Monday, October 16, 2023

என்னைப் பாடச் சொல்லாதே


அப்பாவின் நெருங்கிய நண்பர் கனிந்த முகமும், நெற்றியில் நாமமும் உயரத்திலும் குணத்திலும் வளர்ந்த மனிதர். "என்னடா கொழந்தே எப்படியிருக்க ? இந்தா" என்று கை நிறைய இனிப்பு பைகளுடன் வீட்டிற்கு வருவார். பாட்டியுடனும் அன்பாக பேசி விட்டுச் செல்வார். எங்களுடைய திருப்பதி பயணங்கள் பெரும்பாலும் அவர் குடும்பத்துடன் தான். முதன் முதலாக அவர் வீட்டிற்குச் சென்றிருந்த பொழுது பாடும்மா என்று மாமி சொல்ல... கணீரென்று அந்த அக்கா பாடிய பாடல்...

"மாணிக்க வீணையேந்தும் மாதேவி கலைவாணி
தேன் தமிழ் சொல்லெடுத்துப் பாட வந்தோம்
அம்மா பாட வந்தோம் அம்மா... பாட வந்தோம்
அருள்வாய் நீ இசை தர வா நீ..."

இனிமையாகப் பாடியதில் லயித்துப் போய் திறந்த வாயை மூட மறந்து கேட்டுக் கொண்டிருந்தோம். அந்த வயதில் தமிழ் பேசுபவர்களிடம் அதிகம் பழகியதில்லை. அவசியமும் இருந்ததில்லை. வேற்று மொழியில் பேசும் தயக்கம், அவர்களைப் போல் சரளமாகப் பேச முடியவில்லையே என்று பேசாமல் சிரித்தே சமாளித்த காலம்! அந்தக் குரலும் பாட்டும்... அசை போட்டுக் கொண்டே வீட்டிற்குத் திரும்பும் வழியில் அம்மாவிடம், " எப்படிம்மா இவ்வளவு நல்லா பாடுறாங்க?"

அவர்கள் சிறுவயதிலிருந்தே இசையைக் கற்றுக் கொள்கிறார்கள் என்றார். "அப்ப நீ ஏன் என்னைய மியூசிக் கிளாஸ்ல போடல?"
" நம்ம பழக்கம் கிடையாது 😞" அத்தனைக்கும் அம்மாவும் கேள்வியறிவில் கொஞ்சம் பாடுவார். முறையான பயிற்சி கிடைத்திருந்தால் நன்றாகப் பாடியிருப்பார்! ஆனாலும் மனம் தளராத விக்கிரமாதித்தன் மாதிரி நானும் பாட்டுப் புத்தகங்களை வாங்கி வரிகளை மனனம் செய்து பாடுவதாக நினைத்துக் கொண்டு வாசித்துக் கொண்டு தானிருந்தேன்!

மேல்நிலைப்பள்ளியில் ம்யூசிக் கிளாஸ் என்று ஒன்று இருந்தது. பரவாயில்லையே நமக்கும் ஒரு சான்ஸ் கிடைச்சிடுச்சு என்று ஆர்வத்துடன் வகுப்புக்குச் சென்றேன். சுருட்டை முடி, வைரத்தோடு, முத்து மூக்குத்தி, அன்றலர்ந்த பூவைச் சூடி 'பளிச்'சென்று மங்களகரமான ஆசிரியை. பேசுவதே பாடுவது போல் இருந்தது. மரத்தடியின் கீழ் வகுப்பு. சிலுசிலு காற்று.

"ம்ம்ம். எழுதிக்கோங்க.

"பொன்னார் மேனியனே புலித் தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை யணிந்தவனே
மன்னே மாமணியே மழ பாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே..."

என்று தேவாரப் பாடல் ஒன்றை அவர் சொல்லச் சொல்ல நாங்களும் எழுதிக் கொண்டோம். அதற்குப் பிறகு அவர் பாடினாரே பார்க்கலாம்! அய்யோடா! டீச்சர் மாதிரி பாட முடியுமா என்ற ஐயத்துடன் ... எங்க பாடுங்கன்னு சொல்லவும் கோரஸாக "பொன்ன்ன்ன்ன்ன்ன்ஆஆஆஆர் மேஏஏஏஏஏஏஏஏனியனே" என்று நாங்கள் கத்தி கூப்பாடு போட்டு இழுக்கவும் பாவம் பயந்தே போய் விட்டார். நாங்களும் என்ன வைத்துக் கொண்டா வஞ்சனை செய்தோம்? பாடுவது போல் நினைத்துக் கொண்டு தான் பாடினோம். அவருக்குத் தான் அது கர்ண கொடூரமாக கேட்டிருக்கிறது 😞

அவரும் எங்களை எப்படியாவது பாட வைத்து விட வேண்டும் என்று அடுத்தடுத்த வகுப்புகளில் கடும் முயற்சி செய்து பார்த்தார். சிந்து பைரவி படத்தில் சிவகுமாரிடம் பேட்டியெடுப்பவர் 'உங்கள் மனைவியின் சங்கீத ஞானம்' என்று கேட்க... வெளியில் தள்ளு வண்டியில் காய்கறி விற்பவரிடம் சுலக்ஷ்னா 'கிலோ என்ன விலைப்பா?' என்று கேட்பதைப் போல் தான் இருந்தது எங்கள் சங்கீத ஞானமும்.

ஒரு வழியாக இந்த ஞான சூன்யங்களுக்கு ஒன்றும் கற்றுத்தர முடியாது என்று வெறுத்துப் போய் தேசிய கீதமாவது ஒழுங்காக பாடித் தொலைக்கட்டும் என்று பாடச் சொல்லிக் கொடுத்தார். 'ஜன கண மன அதி...' என்று பாடத் துவங்கினாலே அவர் கஷ்டப்படுவதை நாங்களும் உணர்ந்தோம். விதி வலியது!

எனக்கு பாட்டு வந்ததோ இல்லையோ ஆனால் அந்த ஆசிரியைப் போல் பாடிக் காண்பித்து மிமிக்ரி செய்ய மட்டும் வந்தது. இந்த நக்கல் பண்ற வேலையை விட்டு விட்டு ஒழுங்காக கற்றுக் கொண்டிருந்துக்கலாம். ஹ்ம்ம்...

இன்று வரை விடாமுயற்சி தான். நான் சத்தம் போட்டுத் தான் பாடுவேன்ன்னு பாடினாலும் பாடுற மாதிரி வாசித்தாலும் சுப்பிரமணி இருந்தால் மட்டும் கொஞ்சம் அடக்கி வாசிக்கிறது. 
"உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும் 
என்னைப் பாடச் சொன்னால் என்ன பாடத் தோன்றும்"னு பாடுவதை கேட்கச் சகிக்காமல் "பாட்டு கிளாஸ் வேணா போயேன்" என்று இவரும் ஏதோ திட்டம் போடறார். ஐயோ பாவம் அந்த பாட்டு டீச்சர். பொழைச்சுட்டுப் போகட்டும். நம்மளால அநியாயத்துக்கு ஒரு உயிர் பலியாகக் கூடாது.

ஆதலால் கொலுவுக்கு என்னை அழைத்த நண்பர்கள் என்னைய பாடச் சொல்லி வற்புறுத்தாதீங்க. அப்புறம் நான்....
.

Saturday, October 14, 2023

தெற்கு கிருஷ்ணன் கோவில்

இன்று புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை.


பெருமாளைத் தரிசிக்க கோவில்களில் கூடும் கூட்டத்தைப் பற்றி கேட்கவா வேண்டும்? எம் சமூகத்து மக்கள் வீடுகளில் 'தசல்' விருந்துகள் களை கட்டும். என்ன தான் எம் முன்னோர்கள் குஜராத்தில் சோம்நாத் கோவில் இருக்கும் பகுதியிலிருந்து புலம்பெயர்ந்திருந்தாலும் ஆந்திராவில் பல வருடங்கள் தங்கியிருந்து தமிழ்நாடு வந்ததாலோ என்னவோ பெருமாள் கோவில்களைத் தான் தமிழகத்தில் கட்டி வழிபட்டு வருகிறோம். மதுரையில் தெற்கு கிருஷ்ணன் கோவில், ஆஞ்சநேயர், திரௌபதி, ஸ்ரீனிவாசப் பெருமாள் கோவில் என்று வைணவ கோவில்கள் தான் அதிகம் நாங்கள் சென்று வரும் கோவிலாக இருக்கிறது. சிவன் கோவில்கள் கட்டாவிட்டாலும் மதுரையிலும் சுற்றி இருக்கும் சிவன் கோவில்களிலும் நிறைய கைங்கர்யங்கள் செய்திருக்கிறார்கள். செய்து கொண்டும் இருக்கிறார்கள்.

மதுரையில் அரசமரம் பகுதியில் பிறந்து வளர்ந்ததால் முனிச்சாலை அருகில் இருக்கும் ஸ்ரீநிவாச பெருமாள் கோவிலுக்கு அடிக்கடி குடும்பத்தோடு செல்வது வழக்கம். அதுவும் தாத்தாவின் நினைவு நாளில் அவர் பெயரில் கட்டளை பூஜை நடைபெறும். தவறாமல் கலந்து கொள்வோம். அப்பாவிற்கு மரியாதை செய்வார்கள். தம்பிகளுக்கும் பரிவட்டம் கட்டுவார்கள்! ஆணாதிக்க உலகமடா! சிறிய கோவில் தான் என்றாலும் அலங்காரத்திற்கும் பூஜைகளுக்கும் குறைவிருக்காது. அன்றைய நாட்களில் அங்கு தான் ஒவ்வொரு பௌர்ணமிக்கும் பூஜை செய்ய பெண்கள் கூடுவார்கள். அருகில் நெசவாளர்கள் குடும்பங்கள் அதிகம். அதனால் ஆர்ப்பாட்டமில்லாத கோவிலாக எளிமையாக இருந்தது. தற்பொழுது கோவில் முன்னை விடச் சிறப்பாக இருக்கிறது. மகள் முதல் முறை சென்று விட்டு இந்தக் கோவிலுக்கு இதற்கு முன்பு நாம் சென்றதில்லையே என்று கேட்டாள்😑 நானும் சென்று பலவருடங்களாகி விட்டது. அடுத்த முறை கண்டிப்பாகச் செல்ல வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.

பாட்டி(அம்மாவின் அம்மா) இருந்த வீட்டிலிருந்து ஐந்து நிமிடத்தில் “வெட தெளரோ” என்று சௌராஷ்டிரா மக்களால் அன்புடன் அழைக்கப்படும் 'தெற்கு கிருஷ்ணன் கோவில்' இருக்கிறது. பாட்டி வீட்டிற்கு அருகிலிருந்ததால் காலையில் சுப்ரபாதம் பாடி பெருமாளை எழுப்புவதிலிருந்து இரவு பள்ளி கொள்ளும் பூஜை வரை பார்த்திருக்கிறேன். சென்ற வருடம் நாங்கள் சென்றிருந்த பொழுது கணவரின் குடும்பத்தினர் (ஒப்ளா) சார்பாகச் சிறப்புப் பூஜை என்று அங்குச் சென்ற பிறகு தான் தெரிந்தது. அதற்குப் பிறகு அவருக்குப் பரிவட்டம் கட்டி மாலையிட்டு பெருமாளுக்குப் பூஜை செய்வதைக் கண்குளிர தரிசித்தோம். மூலவர் பிரசன்ன வேங்கடேச பெருமாளுக்கு என்றும் திவ்ய அலங்காரம். என் சிறுவயதில் பார்த்த பட்டர். இப்பொழுது அவருக்கும் வயதாகி அடுத்த தலைமுறை பட்டர்களும் வந்து விட்டார்கள். அந்தக் கோவிலின் ஆஞ்சநேயர் அத்தனை அழகு. சிறுவயதில் "மொட்ட்ட்ட்ட ஹன்மந்து" என்று வியந்து பார்ப்போம். இன்றும் அப்படியே! நான் அகலத்தில் வளர்ந்திருக்கிறேன். ஆனாலும் அந்த இடுக்குச் சுற்றில் நுழையமுடிகிறதே என்ற ஆறுதல்😜 கோவிலில் நுழைந்தவுடன் வைணவ பிள்ளையார்! கம்பீரமாக நாமம் போட்டுக்கொண்டு. எதிரில் இருக்கும் மண்டபத்தில் தான் 'பொஸ்கன்னோ' என்ற பெண்கள் மட்டும் கலந்து கொள்ளும் கோலாட்டம் கோலாகலமாக நடைபெறும். அதனால் தான் எங்களவர் திருமணங்களில் பெண்ணிற்குப் புகுந்த வீட்டிலிருந்து கொடுக்கும் சீரில் கோலாட்ட குச்சிகள் இருக்கும். முன்பு கண்ணாடிக் குடுவைகளுக்குள் விளக்குகள் அழகாக கவரும் விதத்தில் இருந்ததை மாற்றியிருக்கிறார்கள். அதை எடுக்காமலே விட்டிருக்கலாம். அத்தனை அழகாக இருக்கும்!

தாயார், ஆண்டாள், சக்கரத்தாழ்வார், ராமர், லட்சுமணர், சீதாதேவி, பள்ளி கொண்ட பெருமாள், பளிங்கினால் செய்த ராதாகிருஷ்ணன், லட்டு கோபால், லட்சுமி, ஹயக்ரீவர், நரசிம்மர், கருடன், நவக்கிரக சன்னதிகளும் இக்கோயிலில் உள்ளன.

மார்கழி மாதத்தில் சொர்க்கவாசல் திறப்பு நேரத்தில் நல்ல கூட்டம் இருக்கும். கோவிலுக்கென்று அழகான யானை இருந்தது. யானை மறைந்த பிறகு அதன் இடமும் இப்பொழுது மாறிவிட்டிருக்கிறது. கருப்பண்ணசாமியை வணங்கி கோவிலுக்குச் சென்று வரும் பக்தர்கள் கூட்டம் மட்டும் மாறவில்லை. சித்திரைத்திருவிழா போன்றே பத்து நாட்கள் நடக்கும் பங்குனி மாதத்தில் நடக்கும் "வெட தௌரா தின்னாள்" சுவாமி புறப்பாட்டுடன் கோலாகலமாக தெற்கு மாசி வீதி, தெற்குவாசல் பகுதிகளில் சிறப்பாக நடக்கிறது.

இன்றும் கோவிலில் தினமும் குடும்பங்கள் பலரும் கட்டளை பூஜைகள், சிறப்பு தின பூஜைகள் என்று களை கட்டுகிறது. தங்க ரதத்தில் ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் பெருமாள் வலம் வந்து கொண்டிருக்கிறார். எத்தனை தொலைவிலிருந்தாலும் ஊருக்குச் சென்றால் பலரும் தவறாமல் சென்று வரும் கோவில். எதிரே இருக்கும் மண்டபத்தில் வருடாவருடம் மும்மூர்த்திகளின் இசை விழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். சிறப்பான விருந்து. அதற்காகவே மக்கள் கூடுகிறார்கள்! இந்தக் கோவிலின் மற்றுமொரு சிறப்பு சுவையான பொங்கல், வடை பிரசாதங்கள்! ம்ம்ம்ம்ம்😇

மதுரையில் நாயக்கர் மகாலைச் சுற்றி இருந்த எம் சமூக மக்கள் இப்பொழுது மதுரையைச் சுற்றிப் பரவலாக வில்லாபுரம், அவனியாபுரம், திருநகர், கிருஷ்ணாபுரம் காலனி, விரகனூர் என்று புறநகர் பகுதிகளுக்கு குடி பெயர்ந்துள்ளார்கள். சென்ற இடங்களில் எல்லாம் விநாயகர், பெருமாள் கோவில்கள் கட்டி பூஜைகள், அன்னதானங்கள், உபன்யாசங்கள் என்று குறைவில்லாமல் மனதிருப்தியுடன் வாழ்கிறார்கள். புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையன்று வில்லாபுரத்தில் இருக்கும் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவில் உற்சவர் கருட வாகனத்தில் மக்கள் தங்கியிருக்கும் குடியிருப்புகளுக்கு உலா வந்திருக்கிறார். குட்டித் திருவிழாவாகக் கொண்டாடியிருக்கிறார்கள். இது மெல்ல மெல்ல இனி பெருந்திருவிழாவாக மாறும். எங்கு சென்றாலும் குடும்பங்களை அழைத்து உற்றார், உறவினர்களுடன் திருவிழா கொண்டாட மக்கள் தவறுவதில்லை. எதையோ நோக்கி நித்தம் ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் இத்தகைய திருவிழாக்களும் குடும்ப சந்திப்புகளும் எத்தகைய பலம் என்பது தொலைவில் இருப்பவர்களுக்கு நன்கு புரியும்.

எல்லோரும் கொண்டாடுவோம்!

ஓம் நமோ நாராயணய🙏

Friday, October 13, 2023

அழகர் கோவில் -பழமுதிர்சோலை-ராக்காயி அம்மன் கோவில்


அழகர்மலையில் அழகர் மட்டுமல்ல, அறுபடை வீடுகளுள் ஒன்றான பழமுதிர்ச்சோலையும் நூபுரகங்கை தீர்த்த மண்டபமும் ராக்காயி அம்மன் கோவிலும் இருக்கிறது. கீழே பெருமாள் கோவிலில் இருந்து நூபுரகங்கைக்குச் செல்ல சாலை அமைப்பதற்கு முன்பு கோவிலின் பக்கவாட்டிலிருக்கும் மலைப்பாதையில் தான் செல்ல வேண்டும். வழியில் பாசி படர்ந்த குளம் ஒன்றில் நீச்சல் அடித்துக் கொண்டிருக்கும் மனிதர்களை வியப்போடு பார்த்துக் கொண்டே செல்வோம். மலையிலிருந்து தண்ணீர் வழிந்தோடும் பாதைகளில் நடந்து செல்ல வழியில் பாம்புத்தோல்களைப் பார்த்தவுடன் பயம் வருமே பார்க்க வேண்டும்! பாம்பு அருகில் தெரிகிறதா என்று கவனமாக அடியெடுத்து வைத்து சாலையை அடைந்ததும் கொஞ்சம் நிம்மதியாக இருக்கும். அங்கிருந்து மந்திகளின் ராஜ்ஜியம் தான். கூட்டம்கூட்டமாக உட்கார்ந்து கொண்டு வருவோரைப் போவோரைப் பார்த்துக் கொண்டு இருக்கும். நம் மக்கள் பாவமே என்று எதையாவது உண்ணக் கொடுப்பார்கள். 'கீச்கீச்' என்று கத்திக் கொண்டே பங்கு போட்டுக்கொள்வார்கள். பழமுதிர்சோலை வருவதற்கு முன் கொடுக்காப்புளி, நெல்லிக்காய், மாங்காய் இத்யாதிகளை சாக்குப்பையில் விரித்து விற்பனை செய்துகொண்டிருப்பார் ஒரு பெண்மணி. நாங்களும் அவரவர்க்குப் பிடித்ததை வாங்கிக் கொண்டு சட்டைப்பையில் மறைத்து வைத்துக் கொள்வோம். இல்லையென்றால் பிடுங்கிக் கொண்டு போய்விடுவானே? குரங்குகள் வேறு நம்மையே பார்ப்பது போல இருக்கும்.

பக்தர்களின் வசதிக்காகச் சாலைகள் போட்டு முதலில் தேவஸ்தான பேருந்து, வேன்களை விட்டார்கள். இப்பொழுது எல்லா தனியார் வண்டிகளையும் அனுமதிக்கிறார்கள். அதனால் புழுதியைக் கிளப்பிக்கொண்டு பிசியாக இருக்கிறது அந்தப்பாதை. வழியெங்கும் குரங்குகள் சாலையில் அமருவதும் வண்டிகளைக் கண்டவுடன் ஒதுங்குவதுமாய் பாவம்! அவர்களுடைய இடங்களை நாம் ஆக்கிரமித்துக் கொண்டு அவர்களை மிரட்டிக் கொண்டிருக்கிறோம்.

சிறிது நேரத்தில் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர்சோலை வந்து விடும். "இரு முருகா! குளித்து விட்டு வந்து கும்பிடறோம்" என்று மேட்டுப்பகுதியில் ஏற, 'ஏத்தமய்யா ஏத்தம்' என்று மூச்சு வாங்கும். வண்டிகள் இல்லாது நடந்து மட்டுமே செல்ல முடிந்த காலகட்டத்தில் இரைச்சல், புகைச்சல் எல்லாம் இல்லை. நிறைய மரங்கள் இருக்கும். இன்றும் இருக்கிறது. ஆனால் அடர்த்தி குறைந்து விட்டது. ஒரு மழைக்காலத்தில் அன்றைய அழகர்மலை போல் தெரிந்தது. மழை குறைந்த வருடங்களில் வறண்ட மணலும் மரங்களும் பார்ப்பதற்கே கொடுமையாக இருக்கும். சென்ற வருடம் இதே மாதத்தில் நாங்கள் சென்றிருந்த வேளையில் நல்ல மழை! 'குளுகுளு'வென்று அழகர்மலை அழகாகப் பசுமையைப் போர்த்தியபடி கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

இருசக்கர மோட்டார் வாகனங்கள், கார்கள் பெருகி விட்டிருக்கிறது. நூபுர கங்கைத் தொட்டிக்குச் செல்ல படியேறுவதற்கு முன் வரிசையாக நிறுத்தி வைத்திருந்தார்கள். கண்ணாடியில் முக அழகை ரசித்தபடி மந்திகள் கூட்டம். அழகோ அழகு! அந்த' காட்டுப்பகுதியில் விளையும் மூலிகைகளைப் பட்டியல் போட்டு வைத்திருக்கிறார்கள். ஒருமுறை காலை 6.30மணிக்குச் சென்றிருந்த பொழுது 'ஜேஜே' என்று மரங்களில் தலைகீழாகத் தொங்கிக் கொண்டு வௌவால்கள் கூட்டம்! பொறுமையாகக் காத்திருந்தால் பறவைகள் சிலவற்றையும் பார்த்திருந்திருக்கலாம்.

சூடாக வடை, பஜ்ஜி, காபி விற்கும் கடையில் ஜோராக வியாபாரம் நடந்து கொண்டிருந்தது. அந்தக் காலத்திலிருந்து இருக்கிறது! எதையும் விட்டு வைப்பதில்லை. சாப்பிட்டு விட்டுப் படியேறினால் ஆங்காங்கே உட்கார்ந்திருக்கும் மந்திகளைப் பார்த்து கொஞ்சம் பயம் வரத்தான் செய்கிறது. பைகளை எடுத்துச் சென்றால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மேலே சென்றால் பொரிகடலை, பூஜைப்பொருட்கள், தீர்த்தம் எடுத்துச்செல்ல பிளாஸ்டிக் கேன்களை விற்கும் கடைகள் இருக்கும். அங்கிருக்கும் குரங்குகள் கடைக்காரர்களுடன் மிக நெருக்கமாக இருக்கிறது! அவர்களும், "வந்து வாங்கிக்கோடா!" என்று நண்பனை அழைப்பது போல் அழைக்கிறார்கள். நம்மூரில் நாய்களும், குரங்குகளும் மனிதனின் செல்லப்பிராணிகளாகவே மாறிவிட்டிருக்கிறது!

சிறுவயதில் 'கிடுகிடு'வென்று ஏறிய படிகள் தான். 100 படிகள் இருக்குமா? இப்பொழுதெல்லாம் பாதி தூரம் வரை ஏறி விட்டு நிமிர்ந்தால் இன்னும்ம்ம்ம்ம்ம் இத்தனை படிகளா! என்று மலைப்பாக இருக்கிறது. மாறாத படிகள்! மாறிய மனிதர்கள்! ம்ம்ம்ம்ம்! கூட்டமில்லாத நேரத்தில் தீர்த்தத்தொட்டிக்குச் சென்றால் குளித்துக் கொண்டே இருக்கலாம். இனிப்புச்சுவையுடன் தீர்த்தம் குடித்தாலே நகரத்தில் கிடைக்கும் தண்ணீர் எத்தனை வித்தியாசமாக இருக்கிறது என்றுதெரியும். வருடம் முழுவதும் கிடைக்கும் சுனைநீர் அல்லவா? 'லா...லாலா லா... லலலலா லா..லா...லா...' என்று குளியல் போட்ட நாட்கள் எல்லாம்... ஞாபகம் வருதே ஞாபகம் வருதே! அருகிலேயே கிணற்றிலிருந்து வாளியில் நீரை இறைத்துத் தலையில் ஊற்றுவார்கள். இப்பொழுது குழாய் வசதிகள் வந்து விட்டிருக்கிறது. மேலே உடைமாற்றும் இடங்களில் சிறிது மாற்றங்களைச் செய்திருக்கிறார்கள். ஆனாலும் சுத்தம் இல்லாதது போலவே இருக்கிறது😓 பூக்கடைகளைத் தாண்டிச் சென்றால் ஏக அலங்காரத்துடன் 'ராக்காயி அம்மன்'. கிராமத்து தெய்வம். முன்பு மிகச்சிறிய கோவிலாக இருந்தது. இப்பொழுது பெரியதாகி வசூல்மன்னர்களும் அதிகமாகி...ஹ்ம்ம்ம் !

விடுமுறையில் ஒருநாள் மட்டும் வரும் நாட்களில் பாட்டி, பெரியம்மாக்கள் குடும்பத்துடன் வந்தால் நேராக இங்கே வந்துவிடுவோம். பெரிய பெரிய தூக்குச்சட்டிகளில் சாப்பாடு. பெரியம்மாக்கள் கொண்டு வரும் மெத்துமெத்து மல்லிகைப்பூ இட்லி, மணமணக்கும் தக்காளி குழம்பு, நெய் வழிய இஞ்சி, மிளகு, சீரகம், பெருங்காய வாசனையுடன் 'சௌராஷ்ட்ரா ஸ்பெஷல்' வெண்பொங்கல், 'புடித்' (கத்திரிக்காய் சட்னி) தொட்டுச் சாப்பிட காலை உணவு. ஆகா! தெய்வம் இருப்பது எங்கே? அது இங்கே! என்று பாடலாம். அத்தனை ருசியாக இருக்கும். கூடவே ரவா கேசரியும் வடையும்ம்ம். வாழை இலையில் தான் சாப்பாடு! இருவர் குரங்குகளை விரட்டி விட, மற்றவர்கள் சாப்பிட்டு முடிப்போம். எவ்வளவு சாப்பிட்டும் எடை ஏறாமல் கலோரி பார்க்காமல் சாப்பிட்ட காலங்கள் தான் எத்தனை ஆனந்தமானவை! ஹ்ம்ம்... பார்த்தாலே தன்னாலே பத்து பவுண்டு ஏர்றதெல்லாம் கொடுமையிலும் கொடுமை😔 என்னவோ போடா மாதவா!

அதன் பின் கொஞ்ச நேரம் ஆசுவாசப்படுத்திக் கொண்ட பிறகு ஆனந்த குளியல். கொஞ்சம் அரட்டை, வம்பு தும்பு. விளையாட்டு. அதற்குள் பசிக்க ஆரம்பித்து விடும். அடுத்தவேளைச் சாப்பாட்டிற்குத் தயாராகி விடுவோம். அம்மா 'அம்பட்பாத்' (புளியோதரை) அருமையாகச் செய்வார். சுண்டல், முறுக்கு, பட்டர்சேவு, 'கொழிஞ்சி' , தயிர்சாதம் என்று கழுத்து வரை சாப்பிட்டு விட்டுப் பெரியவர்கள் மெதுவாகச் சயனிக்க, நாங்கள் ஓடியாடி விளையாட... மாலை நெருங்கும் வேளையில் அதிரசம், முறுக்குத் தீனிகளை நொறுக்கி விட்டு அங்கிருந்து புறப்படுவோம். வரும்பொழுது அதிக எடையுடன் இருந்த பாத்திரங்கள் எடை குறைந்திருக்கும். கீழே இறங்கி வந்தவுடன் காபி குடித்து விட்டு "சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?" என்று ஒளவைக்குச் சுட்டிக்காட்டிய முருகனைத் தரிசிக்க கிளம்பிவிடுவோம். வள்ளி தெய்வயானையுடன் 'அழகென்ற சொல்லுக்கு முருகா'. திவ்யமாக காட்சி தந்து கொண்டிருப்பார். முன்பு சிறிய கோவிலாக இருந்தது. இப்பொழுது பெரிய மண்டபங்கள் கட்டி தங்கத்தேர் வரை வளர்ந்திருக்கிறது இத்தலம். மாலை மங்கி இருள் கவிழ்வதற்குள் வந்த வழியே இறங்கிவிடுவோம். மந்திகளும் அவர்கள் இடத்திற்குச் சென்று கொண்டிருப்பார்கள். பெருமாளைத் தரிசித்து விட்டு அழகர் கோவில் தோசையை வாங்கி கொண்டு மீதமிருக்கும் உணவை உண்டு முடிப்போம். பாத்திரங்கள் காலியாக அத்தனை தூக்குச் சட்டிகளிலும் தீர்த்தம் நிரம்பி வழிய ஊர் திரும்ப பேருந்திற்காக காத்திருப்போம். பொதுவாக கடைசிப் பேருந்தில் தான் செல்வோம்.

அங்கேயே தங்குவதாக இருந்தால் சத்திரத்திற்குள் சென்று நிம்மதியான நித்திரை தான்!

ஒவ்வொரு முறை அழகர்கோவிலுக்குச் செல்லும் பொழுதெல்லாம் இந்த இனிய நினைவுகள் வந்து செல்லும். மனிதர்கள் மறைந்தாலும் அவர்களுடன் வாழ்ந்த இன்பமான நாட்கள் தான் நம்மை உயிர்ப்புடன் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.

பள்ளியிலிருந்து தாவரவியல் ஆசிரியையுடன் சென்று பல மரங்களிலிருந்து இலைகளைச் சேகரித்து அவற்றைப் பற்றி அவர் ஆர்வம் பொங்க கற்றுக்கொடுத்ததும்... எத்தனை நல்ல ஆசிரியர்களைத் தந்தாய் இறைவா!

கல்லூரி இறுதி ஆண்டில் எங்கள் வகுப்பில் இருந்து எல்லோரும் சென்று வந்த இனிய நினைவுகள் 'ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே!'

Wednesday, October 11, 2023

டிஜிட்டல் தலைமுறை. எங்கள் தலைமுறை


இன்று பெண்கள் பலதுறைகளில் முன்னேறிக் கொண்டிருந்தாலும் அவர்களுக்கான பிரச்சினைகளும் வளர்ந்து கொண்டே தான் இருக்கிறது. உலகளவில் பெண்கள் போராடிவரும் சவால்களை எதிர்கொள்ளவும் பெண்களுக்கான அதிகாரங்களை வழங்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை டிசம்பர் 19, 2011 அன்று ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தது. சமூகத்தில் பெண் குழந்தைகளின் வளர்ச்சிக்கான பாதைகளை அறிமுகப்படுத்தி உரிமைகளை அறிந்து கொள்ளும் விதமாக அக்டோபர் மாதம் 11ம் தேதியை 'சர்வதேச பெண் குழந்தைகள் தினமாக' அறிவித்தது.

பருவ வயதுப் பெண்களுக்கான திறமைகளை, வாய்ப்புகளை ஊக்குவிப்பதன் மூலம் அவர்களின் வாழ்க்கை மேம்படும். சமூகத்திற்கும் நல்லது. குழந்தைத் திருமணங்கள், மறுக்கப்படும் கல்வி வாய்ப்புகள், பாலியல் வன்முறை, பாகுபாடு உட்பட, உலகம் முழுவதும் சிறுமிகள் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்நோக்கவும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த நாளில் பல கருத்தரங்குகள், விழாக்கள் நடத்தப்படுகிறது.


இன்றைய இணைய உலகில் பெண் குழந்தைகள் எதிர்கொள்ளும் அபாயங்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து இந்த வருடத்தின் கருப்பொருளாக "டிஜிட்டல் தலைமுறை. எங்கள் தலைமுறை" என்ற தலைப்பில் பாதுகாப்பான வழியில் இணையத்தில் வலம் வர விழிப்புணர்வை ஏற்படுத்துவது தான் நோக்கம். காலத்தின் கட்டாயமும் கூட. இதில் அரசு, கல்விநிலையங்களின் பங்கும் பெற்றோர்களின் புரிதலும் வழிகாட்டுதலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் பெண் குழந்தைகளுக்கு அவசியமாகிறது.

பருவ வயதுப்பெண்களுக்கும் பாதுகாப்பான கல்வியறிவு, ஆரோக்கியமான வாழ்க்கைக்கான உரிமை உள்ளது. இளம்பருவத்தில் திறம்பட ஆதரிக்கப்பட்டால், தங்களுக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் அழகான ஒரு உலகத்தை உருவாக்கும் திறன்படைத்தவர்கள் ஆவார்கள்.

பெண் குழந்தைகளை ஊக்குவித்து அவர்களின் வாழ்வை மலரச்செய்யும் சமூகப் பெரும் பணி நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது. பெண்கள் வாழ்வை உயர்த்தி சமூகத்தினையும் உயர்த்திட வேண்டிய பாரதியின் கனவை நனவாக்குவோம்.

பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் -- புவி
பேணி வளர்த்திடும் ஈசன்;
மண்ணுக் குள்ளே சிலமூடர் -- நல்ல
மாத ரறிவைக் கெடுத்தார்.

கண்கள் இரண்டினில் ஒன்றைக் -- குத்திக்
காட்சி கெடுத்திட லாமோ?
பெண்க ளறிவை வளர்த்தால் -- வையம்
பேதைமை யற்றிடுங் காணீர்!

-பாரதி






அழகர்கோவில்

புரட்டாசி மாத சனிக்கிழமை என்றாலே பெருமாள் கோவில்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். அதுவும் 'திவ்யதேச' கோவில்கள் என்றால் கேட்கவே வேண்டாம். 108 திவ்யதேசங்களில் ஒன்றான அழகர்கோவில் மதுரையிலிருந்து 21கிமீ தொலைவில் இருக்கிறது.

மதுரையில் இருக்கும் கோவில்கள் ஒவ்வொன்றும் என் சிறுவயது நினைவுகளுடன் அதிக தொடர்புடையவை. ஒவ்வொரு முறை ஊருக்குச் செல்லும் பொழுதெல்லாம் அங்குச் சென்று வந்த இனிய நாட்களை, அனுபவங்களை நினைத்துப்பார்க்க, பாட்டி, அப்பா என இழந்துவிட்ட உறவுகள் மீண்டும் உயிர்பெற்று வருவார்கள் (மகாளயபட்ச காலம் வேறு தொடங்கி விட்டது!) அந்த வகையில் அழகர்கோவிலும் என் மனதிற்கு மிக நெருக்கமான கோவில்.

ஒரு மாத கால பள்ளி கோடை விடுமுறைகளில் பாட்டி(அங்கெர்அம்போ, அம்மம்மா) எங்களை அழைத்துச் செல்லும் இடங்கள் பெரும்பாலும் கோவில்களாகத் தான் இருக்கும். திருப்பரங்குன்றம், நரசிங்கம்பட்டியில் ஓரிரு நாட்கள் தங்கி இருந்தாலும் அதிக நாட்கள் குடும்பத்துடன் தங்கி இருந்தது அழகர் கோவிலில் தான். இப்பொழுது நினைத்துப் பார்த்தால் புலம்பெயர்ந்த எம் சமூக மக்கள் அன்றே பெரிய பெரிய சத்திரங்களைக் கோவில்கள் அருகே கட்டி திருவிழா வைபவங்களில் அங்கம் வகித்திருக்கிறார்கள். பெருமையாக இருக்கிறது!

விடுமுறையில் அழகர்மலைக்குச் செல்வதென்றால் ஒரே 'ஊஊலலலா' மொமெண்ட்ஸ் தான் எனக்கு. எத்தனை நாட்கள் தங்கப்போகிறோமோ அதற்குத் தேவையான உணவுப்பொருட்கள், சிறு தீனி மூட்டைமுடிச்சுகளுடன் புறப்பட்டு விடுவார் பாட்டி. அம்மா தன் பங்கிற்கு ஏராளமான நொறுக்குத் தீனிகளை வாங்கிக் கொடுத்துவிடுவார். அதிகாலையில் வெயில் பட்டையைக் கிளப்புவதற்கு முன்பே கிளம்பிவிடுவோம். மிஷன் ஆஸ்பத்திரி பேருந்து நிறுத்தத்தில் கூட்டமில்லாத 44ம் பேருந்தில் ஜன்னலோர இருக்கை கிடைத்து விட்டால் போதும். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரி ஆகிவிடுவேன். அப்புறம் என்ன? ஒரே வேடிக்கை தான். மனதில் எந்தவித கவலையுமில்லாமல் அந்தந்த நொடிகளில் வாழும் சுகம் இருக்கே! அனுபவித்தே உணர வேண்டியது. எல்லோரும் சேர்ந்து உட்கார வேண்டும் என்று பாட்டி சொல்ல, ஆளுக்கொரு ஜன்னல் இருக்கையில் அமர்ந்து அவருக்கு அப்பொழுதிருந்தே தலைவலி ஆரம்பித்துவிடும்😜 சொல்ற பேச்சைக் கேட்குதுங்களா? என்று ஆரம்பித்து விடுவார். அதில் தம்பிகள் வேறு ஆண்கள் இருக்கைப்பக்கம் அமர்ந்து கொள்ள, நடத்துனரிடம் சீட்டு வாங்க, அவர் எந்தெந்த இருக்கைகளில் அமர்ந்திருக்கிறோம் என்று சரிபார்த்து 'ர்ர்ர்ரைட் ரைட்' சொல்ல இனிமையான பயணம் துவங்கும்.

வெத்தலைப்பேட்டையில் பெரிய பெரிய பண்டல்களுடன் வாழைத்தார், பழக்கூடைகள், வெத்தலைக்கட்டுடன் வியாபாரிகள் பலரும் ஏற ஒரே தள்ளுமுள்ளாக இருக்கும். விவசாயத்திற்கு வேண்டிய அனைத்துப் பொருட்களும் விற்கும் கடைகளில் கிராமத்து மணம் வீசிக்கொண்டிருக்கும். கீழமாசி வீதியில், சிம்மக்கல்லில் தான் காய்கறி, பழ மண்டிகள் இருக்கிறது. மேம்பாலத்தைக் கடக்கையில் வைகை ஆற்றில் சுகமாக தலையை மட்டும் நீட்டி குளித்துக் கொண்டிருக்கும் எருமை மாடுகளும், பொதிகளைச் சுமந்து வந்த கழுதைகளும், 'உஜ்ஜாலா' இல்லாமல் வெண்மையில் பளிச்சிடும் கொடிகளில் உலரும் துணிகளும் துவைத்துக் கொண்டிருக்கும் வண்ணான்களுமாய் பிசியாக இருந்த இடம் இன்று சகதி, குப்பைக்கூளங்களுடன்! வாஷிங் மெஷின் வந்த பிறகு வண்ணான்கள் மறைந்து விட்டார்கள். கழுதைகளும் தான். அதிர்ஷ்டம் இருந்தால் வைகையில் தண்ணீரைப் பார்க்கலாம். மாலை/இரவு நேரங்களில் ஒளிவிளக்குகள் மின்ன அருமையாக இருக்கும். நிறைய பாலங்களை ஆற்றின் குறுக்கே கட்டி வயதான பெரிய பாலத்திற்கு ஒய்வு கொடுக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் தெற்கே செல்ல செல்ல குப்பைகள் மிகுந்து மிதந்து நாறிப்போய்க் கிடக்கிறது😌 'இதெல்லாம் அரசியல்ல' என்று கடந்து போனால் நீயும் மதுரைக்காரனே!

பாலத்திலிருந்து இறங்கி தேவர் சிலையைத் தாண்டினால் அமெரிக்கன் கல்லூரி வளாகம். இப்பொழுது பெரிய பெரிய கடைகளும் உணவகங்களும் ஆக்கிரமித்துள்ளது. அதற்குப் பிறகு அகலமான பெரிய சாலை. தமுக்கம் மைதானம், தந்தி ஆஃபீஸ். கடந்து சென்றால் அன்றைய நட்சத்திர பாண்டியன் ஹோட்டல். எதிர்புறம் அரசினர் மாளிகை. இங்கிருந்து சாலையின் இருபுறமும் அடர்ந்த தூங்குமூஞ்சி மரங்கள். பிறகு தல்லாகுளம். 'எல்லாரும் சாமிய கும்பிட்டுக்கோங்க', பாட்டி சொல்லவும் கோபுர தரிசனம். மக்கள் ஏறுவதும் இறங்குவதுமாய் பல நிறுத்தங்கள். கண்டாங்கி சேலை, தண்டாட்டி தொங்கட்டான் பாட்டிகள், வேட்டி கட்டியவர்கள் அதிகமாக இருந்தார்கள். இப்பொழுது அதிகம் தென்படுவதில்லை. நாகரீக மாற்றம்!

வழியெங்கும் அத்தனை டெய்லர், காபி, பலகாரக் கடைகள். ரெடிமேட் உடைகள் வந்தபிறகு ஆண்களுக்கான சட்டை, பேண்ட் தைப்பவர்கள் மிகவும் குறைந்து விட்டார்கள். ஆனால், பெண்கள் நாங்கள் அவர்களை விடுவதாக இல்லை. எத்தனை ரெடிமேட் சோளிகள் கிடைத்தாலும் ஜன்னல், கதவு இத்யாதிகளுடன் டிசைன் ப்ளவுஸ் தைக்க மவுசு கூடிக் கொண்டு வருவதால் நவீன தையல் நாயகி/நாயகர்களை உருவாக்கிக் கொண்டே இருக்கிறோம். சட்டை தைக்கும் விலையை மட்டும் கேட்டு விடாதீர்கள்😜 கடைகளில் 'ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்'. அத்தனை உயிர்நாடியாய் பாடல்கள் அன்றாட வாழ்வில் இரண்டற கலந்து விட்டிருந்தது! இன்றும் அப்படியே! ரசனை மாறியிருக்கிறது!

பரபரப்பான கேகே நகர், புதூர் தாண்டியதும் கடச்சனேந்தல். இப்பொழுது முற்றிலுமாக அடையாளம் தெரியாத அளவிற்கு இந்தப்பகுதிகள் மாறிவிட்டிருக்கிறது! இருக்கும் சிறு இடங்களில் கூட கட்டிடங்களைக் கட்டி ஏராளமான கடைகள். உள்ளே சென்றால் வீடுகள்! ஹ்ம்ம்.. ஊர் விரிவடைகிறது. அதற்குப் பிறகு வரும் ஊர்களின் பெயர்கள் எல்லாம் அழகாக இருக்கும். எம் சமூகத்து மக்கள் தறிகள் போட்டுக் கொண்டு அங்கு வாழ்கிறார்கள். காதக்கிணறு ஊரில் தான் ஸ்ரீமான் நடனகோபால சுவாமிகளின் சமாதி உள்ளது. பகவானைப் போற்றி என்னுடைய தாய்பாஷையில் இவர் இயற்றிய கீர்த்தனைகள் மிகவும் பிரபலமாக இருந்தது! அவற்றைப் பாடிக்கொண்டு முன்பு பலரும் வருவார்கள். வீட்டிற்கு வருபவர்களைப் பாட வைத்து உணவளித்துப் பணமும் கொடுத்து அனுப்புவார் பாட்டி (அம்மோ, அப்பாவின் அம்மா) . அப்படி பாடிக்கொண்டு வந்த தலைமுறையே இன்று காணாமல் போய்விட்டிருக்கிறது😔 கேட்பவர்களும் தான்😒 நண்பர் ஒருவர் இத்தளத்தில் நாயகி இயற்றிய கீர்த்தனைகளைச் சேமித்துள்ளார். ஆர்வம் இருப்பவர்கள் இங்கே சொடுக்கவும் http://srimannayagi.org/tamilindex.htm வருடந்தோறும் கோவிலில் சிறப்புப் பூஜைகள் நடைபெறுகிறது. சிறியதாக இருந்த மண்டபம் இன்று பலரின் உதவியால் வளர்ந்து இருக்கிறது.

காதக்கிணற்றிலிருந்து 'எங்க ஊரு மாட்டுக்காரன்' கிராமம் போல இருந்த செம்பியனேந்தல் , கள்ளந்திரி பகுதிகள் கிராமத்திலிருந்து கொஞ்சம் வளர்ந்து சிறு நகரங்களாய் உருமாறியிருக்கிறது! கள்ளந்திரியில் அரசு சுகாதார நிலையப் பேருந்து நிறுத்தத்தில் கையில் குழந்தைகளுடன் பெற்றோர்கள், உடல்நலம் குறைந்த வயதானவர்கள் இறங்குவார்கள். இங்கிருக்கும் கால்வாயில் நீச்சல் அடித்துக் கொண்டிருக்கும் குழந்தைகளைப் பார்த்தால் எப்படித்தான் இப்படி தைரியமாக ஓடும் நீரில் ஜாலியாக குளித்துக் கொண்டிருக்கிறார்களோ என்று தோன்றும்! அந்தப்பகுதி முழுவதும் 'பச்சைப்பசேல்' என்று விவசாயம் அதிகம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. இப்பொழுது நன்கு குறைந்திருக்கிறது😕

ஒத்தக்கடையிலிருந்து கடச்சனேந்தல் வரும் வழியெங்கும் கரும்புத்தோட்டங்கள் அதுவும் தை மாதம் அங்கு சென்றால் 'நீ போகுமிடமெல்லாம் நானும் வருவேன் போ, போ' என்று உயர்ந்து வளர்ந்திருக்கும் கரும்புத்தோட்டங்களைப் பார்க்கப் பார்க்கத் தித்திக்கும்! கள்ளந்திரியைக் கடந்து விட்டால் 'பூங்காற்று உன் பேர் சொல்ல' காதில் வருட, அழகர்மலை தெரிய ஆரம்பித்துவிடும். பரபரப்பு தொத்திக் கொள்ளும். புளியமரங்கள் சாலையின் இருபுறமும் அடர்த்தியாக நிழற்குடை போல் அணிவகுத்து நிற்கும் அழகே அழகு. இப்பொழுது சாலையை விரிவாக்குகிறேன் என்று பொட்டலாக்கி வைத்திருக்கிறார்கள்😖

நாங்கள் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்தவுடன் ஆளுக்கொரு மூட்டையைத் தூக்கிக் கொண்டு ஆனந்தமாக இறங்கி விடுவோம்.

அழகர்கோவிலில் தங்க வேண்டுமென்றால் அன்று சத்திரங்களில் தான் இருக்க வேண்டும். 'பாதே', 'செட்டின்' என்ற குடும்பப்பெயர் கொண்டவர்களின் முன்னோர்கள் கட்டிய சத்திரங்கள் இன்றும் பக்தர்கள் தங்கிச் செல்லும் இடங்களாக இருக்கிறது. சௌராஷ்ட்ரா மக்கள் பலரும் அங்கு தங்குவார்கள்.

அழகர் கோவில் கோட்டைக்குள் இருக்கும் ஒரு கோவில். 'பாதே' சத்திரம் கோட்டைக்கு வெளியே நுழைவாயிலில் இடப்புறத்தில் இருக்கிறது. தென்னை, மாங்காய், அரைநெல்லிக்காய், புளியமரங்கள் சூழ நடுவில் சத்திரம். வாசலின் முன்பு இருபக்கமும் திண்ணை. உள்ளே தனித்தனி அறைகளும் ஹாலும் பின்பகுதியில் சமையற்கூடம், குளியல் அறை என்று விசாலமான இடம். எதிர்ப்புறத்தில் காபிக்கடை ஒன்றில் எந்நேரமும் வானொலியில் பாட்டு. மேலூர் திரையரங்குகளில் ஓடும் படங்களுடன் சுவரொட்டிகள். 44ஆம் எண் பேருந்துகள் கருப்பசாமி கோவில் வரை சென்று வந்தது இப்பொழுது வெளியிலேயே நிறுத்தி விடுகிறார்கள். காலையில் சூடாக கருப்பட்டி காபி. பாட்டி சமையல்வேலைகளில் மும்முரமாக பெரியம்மா மகளுடன் நாங்கள் வாசலில் குரங்குகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருப்போம். குட்டியுடன் செல்லும் ஆடு, மாடுகள், சாலையோர மரங்களை மேய்ந்து கொண்டிருக்கும். எனக்கென்ன என்று சாணம் போட்டுக் கொண்டே செல்லும். அதைக் கூடையில் அள்ளிக்கொண்டே செல்லும் பெண்மணி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் எங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டே அவரும் செல்வார்.

முன்வாசல் கதவைத் தாண்டி சாலைக்குச் செல்லக்கூடாது என்பது பாட்டியின் கட்டளை. அதனால் அதற்குள் விளையாடிக் கொண்டிருப்போம். சொட்டாங்கல்லு, ஓடிப்பிடித்து விளையாடுவது, புளியம்பழம், அரைநெல்லிக்காய்களைப் பறித்து உண்பது என்று நன்கு பொழுது போகும். இவையெல்லாம் மதுரை நகரில் கிடைக்காத அனுபவங்கள் ஆச்சே! கையில் அலைபேசி இல்லாத பொற்காலம் அது! இல்லையென்றால் படங்களை எடுத்து இன்ஸ்டாவில் போடவும் ஃபேஸ்புக்கில் பதிவு போடுவதிலும் நேரத்தை விரயம் செய்திருப்போமோ?

குளிப்பதற்கு மலைக்குச் செல்ல துணிகளை எடுத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தால் வழியில் மாங்காய், நுங்கு, வாழைப்பழம், மாம்பழம் என்று எதையாவது ஒன்றை வாங்கி அதைக் குரங்குகளிடமிருந்து காப்பாற்றித் தின்று முடிப்பதற்குள் போதும் போதும் என்று இருக்கும்.

ம்ம்ம். அழகர் கோவிலைப் பற்றி எழுத ஆரம்பித்தால் எங்கேயோ ஆரம்பித்து நான் எங்கெங்கோ சென்று கொண்டிருக்கிறேன்.

இனி தான் மெயின் சப்ஜெக்டே!

கோட்டைச்சுவர் சூழ சோலைமலையின் பின்னணியில் அமைந்துள்ள அழகான கோவிலின் வெளி கோட்டைச்சுவரைக் கடந்து உள்ளே சென்றால் அது ஒரு தனி உலகமாக இருக்கும். கோவிலில் வேலைபார்ப்பவர்களுக்கான வீடுகள் மட்டுமே இருந்த இடங்களில் தற்பொழுது பயணிகள் தங்கிச்செல்ல நிறைய புதுக்கட்டிடங்கள் முளைத்துள்ளன. அதையும் தாண்டி யோகநரசிம்மருடன் உள்கோட்டைச்சுவர் வரவேற்க,பரந்து விரிந்த மரங்கள் சூழ்ந்த இடத்திலிருந்து மக்கள் கூட்டத்தைக் காணலாம்.

சித்திரை, ஆடி மாதங்களில் டிராக்டரில், இரண்டு, நான்கு சக்கர வாகனங்களில் மாமன், மச்சான் குடும்பங்கள், உறவுகளுடன் புடைசூழ வந்து குழந்தைகளுக்கு மொட்டையடித்து, 'கடா' வெட்டி பொங்கல் படையல் போடுவார்கள். புகை அடுப்புகளும் சந்தனம் பூசிய மொட்டைத்தலைகளும், காதுகுத்தியதில் அழும் குழந்தைகளை ஒருவர் மாற்றி ஒருவர் தூக்கிக்கொண்டு சத்தமாய் சிரித்துக் கொண்டு பார்க்கவே நமக்கும் உற்சாகமும் மகிழ்ச்சியும் தொற்றிக்கொள்ளும். அவரவர் உலகத்தில் ஆனந்தமாய் இருக்கும் நொடிகளில் வெறுப்பு என்பதே இல்லாமல் எத்தனை இன்பமாய் இருக்கிறோம்! தற்பொழுது மொட்டையடிக்க, காதுகுத்து நடத்த, படையல் போட என்று நிறைய மண்டபங்களைக் கட்டி விரிவாக்கியுள்ளார்கள். கோவில் தேர் நிறுத்துமிடத்தில் இருந்து கூட்டம் தொடங்கிவிடும். நிழல் தரும் மரங்கள். எதைப்பற்றியும் கவலைப்படாமல் வழக்கம் போல சுகமாக தூங்கிக்கொண்டிருக்கும் சிறு கூட்டம். திருவோடு ஏந்தியவர்கள், குரங்குப்பட்டாளங்கள், பறவைகள் என காட்சிகளுக்குக் குறைவிருக்காது.

அது என்னவோ தெரியவில்லை என்ன மாயமோ புரியவில்லை? பதினெட்டாம்படி கருப்பசாமி என்றால் ஒரு ஈர்ப்பு தான். கிராமத்துக் கடவுள் என்றாலும் சுந்தர்ராஜப் பெருமாளின் காவல் தெய்வம். இவரை வணங்கித்தான் பெருமாளைக் கும்பிட கோவிலுக்குச் செல்வோம். அங்கே சிதறு தேங்காயை உடைக்கும் சத்தத்தைக் கேட்டவுடன் 'சடசட'வென குரங்குகள் மரங்களில் இருந்து ஓடிவரும். கைகளில் கிடைத்த துண்டுகளுடன் மறைந்திருந்து சாப்பிடுவது கொள்ளை அழகு! கிராமத்துப் பூசாரிகள் தான் அங்கே இருப்பார்கள். ஏழுநிலைகள் கொண்ட ராஜகோபுரம். அதன் கீழே மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு சந்தனத்தால் பூசப்பட்டிருக்கும் இரண்டு பெரிய கதவுகள் தான் கருப்பசாமியாக பல குடும்பங்களுக்கும் குல தெய்வமாக நம்பிக்கை கடவுளாக காட்சியளிக்கிறார். வருடத்தில் ஒருமுறை திறக்கப்படும் கதவு, பூஜைகள் முடிந்த அடுத்த நொடியில் மூடிவிடுவார்கள். வாழ்க்கையில் நம்பிக்கை என்பது எத்தகைய வலிமையானது என்பதை அங்கு பார்த்தால் புரியும். பாமரன் எங்கும் கடவுளைக் காண்கிறான். மனநிறைவும் மகிழ்ச்சியும் கொள்கிறான். தன் மனச்சுமைகளை அவனிடத்தில் இறக்கி வைத்து ஆறுதல் பெறுகிறான். ஆடி மாதத்தில் கிராமத்து மக்கள் அதிகம் வந்து திருவிழாவைக் கொண்டாடிச் செல்கிறார்கள். முதன்முறையாக வீச்சரிவாள்களைக் கோவில் சுவற்றில் பார்த்தவுடன் எப்படி தயாரித்தார்களோ என்று ஆச்சரியமாக இருந்தது! வெண்ணையும், குங்குமமும், துளசிமாலையும் சூடிய குட்டி ஆஞ்சநேயர் சந்நிதியும் அருகிலேயே உள்ளது.

எதிரில் இருக்கும் மண்டபத்தின் அருகே கொய்யா, நவ்வாப்பழம், மாங்காய், நெல்லிக்காய், இலந்தைப்பழம் என்று அந்தந்த பருவத்தில் கிடைக்கும் பழங்களைத் தரையில் சணல் சாக்குப் பை மீது போட்டு விற்றுக் கொண்டிருப்பார்கள். இப்பொழுது தள்ளுவண்டிகளில் விற்கிறார்கள். அங்கிருந்து தான் பழமுதிர்சோலை மற்றும் தீர்த்த தொட்டிக்குச் செல்லும் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருக்கும். உள்ளே சிறிது தூரம் சென்றால் கட்டுமானப்பணி நிறைவேறாத கோபுரம் புல், பூண்டுகள் சூழ பாழடைந்து நிற்கிறது😞

கருப்பண்ணச்சாமியை வணங்கி மேட்டில் நடந்து சென்றால் உட்கோட்டையில் 'கள்ளழகர்' குடியிருக்கும் அழகிய திருமாலிருஞ்சோலை கண்முன்னே விரியும். வாசலில் கருடன், சஞ்சீவி மலையைத் தூக்கியபடி ஆஞ்சநேயர் திருஉருவங்களை வரைந்திருப்பார்கள். உள்ளே சென்று செருப்பைக் கழட்டிவைத்து விட்டு கற்சாலைகளில் நடந்து செல்ல வேண்டும். கருப்பசாமி கோவில் கோபுரவாசலை ஒட்டி மடப்பள்ளி. அங்கிருந்து தான் பெருமாளுக்கு நைவேத்யம் செய்து பூஜைக்கு எடுத்துச் செல்வார்கள். 'கமகம'வென்று வடை, புளியோதரை, அழகர்கோவில் ஸ்பெஷல் தோசை வாசம் அழைக்கும். 'பொறு மனமே பொறு. அழகரைத் தரிசித்து விட்டு ஓடி வருகிறேன்' என்று மனதைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்குள்😜

அருகே கோவில் பட்டர்கள் தங்கும் உறைவிடங்கள். எதிரே வசந்த மண்டபம். கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்ட சிலைகள் பிரமிக்க வைக்கும்! நாங்கள் ஓடியாடி விளையாட அத்தனை பெரிய இடம்! முன்பு செருப்பு வைக்கும் இடத்திற்கு அருகே சிறிய உணவகம் இருந்தது. அதற்குப் பக்கத்தில் சிறிய பலசரக்கு கடை, பொரிகடலை விற்கும் கடை இருந்தது. இப்பொழுது இல்லை என்று நினைக்கிறேன். அதற்கும் பக்கத்தில் இருக்கும் பெரிய தண்ணீர்த் தொட்டியில் தான் நூபுரகங்கைத் தீர்த்தம் மலையிலிருந்து கீழே வரும்வகையில் குழாய்களை வைத்திருந்தார்கள். கூட்டம் வருவதற்கு முன்பே குளித்துமுடிக்க விடியும் முன்னே இருட்டில் பாட்டி அழைத்துச் செல்வார். தற்பொழுது அந்த தண்ணீர்த்தொட்டி உபயோகத்தில் இருக்கிறதா என்று தெரியவில்லை😕

பகல் நேரத்தில் குரங்குகளின் அட்டகாசம் தாங்க முடியாது. அதுவும் அந்த 'ஆல்ஃபா மேல்' குரங்கு தெனாவெட்டாக நடந்து வருகையில் மற்ற குரங்குகள் சிதறி ஓடிவிடும். எனக்கு குட்டி குரங்குகள் அல்லது பிள்ளையைச் சுமந்து வரும் பெண் குரங்குகளைத் தான் அதிகம் பிடிக்கும். அவர்களுக்குத் தான் தீனியைப் போடுவது வழக்கம். ஒன்றும் கிடைக்கவில்லையென்றால் இந்த ஆண் குரங்குகள் 'ஆ ஊ' என்று மூஞ்சியைக் கோணலாக்கி நம்மை பயமுறுத்தும். அதனால் எப்பொழுதும் குச்சி ஒன்றைக் கையில் வைத்திருப்போம். அதற்கெல்லாம் பயப்படுறவன் நான் இல்லை என்று தாக்க வரும் 'மட்டா கோதி'(முரட்டு குரங்கு). "ராமா ராமா" என்று குட்டி குரங்குகளைக் கூப்பிட்டால் 'கிடுகிடு'வென்று வந்து கையில் இருப்பதைப் பிடுங்கிக்கொண்டு ஓடும். குரங்குகளுடன் நன்றாகப்பொழுதுகள் போகும். 

ராஜகோபுரத்தில் இருக்கும் சிலைகளைப் பார்த்து எங்களுக்குள் சிரித்துக் கொள்வோம்😜 வசந்த மண்டபத்தைச் சுற்றிச்சுற்றி வந்து விளையாடுவோம். அங்கு அமர்ந்து சாப்பிடும் மக்களை வேடிக்கைப் பார்ப்போம். பிரசாதம் என்று பொங்கல் கொடுப்பார்கள். தயங்கித்தயங்கி வாங்கிக் கொள்வோம். சரளமாக தமிழில் பேசத்தெரியாத காலம்! பேசினால் கிண்டலடிப்பார்கள் என்று தமிழ் பேசுபவர்களிடமிருந்து கொஞ்சம் விலகியே இருப்போம். எம் மக்கள் என்றால் அவர்கள் எந்த வீட்டுக் குழந்தைகள் என்று கேட்பார்கள். சாப்பிட அழைப்பார்கள். யாருடனும் பேசக்கூடாது என்று பாட்டி சொல்லைத்தட்டாமல் சிரித்துக்கொண்டே ஓடிவிடுவோம். தெரிந்த குடும்பங்கள் என்றால் மட்டும் பாட்டியிடம் சொல்வோம். கூட்டம் இல்லையென்றால் சிலைகளை வேடிக்கைப் பார்ப்பது தான் வேலை. மீண்டும் அங்கு செல்ல துடிக்குது மனசு. சென்ற முறை அங்கே சென்றிருந்த பொழுது வசந்த மண்டபத்தை மூடிவிட்டிருந்தார்கள்!அங்கே கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்ட சிலைகள் பிரமிக்க வைக்கும்!

அருகே கோவில் பட்டர்கள் தங்கும் உறைவிடங்கள். முன்பு செருப்பு வைக்கும் இடத்திற்கு அருகே சிறிய உணவகம் இருந்தது. அதற்குப் பக்கத்தில் சிறிய பலசரக்கு கடை, பொரிகடலை விற்கும் கடை இருந்தது. இப்பொழுது இல்லை என்று நினைக்கிறேன். அதற்கும் பக்கத்தில் இருக்கும் பெரிய தண்ணீர்த் தொட்டியில் தான் நூபுரகங்கைத் தீர்த்தம் மலையிலிருந்து கீழே வரும்வகையில் குழாய்களை வைத்திருந்தார்கள். கூட்டம் வருவதற்கு முன்பே குளித்துமுடிக்க விடியும் முன்னே இருட்டில் பாட்டி அழைத்துச் செல்வார். தற்பொழுது அந்த தண்ணீர்த்தொட்டி உபயோகத்தில் இருக்கிறதா என்று தெரியவில்லை😕

அதற்குப் பக்கத்தில் ஆண், பெண் இருபாலாரும் தங்கிப் படிக்கும் தேவஸ்தானத்தைச் சேர்ந்த அரசு உறைவிடப் பள்ளி இருந்தது. அங்கு தங்கிப் படித்தவர்கள் பெற்றோர்கள் அற்ற குழந்தைகள்😑 மரத்தடியில் தான் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கும். ஒரே ஒரு பெரிய ஹால். அவர்கள் துணியை அவர்களே துவைத்துக் காயப்போட்டு பாத்திரங்களைக் கழுவி சிறிய ட்ரங்க் பெட்டியில் மொத்த பொருட்களையும் வைத்துக்கொண்டு அவர்களுடைய சின்னஞ்சிறுஉலகம்! அப்பா, அம்மா யாரும் இல்லாமல் எப்படித்தான் இருக்கிறார்களோ என்று அவர்களைப் பார்க்கும் பொழுதெல்லாம் வருந்தியதுண்டு😔 அருகில் தேவஸ்தான அலுவலக கட்டிடங்கள்.

சித்திரைத்திருவிழாவின் நாயகன் அழகர். மதுரைக்குச் செல்லும் பொழுது ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாய் மக்கள் கூட்டம் அலைமோத இங்கிருந்து புறப்படுவதை வீடியோவிலும் படங்களிலும் பார்த்திருக்கிறேன். திருவிழா தவிர மற்ற நாட்களில் கூட்ட நெரிசல் இல்லாமல் அமைதியாக நடந்து சோலைமலையின் அழகை ரசிக்கலாம். கருங்கற்கள் பதித்திருந்த இடத்தில் இப்பொழுது சிமெண்ட் பூசிய தரை! அத்தனை கற்களையும் பெயர்த்து என்ன செய்தார்களோ? இப்பொழுதெல்லாம் அரசு வாகனங்கள் வசந்த மண்டபம் வரை வருகிறது! எளியவர்கள் பாடு தான் திண்டாட்டம்.

மூன்று வருடத்திற்கு ஒருமுறை பெருமாளுக்குத் தைலக்காப்பு உற்சவம்நடக்கிறது. தை மாதம் முதல் ஆடி மதம் வரை தொடரும் இந்த விழாவில் மூலவரைக் காண முடியாது. நீண்ட உயர்ந்த தூண்களைக் கொண்ட மண்டபங்கள். கோவிலுக்குள் நுழையும் பொழுதே பக்தர்கள் காணிக்கையாக அளித்த நெல்லின் வாசத்தை சுவாசிக்கலாம். அதுவும் அறுவடைக்குப் பிறகு காணிக்கையாக கோவிலுக்கு மூட்டையில் நெல்லை அளிக்கிறார்கள். மதுரையைச் சுற்றியுள்ள ஊர்களில் இருந்து வரும் பக்தர்கள் அதிகம். இப்பொழுதெல்லாம் கோவில்களில் குடமுழுக்கு என்ற பெயரில் தூண்கள் அனைத்தையும் 'sand blasting' செய்து பாழாக்கி வைத்திருக்கிறார்கள்.

உயரமான கொடிமரத்தைத் தாண்டி உள்ளே சென்றால் நீண்ட உயர்ந்த தூண்களைக் கொண்ட மண்டபங்கள். அதையும் கடந்து மூலவரைத் தரிசிக்கும் முன் சுற்று மண்டபத்தில் உக்கிர யோகநரசிம்மர்! இவரின் உக்கிரத்தைக் குறைக்க சிறப்பு அபிஷேகங்கள் தினமும் நடக்கிறது. அவரை வணங்கி படிகளில் ஏறினால் கருவறையில் வீற்றிருக்கும் பெருமாளின் அழகிய தரிசனம்.கம்பீர தோற்றத்துடன் சங்கு, சக்கரம், கதை, வாள், வில்லுடன் நின்ற கோலத்தில் 'கன்னங்கரேல்' பரமசுவாமி பெருமாள் தேவியர்களுடன் திவ்யமாக காட்சி தருகிறார். பெருமாள் கோவில்களுக்கே உரித்த சிறப்பு அலங்காரங்கள் மனதைக் கொள்ளை கொள்ளும். தீபாராதனையில் ஜொலிக்கும் பெருமாளைக் காண, 'கோவிந்தா கோவிந்தா' கோஷதில் மனம் பரவசமாகி விடும். சுற்று மண்டபத்தில் சுந்தரவல்லித்தாயார் சந்நிதி. பழமையான கோவில் என்பதை அங்கிருக்கும் ஒவ்வொரும் நிமிடமும் உணர முடியும். மதுரையில் கூடலழகர் பெருமாள் கோவில் விஸ்தாரமாக காற்றோட்டமாக சூரிய ஒளி படரும் வண்ணம் இருக்கும். இந்தக் கோவிலில் அப்படி உணர்ந்ததில்லை. அதனால் கொஞ்சம் பயந்ததுண்டு. இப்பொழுது பெருமாளைத் தரிசிக்க வரும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த சுற்றி சுற்றிச் செல்கிறது வரிசை. சிறப்பு தரிசன சீட்டு வாங்கினால் இரண்டு சுற்று குறையும்.

கோவிலுக்குச் சென்று வரும் பொழுது கிடைக்கும் மனநிம்மதியுடன் வெளியே வந்தால் பிரசாத கடையில் வடை, அப்பம், புளியோதரை, முறுக்கு.. இதெல்லாம் யாருக்கு வேண்டும்? இந்தக் கோவிலின் சிறப்பே அழகருக்குப் படைக்கும் தோசை தான். மிளகு தூக்கலாக தாராள நெய்யில் செய்த கருப்பு உளுந்து தோசை!!! யம் யம் யம்... சாப்பிட்டு முடிக்கையில் எண்ணெய் அப்பிய இதழ்கள் சொல்லாமல் சொல்லும்ம்ம்ம்ம்😝

பூமியில் புதைந்திருந்த தெப்பக்குளத்தை சில வருடங்களுக்கு முன் தான் கண்டுபிடித்து தூர்வாரி தற்பொழுது தண்ணீருடன் இருக்கும் படங்களைப் பார்த்தேன்.

பழமையும் சிறப்பும் வாய்ந்த புராதன கோவில். கண்டிப்பாக சென்று வர வேண்டிய கோவில்.

சென்ற வருடம் 2022ல் சென்றிருந்த பொழுது நல்ல மழை. குடமுழுக்கிற்கு கோவில் தயராகிக் கொண்டிருந்ததது.









Saturday, October 7, 2023

கூடலழகர் பெருமாள் கோவில்

மதுரை என்றாலே 'கோவில்கள் நகரம்' என்று கூறும் அளவிற்கு அத்தனை கோவில்கள் இங்கே இருக்கிறது! கோவில்களுக்குச் செல்லும் பொழுது பெரும்பாலும் சுவாமி, பெருமாள், தாயார் என்று எளிதாகக் கூறினாலும் சந்நிதிகளில் எழுதி வைத்திருக்கும் அத்தனையும் இனிமையான பெயர்கள்! தமிழ்நாட்டில் இருக்கும் கோவில்கள் அனைத்திலும் மூலவர், உற்சவர், தாயார் அழகுப் பெயர்களுடன் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மதுரையில் மிகமிகப் பிரசித்தி பெற்ற மற்றுமொரு திவ்யதேசம் 'கூடலழகர் பெருமாள் கோவில்'. பழைய பேருந்து நிலையத்தின் அருகே இருக்கிறது. அப்பாவின் சித்தி(பாட்டியின் தங்கை) வீடும் பாட்டி (அம்மாவின் அம்மா)வீட்டிலிருந்து நடக்கும் தொலைவில் இருந்ததாலும் சிறுவயதில் சனிக்கிழமைகளில் தவறாமல் சென்று வந்த கோவில்களில் ஒன்று. மூலவர் கூடலழகர். உற்சவர் வியூக சுந்தரராஜர். பெரியாழ்வாரால்

"பல்லாண்டு பல்லாண்டு பல்லாயி ரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்
செவ்வடி செவ்விதிருக் காப்பு" 

என்ற அழகிய திருப்பல்லாண்டு பாடல் இயற்றப்பட்ட திருத்தலம். ஐந்து நிலைகள் கொண்ட ராஜகோபுரம் எங்கள் சமூகத்தின் 'ஓபுளா' வீட்டுப்பெரியவர்களின் நற்கொடையால் கட்டப்பட்டது என்ற விவரத்தை நுழைவாயிலில் பொறித்து வைத்துள்ளார்கள். திருமணத்திற்குப் பிறகு "எங்க தாத்தாக்கள் கோபுரம் கட்ட நிதியுதவி செய்திருக்கிறார்கள்" என்று பெருமையுடன் மச்சினர் கூறினார். கடந்த வருடம் நடந்த கோவில் குடமுழுக்கின்போது மரியாதை செய்யப்பட்டார்கள் என்றும் அறிந்து கொண்டேன்.

அகலமான படியைத் தாண்டி உள்ளே நுழைந்ததும் கொடிக்கம்பம். இடப்புறம் கம்பிவலைக்குப் பின்னால் அலுவலகம் இருக்கும். அருகே தான் 'ஆண்டாள்' தும்பிக்கையைத் தரையில் தவழவிட்டு நின்று கொண்டிருப்பாள். பெரிய இமைகளுடன் மருண்ட விழிகள்! நாமம் போட்டுக் கொண்டு அழகுச்செல்லம்😍 உடலை மெதுவாக அசைக்க, மணியும் சேர்ந்து ஆட, சிகப்புநிற பொன்னாடை போர்த்தி அவள் நின்ற கோலம் நினைவில் ஊசலாடியது😔

சுற்றுப்பிரகாரத்தின் படியில் நின்று பார்த்தால் கருவறை விமானம் தெரியும். பக்தர்கள் வணங்கிச் சென்று கொண்டிருப்பார்கள். படிகளில் ஏறி கருடர், ஆஞ்சநேயரைத் தரிசித்தபடி உயரமான திக்பாலர்களைக் கடந்து மண்டபத்திற்குள் நுழைந்தால் மூலவர் 'கூடலழகர்' பிரம்மாண்டமாக மனதைக் கொள்ளை கொள்வார். வரிசையில் நின்று செல்லும் வகையில் கயிறு கட்டி வைத்துள்ளார்கள். பச்சைக்கற்பூரம், துளசி, பூக்கள் மணமணக்க கருவறை அருகே நின்று திவ்ய தரிசனம் செய்யலாம். நேர்த்தியான அலங்காரத்தில் மூலவரும், உற்சவர் வியூக சுந்தர்ராஜரும்,ஸ்ரீதேவியும் பூதேவியும் விளக்கொளியில் ஜொலிப்பதைக் காண கண்கோடி வேண்டும்! அங்கிருக்கும் பட்டர்களும் நிதானமாகப் பெருமாளின் பெயர்களைக் கூறி தல பெருமைகளை விரிவாக எடுத்துச் சொல்வது சிறப்பு. சடாரியைத் தலையில் வைத்து ஆசிர்வதித்து தீர்த்தம், பூ, துளசி பிரசாதம் கொடுப்பார்கள். சுற்றி வந்து படிகளின் வலதுபுறம் சென்றால் தாயார் சந்நிதி.

நுழைந்தவுடன் வலப்புறத்தில் சக்கரத்தாழ்வார் சந்நிதி. பெரும்பாலும் காலை நேரத்தில் தான் கோவிலுக்குச் செல்வது வழக்கம். 2022ல் நாங்கள் மாலைநேரத்தில் சென்றிருந்த பொழுது நல்ல மழை! பக்கவாட்டில் இருந்து உள்ளே நுழைந்த மழைத்தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. இடி,மின்னலுடன் அப்படி ஒரு மழை! 'அது ஒரு அழகிய மழைக்காலம்! ' சொல்லலாம் என்றால் மூட மறந்த குழிகளும் மழைநீர் மண்ணுக்குள் சென்று விடக்கூடாது என்று தீவிரமாக சாலைகளைப் போட்டு மூடி வெள்ளத்தில் மக்கள் தத்தளித்து நடக்க வண்டிகள் நீரை வாரி இறைத்துச் செல்வதும் கண்முன்னே நிழலாடியது. மழைநீரைச் சேகரிக்க வேண்டிய நாம் எப்படி விரயம் செய்கிறோம்? ஹ்ம்ம்ம்...😑

கோவிலுக்குள்ளே சுத்தமான மழைநீரில் காலை நனைப்பதும் சுகம்😊 கூட்ட நாட்களைத் தவிர மற்ற நாட்களில் மதுரவல்லித் தாயார் சந்நிதி அமைதியாக இருக்கும். அமர்ந்த கோலத்தில் மலர்மாலைகளுடன் அழகான அலங்காரத்துடன் வீற்றிருக்கும் தாயார் அத்தனை வசீகரமாக இருப்பாள். பட்டர் கொடுக்கும் குங்குமமும் நல்ல வாசனையுடன் இருக்கும். தரையில் பழ தீபங்கள் ஏற்றி வணங்கும் பெண்கள், சுற்றுப்பிரகாரத் தூணில் இருக்கும் அனுமனுக்கு வெண்ணைச் சாத்தி வணங்குபவர்கள் என்று சிறுசிறு கூட்டம். அமைதியான அந்தச் சூழலில் இரைச்சல்கள் அடங்கி மனம் நம் வசப்பட்டுக் கொண்டிருக்கும். சுவர்ச்சித்திரங்களும் அருமையாக.

வண்ணமயமான மண்டபத்திலிருந்து வெளியே வந்தால் காற்றோட்டத்துடன் நீண்ட பெரிய சுற்றுப்பிரகாரம். எனக்கு மிகவும் பிடித்ததும் கூட. சுவர்களில் பெருமாள் அவதார லீலைகளை வரைந்திருப்பார்கள். பாட்டி 'கஜமோட்சம்' சித்திரத்தை வரைய நிதி கொடுத்து தாத்தா பெயருடன் இருப்பதை அங்கே போகும் போதெல்லாம் பார்ப்பதில் ஒரு குட்டி சந்தோஷம். அங்கிருக்கும் மின் விளக்குகள், கதவுகள், சித்திரங்கள் அனைத்தும் பக்தர்களின் அன்பளிப்பில் என்பதைத் தெரிவிக்கும் வண்ணம் மறக்காமல் அவர்கள் பெயர் பொறித்து விளம்பரப்படுத்தியிருப்பார்கள். நல்ல விளம்பர யுத்தி!

எங்கிருந்து பார்த்தாலும் தெரியும் கருவறை விமானம் சிற்பங்களுடன் அழகோ அழகு! அங்குச் செல்ல அனுமதிச்சீட்டு வாங்கவேண்டும் என்று நினைக்கிறேன். இப்பொழுது அனுமதிக்கிறார்களா என்று தெரியவில்லை.இக்கோவிலின் சிறப்பே பெருமாள் அமர்ந்த, நின்ற, சயனித்த என்று மூன்று நிலைகளிலும் காட்சி தருவது தான். திருக்கோவிலூர் கோவிலுக்கும் இந்தச் சிறப்பு உண்டு. ராமர், கிருஷ்ணர், நரசிம்மரை வணங்கி அப்படியே ஆண்டாள் சந்நிதிக்குள் நுழைந்தால் அமைதியோ அமைதி. கூட்டமே இருக்காது. எதிரே துளசி மாடம். அருகே மணவாள மாமுனிகள், ஸ்ரீவேதாந்த தேசிகர் சந்நிதி. வெளியில் வந்தால் நெய், எண்ணை தீப வாசனையுடன் நவக்கிரக சந்நிதி. ஆச்சரியமாக இருக்கிறதா? நவதிருப்பதியில் நவக்கிரகங்களாகப் பெருமாள் இருக்கிறாரே!

கோவிலுக்குச் சென்ற இனிய அனுபவத்தை அசைபோட்டபடி அங்கிருக்கும் மண்டபத்தில் சிறிது நேரம் அமர்ந்து விட்டுச் செல்வது வாடிக்கை. சென்ற முறை சென்றிருந்த பொழுது மழை ஓய்வதாகத் தெரியவில்லை. சிலமணிநேரங்கள் திருநகரில் இருந்து வந்திருந்த சௌராஷ்ட்ர தம்பதியருடன் பேசிக்கொண்டு இருந்தோம். தீபாவளி ஷாப்பிங் வந்திருந்தார்கள். முதன்முதலாக மணிக்கணக்கில் பெருமாள் கோவிலில் இருந்தது அதுவே முதல்முறை.

இக்கோவிலின் தெப்பக்குளம் அங்கிருந்து அரைகிலோமீட்டர் தொலைவில் இருக்கும் டவுன்ஹால் ரோடில் உள்ளது. சில வருடங்களுக்கு முன்பு தான் ஆக்கிரமிப்புகளை அகற்றி அப்படி ஒரு தெப்பக்குளம் இருந்ததை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தார்கள். முயன்ற உள்ளங்களுக்கு நன்றி! அப்புறமென்ன? தெப்பத்திருவிழா 'ஜேஜே' என்று நடக்கும்.

புரட்டாசி பௌர்ணமியன்று ஐந்து பெருமாள்கள்(கூடலழகர், மதனகோபாலசுவாமி, வீரராகவப்பெருமாள் கோவில்) கருடவாகனத்தில் எழுந்தருளும் 'கருடசேவை' கண்கொள்ளாக் காட்சியைத் தரிசித்துப் படங்களை எடுத்து அனுப்பியிருந்தாள் மகள். கோலாட்டம், 'ஹரே ராம ஹரே கிருஷ்ணா' கோஷங்களும் விஷ்ணு சஹஸ்ரநாமமும் ஒலிக்க திருவிழா கூட்டம்!

வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் திறப்பிற்கு அதிகாலையில் கூடும் கூட்டமும் 'ஓம் நமோ நாராயணாய' கோஷமும் 'மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்...' நினைத்தாலே💖

கூடல்நகரை 'திருவிழா நகரம்' என்று கூட அழைக்கலாம் தானே?


Thursday, October 5, 2023

நீயா நானா?


'அதிகமாக உணவை வெளியில் வாங்கி உண்ணும் பெண்கள் Vs கணவர்கள்' - கடந்த வார 'நீயா நானா' விவாத தலைப்பு. எங்கிருந்து தான் பங்கேற்பாளர்களைப் பிடித்துக் கொண்டு வருவார்களோ தெரியவில்லை!

பங்கு கொண்ட கணவர்கள் அனைவரின் ஆதங்கமும் ஒரே மாதிரி தான் இருந்தது.

"வீட்டிலேயே சமைத்தால் என்ன?"
சமைப்பது என்பது பெண்களுக்கே உரித்தானதா என்ன? அன்று அம்மாக்கள் வீட்டிலேயே இருந்தார்கள். சமையல், குழந்தைகள், குடும்பம் என்று கவனித்துக் கொண்டார்கள். பிடித்துச் செய்தார்களா? தெரியாது. பொருளாதாரம் என்பது ஆண்களின் பொறுப்பிலும் குடும்பம் என்பது பெண்களின் தலையிலும் எழுதப்பட்டிருந்தது. 24 மணிநேரமும் குடும்பம், குடும்பம் என்றிருக்க, ஆண்கள் பெண்களுக்கு உதவியாக இருந்தது மிகமிக குறைவு.

இப்பொழுது அப்படியா? பெண்களும் வேலைக்குச் செல்கிறார்கள். சமையலும் செய்து முடித்து வேலைக்கும் செல்லவேண்டும் என்று கூடுதல் சுமை வேறு. எப்பொழுதாவது வெளியில் சாப்பிட்டால் தான் என்ன? ஆனால், எப்பொழுதும் சாப்பிடுவது தவறு.

"இத்தனை செலவு செய்து சாப்பிட வேண்டுமா? இட்லி, தோசை கூட ஆர்டர் பண்ணிச் சாப்பிடறா. மாவு கொண்டு வந்து தர்றேன்னு சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறா?"

ஏம்மா?

"சட்னிக்கு வெங்காயம், தக்காளி நறுக்கணும். (இதென்ன கொடுமையா இருக்கு!) அப்புறம் அரைக்கணும். (ஏதோ உரல்ல அரைக்கிற மாதிரி !) அப்புறம் தோசை வார்க்கணும்! பாத்திரங்களைக் கழுவணும்"

"சரிப்பா. நீ ஏன் கேட்டுட்டு? மாவை வாங்கிட்டு வந்து சட்னி பண்ணிக் கொடுக்க வேண்டியது தானே?"

"நான் சுட்ட தோசை பிடிக்கலைங்கறா சார்"

"ஆமா சார்! இவர் சுடற தோசை எனக்குப் பிடிக்காது!" (மனைவிக்குப் பிடித்த மாதிரி தோசை சுடுபவர் கிடைத்தால் வரம்!)

சமையல் அலுப்புகள் அவ்வப்பொழுது வரத்தான் செய்யும். வரமாலிருக்க வெளியில் சாப்பிடுவதால் தவறில்லை. ஆனால் அடிக்கடி சாப்பிட்டால் செலவும் அதிகம். உடலுக்கும் நல்லதில்லை. ஆக, மாவு வாங்கி சட்னி செய்து அவளுக்குப் பிடித்த மாதிரி தோசை வார்க்க கற்றுக்கொள்ளுங்கள் கணவர்களே! புலம்பாதீர்கள்!

"நடுராத்திரியில் பிரியாணி வேணும்ங்கிறா சார்!" நிச்சயம் தவிர்க்கப்படவேண்டியது. நேரத்துக்குச் சாப்பிட்டாலே பலருக்கும் ஒத்துக்கொள்வதில்லை. அதில் மிட்நைட் மசாலா வேறு கேட்கிறது பிரியாணிக்கு அடிமையாகி வரும் சமூகம்! என்னவோ போடா மாதவா!

"என் அம்மா இன்றுவரையில் அப்பாவிற்குச் சமைத்துக் கொடுக்கிறார்!" ஆகா! எந்த காலத்தில் வாழந்து கொண்டிருக்கிறோம்? கூடமாட ஒத்தாசை செய்கிறேன் என்று சொன்னாலும் வேலைக்குச் சென்று வரும் பெண்களின் வீட்டு வேலைகளில் ஆண்கள் சமபங்கு எடுத்துக் கொள்ள வேண்டும். செய்யாமல் இருந்தால் இப்படித்தான் நடுநிசியில் ஐஸ்கிரீம் வேணும், பைக்கில் ஊர் சுற்றணும் என்பார்கள்.

"பால் வாங்கி வந்து கொடுத்தாலும் காபி ஆர்டர் பண்றா சார்!" அப்படியே காபி போட்டுக் கொடுத்தா வேண்டாம் என்றா சொல்லப்போகிறாள்? அப்படியும் சில பெண்கள் சொல்கிறார்கள்😒

இந்த விவாதத்தில் புரிந்து கொண்டது என்னவென்றால் என் காசு நான் சம்பாதிக்கிறேன். சாப்பிடுகிறேன் என்ற இன்றைய தலைமுறைப் பெண்களின் போக்கு! இருக்க வேண்டியது தான். ஆனால் அளவிற்கு மீறிச் செல்லும் பொழுது ஆரோக்கியத்தையும் பர்ஸையும் பதம் பார்க்கும் என்று கூடவா புரியவில்லை. மனதிற்குப் பிடித்ததைச் சாப்பிடுவது வேறு! வெறும் பகட்டிற்காக விலை உயர்ந்த உணவகங்களில் ஆயிரக்கணக்கில் சாப்பிட்டு விட்டு அது தான் மகிழ்ச்சியைத் தருகிறது என்ற மாய வலையில் சிக்கிக் கொள்வது வேறு. உட்கார்ந்த இடத்தில் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற சோம்பேறி வாழ்க்கைக்கு அடிமையாகி நம் குழந்தைகளையும் ஆரோக்கியமற்ற சோம்பேறிகளாக நாக்கை வளர்த்துக் கொண்டிருக்கிறோமோ என்று தோன்றியது.

ஆண்கள் புலம்புவதை விட்டுவிட்டு சமைக்க கற்றுக் கொள்ளுங்கள். அவ்வப்பொழுது பெண்களுக்கு ஒய்வு கொடுங்கள். அம்மா மாதிரி என்று அரதப்பழசாக பேசுவதை விட்டுவிட்டு அவளின் வேலைகளில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள். அம்மாவிற்கு ஒத்தாசையாக இல்லாது இருந்ததே பெருங்குற்றம் என்று உணருங்கள்.

சமையலைப் பிடித்துச் செய்து குடும்ப நலனில் அக்கறை கொண்ட பெண்கள் கிடைப்பது வரமோ வரம். அதில் சிறு உதவி கிடைத்தாலும் கொண்டாடித் தீர்ப்பாள். ஆக...

அது என்னம்மா 'Floating little bunny?' 12,000 ரூபாய்க்கு அப்படி என்னம்மா சாப்பிடறீங்க?

இந்த மாதிரியெல்லாம்கூட  உலகத்துல நடக்குதுன்னு புரிஞ்சுக்கோங்க மக்கா! 

இப்பல்லாம் 2K ஆண்கள் நிறைய புலம்புவது மாதிரி தோணுது😝

"ரொமான்ஸ், ஹாப்பினஸ், மை மணி,  வாழ்க்கை வாழ்வதற்கே, மொமெண்ட்ஸ் ..." இப்படியெல்லாம் சொல்லிட்டுத் திரியாம நாம தான் பொழைக்கத் தெரியாதவங்களா இருக்கோமோ? 

என்னவோ போடா மாதவா!


Tuesday, October 3, 2023

இந்தியாவின் திருவிழாக்கள்

பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில் திருவிழாக்களுக்குக் குறைவே இல்லை. ஒவ்வொரு மாநிலமும் வெவ்வேறு திருவிழாக்களைக் கொண்டாடி வருவதைச் செய்திகளிலும் பத்திரிகைகளிலும் படித்திருக்கிறோம். சிலபல படங்களையும் பார்த்திருக்கிறோம். ஆளாளுக்கு கையில் ஸ்மார்ட்ஃபோனுடன் அலையும் காலம் இது. அதுவுமில்லாமல் சுற்றுலா சென்று வரும் மக்களும் அதிகரித்து வருகின்றனர். இதனால் மற்ற மாநிலங்களைப் பற்றி அறியும் ஆவலும் அதன் தொடர்பான செய்திகளையும் அறிந்து கொள்ள முற்படுகிறார்கள். தாங்கள் கண்டவற்றை சமூக ஊடகங்கள் வாயிலாக மற்றவர்களிடமும் பகிர்ந்து கொள்ள பல்வேறு பழக்கவழக்கங்கள், நடை, உடை, பாவனைகள், ஆடல், பாடல், கொண்டாட்டங்கள் என்று முற்றிலும் புதிய கலாச்சாரத்தை அறிந்து கொள்ள முடிகிறது.


சமூகஊடகங்களில் வரும் படங்கள், காணொளிகள் உலகமெங்கும் பரவி வெளிநாட்டினரும் கேமரா சகிதம் புறப்பட்டு வருகிறார்கள். எத்தனை அழகாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க முடியுமோ வழங்குகிறார்கள். திருவிழாக்களை நேரில் காணும் வாய்ப்பு இல்லாதவர்களுக்கு உட்கார்ந்த இடத்திலிருந்தே காணும் வாய்ப்பு கிடைக்கிறது. மதுரையில் பத்து நாட்கள் நடக்கும் 'சித்திரைத்திருவிழா' போலவே வெளிமாநிலங்களிலும் கோலாகலமான பெருவிழாக்கள் நடைபெறுவதை அழகாக தொகுத்து காணொளிகளாக யூடியூபில் 'நேஷனல் ஜியோகிராபிக் இந்தியா' வழங்குகிறது. ஒவ்வொரு புதன்கிழமை அன்றும் ஒரு புதுத்தொடர். சமையற்கலை நிபுணரான மீகன் நன்றாக இந்திய உணவுகளைச் சாப்பிடுகிறார். பாரம்பரிய உடைகளை அணிந்து கொண்டு கூட்டத்தில் ஒருவராக சிரித்த முகத்துடன் விவரங்களை அறிந்து தொகுத்து வழங்குகிறார்.

முதலில் 'எண்டே கேரளா'வின் ஓணம் பெருவிழாவில் இருந்து துவங்கியிருக்கிறார்கள். 'The Festival of Abundance' அம்மாநிலத்தின் அழகுக்கோவில்கள், ஏங்க வைக்கும் 'பச்சைப்பசேல்' நிலப்பரப்பு, சேச்சிகளின் நடனம், சேட்டாக்கள் பம்பரமாய் சுழன்று ஓணம் விருந்தைத் தயார் செய்து மக்களுக்குப் படைப்பது, யானைகளின் அணிவகுப்பு, படகுப்போட்டி, பாரம்பரிய உடை, இசை, களரி ஆட்டம் என்று அங்குமிங்கும் நகரவிடாமல் விழாக்களைப் பற்றின சுவையான தகவல்களுடன் வழங்கியிருப்பது சிறப்பு.



'The Divine Colors of Holi' என்ற அடுத்த பாகத்தில் வட இந்தியாவில் மதுராவில் கோலாகலமாகக் கொண்டாடப்படும் ஹோலி திருவிழாவைப் பற்றி வண்ணமயமாக வழங்கியிருக்கிறார் மீகன். இத்தனை பிரம்மாண்ட விழாவை நேரில்பார்த்திருந்தால் கூட இத்தனை அழகாக இருந்திருக்குமோ? கூட்டத்தைக் கண்டு பயந்திருப்போம் என்று தான் தோன்றியது. மக்கள் கூட்டத்தைப் பார்த்தால் மலைப்பாக இருக்கிறது...!! ஆனால் உள்ளூர் மக்களின் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி! திருவிழாக்கள் தரும் உற்சாகமே நம் வாழ்க்கையை மன அழுத்தத்திலிருந்து ஓரளவு நம்மைக் காப்பாற்றி வருகிறது. இவையெல்லாம் இல்லாத வாழ்க்கையை நினைத்துப்பாருங்கள்! பைத்தியமே பிடித்து விடும்.

இனம், மொழி, மதம் என பல வேற்றுமைகள் இருந்தாலும் இந்தியர்களாக இந்த மண்ணின் மகத்துவத்தை அறியும் தருணங்களில் பெருமையாக இருக்கிறது. வெளிநாடுகளில் இத்தகைய கலாச்சாரம் இல்லாதிருப்பதும் அவர்களுடைய விழாக்கள் பொருள்சார்ந்த வியாபாரமாக மாறிவரும் போக்கும் இருப்பதால் தான் மகிழ்ச்சியுடன் விழாக்களைக் கொண்டாடும் மக்களை, கலாச்சாரத்தை அவர்கள் பெரிதும் விரும்புகின்றனர். வியக்கின்றனர். குறுகிய தெருக்கள், சிறிய கோவில்களில் வண்ணவண்ணப் பூக்களை, பொடிகளைத் தூவி ஹோலி கொண்டாடி கிருஷ்ணரை வணங்குவதை இதைவிட அழகாக எடுக்க முடியுமா? தெரியவில்லை.

அதுமட்டுமில்லாமல் அந்தந்த ஊர்களில் கிடைக்கும் உணவுகளைப் பற்றியும் அறிந்து அவர் சாப்பிடுகிறார். நமக்குத் தான் ஆகா! மனுஷன் வெளுத்து வாங்குறாரே! என்று பொறாமையாக இருக்கிறது😋 ட்ரோன் காட்சிகளெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

'The Joyous Festivities of Eid' ஹைதராபாத், டெல்லி மசூதிகளில் நடந்த பெருவிழாவைப் பற்றியும் ஒரு பாகத்தை வெளியிட்டு இருக்கிறார்கள். அங்கு கிடைக்கும் உணவுகளையும் இஸ்லாமிய திருவிழாக்கள் பற்றியும் அழகாக தொகுத்து வழங்கியிருக்கிறார்.

The Ancient Nagas Tradition இந்த வார தொடர். பெருவிழா என்றால் பத்துநாட்கள் மும்பையில் நடக்கும் விநாயகர் திருவிழா இல்லாமலா? விரைவில்...

இனிவரும் தொடர்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

Monday, October 2, 2023

The Vaccine War


2019 டிசம்பரில் உலகமே தொற்றுப்பரவலால் அல்லோலகப்பட்டு ஜனவரி 2020ல் பீதியாகி டாமினோ சரிவு போல தொடர் மரணங்கள். சீனா, இத்தாலி, இங்கிலாந்து வழியே நாலு கால் பாய்ச்சலில் கொரோனா அமெரிக்காவிற்கும் வந்து இறங்கிய நாள் முதல் நியூயார்க் தத்தளித்துத் தான் போனது! சீனர்களைக் கண்டு ஆத்திரம் கொள்ள மற்றுமொரு காரணம் கிடைத்துவிட்டது. அன்றைய அதிபர் முதல் ஆதிக்க மனப்பான்மை கொண்டவர்கள் வரை இதெல்லாம் சும்மா 'லுலுலாயி'. என்றார்கள். பின் சீனா வைரஸ் என்று சீனர்களை, அவர்களின் உணவுப் பழக்கங்களைக் குறை கூறினார்கள். மறந்தும் கூட அங்கிருந்த ஆராய்ச்சிக்கூடத்திலிருந்து பரவிய வைரஸோ என்பதை மட்டும் நேக்காக மறைத்தார்கள். மார்ச் மாதம் காலில் சலங்கையைக் கட்டிக்கொண்டு கோரத்தாண்டவம் ஆடிய கொரோனாவிற்கு முதன்முதலில் மக்கள் பயந்து அவசரஅவசரமாக முகக்கவசம் அணியத் தொடங்கினார்கள்.

இப்படித்தான் பீதியில் பேதியாகி ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தேசம் ஆளானது. "அதெல்லாம் தேவையே இல்லை. எத்தனை நாட்கள் இப்படி வீட்டுக்குள் அடைந்து கிடக்க முடியும்? வேலையின்றி அடுத்தவேளைச் சோற்றுக்கு மக்கள் என்ன செய்வார்கள்? ஜனநாயக கட்சியினர் தேவையில்லாமல் மக்களை அச்சப்படுத்துகிறார்கள்" என்று ஆளும் கட்சி குறைகூறியது.

கண்முன்னே கொத்துக்கொத்தாக முதலில் வயதானவர்கள் பலர் இறந்தார்கள். சிகிச்சையை மாற்றிக் கொடுத்தாலும் இறப்பவர்களின் எண்ணிக்கை மட்டும் கூடிக்கொண்டே இருந்தது. மாற்றுமருந்தின் அவசியத்தை உணர்ந்த அரசு போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொண்டது. கல்விநிலையங்கள், அலுவலகங்கள் மூடப்பட்டது. வீட்டிலிருந்தே படிப்பு, வேலை என்றாகிப்போனது. அடடா! இதுவும் நன்றாக இருக்கிறதே என்று பலரும் வீட்டை விட்டு வெளியில் செல்லவே பயப்படும் 'தெனாலி'களானார்கள். தும்முபவர்களைக் கண்டால் காத தூரம் ஓடிப்போகும் மனநிலைக்கு உள்ளானார்கள்.

சரியாக அந்த நேரத்தில் நெட்பிளிக்ஸ்ல் 'Pandemic: How to Prevent an Outbreak' என்றொரு ஆறு பாகங்கள் கொண்ட ஆவணத்தொடரை வெளியிட்டார்கள். 100 வருடங்களுக்கு முன் நடந்த தொற்றுப்பரவலின் கோரத்தாண்டவ காட்சிகளுடன் தொடங்குகிறது தொடர். நியூயார்க் மருத்துவமனையில் தீவிர மருத்துவ சிகிச்சைப்பிரிவில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் அதே வேளையில் உலகின் மற்ற நாடுகளிலும் இதே போன்று நடக்கிறது. நோயை, நோயாளிகளை எப்படி கையாளுவது என்று தொடங்கி ஒரே ஒரு மருந்தினால் அனைத்து வைரஸ் தொற்றுப்பரவலைத் தடுக்க ஒரு ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்டு வருவதை அந்நிறுவனத்தைச் சார்ந்தவர்களுடன் நடக்கும் கலந்துரையாடலாக விவரித்திருந்தார்கள். அது சாத்தியமா என்று அவர்கள் விவாதித்துக் கொண்டிருக்க,கொரோனா போன்ற தொற்றுப்பரவலுக்கான சாத்தியக்கூறுகள் வர இருப்பதை மருத்துவ ஆராய்ச்சி உலகம் ஏற்கெனவே எதிர்பார்த்துக் கொண்டிருந்தது தான் எனக்கு ஆச்சரியமான விஷயமாகத் தெரிந்தது!

'நியூயார்க் தொற்றுப்பரவல் கட்டுப்பாடு மைய'த்தில் எதிர் வரப்போகும் நுண்ணுயிரிகளின் தாக்குதலில் இருந்து மக்களைக் காப்பாற்றத் தேவையான வசதிகள் இருக்கின்றனவா என்று ஒரு அலசல். அப்படி ஏதும் இல்லை என்பதை அன்றே கணித்திருந்தார்கள். அதற்கான நிதி, மருத்துவர்கள், மருந்துகள், மருத்துவமனைகள் இன்னபிற தேவையான வசதிகள் போதாது என்று அதன் மேலாளர் கூறுகையில் 'பகீர்' என்றிருந்தது! "மரண பயத்த காட்டிட்டான் பரமா" மொமெண்ட் அது. "ஸ்பானிஷ் ஃப்ளூ" என்று கொரோனாவின் முன்னோடி 1918-1920 வரை பரவி ஏராளமான மக்கள் இறந்திருக்கிறார்கள். அன்றைய உலகம் வேறு. அதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியிலிருந்து உலகநாடுகள் மீள பத்து வருடங்கள் ஆகியிருக்கிறது. இன்னும் கொரோனாவினால் ஏற்பட்ட பொருளாதார சேதாரத்தில் இருந்து மீள முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறது அமெரிக்கா. இன்னும் எத்தனை வருடங்களோ?

'எபோலா' ஆப்பிரிக்காவில் இருந்து அமெரிக்காவில் டெக்சாஸ் மாநிலத்தில் ஒருவரைப் பாதித்து அவர் இறந்து போக, ஒபாமா அரசு தக்க சமயத்தில் அதனைக் கட்டுப்படுத்தி விட்டது. அதனால் விரைவிலேயே அது தொடர்பான செய்திகள் வருவதும் நின்று விட்டது. அதைத்தொடர்ந்து பன்றிக்காய்ச்சல். இது இந்தியாவிலும் அதிகளவில் பரவியது. மருத்துவர்கள் வீடுவீடாகச் சென்று தடுப்பூசி போடுவதையும் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிப்பதையும் திக்கற்றவர்களுக்குத் தெய்வமே துணை என்று ஒரு மருத்துவர் ஆண்டவனிடம் வேண்டிக்கொள்வதையும் குறிப்பிட்டுக் காட்டியிருந்தார்கள். நம் நாட்டு 'அசால்ட் ஆறுமுகங்கள்' அப்படியே லெஃப்ட் ஹாண்டில் டீல் செய்து சும்மா ஜலதோஷம், காய்ச்சல், சளி, இருமல் என்று மருத்துவர் கொடுத்த மருந்துகளைச் சாப்பிட்டு "ஒரே மூட்டு வலி. நடக்க முடியவில்லை" என்று அந்த வைரஸ் காய்ச்சலின் பாதகங்களை ஏற்றுக் கொண்டார்கள். வேறு வழி? சிறிது நாட்கள் இந்தியாவிலிருந்து வருபவர்களை விமான நிலையங்களில் கண்காணித்தார்கள். அது மறந்து போய்க் கொண்டிருக்கும் பொழுது தான் கொரோனா ஆட்டம் போடத் துவங்கியது.

அமெரிக்காவில் ஒரு ஊரில் ஒரே ஒரு மருத்துவமனை. இரண்டே இரண்டு மருத்துவர்கள். அவர்களே தொற்றுப்பரவல் வந்தால் நிலைமையைச் சமாளிக்கும் வசதிகள் இங்கு இல்லை என்று பேட்டியில் கூறினார்கள்.

இந்தத் தொடரை முழுவதுமாக பார்த்து முடித்த பொழுது(மார்ச் 2020ல்) நியூயார்க்கில் இறப்பவர்களின் எண்ணிக்கை தினமும் கூடிக்கொண்டே இருந்தது. பறவைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கோழிகளை மொத்தமாக ஒரு குழியில் போட்டு மூடியது போல நோயால் பாதிக்கப்பட்டு இறந்த மக்களையும் புதைக்க இடம் இல்லாமல் எங்கோ பெரிய குழியை வெட்டி உள்ளே தள்ளி மூடினார்கள். அடுக்கடுக்காய் சடலங்கள் தேவாலயங்களில் காத்துக் கிடந்த கொடுமைகள் எல்லாம் கூட நடந்து கொண்டிருந்தது. அதையெல்லாம் கவனமாக மறைத்த உள்நாட்டுப் பத்திரிகைக்காரர்களிடம்  கங்கையில் மிதக்கும் சடலங்களைக் கொடுத்து விலைபோனது  நம்நாட்டு அடிமை ஊடகங்கள். ஊடகவியலாளர்கள். 

ரத்தப் பரிசோதனை செய்யும் லேபுக்குத் தேவையான மருந்துகள், ஊசிகள் கடுமையான பற்றாக்குறையில். அமெரிக்கா இந்திய, சீனாவை நம்பி இருப்பது அப்பொழுது தான் அமெரிக்கர்களுக்குதே தெரிந்தது. மருத்துவர்களுக்கு வேண்டிய முகம், உடல் கவசமும் கைவசம் இல்லை. 'அங்கிள் சாம்' எல்லாவற்றையும் வெளிநாடுகளிலிருந்து வாங்கிக்கொண்டிருந்ததால் திகைத்துப் போனது. அவரவர் நாட்டிற்குத் தேவைப்பட்ட நிலையில் இந்தியா, சீனா அரசுகள் ஏற்றுமதி செய்ய மறுத்து விட்டது. மருத்துவர்களும், செவிலியர்களும், தீயணைப்பு படைவீரர்கள், அவசர மருத்துவ சேவை ஊழியர்கள் நாட்கணக்கில் வீடுகளுக்குச் செல்லாமல் பட்ட துயரங்கள்... 😌

அமெரிக்காவில் அவரவர் வீட்டுக்குள்ளே இருந்தாலும் 'தனிமைப்படுத்தல்' என்பது சாத்தியமான ஒன்று. இந்தியாவில்? பில்லியன் கணக்கில் நெருக்கி வாழும் மக்கள். எளிதில் நோய் பரவும் சாத்தியம். முறையான கட்டமைப்பு இல்லாத நிலையில் எப்படிச் சமாளிப்பார்களோ? என்று வருந்தாத நாள் இல்லை. கடவுளே நம் மக்கள் பத்திரமாக இருக்க வேண்டும் என்றே தான் மனம் வேண்டியது. குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், உறவினர்கள் என்று எத்தனை எத்தனை இழப்புகள்!

இப்படியே ஆறேழு மாதங்கள் சத்தமில்லாமல் சென்று கொண்டிருக்க, இங்கு ஃபைசர், மடோர்னா மருந்து நிறுவனங்கள் கொரோனவிற்கான தடுப்பூசியைக் கண்டுபிடித்து விட்டதாக அறிவித்தது. அரசும் அதிக கட்டுப்பாடுகளை விதிக்காமல் சில சோதனைகளுக்குப் பின் "பாதுகாப்பான தடுப்பூசி தான். மக்கள் போட்டுக் கொள்ள வேண்டும்" என்று அதற்கான வேலைகளில் இறங்கி விட்டது. -70டிகிரி வெப்பநிலையில் ஃபைசர் கோவிட் தடுப்பூசியை வைத்திருக்க வேண்டும். பாட்டிலை ஒருமுறை திறந்து விட்டால் உடனே காலி செய்து விட வேண்டும். இப்படி ஏகப்பட்ட நிபந்தனைகள். அரசு செலவழித்தது செலவழித்தது அப்படிச் செலவழித்தது! மருந்துக்கு மட்டும் 25.3 பில்லியன் டாலர்கள் என்கிறார்கள்!(25,300,000,000 ) இந்த மருந்துகளின் பக்க விளைவுகளின் பட்டியலைப் பார்த்தால் எப்படியும் செத்துப் போகப்போகிறோம். இந்த ஊசி போட்டுத் தான் சாகணுமா? என்று ஒரு குழு ஊசி போட்டுக்கொள்ள மாட்டேன் என்று போராட்டம். அவர்கள் போட்டுக்கொள்ளவுமில்லை.

இந்த இரு பெரிய நிறுவனங்களும் ஏகப்பட்ட பகல்கனவுடன் எல்லா நாடுகளின் தலையிலும் இந்த மருந்தைக் கட்டி கல்லா நிரப்பிட வேண்டும் என்று துடியாய் துடித்தது. சீனா வழக்கம் போல அவர்கள் நாட்டிலேயே தயாரித்த ஊசி என்று கமுக்கமாக போட்டுக் கொண்டது. அரபுநாடுகளுக்கும் விற்று விட்டது. ரஷ்யாவும் மருந்து ஒன்றைக் கண்டுபிடித்து நிலைமையைச் சமாளித்து விட்டார்கள்.

அப்பொழுது தான் இந்தியாவில் இருந்து பாரதப் பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR), நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் வைராலஜி(NIV), 'பாரத் பையோடெக்' நிறுவனத்துடன் இணைந்து 'கோவாக்ஸின்' மருந்தைத் தயாரிக்கப் போவதாக அறிவித்தார். இதுநாள் வரையில் தடுப்பூசிகளுக்கு அண்டைநாடுகளைச் சார்ந்திருந்த நாம் இனி நம்நாட்டில் தயாரிக்கப் போகிறோம் என்று பெருமையுடன் உலகிற்கும் அறிவிக்கப்பட்டது.

எப்பேர்ப்பட்ட முன்னெடுப்பு? உடனே நமக்கிருக்கும் தாழ்வு மனப்பான்மையில் ஆங்கிலேய விசுவாச அடிமைப்புத்தியில் என்ன தோன்றும்? வெளிநாடுகளில் இருப்பது போன்ற அதற்கான கட்டமைப்புகள், வசதிகள், ஆராய்ச்சியாளர்கள், அறிவாளிகள் நம்மிடம் இல்லை என்று பகுத்தறிவுத்தனமாக பேசுவது போல் நம்மை நாமே கீழ்ப்படுத்தும் எண்ணங்கள் வெளிப்படும். வெளிப்பட்டது. அவர்களையெல்லாம் புறந்தள்ளி ஒரு குழு மிகத்தீவிரமாக ஆராய்ச்சிகள் செய்து பெரியண்ணன் நிறுவனங்களை விட தரமான மருந்தினைக் கண்டுபிடித்தது.

என்னடா இது? எப்படி சாத்தியம்? என்று கையூட்டு வாங்கிப் பிழைக்கும் சமூகம், "நிச்சயம் இது தரக்குறைவான மருந்தாகத் தான் இருக்கும். ஏன் தரமான அமெரிக்க மருந்து உற்பத்தி நிறுவன தடுப்பூசிகளை இந்தியர்களுக்கு வழங்கக்கூடாது. ஏ! பாசிச அரசே! என்று இங்கிருக்கும் கலகவாதிகள் முதற்கொண்டு கூவ ஆரம்பித்தார்கள். ஒருமுறை போடப்படும் அமெரிக்க நிறுவன தடுப்பு மருந்தின் விலை $120-130! இதன் வீரியம் ஆறு மாதங்கள் வரை தான். மீண்டும் ஒன்றைப் போட்டுக் கொள்ள வேண்டும். இந்திய மக்கள்தொகையினையும் இந்த விலையையும் பெருக்கிப் பார்த்து கணக்குத் தெரிந்தவன் என்றால் நம் நாட்டின் நிதியைச் சுரண்ட குரல்கொடுத்திருக்க மாட்டான். ஆனால் அரங்கேறிய நாடகங்கள் தான் நமக்குத் தெரியுமே? இதில் தமிழக அரசு நாங்கள் வாங்கி போட்டுக்கொள்கிறோம் என்று சவடால் பேச்சு வேறு. ஏற்கெனவே நிதிப்பற்றாக்குறையால் தள்ளாடி வீட்டு வரி, மின்சாரக்கட்டணம், பேருந்து, பால் விலை என்று அத்தியாவசியப் பொருட்களின் விலையை ஏற்றி மக்கள் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதில் எப்படியாவது வெளிநாட்டு ஊசியை வாங்கி அதில் லாபம் பார்க்க துடித்தார்கள். யார்? அவர்களே தான். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்ஸின் ஒரு டோஸின் விலை 225ரூபாய் மட்டுமே.

அதுமட்டுமல்ல, வெளிநாட்டு மருந்து நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கில் முன்பணம் செலுத்த வேண்டும். மருந்துகள் குறித்த நேரத்திற்குள் அனுப்புவார்களா? அவர்களுக்கே தெரியாது. சாவு அதிகமானால் பொறுப்பேற்றுக் கொள்ள மாட்டோம் என்று கூறிவிட்டார்களாம். இந்தியர்களை வைத்துப் பரிசோதனை செய்யாத மருந்தை எப்படி இந்தியர்களுக்கு வழங்க முடியும் என்று அரசு கேட்டு "அதெல்லாம் முடியாது" என்று கூறிவிட்டார்களாம். தலைமயிற்று ஷாம்பூ கூட ஒவ்வொரு இனத்தவரின் முடியை வைத்து ஆராய்ச்சி, சோதனைகள் செய்கிறார்கள். உயிர்காக்க வேண்டிய மருந்திற்குச் செய்ய மாட்டார்களாம்! இது எப்படி இருக்கு? தங்களுக்கு அடிபணிந்து நடப்பார்கள் என்கின்ற தெனாவெட்டில் பலத்த அடி. அவர்களே எதிர்பாராத ஒன்று. நடத்தி முடித்துக் காட்டிவிட்டது பாரதம்.

அடுத்து, "தரக்குறைவான மருந்து. முதலில் பிரதமர் போட்டுக் கொள்வாரா?" என்று ஜால்ரா 'டூல்கிட்' கூட்டங்கள் எப்படியாவது மக்கள் மனதில் நம்நாட்டில் தயாரிக்கப்பட்ட தரமற்ற மருந்து என்ற எண்ணத்தை உருவாக்கி விட வேண்டும் என்று தலைகீழாக நின்று கதறினார்கள். அவரும் போட்டுக் கொண்டார். அவர்மீது நம்பிக்கை கொண்ட மக்களும் போட்டுக்கொண்டார்கள். வாயை மூடிக் கொண்டு வேறு வழியின்றி 'டூல்கிட்' கூட்டங்களும் வரிசையாக.

அமெரிக்காவின் கைப்பாவையான 'உலக சுகாதார மையம்' தன் பங்கிற்கு இந்திய தடுப்பூசியை அங்கீகரிக்க மறுத்தது. இரண்டாவது 'வேரியண்ட்' டிற்கு அமெரிக்க மருத்துவ நிறுவனங்களின் வேக்சின்கள் வேலை செய்யவில்லை. இந்திய மருந்துகளின் தரத்தை உணர்ந்து அங்கீகரிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். உலகமே எதிர்த்து நின்றாலும் போராடி வெற்றி பெற்ற நம் மருத்துவ ஆராய்ச்சிக்குழுவினருக்கு நாம் நன்றிக்கடன்பட்டிருக்கிறோம். இதற்கான 'பேட்டண்ட்' என்று மருந்து நிறுவனம் எந்த விதிமுறைகளையும் விதிக்காமல் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள அனுமதித்துள்ளது. அதுமட்டுமல்ல. 101 நாடுகளுக்கும் மருந்தை இலவசமாக கொடுத்து துன்பத்தில் கைகொடுத்து உதவி சனாதன தர்மத்தைப் பின்பற்றியுள்ளது நம் நாடு. பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

இத்தனை பெரிய பேராபத்தைத் தடுக்க நாட்கணக்கில் மருத்துவ உலகம் ஒருபுறம் போராடிக் கொண்டிருக்க, தடுப்பூசிக்காக ஆராய்ச்சியாளர்கள் அதுவும் 70 சதவிகிதம் பெண்கள் பணிபுரிந்து சாதனைப் படைத்திருக்கிறார்கள் என்பது எத்தனை பெருமையான விஷயம்! அவர்கள் குடும்பத்தினர் பட்ட கஷ்டங்கள், தியாகங்கள், 'டூல்கிட்' அரசியல் என்று உள்நாட்டில் மருந்து தயாரிக்க நடந்த பல விஷயங்களையும் அழகாகப் படமாக்கியிருக்கிறார் திரு.விவேக் அக்னிஹோத்ரி!

'The Vaacine War' நாம் அனைவரும் காண வேண்டிய திரைப்படம். அரசியல், மொழி, மதம், இனம் தாண்டி இந்தியர்களாகப் பெருமை கொள்ள வேண்டிய தருணத்தை ஊடகங்கள் மக்களிடம் கொண்டு செல்லாமல் கவனமாகத் தவிர்த்து விட்டது. அதனை நிவர்த்தி செய்ய பள்ளி, கல்லூரிகளில் இத்திரைப்படத்தைத் திரையிட்டு இந்தியர்களின் பெரும்சாதனையை உணர்த்த வேண்டும். மக்களும் திரையரங்குகளுக்குச் சென்று இப்படத்திற்கு ஆதரவு வழங்க வேண்டும்.

Yes, we can do it💪💪💪  















ரங்கஸ்தலம்

தென்னிந்தியாவில் இருக்கும் கோவில்களுக்குச் சென்று வர இந்த ஜென்மம் பத்தாது போலிருக்கு! அத்தனை பழமையான கோவில்கள் இருக்கிறது! பார்க்காத கோவில்க...