Friday, October 11, 2013

தெற்கு கிருஷ்ணன் கோவில்

'வெட தௌரோ' என்று சௌராஷ்ட்ரா மக்களால் அன்புடன் அழைக்கப்படும் தெற்கு கிருஷ்ணன் கோவில் மதுரையில் மிக பிரசித்தம். அதிலும் புரட்டாசி சனிக் கிழமைகளில் இன்னும் விஷேசமாய் இருக்கும். துளசி, பச்சைக் கற்பூரம், பூமாலைகள் மணக்க கோலாகலமாய் பூஜைகள் நடக்கும். என் சிறு வயதில் பாட்டி வீட்டிலிருந்து அடிக்கடி விஜயம் செய்த கோவில்களில் இதுவும் ஒன்று.

சென்ற முறை ஊருக்குப் போயிருந்த பொழுது, கோவிலில் புதிதாக தங்கரதப் புறப்பாடு நிகழ்ச்சி வெகு சிறப்பாக இருப்பதாகவும், முடிந்தால் நீயும் செய்யலாம் என்று அக்கா சொல்லி இருந்ததால், என் மகளின் பிறந்த நாளை ஒட்டி கோவில் நிர்வாகத்திடம் நாள், நேரம் எல்லாம் கேட்டு விட்டு அப்படியே சிறிது எக்ஸ்ட்ரா பிரசாதத்திற்கும், ஹனுமாருக்கு வடைமாலைக்கும் சேர்த்துப் பணம் கட்டி விட்டு வந்தோம்.

ஒரு சனிக்கிழமை அன்று புறப்பாடு என்று முடிவாயிற்று. மாலையில் அர்ச்சனைக்கு வேண்டிய சாமான்கள் சகிதம் உறவினர்கள் சிலருடன் கோவிலுக்குப் போனோம். என் மகளுக்கு அந்தக் கோவில் புதிது! கும்பாபிஷேகம் முடிந்த கோபுரங்கள் 'பளிச்' என்று வண்ண மயமாக!

கோவில் வாசலில் பூ வியாபாரம், காலணிகளைப் பார்த்துக் கொள்பவர்கள், திருவோடு ஏந்தியவர்கள்!, கோவில் வாசலில் உடைக்கும் சிதறு தேங்காய்க்கு என்று எப்போதும் போல் ஒரு சிறு கூட்டம்!

கருப்பண்ணச்சாமியை கும்பிட்டு விட்டுக் கோவில் உள்ளே சென்றவுடன் இடப்பக்கத்தில் நவக்கிரகங்களுக்கு அருகில் சுடச்சுட நெய் வழிய வெண்பொங்கல் விநியோகம் செய்து கொண்டிருந்தார்கள் என் கணவரின் நண்பர்கள் சிலர். எங்களை அந்த இடத்தில் எதிர்பார்க்காத அவர்களிடம் சென்று , என்ன எப்படி இருக்கிறீர்கள் என்றவுடன் நீங்களா, இங்கே எப்படி, எங்கே விஷ்வேஷ் என்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்குப் பதில் சொல்லி விட்டுத் தொன்னையில் பொடித்துப் போட்ட மிளகு, வறுத்துப் போட்ட முந்திரி, கருவேப்பிலை, குழைய விட்ட அரிசியில்...என்று வாயில் வைத்தாலே கரையும் வெண்பொங்கலை கொடுக்க நானும் என் மகளும் அனுபவித்துச் சாப்பிட்டு விட்டு, ம்ம்ம்.. இன்னும் கொஞ்சம் கூட கொடுத்திருக்கலாம் என்று எங்களுக்குள் சொல்லிக் கொண்டு அவர்களையும் சுவாமி புறப்பாட்டிற்கு அழைத்து விட்டு உள்ளே சென்றோம்.

கோவில் சுத்தமாகத் தூண்கள் எல்லாம் விபூதி, குங்குமம் என்று பக்தர்களால் அலங்கரிக்கப்படாமல் பார்க்க நன்றாக இருந்தது. வலப்பக்கத்தில் நாமம் போட்ட கணபதி !!!, நன்றாகத் தலையில் குட்டிக் கொண்டு, அப்படியே ஸ்ரீராமஜெயம், வெற்றிலை, வடை மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட என்னுடைய அபிமான ஹனுமார் இன்றும் கம்பீரமாகக் காட்சியளிக்க, அவரை வணங்கிச் சுற்றி வந்தோம். ஹனுமாரைச் சுற்றி வர இருக்கும் மிகவும் குறுகலான இடத்தில் இன்றும் என்னால் சுற்றி வர முடிகிறது என்று சந்தோஷமாக இருந்தது! அதை விட அவரைச் சுற்றி இருக்கும் சுவர்களில் எண்ணைப் பிசுக்கு இல்லாமல் இருந்ததைப் பார்க்க டபுள் சந்தோஷம்! எங்கள் முறை வந்து அர்ச்சனை, வடை மாலை பூஜைகள் முடிந்தவுடன்,

தங்கரதப் புறப்பாட்டை முடித்து விடலாம் என்று சொல்ல, மேலேறிக் கோவிலுக்குள் சென்றோம். அதற்குள் தாயார், சக்கரத்தாழ்வார், ராமர், லக்ஷ்மணர், சீதா தேவி, பள்ளிகொண்ட பெருமாள், பளிங்கினால் செய்த ராதா கிருஷ்ணா, லட்டு கோபால், லக்ஷ்மி ஹயக்ரீவர், நரசிம்மர், கருடர் என்று சந்நிதிகளைச் சுற்றி வந்து விட்டோம்.


அழகிய புதிய ஜொலிக்கிற தங்கரதத்தில் பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவிகளுடன் மலர் அலங்காரத்தில் இருக்க, அர்ச்சகர்களும் கோத்திரம், நட்சத்திரம், பெயர்களைக் கேட்டு அர்ச்சனை செய்ய, என் தம்பிகளும் மாலை, பரிவட்ட மரியாதைகளை ஏற்றுக் கொண்டு அர்ச்சனையும் முடிய,

நாதஸ்வரம், தவில் இன்னிசை முழங்க தேர் புறப்பாடு பெருமாள், தாயார் சந்நிதி வழியாக அருமையாக நடந்தது. அனைத்து பூஜைகளும் மனநிறைவுடன் நடக்க, சந்நிதிகளை வலம் வந்து பிறகு பூக்கள் , தீர்த்தம், பிரசாதங்கள் வாங்கிக் கொண்டு சிறிது நேரம் ஆசுவாசப்படுத்திக் கொள்ள உட்கார, அதற்குள் பிரசாதம் கேட்டு ஒரு கூட்டம் மொய்க்க ஆரம்பித்து விட்டது.

அம்மாவும் வடை, சக்கரைப் பொங்கல் பிரசாதங்களை கோவிலுக்கு வந்தவர்களுக்குக் கொடுக்க ஆரம்பிக்க கூட்டம் திடீரென்று அதிகமாகி விட்டது :(

ஒரு வழியாக அதை முடித்து விட்டு வந்திருந்த உறவினர்களுக்கும் கொடுத்து விட்டு, நிமிர்ந்தால் பூஜை செய்த அர்ச்சகர்களுக்கு, தவில், நாதஸ்வரம், தீவட்டி எடுத்து வந்தவர், அவர், இவர் என்று கோவில் வாசலில் இருப்பவர் வரை வரிசையாகப் பணம் கேட்டு நொச்சு. அன்பாக கொடுப்பதை வாங்கிக் கொள்ளாமல் அடாவடியாக கேட்டதால் கொஞ்சம் தாராளமாகவே கொடுக்கும் எனக்கு எரிச்சல் தான் வந்தது.



அதே போல், புறப்பாடு செய்பவர்கள் நிம்மதியாகத் தங்கரதம் இழுக்க முடியவில்லை. அன்று ஏகப்பட்ட பூஜைகள் என்று நல்ல கூட்டம். நான் நீ என்று அவர்களும் சேர்ந்து ஓராயிரம் கைகள் வந்து விழுந்து ரதம் இழுக்க, பாவம் ரதம்! ஒரே இழுபறியாகி கடைசியில் கூட்டத்திற்குப் பயந்து நாங்கள் ஒதுங்க வேண்டியதாகி விட்டது!

இதையெல்லாம் கோவில் நிர்வாகம் கவனித்தால் தேவலை. காசு வாங்குவதோடு கடமை முடிந்து விட்டது என்று அலவலகத்தில் ஒதுங்கி இராமல், கோவிலுக்குள் நடப்பதையும் கண்டு கொண்டால் நலம்.

ஹரி ஓம் !!!!



4 comments:

  1. அதென்ன மாயமோ மந்திரமோ....பெருமாள் கோவில் பிரசாதங்களின் சுவை மட்டும் தனித்துவமானது, மகத்துவமானது. ஒரு காலத்தில் வாராவாரம் பிரதி சனிக் கிழமைகளில் திருமோகூர் காளமேகப் பெருமாள் கோவிலின் சர்க்கரை பொங்கல், புளியோதரை, வடைக்கு அடிமையாகவே இருந்தேன்.

    இந்த கிருஷ்ணர் கோவிலுக்கு ஒன்றிரண்டு தடவைதான் போயிருக்கிறேன்.ரொம்பவும் சாதாரணமாய் இருந்த கோவில் இன்று தங்கரதம் எல்லாம் வைத்துக் கொள்ளும் அளவுக்கு வசதியான கோவிலாகி இருக்கிறது.

    அப்புறம் முக்கியமான ஒன்று. இந்தக் கோவிலென்று இல்லை இப்போதெல்லாம் எல்லாக் கோவிலிலும் காசுதான் கடவுள், காசு மட்டும்தான் கடவுள்.....இதைச் சொன்னால் என்னை நாத்திகனென்பீர்கள். :)

    ReplyDelete
    Replies
    1. கோவில் பொங்கல், வடை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது :)

      பத்திகளைத் திருத்தியமைக்கு நன்றி, சரவணன் :)

      Delete
  2. நேரில் சென்று வந்த திருப்தி. நன்றி அக்கா. :)

    ReplyDelete

'கட்டிங்' போட்டால் தான் கொண்டாட்டமா?

இன்றைய வாழ்க்கையில் குடும்பத்தினரை விட நண்பர்கள் மிக நெருங்கியவர்களாக பலருக்கும் இருக்கிறார்கள். அதுவும் குறிப்பாக, ஆண்களுக்கு. நண்பர்களிடம்...