Friday, March 6, 2026

சர்வதேச மகளிர் தினம்

"பெண்கள் இல்லாமல் சமூகம் முன்னேற முடியாது" என்பதை அங்கீகரிக்கும் விதத்தில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுவது தான் சர்வதேச மகளிர் தினம். வெறும் பூக்கள், வாழ்த்துகள், சமூக ஊடகச் செய்திகளால் நிறைந்த ஒரு கொண்டாட்டம் மட்டுமல்ல. இது ஒரு நீண்ட போராட்டத்தின் நினைவூட்டலும் சாதனைகளை அங்கீகரித்து சமத்துவத்தை நோக்கிய பயணத்தைத் தொடரவும் ஒரு அழைப்பு.

என்னுடைய ஆரம்ப பள்ளி வயதில் பெரும்பாலான பெண்கள் குடும்பங்களை நிர்வகிப்பவர்களாகவே இருந்தார்கள். வேலைக்குச் செல்லும் பெண்களை அதிசயமாகப் பார்த்த காலங்களும் உண்டு. பின்பு, மெதுவாக கல்லூரிப் படிப்பு படிக்க பெண்களைக் கல்லூரிக்குச் செல்ல அனுமதித்தார்கள். எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. மதுரை பாத்திமா கல்லூரியில் முதல்வர் என் அம்மாவிடம், "உங்கள் சமூகத்து ஆட்கள் பெண் குழந்தைகள் கல்லூரி படிப்பு முடிவதற்குள் திருமணம் செய்து வைத்து அவளுடைய படிப்பை நிறுத்தி விடுகிறீர்கள். அதனால் நடுவில் நிறுத்த மாட்டேன் என்று எழுதி கையெழுத்துப் போட்டுக் கொடுத்தால் தான் கல்லூரிக்குள் சேர்ப்போம்" என்று சொல்லிவிட்டார். அம்மாவும் அப்படியே செய்து விட்டார். 

இன்று கல்லூரி என்ன மேற்படிப்பு படிக்க வெளிநாடுகளுக்குப் பறந்து செல்கிறார்கள் பெண்கள். பணியிடத்திலும் பெண்களின் ஆதிக்கம் மேலோங்கி வருகிறது. இவையெல்லாம் நமக்கு அத்தனை எளிதாக கிடைத்த விஷயங்களா? இல்லை. போராடிப் போராடித்தான் பெண்கள் இன்று தங்களுக்கென ஒரு முத்திரையை அனைத்து துறைகளிலும் பதித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது ராணுவத்திலும், விண்வெளி பயணத்திலும் கூட பெண்களின் பங்களிப்பும் இருப்பது பெருமைத்தக்க விஷயம் அல்லவா?

கலாச்சாரங்கள், நாடுகள், தலைமுறைகளுக்கிடையே பெண்கள் தான் குடும்பங்கள், சமூகங்கள், பொருளாதாரங்கள், நாகரிகங்களை கட்டிக் காத்துள்ளனர். இருப்பினும், அவர்களின் பங்களிப்புகள் பெரும்பாலும் கவனிக்கப்படவில்லை என்பதையே வரலாறு காட்டுகிறது. அந்தக் கதையை மாற்றுவதற்காகவும் பெண்களின் சமூக, பொருளாதார, கலாச்சார, அரசியல் சாதனைகளைக் கொண்டாடுவதற்கும், பாலின சமத்துவம், பெண்கள் உரிமைகளுக்காக வாதிடுவதற்கும் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு உலகளாவிய நாளாக "சர்வதேச மகளிர் தினம்" கொண்டாடப்படுகிறது. ஒருபுறம் பெண்கள் எவ்வளவு தூரம் முன்னேறியுள்ளனர் என்பதற்கான கொண்டாட்டம் என்றாலும் மறுபுறம் இன்னும் எஞ்சியிருக்கும் சவால்களை நினைவூட்டுதலாகவும் இந்நாள் செயல்படுகிறது.

சர்வதேச மகளிர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இது ஒரே இரவில் உருவாக்கப்பட்டதல்ல. அடிப்படை உரிமைகளுக்கான பல தசாப்த கால போராட்டமே மகளிரை அங்கீகரிக்கும் நாளாக உருமாறியது.

1908ல் குறைந்த வேலை நேரம், சிறந்த ஊதியம்,வாக்களிக்கும் உரிமை ஆகியவற்றைக் கோரி நியூயார்க் நகரம் முழுவதும் சுமார் 15,000 பெண்கள் பேரணி நடத்தினர். 1910ல் உலகம் முழுவதும் பெண்களை ஒன்றிணைக்க கோபன்ஹேகனில் நடந்த ஒரு சர்வதேச மாநாட்டின் போது ஜெர்மன் ஆர்வலர் கிளாரா ஜெட்கின் ஆண்டுதோறும் மகளிர் தினத்தை முன்மொழிந்தார். 1917ல் ரஷ்ய பெண்கள் "ரொட்டி மற்றும் அமைதியைக்" கோரி ஒரு பெரிய போராட்டத்தை நடத்தினர். இது இறுதியில் ரஷ்யாவில் பெண்கள் வாக்களிக்கும் உரிமையைப் பெற வழிவகுத்தது. 1975ல் சர்வதேச மகளிர் தினத்தை ஐக்கிய நாடுகள் சபை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது. அதற்கு உலகளாவிய சட்டபூர்வமான தன்மையையும் தெரிவுநிலையையும் வழங்கியது. தொழிலாளர்களின் போராட்டமாகத் தொடங்கிய போராட்டம் இப்போது நீதி, சமத்துவம் மற்றும் கண்ணியத்திற்கான உலகளாவிய இயக்கமாக மாறியுள்ளது.

இந்த நாளில் அணிவகுப்புகள், கலந்துரையாடல்கள், விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடைபெறுகின்றன. பெண் தலைவர்களையும் மாற்றத்தை ஏற்படுத்துபவர்களையும் நிறுவனங்கள் அங்கீகரிக்கின்றன. பள்ளிகளும் பணியிடங்களும் பாலின சமத்துவத்தைப் பற்றி விவாதிக்கின்றன. சமூகங்கள் பெண்களின் பங்களிப்புகளைக் கொண்டாடுகின்றன.

ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு கருப்பொருளுடன் இன்றைய நாள் கொண்டாடப்படுகிறது. 2026 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய பிரச்சாரக் கருப்பொருள்: "Give to Gain"

இந்தக் கருப்பொருள், தனிநபர்கள், நிறுவனங்கள், அரசாங்கங்கள் பெண்களின் முன்னேற்றத்தில் முதலீடு செய்யும்போது அனைவரும் பயனடைவார்கள் என்ற சக்திவாய்ந்த கருத்தை எடுத்துக்காட்டுகிறது. இதனை ஊக்குவிக்கிறது. பெண்கல்வியை ஆதரித்தல், சமமான தொழில் வாய்ப்புகளை வழங்குதல், பெண் தலைவர்களை வழிநடத்துதல், மேம்படுத்துதல் மூலமாக இது சாத்தியமாகிறது.

"நமக்கு மகளிர் தினம் தேவையா? பெண்களுக்கு ஏன் ஒரு சிறப்பு நாள் இருக்க வேண்டும்" என சிலர் கேட்கிறார்கள். 

இன்றும் கூட உலகின் பல பகுதிகளில் பெண்கள் ஆண்களை விட குறைவாகவே சம்பாதிக்கிறார்கள். மில்லியன் கணக்கான பெண்கள் இன்னும் கல்வி பெறுவதற்கான வாய்ப்பு இல்லாமல் உள்ளனர். பெண்கள் மீதான வன்முறை, பாகுபாடு, சமமற்ற வாய்ப்புகள், தலைமைத்துவ பதவிகள் இன்னும் ஆண்களால் ஆதிக்கம் செலுத்தப்படுகின்றன. சமத்துவம் இன்னும் முன்னேற்றத்தில் இருப்பதால் சர்வதேச மகளிர் தினம் அவசியம்.

பெண் முன்னேற்றம் நின்றுவிடக்கூடாது என்பதைத் தான் இந்த நாள் உலகிற்கு நினைவூட்டுகிறது. பெண்களுக்குப் பெண்களே எதிரி என்பது போல பெருகி வரும் பெண்ணடிமை சமூகம் அச்சுறுத்தலாக மாறி வருவதைக் காண்கிறோம். பெண்கள் சமூகத்தில் வெறும் பங்கேற்பாளர்கள் மட்டுமல்ல. அவர்கள் அதன் அடித்தளம். அடுத்த தலைமுறையை வளர்க்கும் தாய்மார்கள், இளம் மனங்களை வடிவமைக்கும் ஆசிரியர்கள், மனித அறிவை விரிவுபடுத்தும் விஞ்ஞானிகள், சமூகங்களுக்கு உணவளிக்கும் விவசாயிகள், நாடுகளை வழிநடத்தும் தலைவர்கள், பொருளாதாரங்களை நிலைநிறுத்தும் தொழிலாளர்கள். ஆயினும்கூட, அவர்களின் உழைப்பில் பெரும்பகுதி, குறிப்பாக பராமரிப்பும் உணர்ச்சிப்பூர்வமான ஆதரவும் அங்கீகரிக்கப்படாமலும் ஊதியம் பெறாமலும் உள்ளது.

சர்வதேச மகளிர் தினம் இந்த கண்ணுக்குத் தெரியாத வலிமையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. மகளிர் தினம் பெண்களுக்கு மட்டுமல்ல.

இது மனித கண்ணியத்தைப் பற்றியது. பெண்கள் மதிக்கப்படும் உலகில் குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்கிறார்கள். சமூகங்கள் பாதுகாப்பானதாகின்றன. பொருளாதாரங்கள் வலுவடைகின்றன.

தனது குடும்பத்திற்காக தியாகம் செய்யும் தாய், தன் உடன்பிறப்புகளை ஆதரிக்கும் சகோதரி, நம்பிக்கையை ஊக்குவிக்கும் ஆசிரியர், கடினமான காலங்களில் நமக்கு அருகில் நிற்கும் தோழி என பெரும்பாலும் வலிமையான பெண்களைப் பற்றி வரலாறு ஒருபோதும் எழுதுவதில்லை. ஆனால் அவர்களின் தாக்கம் அளவிட முடியாதது. அது போலவே, பாலின சமத்துவம் என்பது "பெண்கள் பிரச்சினை" மட்டுமே அல்ல. இது ஒரு மனித பிரச்சினை. பெண் முன்னேற்றத்திற்கு ஆதரவும் பெண்களின் சாதனைகளைக் கொண்டாடும் செயல்களால் பெரிய கலாச்சார மாற்றங்களை உருவாக்க முடியும்.

ஒரு பெண் மென்மையானவளாக இருந்த போதிலும் சக்திவாய்ந்தவள். உணர்ச்சிவசப்பட்டாலும் தைரியமானவள். சுதந்திரமானவள். இந்த இரட்டை வலிமைதான் பெண்களை சமூகத்தை மாற்றி அமைப்பவர்களாக்குகிறது.

தற்போதைய நெருக்கடியில் உள்ள உலகிற்குப் பெண்களின் தலைமை தேவை.

போர்கள், புவிசார் அரசியல் மோதல்கள், காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் அழிவு, பொருளாதார உறுதியற்ற தன்மை, வளர்ந்து வரும் சமூகப் பிளவுகள்,மனிதாபிமான நெருக்கடிகள், இடம்பெயர்வு என நவீன உலகம் பல நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறது. பல தசாப்தங்களாக முன்னேற்றம் அடைந்திருந்தாலும், உலகின் பல பகுதிகளில் பெண்களின் உரிமைகள் இன்னும் பலவீனமாகவே உள்ளன. சில பிராந்தியங்களில் பெண்களின் கல்வி மீதான கட்டுப்பாடுகள், சம வேலைக்கு சமமற்ற ஊதியம், பாலின அடிப்படையிலான வன்முறை, இனப்பெருக்க உரிமைகள் மீதான வரம்புகள், அரசியலிலும் நிறுவனத் தலைமையிலும் குறைவான பிரதிநிதித்துவம், தலைமுறை தலைமுறையாக அடைய வேண்டிய உரிமைகள் தலைகீழாக மாற்றப்படுவது என பெண்களின் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

உலக தொழிலாளர் திறனில் பாதியை பெண்கள் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். கல்வி, வேலைவாய்ப்பு , அதிகாரம் பெற்றவர்களாக இருக்கும்போது வீட்டு வருமானம் அதிகரிக்கும். வறுமை குறையும். குழந்தைகள் சிறந்த கல்வியையும் சுகாதாரப் பாதுகாப்பையும் பெறுகிறார்கள். தேசியப் பொருளாதாரங்கள் விரிவடைகின்றன. செயற்கை நுண்ணறிவு, உயிர் தொழில்நுட்பம், டிஜிட்டல் பொருளாதாரங்கள், விண்வெளி ஆய்வு, உலகளாவிய தரவு அமைப்புகள் என உலகம் முன்னேறிச் சென்று கொண்டிருக்கும் வேளையில் சர்வதேச மகளிர் தினம் உலகளாவிய எச்சரிக்கை மணியாகச் செயல்படுகிறது. 

மகளிர் தினம் என்பது பெண்களை ஒரு நாள் கொண்டாடுவது மட்டுமல்ல.

பெண்களை மதிக்கும் சமூகம் வாழ்க்கையை மதிக்கிறது.
பெண்கள் உயரும்போது குடும்பங்கள் உயரும்.
குடும்பங்கள் உயரும்போது சமூகங்கள் உயரும்.
சமூகங்கள் உயரும்போது உலகம் உயரும்
என்ற எளிய உண்மையை ஆண், பெண் இருபாலரும் நினைவில் கொள்வது பற்றியது.

உலகம் விழிப்பதற்கு முன்பே
வீடுகளில்
கனவுகளில்
மென்மையான நம்பிக்கைகளில்
சிறிய விளக்குகளை ஏற்றி
அவள் விடியலாகிறாள்.

எதிர்பார்ப்புகள், மௌனங்கள்,
சொல்லப்படாத தியாகங்கள்
என நூற்றாண்டுகளின் பாரத்தை
தோள்களில் சுமந்திருந்தாலும்
உலர்ந்த மண்ணை கிழித்து
மேலெழும் ஒரு பிடிவாதப் பூ போல
மீண்டும் மீண்டும் எழுந்து
உலகிற்கு கற்றுக் கொடுக்கிறாள்
தாங்கும் மனம் எப்படி இருக்கும் என்று.

இன்று அவளுக்கான ஒரு நாள் மட்டுமல்ல.
அவள்தான் நாளைய மூச்சு.
அவளை வாழ்த்துங்கள்
வார்த்தைகளால் மட்டும் அல்ல
நியாயத்தால்
மரியாதையால்
சமத்துவத்தால்.

ஏனெனில்
ஒரு பெண் உயரும்போது
வானம் விரிவடைகிறது
எதிர்காலம் ஒளிரத் தொடங்குகிறது.

பெண்கள் அனைவருக்கும் சர்வதேச மகளிர் தின வாழ்த்துகள்!

No comments:

Post a Comment

சர்வதேச மகளிர் தினம்

"பெண்கள் இல்லாமல் சமூகம் முன்னேற முடியாது" என்பதை அங்கீகரிக்கும் விதத்தில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுவது தான் சர்வதேச மகளிர் தின...