சமீப காலத்தில் உலகெங்கிலும் 'cloud burst' எனும் இயற்கை மாற்றத்தால் திடீரென மழைப்பொழிவு ஏற்பட்டு ஆறுகளில், நதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து, வழியில் தென்படும் எல்லாவற்றையும் அடித்துக் கொண்டு ஓடுவதைக் காணொளியில் காண நேரிடுகிறது. அப்படி ஒரு அனுபவம் யமுனோத்ரி சென்று திரும்புகையில் எங்களுக்கும் ஏற்பட்டது. சில மணிநேரங்களில் பெரும் மழைப்பொழிவு ஏற்படப் போவதால் மக்களை மேடான பகுதிகளுக்குச் செல்லுமாறு வலியுறுத்திக் கொண்டே வந்த அவசர குறுஞ்செய்திகள் ஒருவித பயத்தை ஏற்படுத்தி நாங்களும் விரைந்து யமுனோத்ரியிலிருந்து கிளம்பினோம். நல்லவேளையாக தரிசனம் எல்லாம் முடித்து இறங்கும் வேளையில் தான் இப்படியொரு நிலை.
வழியெங்கும் வாகன ஊர்வலம். தப்பித்தோம் பிழைத்தோம் என்று அனைவரும் திரும்பிக் கொண்டிருந்தார்கள். நாங்கள் தங்கியிருந்த விடுதி பார்கோட்டில் யமுனை ஆற்றங்கரையோரத்தில் இருந்தது. வந்து சேர்ந்த சில மணிநேரங்களில் மேகங்களைக் கிழித்துக் கொண்டு ஆவேசமாக அப்படி ஒரு மழை! வாழ்நாளில் இதுவரைப் பார்த்திராத காற்றின் வேகமும், மழைப்பொழிவும். 'ஜோ'வென்ற இரைச்சலுடன் யமுனை கரைபுரண்டு ஓட, கரையிலிருந்து முப்பது அடிக்குள் தான் நாங்கள் தங்கியிருந்தோம். இரவு முழுவதும் தொடர்ந்த பேய்மழையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட, மலைப்பாதைகளில் பிளவுகளும், பாறைகள் உருண்டோடி விழுந்து பாதைகளை அடைத்துக் கொண்டதால் யமுனோத்ரி கோவிலையும் அடுத்த சில நாட்களுக்கு மூடி விட்டார்கள். கண்முன்னே வெள்ள நீருடன் ஆக்ரோஷமாக செம்மண் நிறத்தில் ஓடிக்கொண்டிருந்த யமுனை ஆற்றை என்றுமே மறக்கவே முடியாது. அப்படியொரு அனுபவம்! "இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா" என்று கடந்து சென்று கொண்டிருந்தார்கள் உள்ளூர் மக்கள். ஒவ்வொரு வருடமும் மழைக்காலத்தில் அவர்களுக்குப் பழக்கமான ஒன்றாகி விட்டிருக்கிறது!
இன்று காலையில் திபெத்-நேபாள எல்லையில் திடீரென பொங்கி வரும் ஆற்றின் நீரைக் கண்டதும் மேற்சொன்னவை தான் நினைவிற்கு வந்தன. ஆனால் எந்தவித முன்னறிவிப்பும் முன்னெச்சரிக்கையும் இன்றி நடந்த பேரழிவு இது.
இரு நாட்களுக்கு முன்பு தான் 'தகதக'வென மின்னும் கைலாச மலையின் காலை தரிசனத்தையும் சத்குரு அவர்களுடன் அமர்ந்து மக்கள் தியானித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தவுடன் நமக்கு எப்பொழுது அங்கு போகும் வாய்ப்பு கிடைக்குமோ என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.
காலையில் பார்த்தால் இப்படியொரு அதிர்ச்சிகரமான செய்தி! எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் வீடுகள், சாலைகள், பாலங்கள், வாகனங்கள் என வழியில் தென்பட்ட அனைத்தும் அடித்துச் செல்வதைப் பார்க்க பகீரென்றிருந்தது. இது சாதாரண வெள்ளம் அல்ல. இமயமலையின் உயரமான பகுதிகளில் ஏற்பட்ட பனிப்பாறைச் சரிவினால் உருவான மிகப்பெரிய திடீர் நீர்ப்பெருக்கு ஆடிய தாண்டவம் என்று ஆரம்பகட்ட அறிவியல் மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
திபெத் பகுதியில் இருந்து பெருமளவில் பனிக்கட்டி, பாறைகள், மண் ஆற்றுக்குள் சரிந்ததாகவும், அதனால் ஆற்றின் நீர்ப்பாதை திடீரென அடைபட்டு பின்னர் அந்தத் தடுப்பு உடைந்தபோது மிகப்பெரிய அளவில் நீரும் சேறும் கீழ்நோக்கிப் பாய்ந்ததாகவும் ஆரம்பகட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காணொளியைப் பார்த்தால் அதன் தீவிரம் புரியும்.
https://www.youtube.com/live/d-gzYrNo8ps?si=CZW6egaURV9wWymS
பனி, பாறை, மண், நீர் ஆகியவை ஒன்றாகச் சேர்ந்த பேரழிவு அலை நேபாளத்தின் ராசுவா (Rasuwa) மாவட்டத்தையும் சீனக் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தின் க்யிரோங் (Gyirong) மாவட்டத்தையும் கபளீகரம் செய்து விட்டது.
சீறிக்கொண்டு வந்த அலை பள்ளத்தாக்கை நோக்கி பாய்ந்தபோது, ஆற்றங்கரையில் இருந்த குடியிருப்புகளுக்கும் கட்டமைப்புகளுக்கும் தப்பிக்க நேரமே கிடைக்கவில்லை. அலறியடித்துக் கொண்டு மேட்டை நோக்கி மக்கள் ஓடுகிறார்கள்.
திபெத் பகுதியில் குறைந்தது 3 பேர் உயிரிழந்ததாகவும் 265 பேர் காணாமல் போயுள்ளதாகவும் சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காணாமல் போனவர்களில் நூற்றுக்கணக்கானோர் வெளிநாட்டுப் பயணிகள். இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்தப் பகுதியில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களில் பலர் சுற்றுலாப் பயணிகள் மட்டுமல்ல கைலாஷ், மானசரோவர் யாத்திரைக்குச் சென்ற பக்தர்களும் ஆவர்.
நேபாளத்தில் மட்டும் இதுவரை 157 உயிரிழப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர் என்றும் செய்திகள் கூறுகின்றன.
கைலாஷ் மலையைச் சுற்றி வரும் யாத்திரை, பல ஆண்டுகளாக இந்துக்கள், புத்த மதத்தைப் பின்பற்றுபவர்களால் மேற்கொள்ளப்படும் ஒரு ஆன்மிகப் பயணம். நேபாளம் வழியாக திபெத்துக்குச் செல்லும் பாதைகளில் ராசுவா–க்யிரோங் எல்லைப் பாதை முக்கியமான ஒன்றாகும்.
அந்தப் பாதையில்தான் இந்தப் பேரழிவு நிகழ்ந்துள்ளது. சில அறிக்கைகளின்படி, கைலாஷ் யாத்திரைக் குழுவைச் சேர்ந்த 77 பேர் பற்றிய தகவல் உடனடியாகக் கிடைக்கவில்லை என்று சத்குரு தெரிவித்திருக்கிறார். இந்த எண்ணிக்கையும் மீட்புப் பணிகள் முன்னேறும்போது மாறக்கூடும்.
இமயமலை என்றாலே நம் நினைவுக்கு வருவது பனிமலைகள், அழகான, அமைதியான, பசுமையான பள்ளத்தாக்குகள், புனிதத் தலங்கள், இயற்கையின் பேரழகு தான். அழகுடன் பேராபத்தும் இரண்டறக் கலந்திருக்கிறது என்பது தான் இயற்கை நமக்கு கற்றுக் கொடுக்கும் பாடம்.
நேபாளத்திற்கு மீண்டும் ஒரு இயற்கைப் பேரழிவு. நம்மால் செய்ய முடிந்ததெல்லாம் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பிரார்த்தனைகள் மட்டுமே.
#PrayForNepal
#PrayForTibet



