Monday, September 12, 2022

அர்ஷ வித்ய குருகுலம்




பென்சில்வேனியா மாநிலத்தில் பொகோனோ மலைப்பகுதியில் 99 ஏக்கர் நிலப்பரப்பில் பூஜ்யஶ்ரீ் தயானந்த சரஸ்வதி சுவாமிகளின் அழகிய "ஆர்ஷ வித்ய குருகுலம்" அமைந்துள்ளது. இங்கு மாணவர்கள் தங்கி வேதாந்த கல்வியை கற்கும் வகையில் வகுப்புகள் நடக்கிறது. எங்களை மிகவும் கவர்ந்தது அங்கிருக்கும் அழகான சிறிய தட்சிணாமூர்த்தி திருக்கோவில். தினந்தோறும் காலை ஐந்தரை மணிக்கு ருத்ராபிஷேகம் நடைபெறுகிறது. ரம்மியமான காலைப்பொழுதில் திவ்யமான ருத்ரம் இசைக்கப்பட, அபிஷேக ஆராதனைகளுடன் பூஜைகள். ஏகாந்தமாக இருந்தது. பல வருடங்களாக செல்ல நினைத்து சமீபத்தில் தான் இங்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. ஆல்பனியில் இருந்து மூன்றரை மணிநேரப் பயணம். பென்சில்வேனியா எல்லையைத் தாண்டியவுடன் மலைகளும், காடுகளும் சூழ்ந்த ஸ்டரௌட்ஸ்பர்க் நகரில் இருக்கிறது குருகுலம்.

உள்ளே நுழைந்தவுடன் ஓங்கி உயர்ந்த மரங்களும் குடில்களும் அமைதியைத் தருகிறது. வரிசையாக தங்குமிடங்கள். திருப்பதியை நினைவில் கொண்டு வந்தது. இருவர் தங்கும் வகையில் படுக்கை, குளியலறை வசதிகளுடன் அறைகளைச் சுத்தமாக வைத்திருந்தார்கள். ஆசிரமத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்ட நண்பர் ஒருவர் எங்களுக்காக முன்கூட்டியே பதிவு செய்து வைத்திருந்தார். கோவிலுக்கு அருகிலேயே அறைகள் கேட்டு கிடைத்ததில் பரம மகிழ்ச்சி. நாங்கள் சென்ற வேளையில் அன்றைய இரவு ஆராதனை நடந்து கொண்டிருந்தது. வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்தவர்களும் யோகா வகுப்பில் கலந்து கொண்டவர்களும் அங்கிருந்தனர். பூஜை முடிந்தபிறகு இரவு உணவை புதிதாக கட்டியுள்ள உணவகத்தில் அருந்தலாம் என்று போகும் வழியையும் கூறினார்கள்.

பெரிய சமையல் அறையுடன் பலர் அமர்ந்து சாப்பிடும் வண்ணம் உணவுக்கூடம். வரிசையாக பழங்கள், உணவை வைத்திருந்தார்கள். அங்கிருந்தவர்கள் அனைவரும் இன்முகத்துடன் வரவேற்று உணவருந்தச் சொன்னார்கள். சாத்வீக உணவு. அத்தனை ருசியாக இருந்தது. அமெரிக்கர்கள் பலரும் அங்கு வந்து செல்கிறார்கள். வேதாந்த வகுப்புகளில் கலந்து கொள்கிறார்கள். ஆனந்தமாக உணவை உட்கொள்கிறார்கள்.

அடுத்த நாள் காலையில் வேதாந்த குருமூர்த்தியின் ருத்ராபிஷேக பூஜையில் கலந்து கொண்டோம். திவ்ய அலங்காரத்துடன் குரு பகவான். அமைதி தவழும் கோவிலில் தியானம் செய்ய சுகம். விடிகாலைப் பனியுடன் “சிலுசிலு” தென்றல் என்று அதிகாலை திருப்பதியில் இருப்பது போன்ற சூழல். ஏழரை மணிக்கு காலை உணவு. இயற்கை எழில் சூழ்ந்த மலைப்பகுதியில் நடந்து செல்ல ஒரு மைல் சுற்றளவில் பாதை அமைத்திருக்கிறார்கள். காய்கறி, பழத்தோட்டங்கள், மரங்கள், செடி, கொடிகளில் பூத்திருக்கும் மலர்கள் என கண்களுக்கும் விருந்து.

ஒன்றும் செய்யாமல், எண்ணாமல் "சும்மா இருக்க" முடிந்தால் அதுவே வரம். அங்கு அதற்கான எல்லா சாத்தியங்களும் இருக்கிறது. மனம் அமைதியாக சில மணிநேரங்களாவது கவலைகளில் இருந்து தற்காலிகமாக தப்பித்துக் கொள்ள முடிகிறது.

கோடைக்காலங்களில் மாணவர்களுக்குப் பலவித வேதாந்த, யோகா வகுப்புகள் நடைபெறுகிறது. குழந்தைகள் விளையாட மைதானங்களும் பெரியவர்கள் அமர்ந்து பேச, தியானிக்க என்று வசதிகளுக்கு குறைவில்லை.
அங்கு ஸ்ரீதயானந்த சரஸ்வதி சுவாமிகள் தங்கியிருந்த குடிலில் தியானம் செய்ய அனுமதி உண்டு. அங்கும் அமைதி தவழ்ந்து கொண்டிருந்தது. பாண்டிச்சேரியில் இருக்கும் ஸ்ரீஅரவிந்தர் ஆசிரமம் நினைவிற்கு வந்தது. எப்படி நேரம் ஓடிப்போனது என்றே தெரியவில்லை! அதற்குள் மதிய ஆரத்தி நேரம் வந்து விட்டது. மீண்டும் கோவிலுக்குச் சென்றோம். பூஜை முடிந்த பிறகு மதிய உணவு. அசத்தலான சாப்பாடு. எனக்கு மிகவும் பிடித்த ரசமலாய். பார்க்க பார்க்க ஆனந்தம். திகட்ட திகட்ட பேரின்பம்.

திவ்ய மதுர பேரானந்தம் என்பது இது தானோ? மனமும் வயிறும் குளிர நன்றாக சாப்பிட்டோம். சற்று நேர ஒய்வு. மீண்டும் மெதுவாக ஒரு நடை. அருகிலிருக்கும் சிருங்கேரி சாரதாம்பாள் கோவிலுக்குச் செல்லலாம் என்று முடிவெடுத்து அறைச் சாவியை அலுவலகத்தில் ஒப்படைத்து விட்டு சிறிது காணிக்கையையும் வழங்கி விட்டு நன்றி சொல்லிக் கிளம்பினோம்.

அமெரிக்கா முழுவதும் இந்துக்கோவில்களில் குழந்தைகளுக்கான பால பாடம் சுவாமிகளின் வழிகாட்டுதலில் நடத்தப்பட்டு வருகிறது. ‘Aim for Seva’ அமைப்பின் மூலம் உறைவிடப் பள்ளிகளை அமைத்து ஏழை மாணவ, மாணவியர்களுக்கு இலவச கல்வியையும் வழங்கி வருகிறார்கள்.

மனஅமைதியை விரும்புவர்களுக்கு அருமையான இடம் இந்த குருகுலம்.

“Give the world the best you have and the best will come back to you.”

-Swami Dayananda Saraswathi

அதிக வருமானம் ஆதிக்கம் செலுத்துமா?

கணவனை விட மனைவி அதிகம் சம்பாதித்தால் ஆணுக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மை வந்து விடுகிறது. பெரும்பாலான ஆண்கள் இப்படித்தான். இதற்காகவே பயந்து படித்த பெண்களை வேலைக்கு அனுப்பாத பல ஆண்கள் உள்ளனர்.

கணவனை விட தான் அதிகம் சம்பாதிக்கிறோம் என்ற நினைப்பில் சில பெண்கள் ஆண்களையும் அவர்கள் குடும்பத்தாரையும் துச்சமாக எண்ணுகிறார்கள். நடத்துகிறார்கள். இதுவும் உண்மை.

வெகு சிலரே, “நம்” குடும்பத்துக்காக என்று நினைத்து ஒருவரின் உயர்ச்சியில் மகிழ்கிறார்கள். வீட்டு வேலைகளில் பங்கு கொள்கிறார்கள்.

வேலைக்கே செல்லாமலும் கணவரை விட குறைந்த வருவாய் இருந்தாலும் அடிமை போல நடத்தும் பெண்களும் உண்டு.

தனிநபர் வருமானம் என்றால் பெண்ணை அடிமையாக நடத்தும் ஆண்களும் உண்டு என்பது தெரிந்ததே.

வாழ்க்கை என்பது ஏற்றத்தாழ்வுகள் கொண்டது. பெண் அதிகம் சம்பாதித்தால் ஆண் அச்சப்படத் தேவையில்லை. அதனால் உண்டாகும் மனச்சிக்கல்களின் முடிவில் இருவரின் மகிழ்ச்சியையும் குடும்பத்தையும் அழித்து விடும். அதிகம் சம்பாதிப்பதால் அதிகாரம் செய்யும் உரிமையும் தனக்குத்த்தான் என்று எண்ணுகிற வீட்டில் அமைதியும் சந்தோஷமும் விடைபெற்று விடும்.

கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் இல்லங்களில் அன்பான, அழகான வாழ்க்கைக்கு இரு மனங்கள் இசைந்து செல்தல் அவசியம். ஒருவருக்கொருவரின் விட்டுக்கொடுத்தலும் அரவணைப்பும் உற்சாகமூட்டுதலும் பேரின்ப பெருவாழ்க்கைக்கு அத்தியாவசியம். இதற்கு மனம்விட்டுப்்பேசி பிரச்னைகளைக் கண்டறிந்து தீர்வுகாணல் ஒன்றே இன்பமான இல்லறத்துக்கு வழிவகுக்கும்.

பங்கு கொண்ட பெண்கள் பலரும் தாங்கள் ஏதோ தங்கள் கடமையிலிருந்து (மனைவி, தாய்) விலகி வேலைக்குச் செல்வதாக மன்னிப்பு கோரும் மனநிலையிலேயே பேசுவது போல எனக்குத் தோன்றியது. மனைவி வேலைக்குச் சென்றால் குடும்பத்திற்கு நல்லது என்று நினைக்கும் கணவன் அவளுக்கு ஒத்தாசையாக அனைத்து விஷயங்களிலும் இருப்பான். இருக்கிறான். அப்படி இல்லாமல் குடும்பத்திற்காக வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு வீட்டு வேலைகளில்  உதவி செய்யாமல் இருக்கும் கணவர்கள் தாழ்வு மனப்பான்மையால் பீடிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று தான் அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. 

உணர்ந்தோர் வாழ்கிறார்கள். மற்றலரெல்லாம் “விதியே” என நடமாடுகிறார்கள்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு  பெண்மணியைத் தான் ஃபேஸ்புக் போராளிகள் வறுத்தெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். புதுக்கோட்டையிலிருந்து சிவகங்கை வரை தினமும் வேலைக்குச் செல்லும் பெண் பாத்திரம் கழுவி வைக்கச் சொல்கிறாள் என்று சொன்ன அவர்  கணவரை ஏனோ ஓரவஞ்சமாக விட்டுவிட்டது ஆணாதிக்க திராவிட சமூவம்😏




Thursday, September 8, 2022

செய்யும் தொழிலே தெய்வம்

நேற்று ஷூ வாங்க கடைக்குச் சென்றிருந்தேன். கடைக்குள் நுழைந்து சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டிருக்கையில் ஒரு பெண்மணி துள்ளிக்குதித்துக் கொண்டே வேகமாக வந்து, "ஹாய் மை நேம் இஸ் சூஸன்." என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு "என்ன மாதிரியான ஷூ வேண்டும்?" என்று கேட்டார்.

நானும், " எனக்கு உயிர்போற குதிகால் வலி. நல்ல ஷூ வேண்டும்" என்றேன்.

அவரும் பாதங்களைப் படமெடுத்து சிறிது நேரம் ஏன் குதிகால் வலிக்கிறது என்று ஒரு மருத்துவரைப் போல் படங்களை வைத்து விளக்கி விட்டு, உள்ளே சென்று ஷூக்கள் எடுத்துக் கொண்டு வருகிறேன் என்று போனார்.

நரைத்த தலைமுடி. குட்டையான உருவம். தெளிவான பேச்சு. துறுதுறு முகம். வயது 55+ ஆக இருக்கலாம். எப்படி இவ்வளவு உற்சாகமாக வேலை பார்க்கிறார் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். மூன்று அட்டைப்பெட்டிகளுடன் வந்தவர் ஒரு பெட்டியிலிருந்து ஷூ ஒன்றை எடுத்து லேஸ் பிரித்து, "இதைப் போட்டுப் பார்." என்றார்.

"எனக்கு இந்த கலர் பிடிச்சிருக்கு." சொல்லிக் கொண்டே வாங்கிப் போட்டு நொண்டி நொண்டி நடந்து பார்த்து, அதற்குள் அவர் இரண்டாவது, மூன்றாவதையும் பிரித்துக் கொடுக்க நானும் போட்டுப் பார்க்க...

"தேர்ந்த மருத்துவரைப் போல இத்தனை விஷயங்களைப் பேசுகிறீர்களே. அது சம்பந்தமாக படித்திருக்கிறீர்களா?" என்று அந்தப் பெண்மணியிடம் கேட்டேன்.
அதற்கு அவர் சிரித்துக் கொண்டே "நான் பயோ கெமிஸ்ட்ரியில் டாக்டரேட் பட்டம் பெற்றிருக்கிறேன். இருபது வருடங்கள் நியூயார்க் சுகாதாரத்துறையின் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பபாளராக இருந்து இரு வருடங்களுக்கு முன்பு தான் பணியிலிருந்து ஒய்வு பெற்றேன்." என்று ஆச்சரியமூட்டினார்!

"அப்ப கொரோனா காலத்துல நீங்க இல்லையா?"

"ஆறு மாதம் வரை இருந்தேன். அதற்கு முன்பு வெஸ்ட் நைல் வைரஸ் தொற்றுப்பரவல் , டிக் வேறு பல பூச்சிகளின் மூலம் உருவாகும் நோய்கள் பற்றின ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருந்தேன். ஒய்வு பெற்றதும் 'LLBean' என்ற கடையில் துணிகளை மடித்து வைப்பது, பொருட்களை வரிசைப்படுத்தி வைப்பது போன்ற வேலைகள். இங்கு சேர்ந்து ஒரு வருடம் இருக்கும். எனக்கு ஓட மிகவும் பிடிக்கும். என் அம்மா 100 வயதாக இரு வாரங்கள் இருக்கும் பொழுது தான் இறந்தார். அதுவரையில் நன்றாக ஓடிக்கொண்டு இருந்தவர். இங்கு வேலை செய்வதால் பலரையும் தினமும் சந்திக்கிறேன். எனக்கும் பிடித்திருக்கிறது."

“ஓ! அந்த ஆராய்ச்சி நிறுவனத்தின் கணினியியல் துறையில் வேலை கிடைத்தும் இருமுறையும் என்னால் சேர முடியவில்லை." என்று என் அனுபவத்தையும் சொல்லி பேசிக்கொண்டிருந்தோம்.

அவர் கனடாவில் சஸ்கேட்ச்சுவான் எனும் குளிர் பிரதேசத்தில் பிறந்து கால்கரியில் படித்து முடித்து அமெரிக்காவில் வந்து செட்டிலாகியிருக்கிறார். அவருடைய குழந்தைகளை ஒரு பஞ்சாபி பெண்மணி தான் வளர்த்திருக்கிறார். "என் குழந்தைகள் பஞ்சாபி உணவை விரும்பி உண்பார்கள். கனடா-இந்தியா கலாச்சார விழா நாட்களில் பஞ்சாபி உடைகளை அணிந்து கொள்வார்கள். அந்தப் பெண்மணி பாசத்துடன் என் குழந்தைகளை வளர்த்தார்" என்று நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.

இந்தியாவில் நான் எந்தப் பகுதியில் இருந்து வந்திருக்கிறேன் என்று கேட்டு தெரிந்து கொண்டார்.

"கனடாவில் வெளிநாட்டவர்களை விரும்பி அழைத்துக் கொள்வார்கள்." அமெரிக்காவில் அப்படி இல்லை என்று சொல்லாமல் கண்களை உருட்டினார்.

என் பெயரையும் தவறில்லாமல் உச்சரித்தார். பரவாயில்லையே என்றவுடன் அவரின் கீழ் படித்த இந்திய மாணவர்களின் பெயர்களைச் சொன்னார்.

பணம் கொடுத்து விட்டுத் திரும்புகையில் "சீக்கிரம் உனக்கு குணமாகட்டும்." என்று சிரித்தபடி வழியனுப்பி வைத்தார்.

பொதுவாகவே அமெரிக்காவில் "கஸ்டமர் கேர்" என்பது தான் தொழிலின் அடிப்படை. அவர்கள் தான் நமக்கு மூலதனம் என்று உணர்ந்த எந்த நிறுவனமும் அவர்களைத் திருப்திப்படுத்தும் விதத்தில் நடந்து கொள்ள பணியாட்களுக்குப் பயிற்சி அளிக்கும். நான் சென்ற கடையும் ஷூக்களுக்கு மிகவும் பிரபலமானது. அங்கு வருபவர்களுடன் இணக்கமாக பேசுவார்கள். அவர்களைப்பற்றி விசாரிப்பார்கள். அவர்களிடம் ஒரு நம்பகத்தன்மையை உருவாக்குவார்கள். அதனால் தான் கொள்ளை விலையில் விற்றாலும் வாங்கி கொண்டுச் செல்ல கூட்டம் இருக்கிறது. பெரும்பாலான கடைகளில் வாடிக்கையாளர்களை முகம் சுளிக்காமல் (பிடிக்கா விட்டாலும்) கவனிப்பார்கள். ஆரம்ப அமெரிக்க நாட்களில் இது பெரிய கலாச்சார அதிர்ச்சியாகவே இருந்தது எனக்கு!

மெத்த படித்தவர்கள் என்ற அகம்பாவோமோ எந்த வேலையையும் கீழ்த்தரமாக எண்ணும் மனோபாவமோ இல்லாது நேர்மையாக உழைத்து வாழ வேண்டும் என்று நினைக்கும் பலரையும் அறிவேன். எந்தவித தயக்கமுமின்றி வெளிப்படையாகவே நான் இங்கு பகுதி நேரம் வேலை செய்கிறேன் என்று உயர் பதவியில் இருப்பவர்கள் கூறிக் கேட்டிருக்கிறேன். அமெரிக்கர்கள் பலரிடமும் இருக்கும் இந்த குணாதிசயம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. நம் மக்களில் பலரும் தங்களால் தான் அமெரிக்காவில் தினசரி வேலைகள் நடப்பதைப் போல் 'நான் இப்படியாக்கும் நான் அப்படியாக்கும்' என பீலா விடுவார்கள். அப்பேர்ப்பட்ட மனிதர்களிடையே வெட்டி கௌரவம் பார்க்காமல் உயர் படிப்பு படித்திருந்தாலும் கைநிறைய ஓய்வூதியம் கிடைத்தாலும் ஒய்வு காலத்தில் தனக்குப் பிடித்த வேலையைச் செய்து கொண்டு மகிழ்ச்சியாக இருந்த சூஸனிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய இருக்கிறது. அவருடைய 'இகிகை'யை அவர் கண்டறிந்து மகிழ்ச்சியாக இருக்கிறார். கடந்து வரும் மனிதர்கள் எதையாவது ஒன்றை கற்றுத்தந்து கொண்டே இருக்கிறார்கள்!
 
வாழ்க வளமுடன்!

சிருங்கேரி வித்யா பீடம்


கர்நாடாகாவில் சிருங்கேரியில் அமைந்துள்ளது ஸ்ரீ சாரதா பீடம். சங்கர மடத்தைச் சேர்ந்த இந்த அமைப்பு அமெரிக்காவில் பென்சில்வேனியா மாநிலத்தில் பொக்கோனோ மலைப்பகுதியில் ஸ்டரௌட்ஸ்பர்க் நகரில் 35 ஏக்கர் நிலப்பரப்பில் அழகிய சிருங்கேரி வித்யா பீடத்தை நிறுவியுள்ளது. அமைதியான சூழலில் அமைந்துள்ள அழகிய திருக்கோவிலில் ஸ்ரீசாரதாம்பாள் திவ்யமாக கொள்ளை அழகுடன் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். அம்பாள் உலாவர தங்கரதம், வாகனங்களுடன் மஹாகணபதி, ஆதிசங்கரர் பிரதான சந்நிதிகளுடன் புதிய கோவில் வளாகம் அமைந்துள்ளது. கோசாலை ஒன்றையும் பராமரித்து வருகிறார்கள். 

அமெரிக்காவில் சனாதன தர்மத்தை வளர்க்கவும் வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நமது வேத கலாச்சாரத்தின் உண்மையான நடைமுறையைப் பின்பற்றவும் வேத பாடசாலையில் கற்றுத் தரப்படுகிறது.
மலைகள் சூழ இயற்கை எழில் கொஞ்சும் அழகுடன் சர்வ அலங்கார்ங்களுடன் சாராதம்பாளின் திவ்ய தரிசனம் இனிய அனுபவம்.




ஶ்ரீவாரி பாலாஜி திருக்கோவில்


நியூஜெர்சி மாநிலத்தில் ஃப்ராங்க்ளின் நகரில் புதிதாக ஶ்ரீவாரி பாலாஜி திருக்கோவிலைக் கட்டி வருகிறார்கள். கோபுர வேலைகள் துவங்குவதற்கு முன்பு பெருமாளை பிரதிஷ்டை செய்து உள்ளே வைத்திருக்கிறார்கள். தற்காலிகமாக எதிரில் உள்ள கட்டிடத்தில் உற்சவ மூர்த்திகளுடன் தினப்படி பூஜைகள் நடந்து கொண்டிருக்கிறது. இக்கோவில் ஶ்ரீரங்கத்தில் இருக்கும் ஆண்டவன் ஆசிரமத்தைச் சார்ந்தது என்று அங்கிருந்த பட்டர் கூறினார். ஶ்ரீராமானுஜர் மடத்தைச் சேர்ந்த கொடையாளர்களின் தயாள குணத்தால் இங்கும் ஓரு கோவில்

கோவிலைக்கட்டும் பணியைச் செய்ய சிவகங்கை, புதுக்கோட்டையிலிருந்து இருவர் வந்திருந்தனர். அவர்களைச் சந்தித்துப் பேசியதில் “பலருக்கும் விசா கிடைக்காததால் வேலை மந்தமாக சென்று கொண்டிருக்கிறது. பனிக்காலத்திற்குள் வெளிவேலைகளை முடிக்க வேண்டும்” என்று கூறினார்கள். நம்மூர் மக்களைப் பார்த்துப் பேசிய சந்தோஷத்துடன் ஊர் திரும்பினோம். அடுத்த வருடம் கோடையில் கும்பாபிஷேகம் நடக்கலாம்.





ஆசிரியர் தின வாழ்த்துகள்

எனக்கு கமலா டீச்சர்
கணவருக்கு Prof.Rao
மகளுக்கு Mr. Spencer
மகனுக்கு Mr. Keilen
 
வாழ்க்கையில் வெற்றி பெற, நல்வழிப்படுத்த ஒவ்வொருவருக்கும் ஒரு ஆசிரியர் தேவை. அவர்கள் எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் நம்முடன் பயணித்திருக்கலாம். நல்லாசிரியர் ஒருவர் போதும் நல்வாழ்க்கை அமைந்திட!

நடுநிலைப்பள்ளி வரை எனக்கு வகுப்பெடுத்த ஆசிரியைகளின் கொஞ்சும் நாகர்கோயில் தமிழையும், “இங்க வாங்க பிள்ளைங்களா” என்று அன்புடன் அவர்கள் போதித்ததையும் ரசித்திருக்கிறேன். மேல்நிலைப்பள்ளியில் எனக்கு மிகவும் பிடித்த ஆசிரியை கட்டும் சேலைகளின் மேல் வந்த ஈர்ப்பு அவர் பாடத்திலும் வர, லயித்துப் படித்திருக்கிறேன். டீச்சர் ட்ரைனிங்க்காக வந்த இளவயது அழகு ஆசிரியையின் கவனம் பெற நன்கு படித்ததில் அவருக்கும் என்னைப் பிடித்துப் போக அதிலொரு கர்வம்! எனக்குப் பிடித்த ஆசிரியைகள் எடுத்த பாடங்களே எனக்கு மிகவும் பிடித்த பாடங்களாகிப் போனது. பள்ளிகளில் ஆசிரியைகளுடன் இருந்த பயம், பாசம் , பந்தம் ... இன்றும் நினைவில் வைத்திருக்கிறார்கள், நினைவில் இருக்கிறார்கள் எனும் பொழுது... நல்ல மாணவியாக இருந்திருக்கிறேன். மாணவியர் மேல் அக்கறை கொண்ட பண்பான வழிகாட்டிகள் ஆசிரியைகளாக கிடைத்ததும் வரமன்றோ?

சில பாடங்கள்
சில ஆசிரியர்கள்
பல நினைவுகள்
சுகம்ம்ம்ம்ம்...

வாழ்வில் வழிகாட்டிகளாக வந்த ஆசிரியர்கள், நண்பர்கள், உறவுகள் அனைவருக்கும் என் இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்!

செப்டம்பர் மாதம் செப்டம்பர் மாதம்



'மெமோரியல் டே' யில் தொடங்கி 'லேபர் டே'யில் முடிந்தது கோடையின் தாக்கம் மட்டுமல்ல விடுமுறையும் தான். மழைக்காலத்தில் வெளியில் வந்த குழந்தைகள் கோடை முழுவதும் வியர்வை சிந்த விளையாடிக் களித்து கொண்டாடி விட்டார்கள். சைக்கிள் ஓட்ட கற்றுக் கொள்ளும் சிறார்கள், விர்ரென பறந்து செல்லும் இளங்காளைகள், லாங்போர்டில் சறுக்கிக் கொண்டு தெருவை வலம் வந்தவர்கள் நண்பர்களுடன் கூடைப்பந்து நீச்சல் என்று ஒரே ஆட்டம் தான். வெயில் அதிகமான நாட்களில் அவரவர் வீட்டில் இருந்து வீடியோ விளையாட்டின் மூலம் தொடர்பிலேயே இருந்தனர்.
 
விடுமுறையில் தான் அக்கம்பக்கத்து ஆட்களுடன் பேசும் வாய்ப்புகளும் அதிகம். அவர்கள் உலகில் நடக்கும் விஷயங்களை அறிந்து கொள்ளவும் முடியும். ஊர்களில் இருக்கும் அனைத்துப் பூங்காக்களிலும் குழந்தைகளின் சிரிப்பும் துள்ளலும் ஊஞ்சல் ஆட்டமும் பள்ளி திறந்த இந்நாள் முதல் குறைய ஆரம்பிக்கும். விடிகாலை விண்ணழகை கூட்டிய வசீகரனும் பள்ளிக்குச் செல்ல அடம்பிடிக்கும் குழந்தையாய் வான் வர மறுக்கும் இலையுதிர் காலமும் நெருங்கி விட்டது. சுடும் வெயிலும் மறைந்து இளந்தென்றல் சாமரம் வீச, நிறம் மாற ஆரம்பித்து விட்டது இலைகளும்.
 
வருங்கால கனவுகளுடனும் கடமைகளுடனும் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், அவர்களைச் சுமந்து செல்லும் வண்டிகளின் போக்குவரத்துகள் என்று காலை பம்பரமாய் நாட்கள் சுழலும். இனி இளவெயில், மழை, தென்றல் சாமரம் வீசும் காலை, மாலைப் பொழுதுகளென கழியும். பள்ளி முடிந்து வரும் குழந்தைகள் தெருவில் விளையாடுவதும் குறையும். பணியும் பனியும் மெல்ல மெல்ல ஆக்கிரமிக்கும்.
 
செப்டம்பர் மாதம் செப்டம்பர் மாதம்
வாழ்வின் இன்பத்தைத்
தொலைத்து விட்டோம்
இன்பம் தொலைந்தது இன்று
பள்ளி திறந்தது என்று

குழந்தைகளும்

செப்டம்பர் மாதம் செப்டம்பர் மாதம்
வாழ்வின் இன்பத்தைத்
தொலைத்து விட்டோம்
இன்பம் தொலைந்தது எப்போ?
ஸ்கூல்டாக்ஸ் கட்டணும் இப்போ....

என்று பெற்றோர்களும் மீதமிருக்கும் கோடையை அனுபவித்துக் கொண்டே

ரங்கஸ்தலம்

தென்னிந்தியாவில் இருக்கும் கோவில்களுக்குச் சென்று வர இந்த ஜென்மம் பத்தாது போலிருக்கு! அத்தனை பழமையான கோவில்கள் இருக்கிறது! பார்க்காத கோவில்க...