வளரும் வயதிலும், வளர்ந்த பின்னரும் கடைநிலைத்தொழிலாளிகளின் வாழ்க்கையை அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். அன்று வேலை செய்தால் கிடைக்கும் சம்பளத்தில் மட்டுமே அடுப்பெரியும் பல குடும்பங்களையும் அறிவேன். கணவர் சரியில்லாத வீடுகளில் குழந்தைகளுக்காக வேலைக்குச் செல்லும் பெண்களும், குடும்பத்திற்காக உழைக்கும் ஆண்களும், தங்களால் இயன்றவரை ஒத்தாசையாக வயதானவர்களும் என்று அவரவர் வசதி வாய்ப்புக்கேற்றவாறு உழைத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
சாயப்பட்டறையில் நூல்களை சாயம் ஏற்ற முதல் நாள் இரவு நூல்களைப் பிரித்து இரண்டு மூன்று செட்டுகளாக சேர்த்து சோப்பு எண்ணையில் போட்டு மிதிமிதியென்று மிதித்து ஊற வைப்பார்கள். அடுத்த நாள் ப்ளீச் செய்து பிறகு சாயம் ஏற்ற வேண்டும். முதல் நாள் இரவு வேலைக்கு ஒரு அம்மா தன் இரண்டு மகன்களுடன் வேலை கேட்டு வந்தார். மூத்த மகன் அப்பொழுது மேல் நிலைப்பள்ளி மாணவன். இளையவனுக்கோ எங்கள் வயது இருந்திருக்கும். கீழ் மதுரை ஸ்டேஷன் அருகில் இருந்தது அவர்கள் வீடு. நாங்கள் அரசமரம் பக்கம் இருந்தோம். பள்ளியிலிருந்து வந்தவுடன் அவர்களை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்து விடுவார் அந்த அம்மா. வரும் பொழுதே சிணுங்கிக் கொண்டே வருவான் இளைய மகன். இருவரும் அவரவர் வீட்டுப் பாடத்தை செய்து கொண்டிருக்க, அவர்களின் தாயார், நூல்களைப் பிரித்து செட் போட ஆரம்பிப்பார். முடிந்ததும் இரு மகன்களும் சோப்பு ஆயிலில் நூல்களைப் போட்டு போட்டு மிதித்து ஊற வைப்பார்கள். சிறிது நேரத்தில் களைப்பிலே சின்னவன் தூங்கி விட, பெரியவன் தலையில் தான் அத்தனை சுமைகளும். அவனும் கால் வலிக்குதம்மா என்று பல நாட்கள் அழுதிருக்கிறான். என்னை விட இரண்டு மூன்று வயது மூத்தவனாக இருந்திருப்பானோ? பார்த்தால் பாவமாக இருக்கும். அவன் அம்மாவும் கெஞ்சி கொஞ்சி சமயங்களில் அவரே கூட அந்த வேலையையும் செய்வார். வேலைக்கு ஆட்கள் அரிதாக கிடைக்கும் காலம் என்பதால் அம்மாவும் சாப்பாடெல்லாம் கொடுத்து நன்கு கவனித்துக் கொள்வார். திடீர் திடீரென்று ஃபீஸ் கட்ட வேண்டும், எதிர்பாராத செலவு என்று முன்பணம் கேட்பார்கள். அப்பாவுக்குத் தெரிந்து சில நாட்கள் தெரியாமல் சில நாட்கள் என்று அவர்களுக்குப் பண உதவியும் செய்து பார்த்திருக்கிறேன்.
வேலைகள் முடிந்து வீட்டிற்குச் செல்ல அரைமணிநேர நடை வேறு. அவ்வளவு களைத்துப் போயிருப்பார்கள் அவர்கள் மூவரும். சின்னவன் தூங்கியபடியே அழுது கொண்டே தான் செல்வான். மூத்தவன் உழைத்த களைப்பில் தூக்கத்துடனே. அவர்கள் அம்மா மட்டும் பேச்சு கொடுத்தபடி குழந்தைகளை வேலை வாங்குகிறோமே என்ற மனச்சோர்வுடன் தினம் தினம் நடையாய் நடந்து அந்த குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார். பல நேரங்களில் தன் சொந்தக்கதை சோகக்கதைகளை சொல்லி அழுவார். ஓடியாடி விளையாட வீடு, வேளைக்குத் தட்டில் சோறு, படிப்பு,கவலையென்றால் கிலோ என்ன விலை என்றிருந்த காலத்தில் இப்படியெல்லாம் கூட கஷ்டப்படுவார்களா என்று வேதனைப்பட்டிருக்கிறேன். ஏழ்மை கொடிது என்றுணர்ந்த தருணங்கள் கொடுமையானவை.
வாழ்வின் சுக துக்கங்களை அறிய தொழிலாளர் படும் வேதனைகளை அவர்களின் உழைப்பினை அடுத்த தலைமுறை அறிய வேண்டும். மனிதர்கள் பலரும் தங்கள் கொடுப்பினையை அறிவதில்லை. வெற்றுப் புலம்பலில் சுய பச்சாதாபம் தேடிக் கொள்ளவே முனைகிறார்கள்.
ஒரு வேளை உணவுக்காக, குடும்பத்தில் அடுப்பெரிய வேண்டும் என்பதற்காக உடலை வருத்தி வேலை செய்த, செய்து கொண்டிருக்கிற அனைத்து தொழிலார்களுக்கும் வந்தனம்.
I would highly appreciate if you guide me through this. Thanks for the article…
ReplyDeleteNice One...
Tamil News | Latest Tamil News | Tamil Newspaper
Thank you.
Delete