Tuesday, February 3, 2026

ஒரு கொலையிலிருந்து உருவாகும் புதிய அரசியல் மதம்


உலகிற்கு ஜனநாயகத்தின் அடையாளமாக விளங்கிய அமெரிக்கா, இன்று தன் உள்ளார்ந்த அமைதியையே இழந்து நிற்கிறது. அரசியல் உரைகள் நிதானத்தை இழந்து கோபமாக மாறியுள்ளன. நம்பிக்கைகள் மதமாகவும், மதம் அரசியல் ஆயுதமாகவும் மாறிவிட்டது. சட்டம், சமநிலை அதிகாரப் பிரிவு என்றிருந்த அமெரிக்க அரசியல், இன்று உணர்ச்சி, பயம், அடையாள அரசியல், மத நம்பிக்கைகளால் வழிநடத்தப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. தேர்தல்கள் இனி கொள்கை விவாதங்களாக இல்லாமல், “நாம்” மற்றும் “அவர்கள்” என்ற எதிர்மறை முகாம்களுக்கிடையிலான மோதல்களாக மாறி விடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. அரசியலமைப்பு மதத்தையும் அரசையும் பிரித்துப் பார்க்கச் சொன்னாலும், நடைமுறையில் அந்த எல்லை மங்கத் தொடங்கியுள்ளது. அரசியல் வன்முறை, மதம், அரசு அதிகாரம் ஆகியவை ஒன்றோடொன்று கலக்கும் ஆபத்தான தருணம் தற்பொழுது உருவாகியுள்ளது.

இந்தப் பின்னணியில் நிகழ்ந்த ‘சார்லி கிர்க்’கின் கொலை, ஒரு தனிநபரின் மரணத்தைத் தாண்டி, அரசியல் அதிகாரம், மத உணர்ச்சியை எவ்வாறு பயன்படுத்துகிறது, ஒரு மனிதனின் மரணம் கூட தனிப்பட்ட துயராக இல்லாமல் எவ்வாறு ஒரு இயக்கத்தின் புனிதச் சின்னமாக மாற்றப்படுகிறது என்பதற்கான முக்கியமான எடுத்துக்காட்டாக மாறியுள்ளது.

யார் அந்த ‘சார்லி கிர்க்’?

அவர் ஒரு அமெரிக்க வலதுசாரி அரசியல் செயல்பாட்டாளர். ‘Turning Point USA’ என்ற தொண்டு அமைப்பின் கூட்டமைப்பாளர். பிரபல ஊடக பேச்சாளர். 18 வயதிலேயே அரசியல் இயக்கத்தைத் தொடங்கி, பல ஆயிரம் மாணவர்களை உள்ளடக்கிய தேசிய வலதுசாரி இளைஞர் குழுவைக் கட்டியெழுப்பியவர். கிறிஸ்துவ மத நம்பிக்கைகளை அரசியல் உரைகளுடன் கலந்து பேசிய உணர்ச்சிப்பூர்வமான உரையாடல்கள், சமூக ஊடக செயல்பாடுகளால் விரைவிலேயே மிகவும் பிரபலமானவர். அவரது கருத்துகள் பெரும் ஆதரவையும் கடுமையான எதிர்ப்பையும் பெற்றன. அதிபர் ட்ரம்ப்புடனும் MAGA இயக்கத்துடனும் வலுவாக இணைந்து சமூக, அரசியல் விவாதங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்.

செப்டம்பர் 10, 2025 அன்று யூட்டா மாநிலம் ஓரெம் நகரில் உள்ள Utah Valley University வளாகத்தில் Turning Point USA அமைப்பின் நிகழ்ச்சியில் உரையாற்றிக் கொண்டிருந்த போது கூட்டத்தினரின் முன்னிலையிலேயே துப்பாக்கிச்சூட்டில் பலியானார். அப்போது அவருக்கு வயது 31. இந்தச் சம்பவம் அமெரிக்கா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி, அரசியல் வன்முறை, மத–அரசியல் பேச்சு, பொது பாதுகாப்பு குறித்து தீவிர விவாதங்களைத் தூண்டியது.

அவர் இறந்த பிறகு அவர் மனைவி எரிக்காவுடன் சேர்ந்து நிறுவிய Turning Point USA என்ற அமைப்புடன் இணைந்து ட்ரம்ப் அரசே ஒரு பிரமாண்ட நினைவஞ்சலி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. மிகுந்த உணர்ச்சிப் பொழிவுடன் இயேசு கிறிஸ்துவை நினைவூட்டும் மதப் படிமங்களுடன் அரசியல் எதிரிகளைக் குறிவைக்கும் கடுமையான போர்முனை பேச்சுகளுடன் நடைபெற்றது. ‘சார்லி கிர்க்’ ஒரு தியாகியாக உருவகப்படுத்தப்பட்டார்.

இந்த நிகழ்வு அமெரிக்க அரசியலில் ஒரு ஆபத்தான திருப்பத்தை உருவாக்கியிருக்கிறதா? அமெரிக்க அரசியலமைப்பின் அடிப்படை விதியை நடைமுறையில் மெதுவாகத் தகர்த்துக் கொண்டிருக்கிறதா? டொனால்ட் ட்ரம்ப் பேசும் “பழிவாங்கல்” அரசியலுடன், பல்வேறு மதக் குழுக்கள் தங்கள் நம்பிக்கைகளை இணைத்துக்கொள்வது நல்லதா? இந்தச் சூழலில் தான் அமெரிக்காவைச் சேர்ந்த போப் லியோ XIV ட்ரம்ப் நிர்வாகத்தின் சில கொள்கைகளை “கிறிஸ்துவத்துக்கு எதிரானவை” என்று கடுமையாக கண்டித்துள்ளார்.

அமெரிக்க அரசியலமைப்பின் முதல் திருத்தச் சட்டம்(First Amendment), “காங்கிரஸ் எந்த மதத்தையும் அரசு மதமாக நிறுவும் வகையில் சட்டம் இயற்றக்கூடாது. மதச்சுதந்திரத்தையும், கருத்து, ஊடக சுதந்திரத்தையும் தடுக்கும் சட்டங்களையும் இயற்றக்கூடாது” என தெளிவாகக் கூறுகிறது. தொழில்நுட்ப ரீதியில் பார்த்தால், ட்ரம்ப் நிர்வாகம் இந்தச் சட்டத்தை நேரடியாக மீறவில்லை. ஏனெனில் காங்கிரஸில் எந்தச் சட்டமும் இயற்றப்படவில்லை.

ஆனால் இங்கே தான் முக்கியமான விஷயம் தொடங்குகிறது.

“ஒரு ஜனநாயக சமூகத்தை வழிநடத்துவதில் சட்டங்களைவிட மக்களின் பழக்கவழக்கங்களும் மனநிலைகளும் தான் மிக முக்கியமானவை” என 19ம் நூற்றாண்டு ஃப்ரெஞ்ச் சிந்தனையாளர் அலெக்ஸிஸ் டொக்வில் கூறிய ஒரு ஆழமான உண்மையை MAGA தலைவர்கள் நன்கு புரிந்து கொண்டிருக்கின்றனர். அதாவது, மக்கள் எதை நம்புகிறார்கள், எதைப் புனிதமாகக் கருதுகிறார்கள், எதை உணர்ச்சியோடு ஏற்கிறார்கள் என்பவை தான் சட்டத்தைவிட அரசியலை அதிகம் மாற்றும் சக்தி கொண்டது.

அதனால் தான் ஒரு சட்டத்தைக் கொண்டுவருவதற்குப் பதிலாக,
ஒரு மதச் சடங்கு போன்ற அரசியல் நிகழ்ச்சி மூலம் மக்களின் மனதையும் உணர்ச்சியையும் நேரடியாக MAGA குழுவினர் தாக்கினர். என்ன தான் அமெரிக்க அரசியலில் மதத்தின் தலையீடு இல்லை என்று சொல்லிக்கொண்டாலும் அடிமைகள் காலந்தொட்டு எப்போதும் அதன் பங்கு இருந்து கொண்டு தான் வருகிறது. ஆனாலும் அமெரிக்க அரசு இதுவரை தன் அடக்குமுறை அரசியல் நடவடிக்கைகளுக்கு நேரடியாக “கடவுளின் அனுமதி” உண்டு என்று இவ்வளவு வெளிப்படையாகக் கூறியதில்லை. இந்தத் தருணத்தில், “கிர்கியனிட்டி”(Kirkianity, கொல்லப்பட்ட ஒரு அரசியல் செயற்பாட்டாளரை மையமாகக் கொண்ட ஒரு மதம்) நடைமுறையில் அரசு மதமாக மாறியிருக்கிறது.

அதிபரின் துணை தலைமைச் செயலாளர் ஸ்டீபன் மில்லர் , “சார்லி இறந்த அன்று தேவதைகள் அழுதனர். அந்தக் கண்ணீர் இன்று நம் இதயங்களில் தீயாக மாறியுள்ளது. அந்தத் தீ, எதிரிகள் புரிந்துகொள்ள முடியாத ஒரு கோபமாக எரிகிறது” என்று நினைவஞ்சலி செலுத்தும் கூட்டத்தில் கூறினார். இது கிறிஸ்தவ மதத்தின் மையமான “ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டு” என்ற போதனைக்கு எதிரானது. கிர்க்கின் மனைவி எரிகா, தன் கணவனைச் சுட்டுக் கொன்றவரை மன்னிப்பதை தன் உரையின் மையமாக வைத்து, “நான் மன்னிக்கிறேன். இயேசு அப்படித்தான் செய்தார். வெறுப்புக்குப் பதில் வெறுப்பு அல்ல” என்று பேசினார். ஆனால் ட்ரம்ப் அதற்கு முற்றிலும் எதிரான நிலைப்பாட்டை எடுத்தார். “நான் என் எதிரிகளை வெறுக்கிறேன். அவர்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்று விரும்பவில்லை. என்னுடைய நீதித்துறை தீவிர இடதுசாரி வன்முறையாளர்கள் மீது விசாரணை நடத்தும். கொலையின் பின்னணியில் இருப்பவர்களைக் கண்டுபிடித்து தண்டனை கொடுக்கும். இது மன்னிக்கும் மதம் அல்ல. போர்முனை மதம்” என்று அதே மேடையில் முழங்கினார்.

அதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் நிகழும் மாற்றங்கள் நாட்டின் எதிர்காலம் எந்த திசையில் நகர்கிறது என்பதைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

“ஒரு அரசு மதத்தின் ஆதரவைத் தன் பலமாக நம்பும்போது பலவீனமானதாக மாறிவிடும்” என்ற ‘டொக்வில்’-லின் எச்சரிக்கையைப் பற்றி MAGA இயக்கத்தின் “பண்பாட்டுப் போராளிகள்” கவலைப்படவில்லை. அவர்களின் ஒரே இலக்கு, மதத்தின் பெயரால் “பண்பாட்டு ஆதிக்கம்” (Cultural Hegemony) செலுத்துவது மட்டுமே.

அமெரிக்காவில் பல மதங்கள், பல பிரிவுகள், பல நம்பிக்கைகள் இருப்பது இதுவரையில் அரசுக்கு ஒரு பலமாகவே இருந்து வருகிறது. மதம் கோட்பாட்டு ரீதியாகப் பிரிக்கப்பட்டிருந்ததால் அரசுக்குப் போட்டியாக இருக்க வேண்டிய ஒருங்கிணைந்த ஒற்றுமையை அது ஒருபோதும் அடைய முடியவில்லை. டொக்விலின் பார்வையில் இந்த மத வேற்றுமையே அரசுக்குப் போட்டியாக ஒரு மதம் உருவாகாமல் தடுத்து, அரசு தோல்வியுற்றபோது மக்களுக்கு ஆறுதல் வழங்க உதவியது. ஆனால் இரு அடிப்படைவாத குழுக்களால் இந்த நிலை தற்போது மாறிவருகிறது.

முதலாவதாக, அடிப்படைவாத சுவிசேஷகர்கள். நீண்ட காலமாக நவீனத்துவத்தின், மதச்சார்பற்றவர்களின் எந்தவொரு சமரசத்தையும் எதிர்ப்பவர்கள். வெள்ளை ஆண் மேலாதிக்கம், ஓரினச்சேர்க்கை, திருமணத்திற்கு முந்தைய பாலியல் உறவு, கருக்கலைப்புக்கு எதிரான பிற்போக்குத்தனமான கருத்துக்கள் கொண்டுள்ளவர்கள். இவர்கள் பெரும்பாலும் கீழ் சமூக அடுக்குகளிலும் ஆழமான தெற்கின் “பைபிள் பெல்ட்” போன்ற சில பகுதிகளிலும் மட்டுமே பரவலாக MAGAவின் வருகைக்கு நீண்ட காலத்திற்கு முன்பிருந்தே இருப்பவர்கள்.

இரண்டாவதாக, நோட்ரேடேம் பேராசிரியர் பேட்ரிக் டெனீன், ஹார்வர்ட் சட்டப் பேராசிரியர் அட்ரியன் வெர்மியூல் உள்ளிட்ட ‘உயரடுக்கு’ பொது நல கன்சர்வேட்டிவ் கத்தோலிக்க சிந்தனையாளர்கள். புதிய ஒப்பந்தம், சிறந்த சமூகம், கிளிண்டன்-ஒபாமாவின் புதிய தாராளமயம் போன்ற பல்வேறு போர்வைகளில் தாராளவாத அரசின் தலையீடுகள் காரணமாக அமெரிக்காவில் சமூக ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்ற சுவிசேஷகர்களின் நம்பிக்கையை இவர்களும் பகிர்ந்து கொள்கிறார்கள். இருப்பினும், சார்லி கிர்க்கின் திருப்புமுனை போன்ற ஒரு கிறிஸ்துவ மக்கள் இயக்கத்தைப் பற்றி எச்சரிக்கையாகவே இருக்கிறார்கள். கிர்கியனிட்டிக்கு மாறாக, இந்த ‘We the People’ குழு, பாவத்திலிருந்து யாரும் தப்பிக்க முடியாது என்று நம்புகிறார்கள்.

இவர்களைப் பொறுத்தவரை, சட்டங்கள், பழைய மத கட்டுப்பாடுகள் மூலமே சமூக ஒழுங்கிற்கான தீர்வு என்பது சாத்தியப்படும் என்ற நம்பிக்கை. இது ஜனநாயகமயமாக்கல், தொழில்மயமாக்கல், தாராளமயமாக்கல் ஆகியவற்றால் ஏற்பட்ட எழுச்சிகளுக்கு முன்னர் அதாவது, நவீன காலத்திற்கு முந்தைய காலத்தில் வகுக்கப்பட்ட ஒரு பிணைப்பு கோட்பாடாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. இந்தச் சிந்தனை உச்ச நீதிமன்ற மட்டத்தில் கணிசமான செல்வாக்கையும் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த இரு பழமைவாத குழுக்களும் எப்படியாவது அறிவியல் கண்டுபிடிப்புகளை நிறுத்திவிடுவார்களோ என்று பழமைவாத கொள்கைகளைக் கடைப்பிடிக்கும் சிலிக்கான் பள்ளத்தாக்கின் தொழில்நுட்ப செல்வந்தர்களே அஞ்சுகிறார்கள். என்ன ஒரு முரண்! செயற்கை நுண்ணறிவு, எரிசக்தி தொழில்கள், அணு தொழில்நுட்பத்தை ஒழுங்குபடுத்த அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு அச்சம் எழத்தானே செய்யும்?

எவாஞ்சலிக்கர்களின் உணர்ச்சி, கத்தோலிக்கர்களின் சட்ட அறிவு, தொழில்நுட்ப முதலாளிகளின் பணம் இந்த மூன்றையும் இனம் கண்டு கொண்ட ட்ரம்ப், சார்லி கிர்க்-கின் இறப்பை வைத்து இந்தக் கூட்டணியை வெளிப்படையாக ஒரு மதமாகவே மாற்றிவிட்டார்.

இது ஆபத்தான முடிவு.

இந்தப் புதிய அரசியல்–மத கலவை, அமெரிக்காவின் மத–அரசு பிரிவை சிதைக்கிறது. வெறுப்பை “அன்பு” என மறைக்கிறது. பழிவாங்கலை “நீதியான கோபம்” என அழைக்கிறது. கொல்லப்பட்ட ஒருவரை மையமாகக் கொண்ட ஒரு அரசியல் மதம் எந்த சமுதாயத்துக்கும் நல்லதல்ல. ‘கிர்கியனிட்டி’, MAGA இயக்கத்தில் உருவாகும் ஒரு அரசியல் மதம். பன்முக அமெரிக்காவின் ஆன்மாவுக்கு அந்நியமானது.

இன்றைய அமெரிக்காவில் நிகழ்ந்து கொண்டிருப்பது சாதாரண அரசியல் மோதலோ அல்லது ஒரு கொலையின் பின் எழுந்த துயரமோ அல்ல. அது மத நம்பிக்கையை அதிகாரத்தின் கருவியாக மாற்றும் முயற்சி. துக்கத்தை நீதியாகவும், பழிவாங்கலைப் புனிதமாகவும் மாற்றும் ஆபத்தான திருப்பம். வரலாறு மீண்டும் மீண்டும் எச்சரித்திருப்பது ஒன்று தான்: அரசு தன்னை தெய்வீக மொழியில் அலங்கரிக்கத் தொடங்கும் போது, எதிர்ப்பும் விமர்சனமும் குற்றமாக மாறிவிடும். மதமும் அரசும் தனித்தனியாக இருக்க வேண்டும் என்ற அமெரிக்க அரசியலமைப்பின் அடிப்படை உண்மை, ஒரு சட்ட வரியாக அல்ல, ஒரு பாதுகாப்புச் சுவராகவே உருவாக்கப்பட்டது. இந்தப் புதிய அரசியல்–மத எழுச்சி ஒரு தற்காலிக தீப்பொறியா, அல்லது நீண்ட நிழலா என்பது சட்டங்களால் அல்ல; மக்களின் மனச்சாட்சியாலும், அவர்களின் கோபத்தையும் நம்பிக்கையையும் வேறுபடுத்திக் காணும் ஞானத்தினாலும் மட்டுமே தீர்மானிக்கப்படும்.

மானிடம் தழைத்தோங்க இந்த மத–அரசியல் எழுச்சி விரைவில் அணைந்து போக வேண்டும். நம்பிக்கை, அன்பு, மனிதநேயம் ஆகியவை மட்டுமே இந்த குழப்பத்தைத் தாண்டி நாட்டையும் மக்களையும் மீட்டு நிலைத்திருக்கும்.

No comments:

Post a Comment

வெனிசுவேலா: மோதலின் நடுவில் நிற்கும் நாடு

சொல்வனம் இதழ் 358ல் வெளியான என்னுடைய கட்டுரை வெனிசுவேலா: மோதலின் நடுவில் நிற்கும் நாடு – சொல்வனம் | இதழ் 359 | 25 ஜன 2026 எண்ணெய் வளம், இயற்...