Monday, September 12, 2022

அர்ஷ வித்ய குருகுலம்




பென்சில்வேனியா மாநிலத்தில் பொகோனோ மலைப்பகுதியில் 99 ஏக்கர் நிலப்பரப்பில் பூஜ்யஶ்ரீ் தயானந்த சரஸ்வதி சுவாமிகளின் அழகிய "ஆர்ஷ வித்ய குருகுலம்" அமைந்துள்ளது. இங்கு மாணவர்கள் தங்கி வேதாந்த கல்வியை கற்கும் வகையில் வகுப்புகள் நடக்கிறது. எங்களை மிகவும் கவர்ந்தது அங்கிருக்கும் அழகான சிறிய தட்சிணாமூர்த்தி திருக்கோவில். தினந்தோறும் காலை ஐந்தரை மணிக்கு ருத்ராபிஷேகம் நடைபெறுகிறது. ரம்மியமான காலைப்பொழுதில் திவ்யமான ருத்ரம் இசைக்கப்பட, அபிஷேக ஆராதனைகளுடன் பூஜைகள். ஏகாந்தமாக இருந்தது. பல வருடங்களாக செல்ல நினைத்து சமீபத்தில் தான் இங்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. ஆல்பனியில் இருந்து மூன்றரை மணிநேரப் பயணம். பென்சில்வேனியா எல்லையைத் தாண்டியவுடன் மலைகளும், காடுகளும் சூழ்ந்த ஸ்டரௌட்ஸ்பர்க் நகரில் இருக்கிறது குருகுலம்.

உள்ளே நுழைந்தவுடன் ஓங்கி உயர்ந்த மரங்களும் குடில்களும் அமைதியைத் தருகிறது. வரிசையாக தங்குமிடங்கள். திருப்பதியை நினைவில் கொண்டு வந்தது. இருவர் தங்கும் வகையில் படுக்கை, குளியலறை வசதிகளுடன் அறைகளைச் சுத்தமாக வைத்திருந்தார்கள். ஆசிரமத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்ட நண்பர் ஒருவர் எங்களுக்காக முன்கூட்டியே பதிவு செய்து வைத்திருந்தார். கோவிலுக்கு அருகிலேயே அறைகள் கேட்டு கிடைத்ததில் பரம மகிழ்ச்சி. நாங்கள் சென்ற வேளையில் அன்றைய இரவு ஆராதனை நடந்து கொண்டிருந்தது. வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்தவர்களும் யோகா வகுப்பில் கலந்து கொண்டவர்களும் அங்கிருந்தனர். பூஜை முடிந்தபிறகு இரவு உணவை புதிதாக கட்டியுள்ள உணவகத்தில் அருந்தலாம் என்று போகும் வழியையும் கூறினார்கள்.

பெரிய சமையல் அறையுடன் பலர் அமர்ந்து சாப்பிடும் வண்ணம் உணவுக்கூடம். வரிசையாக பழங்கள், உணவை வைத்திருந்தார்கள். அங்கிருந்தவர்கள் அனைவரும் இன்முகத்துடன் வரவேற்று உணவருந்தச் சொன்னார்கள். சாத்வீக உணவு. அத்தனை ருசியாக இருந்தது. அமெரிக்கர்கள் பலரும் அங்கு வந்து செல்கிறார்கள். வேதாந்த வகுப்புகளில் கலந்து கொள்கிறார்கள். ஆனந்தமாக உணவை உட்கொள்கிறார்கள்.

அடுத்த நாள் காலையில் வேதாந்த குருமூர்த்தியின் ருத்ராபிஷேக பூஜையில் கலந்து கொண்டோம். திவ்ய அலங்காரத்துடன் குரு பகவான். அமைதி தவழும் கோவிலில் தியானம் செய்ய சுகம். விடிகாலைப் பனியுடன் “சிலுசிலு” தென்றல் என்று அதிகாலை திருப்பதியில் இருப்பது போன்ற சூழல். ஏழரை மணிக்கு காலை உணவு. இயற்கை எழில் சூழ்ந்த மலைப்பகுதியில் நடந்து செல்ல ஒரு மைல் சுற்றளவில் பாதை அமைத்திருக்கிறார்கள். காய்கறி, பழத்தோட்டங்கள், மரங்கள், செடி, கொடிகளில் பூத்திருக்கும் மலர்கள் என கண்களுக்கும் விருந்து.

ஒன்றும் செய்யாமல், எண்ணாமல் "சும்மா இருக்க" முடிந்தால் அதுவே வரம். அங்கு அதற்கான எல்லா சாத்தியங்களும் இருக்கிறது. மனம் அமைதியாக சில மணிநேரங்களாவது கவலைகளில் இருந்து தற்காலிகமாக தப்பித்துக் கொள்ள முடிகிறது.

கோடைக்காலங்களில் மாணவர்களுக்குப் பலவித வேதாந்த, யோகா வகுப்புகள் நடைபெறுகிறது. குழந்தைகள் விளையாட மைதானங்களும் பெரியவர்கள் அமர்ந்து பேச, தியானிக்க என்று வசதிகளுக்கு குறைவில்லை.
அங்கு ஸ்ரீதயானந்த சரஸ்வதி சுவாமிகள் தங்கியிருந்த குடிலில் தியானம் செய்ய அனுமதி உண்டு. அங்கும் அமைதி தவழ்ந்து கொண்டிருந்தது. பாண்டிச்சேரியில் இருக்கும் ஸ்ரீஅரவிந்தர் ஆசிரமம் நினைவிற்கு வந்தது. எப்படி நேரம் ஓடிப்போனது என்றே தெரியவில்லை! அதற்குள் மதிய ஆரத்தி நேரம் வந்து விட்டது. மீண்டும் கோவிலுக்குச் சென்றோம். பூஜை முடிந்த பிறகு மதிய உணவு. அசத்தலான சாப்பாடு. எனக்கு மிகவும் பிடித்த ரசமலாய். பார்க்க பார்க்க ஆனந்தம். திகட்ட திகட்ட பேரின்பம்.

திவ்ய மதுர பேரானந்தம் என்பது இது தானோ? மனமும் வயிறும் குளிர நன்றாக சாப்பிட்டோம். சற்று நேர ஒய்வு. மீண்டும் மெதுவாக ஒரு நடை. அருகிலிருக்கும் சிருங்கேரி சாரதாம்பாள் கோவிலுக்குச் செல்லலாம் என்று முடிவெடுத்து அறைச் சாவியை அலுவலகத்தில் ஒப்படைத்து விட்டு சிறிது காணிக்கையையும் வழங்கி விட்டு நன்றி சொல்லிக் கிளம்பினோம்.

அமெரிக்கா முழுவதும் இந்துக்கோவில்களில் குழந்தைகளுக்கான பால பாடம் சுவாமிகளின் வழிகாட்டுதலில் நடத்தப்பட்டு வருகிறது. ‘Aim for Seva’ அமைப்பின் மூலம் உறைவிடப் பள்ளிகளை அமைத்து ஏழை மாணவ, மாணவியர்களுக்கு இலவச கல்வியையும் வழங்கி வருகிறார்கள்.

மனஅமைதியை விரும்புவர்களுக்கு அருமையான இடம் இந்த குருகுலம்.

“Give the world the best you have and the best will come back to you.”

-Swami Dayananda Saraswathi

No comments:

Post a Comment

Mulitple Facets of Madurai - 2

நாம் பிறந்து, வளர்ந்த ஊரைப் பற்றிப் பேசும்பொழுது எப்பொழுதும் ஒரு பெருமிதம் வரத்தானே செய்யும்? காலங்கள் மாறி புதுக்கோலம் பூண்டு விட்டிருந்தால...