Showing posts with label செயற்கை நுண்ணறிவு. Show all posts
Showing posts with label செயற்கை நுண்ணறிவு. Show all posts

Tuesday, September 1, 2026

கண்ணுக்குத் தெரியாத AI முத்திரை: நம்பகத்தன்மைக்கான தீர்வா, புதிய பிரச்சினையா?


“உள்ளங்கையில் உலகம். நுனிவிரலில் தகவல்கள்” என இணைய உலகின் வருகைக்குப் பின் தரவுகளுக்குக் குறைவில்லை. ஆனால், பெறப்பட்ட தகவல்களின் உண்மைத்தன்மையைச் சரிபார்க்க வேண்டியிருந்தது. பின்பு, சமூக வலைத்தளங்களின் வரவில் யார் எழுதிய பதிவை யார் பகிர்ந்து கொள்கிறார்கள் என்று தெரியாத அளவிற்கு அடுத்தவர் கருத்துக்களை, படங்களைத் திருடும் ஒரு மர்ம உலகம் தோன்றியது. மெய்யோ, பொய்யோ யார் வேண்டுமானாலும் ஒரு செய்தியை, புகைப்படத்தை, காணொளியைப் பகிரலாம், வெளியிடலாம் என்ற நிலையில், கண்ணால் பார்ப்பதும் பொய். காதால் கேட்பதும் பொய். எதையும் நம்பாமல் தீர விசாரிப்பதே மெய் என்று factcheck செய்யும் நிலைக்கு ஆளானோம்.

இன்றைய செயற்கை நுண்ணறிவு உலகில், ஒரு பதிவை எழுதியது, படத்தை எடுத்தது, ஓவியத்தை வரைந்தது மனிதர்களா அல்லது செயற்கை நுண்ணறிவு அமைப்புகளா என்று குழம்பிப் போய் நிற்கிறது சமூகம்.

சமீபத்தில் கல்லூரிப் பேராசிரிய நண்பர் ஒருவர், “இந்த தலைமுறை மாணவர்கள் பெரும்பாலோர் பாடங்களுக்கான திறந்த புத்தக தேர்வாகட்டும், அசைன்மெண்ட் ஆகட்டும் அப்படியே chatgptல் போட்டு அதை ஒருமுறை கூட வாசித்துப் பார்க்காமல் சமர்ப்பிக்கிறார்கள். பார்த்தவுடன் தெரிந்து விடுகிறது இது அவர்கள் எழுதியது அல்ல என்று. தவறுகள் ஏதும் இல்லாததால் முழு மதிப்பெண்கள் கொடுத்தே ஆக வேண்டும். உண்மையில் படித்து எழுதிய மாணவனுக்குச் செய்யும் துரோகம் இது. தவறு என்றாலும் எங்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை. AIன் வரவினால் மாணவர் சமுதாயம் சீரழிந்து கொண்டிருக்கிறது” என்று வருத்தமாகக் கூறினார். இப்படி மொத்தமாக AIன் மேல் பழியைப் போட முடியுமா என்ற கேள்வி தான் தற்பொழுது பேசுபொருளாகி இருக்கிறது.

 
ஏஐ உருவாக்கிய போலியான காணொளியையோ, ஒருவர் சொல்லாததைச் சொன்னதாகக் காட்டும் காணொலியையோ உண்மை என்று மக்கள் நம்பினால் அதன் விளைவுகள் பேராபத்தில்தான் முடியும். இது ஒருவித மோசடியும் கூட!

அதனால் தான் AI வெளியிட்டதா அல்லது மனிதர்களின் வேலையா என்ற வெளிப்படைத்தன்மை தேவை என்று கருதிய ஐரோப்பிய ஒன்றியம், தனது ‘AI Act’ல் அதற்கான விதிமுறைகளைக் கொண்டு வந்துள்ளது. அதாவது, AI உருவாக்கிய அல்லது மாற்றிய உள்ளடக்கங்கள்(Contents) அடையாளம் காணக்கூடியதாக இருக்க வேண்டும் என்ற transparency விதியை கட்டயாமாக்கியுள்ளது. உடனே Google, OpenAI, Meta போன்ற நிறுவனங்கள் “AI-generated images, content” என்று உள்ளடக்கங்களுக்கு(content) அடையாளம் வழங்கும் தொழில்நுட்பங்களை உருவாக்கி அதைப் படங்கள், பதிவுகளில் நாம் பார்க்கவும் முடிகிறது.

OpenAIன் ChatGPT போன்ற ‘கிளாட்'(Claude), ஆன்த்ராபிக் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு அமைப்பு ஆகும். உரைகளை எழுத, மொழிபெயர்க்க, இலக்கணப் பிழைகள் இன்றி மேம்படுத்த, தொகுத்து வழங்க, மென்பொருட்கள், கணினி நிரலாக்க மொழியில் எழுத என்று மனிதர்களை மிஞ்சும் வகையில் செயல்படும் ஒரு ‘Generative AI System’. பலராலும் இன்று பயன்படுத்தப்படுகிறது. மற்ற போட்டி நிறுவனங்கள் இது AIஆல் உருவாக்கப்பட்ட உரை, படங்கள் என்று வெளிப்படையாகத் தெரிவிக்கும் அதே வேளையில் ஆன்த்ராபிக் நிறுவனமோ தங்களுடைய ‘கிளாட் மாதிரி'(Model)யில் கண்ணுக்குத் தெரியாத, machine-readable watermark ஒன்றைச் சேர்க்கும் அணுகுமுறையை தற்பொழுது அறிமுகப்படுத்தியுள்ளது. அது தான் ‘AI watermarking’.

“Watermark”, நமக்கு ஏற்கனவே பரிச்சயமான வார்த்தை தான். உதாரணமாக, பணத்தாளை வெளிச்சத்தில் பார்த்தால் அதற்குள் இருக்கும் சில அடையாளங்கள், ஒரு புகைப்படத்தின் மீது இருக்கும் புகைப்படக்காரரின் பெயர் போன்றவை ஆகும். ஒரு ஆவணம் உண்மையானதா? போலியா? அதன் மூலத்தை அடையாளம் காண முடியுமா என்பதற்கு இத்தகைய குறியீடுகள் பயன்படுகின்றன.

இன்று இணையத்தில் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள், காணொளிகள், கட்டுரைகள் பெருமளவில் பெருகிக் கொண்டிருக்கிறது. மனிதர்கள் எடுத்த புகைப்படங்களைப் போலவே தத்ரூபமாக, உண்மையாகவே நடந்த நிகழ்வுகளைப் போல காணொளிகள், அச்சு அசலாக ஒருவர் பேசுவதைப் போலவே காணொலிகள் என்று பல போலியான தகவல்களால் புதிய சிக்கல்கள் உருவாகிக்கொண்டே வருகின்றன. அதனால் ஒரு ‘கண்டெண்ட்’ உண்மையானதா என்பதோடு, அது எங்கிருந்து வந்தது என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

அதற்கான ஒரு முயற்சிதான் ஆன்த்ராபிக்கின் ‘AI watermarking’.



உள்ளடக்கத்தைத் தயாரிக்கும் பொழுதே வார்த்தைகளை வடிவமைக்கும் முறையைக் கொண்டு ஒரு குறியீட்டை/முத்திரையை அதற்குள் கிளாட் பதித்து விடுவதால் படிப்பவர்களால் கண்டுபிடிக்க இயலாது. உரையை ஆய்வு செய்யும் ஒரு சிறப்பு தொழில்நுட்பத்தால் மட்டுமே அந்த குறியீட்டைக் கண்டுபிடிக்க முடியும். அதனால் இதை ஒரு வகையில் “டிஜிட்டல் கைரேகை” என்றும் புரிந்துகொள்ளலாம்.

ஒரு கதையோ, கட்டுரையோ, மென்பொருளோ கிளாட் மூலம் எழுதப்பட்டதா என்று கண்டறிவதே இதன் நோக்கம் என்றாலும் கிளாட் ‘பயன்படுத்தப்பட்டது’ என்பதற்கும் கிளாட் ‘எழுதியது’ என்பதற்கும் உள்ள வித்தியாசத்தை எப்படி கண்டறிவது என்பது தான் சமீபத்தில் தீவிர விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.

ஒரு மாணவர் ஆராய்ச்சிக் கட்டுரைக்குத் தேவையான ஆராய்ச்சிகளைச் செய்து, தரவுகளைச் சேர்த்து எழுதிய கட்டுரையை கிளாட் மூலம் மேம்படுத்தியிருக்கலாம். இறுதியில் அதில் பதிந்திருக்கும் குறியீட்டின் மூலம் “இந்தக் கட்டுரையை Claude எழுதியது” என்று முடிவு செய்ய முடியுமா?

ஆக, ‘Watermark’ ஒரு ஆதாரத்தை வழங்கினாலும் ஆரம்பக் கருத்து யாருடையது? யார் முதலில் எழுதியது, AI எவ்வளவு மாற்றியது, மனிதனின் பங்களிப்பு எவ்வளவு? என்பதைத் தனியாகச் சொல்ல முடியாது. இங்கேதான் AI-generated மற்றும் AI-assisted என்ற இரண்டு சொற்களுக்கு இடையிலான வித்தியாசம் முக்கியமாகிறது.

AI-generated – AI பெரும்பகுதியை உருவாக்கியது.

AI-assisted – மனிதர் உருவாக்கிய பணியில் AI உதவியது.

AI-edited – மனிதர் எழுதியதை AI திருத்தியது.

AI-translated – மனிதர் எழுதியதை AI மொழிபெயர்த்தது.

AI-summarized – ஏற்கனவே உள்ள உள்ளடக்கத்தை AI சுருக்கியது.

இவை அனைத்தையும் “AI-generated” என்ற ஒரே அடைமொழிக்குள் குறிப்பிடுவது நியாயமற்றது.

இதுதான் watermark-ன் மிகப்பெரிய வரம்பு. ஒரு மனிதனின் உழைப்பின் மூலம் உருவான ஒன்றை கிளாட்-ஐ பயன்படுத்தியதன் மூலம் AI-generated என்று தவறாக மதிப்பிடப்பட்டுவிடுமோ என்பது தான் ஆன்த்ராபிக்கின் watermark-ஐப் பற்றிய உண்மையான கவலை.

ஆன்த்ராபிக் தனது வாட்டர்மார்க்கிங் நடவடிக்கையை EU AI Actன் வெளிப்படைத்தன்மையை நிறைவேற்றுவதற்கான ஒரு பகுதியாக விளக்கியுள்ளது. சட்டம் ஐரோப்பாவுக்கானது என்றாலும் தனது புதிய குறியீட்டு அணுகுமுறையை ஆகஸ்ட் 2026ல் உலகளவில் அறிமுகப்படுத்தியது. August 2, 2026 அல்லது அதற்குப் பிறகு வெளியிடப்படும் புதிய கிளாட் மாதிரிகள் (Claude models) இந்த வாட்டர்மார்க் தொழில்நுட்பத்துடன் வெளிவரத் தொடங்கியுள்ளன. பழைய கிளாட் மாதிரிகளிலும் குறியீட்டு தொழில்நுட்பத்தைச் சேர்க்கும் பணியில் இருப்பதாக இந்நிறுவனம் கூறியுள்ளது. அதனால் இது என்றோ ஒருநாள் எதிர்காலத்தில் வரக்கூடிய தொழில்நுட்பம் அல்ல. தற்பொழுது நடைமுறைக்கு வரத் தொடங்கியுள்ள புதிய தொழில்நுட்பம். மேலும் இதை ஒரு குறிப்பிட்ட app-க்கு மட்டும் என கட்டுப்படுத்தவில்லை. இதில் ஒரு தனிப்பட்ட நபரைப் பற்றின தகவல்கள் சேமிக்கப்படவில்லை என்பதால் ‘பிரைவசி’ பிரச்சினைகள் கிடையாது. ஆனால்,  ஒருவர் AI பயன்படுத்தியதை மறைக்க விரும்பினால், உரையை வேறு மாதிரிகளின்(AI Models) மூலம் மாற்றுமுறையில் எழுதி குறியீட்டை நீக்கிவிட முடியும் என்பதால்தான் இது ஐரோப்பிய சட்டத்தைத் தாண்டிய ஒரு உலகளாவிய தொழில்நுட்ப பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

சரி, வாட்டர்மார்க் இருந்தால் தானே பிரச்சினை. அதை நீக்கி விட்டால் யாருக்கும் சந்தேகம் வராதே என்று குறுக்குவழியில் யோசிக்கும் மனிதர்களும் இருப்பார்கள் அல்லவா? அவர்களுக்காகவும் புதிய தொழில்நுட்பம் ஒன்றை உருவாக்க நிறுவனங்கள் இந்நேரத்திற்கு முயற்சித்துக் கொண்டிருக்கும். அந்த தொழில்நுட்ப ஆராய்ச்சியிலும் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அப்படியிருக்க, இந்தக் குறியீடு அவசியமா என்று கேட்டால் அவசியம் தான். AI watermark கண்ணுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் AI உடன் வாழப் போகும் மனித சமூகம் தன்னுடைய புதிய விதிகளை எப்படி உருவாக்கப் போகிறது என்ற கேள்வி மட்டும் மிகத் தெளிவாகத் தெரிகிறது.

இனி மனித படைப்பாற்றல், அதன் நம்பகத்தன்மை, ஆசிரியத்துவம் போன்றவற்றிற்கு இந்த குறியீட்டின் மூலம் ஒரு தடயமோ, எச்சரிக்கையோ கொடுக்கலாம். சட்டம், உள்ளடக்கங்களின் வெளிப்படைத்தன்மையைக் கட்டாயப்படுத்தலாம். ஆனால் எந்த watermark-ம் “இந்தப் படைப்பில் உண்மையில் மனிதன் என்ன செய்தான்? AI-ன் உதவி எவ்வளவு? “போன்ற கேள்விகளுக்கு முழுமையான பதிலைத் தர முடியாது என்பதே நிதர்சனம். அதுதான் AI உலகத்தின் அடுத்த பெரிய கேள்வியாகத் தொக்கி நிற்கிறது.

ஆக, Claude watermark இருந்தால் கிளாட் எழுதியது என்று பொருளல்ல. அந்த உள்ளடக்கத்தை உருவாக்குவதில் அதனுடைய பங்கு இருந்திருக்கலாம் என்பதைக் கண்டறிய உதவும் ஒரு தொழில்நுட்பத் தடயம். அவ்வளவு தான்.

அந்தத் தடயத்தை வைத்து என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பது மனிதர்களாகிய நம் கைகளில் தான் இருக்கிறது. அதற்கு நமக்குத் தேவையான அறிவும் பொறுப்பும் இருக்கிறதா?


Sunday, August 16, 2026

அழிக்கப்பட்ட புத்தகங்கள்… உருவான செயற்கை நுண்ணறிவு: அறிவின் புதிய போராட்டம்

என்ன தான் நடக்கிறது செயற்கை நுண்ணறிவு உலகில்? மனிதனின் மூளையாக செயல்பட, கணினிக்கு அறிவூட்ட எந்த எல்லை வரை நிறுவனங்கள் செல்கிறது? அறிவார்ந்த சமூகத்தின் தொடக்கமே இப்படி என்றால் யாரெல்லாம், எப்படியெல்லாம் பாதிக்கப்படப் போகிறார்கள். மேலும் வாசிக்க...


மனித நாகரிகத்தின் மிகப்பெரிய செல்வம் பணமோ, கட்டிடங்களோ, தொழில்நுட்பமோ அல்ல. அது அறிவு மட்டுமே. ஆதிமனிதன் குகைச் சுவர்களில் தனது அனுபவங்களை வரைந்த காலத்திலிருந்து, இன்று கணினி சில்லுகளில் தகவல்களைப் பதிவு செய்யும் காலம் வரை, தான் கற்றதை அடுத்த தலைமுறைக்கு எப்படி கொண்டு செல்வது என்று சிந்தித்த மனிதன் உருவாக்கிய சாதனம் தான் புத்தகம்.

ஒரு நல்ல புத்தகம் என்பது வெறும் காகிதமும் மையும் மட்டுமே அல்ல. அதன் பக்கங்களுக்குள் ஒரு மனிதனின் வாழ்க்கை அனுபவமும், பல ஆண்டுகள் சிந்தித்த ஒரு மனதின் தடமும், ஒரு காலத்தின் குரலும் இருக்கிறது. ஒரு தலைமுறையின் கனவுகள், கேள்விகள், கண்டுபிடிப்புகள், தோல்விகள், வெற்றிகள் அனைத்தும் அதற்குள் மறைந்திருக்கின்றன. அதனால்தான் உலகின் ஒவ்வொரு நாகரிகமும் சமுதாயத்தின் அறிவாக புத்தகங்களை மதித்தது. அந்தப் புத்தகங்களைப் பாதுகாக்கவே நூலகங்கள் உருவானது.

நூலகம் என்பது வெறும் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்ட ஒரு கட்டிடம் அல்ல. அது ஒரு சமூகத்தின் நினைவகம். அறிவைத் தேடி வருபவர்களுக்கும் ஒரு தலைமுறை கற்ற பாடங்களை, அனுபவங்களை அடுத்த தலைமுறை மறந்துவிடாமல் பாதுகாக்கும் பொக்கிஷ அறையாக இருப்பதால் தான் உலகின் மிகப் பழமையான நூலகங்கள் இன்றும் மனித நாகரிகத்தின் பெருமையாகப் பேசப்படுகின்றன. இதில் பல நூலகங்கள் போர்களில் எரிந்தும் வெள்ளத்தில் அழிந்தும் காலத்தின் தாக்கத்தாலும் சிதைந்து போகும்போதெல்லாம் அறிவார்ந்த மனிதகுலம் வருந்தியது. ஏனெனில் எரிந்தது புத்தகங்கள் மட்டுமல்ல. மனித நினைவுகளின் ஒரு பகுதியும் கூட.

இவ்வாறு கண்ணும் கருத்துமாகப் பேணி காத்து ஆயிரம் ஆண்டுகளாக மனிதர்களுக்காக எழுதப்பட்ட புத்தகங்கள் இப்போது மனிதர்களால் உருவாக்கப்பட்ட புதிய, உயிரற்ற “மாணவனுக்கு” பாடம் சொல்லிக் கொடுக்கின்றன. ஆம். “செயற்கை நுண்ணறிவு”(Artificial Intelligence – AI) தான் அந்த மாணவன்! மனிதர்களைப் போலவே கணினியால் கற்றுக்கொள்ள முடியுமா என்று சில ஆண்டுகளுக்கு முன்பு கேட்டிருந்தால் யோசித்திருப்போம். இப்பொழுது சாத்தியமாகிவிட்டது!

இன்று நம்மால் ஒரு செயற்கை நுண்ணறிவிடம் கேள்வி கேட்க முடிகிறது. அது கதை, கவிதை, கட்டுரை எழுதுகிறது. கணினி நிரலை உருவாக்குகிறது. மருத்துவ ஆராய்ச்சிக்கு உதவுகிறது. மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கிறது. சில நேரங்களில் நம்மோடு நண்பனைப் போல உரையாடவும் செய்கிறது.

இவ்வளவு விஷயங்களை அதற்கு யார் கற்றுக்கொடுத்தது?

பிறந்த குழந்தை தன்னைச் சுற்றி நடக்கும் செயல்களிலிருந்தும் மனிதர்களிடமிருந்தும் கல்வியின் மூலமும் அறிவை வளர்த்துக் கொள்கிறது. ஆனால் உலகைப் பார்க்க முடியாத செயற்கை நுண்ணறிவோ மனிதர்கள் எழுதியவற்றிலிருந்து தான் கற்றுக் கொள்கிறது. “சாட்ஜிபிடி (ChatGPT) அல்லது கிளாட் (Claude) புத்தகங்களைப் படிக்கிறதா?” என்றால் இல்லை என்பது தான் பதிலாகும்.

ஒரு மனிதன் ஒரு நாவலைப் படித்தால் கதாபாத்திரங்களை நினைவில் வைத்துக் கொள்வான். சம்பவங்களை உணர்வோடு அனுபவிப்பான். ஆனால் செயற்கை நுண்ணறிவு அப்படிப் படிப்பதில்லை. அது புத்தகத்தில் இருக்கும் கோடிக்கணக்கான சொற்களைக் கணித ரீதியாக ஆராய்கிறது. எந்தச் சொல் எந்தச் சொல்லுடன் அதிகமாக வருகிறது? ஒரு கேள்விக்குப் பொதுவாக எப்படி பதில் எழுதப்படுகிறது? ஒரு விஞ்ஞானக் கட்டுரை எப்படி அமைக்கப்படுகிறது? ஒரு கவிதையின் மொழிநடை எப்படி இருக்கிறது? ஒரு வரலாற்றுப் புத்தகம் எப்படி தகவல்களை அடுக்குகிறது? இப்படிப் பல கோடிக்கணக்கான தொடர்புகளை அது கண்டுபிடிக்கிறது.

ஒரு விதத்தில் பார்த்தால், மனிதன் அர்த்தத்தைப் புரிந்துகொண்டு கற்றுக்கொள்கிறான். செயற்கை நுண்ணறிவோ, வடிவங்களையும் (patterns) தொடர்புகளையும் கண்டறிந்து கற்றுக்கொள்கிறது. இதற்கு Large Language Model (LLM) என்று பெயர். அதாவது, “மொழியின் அமைப்புகளையும் தொடர்புகளையும் கற்றுக்கொள்ளும் மாபெரும் கணினி மாதிரி.” அதனால் தான் செயற்கை நுண்ணறிவு மாதிரிகளுக்குப் பயிற்சி அளிக்க மிகப் பெரிய அளவிலான தரவுகள் தேவைப்படுகின்றன.

ஒரு சிறந்த ‘AI மாதிரி’யின் திறன் அதன் கணினி சக்தியால் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை. அது கற்றுக்கொள்ளும் தரவின் “தரமும்” முக்கியம். ஒரு மாணவன் நல்ல ஆசிரியர்களிடம் கற்றால் அவன் அறிவு சிறப்பாக இருக்கும். அதேபோல் AIக்கும் தரமான மனித அறிவு தேவை. ஆனால் எல்லா தரவுகளும் ஒரே தரத்தில் இருப்பதில்லை. இணையத்தில் கொட்டிக்கிடக்கும் தகவல்களில் தவறான செய்திகள், உறுதி செய்யப்படாத தகவல்கள், தரமற்ற எழுத்துக்கள் இருக்கலாம். அதனால் மனிதர்கள் எழுதிய புத்தகங்கள் AI உலகில் முக்கியமானதாக மாறின.

புத்தகங்கள் என்பது ஆசிரியர்களின் பல ஆண்டுக்கால ஆராய்ச்சி, ஒழுங்குபடுத்தப்பட்ட தகவல்கள், பதிப்பாசிரியர்களின் திருத்தம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். அதனால் செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களுக்கு உயர்தரமான புத்தகங்கள் மிகவும் மதிப்புமிக்க பயிற்சி வளமாக மாறின.

அதற்காகத் தான் ‘Anthropic’ நிறுவனம் உலகம் முழுவதிலும் இருந்து புத்தகங்களை வாங்கியதோடு மட்டுமில்லாமல் பக்கங்களைத் தனித்தனியாகப் பிரித்தெடுத்து, ஒவ்வொரு பக்கத்தையும் மின்னணு வடிவமாக மாற்றிய பின்னர் அந்தப் புத்தகங்களைத் தூக்கி எறிந்தது! AIக்கு அறிவை கற்றுக்கொடுக்க, மனித அறிவின் அடையாளமான புத்தகங்களையே நாம் அழிக்கிறோமா? மனிதர்கள் பல ஆண்டுகள் உழைத்து உருவாக்கிய புத்தகங்களைச் செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள் தங்கள் மாதிரிகளுக்குப் பயிற்சி அளிக்கப் பயன்படுத்தலாமா போன்ற அதிர்ச்சிகரமான கேள்விகள் தான் இன்று உலகம் முழுவதும் விவாதிக்கப்படும் “ஆன்த்ரோபிக் புத்தக சட்ட விவகார”த்தின் மையம் ஆகும்.

ஆனால் ஆன்த்ரோபிக்கின் பார்வையில், “ அழிக்கப்பட்டது காகிதம். பாதுகாக்கப்பட்டது அதிலிருந்த தகவல். ஒரு மாணவன் ஆயிரம் புத்தகங்களைப் படித்துவிட்டு ஒரு புதிய புத்தகத்தை எழுதுகிறான். அவன் ஒவ்வொரு வரியையும் நகலெடுக்கவில்லை. அவன் கற்றுக்கொண்ட அறிவை புதிய சிந்தனையாக மாற்றுகிறான். செயற்கை நுண்ணறிவும் அதைத்தான் செய்கிறது. அது புத்தகங்களைச் சேமிப்பதில்லை. அவற்றிலிருந்து மொழியையும் கருத்து அமைப்புகளையும் கற்றுக்கொள்கிறது. அதுவும் ஒரு வகையான கற்றல் தான்” என்று வாதிட்டது.

இந்த இரண்டு கருத்துகளுக்கும் இடையேதான் இன்று உலகின் மிகப் பெரிய சட்ட, நெறிமுறை, சமூக விவாதம் நடைபெற்று வருகிறது. அதற்கான பதிலைத் தேடும் முக்கியமான சட்டப் போராட்டங்களில் ஒன்றுதான் ‘Bartz v. Anthropic’ என்ற வழக்கு. இது ஒரு நிறுவனத்துக்கும் சில எழுத்தாளர்களுக்கும் இடையிலான சாதாரண வழக்கு அல்ல. எதிர்காலத்தில், செயற்கை நுண்ணறிவு எவ்வாறு உருவாக்கப்படும்? எழுத்தாளர்களின் உரிமை எவ்வாறு பாதுகாக்கப்படும்? மனித அறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில் எவ்வாறு பயன்படுத்தப்படும்? போன்ற மிகப் பெரிய கேள்விகளுக்கான ஒரு முக்கியமான முன்னுதாரணமாக மாறியது.

ஆகஸ்ட் 19, 2024 அன்று, அமெரிக்காவின் கலிபோர்னியா வடக்கு மாவட்ட கூட்டாட்சி நீதிமன்றத்தில் மூன்று எழுத்தாளர்கள், ஆண்ட்ரியா பார்ட்ஸ் (Andrea Bartz), சார்லஸ் கிரேபர் (Charles Graeber), கிர்க் வாலஸ் ஜான்சன் (Kirk Wallace Johnson) தங்களுக்காக மட்டுமல்லாமல், தங்களுடைய படைப்புகள் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டதாகக் கருதிய பல எழுத்தாளர்களின் சார்பாகவும் “Claude” என்ற செயற்கை நுண்ணறிவு உதவியாளரை உருவாக்கிய ஆன்த்ரோபிக் (Anthropic) நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்தனர்.

எழுத்தாளர்களின் முக்கிய குற்றச்சாட்டு, ஆன்த்ரோபிக் பல லட்சக்கணக்கான பதிப்புரிமை பெற்ற புத்தகங்களை உரிய அனுமதி இல்லாமல் பயன்படுத்தி தனது செயற்கை நுண்ணறிவு மாதிரியைப் பயிற்சி செய்துள்ளது. அது மட்டுமில்லாமல், சில காலகட்டங்களில் அனுமதியற்ற இணைய மூலங்களில் இருந்து பெறப்பட்ட மின்னூல்கள் ஒரு பெரிய டிஜிட்டல் தொகுப்பாக சேமிக்கப்பட்டு செயற்கை நுண்ணறிவு மாதிரிகளுக்குப் பயிற்சி அளிக்கப் பயன்படுத்தப்பட்டன. “எங்கள் பல ஆண்டுகால படைப்பாற்றலும் உழைப்பும் எங்களிடம் அனுமதி பெறாமல் ஒரு வணிக நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படக் கூடாது.” என்ற வாதத்தை அவர்கள் முன்வைத்தனர்.

இந்த விவாதம் மேலும் தீவிரமானதற்குக் காரணம், உலகம் முழுவதும் சில புத்தக விற்பனையாளர்கள் மிகப்பெரிய அளவிலான புத்தக ஆர்டர்களைப் பெற்றுள்ளனர். “யார் இவ்வளவு புத்தகங்களை வாங்குகிறார்கள்? எதற்காக வாங்குகிறார்கள்? AI நிறுவனங்களுக்காகவா” என்ற கேள்விகள் எழுந்தன. ISBNdb, Zoom Books போன்ற நிறுவனங்களின் பெயர்களும் பேசப்பட்டு உறுதி செய்யப்படவில்லை. AI உலகிற்கு மிகப்பெரிய அளவில் தரமான தரவுகள் தேவைப்படுகிறது என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது.

இருந்தாலும், கோடிக்கணக்கான ரூபாய் செலவழித்து சட்டப்படி வாங்கி பயன்படுத்திய புத்தகங்களை ஏன் தூக்கி ஏறிய வேண்டும்? அவற்றைப் பாதுகாக்க வேண்டாமா? நூலகங்களில் வைத்து அடுத்த தலைமுறைக்காக காக்க வேண்டாமா? அவற்றை அழிப்பதில் என்ன அர்த்தம்? இது அறிவுக்கு எதிரான செயலா? அல்லது நம்மால் இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்ளப்படாத ஒரு புதிய உலகின் தொடக்கமா? என்று பலவித கேள்விகளை எழுப்பியுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த அமெரிக்க மாவட்ட நீதிபதி வில்லியம் ஆல்சப் (Judge William Alsup), 2025 ஜூன் 23 அன்று, இரண்டு விஷயங்களைத் தனித்தனியாகப் பார்த்து முக்கியமான தீர்ப்பை வழங்கினார்.

1. சட்டப்படி வாங்கப்பட்ட புத்தகங்களை AI பயிற்சிக்குப் பயன்படுத்துவது

“ஒரு நிறுவனம் சட்டப்படி புத்தகங்களை வாங்கி, அவற்றை உள்நாட்டு செயற்கை நுண்ணறிவு பயிற்சிக்காகப் பயன்படுத்துவது Fair Use (நியாயமான பயன்பாடு) என்ற அமெரிக்கப் பதிப்புரிமை விதிக்குள் வருவதால் சட்டப்படி பெற்ற புத்தகங்களை AI கற்றலுக்குப் பயன்படுத்துவது சட்டவிரோதம் அல்ல” என்று ஆன்த்ரோபிக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தது. இது செயற்கை நுண்ணறிவு துறைக்குக் கிடைத்த மிக முக்கியமான வெற்றியாகக் கருதப்பட்டது.


2. திருட்டு மூலங்களில் இருந்து பெறப்பட்ட புத்தகங்கள்

அனுமதியற்ற மூலங்களில் இருந்து பெறப்பட்ட புத்தகங்களைச் சேகரித்தது “பதிப்புரிமை மீறல்” என்று இந்த முக்கியமான விஷயத்தில் நீதிமன்றம் எழுத்தாளர்களின் தரப்பை ஏற்றுக்கொண்டது. ஒரு தொழில்நுட்ப நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்டாலும், திருட்டுத்தனமாகப் பெறப்பட்ட படைப்புகளுக்குச் சட்டப் பாதுகாப்பு கிடையாது என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.

இதனால் இந்த வழக்கில், சட்டப்படி பெறப்பட்ட புத்தகங்களை AI பயிற்சிக்குப் பயன்படுத்தலாம் என்ற முக்கியமான சட்ட ஆதரவு ஆன்த்ரோபிக்குக் கிடைத்த வெற்றியாகவும் அனுமதியற்ற முறையில் பெறப்பட்ட புத்தகங்களைப் பயன்படுத்துவது பதிப்புரிமை மீறல் என்ற அங்கீகாரம் எழுத்தாளர்களுக்குக் கிடைத்த வெற்றியாகவும் பார்க்கப்பட்டது. “AI பயிற்சியின் நோக்கம் சட்டபூர்வமாக இருக்கலாம். ஆனால் தரவைப் பெறும் வழியும் சட்டபூர்வமாக இருக்க வேண்டும்” என்பதே இந்த வழக்கின் தீர்ப்பாக அமைந்தது.

பதிப்புரிமை தொடர்பான பிரச்சினைகளை நீண்ட நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துச் செல்லாமல் ஆன்த்ரோபிக் சமரசத் தீர்வை ஏற்றுக்கொண்டது. சுமார் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டது. இந்தத் தொகை பதிப்புரிமை வழக்குகளில் உலகின் மிகப்பெரிய சமரசத் தொகைகளில் ஒன்றாகக் கருதப்பட்டது.

‘ஆன்த்ரோபிக் வழக்கு’ ஒரு நிறுவனத்தின் பிரச்சினை மட்டும் அல்ல. “மனித அறிவை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் செயற்கை நுண்ணறிவின் பலனில், அந்த அறிவை உருவாக்கிய மனிதர்களின் பங்கு என்ன” என்ற முக்கியமான கேள்வியையும் முன்வைத்தது.

AI, மனித அறிவின் அடுத்த கட்ட வளர்ச்சியாக இருக்கலாம். ஆனால் அந்த வளர்ச்சி நியாயமானதாக இருக்க வேண்டுமானால், எழுத்தாளர்களின் உழைப்பு மதிக்கப்பட வேண்டும். அறிவின் மூலங்கள் வெளிப்படையாக இருக்க வேண்டும். தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் மனித உரிமைக்கும் சமநிலை தேவை என்பதை இந்த வழக்கின் மூலம் உணர்த்தியுள்ளது.

ஒவ்வொரு தொழில்நுட்பப் புரட்சியும் ஒரு புதிய வாய்ப்பை மட்டுமல்ல, ஒரு புதிய பொறுப்பையும் மனிதகுலத்தின் தோள்களில் சுமத்துகிறது. தற்பொழுது செயற்கை நுண்ணறிவின் பார்வையில் புத்தகங்கள் வெறும் தரவுகளா என்ற ஆழமான கேள்வியையும் எழுப்பியுள்ளது.

ஒவ்வொரு புரட்சியும் பயத்தையும் நம்பிக்கையையும் ஒன்றாகக் கொண்டு வருகிறது. எனவே, “செயற்கை நுண்ணறிவு நல்லதா, கெட்டதா?” என்பது அல்ல. அதை நாம் எப்படிப் பயன்படுத்தப் போகிறோம் என்பதை முடிவு செய்ய வேண்டியது மனிதர்கள்தான். 

அறிவுக்கு வழிகாட்டியாக இருப்பது அறம். எதைச் செய்ய முடியும் என்று அறிவு சொல்லும். எதைச் செய்ய வேண்டும் என்று அறம் சொல்லும். அது சட்டத்தின் பொறுப்பு. அரசுகளின், தொழில்நுட்ப நிறுவனங்களின் பொறுப்பு. அதைவிட முக்கியமாக, அறத்துடன் செயல்படவேண்டியது நம் ஒவ்வொருவரின் பொறுப்பு.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக புத்தகங்கள் மனிதர்களின் ஆசிரியர்களாக, நம் முன்னோர்களின் குரல்களாக, நம் தவறுகளை நினைவூட்டி, வெற்றிகளைப் பதிவு செய்து, கனவுகளுக்கு இறக்கைகள் கொடுத்தன. இன்று, அதே புத்தகங்கள் செயற்கை நுண்ணறிவு என்னும் புதிய மாணவனுக்குப் பாடம் சொல்லிக் கொண்டிருக்கின்றன. இந்த மாற்றத்தை நாம் பயத்தோடு பார்க்க வேண்டியதில்லை. கண்மூடித்தனமான உற்சாகத்தோடும் பார்க்கக் கூடாது. மாறாக, பொறுப்புணர்வுடன், சமநிலையுடன், தொலைநோக்குப் பார்வையுடன் அணுக வேண்டும்.

ஏனெனில், புத்தகங்கள் காகிதத்தால் மதிப்புப் பெறவில்லை. அவற்றை எழுதிய மனிதர்களின் சிந்தனையால் மதிப்புப் பெற்றன.

அதேபோல, செயற்கை நுண்ணறிவு அதன் கணக்கிடும் திறனால் மட்டுமே உயர்ந்ததாக மாறாது. மனித அறிவையும், மனித மதிப்புகளையும், மனிதநேயத்தையும் மதிப்பதில் தான் அதன் உண்மையான மதிப்பு தீர்மானிக்கப்படும்.


Sunday, August 2, 2026

அமெரிக்காவின் புதிய தங்க வேட்டை- AI உருவாக்கும் புதிய கோடீஸ்வரர்கள்

'நிவிடியா' நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான ஜென்சென் ஹுவாங் "இன்னும் ஐந்து வருடங்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் பல மில்லியனர்கள் உருவாகும் வாய்ப்புகள் இருக்கிறது" என்று 2025ல் கூறியிருந்தார். அந்தக் கூற்று தற்பொழுது உண்மையாகி வருகிறது என்பதை விவரிக்கிறது சொல்வனத்தில் வெளியாகியுள்ள இந்தக்கட்டுரை.



கிராமப்புற அமெரிக்காவில் விவசாய நிலம் வைத்திருப்பது பெரும் செல்வத்திற்கான அறிகுறியாக இருந்ததொரு காலம் உண்டு. குறைந்து வரும் லாபம், அதிகரித்து வரும் செலவுகள், நிச்சயமற்ற எதிர்காலம் ஆகியவற்றால் பல விவசாயக் குடும்பங்கள் போராடி வரும் நிலையில், நிலங்கள் பெரும்பாலும் நிதி மதிப்பை விட உணர்வுப்பூர்வமான மதிப்பையே கொண்டிருக்கிறது. ஆனால் சமீபத்திய தொழில்நுட்பப் புரட்சி அந்தக் கதையை மாற்றி எழுதப் போகிறது என்பது தான் சுவாரஸ்யமே!

செயற்கை நுண்ணறிவு(AI) தொழில்நுட்பம் , தரவு மையங்களுக்கான தேவையை முன்னெப்போதும் இல்லாத அளவிற்குத் தூண்டியுள்ளது. இந்த புதிய AI சகாப்தத்தில், அமெரிக்காவின் மிகவும் மதிப்புமிக்க சொத்துக்களில் ஒன்று இனி பூமிக்கு அடியில் மறைந்திருக்கும் எண்ணையோ அல்லது இயற்கை எரிவாயுவோ அல்ல. அது பூமிக்கு மேலே உள்ள நிலம்தான்.

இந்த மாற்றம் தான் முற்றிலும் புதிய கோடீஸ்வரர்கள் வர்க்கத்தை உருவாக்கி வருகிறது.

இதற்கு ஒரு குறிப்பிடத்தக்க உதாரணம், வடகிழக்கு பென்சில்வேனியாவில் உள்ள சேலம் டவுன்ஷிப்பில் அரங்கேறியுள்ள சம்பவம்தான். அங்கு பல தசாப்தங்களாக டேவிட்டும் மாரிலீ கிலிட்டியும் தங்களின் 89 ஏக்கர் பண்ணையில் கடுமையாக உழைத்து வந்தனர். பன்றிகளை வளர்ப்பது அவர்களுக்கு ஒருபோதும் பெரும் செல்வத்தைக் கொண்டுவரவில்லை. ஒரு கட்டத்தில் அவர்கள் தங்கள் விவசாயத் தொழிலை விரிவுபடுத்த முயன்று கடனில் மூழ்கி, அண்டை வீட்டாரிடமிருந்து கடுமையான எதிர்ப்பையும் எதிர்கொண்டனர். பல ஆண்டுகளாக நிதிப் போராட்டங்கள் அவர்களின் அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாகவே இருந்தன.

பின்னர் எல்லாம் மாறிவிட்டது. எப்படி?

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நில மேம்பாட்டாளர்கள் அந்தத் தம்பதியினரை அணுகி நம்பவே முடியாத ஒரு சலுகையை வழங்கினர். ஒரு சாதாரண விலைக்கு மட்டுமே விற்க முடியும் என்று அவர்கள் நினைத்திருந்த அவர்களின் பண்ணை திடீரென்று 22 மில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புடையதாக மாறியது.

அதற்குக் காரணம் விவசாயம் அல்ல.

அவர்களுடைய சொத்து ஒரு பெரிய செயற்கை நுண்ணறிவு(AI) தரவு மையத்திற்கு மிகச்சரியான இடமாக மாறியிருந்ததே காரணமாகும்.

கிலிட்டி குடும்பத்தினர் மட்டும் இல்லை. சேலம் டவுன்ஷிப்பில் இருக்கும் 96 குடும்பங்களும் கூட்டாகச் சேர்ந்து முதலீட்டு நிறுவனமான பிளாக்ஸ்டோனுக்குச் சொந்தமான தரவு மைய மேம்பாட்டாளரான QTS-க்கு சுமார் 1,700 ஏக்கர் நிலத்தை விற்றுள்ளன. இந்த பரிவர்த்தனையின் மொத்த மதிப்பு வியக்கத்தக்க வகையில் 586 மில்லியன் டாலரை எட்டியது. சராசரியாக ஒவ்வொரு குடும்பமும் சுமார் 5.5 மில்லியன் டாலர் பெற்றுள்ளது. அதாவது, ஒரு ஏக்கர் நிலம் தோராயமாக 330,000 டாலருக்கு விற்கப்பட்டுள்ளது.

இந்த விற்பனைக்கு முன்பு இந்தக் குடும்பங்களில் பலர் சாதாரண வேலைகளைச் செய்பவர்களாகவும், சிலர் நடமாடும் வீடுகளில் வசிப்பவர்களாகவும், மற்றவர்கள் சிறு வணிகங்களை நடத்துபவர்களாகவும் இருந்துள்ளனர். ஒரே இரவில் தங்கள் நிலங்களை விற்று அமெரிக்காவின் வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த கோடீஸ்வரர்கள் வரிசையில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இந்த நிலம் ஏன் திடீரென்று இவ்வளவு மதிப்புமிக்கதாக மாறியது?

செயற்கை நுண்ணறிவுக்கு மிகப்பெரிய கணினி ஆற்றல் தேவைப்படுகிறது. ஒவ்வொரு செயற்கை நுண்ணறிவு மாதிரியும் பில்லியன்கள் அல்லது டிரில்லியன்கள் அளவிலான தகவல்களைச் செயலாக்குகிறது. இதற்கு 24 மணி நேரமும் இயங்கும் ஆயிரக்கணக்கான சக்திவாய்ந்த கணினி சேவையகங்கள் தேவைப்படுகின்றன. இந்த சேவையகங்களுக்கு மூன்று முக்கிய வளங்களைக் கொண்ட பிரம்மாண்டமான தரவு மையங்கள் தேவை. அவை, தொடர்ச்சியான மின்சாரமும், அதிக திறன் கொண்ட மின் பரிமாற்ற கம்பிகளும், வேகமான இணைய இணைப்பும் ஆகும்.

பென்சில்வேனியாவில் உள்ள அந்த நிலங்கள், இயற்கை எரிவாயு, அணுசக்தி நிலையங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பிற்கு அருகில் அமைந்திருந்தன. வேறு இடங்களில் புதிய மின்சார உள்கட்டமைப்பை உருவாக்குவது மிகவும் செலவு மிக்கதாக இருந்திருக்கும். இந்தப் பண்ணைகளுக்கு ஏற்கனவே தாராளமான மின்சாரம் கிடைத்ததால் அவற்றின் மதிப்பு வியத்தகு முறையில் அதிகரித்தது.

இன்றைய செயற்கை நுண்ணறிவுப் பொருளாதாரத்தில், ஒரு காலத்தில் எண்ணெய்க்கான அணுகல் எவ்வளவு மதிப்புமிக்கதாக இருந்ததோ அதே அளவிற்கு மின்சாரத்திற்கான அணுகலும் மதிப்புமிக்கதாக இருக்கக்கூடும்.

அதுவே அமெரிக்கக் கனவின் ஒரு புதிய வடிவமாக உருவெடுத்துள்ளது. சிலிக்கான் பள்ளத்தாக்கு தொழில்முனைவோர், வால்ஸ்ட்ரீட் முதலீட்டாளர்களைப் போலல்லாமல், இந்தப் புதிய கோடீஸ்வரர்களில் பலர் தொழில்நுட்பத் துறையில் ஒருபோதும் பணியாற்றியதில்லை. அவர்கள் சரியான நேரத்தில், சரியான இடத்தில் நிலத்தை வைத்திருந்தார்கள். அவ்வளவுதான். அடிச்சாச்சு லக்கி ப்ரைஸ்!

எதிர்பாராமல் கிடைத்த பணத்தில் சிலர் கனவு இல்லங்களைக் கட்டுகிறார்கள். சிலர் உள்ளூர் வணிகங்களை வாங்குகிறார்கள். தங்கள் சமூகங்களில் முதலீடு செய்கிறார்கள். மருத்துவ ஆராய்ச்சிக்கு ஆதரவளிக்கிறார்கள். எதிர்கால சந்ததியினருக்கு நிதி நிலைத்தன்மையை உறுதி செய்கிறார்கள். கிலிட்டி குடும்பத்தின் மகள்களில் ஒருவர் ஒரு உள்ளூர் மதுபான ஆலையை வாங்கியுள்ளார். மற்றொருவரான மருத்துவர் ஒரு புற்றுநோய் ஆராய்ச்சி அறக்கட்டளையை நிறுவத் திட்டமிட்டுள்ளார். எதிர்பாராத நில விற்பனை, இப்போது புதிய வணிகங்கள், தொண்டுப் பணிகள், குடும்பக் கனவுகளுக்கு நிதியுதவி அளித்துள்ளது.

பென்சில்வேனியாவின் கதை தனித்துவமானது அல்ல.

அமெரிக்கா முழுவதும் செயற்கை நுண்ணறிவு (AI) உள்கட்டமைப்புக்காக நிலத்தைப் பெறுவதற்கு கட்டுமான நிறுவனங்கள் போட்டிப் போடுகின்றன. வர்ஜீனியா, டெக்சாஸ், அரிசோனா, ஜார்ஜியா, ஓஹையோ, பென்சில்வேனியா போன்ற மாநிலங்கள் தரவு மையக் கட்டுமானத்தில் முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சியைச் சந்தித்து வருகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு கற்பனை செய்ய முடியாததாகத் தோன்றிய திட்டங்களில் பில்லியன் கணக்கான டாலர்கள் முதலீடு செய்யப்படுகின்றன.

இந்த வளர்ச்சி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அப்பாற்பட்ட பல வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. கட்டுமானத் தொழிலாளர்கள் பல ஆண்டுகளுக்கு நிலையான வேலைவாய்ப்பைப் பெற்று வருகின்றனர். மின்சார வல்லுநர்கள், பொறியாளர்கள், HVAC நிபுணர்கள், எஃகு, கான்கிரீட் உற்பத்தியாளர்கள், உபகரணங்களை நிறுவுபவர்கள் என அனைவரும் இந்த விரைவான விரிவாக்கத்தால் பயனடைந்து வருகின்றனர். முக்கிய மின் உள்கட்டமைப்புகளுக்கு அருகிலுள்ள நிலங்களின் மதிப்பும் வியத்தகு முறையில் உயர்ந்து வருகிறது. உள்ளூர் பொருளாதாரங்களும் மாறி வருகின்றன.

சிலருடைய வாழ்க்கையை நல்ல விதமாகப் புரட்டிப்போட்டிருந்தாலும் செயற்கை நுண்ணறிவின் இந்த வளர்ச்சியை அனைவரும் வரவேற்பதில்லை. தரவு மையங்களின் இந்த விரைவான விரிவாக்கம் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா முழுவதும் சுற்றுச்சூழல் பாதிப்புகள், அதிகரித்த மின்சார நுகர்வு, நீர் பயன்பாடு, இரைச்சல், கிராமப்புற சமூகங்களின் தன்மையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த கவலைகளைக் காரணம் காட்டி, குடியிருப்பாளர்கள் பெரிய செயற்கை நுண்ணறிவு மையங்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியுள்ளனர். கணினி சர்வர்கள் நிரம்பிய பிரம்மாண்டமான தொழிற்சாலைக் கட்டிடங்களின் வரிசைகளுக்குக் கீழே, அமைதியான கிராமப்புற நிலப்பரப்புகள் படிப்படியாக மறைந்துவிடும் என்று சிலர் கவலைப்படுவதிலும் நியாயம் இருப்பது போலத்தான் தெரிகிறது. ஒரு துறையின் வளர்ச்சியால் வேறு சில துறைகளில் பாதிப்புகளும் ஏற்படுவதைத் தடுக்க இயலாது தான். ஒரு சில நில உரிமையாளர்கள் செல்வந்தர்களாகும் அதே வேளையில், அருகிலுள்ள சமூகங்கள், சுற்றுச்சூழல், உள்கட்டமைப்புச் செலவுகளைச் சுமக்க நேரிடலாம் என்றும் விமர்சகர்கள் வாதிடுகின்றனர்.

இருப்பினும், புதிய வேலை வாய்ப்புகள், அதிகரித்த வரி வருவாய், பல்லாண்டுகளாகப் பொருளாதார ரீதியாகப் போராடி வரும் பகுதிகளில் பில்லியன் கணக்கான டாலர்கள் வருமானம் வருவதையும் ஆதரவாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். சேலம் டவுன்ஷிப்பில் மட்டும் திட்டமிடப்பட்ட இந்தத் திட்டம் அதன் 12 தரவு மையக் கட்டிடங்களில் 1,500-க்கும் மேற்பட்ட கட்டுமான வேலைகளையும், சுமார் 600 நிரந்தரப் பணியிடங்களையும் உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரலாற்றில் ஒவ்வொரு தலைமுறையும் நாட்டின் பொருளாதாரத்தை மாற்றியமைத்த ஒரு தொழில்நுட்ப முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.

1848 முதல் 1855 வரை நடந்த தங்க வேட்டையில் ஈர்க்கப்பட்டு உலகெங்கிலும் இருந்து 300,000-க்கும் மேற்பட்ட மக்கள் புலம்பெயர்ந்தனர். ஒரே இரவில் நகரங்கள் தோன்றி வங்கிகள் செழித்தன. தொடர்வண்டிப் பாதைகள் விரிவடைந்தன. கலிஃபோர்னியாவின் பொருளாதாரம் நிரந்தரமாக மாற்றப்பட்டது.

1859-ல் ‘எட்வின் டிரேக்’ பென்சில்வேனியாவில் வெற்றிகரமாக எண்ணெய்க்காகத் துளையிட்டபோது, பெட்ரோலியம் என்பது தானியங்கி வாகனங்கள், விமானங்கள், தொழிற்சாலைகள், நவீன நாகரிகத்திற்கு ஆற்றல் அளிக்கும் எரிபொருளாக மாறும் என்று மிகச் சிலரே கற்பனை செய்திருந்தனர். ஆனால் எண்ணெய் வரலாற்றில் மிகப்பெரிய செல்வங்களில் ஒன்றானது மட்டுமல்ல அமெரிக்காவை ஒரு தொழில்துறை வல்லரசாகவும் அது நிலைநிறுத்தியது.

1990களில் மின்சாரமும் தொழில்மயமாக்கலும் அமெரிக்காவை அடுத்த தளத்திற்குக் கொண்டு சென்றன.

2000 வருடம் நடந்த இணையப் புரட்சி வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் மாற்றியது. அமேசான், கூகிள், ஈபே, பின்னர் ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள் தகவல்தொடர்பு, வர்த்தகம், கல்வி, பொழுதுபோக்கை மாற்றியமைத்தன. மென்பொருள், பொருளாதார வளர்ச்சியின் புதிய உந்துசக்தியாக உருவெடுத்து, கோடீஸ்வரர்களையும் உலகின் பெரும் செல்வந்தர்களையும் தொழில்முனைவோர்களில் பலரையும் உருவாக்கியது.

2022 முதல் தற்பொழுது வரை ஏற்பட்டிருக்கும் செயற்கை நுண்ணறிவுப் புரட்சியால் ஒரே இரவில் கணினிகளால் மொழியைப் புரிந்துகொள்ளவும், கேள்விகளுக்குப் பதிலளிக்கவும், படங்களை உருவாக்கவும், மென்பொருள் எழுதவும், அறிவியல் ஆராய்ச்சிக்கு உதவவும் முடியும் என்பதை மில்லியன்கணக்கான மக்கள் உணர்ந்தனர். மின்சாரம், இணையத்தைப் போலவே செயற்கை நுண்ணறிவும் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது என்பதை அரசாங்கங்களும் வணிக நிறுவனங்களும் உடனடியாக உணர்ந்தன.

போட்டி தொடங்கியது

அமெரிக்கா மற்றொரு வரலாற்றுச் சிறப்புமிக்க தங்க வேட்டையை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலமாக ஆரம்பித்துள்ளது. ஆனால் இந்தமுறை அந்த மதிப்புமிக்க வளம் பூமிக்கடியில் இருக்கும் புதையல் அல்ல. மாறாக, செயற்கை நுண்ணறிவை இயக்கும் டிஜிட்டல் உள்கட்டமைப்பைத் தாங்கக்கூடிய நிலமாகும்.

அதனால் முதலீட்டாளர்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள் அனைத்தும் நாடு முழுவதும் தாராளமான மின்சாரம், வலுவான மின் கட்டமைப்பு, ஃபைபர்-ஆப்டிக் வலையமைப்புகள், சாதகமான ஒழுங்குமுறைகள் உள்ள இடங்களைத் தேடுகின்றனர். இந்த நன்மைகளைக் கொண்ட சமூகங்கள் அடுத்த எதிர்பாராத செல்வ மையங்களாக மாறக்கூடும்.

இனி எதிர்காலம் தரவுகளுக்கே சொந்தம். செயற்கை நுண்ணறிவு, மென்பொருளை விட மிக அதிகமாக மாற்றங்களைக் கொண்டுவருகிறது. அது ரியல் எஸ்டேட் சந்தைகள், எரிசக்தி உள்கட்டமைப்பு, வேலைவாய்ப்பு முறைகள், உள்ளூர் பொருளாதாரங்களை மறுவடிவமைத்து வருகிறது. வெகு சிலரே எதிர்பார்த்த இடங்களில் அது வாய்ப்புகளை உருவாக்கி, தொழில்நுட்பத்தின் மூலம் தாங்கள் செல்வந்தர்களாவோம் என்று ஒருபோதும் நினைத்துப் பார்த்திராத மக்களுக்கு அவர்களின் நிலங்கள் மூலமாக அந்த வாய்ப்பை அளிக்கிறது. மேலும் அளிக்கப் போகிறது.

ஒவ்வொரு மாபெரும் தொழில்நுட்பப் புரட்சியும் வெற்றியாளர்களையும், சவால்களையும், கடினமான தேர்வுகளையும் உருவாக்குகிறது என்பதை வரலாறு காட்டுகிறது. செயற்கை நுண்ணறிவுப் புரட்சியும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் ஒரு விஷயம் மேலும் மேலும் தெளிவாகிறது. செயற்கை நுண்ணறிவு யுகத்தில், “தரவு”, உலகின் புதிய இயற்கை வளமாக மாறியுள்ளது. அதைத் தாங்கும் நிலம் அமெரிக்காவின் மிகவும் மதிப்புமிக்க பொக்கிஷங்களில் ஒன்றாக மாறியுள்ளது. இது அமெரிக்காவிற்கு மட்டுமல்ல உலகம் முழுவதற்குமான புரட்சி.

அடுத்த தொழிற்புரட்சியாக மாறும் என்று பலர் நம்புவதற்கு தற்பொழுது அமெரிக்கா பௌதீக அடித்தளத்தை அமைத்து வருகிறது.

நெடுஞ்சாலைகள் போக்குவரத்தை மாற்றியமைத்தது போலவும், மின்சாரம் உற்பத்தியை மாற்றியமைத்தது போலவும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஒவ்வொரு தொழில்துறையையும் மாற்றியமைக்கக்கூடும். செயற்கை நுண்ணறிவுப் புரட்சி இன்னும் அதன் ஆரம்ப அத்தியாயங்களில்தான் உள்ளது. அடுத்த கோடீஸ்வரர்கள் மென்பொருள் பொறியாளர்களாகவோ, சிலிக்கான் பள்ளத்தாக்கு தொழில்முனைவோராகவோ இல்லாமல் சரியான தருணத்தில், சரியான நிலத்தில் நிற்கும் சாதாரண மனிதர்களாகக் கூட இருக்கலாம்.

செயற்கை நுண்ணறிவுப் போட்டி என்பது இனி வெறும் மேம்பட்ட மென்பொருளை உருவாக்குவது மட்டுமல்ல. அது கணினி ஆற்றலுக்கான ஒரு உலகளாவிய போட்டியாக மாறியுள்ளது. மிக வலிமையான செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பை உருவாக்கும் நாடுகள், அடுத்த தலைமுறை அறிவியல் ஆராய்ச்சி, சுகாதாரம், உற்பத்தி, கல்வி, வேளாண்மை, நிதி, உற்பத்தி, போக்குவரத்து, பொழுதுபோக்கு, தேசியப் பாதுகாப்பு, உள்கட்டமைப்பு ஆகியவற்றில் முன்னணியில் இருக்கலாம்.

தொழிற்புரட்சி பத்தொன்பதாம் நூற்றாண்டை மறுவடிவமைத்தது போலவும், இணையம் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியை மாற்றியமைத்தது போலவும், செயற்கை நுண்ணறிவு இருபத்தியோராம் நூற்றாண்டை வரையறுக்கக்கூடும்.

எதிர்காலப் பொருளாதார வளர்ச்சிக்குச் செயற்கை நுண்ணறிவு அடித்தளமாக அமையும் என்று நம்புவதால், அமெரிக்கா நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை முதலீடு செய்து வருகிறது.

உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களும் இதை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன. சீனா, யுனைடெட் கிங்டம், ஃபிரான்ஸ், இந்தியா, ஜப்பான், தென் கொரியா, வளைகுடா நாடுகள் உள்ளிட்ட பிற நாடுகளும் செயற்கை நுண்ணறிவின் தலைமைத்துவம் பல்லாண்டுகளுக்கு உலகளாவிய போட்டித்தன்மையை வடிவமைக்கக்கூடும் என்பதை உணர்ந்து முதலீடுகளைச் செய்து வருகின்றன.

ஏனெனில் யார் வலிமையான செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பை உருவாக்குகிறார்களோ, அவர்கள் அடுத்த பத்தாண்டுகளில் மிகப்பெரிய பொருளாதாரத்தையும் தொழில்நுட்ப நன்மைகளையும் பெற்று உலகை ஆளக்கூடும்.

வரலாறு மீண்டும் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதத் தொடங்கியுள்ளது.

அந்த அத்தியாயத்தின் முதல் சில பக்கங்களில் நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

Thursday, May 28, 2026

மனிதகுலத்திற்கான கனவா? பணத்திற்கான பேராசையா? மஸ்க் – ஓபன்AI வழக்கின் பின்னணி

சொல்வனம் இதழ் 367ல் வெளியாகியுள்ள என்னுடைய கட்டுரை மனிதகுலத்திற்கான கனவா? பணத்திற்கான பேராசையா?  – சொல்வனம் | இதழ் 367 | 24 மே 2026

உலகெங்கிலும் போர்கள், மாபெரும் போராட்டங்கள், பொருளாதார நிச்சயமற்ற தன்மை, அரசியல் துருவமயமாக்கல் மற்றும் மனிதகுலம் கட்டுப்படுத்த முடியாத வேகத்தில் முன்னேறி வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் போன்ற அச்சங்கள் வளர்ந்து வரும் காலத்தில், கலிபோர்னியாவில் நடந்த ஒரு நீதிமன்றப் போராட்டமும் தொழில்நுட்ப உலகில் தற்பொழுது கவனத்தைப் பெற்றுள்ளது. இந்தப் புயலின் மையத்தில் இருப்பது OpenAI நிறுவனம்.


2015ல் OpenAI நிறுவப்பட்டபோது அதன் நோக்கம் உன்னதமானதாகவும் கிட்டத்தட்ட புரட்சிகரமானதாகவும் ஒலித்தது. ஒரு சில பெருநிறுவனங்கள் அல்லது அரசாங்கங்களைச் செழுமைப்படுத்துவதற்குப் பதிலாக, மனிதகுலத்திற்குப் பயனளிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவை உருவாக்குவதாக அந்த அமைப்பு அன்று உறுதியளித்தது. கட்டுப்பாடற்ற செயற்கை நுண்ணறிவு ஆபத்தானதாக மாறக்கூடும் என்று எலான் மஸ்க் மீண்டும் மீண்டும் எச்சரித்து, சாம் ஆல்ட்மேன் மற்றும் பல செல்வாக்குமிக்க செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து இந்தத் திட்டத்திற்கு நிதியுதவி செய்து நிறுவனத்தில் தானும் பங்கேற்றார்.

லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட சிலிக்கான் வேலி நிறுவனங்களுக்கு மாற்றாக OpenAI தன்னை ஒரு லாப நோக்கற்ற நிறுவனமாக முன்வைத்தது. மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு ஒரு தனிப்பட்ட தொழில்நுட்பப் பேரரசின் தனிச் சொத்தாக மாறக்கூடாது என்ற கொள்கையுடன் அதன் நிறுவனர்கள் அப்பொழுது செயல்பட்டனர்.

ஆனால், சில ஆண்டுகளாக எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது.

செயற்கை நுண்ணறிவு மேம்பாடு மிகவும் செலவு மிக்கதாக மாறியதால், OpenAI ஒரு சிக்கலான “வரையறுக்கப்பட்ட லாப” கட்டமைப்பை உருவாக்கி, மைக்ரோசாஃப்டிடமிருந்து டிரில்லியன் கணக்கான டாலர் முதலீடுகளை ஏற்றுக்கொண்டது. அதன் தயாரிப்புகள், குறிப்பாக ChatGPT, OpenAI நிறுவனத்தைத் தொழில்நுட்ப உலகின் மிகவும் சக்திவாய்ந்த அமைப்புகளில் ஒன்றாக மாற்றிவிட்டன.

இந்த மாற்றம்தான் மஸ்க்-OpenAI வழக்கின் மையமாக இருந்தது.

மனிதகுலத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு லாப நோக்கற்ற அமைப்பிலிருந்து லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட ஒரு பெருநிறுவனம், வல்லமைமிக்க அமைப்பாக மாறியதன் மூலம் OpenAI தனது அசல் நோக்கத்திற்குத் துரோகம் செய்துவிட்டது. OpenAI லாப நோக்கற்றதாக இருக்கும் என்று நம்பியே தான் பணத்தை நன்கொடையாக அளித்ததாக மஸ்க் வாதிடுகிறார். அவரைப் பொறுத்தவரை, குவிக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு சக்தியிலிருந்து சமூகத்தைப் பாதுகாக்க வேண்டிய அமைப்பு, அதற்குப் பதிலாக, அது தடுப்பதாக உறுதியளித்ததையே செய்வதாக மாறிவிட்டது. ஒரு தொண்டு நிறுவனத்தை எடுத்து அதை ஒரு பண இயந்திரமாக மாற்ற முடியாது என்று வாதிட்டார்.

OpenAI இந்தக் குற்றச்சாட்டுகளை வன்மையாக நிராகரித்தது.

OpenAI வணிக ரீதியாக மேலும் தீவிரமாகச் செயல்பட வேண்டும் என்று மஸ்க் ஒருமுறை வலியுறுத்தியதாகவும் அந்த அமைப்பின் மீது அதிகக் கட்டுப்பாட்டை விரும்பியதாகவும் அந்நிறுவனம் வாதிட்டது. OpenAI-ன் சட்டக் குழுவின்படி, உள்ளகக் கருத்து வேறுபாடுகளுக்குப் பிறகு மஸ்க் வெளியேறினார். இப்போது தனது சொந்த செயற்கை நுண்ணறிவு நிறுவனமான xAI, OpenAI உடன் நேரடியாகப் போட்டியிடுவதால் நிறுவனத்தைத் தாக்குகிறார் என்று எதிர்வாதம் செய்தது OpenAI.

ChatGPT மூலம் அன்றாட வாழ்வில் செயற்கை நுண்ணறிவுப் புரட்சியைக் கட்டவிழ்த்துவிட உதவிய நிறுவனம் இது. ஆனால், மனிதகுலத்தின் எதிர்காலத்திற்கான ஒருமித்த பார்வையை முன்வைப்பதற்குப் பதிலாக, ஒரு காலத்தில் OpenAI-ஐ ஒன்றாகக் கட்டியெழுப்பியவர்கள் இப்போது பொதுவெளியில் ஒருவரையொருவர் கிழித்தெறிகிறார்கள். எக்ஸ் தள நிறுவனர் எலான் மஸ்க்கிற்கும் OpenAI நிறுவனர் சாம் ஆல்ட்மேனுக்கும் இடையே அரங்கேறியிருப்பது அதிகாரம், அறநெறி, பணம், நம்பிக்கை ஆகியவற்றின் மீதான ஒரு தீவிரமான மோதல்.

செயற்கை நுண்ணறிவு, நாகரிகத்தையே மாற்றியமைக்கும் அளவுக்குச் சக்திவாய்ந்ததாக மாறும்போது அதை யார் கட்டுப்படுத்தப் போகிறார்கள்? அந்த அதிகாரத்தை யாரிடமாவது உண்மையிலேயே நம்பி ஒப்படைக்க முடியுமா? என்று யோசிக்க வைத்திருக்கிறது அண்மையில் இருவருக்குமிடையே நடந்த வாக்குவாதங்கள். இந்த விசாரணையில் உழைக்கும் மக்களான நடுவர் குழுவினர் அவர்களின் வாக்குவாதங்களை இரு கோடீஸ்வரர்களின் அகந்தைக்கு எதிரானதாக மட்டுமில்லாமல்

லாப நோக்கற்ற கொள்கைகள் vs. பெருநிறுவன யதார்த்தம்,

செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு vs. செயற்கை நுண்ணறிவு வணிகமயமாக்கலாகவும் பார்க்கிறார்கள்.

இதனால் இந்த வழக்கு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. எதிர்கால செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள் எவ்வாறு நிர்வகிக்கப்படும் என்பதை இது வடிவமைக்கக்கூடும்.

OpenAI-ன் கட்டமைப்பு மாறுமா, லாப நோக்கற்ற நிறுவனங்களிலிருந்து நிர்வாகிகள் லாபம் ஈட்ட முடியுமா, மைக்ரோசாஃப்ட் போன்ற பெரிய முதலீட்டாளர்கள் மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் மீது எவ்வளவு கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும் என்று நடுவர் குழு இவ்விஷயங்களில் செல்வாக்கு செலுத்தக்கூடும் என்பதால் செயற்கை நுண்ணறிவின் நெறிமுறைகளும் உரிமைகளும் குறித்த முதல் பெரிய நீதிமன்றப் போராட்டமாக இதைப் பலரும் உற்று நோக்குகின்றனர்.

நீதிமன்றத்திற்குள் செல்வமும் செல்வாக்கும் பெருமளவில் குவிந்திருந்ததும் இந்த வழக்கு விசாரணை பெரும் கவனத்தை ஈர்த்ததற்கு மற்றுமொரு மிக முக்கிய காரணம் ஆகும். சாட்சிகளின் பட்டியலோ சிலிக்கான் பள்ளத்தாக்கின் அதிகார மையத்தைக் காட்டும் ஒரு வரைபடத்தைப் போல இருந்தது. மைக்ரோசாஃப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெள்ளா, OpenAI இணை நிறுவனர் கிரெக் ப்ராக்மேன், முன்னாள் தலைமை விஞ்ஞானி இல்யா சுட்ஸ்கேவர், செயற்கை நுண்ணறிவின் எதிர்காலத்துடன் தொடர்புடைய பல உயர்மட்ட முதலீட்டாளர்கள் மற்றும் நிர்வாகிகள் இந்தப் பட்டியலில் இருந்தனர்.

சில சமயங்களில் இந்த வழக்கு விசாரணை ஒரு சட்ட நடவடிக்கையாகத் தோன்றாமல், தொழில்நுட்பம், பிரபல கலாச்சாரம், பெருநிறுவனப் போர் ஆகியவற்றுக்கு இடையேயான ஒரு மோதலைப் போலவே இருந்ததாகக் கூறப்படுகிறது. சட்டரீதியான வாதங்களுக்கு அடியில் இது வெறும் ஒரு நிறுவனப் பிரச்சினை மட்டுமல்ல. ஒரு காலத்தில் மிக நெருக்கமாக இருந்த எலான் மஸ்க், சாம் ஆல்ட்மேன் கூட்டணியின் சரிவாகவும் பார்க்கப்பட்டது.

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களும் சாட்சியங்களும், இரு தரப்பிலிருந்தும் நிலவிய ஆழ்ந்த பதற்றங்கள், தலைமைத்துவம் குறித்த கருத்து வேறுபாடுகள், சூழ்ச்சி குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்தின. மனிதகுலத்தைப் பாதுகாக்க OpenAI-ஐ உருவாக்க உதவியவராகவும், பின்னர் மற்றவர்கள் தனது தொலைநோக்குப் பார்வையைப் பணமாக்கியபோது தான் ஓரங்கட்டப்பட்டதாகவும் மஸ்க் தன்னைச் சித்தரிக்கிறார். இதற்கிடையில், “மஸ்க் வரலாற்றைத் திருத்தி எழுதுகிறார்” என்று ஆல்ட்மேனின் கூட்டாளிகள் கூறுகின்றனர்.

கருத்தியல் மோதல், நிறுவன அதிகாரம், தனிப்பட்ட அகந்தை, நட்பு பகையாக மாறியது, மனிதகுலத்தின் தொழில்நுட்ப எதிர்காலம் குறித்த அச்சங்கள் குறித்த உணர்ச்சிப்பூர்வமான பரிமாணம்தான் இந்த வழக்கு விசாரணையின் மீது பொதுமக்களும் ஆர்வம் கொள்ள காரணமாகும்.

“இவ்வழக்கு நடைபெற்ற நீதிமன்றத்தில் கோடீஸ்வர நிர்வாகிகள் நெரிசலான நீதிமன்ற இருக்கைகளில் தோளோடு தோள் உரசியபடி அமர்ந்திருந்தனர். தனிப்பட்ட குறுஞ்செய்திகளும் ரகசியக் குறிப்புகளும் நீதிமன்றத் திரைகளில் காட்டப்பட்டன. பாதுகாப்புக் குழுக்கள் தாழ்வாரங்களில் குவிந்திருந்தன. கோடீஸ்வரர்களுக்கு எதிரான பதாகைகளை ஏந்தியபடி போராட்டக்காரர்கள் வெளியே குழுமியிருந்தனர். மஸ்க்கை கேலி செய்யும் வகையில் ஊதப்பட்ட ராட்சச கேலிச்சித்திரங்கள் வைக்கப்பட்டிருந்தன” என்று செய்தியாளர்களும் காட்சிகளை விவரித்தனர்.

சாட்சியம் அளிப்பதே கூட அசாதாரணமானதாக மாறியது. OpenAI நிறுவனத்தில் சில நிர்வாகிகளின் பங்குகள் எதிர்காலத்தில் எவ்வளவு மதிப்புடையதாக இருக்கும் என்பது குறித்து வழக்கறிஞர்கள் வெளிப்படையாக விவாதித்தனர். தனது சொத்துக்களின் மதிப்பு இறுதியில் பல டிரில்லியன் டாலர்களை எட்டக்கூடும் என்று கிரெக் ப்ராக்மேன் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது!

பல பார்வையாளர்களுக்கு அந்த நீதிமன்றம் நவீன சிலிக்கான் பள்ளத்தாக்கின் ஒரு சின்னமாகவே மாறி, அளவற்ற செல்வம், லட்சியவாதம், அதிகாரம், தனிப்பட்ட போட்டி ஆகிய அனைத்தும் மோதிக்கொள்ளும் ஓர் இடமாகத் திகழ்ந்தது.

கலிஃபோர்னியாவில் நடைபெற்ற இந்த பரபரப்பான விசாரணையில் ரகசிய குறிப்புகள், பதற்றமான குறுஞ்செய்திகள், தனிப்பட்ட நாட்குறிப்புகள், உணர்ச்சிமிக்க ஒப்புதல்கள் யாவும் வெளிச்சத்துக்கு வந்தன. அவை அனைத்தும் AI உலகின் பின்னாலுள்ள அதிகாரப் போட்டி, பேராசை, துரோகம், உடைந்த உறவுகளை உலகிற்குக் காட்டின. மனிதகுலத்தின் நம்பிக்கையை OpenAI துரோகம் செய்துவிட்டதாக மஸ்க் வாதிட்ட நிலையில், உலக AI போட்டியில் நிலைத்திருக்க பெரும் முதலீடும் வணிகமயமாதலும் அவசியம் என OpenAI தரப்பு பதிலளித்தது. விசாரணை முன்னேறிச் செல்லும்போது நீதிமன்றம் வெறும் சட்டப் போர்க்களமாக மட்டும் இல்லாமல் நவீன உலகின் எதிர்காலத்தையே காட்டும் ஒரு சாளரம் போல காட்சியளித்தது. பில்லியன் டாலர் மதிப்பீடுகள், கசிந்த செய்திகள், பகிரங்கமான குற்றச்சாட்டுகளுக்குப் பின்னால், புரட்சிகரமான தொழில்நுட்பம், அளவற்ற செல்வம், மற்றும் கட்டுக்கடங்காத பேராசை ஆகியவை மோதும்போது என்ன நடக்கும் என்பது குறித்த ஒரு ஆழமான எச்சரிக்கை மறைந்துள்ளது. எலான் மஸ்க் ( எதிர்- Vs) சாம் ஆல்ட்மேன் இடையேயான வழக்கு, இனி இரண்டு சக்திவாய்ந்த மனிதர்களுக்கு இடையேயான ஒரு சாதாரண பகை அல்ல. அது, நெறிமுறைகள், பொறுப்புக்கூறல், மனித வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் பாதிக்கக்கூடிய தொழில்நுட்பங்களை யார் கட்டுப்படுத்த வேண்டும் என்பது குறித்த ஒரு உலகளாவிய விவாதமாக மாறியுள்ளது.

பல வாரங்கள் நடந்த வழக்கின் நீண்ட விசாரணைக்குப் பிறகு 2026 மே மாதத்தில் கூட்டாட்சி ஜூரி OpenAI மற்றும் சாம் ஆல்ட்மேனுக்கு சாதகமாக தீர்ப்பளித்தது. இது எலான் மஸ்க்கிற்கு பெரிய சட்டத் தோல்வியாக அமைந்தது. ஆனால் இந்த தீர்ப்பு முக்கியமாக “statute of limitations” எனப்படும் சட்ட ரீதியான கால வரம்பை அடிப்படையாகக் கொண்டது. OpenAI வணிகமயமாகி மைக்ரோசாஃப்டுடன் நெருக்கமாக இணைந்திருப்பதை மஸ்க் பல ஆண்டுகளுக்கு முன்பே அறிந்திருந்தார். இருந்தும் அவர் மிகவும் தாமதமாக வழக்கு தொடர்ந்ததாக ஜூரி கருதியது. அதாவது OpenAI தனது அடிப்படை இலட்சியத்தை ஒழுக்கரீதியாக துரோகம் செய்ததா என்பதை நீதிமன்றம் முழுமையாகத் தீர்மானிக்கவில்லை. மாறாக, மஸ்க்கின் சட்டப்பூர்வ புகார் தாமதமாக வந்துவிட்டது என்று மட்டுமே கூறியது. நீதிபதி யுவோன் கொன்சாலஸ் ரோஜர்ஸ் இந்த தீர்ப்பை ஏற்று மஸ்க்கின் கோரிக்கைகளைத் தள்ளுபடி செய்து OpenAI தனது தற்போதைய அமைப்பில் தொடர்ந்து செயல்பட அனுமதி வழங்கினார்.

வழக்கில் தோல்வியடைந்தபோதும் எலான் மஸ்க் உடனடியாக மேல்முறையீடு செய்யப் போவதாக அறிவித்தார். இந்த தீர்ப்பு லாப நோக்கமற்ற அமைப்புகள் பின்னர் லாப நோக்கமுள்ள நிறுவனங்களாக மாறுவதற்கு ஆபத்தான முன்னுதாரணமாக அமையும் என்று அவர் கூறினார். அதே நேரத்தில் OpenAI, தனது நடவடிக்கைகள் சட்டபூர்வமானவை. உலக AI போட்டியில் நிலைத்திருக்க அவசியமானவை என்பதை நிரூபிக்கும் வெற்றியாக இந்த தீர்ப்பைக் கொண்டாடியது. இந்த வெற்றி OpenAI-யின் எதிர்கால வணிகத் திட்டங்களையும் பாதுகாத்ததுடன், உலகின் மிகச் சக்திவாய்ந்த AI நிறுவனங்களில் ஒன்றாக அதன் நிலையை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

இறுதியில் OpenAI – மஸ்க் வழக்கு என்பது முன்னாள் கூட்டாளிகளுக்கிடையிலான ஒரு சாதாரண சட்டப் பிரச்சினையாக மட்டும் இல்லை. அது செயற்கை நுண்ணறிவின் எதிர்காலத்தை வடிவமைக்கும் மிகப்பெரிய அதிகாரப் போட்டிகளை வெளிப்படுத்தி இருக்கிறது. சாதாரண மக்களுக்கு இந்த வழக்கு எதிர்காலம் குறித்த ஒரு பெரிய கவலையைப் பிரதிபலிக்கிறது. செயற்கை நுண்ணறிவு ஏற்கனவே கல்வி, வேலைகள், படைப்பாற்றல், அரசியல், மனித தகவல்தொடர்புகளை மறுவடிவமைத்து வருகிறது. இந்த அமைப்புகளை உருவாக்கும் நிறுவனங்கள் விரைவில் பல அரசாங்கங்களை விட அதிக செல்வாக்கைப் பெறக்கூடும்.

அதன் சாராம்சத்தில், OpenAI வழக்கு விசாரணை என்பது வெறும் ஒப்பந்தங்கள், முதலீடுகள், பெருநிறுவனக் கட்டமைப்புகள் பற்றியது மட்டுமல்ல. இது சில ஆழமான நவீனக் கேள்விகளையும் முன்வைக்கிறது.

மேம்பட்ட செயற்கை நுண்ணறிவை யார் கட்டுப்படுத்த வேண்டும்? அரசுகளா, லாப நோக்கமற்ற அமைப்புகளா, மாபெரும் நிறுவனங்களா அல்லது பில்லியனர்களா?

லாப நோக்கற்ற அமைப்புகள் அறநெறிப்படி பெருநிறுவனங்களாக மாற முடியுமா?

செயற்கை நுண்ணறிவு மேம்பாட்டில் முதலீட்டாளர்களுக்கு எவ்வளவு செல்வாக்கு இருக்க வேண்டும்?

மனிதகுலத்தின் எதிர்காலத்தை மாற்றக்கூடிய தொழில்நுட்பங்கள் பொதுநலனுக்காக செயல்பட வேண்டுமா அல்லது நிறுவன லாபத்திற்காகவா?

மனிதர்களை விட அதிக சக்தி பெறக்கூடிய AI அமைப்புகளைத் தனியார் நிறுவனங்கள் பொறுப்புடன் கையாளும் என்று உலகம் நம்பலாமா?

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

18 வருடங்களுக்குப் பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கடந்த டிசம்பர் மாதம் ஊருக்குச் சென்றிருந்த பொழுது கோபுர...