Friday, February 6, 2026

Can This Love Be Translated?


 “Can This Love Be Translated?”

பல நாட்களுக்குப் பிறகு பார்த்த கே-ட்ராமா. தலைப்பே வித்தியாசமாக இருந்ததில் வசப்பட்டேன். கதாநாயகி புதிதாக இருந்தாலும்  'Hometown cha-cha-cha' தொடரின் கன்னக்குழி நாயகன் தான் இதிலும் கதாநாயகன். எப்படி பார்க்காமல் இருக்க முடியும்? காதல் கதை வேறு :)

ஆரம்பமே படு அமர்க்களமாக ஆரம்பித்தது. அதிலும் ஜப்பானின் குறுகிய தெருக்கள், அழகிய இடங்கள் என்று ஆஹா! பார்க்க வேண்டிய நாடல்லவா அது. மிகவும் சாதாரணமாக நிகழும் ஒரு சந்திப்பு. அதைத் தொடர்ந்து மீண்டும் மீண்டும் சந்தித்துக் கொண்டிருக்கும் நாயகன், நாயகி. வெள்ளந்தி நாயகி(கொரியன் தொடர் நாயகிகள் பெரும்பாலும் அப்படிதான் இருப்பதாக கதையை அமைக்கிறார்கள்!)  சிறு சிறு தொடர்களில் நடித்துக் கொண்டிருப்பவள். ஒரே இரவில் அவள் நடித்த கதாபாத்திரத்தால் உலகப்புகழ் பெறுகிறாள். அவளை வைத்து வெவேறு நாடுகளில் சந்திக்கும் இருவரைப் பற்றின கதை மூலமாக காதலைப் பற்றி அலசும் வித்தியாசமான கதை. வளைத்து வளைத்து காதலை மையமாக வைத்து தொடர்களை எடுப்பதில் கில்லாடிகள் இந்த கொரியன் தொடர் இயக்குனர்கள்!

பல மொழிகள் பேசும் வித்தகன் நம் கதாநாயகன். ஒரு தொலைக்காட்சி 'ரியாலிட்டி ஷோ' தொடருக்காக கதாநாயகிக்கும் ஜப்பான் கதாநாயகனுக்கும் மொழிபெயர்ப்பாளனாக 'கிம் சென் ஹோ', அதான் நம் கன்னக்குழி அழகன். முக்கோண காதல் இல்லாமலா? ஜப்பான் நாட்டுக்காரர் தான் மற்றொரு கதாநாயகன். வேண்டா வெறுப்பாக நாயகியுடன் நடிக்கத் தொடங்கி அவள் வசம் தன்னை மெதுவாக இழக்கும் கதாபாத்திரம். கதாநாயகிக்கு கன்னக்குழி நாயகன் மேல் காதல். அவனோ ஒரு தலைக்காதலில் இருந்து மீள முடியாமல் தவித்துக் கொண்டிருப்பவன். மெதுவாக நாயகியின் மீது அவனுக்கும் நாட்டம் வருகிறது. ஆனால் அவன் முழுமையாக தன்னை காதலிக்கவில்லை என்று நாயகி விலக, நாயகன் தொடர, குழப்பம் இருவருக்கும்.

உண்மையான காதல் உணர்வுப்பூர்வமானது. அனைத்தையும் தாண்டி தனக்கே தனக்கு என்று உரிமை கொண்டாடும். தனக்கான உரிமை அங்கு இல்லை என்று தெரிந்தவுடன் உடனே ஒதுங்கி ஓரத்தில் நின்று "எங்கிருந்தாலும் வாழ்க" என்று பாடினாலும் அவளை/அவனைத் தொடர்ந்து சென்று கொண்டுதானிருக்கும். இந்தக் கதை, “காதலை மொழிபெயர்க்க முடியுமா?” என்ற கேள்வியை எழுப்புகிறது. ஆனால் அது மொழியிலிருந்து மொழிக்கான மாற்றமல்ல — மனதிலிருந்து மனதுக்கான பயணம்.

இந்தத் தொடர் ஒரு வழக்கமான காதல் கதை என்றால் இல்லை. இங்கே தவறான புரிதல்கள், வாழ்க்கையின் உண்மையான பிரதிபலிப்புகள் என்று கொஞ்சம் ஆழமாகவே செல்கிறது. ஒரு வார்த்தையைச் சொல்லும்போது நாம் என்ன வெளிப்படுத்துகிறோம்? சொல்லாமல் விடும்போது என்ன மறைக்கிறோம்? முழுமையாகப் புரிந்துகொள்ளப்படாமலேயே உண்மையான காதல் சாத்தியமா?

இத்தகைய கேள்விகளுடன் பயணிக்கிறது கதை.

உள்ளார்ந்த பயங்கள், பண்பாட்டு கட்டுப்பாடுகள், தனிப்பட்ட நினைவுகளால் நாயகர்களும்  நாயகியும் சுழல, ஒருவர் உணர்ச்சிகளை வார்த்தைகளில் வெளிப்படுத்த, மற்றொருவர் அமைதியிலேயே உண்மையைச் சொல்கிறார். 

இயற்கை ஒளியில் எடுக்கப்பட்ட நீண்ட காட்சிகள், அழகான பின்னணி இசை  என அனைத்தும் இத்தொடருக்குப் பலம். பல தருணங்களில் உரையாடல் முடிந்த பின்னரும் சொல்லப்படாத வார்த்தைகள் பார்வையாளரின் மனதில் பேசத் தொடங்கும் விதத்தில் மிக நெருக்கமான உணர்வைத் தருகிறது.

பல மொழிகளுக்கிடையில் வாழும் மக்களுக்கு, குடிபெயர்ந்தவர்களுக்கு, எல்லைகளைத் தாண்டிய உறவுகளில் இருப்பவர்களுக்கு  இந்தத் தொடர் மிகவும் நெருக்கமாக இருக்கும். ஒரு மொழியைத் தெரிந்தும், ஒரு மனதைப் புரிந்துகொள்ள முடியாமல் தவிக்கும் அந்த வலி உலகெங்கும் பொதுவானது. காதல் எப்போதும் தெளிவான முடிவைத் தராது. புரிதல் பல சமயம் பாதியிலேயே நிற்கும். ஆனால் முயற்சியே காதலின் ஒரு வடிவம் என்ற உண்மையை நேர்மையாகச் சொல்கிறது.

நாயகனும் நாயகியும் பாடலைக் கேட்டுக் கொண்டே செல்லும் காட்சியில் , "இனி இந்தப் பாட்டைக் கேட்கும்போதெல்லாம் என் ஞாபகம் தான் உனக்கு வரும்" என்று நாயகி சொல்லும் காட்சியும் அதற்குப் பின் அந்தப் பாடலைக் கேட்கும் மற்றொரு காட்சியில் முன் நடந்த காட்சிகளை நினைத்து பார்ப்பதும்... காதல்ல இதெல்லாம் சகஜமப்பா மொமெண்ட்கள் :)

Can This Love Be Translated?

சொல்ல வந்ததைச் சொல்லாமல் சொற்கள் தோல்வியுறும் தருணங்களிலும் ஒருவர் என்றும் அருகில்  இருக்கிறாரா என்பதைச் சொல்லும் கதை.

இப்படி ஒரு அழகான கதையை ஒவ்வொரு எபிசோடுகளிலும் காண்பித்த விதம் கொள்ளை அழகு. காட்சிக்கு காட்சி ஒளிப்பதிவில் அதகளப்படுத்தியிருக்கிறார்கள். கனடாவின் கால்கரி, Banff National Park , ஜப்பான், இத்தாலி, சவுத் கொரியா என்று ஜொள்ளு விட்டுக் கொண்டு பார்க்கும் படி காட்சிகளும் இடங்களும் அருமை. இப்படித்தான் இவர்களின் தொடர்களைப் பார்க்க வைக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரங்களுடன் சிறு கதாபாத்திரங்களின் கதைகளும் அருமையாக கோர்க்கப்பட்டு முழு தொடராக பார்க்கவும், ரசிக்கவும் விதத்தில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. எப்படி இப்படி அருமையான கதையுடன், பாத்திரப்படைப்புகளுடன் இவர்களால் மட்டும் தொடர்கள் எடுக்க முடிகிறதோ!


No comments:

Post a Comment

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

18 வருடங்களுக்குப் பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கடந்த டிசம்பர் மாதம் ஊருக்குச் சென்றிருந்த பொழுது கோபுர...