Showing posts with label அமேசான் ப்ரைம். Show all posts
Showing posts with label அமேசான் ப்ரைம். Show all posts

Monday, December 23, 2024

அங்கிள் சாமின் உண்மையான முகம்


சில வாரங்களுக்கு முன் அமேசான் பிரைமில் படங்களைப் பார்க்கத் தேடிக்கொண்டிருந்த பொழுது அகப்பட்டது தான் 'Rainmaker'. கதாநாயகன் யார் என்று பார்த்தால் நம்ம 'மேட் டேமன்'. இவர் நடித்த படங்கள் எல்லாமே பார்க்கிற வகையில் தான் இருக்கும். அவர் இளைஞனாக இருக்கின்ற பொழுது எடுத்த படமென்றால் தொண்ணூறுகளில் எடுத்த படம் என்று தெரிந்து விட்டது. இந்தப் படத்தை இதற்கு முன் பார்த்தது போலவே எங்கள் இருவருக்கும் தோன்றியது. அநேகமாகப் பார்க்க ஆரம்பித்து நடுவில் தூங்கி விட்டிருப்பேன். அதனால் சில காட்சிகள் பார்த்தது போலவே இருந்தது.

தொடர்ந்து பார்க்க ஆரம்பித்தோம். அமெரிக்காவில் தனியொருவனாக வாழும் ஏழை மாணவர்களின் நிலையை நன்கு பிரதிபலித்திருந்தார்கள். இந்தப்படத்தில் ஏழ்மை, பெருநிறுவன முதலைகள், நீதிமன்றம், குடும்ப வன்முறை என்று அமெரிக்காவின் மறுமுகத்தை நன்றாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். 

நமக்குத் தெரிந்த வாழ்க்கையெல்லாம் இந்திய மருத்துவர்கள், பொறியாளர்கள் என்று சராசரி அமெரிக்கர்களை விட கூடுதல் வருமானம் ஈட்டும் இந்தியர்கள். கலர்கலராக 'இன்ஸ்டா'வில் போடும் படங்களை வைத்து அமெரிக்க வாழ்க்கை இப்படித்தான் என்று இன்ஸ்டா காலத்திற்கு முன்பு நானும் நினைத்துக் கொண்டிருந்தேன். இங்கு வந்த பிறகு தான் தெரிந்தது வறுமையின் நிறம் வெள்ளையும் கருப்புமாக இங்கும் இருக்கிறது என்று.

கல்லூரியில் படிப்பதென்பது பலருக்கும் இங்கு கனவாகவே இருந்தது. ஓரளவு வசதி இருந்தால் தான் அதெல்லாம் சாத்தியம் என்றிருந்த நிலை இப்பொழுது மெல்ல மாறிவருகிறது. மேற்படி சட்டம், மருத்துவம் பயில ஆண்டுகளும் செலவுகளும் அதிகம் என்பதால் ஏழை மாணவர்களின் பாடு திண்டாட்டம் தான். அரசு உதவி அளித்தாலும் கடன் வாங்கித்தான் படிக்க வேண்டும். அப்படிப்பட்ட கதாபாத்திரம் தான் கதாநாயகனுக்கு. வாடகை கொடுக்க முடியாமல் கதாநாயகன் காரில் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

அங்கே, இங்கே ஏதோ கிடைக்கிற துக்கடா வேலைகளைப் பார்த்துக் கொண்டு சட்டம் படித்துக்கொண்டிருக்கின்றான். அதே நேரத்தில் பகுதி நேர வேலையின் மூலமாக மருத்துவ காப்பீடு தொடர்பான வழக்கு ஒன்றில் கட்சிக்காரர்களுக்கு உதவ தானாகவே சென்று ஆஜராகிறான். எப்படியாவது தன் கட்சிக்காரர் ஜெயித்து விட வேண்டும் என்று வெறிகொண்டு உழைக்கும் கதாபாத்திரம். நடுவே ஒரு குடும்ப வன்முறை வழக்கிற்கும் ஆஜராகிறான்.

மகனின் நோய்க்குச் சிகிச்சை அளிக்க இன்சூரன்ஸ் நிறுவனம் ஒத்துக்கொள்ள மறுத்து பெற்றோர் செலவழிக்க முடியாமல் மகன் இறந்து விடுகிறான். அவர்களுக்காக காப்பீட்டு நிறுவனத்தை எதிர்த்து வழக்கு தொடர்கிறான் கதாநாயகன். பெரிய நிறுவனங்கள் ஏழைகளுக்கு உதவ மாட்டார்களே தவிர, தங்களுக்காக வாதாட பெரிய தலைகள் கொண்ட வழக்கறிஞர்கள் குழுவைக் கொண்டு நேற்று பட்டம் வாங்கியவனைப் பந்தாடுவார்கள். கோடிக்கணக்கில் செலவிடுவார்கள்!

கதாநாயகன் எல்லா வழிகளிலும் முயன்று நிறுவன மேலதிகாரி வரை விசாரணை செய்து முடிவில் பணத்தைக் கொள்ளையடிக்க மருத்துவ காப்பீட்டு நிறுவனம் செய்த தகிடுதத்தங்களை வெளிக்கொணர்வான். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நீதிமன்றம் ஆணையிடும். எல்லாம் நல்லபடியாக முடிந்து விட்டது என்று நினைக்கும் நேரத்தில் அந்த நிறுவனம் 'திவால்' அறிக்கை அனுப்பி யாருக்கும் ஒரு பைசா கொடுக்காமல் தப்பி விடும். வாதாடிய வக்கீலுக்கோ மகனை இழந்த குடும்பத்திற்கோ எந்த நிவாரணமும் கிடைக்காது. இது தான் 'corporate greed' என்பது.

இப்படி மக்களின் பணத்தை 'காப்பீடு' என்ற பெயரில் வசூலித்தாலும் பெரும்பாலான அமெரிக்க மருத்துவ காப்பீட்டு நிறுவனங்கள் மோசடி வேலைகள் செய்து வருவது கண்கூடு. மருத்துவர் கோரும் பணம் அதிகமா அல்லது நிறுவனங்கள் அவர்களுக்குப் பாதியைக் கொடுப்பது சரியா? தெரியவில்லை. 'ஒபாமாகேர்' வந்த பிறகு ஏமாந்த சோணகிரிகளிடம் அதிகமாக வசூலிக்கிறார்கள்.

எதற்கு இதையெல்லாம் சொல்கிறேன் என்றால் சமீபத்தில் 'யுனைடெட் ஹெல்த்கேர்' நிறுவன மேலதிகாரியை ஒருவன் சைலன்சர் துப்பாக்கியால் நியூயார்க் நகரத்தில் சுட்டுக் கொன்று விட்டான். தப்பியோடிய அவனைப் பிடித்தது மட்டுமில்லாமல் தீவிரவாதம் என்ற பெயரில் ராணுவ விசாரணை நடத்த வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது.

பள்ளிகளில், பொது இடங்களில் சராமாரியாக துப்பாக்கியால் கொல்லும் பைத்தியங்களைக் கூட தீவிரவாதி என்று தண்டனை கொடுப்பதில்லை. கார்ப்பரேட்காரன் ஒருவனைக் கொன்றதற்கு எப்படியெல்லாம் துடிக்கிறது அமெரிக்கா! இது தான் அங்கிள் சாமின் உண்மையான முகம்😩

என்னவோ போடா மாதவா!


Monday, December 18, 2023

சில நேரங்களில் சில மனிதர்கள்


படத்தலைப்பைப் பார்த்தவுடன் ஜெயகாந்தனின் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' புத்தகத்திலிருந்து தான் கதையை எடுத்திருப்பார்களோ என்று தோன்றியது. அப்படியெல்லாம் எடுத்து சொதப்பி வைக்காமல் விட்டுவிட்டார்கள். நல்ல வேளை! இதே தலைப்பில் ஏற்கெனவே ஒரு தமிழ்ப்படம் வந்திருக்கிறது. எப்படி அதே தலைப்பு என்ற கேள்வியுடன் படத்தைப் பார்க்க ஆரம்பித்தேன். 

கதாநாயகன் அசோக் செல்வன். நான் பார்த்த இவர் படங்கள் இதுவரை நன்றாகத்தான் இருக்கிறது. நடிக்கவும் செய்வார். அமைதியான கதாபாத்திரங்களில் பார்த்து இந்தப்படத்தில் கோவக்கார 'விஜி'யாக பார்க்க வித்தியாசமாக இருந்தது. சிறிது நேரமே வந்தாலும் நாசர் உள்ளூர் பாஷையைப் பேச முயற்சி செய்ததால் வழக்கமான குரலைக் கேட்க முடியவில்லை. நாயகனின் நண்பனாக வருபவர், 'குட் நைட்' படத்தில் நடித்த மணிகண்டன் குறைவில்லாமல் நடித்திருக்கிறார்கள். 

அடுத்தவருக்காக ஆடமபரமாக வாழும் இளைஞன், தன் குறைகளை உணராமல் திருத்திக் கொள்ளாமல் உயர துடிக்கும் இன்னொருவன்,  விபத்தில் காயம்பட்டு கிடப்பவரைக் காப்பாற்ற நினைத்து பழியைச் சுமந்து அதனால் மனஉளைச்சலுக்கு ஆளாகும் மற்றொருவன்  இவர்களுடன் தான் விரும்பும் நேசிக்கும் மனிதர்களைத் தன் பேச்சுக்களால் செயல்களால் தொடர்ந்து காயப்படுத்தும் கதாநாயகன். இந்த நான்கு குடும்பங்கள், அவர்களைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் என்று காட்சிகள் நகர்ந்து ஓரிடத்தில் நடக்கும் விபத்தில் அனைவரும் சந்தித்துக் கொள்கிறார்கள். அதைத் தொடர்ந்து அவரவர் தவறுகளை உணர்ந்து திருந்துகிறார்கள். 

தவறு செய்யாத மனிதர்கள் யார் தான் இருக்கிறார்கள்? செய்த தவற்றைத் திருத்திக் கொள்பவர்கள் தான் அதிகம் இல்லை. அதைத்தான் இப்படம் கூறுகிறது. மேல்தட்டு, கீழ் தட்டு, நடுத்தர வர்க்கம் என்று நகர்கிறது. 

சமூக வலைதளத்தின் அழுக்குப்பக்கத்தை, அறமற்ற ஊடகவியலாளர்களின் அநாகரீகப் போக்கையும் நன்றாகவே பதிவு செய்திருக்கிறார்கள். படக்குழுவினருக்குப் பாராட்டுகள்.

நல்ல படம். 




Friday, September 1, 2023

ஸ்மைல் ப்ளீஸ்!


மலையாளப் படங்களைப் போலவே மராத்தியிலும் பல அருமையான படங்கள் வெளிவருகிறது. என்னுடைய தாய் பாஷையை ஒத்திருக்கும் மொழி என்பதால் நல்ல படங்கள் என்றால் உடனே பார்த்து விடுவோம். சமீபத்தில் அமேசான் ப்ரைமில் பார்த்த படம் 'ஸ்மைல் ப்ளீஸ்'. புகைப்படம் எடுப்பவருடைய கதை என்பதும் இப்படத்தைப் பார்க்க ஆவலைத் தூண்டியது. மிகக் குறைவான கதாபாத்திரங்களைக் கொண்டு ஆர்ப்பாட்டமில்லாமல் ஒரு கதையை நல்ல செய்தியுடன் கொண்டு வந்ததற்கே பாராட்டலாம். கதாபாத்திரங்களின் அலட்டல் இல்லாத நடிப்பு. அழகான காட்சியமைப்பு. திரைப்படங்கள் என்பது பொழுதுபோக்கு அம்சங்களுடன் இருக்க வேண்டும். இதில் கூடவே மறதி நோய் பற்றின சிறிது விழிப்புணர்வும் இருக்கிறது. சபாஷ்👍

'Still Alice' என்ற ஹாலிவுட் திரைப்படம் மறதி நோயால் பாதிக்கப்பட்டவருடைய வாழ்க்கையை அழகாகச் சித்தரித்திருக்கும். அதில் நடுத்தர வயது கதாநாயகி. ' ஸ்மைல் ப்ளீஸ்' படத்தில் மிகச் சிறிய வயதில் கூட இந்நோய் தாக்கும் வாய்ப்புகள் இருப்பதையும் அவரைச் சுற்றியுள்ள குடும்பம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது, நோயை எதிர்கொள்ள கதாநாயகி தடுமாறுவதையும் அருமையாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். இன்னும் கூட இந்த நோயால் பாதிக்கப்படுகிறவர்களைப் பற்றி ஆழமாக எடுத்திருக்கலாம் என்று தோன்றியது. ஆனாலும் 'அல்சைமர்ஸ்' என்று அங்கொன்று இங்கொன்றுமாக பரவலாக கேட்டுக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் இந்நோயைப்பற்றி மக்கள் அறிந்து கொள்வதும் அவசியம். அதனால் இந்தப்படம் கவனம் பெற்றிருக்கிறது என்று நினைக்கிறேன்.

அவரவர் கனவைத் துரத்தி ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் நோயாளிக்குத் தேவையான கவனத்தையும் அன்பையும் தர வேண்டிய அவசியம் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு ஏற்படுகிறது. அந்நிலையிலும் அன்பானவர்ளின் ஆதரவால் கனவைச் சாதிக்க முடியும் என்ற நல்ல செய்தியுடன் நிறைவடைகிறது. அப்பாடா! நமக்கே ஆயிரத்தெட்டு சோதனைகள்! சோகமாக முடிக்காமல் விட்டார்களே என்று மகிழ்ச்சியாக இருந்தது😊 

மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை நண்பர்கள் மூலம் கேட்டறிந்திருக்கிறேன். 'Still Alice' படத்தைப் பார்த்தவுடன் எனக்கு அப்படியொரு நிலை வந்தால் எப்படி இருக்கும் என்று உண்மையிலேயே பயந்து போனேன். முன்னெச்சரிக்கையாக குழந்தைகளிடம் கூட பேசினேன். இந்நோயால் பாதிக்கப்பட்டவருக்கு ஏற்படும் குழப்பங்கள், ஏமாற்றங்கள், தனிமை, விரக்தியை பொறுமையாக கையாளும் மனப்பக்குவம் அவரைச் சுற்றிலும் இருப்பவர்களுக்கு அவசியம். அழகான காட்சியுடன் படத்தை நிறைவு செய்ததற்கே விருது கொடுக்கலாம்😊

பொறுமை இருப்பவர்களும் வசதியுடையவர்களும் கிடைத்தால் டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்டவர்கள் எஞ்சிய வாழ்க்கையை ஓரளவு நிம்மதியாக கழிப்பார்கள். மற்றவர்களின் நிலைமை பாவம் தான்😔 இவர்களைக் கையாளுவது அத்தனை எளிதல்லவென பாதிக்கப்பட்ட அந்த குடும்பத்தினர் மட்டுமே நன்கு அறிவர். நண்பர் ஒருவரின் தந்தை காணாமல் போய் அவரைக் கண்டுபிடிப்பதற்குள் குடும்பமே பதறிப்போனது. எதிரே நிற்கும் குடும்ப உறுப்பினர் யார் என்றே தெரியாமல் வேற்று மனிதருடன் பேசுவது போல் பேசும் அன்பானவர்களின் நிலை யாருக்கும் வரக்கூடாது😢

இந்தியாவில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு டிமென்ஷியா பாதிப்பு 7.4% என்று ஆய்வுகள் கூறுகிறது. 60 வயதுக்கு மேற்பட்ட 8.8 மில்லியன் இந்தியர்கள் டிமென்ஷியாவுடன் வாழ்கின்றனர். ஆண்களை விட பெண்களிடையே அதிகமாகவும், நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் அதிகமாகவும் இந்நோய்த்தாக்குதல் உள்ளது. தென் மாநிலங்களில் தமிழ்நாட்டில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அல்சைமர் சங்கம் வெளியிட்டுள்ளது😔

தமிழில் ஏன் இத்தகைய படங்கள் வருவதில்லை என்று யோசித்தால் புரியும். சாதியை ஒழித்து விட்டோம் என்று கொக்கரித்துக்கொண்டே கொம்பு சீவும் 'சாதீய' படங்களை எடுத்துக் கொண்டிருக்கும் நிலைமை மாறாத வரை நாம் மலையாளம், மராத்தி, இந்திப் படங்களைப் பார்ப்போம்.

2020ல் மராத்தியில் சிறந்த கதாநாயகிக்கான விருதை இப்படத்தில் நடித்த 'முக்தா பார்வே' பெற்றிருக்கிறார்👏


Tuesday, August 8, 2023

ஸ்வீட் காரம் காஃபி



மூன்று தலைமுறைப் பெண்களைப் பற்றின வாழ்க்கைப் பயணத் தொடர்.

பெரும்பாலான பெண்களின் வாழ்க்கையில் அவர்களுக்கென்று கிடைக்கும் நேரம் என்பது அரிது. அதுவும் திருமணத்திற்குப் பின் செக்கு மாடு போல குடும்பம் குடும்பம் என்று கணவன், குழந்தைகள் உலகத்தில் சிக்கி தனக்கென்றிருக்கும் உணர்வுகளைக் கூட அது மறக்கடித்து விடுகிறது. அதனால் தான் புதியதொரு உலகத்தைக் காண்கையில் ஆனந்தப் பெருமூச்சு விடுகிறாள்.

இப்பொழுதெல்லாம் பல பெண்களும் நன்கு உஷாராகி விட்டார்கள். தங்களுடைய நண்பர்கள், அவர்களுடனான பொழுதுபோக்குகள் என்று மாறி விட்டிருக்கிறது. என்ன? பல ஆண்களால் தான் இந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. வேலைக்குச் செல்லும் பெண்களின் உலகத்தில் ஏகப்பட்ட பிரச்சினைகள் இருந்தாலும் சுய முடிவு ஓரளவுக்கு எடுக்க முடிகிறது. வீட்டில் இருக்கும் பெண்கள் சிறிது சிறிதாக வெளியே வர முயற்சிக்கிறார்கள்.

கணவனை இழந்த பாட்டியாய் நடிகை லட்சுமி கதாபாத்திரம் மிகவும் அருமை. பொதுவாகவே பாட்டிகளுக்குத் தான் தைரியம் அதிகமாக இருக்கும். வயதின் முதிர்ச்சியோ வாழ்க்கை அனுபவமோ மிகவும் துணிந்தவர்களாக பல பாட்டிகள் இருப்பார்கள். அப்படித்தான் இந்த சுந்தரி பாட்டி. அவருடைய இளமைக்காலத்திலேயே மனதிற்கு விரும்பியவனைத் திருமணம் செய்திருந்தாலும் ஏதோ ஒரு மன நெருடல். இழந்த தன்னுடைய நெருங்கிய நட்பைத் தேடுகிறது அவருடைய மனம். அதற்கான விடையைத் தேடி அவர் தொடங்கும் பயணத்தில் மருமகள் காவேரி பேத்தி நிவேதிதாவுடன் நடக்கும் கலந்துரையாடல்கள். முதல் காட்சியே அருமை. கணவர் இறந்த நாள். மகன் ஏதோ அம்மா கவலையாக இருப்பார் என்று அவன்பாட்டுக்குப் பேசிக் கொண்டிருப்பான். அப்போது லட்சுமி மனதிற்குள்ளே பேசுவதாக வரும் வசனங்கள் அருமை.

கணவனுக்குப் பிறகும் மனைவி என்பவளுக்கு ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பதை மறந்து விடுகிறோம். அதே போல, வயதாகி விட்டால் அவ்வளவு தான் என்பது போலத் தான் நாம் நம் பெற்றோரை நடத்துகிறோம். அவர்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளிக்க மறந்து விடுவது எவ்வளவு கொடுமை? நாளை நமக்கும் அதே நிலைமை தான் என்று உணர்ந்தாலே போதும் அவர்களை நன்கு புரிந்து கொண்டு நடக்க ஆரம்பித்து விடுவோம்.

கல்லூரி நாட்களில் சிறகை விரித்து வாழ்ந்தவள் திருமணத்திற்குப் பிறகு கணவன், குழந்தைகள் என்று தன் உலகத்தைச் சுருக்கிக் கொண்டு அவர்களுக்காகவே உயிர் வாழ்பவளாகி விடுகிறாள். பொதுவாகவே குடும்பங்களில் அம்மாவின் இருப்பை யாரும் கண்டுகொள்வதில்லை. ஆனால் அச்சாக இருந்து குடும்ப சக்கரத்தைச் சுழற்றுபவள் அவளே என்று புரியும் பொழுது காலம் கடந்திருக்கும். நல்ல வேளை! இந்தத் தொடரில் அப்படி இல்லை. அதே போல, திருமணத்திற்குப் பிறகு பெண்கள் பலரும் தங்களுடைய கனவுகளை, அபிலாஷைகளைத் தொலைத்து வேறொரு உலகத்தில் வாழ வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாகிறார்கள். அதையும் சிலர் விரும்பி ஏற்றுக் கொள்கிறார்கள். பலர் சந்தர்ப்பம் கிடைத்ததும் மீண்டு வாழ்கிறார்கள்.

மனைவிக்கு ஒன்றும் தெரியாது என்று நடத்தும் பல ஆண்களின் பிரதிபலிப்பாக இந்தப்படத்தில் குடும்பத்தலைவனாக வருபவரின் கதாபாத்திரம். அப்பனுக்குத் தப்பாமல் மகன். அம்மாவை அதிகம் கண்டுகொள்ள மாட்டான்.

தனக்குப் பிடித்த துறையில் சாதிக்க வேண்டும் என்று நினைக்கும் மகள். ஆனால் உலகம் ஒத்துக்கொள்ளாத விளையாட்டுத்துறை. அதுவும் அதே துறையில் இருக்கும் காதலனே முட்டுக்கட்டை போடுகிறான். தன் அண்ணனைப் போலவே உலக நடப்பு அம்மாவிற்கு ஒன்றும் தெரியாது என்று நினைப்பவள். எப்படி தன்னுடைய பிரச்சினைகளில் இருந்து பாட்டி, அம்மா உதவியுடன் வெளிவருகிறாள்?

இந்த கதாபாத்திரங்கள் அனைவரும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு வாழும் சந்தர்ப்பங்கள் அமைந்து தங்களின் பலம், பலவீனத்தைப் புரிந்து கொள்கிறார்கள். நடைமுறையில் சாத்தியமில்லாத தேவையில்லாத ஜவ்வான காட்சிகள் சில இருந்தாலும் பயணத்தில் நாம் காணும் மனிதர்களின் அறிமுகம் தரும் இனிமையான அனுபவத்தையும் பேசுகிறது இத்தொடர்.  இமாச்சல் பிரதேசம், டெல்லி ஒளிப்படக் காட்சிகள் எல்லாம் அருமை. 

மகள், மனைவி, மருமகள்,அம்மா, பாட்டி என்று ஒரு பெண்ணின் வாழ்வில் பல நிலைகள் இருந்தாலும் தனக்கென வாழும் தருணங்களில் தான் அவள் உயிர்ப்போடு இருக்கிறாள். அதுவே அவளின் வாழ்க்கையை முழுமையாக்குகிறது.

நம் வாழ்க்கையை எளிமையாக்கிக் கொள்வதும் சிக்கலாக்கிக்கொள்வதும் நம் கையில் தான் இருக்கிறது. மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு எது தேவை என்று உணர்ந்தாலே போதும். வாழ்வு சொர்க்கம்.

தமிழில் எப்பொழுதாவது தான் ஓரளவிற்கு நல்ல பொழுதுபோக்குத் தொடர் வரும். அமேசான் ப்ரைமில் பார்க்கலாம்.


Wednesday, July 5, 2023

Dum Laga Ke Haisha



நாம் நினைத்தபடி வாழ்க்கை அமைந்தால் வரம். இல்லையா? கிடைக்கின்ற வாழ்க்கையை வரமாக்கிக் கொள்ள வேண்டும். இது தான் 'Dum Laga Ke Haisha' படத்தின் கரு. அதை சமூகத்தில் புரையோடிக்கொண்டிருக்கும் ஒரு விஷயத்தை வைத்து மிக அழகாகப் படமாக்கியிருக்கிறார்கள், 

படிக்காத ஒல்லிப்பையனாக அப்பாவிற்கு பயந்தவனாக ஆயுஷ்மான் குரானா நன்றாக நடித்திருக்கிறார். அப்பாவின் மிரட்டலுக்குப் பயந்து குண்டான, படித்த பட்டதாரிப் பெண்ணை வேண்டாவெறுப்பாகத் திருமணம் செய்து கொள்கிறார்.

அனைவரிடத்திலும் அன்பாக அதே நேரத்தில் ஆடல், பாடல் என்று சிரித்த முகத்துடன் கணவனின் அன்புக்கு ஏங்குபவராக, வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருக்கும் சராசரிப் பெண்ணாக பூமி பட்னேகரின் நடிப்பும் அருமை. வீடுகளில் நடக்கும் பிரச்சினைகளைச் சுவையாகப் படத்திற்குள் கொண்டு வந்திருக்கிறார்கள். அப்பா கதாபாத்திரம் அந்த கால அப்பாக்களை பலருக்கும் நினைவுப்படுத்துகிறார். இந்தக்காலத்தில் அப்பாக்கள் மகன்களை மிரட்டுகிறார்களா என்ன?  அத்தையாக வருபவர் போல் வீடுகளில் ஒருவர் இருப்பார்😀

இன்றும் கூட குண்டாக இருக்கும் பெண்களின் நிலைமை கொடுமையானது. பெண் என்றால் ஒல்லியாக மெல்லிடையாளாக இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற நவீன பாணி அடிமைத்தனம். இது பெண்களுக்குத் தான் அதிகம். உடல் ஆரோக்கியதிற்காக எடையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது வேறு. சமூகத்தின் கேலி, கிண்டல்களுக்குப் பயந்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொண்டால் தான் நாலு பேர் நம்மை மதிப்பார்கள் என்று நினைத்து சைஸ் ஸீரோவாக மெனக்கெட முயன்று கொண்டே இருப்பார்கள். மனஉளைச்சலுக்கும் ஆளாவார்கள். 

ஆணை விட பெண் அதிகம் படித்திருந்தாலும் உயர் பொறுப்பில் இருந்தாலும் அவளைச் சிறுமைப்படுத்த  சமூகம் தயங்குவதில்லை. அதை ஆங்காங்கே சிறுசிறு வசனங்கள் மூலம் அழகாகக் கூறியிருக்கிறார்கள். மிகப் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டிய சமூகமே குண்டாக இருப்பதை அசிங்கம் என்பது போல் மக்களின் மனதில் விஷத்தைத் தூவிக் கொண்டிருக்கிறது. நாமும் அதற்குப் பலிகடாவாகிக் கொண்டிருக்கிறோம். இப்படத்தில் கதாநாயகியின் தம்பி கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் அவளின் உடல் எடையைச் சுட்டிக் காட்டுவான். யாரும் கண்டிக்காமல் இருப்பதையும் பார்க்கலாம்.  அதே போலத்தான் சமூக வலைதளங்களில், தொலைகாட்சி நிகழ்ச்சிகளில், திரைப்படங்களில் குண்டாக இருக்கும் பெண்களைப் பற்றின கேலியும் கிண்டலும் அதிகமாகி வருவதும் மனதளவில் பல பெண்கள் பாதிக்கப்படுவதும் தொடர்ந்து வருவது தான் கொடுமை. இந்தப்படத்தில் அந்த மனநிலையை மாற்ற முயன்றிருக்கிறார்கள். 

செய்யும் தொழிலில் அறிவியல் வளர்ச்சி ஏற்படும் பொழுது அதற்கு மாற தடுமாறுவதையும் அழகாக எடுத்து இருந்தார்கள். நன்கு நினைவில் இருக்கிறது. மதுரையில் ஒலிநாடாவில் பாடல்கள் கேட்டுக் கொண்டிருந்த காலத்தில் காளான்கள் போல மதுரை டவுன்ஹால் தெருக்களில் சிறுசிறு கடைகள் முளைத்தது. பாடல்களைப் பதிவு செய்ய கூட்டம் கூட்டமாக இளைஞர்கள் முண்டியடித்துக் கொண்டு இருப்பார்கள். கடை உரிமையாளர்கள் பலரும் புது பணக்காரர்கள் ஆனார்கள். காலம் மாறியது. சிடிக்களில் பாடல்களைக் கேட்கும் தொழில்நுட்பம் வளர்ந்தது. அதில் மாற தயங்கியவர்கள் தொழிலில் நஷ்டமடைந்தார்கள். இன்று அந்தக் கடைகளே இல்லாது போய்விட்டிருக்கிறது. கதாநாயகனின் கடையும் அப்படித்தான் இப்படத்தில் ஒருகட்டத்தில் தேங்கி விடுகிறது. நன்றாக அதனைக் காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர். இப்படி 'சபாஷ்' போட வைக்கும் காட்சிகள் இப்படத்தில் பல உண்டு.  

ஹரித்வார், ரிஷிகேஷ் என்று நாங்கள் சமீபத்தில் சென்று வந்த இடங்களை மீண்டும் படத்தில் பார்க்கும் பொழுது நன்றாக இருந்தது. குறுகிய தெருக்கள், ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பழமையான நகரம், வீடுகள், கங்கா ஆற்றங்கரை என்று படம் முழுவதும் சாமரம் வீசும் காட்சிகள்.

பட நாயகன் ஷாகாவிற்குச் செல்வதாக காட்சிகளை அமைத்திருந்த இயக்குனருக்குப் பாராட்டுகள். இம்மாதிரியான காட்சிகளை இந்திப்படங்களில் தான் பார்க்க முடியும். அதிக செலவில்லாமல் ஓவர் மேக்கப், குத்தாட்டம், இரைச்சல் என்ற அக்கப்போருகள் இல்லாமல் நம் வீடுகளில் நடப்பதைப் போல் சாதாரணமாக அதுவும் நல்ல கதையுடன் அருமையாக ஒரு படத்தை எடுக்க முடியும் என்று நிரூபித்த இயக்குனர் ஷரத் கட்டாரியாவிற்கு 👏👏👏

இன்றும் பல திருமணங்களில் மனப்பொருத்தத்தை விட பணப்பொருத்தமே முதன்மையாக இருக்கிறது. திருமண உறவு என்பது ஆணுக்கும் பெண்ணுக்குமிடையே இருக்கும் அன்பினால் பலப்படுவது. அதை கதாநாயகன் உணரும் வேளையில் எல்லாம் சுபமே.

இனிமையான இந்தப் பாடல் இன்னொரு முத்தாய்ப்பு💕

Ye moh moh ke dhaage
Teri ungliyon se ja uljhe
Koi Toh Toh na laage
Kis tarah girah ye suljhe
Hai rom rom iktaara
Hai rom rom iktaara
Jo baadalon mein se guzre...

மிக நல்ல பொழுதுபோக்குப் படம். அமேசானில் காண கிடைக்கிறது.


Monday, July 3, 2023

தீராக்காதல்

சமீபத்தில் பார்த்த தமிழ்ப்படங்களில் 'பரவாயில்லை' என்று சொல்ல வைத்த படம் 'தீராக்காதல்'. காதலித்தவர்கள் அனைவரும் திருமணம் செய்து கொள்ளவது இல்லை. அப்படியே திருமணம் செய்து கொண்டாலும் சிலர் கடைசி வரை சேர்ந்து வாழ்வது இல்லை. விடுகிறார்கள். அப்படியே சேர்ந்து வாழ்ந்தாலும் நிறைவான வாழ்க்கை வாழ்வது என்பது அரிது தான். அது எல்லா திருமணங்களுக்கும் பொருந்தும் என்றாலும் காதல் திருமணங்களில் அதிகம் எதிர்பார்க்கப்படும் முக்கியமான அம்சம்.

கல்லூரியில் நிறைவேறாத காதல் '96' படத்தில் வந்தது போல அவரவர் வாழ்க்கையில் நினைவுகளாகப் பயணித்துக் கொண்டிருக்கும். எங்கும் எப்பொழுதும் மனதின் அடிஆழத்தில் சுகமான நினைவுகளாக காதலித்தவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாக இருக்கும். முக்கியமாக கணவனுக்கோ, மனைவிக்கோ தெரியாது பொக்கிஷமாக பொத்தி வைத்துக் கொண்டிருப்பார்கள்.

சமூகவலைதள காலத்தில் பிரிந்த காதலர்கள் மீண்டும் சந்திப்பதும் பேசிக்கொள்வதும் நடந்து வருகிறது. அந்த எல்லைக்குள் இருக்கும் வரை பிரச்னையில்லை. எல்லை மீறும் பொழுது ஏற்படும் மன வருத்தங்களைத் தான் இந்தப்படம் சுட்டிக்காட்ட முயன்றிருக்கிறது. இன்னும் கூட நன்றாக எடுத்திருக்கலாம். கதாநாயகி 'சைக்கோ'வாக மாறும் அளவிற்கு உண்மைக்காதலா? அப்படி ஒன்றும் கதை நிரூபித்த மாதிரி தெரியவில்லை. நல்லவேளையாக சரியான நேரத்தில் படத்தை முடித்திருந்தார்கள். 

கதாநாயகனின் பாத்திரப்படைப்பு உண்மையாக இருந்தது. ஜெய்யும் நன்றாக பொருந்தியிருந்தார். நிறைவேறாத காதல், கண்டுகொள்ளாத மனைவி ஆனாலும் வாழ்க்கை வாழ வேண்டியது தான். உண்மையான காதல் அன்று இருந்தது. எப்பொழுதும் இருக்கிறது. சிறிது தடுமாற்றம் இருந்தாலும் முன்னாள் காதலியின் சைக்கோத்தனம் அவளிடமிருந்து பிரியும் காரணத்தை வலுவாக்குவது போல் காட்சிகளை அமைத்திருந்தார்கள். பழைய காட்சிகள் என்ற அபத்தங்கள் இல்லாமல் காட்சிகளை அமைத்திருந்தது சிறப்பு.

இதையே காதலன் சைக்கோவாக காதலியின் குடும்ப நிம்மதியைத் தொலைக்கிற மாதிரி இருந்தால் எப்படி முடித்திருப்பார்களோ ?

உண்மையான காதல் என்பது என்றுமே உயிர்ப்புடன் தான் இருக்கும். படத்தின் முடிவில் வருவது போல் காதலர்கள் எங்கிருந்தாலும் காதல் வாழும். 

வாழ வைக்கும் காதலுக்கு ஜே!

ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ், அந்த சுட்டிக்குழந்தை, சுவேதா, நண்பன் கதாபாத்திரம் என்று அனைவரும் தங்களுடைய கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு நன்கு நடித்திருக்கிறார்கள். தேவையற்ற குறியீடுகள், பாடல்கள் போன்ற இம்சைகள் இல்லாதது மிகச்சிறப்பு. 

அமேசான் ப்ரைமில் இப்படத்தைப் பார்க்கலாம்.



Tuesday, June 6, 2023

பச்சுவும் அத்புத விளக்கும்


சோம்பேறித்தனமான மாலை. கழுதை கெட்டால் குட்டிசுவரு. நமக்குத் தொலைக்காட்சி. அதிலும் நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஹுலு என்று ஏகப்பட்ட குட்டிச்சுவர்கள். பிரைமில் என்ன படங்கள் புதிதாக வந்திருக்கிறதென்று பார்த்தால் அடடா! நமக்குப் பிடித்த நடிகரின் படம் வந்திருக்கிறதே என்று பார்க்க ஆரம்பித்தேன்.

பொதுவாக மலையாளப் படங்களில் ஐந்து நிமிடத்திற்கு தலைப்பு ஓடும். இந்தப் படத்தில் மும்பை நகர வாழ்க்கையை முதல் காட்சியிலேயே காட்டி அசத்தியிருந்தார்கள். அதனால் வேலைகளையும் தூக்கத்தையும் விட்டுவிட்டுத் தொடர்ந்து பார்க்கும் ஆவலை ஏற்படுத்தியது. மும்பை நகரம் என்னளவில் இன்றும் ஒரு கனவு நகரம் தான். விடியலில் தொடங்கி இரவு வரை அதன் பரபரப்பிற்காகவே அந்த நகருக்குச் சென்று வர வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. நெருக்கமான வீடுகள், ஓய்வின்றி செல்லும் தொடர் ஓட்ட ரயில்கள், வேலைக்குச் செல்லும் மனிதர்கள், பணக்காரர்கள் முதல் ஏழைகள் வரை வாழும் குடியிருப்புகள் என்று பல கவரும் அம்சங்களுடன் மும்பையை இந்தப் படத்தில் நன்கு காண்பித்திருக்கிறார்கள். கொசுறாக, கோவாவும். கிட்டத்தட்டப் பாண்டிச்சேரியை ஒத்து இருக்கிறது அந்த நகரம்.

நல்லவிதமாகத் தொடங்கிய படம் போகப்போக சுவாரசியம் குறைந்து எப்படா முடியும் என்றாகிவிட்டது. அடுத்தடுத்த காட்சிகள் இப்படித்தான் போகும் என்று எளிதில் புரிந்து விடும் அளவிற்கு கதை இருந்தாலும் கோவா, மும்பை, கேரளா என்று சுற்றி வந்து நம்மை உட்கார வைத்து விடுகிறார்கள். இன்னும் கொஞ்சம் சுருக்கமாகச் சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

மும்பை என்றால் தாதாவாகத் தான் இருக்க வேண்டும் என்றில்லை. சாதாரண மனிதர்கள் கூட இருப்பார்கள். ஃபகத் ஃபாசில் மெலிந்த உருவத்துடன் கண்களை உருட்டியபடி அவருடைய கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு நன்கு நடித்திருக்கிறார். அவருடைய கடையில் வேலைபார்க்கும் இளைஞனின் ஹிந்தி, ஆங்கில நகைச்சுவை வசனங்கள் நன்று. மலையாளப் படங்களில் எனக்குப் பிடித்தது என்றால் அங்கு ஹிந்து, கிறிஸ்துவ, இஸ்லாமிய மதங்களைச் சேர்ந்த கதாபாத்திரங்களை இயல்பாகக் கையாளும் முறை தான். இந்தப் படத்திலும் அப்படித்தான். கதாநாயகன் பெண் பார்க்கச் செல்லும் வீட்டில் அந்தப் பெண் தன்னுடைய கிறிஸ்தவ நண்பனைத் திருமணம் செய்து கொள்ளப்போவதாக அவள் அம்மாவிடம் வெகு இயல்பாகக் கூறுவாள். இஸ்லாமியப் பாட்டியாக வருபவர் 'சுவாமி சரணம்' என்று மாலை போட்ட சிறுவனிடம் கூறுவார். இந்த மாதிரி காட்சிகள் தமிழ்ப்படங்களில் பார்ப்பது அரிதாகி வருகிறது. பாட்டியின் கனிவான கதாபாத்திரம் தான் மையக்கரு. உணர்ந்து நடித்திருக்கிறார்.

அதே போல் ரியாஸ் கதாபாத்திரத்தில் வரும் வினீத்தின் வீட்டில் புத்தர், கலைப்படங்கள் எல்லாம் சுவற்றை அலங்கரித்திருக்கும். ஹராம் என்று கேரளாவில் கூவ மாட்டார்கள் போலிருக்கிறது. தமிழகத்தில் தான் ஹிந்துக்களையும் குறிப்பிட்ட சமூகத்தினரையும் புண்படுத்தும் வகையில் படங்களில் குறியீடுகளை வைத்து தங்களுடைய அடிமைப்புத்தியை திராவிட எஜமானர்களுக்கு வாலாட்டும் இயக்குநர்கள் சமூகம் இருக்கிறது போலும்! என்று ஒரு திரைப்படத்தைப் பொழுதுபோக்காக எடுக்க இவர்கள் கற்றுக் கொள்வார்களோ? அதுவரையில் வேற்று மொழிப் படங்களைப் பார்ப்போம்.

பெரிய கண்களுடன் அதிக ஒப்பனை இல்லாமல் இயற்கை அழகுடன் இந்த மலையாள கதாநாயகிகள் தான் எத்தனை அழகு! அரைகுறை ஆடை அணிந்து விரச நடனம் ஆடும் நாயகிகள் எல்லாம் தமிழ்ப்படத்திற்குத் தான் தேவை. ஏனென்றால் கதைக்குப் பஞ்சம் இங்கே. தமிழ்ப்படங்கள் பார்ப்பவர்களின் ரசனையும் அந்த அளவில் தான் இருக்கிறது. இசை என்ற பெயரில் காட்டு கத்தல், நடனம் என்ற பெயரில் ஆபாச அங்க அசைவுகள், வசனங்கள் என்ற பெயரில் கெட்ட வார்த்தைகள் இப்படி எதுவுமில்லாமல் படத்தைப் பார்க்க மலையாளப் படங்களைத்தான் நாட வேண்டியிருக்கிறது. கதையினூடே ஒரு நல்ல கருத்தையும் சொல்கிறது இந்தப்படம்.

கண்டதும் காதல் என்றாலும் பொழுபோக்குப் படம்.


Tuesday, July 26, 2022

ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்

"ராக்கெட்ரி" திரைப்படம் வெளியாகிறது என்றவுடன் உள்ளூர் திரையரங்குகளில் திரையிடப் போகிறார்களா என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சியது. கண்ட கருமாந்திரப் படங்களைப் போடுகிறார்கள் அத்திப் பூத்தது போல் பல மொழிகளில் வெளியாகும் ஒரு நல்ல படம். அதுவுமில்லாமல் "எண்டே மாதவா" வின் தயாரிப்பில் உருவான பயோ-பிக். ரசனை கெட்ட உலகமடா மாதவா என்று ஒடிடியில் வெளியாகும் நாளுக்காக காத்திருந்தோம். நேற்று அமேசான் பிரைமில் எதையோ தேட போய்,

'ஆ! ராக்கெட்ரி படம் வந்துடுச்சு. வாங்க பார்க்கலாம்' என்று வேலைகளை முடித்து விட்டு தொலைக்காட்சியின் முன் உட்கார்ந்து படம் முடியும் வரை எழுந்திருக்கவில்லை. 

கௌசல்யா சுப்ரஜா ராம
பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட நர ஸார்தூல
கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்

என சுப்ரபாதத்துடன் துவங்கும் முதல் காட்சியிலேயே பிரம்மாண்ட அண்டம் சுழலும் காட்சி ஈர்த்து விட்டது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின்(இஸ்ரோ) முன்னாள் விஞ்ஞானியும் விண்வெளிப் பொறியாளருமான நம்பி நாராயணனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். ஏன் இவருடைய கதை ? ஒரு தேசப்பற்று மிகுந்த விஞ்ஞானியை எப்படி உடல், மனதளவில் நொறுங்க வைத்து நம் நாட்டின் வளர்ச்சியைத் தடுக்க நினைத்திருக்கிறார்கள் என்ற உண்மைக்கதையைப் படமாக நமக்கு எடுத்துக் காட்டியுள்ளார் நடிகர் மாதவன்.

இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தையாகக் கருதப்படும் டாக்டர் விக்ரம் சாராபாய் நம்பி நாராயணின் திறமையை ஊக்குவித்து ஒரு குருவாக வழிநடத்தியிருக்கிறார். அமெரிக்காவின் உயர்தர பல்கலையில் படிக்கும் காலம் முடியும் முன்னரே பட்டப்படிப்பை முடித்து திறமைக்கேற்ப அமெரிக்க விண்வெளி மையத்தில்( நாசா) கை நிறைய சம்பளத்துடன் கௌரவமான வேலை கிடைத்தும் தாய்நாட்டிற்குத் திரும்புகிறார் நம்பி நாராயணன். இஸ்ரோவில் ராக்கெட் தயாரிக்க வேண்டிய நுட்பங்கள் தெரிந்தும், வசதியும் போதிய நிதியும் இல்லாமல் ஃபிரான்ஸ் நாட்டுடன் கூட்டு சேர்ந்து குடும்பங்களை விட்டு பல விஞ்ஞானிகளுடன் வெற்றிகரமாக சோதனையை முடித்து திரும்புகிறது இவருடைய தலைமையிலான குழு. ராக்கெட் தயாரிக்க தேவையான பொருட்களை சோவியத் ரஷ்யாவிலிருந்து அந்நாடு சிதறுவதற்குள் இந்தியாவிற்கு கொண்டு வந்து விட, அங்கிருந்து ஆரம்பிக்கிறது நம்பியின் வாழ்க்கையைத் துண்டாடும் காட்சிகள். நேர்க்காணல் மூலம் படக்காட்சிகளை அமைத்திருந்தது சிறப்பு.

1994ல் இஸ்ரோவில் பணிபுரிந்த பொழுது ​​நாராயணன் இந்தியாவின் விண்வெளித் திட்டம் குறித்த ரகசியத் தகவலை பாகிஸ்தானிற்கு விற்க இரண்டு மாலத்தீவு நாட்டினரிடம் பகிர்ந்து கொண்டதாக பொய்யான குற்றச்சாட்டுக்கு ஆளானார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு 50 நாட்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார். 1996ல் சிபிஐ மற்றும் 1998ல் இந்திய உச்ச நீதிமன்றத்தால் அவர் மீதான குற்றச்சாட்டுகள் தவறானவை என்று தள்ளுபடி செய்யப்பட்டன. ஏப்ரல் 2021ல் இந்திய உச்ச நீதிமன்றம் இவருடைய கைதின் சதி குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. நடந்த தவறுகளுக்குப் பொறுப்பேற்று திரு.நாராயணன் அவர்களுக்கு கேரள அரசு ரூ.1.3 கோடி இழப்பீடு வழங்கியது.
 
விஞ்ஞான வளர்ச்சிக்காக நாடு செலவழிப்பது தேவையற்றது என்று கூவி மூலைக்கு மூலை சிலைகளை வைத்துக் கொண்டு திரியும் கூட்டத்தில் விஞ்ஞான வளர்ச்சியின் அவசியத்தை உணர்ந்து பல சிரமங்களுக்கிடையில் உள்நாட்டிலேயே ராக்கெட் தயாரித்து இன்று அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் போன்ற வளர்ந்த நாடுகளே வியக்கும் வகையில் நம் தேசமும் முன்னேறியிருப்பதில் இவருடைய பங்கும் அளப்பரியது. இந்தியாவில் ராக்கெட் அறிவியலின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரித்து இந்திய அரசாங்கம் நாராயணனுக்கு 2019 ஆம் ஆண்டில் நாட்டின் மூன்றாவது உயரிய சிவிலியன் விருதான பத்ம பூஷன் விருதை வழங்கி கௌரவித்தது.

இத்தனை படித்த நேர்மையான மனிதர் மீது களங்கம் சுமத்தி குடும்பத்தை அலைக்கழித்து தான் என்ன தவறு செய்தோம் என்றே புரியாமல் அவரை மனச்சோர்வுக்கு உள்ளாக்கிய மத்திய காங்கிரஸ், மாநில கம்யூனிஸ்ட் அரசாங்கம் மனிதாபிமானற்றது என்பதைக் காட்சியாக காண மனம் பதைபதைக்கிறது. 1996ல் பாஜக ஆட்சிக்காலத்தில் தான் இவருக்கு நீதி கிடைத்திருக்கிறது. இந்த வழக்கில் நாராயணன் மற்றும் சிலரை பொய்யாக சிக்க வைத்த குற்றச்சாட்டில் 17 முன்னாள் கேரள போலீஸ் மற்றும் ஐபி அதிகாரிகள் மீது சிபிஐ விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த 15 வருடங்களில் 684 இஸ்ரோ விஞ்ஞானிகள் மர்மமான முறையில் இறந்துள்ளதாக தெரிகிறது. அணு மற்றும் விண்வெளி ஆராய்ச்சித் தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னேறுவதைத் தடுக்க மேலைநாடுகளின் சதியாக அதற்கு நம்நாட்டு எட்டப்பன்கள் உதவி இருப்பதைத் தான் காட்டுகிறது . இந்திய ஊடகங்கள் இந்தச் செய்திகளுக்கு ஒருபோதும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அவை பெரும்பாலும் ஒரு கட்சிக்கு அதுவும் தேசத் துரோகிகளுக்கு ஆதரவாகவே செயல்படுகின்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. கடைசிக் காட்சியில் கண்களில் நீர் வழிய "ஜெய்ஹிந்த்" என்று நம்பி நாராயணன் அவர்கள் கூறும் பொழுது வசனம் பேசி உணர்ச்சிகரமாக அதுவரை நடித்த சூர்யாவின் வாயிலிருந்து "ஜெய்ஹிந்த்" வராதது எந்த அளவிற்கு நம் நாட்டின் மேல் வெறுப்பை வளர்த்துக் கொண்டிருக்கிறது தேசத்துரோகிகள் கூட்டம் என்று தெரிகிறது. நமக்கு எதிரிகள் வெளியில் இருப்பதை விட உள்நாட்டில் தான் அதிகம். அவர்களால் தான் இத்தகைய மாமனிதர்களுக்கு அச்சுறுத்தல் என்ற நினைவே வெட்கமாகவும் வேதனையாகவும்இருக்கிறது.

ஒரு டாலர் அதிகம் கிடைத்தால் கூட வேலையை மாற்றிக் கொள்ள நினைக்கும் மனம் படைத்த மனிதர்கள் வாழும் காலத்தில் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத சம்பளம், வசதி வாய்ப்புகள் கிடைத்தும் அனைத்தையும் நிராகரித்து தேசத்திற்காக வாழ்வை அர்ப்பணித்த உன்னத மனிதர்களுள் ஒருவர். தன்னுடைய குருவின் நினைவாக வெற்றிகரமாக இயங்கி வரும் "விகாஸ்
என்ஜினை உருவாக்கின மாமனிதர். தெய்வ பக்தியும் தேசப்பற்றும் மிக்க சில நம்பி நாராயணன்களால் தான் பல தேச துரோகிகளையும் மீறி இந்தியா தன்னிறைவு பெற்ற நாடுகளின் வரிசையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இவர் போன்ற மனிதர்களே நம் வருங்கால சந்ததியினருக்கு நம்பிக்கை நட்சத்திரங்கள். தமிழக அரசு இப்படத்தைப் பள்ளிகளில் திரையிடலாம் அல்லது வரி விலக்கு அளித்து கௌரவிக்கலாம். செய்வார்களா?

கண்டிப்பாக படத்தைப் பாருங்கள். அமேசான் ப்ரைமில் காண கிடைக்கிறது.

ஒரு நல்ல மனிதரின் வாழ்க்கையை அற்புதமாக படமெடுத்த "எண்டே மாதவன்" கதாசிரியராக, இயக்குனராக, தயாரிப்பாளராக, "நம்பி நாராயணனாக" மிளிர்ந்திருக்கிறார்.

வாழ்த்துகள் மாதவன் 💖💖💖

Tuesday, May 3, 2022

"பட"

1996ல் நடந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட மலையாளப்படம் "பட". துவக்கத்தில் வெவ்வேறு இடங்களில் போராளிகளைக் காட்டினாலும் கலெக்டர் அலுவலகத்தில் அவர்கள் அனைவரும் ஒன்றாக கூடும் பொழுது தான் ஏதோ நடக்கப் போகிறது என்று புரியும். படமும் அங்கிருந்து தான் சூடு பிடிக்க ஆரம்பிக்கிறது. ஆதிவாசிகளின் நில ஆக்கிரமிப்பை எதிர்த்துப்  போராடும் "அய்யன்காளி படை"ப் போராளிகள் நான்கு பேர் இணைந்து அரசின் திட்டத்தை முறியடிக்க கலெக்டரை சிறைபிடிக்க, அவர்களுக்கும் அரசு தரப்பினருக்கும் இடையில் நடக்கும் பேச்சுவார்த்தை தான் கதை. அரசின் சட்டங்களை மதித்து நடக்கும் கலெக்டர் அவகாசம் கேட்க, முடிவை அப்பொழுதே சொல்ல வேண்டுமென நிர்பந்திக்கும் போராளிகள். அவர்களின் நிபந்தனையை ஏற்று அரசு அதிகாரியை மீட்கவும் எதிர்  வரும் தேர்தலைக் கருத்தில் கொண்டும் கோரிக்கைகளுக்கு இசைகிறது அரசு. 

உண்மையில் நில மீட்பு கோரிக்கைகள் இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை என்று படித்தறிந்து கொண்டேன். அதுவும் கல்வியறிவு மிக்க கம்யூனிசம் பேசித்திரியும் மாநிலத்தில் ஆதிவாசி மக்களின் நிலையில் எந்த வித மாற்றமுமில்லை. சொந்த ஊரில் நிலத்தை இழந்து அகதிகளாக வாழ்கிறார்கள். அவர்கள் இடத்தைக் கைப்பற்றி செல்வாக்கு மிக்கவர்களிடம் அரசு ஒப்படைத்தது ஒப்படைத்தது தான். அதற்கான மாற்றுத்தீர்வு இல்லாத நிலை இன்று வரையில் தொடருவது தான் வேதனை.

உண்மைக்கதையை படமாக்கிய விதமும் நடித்தவர்களும் தான் இப்படத்தின் சிறப்பே. எவ்வித ஹீரோத்தனமும் இல்லாமல் நான் பெரிய நடிகன் என்ற வெற்றுகூச்சல் இல்லாமல் வேட்டியை மடித்துக் கொண்டு நடிக்க கிளப்பிவிடுகிறார்கள் இந்த சேட்டன்கள். மலையாளப்படம் என்பதாலோ என்னவோ பிரகாஷ்ராஜ் கூட அதிகம் சிலம்பாமல் அடக்கியே வாசித்திருந்தார். தீப்பொறி பறக்க கதாநாயகன் எண்ட்ரி, இரைச்சலான இசை, 'ஜோ'வென்று கூட்டத்தோடு கும்மாளம் போடும் நடனம், "பஞ்ச்" வசனங்கள், குடி, கூத்து என்று இல்லாமல் அன்றாட வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் ஒரு நல்ல படம்.

ஆளும் கட்சிக்கு ஜால்ராவாக மத்திய அரசை எதிர்த்து கோஷம் போட்டால் தான் படத்தைத் திரையிட முடியும் என்றிருக்கும் தமிழ் சினிமா உலகம்  கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளது. தமிழக மக்களும் தான்.

Monday, March 28, 2022

பவன்கிந்த் (Pawankhind)

மீண்டுமொரு அருமையான மராத்திப் படம் 'பவன்கிந்த்'. மராத்திய மன்னன் சிவாஜி, அவருடைய தாயார் ஜிஜாபாய் எத்தகைய வீர மகனை வளர்த்து இஸ்லாமிய கொடூரன்களை எதிர்த்துப் போராட வைத்திருக்கிறார் என்று வரலாற்றில் நாம் சிறிது படித்திருக்கிறோம். பாரத நாட்டில் பிறந்து நாட்டை  நேசிக்கும் அனைவருக்கும் வீர சிவாஜியின் வாழ்க்கை வரலாறு என்றுமே உத்வேகத்தை அளிக்கவல்லது. சத்ரபதி சிவாஜியின் வாழ்வில் ஹிந்து ராஷ்டிரத்தை அமைக்க அவருடன் துணை நின்ற படைத்தளபதிகள், வீரர்கள்  அவர்களுடைய தியாகங்களை எடுத்துச் சொல்லும் விதமாக அமைந்துள்ளது இந்தப் படம். 

1660களில் இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம், கோலாப்பூர் நகருக்கு அருகில், விஷால்காட் கோட்டைக்கு அருகில் உள்ள மலைப்பாதையில் மராட்டிய வீரர் பாஜி பிரபு தேஷ்பாண்டே, சம்பு சிங் ஜாதவ் மற்றும் சித்தி மசூத் ஆகியோருக்கு இடையே நடந்த போரில்  சிவாஜியை பாதுகாப்பாக வேறிடத்திற்கு அழைத்துச் செல்ல நடக்கும் யுத்தம், அதில் உயிரிழந்த வீரர்கள் பற்றின சம்பவத்தை மிக அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். 300 மராட்டிய வீரர்களுடன் மராட்டிய படைத்தளபதி பாஜி பிரபு தேஷ்பாண்டே,  12,000 பேரைக் கொண்ட சுல்தானின் படைத் தளபதி சித்தி மசூத்துடன் வீரத்துடன் போராடி  சிவாஜியையும் அவருடன் துணை சென்றவர்களையும் காக்க தன்னுயிர் இழக்கிறார்கள். பல மாந்தர்கள், குடும்பங்கள் செய்த தியாகம் தான் இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரம் என்பதை எக்காலத்திலும் மறக்க கூடாது என்று சிவாஜி அவர் மகனுக்கு படததில் எடுத்துரைப்பது நம் எல்லோருக்கும் பொருந்தும்.

மகன் எதிரிகளைப் பந்தாட, தாய்  ஜிஜாபாய் கணவனைப் போருக்கு அனுப்பிவிட்டு கவலையுடன் இருக்கும் பெண்களுக்கு ஆதரவாகவும் நன்றியுடனும் கலந்து பேசி உரையாடுவதும் எதிரிகளை போர்முனையில் சந்திக்க ஆயத்தமாக இருக்கும் வீரப்பெண்மணியாக எப்படியெல்லாம் ஆங்கிலேயர், இஸ்லாமியர்களிடம் இருந்து நம் நாட்டைக் காப்பாற்றியுள்ளார்கள் என்பது இந்த தலைமுறையும் அறிந்து கொள்ள வேண்டிய வரலாறு. 

படத்தின் பொருத்தமான கதை மாந்தர்கள், அவர்களின் மிகைப்படுத்தாத நடிப்பு, காட்சிகளோடு ஒன்றும் பாடல்கள், இறைபக்தி, போர் தாக்குதல்கள்  என்று அன்றைய ஹிந்து அரசர்களின் வாழ்வை அழகாக வெளிப்படுத்திய விதம் அருமை. 

பல உயிர்கள் தியாகம் செய்து தான் நம் நாட்டின் சுதந்திரமும் ஆங்கிலேய, இஸ்லாயமியர்களின் கொடூர ஆட்சியிலிருந்து தப்பிக்கவும் முடிந்திருக்கிறது. அதையெல்லாம் அறியாத சமூகம் ஒன்று வளர்ந்து வருவது மிக ஆபத்தானது. உண்மையான வரலாற்றை மறைத்து பொய்யைத் திணிக்கும் அரசு அமைப்புகளை எதிர்த்து இன்று வரையில் போராடிக் கொண்டிருக்கும் கர்மவீரர்கள் அனைவருக்கும் நாம் என்றும் கடமைப்பட்டிருக்கிறோம்.

அமேசான் ப்ரைம்-ல் கண்டுகளிக்கலாம்.




Monday, March 7, 2022

Picasso


அமேசான் ப்ரைமில் எதையோ தேடிக் கொண்டிருந்தததில் மீண்டுமொரு மராத்திப் படம் கண்ணில் பட்டது. படத்தின் பெயரே வித்தியாசமாக இருக்க பார்க்க ஆரம்பித்தோம். ஒரு படம் நம்மை பார்க்க வைக்க வேண்டுமெனில் கதை, படமாக்கப்பட்ட விதம், இசை, பாடல்கள், நடிக, நடிகையர்கள் இப்படி ஏதாவது ஒன்று பிடித்தால் பார்க்க ஆரம்பித்து விடுவோம். இப்படத்தில் எல்லாமே மிக நன்றாக பொருந்தி இருந்தது சிறப்பு.

மழையுடன் துவங்கும் முதல் காட்சியிலேயே மனதைக் கவர்ந்து விட்டது இப்படம். மழையில் குளிர்த்த 'பச்சைப்பசேல்' மரங்கள், செடிகள், மனிதர்களோடு படம் பார்ப்பவர்களையும் நனைய வைக்கிறது. படம் நெடுக வஞ்சகமில்லாமல் மழையும் பயணிப்பது கொள்ளை அழகு. அதுவும் அந்தச் சிறுவன் படகில் பக்கத்து கிராமத்திற்குச் செல்லும் காட்சிகள் ஒவ்வொன்றும் முத்துமுத்தாய் இருந்தது.

மாநில அளவில் படம் வரையும் போட்டியில் முதலாம் இடத்தைப் பிடித்த பள்ளி மாணவன் தேசிய அளவில் பங்கு பெற பணம் கட்ட வேண்டிய சூழல். தந்தை ஒரு சிற்பி. மேடை நாடக நடிகரும் கூட. நோயாளி அம்மா. வறுமையான சூழல். ஒரு தந்தையாக, கணவனாக போராடும் தந்தையின் மிகையில்லா நடிப்பும் அந்தச் சிறுவனின் ஏக்கம், ஏமாற்றம், சந்தோஷத்தை வெளிப்படுத்தும் கண்களும் இப்படத்தைப் பேச வைக்கிறது அழகான கதையின் வழியாக.

என் சிறுவயதில் தெருக்கூத்துகள், நாடகங்கள், வில்லுப்பாட்டு, இசைக்கச்சேரிகள் என்று பலவித பொழுது போக்கு அம்சங்கள் தமிழ்நாட்டிலும் இருந்தன. இன்று வீண் கொள்கைகளைப் பேசி பல நாட்டுப்புறக் கலைகளை இழந்து கொண்டிருக்கிறோம். அற்புத நாட்டுப்புறக்கலைகளை அறியாத தலைமுறை ஒன்றை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். நமக்குத் தான் நஷ்டம் என்பதைக் கூட அறியாத அறிவிலிகளாக ஒரு காட்டுமிராண்டி சமூகமாக மாற்றி வைத்திருக்கிறார்கள் காசு கொடுத்து ஒட்டு வாங்கும் கூட்டங்கள்.

இப்படத்தில் கோவிலில் நடைபெறும் கூத்து/மேடை நாடகத்தை மக்கள் இரவெல்லாம் விழித்திருந்து காண்பார்கள். பொதுவாகவே இத்தகைய நாடகங்கள் புராண கதைகளை மக்களுக்கு எளிதில் புரியும் வண்ணம் ஆடல், பாடல்களுடன் அரங்கேறும். கதாபாத்திரங்களின் உடைகள், மிரட்டலான நடிப்பு, வசனங்கள் மக்களை ஈர்ப்பதால் கூட்டமும் வரும். அப்பாவிடம் தான் வாங்கிய மெடலைக் காண்பித்து பணத்தைக் கேட்க வரும் மகன், தந்தையின் நடிப்பையும், உடையையும், ஊரார் மெச்சி அளித்த பண பரிசையும் விடிய விடிய கண்டு களிக்கிறான்.

சுப முடிவு.

திரைப்படம் என்பது நல்ல பொழுதுபோக்கு அம்சங்களுடன் இருக்க வேண்டும் என்பதற்கு இந்தப்படமும் ஒரு உதாரணம். தமிழ் இயக்குனர்களின், மக்களின் ரசனை மாற வேண்டும். மாறினால் மட்டுமே நமக்கு இத்தகைய படங்கள் கிட்டும். இல்லையென்றால்...😭😭😭😭😭



Thursday, March 3, 2022

The Courier

இரு நாடுகளுக்கிடையே சுமுகமான உறவு இல்லாத நிலையில் உளவு பார்ப்பது என்பது தொன்றுதட்டு இருந்து வரும் ஒரு வழக்கம். அதுவும் தற்போதைய தகவல் தொழிநுட்பத்துறை விஞ்ஞான வளர்ச்சியற்ற காலங்களில் உயிரைப் பணயம் வைத்து நாட்டுக்காக உளவு பார்த்தவர்கள் பலர். அதனால் பல இன்னல்களையும் அனுபவித்தவர்கள். அப்படி ஒருவரின் கதை தான் இது.

வியாபார நிமித்தம் அடிக்கடி ரஷ்யா செல்லும் பிரிட்டிஷ் தொழிலதிபர் ஒருவரை வளைத்து உளவு பார்க்க சம்மதிக்க வைக்கிறது அமெரிக்காவும் பிரிட்டிஷ் உளவுத்துறையும். கம்யூனிச நாடுகளுக்கு எதிராக என்றுமே மேற்குலகம் செயல்பட்டு வருகிறது. சர்வதேச உலகில் ரஷ்யா என்றாலே போருக்கு அஞ்சாதவர்கள், அமெரிக்காவுக்கு இணையான அணு ஆயுதபலத்தைக் கொண்டு மிரட்டுபவர்கள் என்பதெல்லாம் உண்மை. அதுவும் அமெரிக்காவின் எதிரி நாடான கியூபாவிற்கு உதவிகள் வழங்குவதைத் தெரிந்தால் சும்மா விடுவார்களா? 'The Courier' படத்தின் கதைக்கரு இதுதான் .

ரஷிய அரசுக்கு எதிராக அமைதியை விரும்பும் அந்நாட்டு அரசு அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு தகவல் பரிமாற்றங்கள் செய்பவர் தான் இத்திரைப்படத்தின் கதாநாயகன். ரஷிய உளவுப்படை கேஜிபியின் பலத்த கண்காணிப்பையும் மீறி எவ்வாறு தொடர்புகள் நடக்கிறது, பிடிபட்டுவிடுவார்களோ என்று நம்மையும் அச்சத்துடன் பார்க்க வைக்கிறது இந்தப்படம். கதாநாயகனாக நடித்திருக்கும் பெனெடிக்ட் கும்பேர்பேட்ச்சின் பயந்த முகபாவமும் அழுத்தமான நடிப்பும் அற்புதம். தொடக்கத்தில் தகவல் பரிமாற்றத்திற்காக தான் தன்னை உளவுத்துறை அணுகியிருக்கிறது என்று நம்புபவர் பின்னால் தான் எத்தகைய சிக்கலில் மாட்டியிருக்கிறோம் என்று உணர்கிறார். அதனால் குடும்பத்தை இழக்கும் நிலைக்கும் செல்கிறார். ஆனால் தன்னால் மிகப்பெரிய சீரழிவுத் தடுக்கப்படுவதை அறிந்த பின்பு தெரிந்தே அபாயகரமான களத்தில் இறங்குகிறார். அதன் பலனாக பல சித்திரவதைகளையும் அனுபவிக்கிறார்.

அவருக்கும் ரஷ்ய அதிகாரிக்கும் இடையே நல்ல நட்பும் தொடர்கிறது. கடைசி வரை அவரைக் காட்டிக் கொடுக்காமலேயே ரஷிய சிறையிலிருந்து வெளிவருகிறார்.

அமேசான் ப்ரைமில் கண்டு களிக்கலாம்.



Thursday, January 27, 2022

மதுரம்


மலையாள இயக்குநர்களுக்குப் பல கதைக்கருக்கள் கிடைக்கிறது. பாவம் தமிழ் இயக்குனர்கள். யார் காலைக் கழுவினால் படத்தைத் திரையிட முடியும் என்ற பரிதாப நிலையில் இருக்கிறார்கள். அதனால் தான் ஆளும் கட்சிக்கு ஏற்றவாறு கூத்தாடி வேஷம் போட்டு கதையை மாற்றி உருப்படாமல் போகிறார்கள்.

மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் ஒருபுறம். அவர்களைக் கவனித்துக் கொள்ள வரும் உறவுகள் மறுபுறம். இவர்கள் ஒருவொருக்கொருவர் ஆதரவாக தங்கள் துயரங்களை மறந்து இருக்கும் தருணங்களை யதார்த்தமாக படமாக்கியிருக்கிறார்கள். மலையாளப்படங்களில் எனக்குப் பிடித்த அம்சமே அவர்களின் உடை, மொழி என்று இயற்கையாக இருப்பது. நம்மவர்கள் போல சற்றும் பொருந்தாத உடை, ஆங்கிலம் கலந்த தமிழ், கனவுப்பாடல்கள் என்ற ஜிகினா வேலைகள் இல்லாமல் இருப்பதாலோ என்னவோ மலையாளப் படங்கள் எளிதில் கவர்கிறது. கூடவே கதையும் நன்றாக இருக்கிறது. நடிகர்களும் இயல்பாக நடிக்கிறார்கள்.

அன்புடன், காதலுடன் செய்யும் உணவிற்கு சுவை அதிகம். அனுபவஸ்தர்கள் ஒத்துக் கொள்வார்கள். அப்படி ஒரு காதல் தம்பதியர் உறவில் இளவயதிலேயே நோயாளியான மனைவியைக் கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்ளும் அன்பு கணவனாக ஜோஜு ஜார்ஜ் அசத்துகிறார். அவர் இல்லாத படங்களே இல்லையோ?

வசதி இருப்பவர்களும் அரசு மருத்துவமனைக்குச் செல்வது கேரளாவில் சகஜமோ? குஜராத்தி நாயகி என்பதால் கோலாட்டம் காட்சி வந்து செல்கிறது. இந்து, முஸ்லீம், கிறிஸ்தவன் என்று எளிதாக ஒரு கதையை நகர்த்திச் செல்ல மலையாள இயக்குநர்களால் முடிகிறது. தமிழக இயக்குனர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய இருக்கிறது. ஹீரோ என்று ஒருவருக்காக கதையை எழுதாமல் நல்ல பொழுபோக்குப் படங்களை தமிழில் எப்பொழுது தான் எடுக்க ஆரம்பிப்பார்களோ?

எந்த உறவிலும் புரிதலே பலம். அதைத்தான் இப்படத்தில் வெவ்வேறு கதாபாத்திரங்கள் மூலம் உணர்த்துகிறார்கள். 'மதுரம்' பெயருக்கு ஏற்றார் போல இனிமையான அனுபவம். 

Monday, January 24, 2022

Dev Bhoomi


சில படங்களின் தலைப்பே பார்க்கும் ஆர்வத்தைத் தூண்டும். அப்படித்தான் இப்படத்தின் தலைப்பும் நினைக்க வைத்தது. அது மட்டுமில்லாமல் இமயமலையின் பின்னணி வேறு இருந்தது! கேட்கவா வேண்டும்? சிறு வயதிலிருந்தே கங்கை, காஷ்மீர், இமயமலை தொடர்பாக வரும் ஆவணப்படங்களைக் காண்பதில் அலாதி இன்பம். இரவு 10.30மணிக்கு மேல் தூர்தர்ஷன் பல அழகான நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியதைக் கண்டிருக்கிறேன். மதுரையில் வளர்ந்த எனக்கு வானுயர மலைகள் சூழ்ந்த காடுகளிடையே சீறி ஓடி வரும் கங்கையும், பனிபடர்ந்த இமயமலையும் என்றும் ஒருவித இனிமையைத் தரும். நேரில் சென்று தரிசித்து வர வேண்டும் என்ற என் கனவுப்பயணம் அது. இப்படி பல இனிமையான நினைவுகளுடன் தான் இப்படத்தைப் பார்க்க ஆரம்பித்தேன்.

'உத்தரகாண்ட்' இறைவழிபாட்டில் நம்பிக்கை கொண்ட இந்து மக்களின் கனவு மாநிலம். அங்கிருக்கும் சிவனை வழிபட பல லட்சக்கணக்கான மக்கள் செல்லும் யாத்திரைத்தலம். சில வருடங்களுக்கு முன் இயற்கை கோரத்தாண்டவம் ஆடியதில் பல உயிர்கள் மாண்டதோடு வாழ்வாதாரங்களும் அழிக்கப்பட்டு விட்டன. எஞ்சியது கோவில் மட்டும் தான். பாரதப் பிரதமர் மோதிஜி தலைமையிலான மத்திய அரசு அக்கோவிலையும் சிதையுண்ட நகரத்தையும் மீட்டெடுத்துள்ளது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

'தேவ் பூமி' அதிரடி படம் கிடையாது. படத்தின் நாயகனைப் போலவே அமைதியாக நகரும் கதை. பள்ளத்தாக்குகள் வழியே துவங்கும் ஆரம்ப பயணமே அத்தனை அழகாக இருந்தது. நாற்பது வருடங்களுக்குப் பிறகு தாய்மண்ணிற்குத் திரும்புபவன் எதிர்கொள்ளும் இன்ப, துன்ப நிகழ்வுகள், பால்ய காலத்து நண்பர்கள், உறவுகள், வெள்ளந்தி மனிதர்கள், அவர்களுடைய எளிமையான வாழ்க்கை, திருமண சடங்குகள், படிப்பு வாசம் அறியாத மக்கள், சாதி அரசியல், குருகுலம், கங்கை வெள்ளத்தில் தன் குடும்பத்தை இழந்த சிறுவனின் கோபத்தில் இருக்கும் நியாயம், அவன் கண்களில் மின்னலாடும் ஏக்கம், கதாநாயகனுடன் நெருங்கிப் பழகும் விதம், காஷ்மீரிலிருந்து வந்து இப்பகுதி குழந்தைகளுக்கு கல்வி கற்றுத்தரும் ஆசிரியை, பால்ய திருமணத்தை நிறுத்த முடியாமல் தவிக்கும் அவலம் என்று எல்லாவற்றையும் தொட்டுச் செல்கிறது இப்படம். இரவிலும் பகலிலும் மின்னும் இமயமலை கம்பீரமாக பரந்து விரிந்து கவருகிறது. 'சலசல'வென ஓடும் மந்தாகினியும், இமயமலையும், நீல மேகமும் "பூமியும் சொர்க்கமும் சந்திக்கும் இடம்" என்ற வசனத்துடன் படம் முடியும் பொழுது உண்மை தான் என தோன்றும். இதை சைபீரியன் டைரக்டர் எடுத்திருப்பது ஆச்சரியமான விஷயம்!

புலம் பெயர்ந்த மக்கள் பலரும் ஓய்வு பெற்ற பிறகு மீதி காலத்தைத் தங்கள் மக்களுடனும் தாய்மண்ணிலும் செலவிட விரும்புவது, பால்ய கால சிந்தனைகளுடன் காலத்தைக் கழிக்க  நினைப்பது இயல்பு. அந்த ஏக்கம் தான் இந்தப் படத்தின் மையக்கரு.

அமேசான் ப்ரைமில் கண்டு களிக்கலாம்.


Wednesday, September 1, 2021

#Home

இந்த சேட்டன்களுக்கு மட்டும் எப்படி இப்படியெல்லாம் அழகான திரைக்கதைகள் கிடைக்கிறதோ? தமிழ்நாட்டில் கதைகளுக்குப் பஞ்சம் ஏற்பட்டிருக்கும் நிலை! அதனால் சாதி, மதம் என்று வெறுப்புகளைத்தூண்டி குளிர்காயும் படங்கள் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது. ஹீரோயிசம் ஒழிந்தால் தான் தமிழில் நல்ல படங்கள் வரும் வாய்ப்புகள் உருவாகும் என்பதை சேட்டன்களிடமிருந்து இனியாவது கற்றுக் கொள்ள வேண்டும். கோடிக்கணக்கில் சம்பளம் பெற்று நடிக்கும் தமிழ் நடிகர்களுக்கு கதையெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. அவர்கள் பின்னால் இருக்கும் முட்டாள் கூட்டத்தை நம்பி எப்படி வேண்டுமானாலும் படம் எடுக்கலாம் என்று நம்மை கழுத்தறுக்கிறார்கள். அதற்கு மலையாள கரையோரம் சற்று ஒதுங்கி ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம். கொஞ்சம் மெதுவாக நகர்ந்தாலும் கேரளாவின் பசுமை அழகு, செயற்கையாக இல்லாத வெளிநாடுகளில் டூயட், 'பஞ்ச்' வசனங்கள் இல்லாது கொஞ்சு மொழியில் பேசும் மலையாள திரைப்படங்கள் மக்களைக் கவருவதில் வியப்பில்லை தான்!

இன்றைய காலகட்டத்தில் வாழும் மூன்று தலைமுறைகளைப் பற்றின கதை. வயது மூப்பின் காரணமாக நினைவு இழந்த தாத்தா (அப்பச்சன்) , மில்லினியல் மகன்கள், அவர்களின் உலகத்தில் நுழைய பிரயத்தனப்படும் அப்பா, அனைவரையும் அரவணைத்துச் செல்லும் அம்மா, கதாநாயகனின் கோபத்திற்கு ஆளாக ஒரு காதலி, செல்வச்செழிப்புடன் இன்றைய காலத்தில் பொருந்திச்செல்லும் எழுத்தாளராக அவளுடைய அப்பா, ஓவியராக அவருடைய அம்மா என குறுகிய கதாபாத்திர வட்டம். திரைப்பட உலகில் தனக்கென முத்திரை பதிக்க விரும்பும் மகன் சொந்த வீட்டில் தன்னுடைய அப்பாவையே புரிந்து கொள்ளாத மனிதனாக , ஆனால் அவரைப் பற்றிப் புரிந்து கொண்ட கணத்தில் தன்னுடைய தவறுகளை உணர்ந்து அப்பாவைப் பற்றி பெருமிதம் கொள்கிறார். இந்த தலைமுறையினர் பெற்றோர்களிடமிருந்து விலகிச்செல்வதும், அதிக நேரம் சமூக வலைதளங்களில் நேரத்தைச் செலவிடுவதும், அதன் குறுக்கீடுகளால் கவனங்கள் சிதறி வாய்ப்புகளை நழுவ விட்டு அது கோபம், ஏமாற்றம் என்று மற்றவர் மேல் எப்படி திரும்புகிறது என்பதை அழகாக படமாக்கியிருக்கிறார்கள்.

கதாநாயகனுக்கு அப்பாவாக நடித்திருப்பவர் போல் மகனைப் புரிந்து கொள்ள நினைக்கும் அப்பாக்கள் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கிறார்கள். அதுவும் இன்றைய ஸ்மார்ட்ஃபோன் காலத்தில் அவர்கள் தனித்து விடப்பட்டவர்களாக அந்நியப்பட்டு நிற்கிறார்கள். அந்த உணர்வுகளை அழகாக தனது நடிப்பால் திரையில் கொண்டு வந்திருக்கிறார் ஆலிவர் ட்விஸ்ட்டாக நடித்திருக்கும் நடிகர் இந்திரன்ஸ். அவருடைய அப்பா அச்சப்பன் ஆங்கில கதைகளை மலையாளத்தில் மொழி பெயர்த்தவர். ஆலிவர் ட்விஸ்ட்ன் பால் ஈர்க்கப்பட்டு தன் மகனுக்கு அப்பெயரைச் சூட்டுகிறார். அம்மாவாக வரும் பெண்மணி அச்சு அசல் நம் அம்மாக்களை போல தான். குடும்பத்தைத் தவிர அவருக்கு வேறு எதிலும் நாட்டமில்லை.

அப்பா சொல்லும் கதையை அசுவாரஸ்யமாக கேட்டுக் கொண்டிருக்கும் மகன் அது உண்மை என தெரிய வரும் பொழுது தான் அப்பாவின் மேல் மரியாதையும் அவரிடம் மீண்டும் நெருங்கிச்செல்லும் மகனாகவும் ஆகிறார்.

நடுநடுவே காமெடி காட்சிகள், பாடல்கள் என்று படத்துடன் ஒன்றிச்செல்லும் காட்சிகளும் உண்டு.

ஃபீல் குட் மூவி💓 அமேசான் ப்ரைமில் கண்டுகளிக்கலாம்😎
 




Unhinged

'அமேசான் ப்ரைம்' வரிசையாக காட்டிய படங்களில் அட! ரஸல் க்ரோ நடிச்ச படமா இருக்கே! நன்றாகத் தான் இருக்குமென்று ஆர்வத்தில் பார்க்க ஆரம்பித்த படம். அமெரிக்காவில் சாலைகளில் வண்டியோட்டிகள் சிலரின் அராஜகங்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இப்படியெல்லாமா இருப்பார்கள் என்று யோசிக்க வைத்து விட்டது இப்படம்! இந்தப் படத்தைப் பார்த்த பிறகு இப்படியெல்லாம் கூட ஆக்ரோஷமான கொலைகார பாதகர்கள் இருக்கலாம். இனி வண்டியோட்டும் பொழுது கவனமாக இருக்க வேண்டும் என்ற பயம் வந்து விட்டது 😟

வீட்டில் குழந்தைகள் படுத்தும் பாடு, வேலையிடத்தில் ஏற்படும் மன உளைச்சல், போகிற போக்கிலே கடுப்பைக் கிளப்பும் மனிதர்கள் என்று பலரையும் கடந்து தான் நாட்கள் சென்று கொண்டிருக்கிறது. அதையே நினைத்துக் கொண்டு வண்டியோட்டிச் செல்லும் பொழுது நம்மை அறியாமலே சில தவறுகள் ஏற்படத் தான் செய்கிறது. நம்மைப் போலவே சாலைகளில் வேறு சில மனிதர்களும் வெவ்வேறு மனநிலைகளில் இருப்பார்கள் என்பதை மறந்து விடுகிறோம். கடுகளவு பிரச்னையை மலையளவு பூதாகரமாக்கும் மனிதன் ஒருவன் சாலையில் குறுக்கீடு செய்தால் என்ன மாதிரி விளைவுகள் இருக்கும் என்பதை ஹாலிவுட் ஸ்டைலில் கொஞ்சம் பரபரப்புடன் திகில் படமாக எடுத்திருக்கிறார்கள்.

தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை தன்னுடைய உடல் மொழியாலும், மிரட்டும் கண்களாலும் ஒரு கோபக்கார பழிவாங்கும் மனிதனை கண்முன் கொண்டு வருகிறார் ரஸல் க்ரோ. 

பார்க்கலாம்.


 


Thursday, August 26, 2021

The Peanut Butter Falcon



திரைப்படங்கள் என்பதே நல்ல பொழுதுபோக்கு அம்சங்களுடன் இருப்பதே என்கின்ற நிலைமை  தமிழ்த் திரையுலகில் என்றோ மாறி விட்டது. நாட்டிற்கு, சாதிக்கு, மதத்திற்கு எதிரான கொள்கைப் பிரச்சார மையங்களாக, சிலருடைய கருத்துத்திணிப்பு ஊடகமாக மாறிக் கொண்டு வருவதால் தான் தமிழ் ரசிகர்கள் பலரும் மலையாளம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் என்று வேற்று மொழிப்படங்களை நாட ஆரம்பித்து விட்டார்கள். கொரோனாவிற்குப் பிறகு நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் தளங்களில் ஹாலிவுட் திரைப்படங்களும் மக்களால் விரும்பி பார்க்கப்படுகிறது.

ஆபாச வசனங்களும், பாடல்களும் இல்லையென்றாலே அது "நல்ல படம்" என்று நினைக்க வைத்து விட்டது இன்றைய தமிழ்ப்படங்கள். ஒரு சில "பீல் குட்" படங்களே நமக்கு அத்திப்பூத்தாற் போல அவ்வப்போது காண கிடைக்கிறது.

உண்மையிலேயே "பீல் குட்" படத்திற்கு மற்றுமொரு உதாரணமாக இப்படத்தைக்  கூறலாம். மிக எளிமையான கதைக்களம் கொண்டது 'The Peanut Butter Falcon' திரைப்படம். நாயகன் தன் கனவை நனவாக்க முயற்சி செய்து எப்படி வெற்றி பெறுகிறான் என்பது தான் கதை. அந்தப் பயணத்தில் அவன் சந்திக்கும் நபர் வெறுமையான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பவன். ஒருவரை ஒருவர் அறிந்து கொண்டதில் இருவருக்கிடையில் ஏற்படும் பிணைப்பு, அழகான கதாநாயகி என தொடக்கம் முதல் முடிவு வரை அழகாக நகர்கிறது திரைக்கதை. எந்த வித உணர்ச்சிக்குவியலாக இல்லாமல் அதன் போக்கில் இயற்கையாக செல்கிறது கதை. அமெரிக்காவின் புறநகர்ப்பகுதி மக்கள் தீவிர மத நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பார்கள். போகிற போக்கில் அதையும் தொட்டுச் செல்கிறது. புறநகர் காட்சி அமைப்புகள்,  பயணம் செய்யும் வழியெங்கும் கூடவே வரும் ஆறும் அழகு.

கதாநாயகன் "Down Syndrome" குறைபாடு கொண்டுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகனாக வேண்டும் என்ற தன்னுடைய சிறு வயது கனவை இப்படத்தை இயக்கிய இயக்குனர்களால் நிறைவேற்றிக் கொண்டுள்ளார். அவனுடைய கனவைக் கொண்டே இத்திரைப்படத்தை இயக்கி வெற்றியும் கண்டுள்ளார்கள் இயக்குனர்கள். கனவுகளை நனவாக்க தீவிரமாக நாம் செய்யும் முயற்சிகள் நிச்சயம் வெற்றியடையும் என்பதையும், நமக்கான மனிதர்கள் அமையும் பட்சத்தில் உடல் குறைபாடு என்பதையும் தாண்டி சாதிக்க முடியும் என்பதையும் உணர்த்தும் அருமையான படம்.

Sunday, May 17, 2020

Varney AVashyamund



இரட்டை அர்த்த வசனங்கள், கோக்கு மாக்கு ஜோக்குகள் இல்லாத எதார்த்தம்னா கிலோ என்ன விலைன்னு கேட்கற படம்.

கதை நான் பிழியற முறுக்கு மாதிரி இஷ்டத்துக்குப் போகுது. சில்லறை சிதறினா காதல் வரும்ங்கறதெல்லாம்🙇🏻‍♀️

டேய் கொரோனா எல்லாம் உன்னால வந்தது. கொரியன் டிராமாவாவது பார்த்திருப்பேன்😞 ஷோபனா ரசிக, ரசிகைகள் வேணா ரசிக்கலாம்! என்னாச்சு சுரேஷ் கோபிக்கு?

ஒட்டாத காதல். துல்கர் ...ம்ஹூம்ம்ம்ம்

KARWAN


துல்கரின் வேறு இரு படங்கள் தந்த ஏமாற்றத்தால் பயந்து பயந்து தான் பார்த்தேன். சிறு வயதில் தந்தையை இழந்தவர், தன்னுடைய விருப்பத்திற்குத் தடையாக இருந்த தந்தையிடம் பேசாதவர், தந்தையின் நடத்தையால் அவரைப்போல் இருந்து விடக்கூடாது என்று நினைப்பவர் என மூவருடன் பெங்களூரிலிருந்து கொச்சிக்குப் பயணிக்கும் கதை. இடையில் நடக்கும் நிகழ்வுகள் எப்படி இவர்களின் பாதையை மாற்றுகிறது என்பதில் முடிகிறது.

கல்லூரியில் படிக்கும் இன்றைய இளம்பெண் குடி, புகைபிடித்தல், கர்ப்ப பரிசோதனை என்பதெல்லாம் ஒன்றுமில்லை என்பது போல் காட்டியிருப்பது 🤔

Chopsticks படத்தில் நடித்திருந்த Mithila Palkar இப்படத்திலும். வித்தியாசமான பெயர். பள்கார் என்றிருக்கிறது😇

அமலாவா அது!

வளைந்து செல்லும் மைசூர் மலைச்சாலைகள், உயர்ந்த மரங்கள், பனிமூட்டம், ஊட்டி மலைவீடுகள், தென்னை மரங்கள் சூழ தண்ணீரில் படகுகள் செல்லும் அழகு கொச்சி என ரசிக்கலாம்.

படத்தைப் பற்றி பதிவிட்ட பழனிக்குமாருக்கு நன்றி 🙏

Friday, May 8, 2020

Thappad



கணவன் ஒரு முறை கோபத்தில் அடித்தால் மனைவி உடனே விவாகரத்து கேட்பது சரியா? 'தப்பட்' ஹிந்தி படத்தைப் பார்த்ததும் பலருக்கும் இப்படித்தான் கேட்க தோணுகிறது! இரண்டு தலைமுறைக்கு முன்பு வரை பொருளாதாரம் சார்ந்து ஆணை சார்ந்திருக்க வேண்டிய சூழலில் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்று ஆண்களுக்கு சாதகமாகவே பெண்கள் மூளைச்சலவை செய்யப்பட்டு வாழ்ந்தார்கள். அடித்தாலும் உதைத்தாலும் அவனுடனே குடும்பம் நடத்தியாக வேண்டிய கட்டாயம் இருந்தது பெண்களுக்கு. உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் தான் பெண்கள் அரக்கர்களின் குடும்பத்தை விட்டுப் பிரிந்திருக்கிறார்கள்.

குடும்பங்களில் கோபம் என்பது ஆணுக்கு ஒரு நியதியாகவும் பெண்ணுக்கு வேறொன்றுமாகவே இருக்கிறது. இருந்து வருகிறது. ஆண் கோபப்படுவதில் நியாயம் கற்பிப்பதும் பெண் கோபப்பட்டால் குடும்பத்தைப் பாதிப்பதாகவும் பொறுப்பற்றதாகவும் சித்தரிக்கப்படுகிறது.

பெண் எவ்வளவு படித்திருந்தாலும் உயர்பதவியில் இருந்தாலும் வீட்டில் அவளின் பங்கும் எதிர்பார்ப்புகளும் கடமைகளும் என்றுமே குறைவதில்லை.

நம் தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா மகிழ்ச்சியாக வாழவில்லையா? அவர்களுக்குள் பிரச்னைகள் வந்ததில்லையா? அவர்கள் ஒருவரை ஒருவர் பொறுத்துச் சென்று நம்மை வளர்க்கவில்லையா போன்ற கேள்விகளுக்கெல்லாம் .. யார் பொறுத்துச் சென்றது? செல்ல வேண்டும் என்று சமூகம் யாருக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறது? அது ஏன் பெரும்பாலும் பெண்ணாகவே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறாள்? யாராவது அவர்களிடம் நீங்கள் உண்மையாகவே மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா என்று கேட்டிருப்போமா? கேட்டிருந்தால் தெரிந்திருக்கும்.

மனரீதியாகவோ உடல்ரீதியாகவோ பெண்ணை வதைக்கலாம் வன்முறைக்கு உள்ளாக்கலாம் என்று ஆண் அரக்கர்களுக்கு யார் சொல்லிக் கொடுத்தது? ஆண் என்ற ஒரே ஒரு காரணத்தால் பெண்ணைத் துன்புறுத்த உனக்கு எந்தவொரு உரிமையும் கிடையாது என்று ஏன் பெற்றோர்கள் சொல்லிக் கொடுத்து வளர்ப்பதில்லை? அந்த மரமண்டைகளுக்கும் ஏன் புரிவதில்லை?

அது தான் இந்தப் படத்தில் அம்ரிதா சொல்ல வருவது.

பெண்களின் பலவீனமே கண்களை மூடிக் கொண்டு காதலிப்பதும் கணவன் என்று நெக்குருகுவதும் தான். வீட்டு வேலைகளை மாங்கு மாங்கு என்று இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வது. அவன் திட்டினாலும் ஏசினாலும் கணவன் தானே, அவனுக்கு இல்லாத உரிமையா என்று சமாதானம் செய்து கொள்வது. அதே பெண் கணவன் தன்னை பலர் முன்னிலையில் அடிக்கும் பொழுது தான் அவன் அம்மா அதைப் பற்றி ஒரு வார்த்தை கூட கண்டிக்காமல் எதுவுமே நடக்காதது போல் அந்த நிலையிலும் மற்றவர்களை வழியனுப்ப மருமகளைக் கூப்பிடுவது அவளுக்கு பேரதிர்ச்சியாக இருக்கிறது. நடந்த தவறுக்கு கணவன் மன்னிப்பு கேட்பான் வருந்துவான் என்ற எதிர்பார்ப்பும் பொய்யாக, வீட்டை விட்டு வெளியேறுகிறாள். அதற்குப் பிறகும் மனைவியை அடித்தது தவறு என்று உணராதது மட்டுமில்லாது அவனின் மூர்க்கம் அதிகமாகி அவள் மேல் பழி சுமத்துகிறானே ஒழிய தன் தவறை உணர்வதில்லை.  அந்த நிகழ்வினால் இப்பொழுது என்ன நடந்து விட்டது என்பது போல அவன் நடந்து கொள்வது தான் அம்ரிதாவை வதைக்கிறது. அங்கு தான் அவளின் காதல் தோற்றுப் போகிறது. மகிழ்ச்சியை இழக்கிறாள். கடமைக்காக வாழும் வாழ்க்கையை விட பிரிவதே மேல் என்று நினைக்கிறாள். கணவன் தவறை உணரும் பொழுது மனதளவில் பிரிந்து வெகுதூரம் சென்று விடுகிறாள் அம்ரிதா.

வீட்டு விருந்தில் நண்பர்கள், பெற்றோர்கள் முன்னிலையில் கணவனிடம் அடிவாங்க அதிர்ச்சியில் அனைவரும் உறைந்து விடுகிறார்கள். அச்சம்பவத்தை மறக்கவே நினைக்கிறார்கள். அவளின் உணர்வுகளை மதித்து அவளுடன் யாரும் பேசவில்லை. பெற்ற தாயும் சமாதான தொனியில் பேசுகிறாள். கணவன் ஜஸ்ட் லைக் தட் என்று அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பித்து விடுகிறான். தான் செய்தது தவறு என்றோ அதனால் மனைவி காயப்பட்டிருக்கிறாள் என்றோ கவலைப்படவே இல்லை. தன் கோபத்தை இயலாமையை அவள் மேல் காட்டிய மூர்க்கத்தனத்தை அவன் புரிந்து கொள்ளவில்லை. வீட்டில் இருக்கும் அவன் அம்மாவும் அவனுக்கு உணர்த்தவில்லை. இப்படித்தான் பல குடும்பங்களிலும் ஆண்கள் இருக்கிறார்கள்.

அம்ரிதாவின் வீட்டில் அவளுடைய தம்பியின் காதலி அம்ரிதாவிற்கு ஆதரவாகப் பேச, அவளுடைய தம்பிக்கு கோபம் வந்து கை ஒங்க , அம்ரிதாவின் பெற்றோர்கள் உடனே அவனைக் கடிந்து கொண்டு அப்பெண்ணிடம் மன்னிப்பு கேட்கச் சொல்வதையும் பெற்றோர்களின் கடமையை நினைவுறுத்துகிறது. அதை அம்ரிதா ஆச்சரியமாக பார்க்கிறாள்.
அந்த கதாபாத்திரமும் தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்கிறான். அப்பெண்ணும் ஏற்றுக் கொள்கிறாள். இதைத்தான் அம்ரிதா எதிர்பார்த்திருப்பாள் அவள் கணவனிடமும் அன்பாக இருந்த மாமியாரிடமும்.

ஆண்களை வளர்க்கும் பெற்றோர்களுக்கான மிகப்பெரிய கடமை இது. தவறைத் திருத்த முயலா விட்டால் அவர்கள் மனித மிருகங்களாகிறார்கள். தங்களுடைய கோபத்தை இயலாமையை மனைவியிடம் காட்டுகிறார்கள் அதிகாரமாக! அதற்கு தங்களுக்கு உரிமை இருக்கிறது என்று தீவிரமாக நம்புகிறார்கள். அது தான் இந்தப்படம் சொல்ல வருவது.

பெண்ணின் மகிழ்ச்சி என்பது ஆணின் கையில் இருக்கிறது என்று நினைக்கும் சமூகம் இருக்கும் வரை அவளின் முடிவு அதிர்ச்சியாகத் தான் இருக்கும். அவளைப் புரிந்து கொண்ட குடும்பம் இருந்தது போல உண்மையில் எத்தனைப் பெண்களுக்கு இருக்கிறது? நிஜ வாழ்வில் பல பெண்களும் மெளனமாக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

விவாகரத்து வாங்கி விட்டால் பிரச்னைகள் முடிந்து விடுமா என்று கேட்பவர்களுக்கு... இப்பொழுது தான் பெண்கள் படித்து சுயமாக, சுயமரியாதையுடன் வாழ ஆரம்பிக்க முற்படுகிறார்கள். இதுவரை குடும்பங்கள் தழைத்திருக்கிறது என்றால் அவர்கள் பொறுமையாக கண்டும் காணாது போல் பல அவமானங்களையும் துன்பங்களையும் கடந்து சென்றதால் தான். இனி வரும் காலங்களில் மரியாதை கொடுத்தால் மரியாதை கிடைக்கும். இல்லையென்றால் போடா என்று போய்க்கொண்டே இருப்பார்கள். நீங்கள் அவர்களுக்கு என்ன பட்டம் கொடுத்தாலும். முதலில் பெண்ணுக்கான மரியாதையைக் கொடுக்க கற்றுக் கொள்ளுங்கள். நம் குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் தனிமரமாக நின்று கொண்டிருக்க வேண்டியது தான்.

பெண்களுக்கு மரியாதை கொடுக்கிறேன் என்று சாஷ்டாங்கமாக காலில் விழுவதும் நல்லதல்ல. பல வீடுகளில் பெண்களின் அராஜகமும் நடக்கிறது. ஆணை அடக்கியாளத் துடிக்கும் பெண் வர்க்கங்கள் அரக்க குணம் படைத்த ஆண்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல. இவர்களின் தவறுகளுக்கும் அப்பெண்களின் பெற்றோர்களே முழுமுதற்காரணம். அதையும் மறுப்பதற்கில்லை.

பெண்ணும் ஆணும் பரஸ்பரம் புரிந்து கொண்டு சுயமரியாதையுடன் வாழ கற்றுக்கொண்டால் அன்பான உலகம் நமக்கே சொந்தம்.

"Doing the right thing doesn't always end in happiness."









மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

18 வருடங்களுக்குப் பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கடந்த டிசம்பர் மாதம் ஊருக்குச் சென்றிருந்த பொழுது கோபுர...