினைப்பே பயமாகவும் இருந்தது. சிறிது நேரத்தில் உணவைப் பரிமாறுபவர்கள் கோப்பைகளில் மதுவை ஊற்றிக்கொண்டே வந்தார்கள். எனக்கு எதுக்கப்பா இதெல்லாம் என்று நினைத்தாலும் ஒன்றும் சொல்லவில்லை. ஈஷ்வருக்கு ஜாலி ஜாலி! இன்னொரு கோப்பையில் தண்ணீரை ரொப்பினார்கள். அப்பாடா என்றிருந்தது! கூடவே மெனு கார்டு ஒன்றையும் கொடுத்துவிட்டு நகர்ந்தார்கள். மதுவைக் கண்டவுடன் அனைவர் முகங்களிலும் மகிழ்ச்சி! இருக்காதா பின்ன? 

நிறுவன மேலாளர் அந்த வருடத்திய லாபத்திற்காக கடினமாக உழைத்த அனைவருக்கும் பாராட்டுத் தெரிவித்து விட்டு(நமக்கு நாமே!) விடுமுறை வாழ்த்துக்களையும் சொல்லி இரவு உணவை 'என்ஜாய்' என்று மதுக்கோப்பையை உயர்த்த, அனைவரும் அவரவர் கோப்பையை உயர்த்தி 'ச்சியர்ஸ்' சொல்லி முதல் சிப். சியர்ஸ் சொல்லிய பிறகு உடனே ஒரு சிப் குடிக்கணுமாம். இந்த குடிகாரன் பாஷை அறியாத பெண்ணாயிற்றே! 'டொக்' என்று மேஜையில் வைத்து விட்டேன். என் அலுவலக நண்பர்களுக்கு என்னைப்பற்றித் தெரியும். அதனால் அவர்களும் கண்டு கொள்ளவில்லை. அவர்கள் மனைவிகளுக்குத்தான்... அது என் கவலை இல்லை என்று தண்ணீர் குடித்துக் கொண்டே மெனு அட்டையைப் பார்த்தால்... கடவுளே! இது என்ன புது சோதனை?

அப்பொழுது அமெரிக்க உணவின் பரிச்சயமும் அவ்வளவாக கிடையாது. ஒன்றிரெண்டு தெரிந்த பெயர்கள் ஏதாவது தென்படுகிறதா என்று தேடி எதையாவது சொல்லித்தொலைப்போம். வீட்டுக்குப் போய் ரசம் சோறு சாப்பிட்டா தான் தூக்கம் வரப்போகுது. என்னடா சோதனை என்று சிக்கன் பாஸ்தா ஐட்டம் சொல்லியாயிற்று. சாலட் பக்கம் ஒதுங்கினது கூட கிடையாது. ஐயோ! இந்த இலை, தழைகளையெல்லாம் முள்கரண்டியில சாப்பிடணுமேன்னு நினைக்கிறப்பவே சாப்பிடும் ஆசையே போய்விட்டது. நல்லா பிசைஞ்சு சாப்பிடுறதுல இருக்கிற சுகம் தெரியாம இப்படி ஒட்டாம என்னத்த சாப்பிட்டு. என்ன சூப் வேண்டும்? கேட்டாள் நேர்த்தியான ஒப்பனையுடன் வளைய வந்துகொண்டிருந்த பணிப்பெண். ஆஹா! அது வேறயா? இப்பொழுது பார்ட்டிகளுக்குச் சென்றால் 'மடமட'வென்று எனக்கு வேண்டியதைக் கேட்க தெரியும். ஆனால் அப்பொழுது? ஏதேதோ பெயர் சொன்னாள். நானும் எங்கேயோ கேட்ட பெயராக இருக்கிறது என்று ஒரு சூப் சொல்லிவிட்டேன். ஈஷ்வரும் அப்படியே.

விமான பணிப்பெண்கள் போலவே இங்கும் 'சிக்'கென்றிருந்த இளம்பெண்களும், ஆண்களும் சக்கரமாய் சுழன்று சுழன்று மேஜைகளில் பரிமாறுவதும் பிளாஸ்டிக் சிரிப்புடன் வலம்வருவதுமாய். அவர்களை மேற்பார்வையிட இருவர் என்று விருந்தினர்களை குறைவில்லாமல் கவனித்துக் கொண்டிருந்தார்கள்.

முதலில் சிறு தட்டில் சாலட் வந்தது. முள்கரண்டி விஷப்பரீட்சை ஆரம்பமாயிற்று. எதுவும் பறந்து பக்கத்து தட்டுக்குப் போகாம இருக்கணுமேன்னு எல்லா கடவுளையும் வேண்டிட்டு பேருக்கு சூப், சாலட் சாப்பிட்டு முடிக்கையில் பெரிய தட்டில் ஆவி பறக்க வந்திறங்கியது பாஸ்தா. சாப்பிடுவதை விட அழகாக தட்டில் வைத்திருப்பதைப் பார்க்க பிடித்தது. அப்பொழுதெல்லாம் ஸ்மார்ட்ஃபோன்கள் கிடையாது. இல்லையென்றால் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் நடந்திருக்கும். அப்பொழுது தான் கவனித்தேன். என் அருகில் அமர்ந்திருந்தவரின் தட்டில் பெரிய கறித்துண்டு. அவரிடம் மீடியம் , ரேர் என்று அந்தப் பெண்மணி கேட்கும் பொழுதே என்னடா என்று யோசித்தேன். பாதி வெந்திருந்த கறியை கத்தியை வைத்து துண்டுகள் போட லேசாக ரத்தம் எட்டிப்பார்க்க, அய்யோ! என்று நான் ஈஷ்வரைப் பார்க்க 'எமோஷன குறை எமோஷன குறை' என்று பார்வையால் சொல்ல ...எப்படா வெளியில் ஓடலாம் என்றிருந்தது. கடைசியில் சாக்லேட் டெஸெர்ட். அப்பொழுது பிடிக்கவில்லை. இப்பொழுது கொடுத்தால் அப்படியே சாப்பிடுவேன் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் பரிசு ஒன்று கொடுத்து விட்டு திரையரங்கில் சந்திப்போம் என்று விடைபெற்று கிளம்பினோம்.

முதன்முதலாக பார்த்த ஸ்டார்வார்ஸ் படம். அப்படத்தில் பெரிய நடிகர் பட்டாளாமே இருந்தது. ஹாலிவுட் படங்கள் பார்க்க ஆரம்பித்திருந்த நேரம். அதன் ஆங்கிலத்திற்கும் பழகிக் கொண்டிருந்தேன். ஒருவழியாக படத்தையும் பார்த்து விட்டு வீடு வந்து சேர்ந்தோம். 

வழி முழுவதும் ஆடம்பர பார்ட்டி, ஒப்பனைப் பெண்கள், கிண்ணங்களின் ஒலி, சிரிப்பும் பேச்சுக்களுமாய் எப்படியெல்லாம் கொண்டாடுகிறார்கள் என்ற மலைப்புடன் அமெரிக்காவில் முதல் கிறிஸ்துமஸ் அலுவலக கொண்டாட்டம் முடிந்து  வீடு வந்து சேர்ந்தோம். அதற்குப் பிறகு அலுவலக நண்பர்கள் என்ற நெருங்கிய வட்டம் உருவாகி, உணவுகளும் பழகி, கலகலப்பாக கொண்டாட்டங்கள் இனிதே அரங்கேறிக் கொண்டிருந்தது. இந்த வருடம் தான் அவரவர் வீட்டிலிருந்து உணவுகளைச் சாப்பிட்டுக் கொண்டே ஜூம்ல் கொண்டாடும் நிலைமை.

நினைவுகளை மட்டும் சுமந்து கொண்டு உருண்டோடிச் செல்கிறது காலம்!

ஜிங்கிள் பெல்ஸ் ஜிங்கிள் பெல்ஸ் ஜிங்கிள் ஆல்  தி வே...


Monday, January 4, 2021

The Queen's Gambit

"The Queen's Gambit", ஒரு புதினத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட தொலைக்காட்சித் தொடர். ஏதோ நிஜ வாழ்க்கையில் நடந்த கதை போல் சுவாரசியமாகவும் அருமையாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். 


அமெரிக்காவில் கால்பந்தாட்டம், கூடைப்பந்து, பேஸ்பால், கோல்ஃப், நீச்சல் போன்ற விளையாட்டுக்கள் அதிக கவனம் பெற்றவை. அறிவை உபயோகித்து விளையாடியும் கவனம் பெறாத, ஆண்கள் மட்டுமே பங்கேற்று கோலோச்சிக் கொண்டிருந்த ஒரு விளையாட்டு செஸ். இன்றுவரையிலும் கூட மற்ற விளையாட்டுகள் அளவிற்கு முக்கியத்துவம் பெறாத ஒன்று. அப்படியான விளையாட்டில் ஈர்க்கப்பட்ட அனாதைச் சிறுமி ஒருத்தி தன்னை விட பல வயது மூத்தவர்களுடன் விளையாடி படிப்படியாக முன்னேறி ரஷ்யாவின் முன்னணி வீரரை வெற்றிக் கொள்வதில் முடிகிறது இத்தொடர்.

அனாதை இல்லத்தில் தனியாக அமர்ந்து விளையாடிக் கொண்டிருக்கும் உதவியாளரிடமிருந்து செஸ் கற்றுக் கொள்கிறாள் சிறுமி. அவள் ஆர்வத்தையும் திறமையையும் வெளிக்கொணர உதவுகிறார்கள் இல்லத்தின் உதவியாளரும் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியரும். நடுவில் அப்பெண்ணை ஒரு குடும்பம் தத்தெடுக்கிறது. அவளின் ஆர்வம் முழுவதும் செஸ். நடுநடுவே புகை, மது, மருந்துகள் என்று போட்டுக் கொள்ளவும்

செஸ் விளையாடும் ஆர்வம் இருந்தாலும் போட்டியில் பங்கெடுத்துக் கொள்ளும் வசதியில்லாதவருக்கு உதவுகிறார் அப்பெண்ணுக்கு செஸ் விளையாட்டைக் கற்றுத்தந்தவர். விளையாட்டுப் போட்டியின் விதிமுறைகளைக் கூட அறிந்திராதவர் போட்டிகளில் தன்னை அலட்சியப்படுத்தியவர்களை வென்று மாநில, தேசிய அளவில் முன்னேறுகிறார். அவர் விளையாட்டில் முன்னேற அவரிடம் தோற்ற நண்பர்களும் உதவுகிறார்கள்.

கதைக்களம் 1950களில் தொடங்கி 67 வரை பயணிக்கிறது. வீடுகள், வண்டிகள், கடைகள், நடை, உடை பாவனைகள், தொலைக்காட்சி, பத்திரிக்கைகள் என்று ஒவ்வொன்றின் வாயிலாக அந்த காலத்துக் காட்சிகளை கவனத்துடன் கண்முன் நிறுத்தியுள்ளார்கள். அனாவசிய செண்டிமெண்ட் காட்சிகள் எல்லாம் இல்லை. நடித்தவர்கள் அனைவரும் தங்கள் பாத்திரத்தின் தன்மையை உணர்ந்து மிகைப்படுத்தமால் அழகாக நடித்திருக்கிறார்கள்.

என்ன தான் ஒரு பெண் தன் திறமையினால் முன்னேறினாலும் அவளுடைய உடைக்கும் அலங்காரத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து சிறுமைப்படுத்துவதில் தான் ஊடகங்களுக்கு அதிக ஆர்வம் அன்றிலிருந்து இன்று வரைக்கும்.

விளையாட்டை அறிந்திராதவர்களும் பார்த்துக் களிக்கும் வகையில் இத்தொடரை எடுத்திருப்பதில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
நெட்ஃப்ளிக்ஸ்ல் காணலாம்.


Saturday, January 2, 2021

Bye, bye 2020 (FB post)

கொண்டாட்டமாகத்தான் ஆரம்பித்தது 2020. தை பிறக்கும் பொழுதே உடன் பிறவா சகோதரராய் துயர்மிகு காலங்களில் நம்பிக்கையையும் அன்பையும் ஆதரவையும் அளித்த பாலாஜி dhaவின் மரணம் மிகுந்த வருத்தத்தைத் தந்தாலும் அவர் அனுபவித்துக் கொண்டிருந்த வலிகளிலிருந்து விடுதலை பெற்றதாய் நினைத்து ஆறுதல் கொண்டோம். சில நாட்கள் மகளுடன் தங்கி இருந்ததில் தொழில்நுட்பத்துறையில் இன்றைய மில்லினியல்களின் வாழ்க்கையை ஓரளவு கணிக்க முடிந்தது. எல்லோரும் ஒருவித வேலை நெருக்கடியுடனும் மன அழுத்ததுடனும் இருப்பதாக எனக்குத் தோன்றியது. ஆனாலும் கொண்டாட்ட மனநிலையில் தங்களை உற்சாகமாக வைத்திருக்கிறார்கள் என்பதே ஆறுதல்.

இந்த வருடம் சிறப்பான வருடமாக, மறக்க முடியாத அனுபவமாக இருக்க வேண்டும் என்று நினைத்தது பலித்துத்தான் போனது. ஆம். சரித்திரத்தில் இடம்பெறும் இந்த வருடத்தில் ஜீவித்துக் கிடப்பது என்பதே வரம் தானே! இன்று ஸ்பானிஷ் ஃப்ளுவைப் பற்றி படிக்கும் பொழுது வரும் ஆச்சரியம் எதிர்காலத்தில் இந்த துரதிர்ஷ்ட கொரோனாவைப் பற்றி படிப்பவர்களுக்குத் தெரியும். மார்ச் ஆரம்பித்த நாளிலிருந்தே அலுவலகத்தில் கூடிக்கூடி பேசிக் கொண்டிருந்தார்கள். சீனாவிலிருந்து விடுமுறையைக் கொண்டாடிவிட்டு வந்த ஒரு சீன அமெரிக்கப் பெண்ணை அலுவலகத்தில் ஏன் அனுமதித்தார்கள் என்பதே அனைவரின் பதட்டம். அவரை எப்படியெல்லாம் தவிர்க்க முடியுமோ தவிர்த்தார்கள். பாவமாக இருந்தது. ஆனால் உயிர் பயம் யாரை விட்டது? அமெரிக்காவின் சியாட்டில் நகரம் திணற ஆரம்பிக்க, நியூயார்க்கில் அதன் தாக்கம் எதிரொலிக்கத் துவங்கிய தினத்தில் எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது. அரசு அலுவலகங்களை மூட கவர்னரின் ஆணை வந்தவுடன் தான் அதுவரையில் இல்லாத பல கேள்விகள் மனதில். என்னுடன் வேலை பார்தத அனைவருக்கும் கூட.

வேலை இருக்குமா இல்லையா என்ற கேள்விக்கு அழைத்துச் சொல்கிறோம். ஆனால் நாளையிலிருந்து யாரும் வேலைக்கு வரத்தேவையில்லை என்று அனுப்பி விட்டார்கள். இருபது வருடங்களுக்கும் மேலாக இங்கு தங்கி இருக்கிறேன். நிரந்தரமற்ற நிலையை எண்ணி பதட்டத்துடன் வீட்டிற்குத் திரும்பிய அன்று தான் என்னடா வாழ்க்கை என்று நினைக்கத் தோன்றியது.
அன்று இரவே தனித்தகவலில் வீட்டிலிருந்து வேலை செய்யும் அனுமதி கிடைத்து விட்டாலும் பலருக்கும் அந்த வாய்ப்பு வழங்கப்படாமல் பணிநீக்கம் செய்ய்யப்பட்டது தெரிய வந்ததில் வருத்தமே. அதற்குப் பிறகான வாழ்க்கையில் நித்தம் வரும் செய்திகள் கலக்கத்தையே அதிகரித்தது. ஒரே ஆறுதல் குழந்தைகள் எங்களுடனே எங்கள் பாதுகாப்பில் இருந்தது தான். அதுவே இந்த வருடத்தின் மிகப்பெரும் வரம்.

இத்தனை வருடங்களில் இல்லாத மருத்துவச் செலவுகளுடன் ஏகபோகமாக ஆரம்பித்து ஏகப்பட்ட மன உளைச்சல். உடன்பிறந்தவர்களுக்கும் இதே நிலைமை. நிம்மதியின்றி அனைவரும் வருந்தும் படி அடுத்தடுத்த நிகழ்வுகள். நல்லதே நடக்கும் என்று ஆறுதல் கூறியவர்கள் கூட இன்று விலகி நிற்பது தான் கொடுமை. வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல் தோறும் வேதனை இருக்கும்... தெரிந்தது தான். அதற்காக வலிகளே இல்லை என்று புறந்ததள்ளி விட முடிவதில்லை. ஆனால் ஒன்று, வலிய சென்று வாங்கிக் கட்டிக்கொள்வதை இனியாவது நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தான் நினைக்கிறேன். ஆனால் முடியவில்லை. மாத்திக்கணும் எல்லாத்தையும் மாத்திக்கணும்னு எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன்.

அமைதியாக சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் ஒழுங்கற்ற அமைதியற்ற நிலை. வலிகளும், அழுகைகளும், வருத்தங்களும், கவலைகளும், இழப்புகளும் இருந்தாலும் சைக்கிள் கேப்பில் என்னை நானே அமைதியாகவும் வைத்திருக்கவும் தவறவில்லை.

மகனும் மகளும் குழந்தைகளாக இருக்கும் பொழுது அவர்களுடன் இருக்க முடியவில்லையே என்று வருந்திய நாட்கள் பல உண்டு. இன்று அவர்கள் மீண்டும் என் கூட்டிற்குத் திரும்பியதைக் கொண்டாட முதலில் ஆரம்பித்தது சமைலயலறையில். அவர்களுக்குப் பிடித்ததை விதம்விதமாக சமைத்து அவர்களைத் திக்குமுக்காட வைத்தேன். அவர்களும் ரசித்து ருசித்துச் சாப்பிட புதுப்புது உணவுவகைகளைத் தேடித்தேடி சமைக்க கற்றுக் கொண்டேன்.
காலில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு ஓடும் காலை நேரம். இன்றோ ஆற அமர உட்கார்ந்து மழையையும் வெயிலையும் ரசிக்கும் ஒரு சந்தர்ப்பமும் கிடைத்தது. இந்த வருடத்தில் தான் எங்கள் பகுதியில் இருக்கும் நான்கு தெருக்களில் இருப்பவர்களின் அறிமுகமும், அவர்களின் வளர்ப்புப்பிராணிகளைப் பற்றியும் அதிகம் தெரிந்து கொண்டோம். தீபாவளி, கொலு, விநாயகர் சதுர்த்தி நாட்களில் மட்டும் வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்ததும் மாறியது. கார்த்திகேயன் ஃபேஸ்புக்கில் இருக்கும் கோலதிற்கான குழுமங்களை அறிமுகப்படுத்த, கொண்டாட்டம் எனக்கு. திண்டாட்டம் உங்களுக்கு. இன்று 100வது கோலத்துடன் 2020க்கு டாட்டா சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

கோலம் போடறீங்களே, மதுபானி என்றொரு கலை இருக்கிறது. முயற்சி செய்து தான் பாருங்களேன் என்று தொடங்கி வைத்தார் உமா. அது என்னவோ என்று யூடியூபில் பார்த்து கற்றுக் கொண்டேன். நல்லா இருக்கே என்று மேலும் ஊக்குவித்தார்கள். அக்கா, நீங்கள் மண்டலா, வார்லி, பட்டசித்ரா, கோண்டா கலைகளையும் முயற்சி செய்யாலாம் என்று வித்யா எடுத்துக் கொடுக்க நானும் ஆர்வமாக அறிந்து கொண்டு சிறு முயற்சிகள் செய்து உங்கள் பார்வைக்கும் கொண்டு வந்தேன். என்னைப் போலவே ஆர்வம் கொண்ட மக்கள் பலரும் முயற்சி செய்து அவர்கள் வரைந்ததை எனக்கு அனுப்பினார்கள். ஆகா! என்று அவரவர் உணர்ந்து கொண்ட தருணம் தான் எத்தனை இனிமையானது. இவை ஒவ்வொன்றும் அதிக கவனத்தையும் நேரத்தையும் எடுத்துக் கொண்டாலும் மன அமைதியையும் கொடுத்தது என்பதே உண்மை. அதனாலேயே தொடர்ந்து செய்தேன். செய்கிறேன். செய்து கொண்டிருப்பேன். வேறு சில குழுமங்களில் கற்களில், கண்ணாடி போத்தல்களில் வண்ணங்கள் தீட்டுவதையும் கண்டேன். எல்லாவற்றையும் முயற்சி செய்து உங்களையும் வறுத்தெடுத்தேன்  

நாம சந்தோஷமா இருந்தா நவகிரகங்களுக்குப் பிடிக்குதோ இல்லையோ நம்மைச் சுற்றி இருக்கும் இம்சை அரக்கர்களுக்குப் பிடிக்காது. எப்படியாவது எதையாவதுச் சொல்லி மனவலியைக் கொடுக்கத்தான் செய்கிறார்கள். எத்தனை அடிச்சாலும் தாங்குறாண்டா மொமெண்ட்கள் ஏராளம் இந்த வருடம் மட்டும். போதாக்குறைக்கு ஏழரை வேறு காலில் சலங்கையைக் கட்டிக்கொண்டு துள்ளி ஆடுகிறது. 'ஆடும் வரை ஆட்டம் ஆயிரத்தில் நாட்டம்...' என்று வலிக்காத மாதிரியே நானும் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.

2020 நிலையற்ற வாழ்க்கையை கண்முன்னே நிறுத்தியிருக்கிறது. நான் நானாக இருந்தாலும் என்னை வம்புக்கு இழுக்கும் அடாவடிகளுக்கு குறைவில்லை. இந்த நாள், இப்பொழுது, இக்கணம் மட்டுமே நிரந்தரம் என்று உணர்ந்து அந்தந்த நிமிடங்களில் வாழ்ந்திடவே விழைகிறேன். எப்பொழுதும்ம்ம்...

பல வருடங்களுக்குப் பிறகு இந்த வருடம் தான் விசேஷ நாட்களை குடும்பத்துடன் அந்தந்த நாட்களில் கொண்டாட முடிந்திருக்கிறது. அதுவே பேரானாந்தம்

முடிந்த வரையில் நண்பர்களை அழைத்துப் பேசினேன்.நிறைய மலையாளப்படங்கள், அமெரிக்கன், கொரியன் தொடர்கள் என்று நன்றாக பொழுதும் போனது.சில புத்தகங்களை வாசிக்கவும் செய்தேன்

எனக்கு மிகவும் பிடித்த ஊடகம் ஃபேஸ்புக் . பல நல்ல நண்பர்களும் சில துஷ்டர்களையும் கண்டறிந்தது இங்கு தான். நான் கற்றுக் கொண்ட பலவும், சந்தித்த நண்பர்கள், அன்பர்கள் பலரும் இங்கு வந்த பிறகு தான். தம்பி மார்க்கிற்குத் தான் முதலில் நன்றி சொல்ல வேண்டும்.

எழுத, கோலம் போட, வரைய ஊக்குவித்த நல்ல உள்ளங்களுக்கும் ஆதரவு அளித்த உங்களுக்கும் நன்றி. 

உறவுகளை இழந்து வருந்தும் உள்ளங்களுக்கு என்னுடைய இரங்கல்கள்.

என்னை விட்டு விலகியவர்களுக்கு ஒரு பெரிய கும்பிடு. 

என்னோடு பயணிப்பவர்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்.

ரங்கஸ்தலம்

தென்னிந்தியாவில் இருக்கும் கோவில்களுக்குச் சென்று வர இந்த ஜென்மம் பத்தாது போலிருக்கு! அத்தனை பழமையான கோவில்கள் இருக்கிறது! பார்க்காத கோவில்க...