Wednesday, May 9, 2018

தொழிலாளர் தினம்


வளரும் வயதிலும், வளர்ந்த பின்னரும் கடைநிலைத்தொழிலாளிகளின் வாழ்க்கையை அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். அன்று வேலை செய்தால் கிடைக்கும் சம்பளத்தில் மட்டுமே அடுப்பெரியும் பல குடும்பங்களையும் அறிவேன். கணவர் சரியில்லாத வீடுகளில் குழந்தைகளுக்காக வேலைக்குச் செல்லும் பெண்களும், குடும்பத்திற்காக உழைக்கும் ஆண்களும், தங்களால் இயன்றவரை ஒத்தாசையாக வயதானவர்களும் என்று அவரவர் வசதி வாய்ப்புக்கேற்றவாறு உழைத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

சாயப்பட்டறையில் நூல்களை சாயம் ஏற்ற முதல் நாள் இரவு நூல்களைப் பிரித்து இரண்டு மூன்று செட்டுகளாக சேர்த்து சோப்பு எண்ணையில் போட்டு மிதிமிதியென்று மிதித்து ஊற வைப்பார்கள். அடுத்த நாள் ப்ளீச் செய்து பிறகு சாயம் ஏற்ற வேண்டும். முதல் நாள் இரவு வேலைக்கு ஒரு அம்மா தன் இரண்டு மகன்களுடன் வேலை கேட்டு வந்தார். மூத்த மகன் அப்பொழுது மேல் நிலைப்பள்ளி மாணவன். இளையவனுக்கோ எங்கள் வயது இருந்திருக்கும். கீழ் மதுரை ஸ்டேஷன் அருகில் இருந்தது அவர்கள் வீடு. நாங்கள் அரசமரம் பக்கம் இருந்தோம். பள்ளியிலிருந்து வந்தவுடன் அவர்களை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்து விடுவார் அந்த அம்மா. வரும் பொழுதே சிணுங்கிக் கொண்டே வருவான் இளைய மகன். இருவரும் அவரவர் வீட்டுப் பாடத்தை செய்து கொண்டிருக்க, அவர்களின் தாயார், நூல்களைப் பிரித்து செட் போட ஆரம்பிப்பார். முடிந்ததும் இரு மகன்களும் சோப்பு ஆயிலில் நூல்களைப் போட்டு போட்டு மிதித்து ஊற வைப்பார்கள். சிறிது நேரத்தில் களைப்பிலே சின்னவன் தூங்கி விட, பெரியவன் தலையில் தான் அத்தனை சுமைகளும். அவனும் கால் வலிக்குதம்மா என்று பல நாட்கள் அழுதிருக்கிறான். என்னை விட இரண்டு மூன்று வயது மூத்தவனாக இருந்திருப்பானோ? பார்த்தால் பாவமாக இருக்கும். அவன் அம்மாவும் கெஞ்சி கொஞ்சி சமயங்களில் அவரே கூட அந்த வேலையையும் செய்வார். வேலைக்கு ஆட்கள் அரிதாக கிடைக்கும் காலம் என்பதால் அம்மாவும் சாப்பாடெல்லாம் கொடுத்து நன்கு கவனித்துக் கொள்வார். திடீர் திடீரென்று ஃபீஸ் கட்ட வேண்டும், எதிர்பாராத செலவு என்று முன்பணம் கேட்பார்கள். அப்பாவுக்குத் தெரிந்து சில நாட்கள் தெரியாமல் சில நாட்கள் என்று அவர்களுக்குப் பண உதவியும் செய்து பார்த்திருக்கிறேன்.

வேலைகள் முடிந்து வீட்டிற்குச் செல்ல அரைமணிநேர நடை வேறு. அவ்வளவு களைத்துப் போயிருப்பார்கள் அவர்கள் மூவரும். சின்னவன் தூங்கியபடியே அழுது கொண்டே தான் செல்வான். மூத்தவன் உழைத்த களைப்பில் தூக்கத்துடனே. அவர்கள் அம்மா மட்டும் பேச்சு கொடுத்தபடி குழந்தைகளை வேலை வாங்குகிறோமே என்ற மனச்சோர்வுடன் தினம் தினம் நடையாய் நடந்து அந்த குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார். பல நேரங்களில் தன் சொந்தக்கதை சோகக்கதைகளை சொல்லி அழுவார். ஓடியாடி விளையாட வீடு, வேளைக்குத் தட்டில் சோறு, படிப்பு,கவலையென்றால் கிலோ என்ன விலை என்றிருந்த காலத்தில் இப்படியெல்லாம் கூட கஷ்டப்படுவார்களா என்று வேதனைப்பட்டிருக்கிறேன். ஏழ்மை கொடிது என்றுணர்ந்த தருணங்கள் கொடுமையானவை.

வாழ்வின் சுக துக்கங்களை அறிய தொழிலாளர் படும் வேதனைகளை அவர்களின் உழைப்பினை அடுத்த தலைமுறை அறிய வேண்டும். மனிதர்கள் பலரும் தங்கள் கொடுப்பினையை அறிவதில்லை. வெற்றுப் புலம்பலில் சுய பச்சாதாபம் தேடிக் கொள்ளவே முனைகிறார்கள்.

ஒரு வேளை உணவுக்காக, குடும்பத்தில் அடுப்பெரிய வேண்டும் என்பதற்காக உடலை வருத்தி வேலை செய்த, செய்து கொண்டிருக்கிற அனைத்து தொழிலார்களுக்கும் வந்தனம்.


திரும்பிப் பார்க்கிறேன் - கோடை விடுமுறை

இன்று பெற்றோர்கள் இருவரும் வேலைக்குச் செல்லும் நிலையில் குழந்தைகளை கோடை விடுமுறை வகுப்புகளுக்கு அனுப்ப,  குழந்தைகளும்  நீச்சல், பெயிண்டிங், தையல் என்று தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள முடிகிறது. வீட்டில் இருக்கும் பெற்றோரும் தங்களால் இயன்ற அளவு குழந்தைகளுக்குப் பள்ளிப் பாடங்களைத் தவிர்த்து  வேறு மொழிகள், கைவினைப்பொருட்கள் தயாரித்தல் என்று அவர்களின் பொழுதுகளை பயனுள்ள வகையில் கழிக்க ஆவன செய்கிறார்கள். இன்றைய கணினி உலகில் படிப்பதற்கும் அவரவர் ஆர்வத்திற்கேற்றவாறு புதிய விஷயங்களை அறிந்து கொள்ளவும் எளிதாக சில குழந்தைகளுக்கு நன்கு பொழுது போகிறது. பணம் செலவழித்து வகுப்புகளுக்குச் செல்லும் வாய்ப்புகள் அமையாத குழந்தைகள் களைப்பு தீரும் வரை விளையாடி பொழுதைப் போக்குகிறார்கள்.

என்னுடைய பள்ளி வயதில்...

வெயில் கொடுமையை விட கோடை விடுமுறையில் வீட்டில் கழியும் வறட்சியான பொழுதுகள் தான் கொடுமையானது. பத்தாம் வகுப்புத் தேர்வுகளை முடித்து முடிவுகள் நன்றாக வர வேண்டுமே என்று தவித்துக் கொண்டிருந்த விடுமுறை அது. அந்த லீவில் அப்பா செய்த ஒரு முடிவு, எங்களின் ஆங்கில உச்சரிப்பினை சரி செய்ய, தவறில்லாமல் பேசிப் பழக, படித்ததைப் புரிந்து கொள்ள, அவர் எடுத்த ஆயுதம், தி ஹிந்து ஆங்கில நாளேடு வடிவில் வில்லனாய் அடியெடுத்து வைக்க, காலையில் எழுந்ததும் படிக்க வேண்டும், சத்தமாக வாசிக்க வேண்டும், அவர் கேட்கும் ஆங்கில வார்த்தைகளுக்குப் பொருள் சொல்ல வேண்டும். பக்கத்திலேயே அகராதியை வைத்துப் படிக்க...சில நேரங்கள் தண்டனையாய் கழிய...
அது வரை தெருவில் விளையாட எந்தத் தடையும் இருந்ததில்லை. ஆனால் திடீரென்று இனி வெளியில் போய் பசங்க கூட விளையாடக் கூடாது. பெண்ணாய் பிறந்ததன் முதல் பலனை(!) அனுபவித்த நாள்.

ஏன், எதற்கு?

சொன்னா கேட்டுக்கணும். அவ்ளோ தான். கூட விளையாடிவர்களைத் தவிர்க்க ஆரம்பித்து, ஜன்னல் வழியே தம்பிகள் அவர்களின் நண்பர்களுடன் விளையாடுவதை வேடிக்கை பார்க்க ..நான் பெண்ணாக வளர்கிறேன். இனி விரும்பிய மாதிரி எல்லாம் சுற்ற முடியாது என்று ஒரு தடுப்புச்சுவர் கேட்காமலே எழுப்பப்பட்டு...ஏன் பெண்ணாகப் பிறந்தேனோ? இந்த உரிமைகள் கூடக்கிடையாதா?... புரியாத வயதில் கேட்டாலும் பதில் கிடைக்காத பல பொழுதுகள் ஏக்கங்களுடனே கழிய...
போரடிக்குதும்மா, வெளியில போய் விளையாடவும் விட மாட்டேங்குறீங்க என்று கோபத்தை அம்மாவிடம் காட்டினால், வாங்க தாயம் விளையாடலாம், பல்லாங்குழி விளையாடுங்க, சொட்டாங்கல்லு, கேரம் போர்டு என்று பெண்களை முடக்கவே அதிதீவிரமாகக் கண்டெடுத்த விளையாட்டுகளும் சலிப்பைத் தர...
சுத்துப்பத்துத் திரையரங்குகளில் வெளிவந்த படங்கள், அதுவும் தீவிர பரிசீலனைக்குப் பிறகு பார்க்க அழைத்துச் செல்வார்கள். சில பாடல்கள் கேட்க முடியாது. விரச வரிகள் என்று தடை. ஆக மொத்தம், வானொலியின் துணையுடன் பல பொழுதுகள் இன்பமாகக் கழிய...
வாரந்திரப் பத்திரிக்கைகள் தான் அந்நாளைய ஆபத்பாந்தவன்! முதல் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம் வரை ஒரு வரி விடாமல் படித்து முடிப்பதற்குள், விரல் நகங்களும் காணாமல் போய்...எப்படா அடுத்த வாரம் வரும் என்று காத்திருக்கையில்...
மாமா, பெரியம்மா மகள்களுடன் அரட்டை அடித்து, பெரியவர்கள் கேட்டால் திட்டுவார்கள் என்று சன்னமான குரலில் கிசுகிசுக்களைப் பேசி, சத்தம் போட்டு சிரித்து, அவர்கள் சொல்லும் ஜோக்ஸ்களைக் கேட்டு 'சீசீசீ' என்று மாலை முழுவதும் ஒருவரை ஒருவர் வெட்கத்துடன் கடந்த பொழுதுகளும் ...
பாட்டியுடன் விடுமுறையில் செல்லும் கோவில், குளங்கள் இனிமையாக கழிய...
அப்பா, கதை புக்ஸ் வாங்கணும். போரடிக்குது...அதெல்லாம் எதுக்கு? போய் அடுத்த வருஷம் படிக்கப் போற மேத்ஸ் புக்க படி. போ. மத்தவங்க எல்லாரும் அமைதியா இருக்காங்க. எப்ப பாரு, போரடிக்குதுன்னுட்டு... 
சே! ஏன் தான் இந்த வீட்ல வந்து பிறந்தேனோ?
மீண்டும் வானொலியிடமே தஞ்சம்...

ஒரு வழியாக பள்ளி திறந்தவுடன் ஏதோ விடுதலை கிடைத்தது போல் துள்ளிக் குதித்து ஓடினாலும் முதல் வாரத்திலேயே படிக்கும் வேலைகள் அதிகரிக்க எப்போது விடுமுறை வரும் என்று மீண்டும் மனம் ஏங்க ஆரம்பித்து விடும்.

😔😩😔😩

இப்படியாகத் தான் எங்களுடைய விடுமுறைகளும் கழிந்தது 

இன்றைய குழந்தைகள் 


Thursday, May 3, 2018

திரும்பிப் பார்க்கிறேன்ன்ன்ன்ன் - விமான அனுபவம்


தாய்லாந்து சென்று விட்டு இலங்கை வழியே மதுரை வருவதற்காக கொலோம்போ விமான நிலையத்தில் காத்திருந்தோம். அமைதியாக இருந்த இடத்தில் திடீரென ஒரே பரபரப்பு! மலேசியா/சிங்கப்பூர் விமானம் ஒன்று தரையிறங்கி அதிலிருந்து வெளிவந்தவர்கள் பெரும்பாலும் நம் மக்கள்!  பலரும் ஆண்கள்! அவர்களைப் பார்த்தால் கல்வியறிவு குறைந்த கடைநிலை ஊழியர்களாக வேலை பார்க்கிறவர்கள் போலொரு தோற்றம். அனைவரும் சொல்லி வைத்தாற் போல் டியூட்டி ஃப்ரீ கடையில் ஆளுக்கு இரண்டு பெரிய ப்ளாக் லேபிள் விஸ்கி பாட்டிலை வாங்கிக் கொண்டு உரத்த குரலில் பேசிக்கொண்டிருந்தார்கள். கடையிலும் இவர்களால் நல்ல வியாபாரம். விமானம் புறப்படும் முன் கசகசவென்று நெருக்கியடித்துக் கொண்டு வரிசையில் :(

நாங்கள் எங்கள் இருக்கையில் அமர்ந்து கொள்ள பக்கவாட்டு வரிசையில் சுப்பிரமணி அவனுக்கான இருக்கையில் அமர்ந்து ஹெட்ஃபோனில்  பாட்டு கேட்டுக் கொண்டிருந்தான். அவனுக்கு அருகில் உட்கார வந்த இளைஞன் சுப்பிரமணியிடம் தம்பி நீ வேணா ஜன்னல் பக்கம் உட்கார்ந்துக்கோ என்று சொல்ல, தன்னிடம் தான் பேசிக்கொண்டிருக்கிறார் என்பதை புரிந்து கொள்ளாத சுப்பிரமணியோ எந்த வித உணர்ச்சியும் காட்டாமல் பாட்டு கேட்டுக் கொண்டிருந்தான். தமிழ் புரியாது என்பது வேறு விஷயம்! நான் பதட்டமாகி என்னவென்று கேட்க, தம்பிய உள்ள உட்காரச் சொல்றீங்களா என்று அவர் கேட்க, சுப்பிரமணி வேண்டாம் என்று மறுத்து விட்டான். சரி என்று நாங்களும் விட்டு விட்டோம். உள்ளே இருக்கையில் சென்று அமர்ந்தவர் 'பரபர'வென்று தான் கொண்டு வந்திருந்த சாப்பாட்டு பொட்டலத்தைப் பிரித்து கையால் நன்கு பிசைந்து 'லபக் லபக்'கென்று சாப்பிட்டார். அவ்வளவு பசி போலும்! சாப்பிட்டு முடித்த பின், தம்பி நகருப்பா என்று தலைக்கு மேல் சாமான்கள் வைக்கும் கம்பார்ட்மெண்ட்டைத் திறந்து அங்கு வைத்திருந்த அவருடைய பெட்டியை எடுத்து நோண்டிக் கொண்டே கும்பலாக வந்திருந்தவர்களுடன் உரக்க பேசிக் கொண்டு எதையோ தேடுவதும் எடுப்பதும் உள்ளே வைப்பதுமாய்... அவர் மட்டுமல்ல. அந்த கும்பலில் இருந்த அனைவரும் சொல்லி வைத்தது போல தத்தம் பெட்டிகளை குடைந்து கொண்டிருந்தார்கள்.அங்கும் இங்கும் விமானத்திற்குள் நடந்து காதும் காதும் வைத்தது போல் ரகசியமாய் வேறு பேசிக் கொண்டிருந்தார்கள்.

விமான பயணத்தில் முதன்முதலாக இப்பேர்ப்பட்ட அனுபவம்! பொதுவாக விமானத்தில் ஏறியவுடன் பெட்டிகளை வைத்து விட்டு அவரவர் இருக்கையில் அமைதியாக உட்கார்ந்திருப்பார்கள். இவர்கள் என்னடாவென்றால் சலசலத்துக் கொண்டும் பஸ்ஸில் பயணிப்பது போல் இங்கிருந்து அங்கு நடந்து கொண்டும் கடைசியில் விமானம் புறப்பட போகிறது அனைவரும் அவரவர் இருக்கையில் அமருங்கள் என்று விமான பணிப்பெண்களும் ஆண்களும் பல முறை சொன்ன பிறகு வேண்டா வெறுப்பாக அமர்ந்தார்கள். அவர்களின் நடவடிக்கையில் அதிருப்தி கொண்ட பணியாளர்களின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தாலும் வேலை நிமித்தம் காரணமாக அமைதியாக இருப்பதைப் போன்று நடித்துக் கொண்டிருந்ததை கண்கூடாகவே பார்க்க முடிந்தது.

தங்களுடைய பாரம்பரிய முறைப்படி  உடையணிந்திருந்த பெண் விமானப் பணியாளர்கள் நல்ல உயரத்துடன் கறுத்த நிறத்துடன் இடை தெரிய வலம் வர, இலங்கை கிரிக்கெட் வீரர்கள் போல இருந்தார்கள் ஆண்கள்! முகத்தில் சிரிப்பு மிஸ்ஸிங் அல்லது பயணம் செய்தவர்களைப் பார்த்தவுடன் சிரிப்பைத் தொலைத்தார்களோ! கடுகடுவென்றே இருப்பது போல தோன்றியது! 

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தென்னை மரங்களும், பசுமைக்காடுகளுமாய் இருந்த இலங்கை கண்ணில் மறைந்து இந்தியப் பெருங்கடலின் மேல் பறக்க ஆரம்பிக்க, என் மனதும் சிறகடித்து கனவுகளில் நான் கரைந்து கொண்டிருக்கையில்... தண்ணீர், கோக் இத்யாதிகளுடன் சாண்ட்விச் என்றொரு கொடுமையையும் கொடுத்துக் கொண்டே வர, தனக்கு வேண்டாம் என்று மறுத்த சுப்பிரமணியை அதிசயத்துடன் பார்த்துக் கொண்டே அவனருகில் இருந்தவர் அதையும் ஒரு கை பார்த்துக் கொண்டிருந்தார். சில நிமிடங்களுக்கு முன்பு தான் பொட்டலத்தில் இருந்தவற்றை களேபரம் செய்தவர் இப்பொழுது இதையும்....ஹ்ம்ம். சாப்பாடு முடிந்து மீண்டும் நடக்க ஆரம்பித்து விட்டார்கள். அவர்களின் நடவடிக்கைகள் ஆச்சரியமாக இருந்தது!

சிறிது நேரத்தில் தொலைவில் கடற்கரை தெரிய, ஆஹா!!! ராமநாதபுரம்! நெற்பரப்புகளும், வாழை, தென்னந்தோப்புகளும், சிறிது பசுமையும், செம்மண் ஆற்றுப்படுகையும் மறைந்து வறண்ட வைகையின் மேல் பறக்கும் பொழுது இலங்கையின் பசுமை கண்களில் விரிய இனம் புரியாத சோகம். அடுத்த தலைமுறைக்கென எதையும் விட்டு வைக்காமல் இயற்கையைச் சீரழித்துக் கொண்டிருக்கும் இழிபிறவிகள் நாம்! இன்றைய நாளைக் கடத்தி விட்டால் போதும் என்று நாளை வாழப்போகும் சந்ததியினர் எதிர்கொள்ளவிருக்கும் பிரச்சினைகளை நினையாமல் என்னவொரு சுயநல சிந்தனையுடன் வாழ்கிறோம் என்று கனத்த மனதுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தேன். நடுநடுவே சிறு சிறு ஊர்கள். மேலிருந்து பார்க்க அழகாக இருந்தது.

தாழ்வாகப் பறந்து விமானம் மதுரையைத் தொட்டவுடன் இந்த கும்பல் சீட் பெல்ட்களை எடுத்து விட்டு ஒருவர் பெயரை  ஒருவர் அழைத்து பேசிக் கொண்டே முந்திக் கொண்டு இறங்க ஆயத்தமானார்கள். கணவரும் இவர்கள் முதலில் செல்லட்டும். நாம் மெதுவாக போகலாம் என்று காத்திருந்து பதட்டமெல்லாம் குறைந்து விமானம் அமைதியான பிறகு நாங்களும் எங்களுடன் வெளிநாட்டிலிருந்து வந்திருந்த மற்றோரு குடும்பமும் இறங்க...

பாஸ்போர்ட் கையில் வைத்துக் கொண்டு நீண்டிருந்த வரிசையின் முடிவில் நின்று கொண்டோம். இம்மிகிரேஷன் இலாகா அலுவலர் நாங்கள் மதுரையை விட்டு கிளம்பும் போது இருந்தவர் தான். என்ன இவ்வளவு சீக்கிரம் விடுமுறையை முடிச்சாச்சா என்று குழந்தைகளிடம் தமிழில் கேட்க , மகள் புரிந்து கொண்டு ஆங்கிலத்தில் பதிலளிக்க, மகனோ 'என்க்கு டமில் நோ நோ ' என்று சொன்ன பதிலில் அதிர்ந்தவர். என்னங்க, இப்படி என்றவரிடம், என் தாய்பாஷை சௌராஷ்ட்ராவில் என்ன கேட்டாலும் சரியாக பதில் சொல்வார்கள் என்றவுடன் சந்தோஷப்பட்டார். பெட்டிகளுக்காக காத்திருந்த இடத்திலும் அந்த சலசலக்கும் கூட்டம் அதிரிபுதிரியாகத் தான் இருந்தது! 

சுங்க இலாகாவிற்கான பரிசோதனை வரிசை மட்டும் எவ்வளவு மெதுவாக போக முடியுமோ அவ்வளவு மெதுவாகச் சென்று கொண்டிருக்க, சந்தேகத்தின் பேரில் பலரையும் வரிசையிலிருந்து விலக்கி சோதனை செய்து கொண்டிருந்தார்கள். அங்கிருந்த காவலர் ஒருவர், சாரி சார்! இன்று நிறைய கடத்தல் பொருட்கள் அந்த விமானத்தின் மூலம் வருவதாக எங்களுக்கு கிடைத்த தகவல்களினால் தீவிர சோதனை. உங்களுக்கும் கால தாமதம் என்றார்! அதனாலென்ன உங்கள் கடமை அது என்று வலிக்காத மாதிரியே சொல்லி விட்டு  எங்கள் பெட்டிகளை ஸ்கேனரில் வைத்து வெளியே வருகையில் அங்கிருந்த சுங்க அதிகாரியின் கையில் நான்கைந்து புது தங்க செயின்கள், சில தங்க வளையல்கள். 

பெண் கல்யாணத்திற்காக தான் சம்பாத்தித்த பணத்தில் வாங்கிக் கொண்டு செல்வதாக கெஞ்சிக் கொண்டிருந்தவர் சவரம் செய்யாத முகத்துடன் திருமண வயதுப் பெண்ணின் தந்தை வயதுடையவர். பரிதாபமாக இருந்தது அங்கிருந்தவர்களுக்கு, அந்த அதிகாரியைத் தவிர. கடுகடுவென முகத்தை வைத்துக் கொண்டு அவரிடம் எவ்வளவு பணம் பறிக்கலாம் என்ற யோசனையில் இருப்பதாகவே எனக்குத் தோன்றியது. கையில் திருமண அழைப்பிதழை வைத்துக் கொண்டு அந்த மனிதர் விட்டால் காலிலேயே விழுந்து விடுவார் போல் கெஞ்சிக் கொண்டிருந்தார். அவர் சொல்வது உண்மையாவே இருந்தால்? பாவம்! ஊரை கொள்ளையடிப்பவர்கள், அடுத்தவர் வயிற்றில் நெருப்பை அள்ளிக் கொட்டுபவர்கள், ஊரான் காசில் உடலை வளர்த்து திரிபவர்கள்  எல்லாம் சொகுசாக மாலை மரியாதைகளுடன் வந்து போகிறார்கள். எளிய மனிதர்களிடம் வீரத்தையும், பதவி அதிகாரத்தையும் காட்டும் நிலை என்று மாறுமோ? வருத்ததுடன் வெளியில் வந்தால்...சும்மா தகதகவென தகித்துக் கொண்டிருக்கும் மதுரை வெயிலில் உடலும், மனதும் வெந்து போக ஐக்கியமானோம்.

சமீபத்தில்படித்த  செய்தி...
மதுரை வந்த விமானத்தில் குளியல் சோப்பில் கடத்தி வரப்பட்ட தங்க கட்டிகள்னு... இந்த மாதிரி ஆட்களைப் பிடிப்பதில் அர்த்தம் இருக்கிறது !

கைபேசியில் எடுத்த சில படங்கள் Srilanka-Madurai


ரங்கஸ்தலம்

தென்னிந்தியாவில் இருக்கும் கோவில்களுக்குச் சென்று வர இந்த ஜென்மம் பத்தாது போலிருக்கு! அத்தனை பழமையான கோவில்கள் இருக்கிறது! பார்க்காத கோவில்க...