Sunday, August 16, 2026

அழிக்கப்பட்ட புத்தகங்கள்… உருவான செயற்கை நுண்ணறிவு: அறிவின் புதிய போராட்டம்

என்ன தான் நடக்கிறது செயற்கை நுண்ணறிவு உலகில்? மனிதனின் மூளையாக செயல்பட, கணினிக்கு அறிவூட்ட எந்த எல்லை வரை நிறுவனங்கள் செல்கிறது? அறிவார்ந்த சமூகத்தின் தொடக்கமே இப்படி என்றால் யாரெல்லாம், எப்படியெல்லாம் பாதிக்கப்படப் போகிறார்கள். மேலும் வாசிக்க...


மனித நாகரிகத்தின் மிகப்பெரிய செல்வம் பணமோ, கட்டிடங்களோ, தொழில்நுட்பமோ அல்ல. அது அறிவு மட்டுமே. ஆதிமனிதன் குகைச் சுவர்களில் தனது அனுபவங்களை வரைந்த காலத்திலிருந்து, இன்று கணினி சில்லுகளில் தகவல்களைப் பதிவு செய்யும் காலம் வரை, தான் கற்றதை அடுத்த தலைமுறைக்கு எப்படி கொண்டு செல்வது என்று சிந்தித்த மனிதன் உருவாக்கிய சாதனம் தான் புத்தகம்.

ஒரு நல்ல புத்தகம் என்பது வெறும் காகிதமும் மையும் மட்டுமே அல்ல. அதன் பக்கங்களுக்குள் ஒரு மனிதனின் வாழ்க்கை அனுபவமும், பல ஆண்டுகள் சிந்தித்த ஒரு மனதின் தடமும், ஒரு காலத்தின் குரலும் இருக்கிறது. ஒரு தலைமுறையின் கனவுகள், கேள்விகள், கண்டுபிடிப்புகள், தோல்விகள், வெற்றிகள் அனைத்தும் அதற்குள் மறைந்திருக்கின்றன. அதனால்தான் உலகின் ஒவ்வொரு நாகரிகமும் சமுதாயத்தின் அறிவாக புத்தகங்களை மதித்தது. அந்தப் புத்தகங்களைப் பாதுகாக்கவே நூலகங்கள் உருவானது.

நூலகம் என்பது வெறும் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்ட ஒரு கட்டிடம் அல்ல. அது ஒரு சமூகத்தின் நினைவகம். அறிவைத் தேடி வருபவர்களுக்கும் ஒரு தலைமுறை கற்ற பாடங்களை, அனுபவங்களை அடுத்த தலைமுறை மறந்துவிடாமல் பாதுகாக்கும் பொக்கிஷ அறையாக இருப்பதால் தான் உலகின் மிகப் பழமையான நூலகங்கள் இன்றும் மனித நாகரிகத்தின் பெருமையாகப் பேசப்படுகின்றன. இதில் பல நூலகங்கள் போர்களில் எரிந்தும் வெள்ளத்தில் அழிந்தும் காலத்தின் தாக்கத்தாலும் சிதைந்து போகும்போதெல்லாம் அறிவார்ந்த மனிதகுலம் வருந்தியது. ஏனெனில் எரிந்தது புத்தகங்கள் மட்டுமல்ல. மனித நினைவுகளின் ஒரு பகுதியும் கூட.

இவ்வாறு கண்ணும் கருத்துமாகப் பேணி காத்து ஆயிரம் ஆண்டுகளாக மனிதர்களுக்காக எழுதப்பட்ட புத்தகங்கள் இப்போது மனிதர்களால் உருவாக்கப்பட்ட புதிய, உயிரற்ற “மாணவனுக்கு” பாடம் சொல்லிக் கொடுக்கின்றன. ஆம். “செயற்கை நுண்ணறிவு”(Artificial Intelligence – AI) தான் அந்த மாணவன்! மனிதர்களைப் போலவே கணினியால் கற்றுக்கொள்ள முடியுமா என்று சில ஆண்டுகளுக்கு முன்பு கேட்டிருந்தால் யோசித்திருப்போம். இப்பொழுது சாத்தியமாகிவிட்டது!

இன்று நம்மால் ஒரு செயற்கை நுண்ணறிவிடம் கேள்வி கேட்க முடிகிறது. அது கதை, கவிதை, கட்டுரை எழுதுகிறது. கணினி நிரலை உருவாக்குகிறது. மருத்துவ ஆராய்ச்சிக்கு உதவுகிறது. மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கிறது. சில நேரங்களில் நம்மோடு நண்பனைப் போல உரையாடவும் செய்கிறது.

இவ்வளவு விஷயங்களை அதற்கு யார் கற்றுக்கொடுத்தது?

பிறந்த குழந்தை தன்னைச் சுற்றி நடக்கும் செயல்களிலிருந்தும் மனிதர்களிடமிருந்தும் கல்வியின் மூலமும் அறிவை வளர்த்துக் கொள்கிறது. ஆனால் உலகைப் பார்க்க முடியாத செயற்கை நுண்ணறிவோ மனிதர்கள் எழுதியவற்றிலிருந்து தான் கற்றுக் கொள்கிறது. “சாட்ஜிபிடி (ChatGPT) அல்லது கிளாட் (Claude) புத்தகங்களைப் படிக்கிறதா?” என்றால் இல்லை என்பது தான் பதிலாகும்.

ஒரு மனிதன் ஒரு நாவலைப் படித்தால் கதாபாத்திரங்களை நினைவில் வைத்துக் கொள்வான். சம்பவங்களை உணர்வோடு அனுபவிப்பான். ஆனால் செயற்கை நுண்ணறிவு அப்படிப் படிப்பதில்லை. அது புத்தகத்தில் இருக்கும் கோடிக்கணக்கான சொற்களைக் கணித ரீதியாக ஆராய்கிறது. எந்தச் சொல் எந்தச் சொல்லுடன் அதிகமாக வருகிறது? ஒரு கேள்விக்குப் பொதுவாக எப்படி பதில் எழுதப்படுகிறது? ஒரு விஞ்ஞானக் கட்டுரை எப்படி அமைக்கப்படுகிறது? ஒரு கவிதையின் மொழிநடை எப்படி இருக்கிறது? ஒரு வரலாற்றுப் புத்தகம் எப்படி தகவல்களை அடுக்குகிறது? இப்படிப் பல கோடிக்கணக்கான தொடர்புகளை அது கண்டுபிடிக்கிறது.

ஒரு விதத்தில் பார்த்தால், மனிதன் அர்த்தத்தைப் புரிந்துகொண்டு கற்றுக்கொள்கிறான். செயற்கை நுண்ணறிவோ, வடிவங்களையும் (patterns) தொடர்புகளையும் கண்டறிந்து கற்றுக்கொள்கிறது. இதற்கு Large Language Model (LLM) என்று பெயர். அதாவது, “மொழியின் அமைப்புகளையும் தொடர்புகளையும் கற்றுக்கொள்ளும் மாபெரும் கணினி மாதிரி.” அதனால் தான் செயற்கை நுண்ணறிவு மாதிரிகளுக்குப் பயிற்சி அளிக்க மிகப் பெரிய அளவிலான தரவுகள் தேவைப்படுகின்றன.

ஒரு சிறந்த ‘AI மாதிரி’யின் திறன் அதன் கணினி சக்தியால் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை. அது கற்றுக்கொள்ளும் தரவின் “தரமும்” முக்கியம். ஒரு மாணவன் நல்ல ஆசிரியர்களிடம் கற்றால் அவன் அறிவு சிறப்பாக இருக்கும். அதேபோல் AIக்கும் தரமான மனித அறிவு தேவை. ஆனால் எல்லா தரவுகளும் ஒரே தரத்தில் இருப்பதில்லை. இணையத்தில் கொட்டிக்கிடக்கும் தகவல்களில் தவறான செய்திகள், உறுதி செய்யப்படாத தகவல்கள், தரமற்ற எழுத்துக்கள் இருக்கலாம். அதனால் மனிதர்கள் எழுதிய புத்தகங்கள் AI உலகில் முக்கியமானதாக மாறின.

புத்தகங்கள் என்பது ஆசிரியர்களின் பல ஆண்டுக்கால ஆராய்ச்சி, ஒழுங்குபடுத்தப்பட்ட தகவல்கள், பதிப்பாசிரியர்களின் திருத்தம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். அதனால் செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களுக்கு உயர்தரமான புத்தகங்கள் மிகவும் மதிப்புமிக்க பயிற்சி வளமாக மாறின.

அதற்காகத் தான் ‘Anthropic’ நிறுவனம் உலகம் முழுவதிலும் இருந்து புத்தகங்களை வாங்கியதோடு மட்டுமில்லாமல் பக்கங்களைத் தனித்தனியாகப் பிரித்தெடுத்து, ஒவ்வொரு பக்கத்தையும் மின்னணு வடிவமாக மாற்றிய பின்னர் அந்தப் புத்தகங்களைத் தூக்கி எறிந்தது! AIக்கு அறிவை கற்றுக்கொடுக்க, மனித அறிவின் அடையாளமான புத்தகங்களையே நாம் அழிக்கிறோமா? மனிதர்கள் பல ஆண்டுகள் உழைத்து உருவாக்கிய புத்தகங்களைச் செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள் தங்கள் மாதிரிகளுக்குப் பயிற்சி அளிக்கப் பயன்படுத்தலாமா போன்ற அதிர்ச்சிகரமான கேள்விகள் தான் இன்று உலகம் முழுவதும் விவாதிக்கப்படும் “ஆன்த்ரோபிக் புத்தக சட்ட விவகார”த்தின் மையம் ஆகும்.

ஆனால் ஆன்த்ரோபிக்கின் பார்வையில், “ அழிக்கப்பட்டது காகிதம். பாதுகாக்கப்பட்டது அதிலிருந்த தகவல். ஒரு மாணவன் ஆயிரம் புத்தகங்களைப் படித்துவிட்டு ஒரு புதிய புத்தகத்தை எழுதுகிறான். அவன் ஒவ்வொரு வரியையும் நகலெடுக்கவில்லை. அவன் கற்றுக்கொண்ட அறிவை புதிய சிந்தனையாக மாற்றுகிறான். செயற்கை நுண்ணறிவும் அதைத்தான் செய்கிறது. அது புத்தகங்களைச் சேமிப்பதில்லை. அவற்றிலிருந்து மொழியையும் கருத்து அமைப்புகளையும் கற்றுக்கொள்கிறது. அதுவும் ஒரு வகையான கற்றல் தான்” என்று வாதிட்டது.

இந்த இரண்டு கருத்துகளுக்கும் இடையேதான் இன்று உலகின் மிகப் பெரிய சட்ட, நெறிமுறை, சமூக விவாதம் நடைபெற்று வருகிறது. அதற்கான பதிலைத் தேடும் முக்கியமான சட்டப் போராட்டங்களில் ஒன்றுதான் ‘Bartz v. Anthropic’ என்ற வழக்கு. இது ஒரு நிறுவனத்துக்கும் சில எழுத்தாளர்களுக்கும் இடையிலான சாதாரண வழக்கு அல்ல. எதிர்காலத்தில், செயற்கை நுண்ணறிவு எவ்வாறு உருவாக்கப்படும்? எழுத்தாளர்களின் உரிமை எவ்வாறு பாதுகாக்கப்படும்? மனித அறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில் எவ்வாறு பயன்படுத்தப்படும்? போன்ற மிகப் பெரிய கேள்விகளுக்கான ஒரு முக்கியமான முன்னுதாரணமாக மாறியது.

ஆகஸ்ட் 19, 2024 அன்று, அமெரிக்காவின் கலிபோர்னியா வடக்கு மாவட்ட கூட்டாட்சி நீதிமன்றத்தில் மூன்று எழுத்தாளர்கள், ஆண்ட்ரியா பார்ட்ஸ் (Andrea Bartz), சார்லஸ் கிரேபர் (Charles Graeber), கிர்க் வாலஸ் ஜான்சன் (Kirk Wallace Johnson) தங்களுக்காக மட்டுமல்லாமல், தங்களுடைய படைப்புகள் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டதாகக் கருதிய பல எழுத்தாளர்களின் சார்பாகவும் “Claude” என்ற செயற்கை நுண்ணறிவு உதவியாளரை உருவாக்கிய ஆன்த்ரோபிக் (Anthropic) நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்தனர்.

எழுத்தாளர்களின் முக்கிய குற்றச்சாட்டு, ஆன்த்ரோபிக் பல லட்சக்கணக்கான பதிப்புரிமை பெற்ற புத்தகங்களை உரிய அனுமதி இல்லாமல் பயன்படுத்தி தனது செயற்கை நுண்ணறிவு மாதிரியைப் பயிற்சி செய்துள்ளது. அது மட்டுமில்லாமல், சில காலகட்டங்களில் அனுமதியற்ற இணைய மூலங்களில் இருந்து பெறப்பட்ட மின்னூல்கள் ஒரு பெரிய டிஜிட்டல் தொகுப்பாக சேமிக்கப்பட்டு செயற்கை நுண்ணறிவு மாதிரிகளுக்குப் பயிற்சி அளிக்கப் பயன்படுத்தப்பட்டன. “எங்கள் பல ஆண்டுகால படைப்பாற்றலும் உழைப்பும் எங்களிடம் அனுமதி பெறாமல் ஒரு வணிக நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படக் கூடாது.” என்ற வாதத்தை அவர்கள் முன்வைத்தனர்.

இந்த விவாதம் மேலும் தீவிரமானதற்குக் காரணம், உலகம் முழுவதும் சில புத்தக விற்பனையாளர்கள் மிகப்பெரிய அளவிலான புத்தக ஆர்டர்களைப் பெற்றுள்ளனர். “யார் இவ்வளவு புத்தகங்களை வாங்குகிறார்கள்? எதற்காக வாங்குகிறார்கள்? AI நிறுவனங்களுக்காகவா” என்ற கேள்விகள் எழுந்தன. ISBNdb, Zoom Books போன்ற நிறுவனங்களின் பெயர்களும் பேசப்பட்டு உறுதி செய்யப்படவில்லை. AI உலகிற்கு மிகப்பெரிய அளவில் தரமான தரவுகள் தேவைப்படுகிறது என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது.

இருந்தாலும், கோடிக்கணக்கான ரூபாய் செலவழித்து சட்டப்படி வாங்கி பயன்படுத்திய புத்தகங்களை ஏன் தூக்கி ஏறிய வேண்டும்? அவற்றைப் பாதுகாக்க வேண்டாமா? நூலகங்களில் வைத்து அடுத்த தலைமுறைக்காக காக்க வேண்டாமா? அவற்றை அழிப்பதில் என்ன அர்த்தம்? இது அறிவுக்கு எதிரான செயலா? அல்லது நம்மால் இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்ளப்படாத ஒரு புதிய உலகின் தொடக்கமா? என்று பலவித கேள்விகளை எழுப்பியுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த அமெரிக்க மாவட்ட நீதிபதி வில்லியம் ஆல்சப் (Judge William Alsup), 2025 ஜூன் 23 அன்று, இரண்டு விஷயங்களைத் தனித்தனியாகப் பார்த்து முக்கியமான தீர்ப்பை வழங்கினார்.

1. சட்டப்படி வாங்கப்பட்ட புத்தகங்களை AI பயிற்சிக்குப் பயன்படுத்துவது

“ஒரு நிறுவனம் சட்டப்படி புத்தகங்களை வாங்கி, அவற்றை உள்நாட்டு செயற்கை நுண்ணறிவு பயிற்சிக்காகப் பயன்படுத்துவது Fair Use (நியாயமான பயன்பாடு) என்ற அமெரிக்கப் பதிப்புரிமை விதிக்குள் வருவதால் சட்டப்படி பெற்ற புத்தகங்களை AI கற்றலுக்குப் பயன்படுத்துவது சட்டவிரோதம் அல்ல” என்று ஆன்த்ரோபிக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தது. இது செயற்கை நுண்ணறிவு துறைக்குக் கிடைத்த மிக முக்கியமான வெற்றியாகக் கருதப்பட்டது.


2. திருட்டு மூலங்களில் இருந்து பெறப்பட்ட புத்தகங்கள்

அனுமதியற்ற மூலங்களில் இருந்து பெறப்பட்ட புத்தகங்களைச் சேகரித்தது “பதிப்புரிமை மீறல்” என்று இந்த முக்கியமான விஷயத்தில் நீதிமன்றம் எழுத்தாளர்களின் தரப்பை ஏற்றுக்கொண்டது. ஒரு தொழில்நுட்ப நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்டாலும், திருட்டுத்தனமாகப் பெறப்பட்ட படைப்புகளுக்குச் சட்டப் பாதுகாப்பு கிடையாது என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.

இதனால் இந்த வழக்கில், சட்டப்படி பெறப்பட்ட புத்தகங்களை AI பயிற்சிக்குப் பயன்படுத்தலாம் என்ற முக்கியமான சட்ட ஆதரவு ஆன்த்ரோபிக்குக் கிடைத்த வெற்றியாகவும் அனுமதியற்ற முறையில் பெறப்பட்ட புத்தகங்களைப் பயன்படுத்துவது பதிப்புரிமை மீறல் என்ற அங்கீகாரம் எழுத்தாளர்களுக்குக் கிடைத்த வெற்றியாகவும் பார்க்கப்பட்டது. “AI பயிற்சியின் நோக்கம் சட்டபூர்வமாக இருக்கலாம். ஆனால் தரவைப் பெறும் வழியும் சட்டபூர்வமாக இருக்க வேண்டும்” என்பதே இந்த வழக்கின் தீர்ப்பாக அமைந்தது.

பதிப்புரிமை தொடர்பான பிரச்சினைகளை நீண்ட நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துச் செல்லாமல் ஆன்த்ரோபிக் சமரசத் தீர்வை ஏற்றுக்கொண்டது. சுமார் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டது. இந்தத் தொகை பதிப்புரிமை வழக்குகளில் உலகின் மிகப்பெரிய சமரசத் தொகைகளில் ஒன்றாகக் கருதப்பட்டது.

‘ஆன்த்ரோபிக் வழக்கு’ ஒரு நிறுவனத்தின் பிரச்சினை மட்டும் அல்ல. “மனித அறிவை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் செயற்கை நுண்ணறிவின் பலனில், அந்த அறிவை உருவாக்கிய மனிதர்களின் பங்கு என்ன” என்ற முக்கியமான கேள்வியையும் முன்வைத்தது.

AI, மனித அறிவின் அடுத்த கட்ட வளர்ச்சியாக இருக்கலாம். ஆனால் அந்த வளர்ச்சி நியாயமானதாக இருக்க வேண்டுமானால், எழுத்தாளர்களின் உழைப்பு மதிக்கப்பட வேண்டும். அறிவின் மூலங்கள் வெளிப்படையாக இருக்க வேண்டும். தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் மனித உரிமைக்கும் சமநிலை தேவை என்பதை இந்த வழக்கின் மூலம் உணர்த்தியுள்ளது.

ஒவ்வொரு தொழில்நுட்பப் புரட்சியும் ஒரு புதிய வாய்ப்பை மட்டுமல்ல, ஒரு புதிய பொறுப்பையும் மனிதகுலத்தின் தோள்களில் சுமத்துகிறது. தற்பொழுது செயற்கை நுண்ணறிவின் பார்வையில் புத்தகங்கள் வெறும் தரவுகளா என்ற ஆழமான கேள்வியையும் எழுப்பியுள்ளது.

ஒவ்வொரு புரட்சியும் பயத்தையும் நம்பிக்கையையும் ஒன்றாகக் கொண்டு வருகிறது. எனவே, “செயற்கை நுண்ணறிவு நல்லதா, கெட்டதா?” என்பது அல்ல. அதை நாம் எப்படிப் பயன்படுத்தப் போகிறோம் என்பதை முடிவு செய்ய வேண்டியது மனிதர்கள்தான். 

அறிவுக்கு வழிகாட்டியாக இருப்பது அறம். எதைச் செய்ய முடியும் என்று அறிவு சொல்லும். எதைச் செய்ய வேண்டும் என்று அறம் சொல்லும். அது சட்டத்தின் பொறுப்பு. அரசுகளின், தொழில்நுட்ப நிறுவனங்களின் பொறுப்பு. அதைவிட முக்கியமாக, அறத்துடன் செயல்படவேண்டியது நம் ஒவ்வொருவரின் பொறுப்பு.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக புத்தகங்கள் மனிதர்களின் ஆசிரியர்களாக, நம் முன்னோர்களின் குரல்களாக, நம் தவறுகளை நினைவூட்டி, வெற்றிகளைப் பதிவு செய்து, கனவுகளுக்கு இறக்கைகள் கொடுத்தன. இன்று, அதே புத்தகங்கள் செயற்கை நுண்ணறிவு என்னும் புதிய மாணவனுக்குப் பாடம் சொல்லிக் கொண்டிருக்கின்றன. இந்த மாற்றத்தை நாம் பயத்தோடு பார்க்க வேண்டியதில்லை. கண்மூடித்தனமான உற்சாகத்தோடும் பார்க்கக் கூடாது. மாறாக, பொறுப்புணர்வுடன், சமநிலையுடன், தொலைநோக்குப் பார்வையுடன் அணுக வேண்டும்.

ஏனெனில், புத்தகங்கள் காகிதத்தால் மதிப்புப் பெறவில்லை. அவற்றை எழுதிய மனிதர்களின் சிந்தனையால் மதிப்புப் பெற்றன.

அதேபோல, செயற்கை நுண்ணறிவு அதன் கணக்கிடும் திறனால் மட்டுமே உயர்ந்ததாக மாறாது. மனித அறிவையும், மனித மதிப்புகளையும், மனிதநேயத்தையும் மதிப்பதில் தான் அதன் உண்மையான மதிப்பு தீர்மானிக்கப்படும்.


இதயம் முரளியும் நூறுசாமியும்

80களில் காதலைச் சொல்லத் தெரியாமல் அலைந்த முரளிகள் உண்டு தான். அதுக்காக இப்படியா? பாவம் அதர்வா. செயற்கையான நடிப்பில் ஒரு பள்ளி ஆசிரியை. பரிதாப கதாபாத்திரத்தில் ஒரு நல்ல மலையாள நடிகரை வீண்டித்திருக்கிறார்கள். நண்பர்கள் என்று ஒரு பரிதாப கோஷ்டி. ஐயோ பாவம் தமன். ஏன் ப்ரோ? மியூசிக் மட்டும் போட்டுட்டு போயிட்டே இருக்க வேண்டியது தான? இந்த பரிதாபங்கள் சுதாகர்லாம்… அதே கோணல்மூஞ்சி சேட்டைகள். சுத்தமாக எடுபடவில்லையா அல்லது ரீல்ஸ் பார்த்து பழகிப்போனதால் பிடிக்கவல்லையா🥱 

தேவையற்ற பாடல் காட்சிகள். பாவம் ஒட்டாத கதையில வேற என்னத்த பண்ண முடியும்? எனக்கென்னன்னு செலவழிச்சிருக்காங்க. ஊழல் பணம் படுத்தற பாடு  இந்‌த கண்றாவில்லாம் படமா வருது. முற்போக்கு பெண்கள் என்றால் குடி, புகை என்றிருக்க வேண்டும் தீராவிடம் என்றால் பிராமணரை இழிவுப்படுத்த வேண்டும். அதற்கேற்றாற்போல் வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவது போல் சில காட்சிகள்.

இரண்டு கதாநாயகிகள் இருக்கிறார்கள். கல்லூரி காலத்திலிருந்து ஒரு தலைக் காதலைச் சுமந்து கொண்டு இன்று வரை அலைபவர்கள் ஒரு முறையேனும் தங்களுடைய காத்லைச் சொல்லிவிட மாட்டோமோ என்று கல்லூரி கெட்டுகதர்களுக்குப் போகிறார்கள். அவனும் சொல்லிவிட மாட்டானா என்று பெண்களும் ஒன்றும் தெரியாத மாதிரி செல்ஃபி எடுத்துக்கொண்டிருக்கும் காலமிது. ஒருவேளை, அவர்களுக்குப் பிடிக்குமோ என்னவோ?

ஒரு காதல் முறிந்தவுடன் அடுத்த காதலை நோக்கி் நகர்ந்து கொண்டேயிருக்கும் தலைமுறை இது. இப்ப போய்🥱🥱🥱

“அய்யோ கொல்றாங்களே” அன்றே அலறினார் ஒருவர். அவர் பேரன் பலரையும்😏😏😏

மொக்கையிலும் மொக்கை சூர மொக்கை ‘இதயம் முரளி’ படம்.

😆😆😆

மனசு கேட்கலைன்னு அடுத்தநாள் ‘நூறுசாமி’ன்னு ஒரு படம். உண்மையில் நடந்த கதை. என்னதான் இந்த மண்ணு, அந்த மண்ணெண்ணெய்னு சொன்னாலும் கணவனை இழந்தப் பெண்களின் மறுமணம் என்பது இன்னும் சமூக அவலமாகவே பார்க்கப்படுகிறது. கௌரவக்கொலை வரைக்கும் செல்கிறது! கொடுத்த கதாபாத்திரத்திற்கு குறைவில்லாமல் நடித்திருக்கிறார் சுவாசிகா. இளம்வயதில் கணவனை இழந்தப் பெண்களைப் புரிந்து கொள்ளாத சமூகம். ஏக்கமும், பொறுப்புகளும், ஏச்சுபேச்சுகளைச் சுமக்கும் பெண்களுக்குப் பெண்களும் எதிரிகளாக இருப்பது சாபம். கடைசி சில நிமிடங்களே வந்தாலும் விஜய் ஆண்டனியின் கதாபாத்திரம் இப்பேர்ப்பட்ட ஆண்களும் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையைத் தருகிறது. ஆணினத்தால் ஏற்பட்ட அவலத்தை ஆணினம் தான் சரி செய்யணும். அப்படி ஒரு சாமி முன்வந்த கதை. பார்க்கலாம்.

🙂🙂🙂

ஆடிப்பூரம்


ஆடி மாதம் என்றதும் அம்மனின் நினைவுகள் தான் ஓடோடி வரும். அதுவும் வெள்ளிக்கிழமையென்றால் கேட்கவே வேண்டாம். குழந்தைகள் பள்ளியில் படிக்கும் காலத்தில் கோடைவிடுமுறையின் பொழுது ஊருக்குச் செல்லும் இந்த மாதத்தில், வெகுதூர சாலையோர கோவிலில் இருந்து ஆடி மாதக்காற்றில் எல்.ஆர்.ஈஸ்வரியின் 'செல்லாத்தா செல்ல மாரியாத்தா' பாடல் மெல்ல காதை வருடும். சிகப்பு, மஞ்சள் சீலைகளை உடுத்திக் கொண்டு ஓம்சக்தி, சமயபுரம், மாரியம்மன் கோவில்களுக்கு வேண்டி, விரதமிருந்து சாரை, சாரையாக பெண்கள் சென்று கொண்டிருப்பார்கள். அம்மனைக் கொண்டாடும் இந்த மாதத்தில் தான் 'ஆடிப்பூர' திருநாளும் வருகிறது. இந்த வருடம், இன்று ஆகஸ்ட் 14, அந்நன்னாள் என்று நாம் அனைவரும் அறிவோம்.

ஆடிப்பூரம், ஆண்டாள் அவதரித்த நாள் என்பதால் ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீரங்கம், திருமாலிருஞ்சோலை மற்றும் அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்புற கொண்டாடப்படும் திருநாளாகும். ஆண்டாள் என்றதும் அழகிய கொண்டை, கிளி, மாலை என்று ஒன்றன்பின் ஒன்றாக நினைவுகள் வரும். பன்னிரு ஆழ்வார்களில் ஒரே பெண் கவி அல்லவா? தமிழின் மகத்துவத்தை, காதலை, பக்தியை திருப்பாவை, நாச்சியார் திருமொழி வாயிலாக நமக்கு வழங்கிய பெண் கடவுள். அவதாரம் எடுத்ததே அந்த ரங்கநாதனைச் சேரவே என்று பக்தியை ஊட்டியவள்.

வைணவ மரபுப்படி, ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் (விஷ்ணுசித்தர்) தமது நந்தவனத்தில் துளசிச் செடியருகே இருந்த குழந்தையைக் கண்டெடுத்து, 'கோதை' என்று பெயரிட்டு வளர்த்து வந்தார். அந்தக் கோதைதான் பின்னாளில் 'ஆண்டாள்' ஆனாள். ஒரு சிறுமியாகத் தொடங்கிய வாழ்க்கை, காதலைக் கவிதையாக்கி, பக்தியைத் தமிழாக்கி, ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் வாழும் ஒரு பெண் குரலாக மாறியது.

அந்தக் கோதையை நினைவுகூரும் திருநாள்தான் ஆடிப்பூரம்.

தமிழ் வைணவ பக்தி இலக்கியத்தில் பன்னிரு ஆழ்வார்களுக்கு மிகச் சிறப்பான இடம் உண்டு.

பெருமாளின் மீது கொண்ட பேரன்பையும் பக்தியையும் அவர்கள் அழகிய தமிழ்ப் பாசுரங்களாகப் பாடினர். அந்தப் பன்னிரு ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வார் ஆண்டாள். அவருடைய இரண்டு முக்கியமான படைப்புகள், திருப்பாவை - 30 பாசுரங்கள், நாச்சியார் திருமொழி - 143 பாசுரங்கள். இந்த இரண்டு படைப்புகளும் தமிழின் பக்தி இலக்கியத்தில் அழியாத இடத்தைப் பெற்றுள்ளன. ஆண்டாளின் பெருமை அவர் ஒரு பெண் ஆழ்வார் என்பதில் மட்டும் இல்லை. தன் உள்ளத்தில் எழுந்த காதலை மறைக்காமல், அதை இறைவன் மீதான பக்தியாகவும், அந்த பக்தியை உயர்ந்த தமிழ்க் கவிதையாகவும் மாற்றியவர் அவர்.

ஆண்டாளின் கவிதைகளில் இறைவன் தொலைவில் இருக்கும் ஒரு தெய்வம் அல்ல. அவர் அவளுடைய மணாளன். அவரை அடைய வேண்டும் என்ற ஏக்கம் அவளுடைய கவிதைகளில் மீண்டும் மீண்டும் வெளிப்படுகிறது. அதனால் ஆண்டாளின் பாடல்களில் பக்தியும் காதலும் ஒன்றுக்கொன்று பிரிக்க முடியாத அளவுக்கு இணைந்திருக்கின்றன. மலர்களைத் தொடுத்து மாலையாக மட்டும் அல்ல மனதையும் சேர்த்து மாலவனிடம் அன்பு பாராட்டியவள். "மார்கழித் திங்கள்…" என்று தொடங்கும் திருப்பாவை, தமிழ்நாட்டைத் தாண்டி உலகெங்கும் உள்ள வைணவக் கோயில்களிலும் வீடுகளிலும் ஒலிப்பவை. முப்பது பாசுரங்கள்.

முப்பது நாட்கள், மார்கழியின் ஒவ்வொரு காலையிலும் ஒரு பாசுரம் என்று ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்றும் வைணவத் திருத்தலங்களில் பாடப்பெற்று வரும் காலத்தால் அழியாத பாடல்கள்.

ஆண்டாளின் இன்னொரு முக்கியமான படைப்பு 'நாச்சியார் திருமொழி'. திருப்பாவையைவிட இங்கு ஆண்டாளின் தனிப்பட்ட ஏக்கம் இன்னும் வெளிப்படையாகக் கேட்கிறது. இதிலும் காதல், கனவு, பிரிவின் வலி, ஏக்கம், இறைவனை அடைய வேண்டும் என்ற தீவிரமான விருப்பம் இருக்கிறது. அதில் மிகவும் புகழ்பெற்ற பகுதி “வாரணம் ஆயிரம்”. ஆயிரம் யானைகள் சூழ, மணமகன் வருகிறான். திருமண நிகழ்வுகள் நடைபெறுகின்றன. தோரணங்கள் கட்டப்படுகின்றன... என்று ஆண்டாள் காணும் கனவுத் திருமணத்தின் காட்சிகள் அதில் விரிகின்றன. அதனால் தான் இன்றும் பல தமிழ் வைணவத் திருமணங்களில் "வாரணம் ஆயிரம்" பாசுரங்கள் ஒலிக்கின்றன.

ஒரு பெண்ணின் கனவு, ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் இன்னொரு பெண்ணின் திருமணக் கனவின் ஒரு பகுதியாக இருப்பது எவ்வளவு அழகானது!

ஆடிப்பூரம் வந்துவிட்டால் ஸ்ரீவில்லிபுத்தூர் முழுவதுமே திருவிழாக் கோலமெடுக்கும். முக்கியமாக ஆண்டாள் தேரோட்டம் திருவிழாவின் மிகப்பெரிய நிகழ்வுகளில் ஒன்றாக விளங்குகிறது. சில நாட்கள் அங்கு தங்கி ஒரே ஒரு முறை அந்தக் கோவிலுக்குச் செல்லும் பாக்கியம் கிடைத்தது. மீண்டும் ஒருமுறை செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். பார்க்கலாம்.

ஆண்டாளின் வாழ்க்கைக் கதையில் இன்னொரு முக்கியமான நகரம், ஸ்ரீரங்கம்.

காவிரியின் நடுவே அமைந்துள்ள நகரில் பள்ளிகொண்டிருக்கும் ஸ்ரீரங்கநாதர், ஆண்டாளின் மனதில் வெறும் தெய்வமாக இல்லாமல் அவளுடைய மணாளானாக இருந்ததால், வைணவ மரபில், ஆண்டாள் இறுதியில் ரங்கநாதருடன் தெய்வீகமாக ஒன்றிணைந்ததாக நம்பப்படுகிறது. அதனால் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ஸ்ரீரங்கம் வரை செல்லும் ஆண்டாளின் கதை, ஒரு பக்தையின் பயணமாக மட்டுமல்ல, இறைவனைத் தன் வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுத்த ஒரு பெண்ணின் ஆன்மிகப் பயணமாகவும் பார்க்கப்படுகிறது.

மதுரைக்கு அருகில் உள்ள திருமாலிருஞ்சோலை அழகர் கோயிலும் ஆண்டாளின் பாசுரங்களுடன் நெருங்கிய தொடர்புடையது. 'நாச்சியார் திருமொழி'யில் திருமாலிருஞ்சோலை அழகரைப் பற்றிய ஆண்டாளின் பக்தி வெளிப்படுகிறது. அவளுடைய கற்பனையில் இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறார்.

இறைவனைத் தேடும் மனத்திற்கு உலகமே ஒரு கோயிலாகிறது.

வேகமாக மாறிக்கொண்டிருக்கும் உலகில், அன்பு, ஏக்கம், கனவு, நம்பிக்கை, சரணாகதி போன்ற மனித மனத்தின் சில உணர்வுகள் மட்டும் மாறுவதில்லை. இவை அனைத்தையும் ஆண்டாள் தன் பாடல்களில் உயிர்ப்போடு வைத்திருக்கிறாள். அதனால் ஆண்டாளைப் படிப்பது வெறும் பக்தி இலக்கியத்தைப் படிப்பது அல்ல. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு தமிழ் பெண்ணின் உள்ளத்தைக் கேட்பது. இன்றும் பாடப்படும் ஒவ்வொரு திருப்பாவையிலும், ஒலிக்கும் ஒவ்வொரு “வாரணம் ஆயிரம்” வரியிலும், மார்கழிக் காலையின் ஒவ்வொரு கோலத்திலும் தமிழின் இதயமாக ஆண்டாள் என்றும் வாழ்வாள்.

இனிய ஆடிப்பூர நல்வாழ்த்துகள்! 🙏🌸

Thursday, August 6, 2026

ஆடிக்கிருத்திகை


"குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்" என்று தமிழர்கள் போற்றும் முருகப் பெருமானின் வழிபாட்டில் கிருத்திகை நட்சத்திரம் மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. குறிப்பாக ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை, "ஆடிக்கிருத்திகை" என்று அழைக்கப்பட்டு, முருக பக்தர்களால் மிகுந்த பக்தியுடன் அனுசரிக்கப்படுகிறது.

இது வெறும் ஒரு விரத நாள் மட்டுமல்ல. தீமையை அழித்து ஞானத்தை நிலைநாட்டும் தெய்வீக சக்தியின் பிறப்பை நினைவுகூரும் நாள் என்று புராணங்கள் விளக்குகின்றன. முருகனின் அவதாரக் கதை சிவபுராணம், ஸ்கந்த புராணம், கந்த புராணம் போன்ற நூல்களில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

ஒரு காலத்தில் சூரபத்மன் என்ற அசுரன் கடுமையான தவம் செய்து, பல வரங்களைப் பெற்றான். அந்த சக்தியால் அவன் தேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத்தத் தொடங்கினான். தேவர்கள் சிவபெருமானைச் சரணடைந்து, அந்த அசுர சக்தியை அழிக்க வேண்டினர்.

சிவபெருமான் தமது ஞானக் கண்ணான நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு தீப்பொறிகளை வெளிப்படுத்தினார். அந்த தீப்பொறிகள் சாதாரண நெருப்பு அல்ல. அவை தெய்வீக ஞான சக்தியின் வடிவங்கள்.

அந்த தீப்பொறிகளை வாயு தேவனும், அக்னி தேவனும் தாங்கிச் சென்று, சரவணப் பொய்கை எனும் புனித நீர்நிலைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அந்த ஆறு தீப்பொறிகளும் ஆறு குழந்தைகளாகத் தோன்றின. அந்த ஆறு குழந்தைகளையும் கிருத்திகை நட்சத்திரத்தைச் சேர்ந்த ஆறு தேவப் பெண்கள் வளர்த்தனர்.


முருகனின் ஆறு முகங்கள் வெறும் உருவ அமைப்பு அல்ல. அவை ஆழமான ஆன்மீகக் குறியீடுகள்.


ஞான முகம் - அறியாமையை அகற்றி உண்மையை உணரச் செய்கிறது.
வீர முகம் - தர்மத்திற்காகப் போராடும் துணிவைக் குறிக்கிறது.
கருணை முகம் - பக்தர்களின் துயரை நீக்கும் அன்பைக் குறிக்கிறது.
ஒழுக்க முகம் - நல்ல வாழ்க்கை முறையை உணர்த்துகிறது.
அருள் முகம் - இறைவனின் கருணையை வெளிப்படுத்துகிறது.
ஆனந்த முகம் - ஆன்மீக நிறைவை உணர்த்துகிறது.

அதனால் முருக வழிபாடு என்பது வெளிப்புற வேண்டுதல்களை மட்டும் நிறைவேற்றுவது அல்ல. மனிதனுக்குள் இருக்கும் ஆறு எதிர்மறை குணங்களை வெல்லும் பயணம் என்றும் பார்க்கப்படுகிறது.

முருகனின் கையில் இருக்கும் வேல், சூரபத்மனை அழிக்கும் ஆயுதமாக பார்வதி தேவி முருகனுக்கு வழங்கியதாகப் புராணங்களில் கூறப்படுகிறது. ஆனால் ஆன்மீக பார்வையில், வேல் என்பது ஞானம். கூர்மை என்பது தெளிவு. எதிரியை அழித்தல் என்பது நம்முள் இருக்கும் அறியாமையை அழித்தல் என்று பொருள் கொள்ளப்படுகிறது.
அது போலவே, சூரபத்மன் என்பது வெளியில் இருக்கும் ஒரு அசுரன் மட்டுமல்ல. மனிதனுக்குள் இருக்கும் அகந்தை, பேராசை, பொறாமை, கோபம் போன்ற குணங்களின் அடையாளமாகவும் கருதப்படுகிறது.

இதனால் ஆடிக்கிருத்திகை என்பது ஒரு நட்சத்திர நாளை மட்டும் கொண்டாடுவது அல்ல. அது முருகனின் அவதார மகிமையையும், தெய்வீக ஞானத்தின் வெற்றியையும், மனிதனுக்குள் இருக்கும் நல்ல சக்தியின் விழிப்பையும் கொண்டாடும் திருநாள்.

முருகனின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை தலங்களில் இந்த நாள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை வழிபடுகின்றனர்.

முருகனின் பிறப்பு கதை ஒரு புராண நிகழ்வு மட்டுமல்ல, அது மனித வாழ்க்கைக்கான ஒரு உவமையும் கூட. சிவனின் ஞானத் தீப்பொறி நமக்குள் இருக்கும் உயர்ந்த சிந்தனையையும், சரவணப் பொய்கை நம் மனதின் தூய்மையையையும், வேல் நம் அறியாமையை வெல்லும் அறிவைக் குறிக்கிறது. சூரபத்மன் நம் உள்ளே இருக்கும் எதிர்மறை எண்ணங்களைக் குறிக்கிறான்.

அதனால் ஆடிக்கிருத்திகை என்பது, "இருளிலிருந்து ஒளிக்குச் செல்லும் ஆன்மீகப் பயணத்தை நினைவூட்டும் நாள்."

இத்திருநாளில் கிருத்திகைப் பெண்களின் அன்பில் வளர்ந்தவன், சூரனை வென்ற வீரன், ஞானத்தை அருளும் குருநாதன் அந்த ஆறுமுகப் பெருமானின் அருள் ஒவ்வொருவரின் வாழ்விலும் ஒளியாக விளங்கட்டும்.

"ஓம் சரவணபவ!"

Sunday, August 2, 2026

அமெரிக்காவின் புதிய தங்க வேட்டை- AI உருவாக்கும் புதிய கோடீஸ்வரர்கள்

'நிவிடியா' நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான ஜென்சென் ஹுவாங் "இன்னும் ஐந்து வருடங்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் பல மில்லியனர்கள் உருவாகும் வாய்ப்புகள் இருக்கிறது" என்று 2025ல் கூறியிருந்தார். அந்தக் கூற்று தற்பொழுது உண்மையாகி வருகிறது என்பதை விவரிக்கிறது சொல்வனத்தில் வெளியாகியுள்ள இந்தக்கட்டுரை.



கிராமப்புற அமெரிக்காவில் விவசாய நிலம் வைத்திருப்பது பெரும் செல்வத்திற்கான அறிகுறியாக இருந்ததொரு காலம் உண்டு. குறைந்து வரும் லாபம், அதிகரித்து வரும் செலவுகள், நிச்சயமற்ற எதிர்காலம் ஆகியவற்றால் பல விவசாயக் குடும்பங்கள் போராடி வரும் நிலையில், நிலங்கள் பெரும்பாலும் நிதி மதிப்பை விட உணர்வுப்பூர்வமான மதிப்பையே கொண்டிருக்கிறது. ஆனால் சமீபத்திய தொழில்நுட்பப் புரட்சி அந்தக் கதையை மாற்றி எழுதப் போகிறது என்பது தான் சுவாரஸ்யமே!

செயற்கை நுண்ணறிவு(AI) தொழில்நுட்பம் , தரவு மையங்களுக்கான தேவையை முன்னெப்போதும் இல்லாத அளவிற்குத் தூண்டியுள்ளது. இந்த புதிய AI சகாப்தத்தில், அமெரிக்காவின் மிகவும் மதிப்புமிக்க சொத்துக்களில் ஒன்று இனி பூமிக்கு அடியில் மறைந்திருக்கும் எண்ணையோ அல்லது இயற்கை எரிவாயுவோ அல்ல. அது பூமிக்கு மேலே உள்ள நிலம்தான்.

இந்த மாற்றம் தான் முற்றிலும் புதிய கோடீஸ்வரர்கள் வர்க்கத்தை உருவாக்கி வருகிறது.

இதற்கு ஒரு குறிப்பிடத்தக்க உதாரணம், வடகிழக்கு பென்சில்வேனியாவில் உள்ள சேலம் டவுன்ஷிப்பில் அரங்கேறியுள்ள சம்பவம்தான். அங்கு பல தசாப்தங்களாக டேவிட்டும் மாரிலீ கிலிட்டியும் தங்களின் 89 ஏக்கர் பண்ணையில் கடுமையாக உழைத்து வந்தனர். பன்றிகளை வளர்ப்பது அவர்களுக்கு ஒருபோதும் பெரும் செல்வத்தைக் கொண்டுவரவில்லை. ஒரு கட்டத்தில் அவர்கள் தங்கள் விவசாயத் தொழிலை விரிவுபடுத்த முயன்று கடனில் மூழ்கி, அண்டை வீட்டாரிடமிருந்து கடுமையான எதிர்ப்பையும் எதிர்கொண்டனர். பல ஆண்டுகளாக நிதிப் போராட்டங்கள் அவர்களின் அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாகவே இருந்தன.

பின்னர் எல்லாம் மாறிவிட்டது. எப்படி?

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நில மேம்பாட்டாளர்கள் அந்தத் தம்பதியினரை அணுகி நம்பவே முடியாத ஒரு சலுகையை வழங்கினர். ஒரு சாதாரண விலைக்கு மட்டுமே விற்க முடியும் என்று அவர்கள் நினைத்திருந்த அவர்களின் பண்ணை திடீரென்று 22 மில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புடையதாக மாறியது.

அதற்குக் காரணம் விவசாயம் அல்ல.

அவர்களுடைய சொத்து ஒரு பெரிய செயற்கை நுண்ணறிவு(AI) தரவு மையத்திற்கு மிகச்சரியான இடமாக மாறியிருந்ததே காரணமாகும்.

கிலிட்டி குடும்பத்தினர் மட்டும் இல்லை. சேலம் டவுன்ஷிப்பில் இருக்கும் 96 குடும்பங்களும் கூட்டாகச் சேர்ந்து முதலீட்டு நிறுவனமான பிளாக்ஸ்டோனுக்குச் சொந்தமான தரவு மைய மேம்பாட்டாளரான QTS-க்கு சுமார் 1,700 ஏக்கர் நிலத்தை விற்றுள்ளன. இந்த பரிவர்த்தனையின் மொத்த மதிப்பு வியக்கத்தக்க வகையில் 586 மில்லியன் டாலரை எட்டியது. சராசரியாக ஒவ்வொரு குடும்பமும் சுமார் 5.5 மில்லியன் டாலர் பெற்றுள்ளது. அதாவது, ஒரு ஏக்கர் நிலம் தோராயமாக 330,000 டாலருக்கு விற்கப்பட்டுள்ளது.

இந்த விற்பனைக்கு முன்பு இந்தக் குடும்பங்களில் பலர் சாதாரண வேலைகளைச் செய்பவர்களாகவும், சிலர் நடமாடும் வீடுகளில் வசிப்பவர்களாகவும், மற்றவர்கள் சிறு வணிகங்களை நடத்துபவர்களாகவும் இருந்துள்ளனர். ஒரே இரவில் தங்கள் நிலங்களை விற்று அமெரிக்காவின் வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த கோடீஸ்வரர்கள் வரிசையில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இந்த நிலம் ஏன் திடீரென்று இவ்வளவு மதிப்புமிக்கதாக மாறியது?

செயற்கை நுண்ணறிவுக்கு மிகப்பெரிய கணினி ஆற்றல் தேவைப்படுகிறது. ஒவ்வொரு செயற்கை நுண்ணறிவு மாதிரியும் பில்லியன்கள் அல்லது டிரில்லியன்கள் அளவிலான தகவல்களைச் செயலாக்குகிறது. இதற்கு 24 மணி நேரமும் இயங்கும் ஆயிரக்கணக்கான சக்திவாய்ந்த கணினி சேவையகங்கள் தேவைப்படுகின்றன. இந்த சேவையகங்களுக்கு மூன்று முக்கிய வளங்களைக் கொண்ட பிரம்மாண்டமான தரவு மையங்கள் தேவை. அவை, தொடர்ச்சியான மின்சாரமும், அதிக திறன் கொண்ட மின் பரிமாற்ற கம்பிகளும், வேகமான இணைய இணைப்பும் ஆகும்.

பென்சில்வேனியாவில் உள்ள அந்த நிலங்கள், இயற்கை எரிவாயு, அணுசக்தி நிலையங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பிற்கு அருகில் அமைந்திருந்தன. வேறு இடங்களில் புதிய மின்சார உள்கட்டமைப்பை உருவாக்குவது மிகவும் செலவு மிக்கதாக இருந்திருக்கும். இந்தப் பண்ணைகளுக்கு ஏற்கனவே தாராளமான மின்சாரம் கிடைத்ததால் அவற்றின் மதிப்பு வியத்தகு முறையில் அதிகரித்தது.

இன்றைய செயற்கை நுண்ணறிவுப் பொருளாதாரத்தில், ஒரு காலத்தில் எண்ணெய்க்கான அணுகல் எவ்வளவு மதிப்புமிக்கதாக இருந்ததோ அதே அளவிற்கு மின்சாரத்திற்கான அணுகலும் மதிப்புமிக்கதாக இருக்கக்கூடும்.

அதுவே அமெரிக்கக் கனவின் ஒரு புதிய வடிவமாக உருவெடுத்துள்ளது. சிலிக்கான் பள்ளத்தாக்கு தொழில்முனைவோர், வால்ஸ்ட்ரீட் முதலீட்டாளர்களைப் போலல்லாமல், இந்தப் புதிய கோடீஸ்வரர்களில் பலர் தொழில்நுட்பத் துறையில் ஒருபோதும் பணியாற்றியதில்லை. அவர்கள் சரியான நேரத்தில், சரியான இடத்தில் நிலத்தை வைத்திருந்தார்கள். அவ்வளவுதான். அடிச்சாச்சு லக்கி ப்ரைஸ்!

எதிர்பாராமல் கிடைத்த பணத்தில் சிலர் கனவு இல்லங்களைக் கட்டுகிறார்கள். சிலர் உள்ளூர் வணிகங்களை வாங்குகிறார்கள். தங்கள் சமூகங்களில் முதலீடு செய்கிறார்கள். மருத்துவ ஆராய்ச்சிக்கு ஆதரவளிக்கிறார்கள். எதிர்கால சந்ததியினருக்கு நிதி நிலைத்தன்மையை உறுதி செய்கிறார்கள். கிலிட்டி குடும்பத்தின் மகள்களில் ஒருவர் ஒரு உள்ளூர் மதுபான ஆலையை வாங்கியுள்ளார். மற்றொருவரான மருத்துவர் ஒரு புற்றுநோய் ஆராய்ச்சி அறக்கட்டளையை நிறுவத் திட்டமிட்டுள்ளார். எதிர்பாராத நில விற்பனை, இப்போது புதிய வணிகங்கள், தொண்டுப் பணிகள், குடும்பக் கனவுகளுக்கு நிதியுதவி அளித்துள்ளது.

பென்சில்வேனியாவின் கதை தனித்துவமானது அல்ல.

அமெரிக்கா முழுவதும் செயற்கை நுண்ணறிவு (AI) உள்கட்டமைப்புக்காக நிலத்தைப் பெறுவதற்கு கட்டுமான நிறுவனங்கள் போட்டிப் போடுகின்றன. வர்ஜீனியா, டெக்சாஸ், அரிசோனா, ஜார்ஜியா, ஓஹையோ, பென்சில்வேனியா போன்ற மாநிலங்கள் தரவு மையக் கட்டுமானத்தில் முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சியைச் சந்தித்து வருகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு கற்பனை செய்ய முடியாததாகத் தோன்றிய திட்டங்களில் பில்லியன் கணக்கான டாலர்கள் முதலீடு செய்யப்படுகின்றன.

இந்த வளர்ச்சி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அப்பாற்பட்ட பல வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. கட்டுமானத் தொழிலாளர்கள் பல ஆண்டுகளுக்கு நிலையான வேலைவாய்ப்பைப் பெற்று வருகின்றனர். மின்சார வல்லுநர்கள், பொறியாளர்கள், HVAC நிபுணர்கள், எஃகு, கான்கிரீட் உற்பத்தியாளர்கள், உபகரணங்களை நிறுவுபவர்கள் என அனைவரும் இந்த விரைவான விரிவாக்கத்தால் பயனடைந்து வருகின்றனர். முக்கிய மின் உள்கட்டமைப்புகளுக்கு அருகிலுள்ள நிலங்களின் மதிப்பும் வியத்தகு முறையில் உயர்ந்து வருகிறது. உள்ளூர் பொருளாதாரங்களும் மாறி வருகின்றன.

சிலருடைய வாழ்க்கையை நல்ல விதமாகப் புரட்டிப்போட்டிருந்தாலும் செயற்கை நுண்ணறிவின் இந்த வளர்ச்சியை அனைவரும் வரவேற்பதில்லை. தரவு மையங்களின் இந்த விரைவான விரிவாக்கம் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா முழுவதும் சுற்றுச்சூழல் பாதிப்புகள், அதிகரித்த மின்சார நுகர்வு, நீர் பயன்பாடு, இரைச்சல், கிராமப்புற சமூகங்களின் தன்மையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த கவலைகளைக் காரணம் காட்டி, குடியிருப்பாளர்கள் பெரிய செயற்கை நுண்ணறிவு மையங்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியுள்ளனர். கணினி சர்வர்கள் நிரம்பிய பிரம்மாண்டமான தொழிற்சாலைக் கட்டிடங்களின் வரிசைகளுக்குக் கீழே, அமைதியான கிராமப்புற நிலப்பரப்புகள் படிப்படியாக மறைந்துவிடும் என்று சிலர் கவலைப்படுவதிலும் நியாயம் இருப்பது போலத்தான் தெரிகிறது. ஒரு துறையின் வளர்ச்சியால் வேறு சில துறைகளில் பாதிப்புகளும் ஏற்படுவதைத் தடுக்க இயலாது தான். ஒரு சில நில உரிமையாளர்கள் செல்வந்தர்களாகும் அதே வேளையில், அருகிலுள்ள சமூகங்கள், சுற்றுச்சூழல், உள்கட்டமைப்புச் செலவுகளைச் சுமக்க நேரிடலாம் என்றும் விமர்சகர்கள் வாதிடுகின்றனர்.

இருப்பினும், புதிய வேலை வாய்ப்புகள், அதிகரித்த வரி வருவாய், பல்லாண்டுகளாகப் பொருளாதார ரீதியாகப் போராடி வரும் பகுதிகளில் பில்லியன் கணக்கான டாலர்கள் வருமானம் வருவதையும் ஆதரவாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். சேலம் டவுன்ஷிப்பில் மட்டும் திட்டமிடப்பட்ட இந்தத் திட்டம் அதன் 12 தரவு மையக் கட்டிடங்களில் 1,500-க்கும் மேற்பட்ட கட்டுமான வேலைகளையும், சுமார் 600 நிரந்தரப் பணியிடங்களையும் உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரலாற்றில் ஒவ்வொரு தலைமுறையும் நாட்டின் பொருளாதாரத்தை மாற்றியமைத்த ஒரு தொழில்நுட்ப முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.

1848 முதல் 1855 வரை நடந்த தங்க வேட்டையில் ஈர்க்கப்பட்டு உலகெங்கிலும் இருந்து 300,000-க்கும் மேற்பட்ட மக்கள் புலம்பெயர்ந்தனர். ஒரே இரவில் நகரங்கள் தோன்றி வங்கிகள் செழித்தன. தொடர்வண்டிப் பாதைகள் விரிவடைந்தன. கலிஃபோர்னியாவின் பொருளாதாரம் நிரந்தரமாக மாற்றப்பட்டது.

1859-ல் ‘எட்வின் டிரேக்’ பென்சில்வேனியாவில் வெற்றிகரமாக எண்ணெய்க்காகத் துளையிட்டபோது, பெட்ரோலியம் என்பது தானியங்கி வாகனங்கள், விமானங்கள், தொழிற்சாலைகள், நவீன நாகரிகத்திற்கு ஆற்றல் அளிக்கும் எரிபொருளாக மாறும் என்று மிகச் சிலரே கற்பனை செய்திருந்தனர். ஆனால் எண்ணெய் வரலாற்றில் மிகப்பெரிய செல்வங்களில் ஒன்றானது மட்டுமல்ல அமெரிக்காவை ஒரு தொழில்துறை வல்லரசாகவும் அது நிலைநிறுத்தியது.

1990களில் மின்சாரமும் தொழில்மயமாக்கலும் அமெரிக்காவை அடுத்த தளத்திற்குக் கொண்டு சென்றன.

2000 வருடம் நடந்த இணையப் புரட்சி வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் மாற்றியது. அமேசான், கூகிள், ஈபே, பின்னர் ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள் தகவல்தொடர்பு, வர்த்தகம், கல்வி, பொழுதுபோக்கை மாற்றியமைத்தன. மென்பொருள், பொருளாதார வளர்ச்சியின் புதிய உந்துசக்தியாக உருவெடுத்து, கோடீஸ்வரர்களையும் உலகின் பெரும் செல்வந்தர்களையும் தொழில்முனைவோர்களில் பலரையும் உருவாக்கியது.

2022 முதல் தற்பொழுது வரை ஏற்பட்டிருக்கும் செயற்கை நுண்ணறிவுப் புரட்சியால் ஒரே இரவில் கணினிகளால் மொழியைப் புரிந்துகொள்ளவும், கேள்விகளுக்குப் பதிலளிக்கவும், படங்களை உருவாக்கவும், மென்பொருள் எழுதவும், அறிவியல் ஆராய்ச்சிக்கு உதவவும் முடியும் என்பதை மில்லியன்கணக்கான மக்கள் உணர்ந்தனர். மின்சாரம், இணையத்தைப் போலவே செயற்கை நுண்ணறிவும் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது என்பதை அரசாங்கங்களும் வணிக நிறுவனங்களும் உடனடியாக உணர்ந்தன.

போட்டி தொடங்கியது

அமெரிக்கா மற்றொரு வரலாற்றுச் சிறப்புமிக்க தங்க வேட்டையை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலமாக ஆரம்பித்துள்ளது. ஆனால் இந்தமுறை அந்த மதிப்புமிக்க வளம் பூமிக்கடியில் இருக்கும் புதையல் அல்ல. மாறாக, செயற்கை நுண்ணறிவை இயக்கும் டிஜிட்டல் உள்கட்டமைப்பைத் தாங்கக்கூடிய நிலமாகும்.

அதனால் முதலீட்டாளர்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள் அனைத்தும் நாடு முழுவதும் தாராளமான மின்சாரம், வலுவான மின் கட்டமைப்பு, ஃபைபர்-ஆப்டிக் வலையமைப்புகள், சாதகமான ஒழுங்குமுறைகள் உள்ள இடங்களைத் தேடுகின்றனர். இந்த நன்மைகளைக் கொண்ட சமூகங்கள் அடுத்த எதிர்பாராத செல்வ மையங்களாக மாறக்கூடும்.

இனி எதிர்காலம் தரவுகளுக்கே சொந்தம். செயற்கை நுண்ணறிவு, மென்பொருளை விட மிக அதிகமாக மாற்றங்களைக் கொண்டுவருகிறது. அது ரியல் எஸ்டேட் சந்தைகள், எரிசக்தி உள்கட்டமைப்பு, வேலைவாய்ப்பு முறைகள், உள்ளூர் பொருளாதாரங்களை மறுவடிவமைத்து வருகிறது. வெகு சிலரே எதிர்பார்த்த இடங்களில் அது வாய்ப்புகளை உருவாக்கி, தொழில்நுட்பத்தின் மூலம் தாங்கள் செல்வந்தர்களாவோம் என்று ஒருபோதும் நினைத்துப் பார்த்திராத மக்களுக்கு அவர்களின் நிலங்கள் மூலமாக அந்த வாய்ப்பை அளிக்கிறது. மேலும் அளிக்கப் போகிறது.

ஒவ்வொரு மாபெரும் தொழில்நுட்பப் புரட்சியும் வெற்றியாளர்களையும், சவால்களையும், கடினமான தேர்வுகளையும் உருவாக்குகிறது என்பதை வரலாறு காட்டுகிறது. செயற்கை நுண்ணறிவுப் புரட்சியும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் ஒரு விஷயம் மேலும் மேலும் தெளிவாகிறது. செயற்கை நுண்ணறிவு யுகத்தில், “தரவு”, உலகின் புதிய இயற்கை வளமாக மாறியுள்ளது. அதைத் தாங்கும் நிலம் அமெரிக்காவின் மிகவும் மதிப்புமிக்க பொக்கிஷங்களில் ஒன்றாக மாறியுள்ளது. இது அமெரிக்காவிற்கு மட்டுமல்ல உலகம் முழுவதற்குமான புரட்சி.

அடுத்த தொழிற்புரட்சியாக மாறும் என்று பலர் நம்புவதற்கு தற்பொழுது அமெரிக்கா பௌதீக அடித்தளத்தை அமைத்து வருகிறது.

நெடுஞ்சாலைகள் போக்குவரத்தை மாற்றியமைத்தது போலவும், மின்சாரம் உற்பத்தியை மாற்றியமைத்தது போலவும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஒவ்வொரு தொழில்துறையையும் மாற்றியமைக்கக்கூடும். செயற்கை நுண்ணறிவுப் புரட்சி இன்னும் அதன் ஆரம்ப அத்தியாயங்களில்தான் உள்ளது. அடுத்த கோடீஸ்வரர்கள் மென்பொருள் பொறியாளர்களாகவோ, சிலிக்கான் பள்ளத்தாக்கு தொழில்முனைவோராகவோ இல்லாமல் சரியான தருணத்தில், சரியான நிலத்தில் நிற்கும் சாதாரண மனிதர்களாகக் கூட இருக்கலாம்.

செயற்கை நுண்ணறிவுப் போட்டி என்பது இனி வெறும் மேம்பட்ட மென்பொருளை உருவாக்குவது மட்டுமல்ல. அது கணினி ஆற்றலுக்கான ஒரு உலகளாவிய போட்டியாக மாறியுள்ளது. மிக வலிமையான செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பை உருவாக்கும் நாடுகள், அடுத்த தலைமுறை அறிவியல் ஆராய்ச்சி, சுகாதாரம், உற்பத்தி, கல்வி, வேளாண்மை, நிதி, உற்பத்தி, போக்குவரத்து, பொழுதுபோக்கு, தேசியப் பாதுகாப்பு, உள்கட்டமைப்பு ஆகியவற்றில் முன்னணியில் இருக்கலாம்.

தொழிற்புரட்சி பத்தொன்பதாம் நூற்றாண்டை மறுவடிவமைத்தது போலவும், இணையம் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியை மாற்றியமைத்தது போலவும், செயற்கை நுண்ணறிவு இருபத்தியோராம் நூற்றாண்டை வரையறுக்கக்கூடும்.

எதிர்காலப் பொருளாதார வளர்ச்சிக்குச் செயற்கை நுண்ணறிவு அடித்தளமாக அமையும் என்று நம்புவதால், அமெரிக்கா நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை முதலீடு செய்து வருகிறது.

உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களும் இதை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன. சீனா, யுனைடெட் கிங்டம், ஃபிரான்ஸ், இந்தியா, ஜப்பான், தென் கொரியா, வளைகுடா நாடுகள் உள்ளிட்ட பிற நாடுகளும் செயற்கை நுண்ணறிவின் தலைமைத்துவம் பல்லாண்டுகளுக்கு உலகளாவிய போட்டித்தன்மையை வடிவமைக்கக்கூடும் என்பதை உணர்ந்து முதலீடுகளைச் செய்து வருகின்றன.

ஏனெனில் யார் வலிமையான செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பை உருவாக்குகிறார்களோ, அவர்கள் அடுத்த பத்தாண்டுகளில் மிகப்பெரிய பொருளாதாரத்தையும் தொழில்நுட்ப நன்மைகளையும் பெற்று உலகை ஆளக்கூடும்.

வரலாறு மீண்டும் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதத் தொடங்கியுள்ளது.

அந்த அத்தியாயத்தின் முதல் சில பக்கங்களில் நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

அழிக்கப்பட்ட புத்தகங்கள்… உருவான செயற்கை நுண்ணறிவு: அறிவின் புதிய போராட்டம்

என்ன தான் நடக்கிறது செயற்கை நுண்ணறிவு உலகில்? மனிதனின் மூளையாக செயல்பட, கணினிக்கு அறிவூட்ட எந்த எல்லை வரை நிறுவனங்கள் செல்கிறது? அறிவார்ந்த ...